வெள்ளி, 30 மார்ச், 2018

பாகனேரி நாடு - கள்ளர் நாடு





சிவகங்கை சீமையில் அமைந்துள்ள கள்ளர் நாடுகளில் கேரள சிங்கவள பாகனேரி நாடும் ஒன்றாகும். 






பாகனேரி எனும் ஊர் 13ம் நூற்றாண்டில் போகனேரிப் பற்று எனவும், கத்தப்பட்டு எனும் ஊர் கற்றைப்பட்டு எனவும் வீரபாண்டியனின் பெரிச்சிகோயில் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. இந்த இரண்டு ஊர் நாட்டார்களாக முறையே இரும்பாழி உடையான் மற்றும் சுந்தர பாண்டிய காலிங்கராயர் ஆகியோர் இருந்துள்ளனர். 


தரவு நூல்; சிவகங்கை மாவட்டக் கல்வெட்டுகள் - பக்கம்: 99-100.

பாகனேரி நாட்டில் வாழ்ந்த பெருமைக்குரியவர்கள்  மாவீரர் வாளுக்கு வேலி அம்பலம், வள்ளல், சுதந்திர போராட்ட தியாகிகள் பாகனேரி எஸ்.ஓ.எஸ்.பி. பில்லப்பா அம்பலம் மற்றும் எஸ்.ஓ.எஸ்.பி. உடையப்பா அம்பலம், சிவகங்கையை மாவட்ட தலைநகராக உருவாக காரணமாக இருந்த உ. சுப்பிரமணியன் அம்பலம் அவர்களின் மகன் சுப.உடையப்பன் அம்பலம் ஆவார்கள்.

பாகனேரி நாடு , தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராகும். "பாகனேரி நாடு" தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.


சற்றேறக்குறைய 750 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்த பகுதியாகும். அதாவது கிழக்கில் அரண்மனை சிறுவயல், காளையார் கோவில், தெற்கில் மறவமங்கலம், ராஜசிம்ம மங்கலம், மேற்கில் சிவகங்கை, சோழபுரம், வடமேற்கில் திருக்கோட்டியூர், வடக்கில் பட்டமங்கலம் வரை விரவிக் காணப்படுகிறது. 


பாகனேரி நாடு என்பது

தெற்கு வாசல் 

1.உதாரப்புலி

2.பரிசப்புலி

3.சொக்கனார்

4.பழயடிபுரம்

5.வாவிக்கும் மீண்டான்

6.மதியாப்புலி

வடக்கு வாசல் 

1.குறுக்களாஞ்சி

2.குண்டச்சன்

3.பொண்ணூட்டச்சன்

4.கீழவாசல்

5.வாளுக்கு வேலி 

என பலபிரிவுகளை உள்ளடக்கிய நாடு

இவற்றுள் காளையார் கோயிலில் எட்டில் மூன்று பங்கு பாகனேரி நாட்டினுள் அடங்கும். தவிர கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் சிறு பகுதிகளும் இந்நாட்டில் இடம் பெறுகின்றன. இதன் எல்லைகளைக் குறிக்கச் சூலக்குறி பொறித்த எல்லைக்கற்கள் எல்லை நெடுகிலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டுள்ளன.

பெரிச்சிக்கோயில்,
ஆளவிலாம்பட்டி, 
சடையன்பட்டி, 
கொலாம்பட்டி, 
கொங்கராம்பட்டி, 
ஊடேந்தல்பட்டி, 
பொய்யாமணிப்பட்டி, 
கொட்டகுடி 

ஆகிய எட்டு உட்கடைக் கிராமங்கள் கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவைகளாகும். 

இவைகளும் தற்போது பாகனேரி நாட்டில் இருந்து பிரிந்து தனித்து இயங்குகின்றன.

பாகனேரி நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள கீரனூர், முத்தூர், பையூர், விராணியூர், அல்லூர், சித்ததூர், பெரியகண்ணனூர் ஆகிய ஏழு ஊர்ளும் அவற்றின் உட்கடைக் கிராமங்களும் ஏழூர்ப்பற்று என வழங்கப்படுகின்றன. இவற்றுள் கீரனூர் என்ற ஊர் ஏழூர்ப்பற்றுக்கு தலைமை இடமாகும்.



இந்த பாகனேரி நாட்டின் தலைவன் (குறுநில மன்னராம்) நம் தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலம்.

பட்டமங்கலத்தில் படையெடுத்து வாளுக்கு வேலி அம்பலம் கைப்பற்றிவந்த பிள்ளையார் சிலை இதனை யாரும் வெளியே எடுக்கமுடியாதபடி சிலையை விட வாயிலை சிறிதாக அமைத்து கற்களால் சுவற்றை கட்டி வைத்தார் வாளுக்குவேலி அம்பலம்.




புல்வநாயகி அம்மன் திருக்கோயில்

இவ்வூரில் அமைந்துள்ள புல்வநாயகி அம்மன் திருக்கோயில் மிகவும் பழமையான தலங்களில் ஒன்றாகும். புல்வநாயகி அம்மன் திருக்கோயில் பாகனேரி நாட்டு மக்கள் அனைவரும் வழிபடும் முதன்மை தெய்வமாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆனித்திங்கள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. திருவிழா நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் நாட்டாரும் நகரத்தாரும் பாகனேரியில் உள்ள பெருமாள் கோயிலின் முன் கூடி திருவிழா குறித்து ஆலோசனைகளை நடத்துவர். திருவிழா தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அனைத்து கிராமங்களுக்கும், திருவிழாவிற்கு ஒத்துழைக்குமாறு திருமுகம் அனுப்பப்படும். 

காப்பு கட்டும் நாளுக்கு முதல் நாள் " வாஸ்து சாந்தி" எனும் நிகழ்வு நடைபெறும். திருவிழா நடைபெறும் இடத்தை சுத்தம் செய்வதே இந்த நிகழ்வாகும். பிறகு பூசாரிகளுக்கு குருக்கள் பரிவட்டம் கட்டுவார்.

காப்பு கட்டும் நாளன்று நாட்டார்களாகிய கள்ளர்கள் பொதுவிடமாகிய திண்ணைக்கொறட்டில் இருந்து புறப்பட்டு, தாரை தப்பட்டை மற்றும் விருதுகளுடன் கோயிலை நோக்கி புறப்படுவர். காப்புக்கட்டையொட்டி நடைபெறும் மஞ்சுவிரட்டுக்கு தேவயான துண்டுகளை மாங்காட்டுப்பட்டி வலையர்களை தலையில் சுமந்து வருவார்கள். அம்மனுக்கு செய்யவேண்டிய அபிஷேகத்துக்கு தேவையான தேனை வெள்ளிஞ்சம்பட்டி வலையர்கள் கொண்டு வருவர். விழாவுக்கு தேவையான வடத்தை, நாடார்கள் கொண்டு வருவார்கள். 

இதன்பிறகு கோயில் அருகே உள்ள பொட்டலில் வடம் போடுதல் எனும் விளையாட்டு நடைபெறும். 50 அடி நீளமுள்ள வடத்தின் நடுப்பகுதி புல்வநாயகி அம்மன் கோயில் காளையின் கழுத்தில் கட்டப்பட்டு, காளையை இளைஞர்கள் சீண்டி கோபம் ஊட்டுவார்கள். சீறும் காளை யார் மீதும் பாயாத வகையில் இருபுறமும் வடத்தை கொண்டு கட்டுப்படுத்துவதே இவ்விளையாட்டாகும். இதனைத் தொடர்ந்து சிறிய அளவிலு மஞ்சுவிரட்டு நடைபெறும்.

நாட்டார்கள் கூட்டம் மீண்டும் கூடி குட்டிக்குப் பணம் போடுதல் எனும் நிகழ்வு நடைபெறும். குட்டிக்குப் பணம் போடுதல் என்பது தேர் திருவிழாவன்று பலியிடப்போகும் ஆட்டுக்கான பணத்தை நாட்டார்கள் கட்டளையில் இருந்து கொடுப்பதாகும். 

பிறகு குருக்கள் எட்டுத்திக்குப் பாலகர்களுக்கும் வேதாளத்திற்கும் பூசை செய்து, வேதாளம் படம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படும். பிறகு கோனார்களால் கொண்டு வரப்பட்ட ஆட்டுக்குட்டியை பலியிடுவர். பிறகு பூசாரிக்கு குருக்கள் காப்பு கட்டுகிறார். பூசாரி குருக்களுக்கு பரிவட்டம் கட்டுகிறார்.

விழா நடைபெறும் பத்து நாளும் அம்மன் புறப்பட்டு உலா வருவதற்கு முன் சீவுளி அம்மன் எனும் தெய்வத்தை பல்லக்கில் வைத்து வலம் வருவது மரபாக உள்ளது. அம்மன் வரும் பாதையை பார்வையிடும் தெய்வமாக சீவுளி அம்மனை மக்கள் நம்புகின்றனர். இந்த தெய்வத்தை முள்ளுப் பொறுக்கிச் சாமி என அழைக்கின்றனர்.

இரண்டாவது நாள் மண்டகப்படியில் இருந்து அம்மன் வீதியுலா வரும்போது அம்மன்பட்டி கோனார்கள் தீவட்டி ஏந்தி வருவார்கள். மேளகாரர்கள் இசைமேளம் முழங்குவர். ஆறூர் நாட்டு பறையர் கொட்டு வாசிப்பர். நாடார்கள் தோரணங்களை ஏந்தி வருவர். அம்மனை சப்பரத்தில் ஏற்றி வைப்பதும் இறக்குவதும் இவர்களின் பணியாகும். அம்மனுக்கு முன் பிள்ளையாரை தூக்கி வருபவர்கள் வெள்ளிஞ்சம்பட்டி கள்ளர்களான கானப்புலிபுரத்தார்கள்.

மண்டகப்படியின் போது அம்மன் உலா புறப்படும் முன் " துப்பட்டி போடுதல்" எனும் நிகழ்வு நடைபெறுகிறது. துப்பட்டி போடுதல் என்பது இவ்விழா தோற்றுவிக்கப்பட்ட காலத்தில், அதற்கு காரணமாய் இருந்த 14 பெரியோர்களுக்கு அளிக்கப்படும் சிறப்புரிமையாகும். நட்டுவனார் இந்த 14 பெரியோர்களின் பெயர்களை சொல்லி, இவர்கள் போட்ட துப்பட்டி என கூறுகிறார். மகாராசா, நாட்டார், நகரத்தார், நான்கு கிளைகளுக்கு உரிய எட்டு சேர்வைக்காரர்கள், சாமி அம்பலக்காரர் மகன் சுப்பிரமணியன் அம்பலக்காரர், நாட்டு கணக்குப்பிள்ளை, நாடார் ஆகிய 14 பேர் மட்டுமே துப்பட்டி போடும் உரிமை பெற்றவர்கள். இவர்களுக்கு நட்டுவனார் பணம் வாங்காமல் துப்பட்டி போடுவார். இரண்டாம் நாள் மண்டகப்படி முதல் எட்டாம் நாள் மண்டகப்படி வரை ஒவ்வொரு நாளும் துப்பட்டி போடுதல் தொடர்ந்து நடைபெறுகிறது.


மண்டகப்படி நாட்களில் நாடகம், கூத்து,  வாணவேடிக்கை என மண்டகப்படிதாரரின் பலத்திற்கு ஏற்ப கேளிக்கைகள் நடைபெறும்.

முதல் நாள் மண்டகப்படி
*************************

முதல் நாள் மண்டகப்படியன்று மாலை ஏழு மணியளவில் நோன்பு பொட்டலுக்கு பூசாரியும், குருக்களும் சென்று கோயிலிலு பணிபுரியும் வைராவி, பரிசாரகம், மேளக்காரர் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டுவார்கள். சீவுளி அம்மன் வலம் வந்த பிறகு, அம்மன் உலா நடைபெறும். முதல் மண்டகப்படி கோயில் ஸ்தானிகர்கள் மற்றும் பணியாளர்களால் நடத்தப்படுகிறது.

இரண்டாம் நாள் மண்டகப்படி
******************************

இரண்டாம் நாள் மண்டகப்படி நாட்டாருக்குரியது. நட்டுவனார் முறைப்படி நாட்டாரின் முன் நின்று அம்மன் துதிப்பாடலையும், பாகனேரி வாள்க்கோட்டை நாட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடலையும் பாடுவார். இதன்பிறகு துப்பட்டி போடும் நிகழ்வு நடைபெறும். பாடல்களை பாடி முடித்தபின் நட்டுவனார், மடித்த துண்டுடன் நாட்டாரின் முன்னாள் வந்து அவர்கள் வெற்றிலையும் கால் ரூபாயும் கொடுப்பார்கள். அவற்றை பெற்றுக்கொண்ட நட்டுவனார் 

" கேரள சிங்கவளநாட்டு மேலத்திருத்தி முட்டத்துப்
பாகனேரி வாள்க்கோட்டை நாட்டார் புல்வ
நாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை 
பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே புல்வநாயகி
அம்மன் திருக்கை வழக்கம் ஒன்று, பத்துநூறு
ஆயிரம் என்று பெருகி வாழ்க "

என பாடுவார். இதனைத் தொடர்ந்து நட்டுவனார் 14 பெரியோர்களுக்கும் துப்பட்டி போடுகிறார். 

இதனை தொடர்ந்து துப்பட்டி போடுபவர்கள் பற்றியும் பாடுகிறார். அவையாவன:- 

" கேரள சிங்கவளநாட்டு மேலத்திருத்தி முட்டத்துப்
பாகனேரி வாள்க்கோட்டை நாட்டார் புல்வ
நாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை 
பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே மகாராசா போட்ட துப்பட்டி 
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் "

"கேரள சிங்க வளநாடு மேலத்திருத்தி முட்டத்துப்
பாகனேரி வாள்கோட்டை நாட்டார் போட்ட 
துப்பட்டி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்"

"சீராக் குமரர் சிங்கக் கொடித் தலைவர்
பந்தக்காலுக்குப் பவழக்கால் நாட்டிய
நகரத்தார் போட்ட துப்பட்டி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்"

" வாசிக்குமிண்டான் வடகரைப் புலி
வாடா மல்லிகைப் பூ
மலை கலங்கினாலும் மனங்கலங்காத கண்டன், உடையார் 
சேர்வை( அம்மாத்தாக்கிளை கள்ளர்) போட்ட துப்பட்டி 
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் "

"வெற்றி நிலையிட்டான் வெகுசன உபகாரி
மதுரைக்கு வாய்ச்சான் மதுரைவாசல் திறந்தான்
சோமனை வெட்டிக் கூக்குரல் மாற்றி
அன்னப்புலி வாடிப்புலி வலியச் சொருபி
சேதுபதி சேர்வை (நாலு பெண்டுக்கிளை கள்ளர்) போட்ட
துப்பட்டி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்"

" வெற்றி நிலையிட்டான் வெகுசன உபகாரி
மதுரைக்கு வாய்ச்சான் மதுரைவாசல் திறந்தான்
சோமனை வெட்டிக் கூக்குரல் மாற்றி
அன்னப்புலி வாடிப்புலி வலியச் சொருபி
முத்துக்கருப்பன் சேர்வை( ரக்ச கிளை கள்ளர் ) போட்ட 
துப்பட்டி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்"

" வாசிக்குமிண்டான் வடகரைப் புலி
வாடா மல்லிகைப் பூ
மலை கலங்கினாலும் மனங்கலங்காத கண்டன்
வைரவன் சேர்வை (அப்பியக்கிளை கள்ளர்) போட்ட துப்பட்டி
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்"

" சண்டப்பிரசண்டன், பர்மன் வையாபுரி    
சேர்வை(அம்மாத்தாக்கிளை கள்ளர்) போட்ட துப்பட்டி 
ஒன்று பத்து நூறு ஆயிரம் "

" ஞானி ராயப்பன் சேர்வை ( நாலு பெண்டுக்கிளை கள்ளர்) 
போட்ட துப்பட்டி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் "

" சாதகன் அருளப்பன் சேர்வை(ரக்சக் கிளை கள்ளர்) போட்ட
துப்பட்டி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் " 

" செகநாதன் முந்துவார் கண்டன் சேர்வை(அப்பியக்கிளை
கள்ளர்) போட்ட துப்பட்டி, ஒன்று, பத்து, நூறு , ஆயிரம்"

" செழுதரன் சாமி அம்பலம் மகன் சுப்பிரமணியன் அம்பலம் 
(கள்ளர்)
போட்ட துப்பட்டி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்"

" ஆசார போசன் அன்னியஸ்திரி சோமன்
கெங்கா குலவம்சம் கருணைக்கு ராயன்
கொத்துக்கணக்கு குமுள்ராயப்பிள்ளை போட்ட துப்பட்டி 
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்"

" மெய்த்தலைக்கு பொய்த்தலை வெட்டிய 
ஆகாசக் குருவி நாடாக்கமார் போட்ட துப்பட்டி
ஒன்று , பத்து, நூறு, ஆயிரம் "

இவ்வாறு 14 பெரியோர்கள் பற்றியும் புகழ் மொழிகள் வாசிக்கப்படுகிறது. 

மூன்றாம் நாள் மண்டகப்படி
*****************************
மூன்றாம் நாள் மண்டகப்படி பரிசப்புலி பட்டம் கொண்ட கள்ளர்களுடையது. மதங்கொண்ட யானையை அடக்கி " மதமடக்கி" என்ற பட்டத்தையும், மூன்றாம் நாள் மண்டகப்படி செய்யும் உரிமையையும் இந்த வம்சத்தினர் பெற்றனர். 

" ஒடாக்கால்ராயன் உலகம் மதித்த பாண்டியன், பட்டங்கள் பரம்படித்தான், நாயத்த பாலகண்டன், முத்து விசயரகுநாத பரிசப்புலி பேரன்மார் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்து கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே " எனக்கூறி நட்டுவனார், 14 பெரியவர்களுக்கு துப்பட்டி போடுவார்.

நான்காம் நாள் மண்டகப்படி
*****************************
நான்காம் நாள் மண்டகப்படி கொல்தச்சு ஆசாரிமார்களுக்குரியது. இவர்கள் மூடி வைத்திருக்கும் தேரை திறந்து தேரோட்டத்திற்கு தயார் செய்வர். அலங்காரத்திற்கு தேரில் முகூர்த்தக்கால் ஊன்றும் பொழுது இவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது. தேரை கவனித்துக்கொள்ளும் பணி இவர்களுடையதாகும். 

" புல்வநாயகி அம்மனுக்கு கொல்தச்சு ஆசாரிமார்கள் மண்டகப்படி வைத்து கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே " எனக்கூறி நட்டுவனார் 14 பெரியவர்களுக்கு துப்பட்டி போடுவார்.

ஐந்தாம் நாள் மண்டகப்படி
****************************

ஐந்தாம் நாள் மண்டகப்படி நகரத்தாருடையது. துப்பட்டி போடும் நிகழ்ச்சியில் பின்வரும் வரிகள் வாசிக்கப்படுகிறது.

"சீராக் குமரர் சிங்கக் கொடித் தலைவர்
பந்தக்காலுக்குப் பவழக்கால் நாட்டிய
நகரத்தார் புல்வநாயகி அம்மனுக்கு 
மண்டகப்படி வைத்து கேளிக்கை பார்க்கிற
பிரஸ்தாபத்தினாலே" 

இதன்பிறகு துப்படி போடும் நிகழ்வு நடைபெறுகிறது.

ஆறாம் நாள் மண்டகப்படி 
***************************
ஆறாம் நாள் மண்டகப்படி வாளுக்குவேலி மரபினர்க்கும், தேனப்ப செட்டியார் மரபினருக்கு உரியது. அரசுக்கு வாய்ச்சான் எனும் கள்ளர் குல வீரன் வீரச்செயல்கள் புரிந்து அரசரால் பாராட்டப்பட்டு மதுரைக்கு கிழக்கே உள்ள கோயில்களில் ஆறாம் நாள் மண்டகப்படியை நடத்தும் உரிமை பெற்றார். சில காலம் கழித்து அரசுக்கு வாய்ச்சான் மரபினர் வெளியூர் சென்றுவிட்டதால் புல்வநாயகி அம்மன் ஆறாம் நாள் மண்டகப்படியை தேனப்ப செட்டியார் மரபினர் நடத்தி வந்தனர். பிறகு மீண்டும் திரும்பி வந்த அரசுக்கு வாய்ச்சான் மரபில் ஒரு பிரிவினரான வாளுக்கு வேலி வம்சத்தினர் தேனப்ப செட்டியாருடன் சேர்ந்து ஆறாம் நாள் மண்டகப்படியை நடத்தலாயினர். 

மண்டகப்படியில் துப்பட்டி போடும்போது நட்டுவனார் பின்வரும் வாசகத்தை படிக்கிறார்:-

"முத்துவிசய ரகுநாத கரியான் வாளுக்குவேலி பேரன்மார்கள் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே" எனும் வாசகம் இன்றும் வாசிக்கப்படுகிறது. 

" தேனப்ப செட்டியார் பேரன்மார்கள் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே" எனும் வாசகம் இன்றும் வாசிக்கப்படுகிறது. 

ஏழாம் நாள் மண்டகப்படி
**************************
ஏழாம் நாள் மண்டகப்படி நாட்டுக்கணக்குப்பிள்ளைக்கும், நாடார்களுக்கும் உரியது. 

மண்டகப்படியில் துப்பட்டி போடும்போது நட்டுவனார் பின்வரும் வாசகத்தை படிக்கிறார்:-

"ஆசார போசன் அன்னியஸ்திரி சோமன்
கெங்கா குலவம்சம் கருணைக்கு ராயன்
கொத்துக்கணக்கு குமுள்ராயபிள்ளை பேரன்மார்கள்
புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்து கேளிக்கை 
பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே "

" மெய்த்தலைக்கு பொய்த்தலை வெட்டிய 
ஆகாசக் குருவி நாடாக்கமார் புல்வநாயகி அம்மனுக்கு 
மண்டகப்படி வைத்து கேளிக்கை பார்க்கி 
பிரஸ்தாபத்தினாலே" 

எட்டாம் நாள் மண்டகப்படி
**************************
எட்டாம் நாள் மண்டகப்படி சிவகங்கை மன்னருக்குரியது. 1930 ஆம் ஆண்டு முதல் இவ்வுரிமையை வாளுக்குவேலிபுரத்தை சேர்ந்த பில்லப்பன் அம்பலம் பெற்று அவரது மரபினரும் அவரது சகோதரர் உடையப்பா அம்பலம் மரபினரும் மண்டகப்படி நடத்தி வருகின்றனர்.

மண்டகப்படியின் போது " முத்துவிசய ரகுநாத கரியான் வாளுக்குவேலி பில்லப்பா அம்பலம், உடையப்பா அம்பலம் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே" எனும் வாசகம் வாசிக்கப்படுகிறது.

எட்டாம் நாள் மண்டகப்படியின் போது நாட்டு கணக்கப்பிள்ளை தெய்வத்திற்கு எதிரே நின்று பட்டயங்களை படிப்பார். இதில் தல வரலாறு, கோயிலுக்கு கொடை அளித்தோர் வரலாறு, அறக்கொடைகள் முதலியன வாசிக்கப்படும். 

பின்பு நான்கு வாசல் வழியினராகிய கள்ளர்கள் கோயிலின் தென்புறம் கூடி மறுநாள் தேரோட்டத்தில் வாசல்வழி அடிப்படையிலான உரிமைகளை பெறவேண்டியவர் யாரென முடிவு செய்வர். இந்த நான்கு வாசல்காரர்களும் வடம் போடுதல், பொங்கல் வைத்தல், தேங்காய் பிடித்தல் ஆகிய உரிமைகளை சுழற்சி முறையில் பெற்றுக்கொள்கின்றனர். இந்த நான்கு வாசல் காரர்களின் பட்டங்களை காண்போம்:-

கீழவாசல் :-
கன்னிராயன்(வடம்வெட்டி, முந்துவார்க்கண்டன், பர்மியான்), அரசுக்கு வாய்ச்சான்(வேங்கைப்புலி, வாளுக்குவேலி), சண்டப்பிரதேவன்(ஞானி, ராசகுலம், ராக்சன், சாதகன்) 

மேலவாசல்:-
கன்னிராயன்(வடம்வெட்டி, முந்துவார்க்கண்டன், பர்மியான்), அரசுக்கு வாய்ச்சான்(வேங்கைப்புலி, வாளுக்குவேலி), சண்டப்பிரதேவன்(ஞானி, ராசகுலம், ராக்சன், சாதகன்) ,
திருமுடி

தெற்குவாசல் :-
காலிங்கராயர்(பலமுடி, பரிசப்புலி, மதியாப்புலி), ராலிங்கராயர்(உதாரப்புலி, வாசிக்குமிண்டான்,சொக்கனார்), திரள்படைத்தாங்கி, அன்னக்கொடி, புறங்காட்டான் புலி

வடக்குவாசல்:-
கூட்டன், குறுக்களாஞ்சி, மதமடக்கி, தண்டும்புலி, சேர்முடி, சேக்கன், செழுதரன், நாடுமிதிச்சான் 

ஓன்பதாம் நாள் திருவிழா
***************************
ஒன்பதாம் நாளன்று தேர்திருவிழா நடைபெறும். ஓவ்வொரு கிராமத்தின் சார்பாக மக்கள் கொட்டுடன் வருவது வழக்கம். 
நாட்டார்கள் அரசரால் அளிக்கப்பட்ட விருதுகளுடன் மேள தாளம் முழங்க வருவர். கள்ளர் நாட்டார்களுக்கு உரிய விருதுகளை காண்போம்:-

நாட்டார்:- 

1) பட்டுக்குடைகள் இரண்டு
2)மகரதோரணம் ஒன்று
3) இடைக்கான் சுருட்டி இரண்டு
4) ஆலவட்டம் ஐந்து
5) தீவெட்டி இரண்டு

வாளுக்குவேலி வகையரா:-

1) வெள்ளைக்குடை ஒன்று
2) தீவெட்டி இரண்டு

வேங்கைப்புலி வகையரா:-

1) தீவெட்டி ஒன்று

முந்துவார்க்கண்டன் வகையரா:-

1) காவிக்குடை ஒன்று
2) தீவெட்டி இரண்டு

சாமி அம்பலம் வகையரா:-

1) தாழங்குடை ஒன்று
2)செம்பு ஒன்று
3) விசிறி ஒன்று
4) தீவெட்டி இரண்டு

பரிசப்புலி வகையரா :-

1) காவிக்குடை ஒன்று
2) தீவெட்டி இரண்டு

வாசிக்குமிண்டான் வகையரா :-

1) குதிரை ஒன்று
2) தீவெட்டி இரண்டு

குறுக்குளாஞ்சி வகையரா:-

1) விசிறி ஒன்று
2) செம்பு ஒன்று

நாட்டார்கள் அனைவரும் திண்ணைக்கொறட்டில் தங்களது விருதுகளுடன் கூடி ஒற்றுமையையும் வலிமையையும் வெளிப்படுத்துவர். இக்காட்சியை காண மக்கள் அனைவரும் கூடுவர். தெய்வ வழிபாடு முடிந்து தேரடிக்கு வரும்போது கண்டனூர் வெள்ளையன் செட்டியார் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வருவர். 

இதன் பிறகு தேங்காய் போடுதல் எனும் நிகழ்வு நடைபெறும். மகாசனம், மண்டலகுருக்கள், உள்ளூர் குருக்கள், பட்டர் ஆகியோருக்கு கோயிலிலேயே தேங்காய் போடப்படும். முதலில் அரண்மனைக்கு தேரில் இருந்து பட்டுத்துண்டால் தேங்காயை கட்டி கீழே விடுவர். நாட்டுக்கணக்குபிள்ளை அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் தேங்காய் போடப்படும். தேங்காயை தவறாமல் பிடித்து சிதறவிடுவார்கள். 

தேர் காணவரும் மக்கள் நேர்த்திக் கடனாகப் பூச்சரங்களை வாங்கித் தேருக்குச் சார்த்தி அழகுபடுத்துவர். 

தேரில் குருக்கள், உவச்சர், மேளக்காரர், கணக்கப்பிள்ளை, தீவட்டி பிடிப்போர், தேவரடியார் முதலானோர் அமர்ந்திருப்பர். தேரின் பின்புறம் கீழவாசல் மற்றும் மேலவாசல் காரர்கள் ஒரு எசம்பு தடியையும், தெற்குவாசல் மற்றும் வடக்குவாசல் காரர்கள் ஒர் எசம்பு தடியையும் போடுவார்கள். தேர் ஓடத்தொடங்கும்போது ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்படும்.

தேருக்கு முன் பிள்ளையார் வீற்றிருக்கும் சிறிய தேரை சிறுவர்கள் ஆரவாரத்துடன் இழுத்து வருவர். 

தேர் வீதி வலம் வரும்போது அந்தந்த வாசல்வழிக்காரர்கள் அவர்களுக்கரிய வீதிகளில் பொங்கல் வைப்பர். தேங்காய் பிடித்தல், வடம் வீசுதல் , பொங்கல் வைத்தல் ஆகியவை ஒவ்வொரு வாசல்வழிக்குள்ளும் உள்ள ஒரு பிரிவினருக்கு ஆண்டுதோறும் சுழற்சி முறையில் வரும். பொங்கல் வைக்கும் முன் பலியிடுவதற்கு தேவையான கிடாய்க்குட்டியை கோனார்கள் கொணர்ந்து தருவர். பொங்கலிடும் முட்டியை வேளார் கொடுப்பார்கள். பொங்கல் வைக்க விறகும் பள்ளயம் போட இலையும் வாசல்வழித் தோட்டி பறையர் கொண்டு வந்து தருவர். 

ஒவ்வொரு வாசல் வழியிலும் பொங்கல் படையிடப்படும். கிடாய்கள் வெட்டப்படும். பறையர்களும் கோனார்களும் சாமி ஆடுவர்.

தேர்த் திருவிழா முடிந்தபின் அனைவரும் நாட்டார் விடுதியில் கூடுவர். திருவிழாவுக்கு வந்து சிறப்பித்தவர்களை சிறப்பு செய்யும் பொருட்டு, " கட்டளைப் பணம்" எனும் சிறப்புத் தொகை தரப்படும். ஒவ்வொரு கிராமத்துக்கும் கட்டளைப்பணமும், கட்டளைச்சோறும் தரப்படும்.

பத்தாம் நாள் மண்டகப்படி 
****************************

பத்தாம் நாள் தேசத்தாரின் மண்டகப்படியாகும். மகாசனம், அரண்மனை நாட்டார், நகரத்தார் ஆகியோரால் மண்டகப்படி நடத்தப்படும். இவர்களுக்கு காலாஞ்சி கொடுக்கப்படும். பின் ஆற்றின் ஒரமுள்ள முயல்குத்து பொட்டலுக்கு அம்மனைக் கொண்டு சென்று, தேவரடியார் ஒருவர் ஆண்வேடம் பூண்டு, கையில் ஈட்டியேந்தி ,வெளிஞ்சம்பட்டி வலையர்களால் கொண்டு வரப்பட்ட முயலை, ஈட்டியால் குத்துவார்.இந்த நிகழ்விற்கு முயல்குத்து எனப்பெயர். 

முயல்குத்து முடிந்தது, அம்மன் வீதியுலா முடிந்து கோயிலை அடைந்ததும், குட்டி வெட்டிக் கொடி இறக்கி தேர் திருவிழாவை முடித்து வைப்பர். 

பதினோறாம் நாள் மஞ்சுவிரட்டு நடைபெறும். காளைகளுக்குத் துண்டு கொடுத்தலை கீழவாசல் மற்றும் மேலவாசலை சேர்ந்தவர்கள் செய்வர். வண்டி ஒதுக்குதல், காளைகளை கொண்டு வந்தோருக்கு உணவளித்தல் முதலியவை மற்ற வாசல்காரர்களால் செய்யப்படும். 

நான்கு மணிக்கு நாட்டார் கொட்டுத்தப்புடன் வந்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைப்பார்கள். இவ்வகையில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையோடு தங்களது கடமைகளை ஆற்றி, திருவிழாவை கொண்டாடுகின்றனர். பாகனேரி நாட்டில் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் நாட்டுக் கட்டுப்பாடுகளுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் புல்வநாயகி அம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது. 









சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சிறிய கிராமம் பாகனேரி. இந்த கிராமத்திலிருந்து தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மத்திய  இணை அமைச்சர் என மிகப்பெரும் தலைவர்கள் உருவாகியுள்ளனர். தமிழகத்தின் முதல் தேர்தல் தொடங்கி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக  அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்த தலைவர்களை உருவாக்கிய முக்கியத்துவம் பெற்றது இந்த கிராமம்.மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டு சென்னை மாகாணமாக இருந்தபோது 1952ல் நடந்த முதல் தேர்தலில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு பாகனேரியை சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் வெற்றி பெற்றார். மீண்டும் 1962ல் காங்கிரஸ் சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி  பெற்றார். 1971, 1977 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 1984 வரை எம்பியாகவும், மத்திய விவசாயத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1977, 1980, 1984 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தலிலும் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாகனேரியை சேர்ந்த உ.சுப்பிரமணியன் வெற்றி  பெற்றார். இவர் 1984 முதல் 1987 வரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். இதே ஊரை சேர்ந்த திருஞானம் 1968ல் திமுக சார்பில் சட்ட  மேலவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சுமார் ஆறு ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார்.1966ல் ஆர்.வி.சுவாமிநாதன் மகன் ராஜமார்த்தாண்டன் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்துள்ளார். 1996ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உ.சுப்பிரமணியன் மகன் சுப.உடையப்பன் 1998 வரை எம்பியாக இருந்தார். காமராஜர், அண்ணா,  கருணாநிதி, எம்ஜிஆர் என தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கும், பல்வேறு நிகழ்வுகளுக்கும் இவ்வூருக்கு வந்துள்ளனர். மகாத்மா காந்தி,  சுபாஷ்சந்திரபோஸ், வி.வி.கிரி, ராஜேந்திரபிரசாத் போன்ற தலைவர்களும் இங்கு வந்துள்ளனர்.


தொகுப்பு:- சியாம் சுந்தர் சம்பட்டியார். 


ஆதார நூல்கள்: பாகனேரி நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்:-டாக்டர் ஆத. முத்தையா/ தென்பாண்டி சிங்கம் மு. கருணாநிதி/ கள ஆய்வு தகவல்கள்/ நாட்டார் ஒலைச்சுவடிகள்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்