சனி, 31 மார்ச், 2018

கண்டதேவி தேரும், போரும்




கண்டதேவியில் புதிய தேர் வடிக்கப்பட்டு வெள்ளோட்டத்திற்குத் தயாராகி ஆண்டுகடந்து நிற்கிறது.

சொர்ணமூர்த்தி கோயிலையும் கோயிலுக்குப் பின்புறம் பனிரெண்டு ராசிகளுக்குரிய பனிரெண்டு துறைகளைக் கொண்ட அழகிய ஊருணியையும் சுற்றி தேரோடும் நான்கு பெருவீதிகளும் தயாராகவே உள்ளன.

ஆனாலும் இந்த வருடமும் நிச்சயம் தேரோட்டம் நடக்காது! காரணம்? மூக்குக்கும் வாய்க்கும் முன்னால் காத்துநிற்கிறது சைனாவின் மனமான கொரோனா!


கொரோனா இல்லையென்றால் மட்டும் சிரவிழிநாதன் தேர் சீரோடும் சிறப்போடும் இழுபட்டுவிடுமா என்ன??

ஐந்தாறு தலைமுறையாகவே கண்டதேவித் தேர் பெரும் போராட்டத்தோடு தான் இழுபட்டிருக்கிறது!

இந்தத் தகவல்களை, ஆறாவயல் வண்டியய்யா பேரன் அமரர் பெரி. சந்திரன் (காம்ரேடு பிஆர்சி) எழுதிய தேரும் போரும் எனும் நூலில் இருந்து தான் திரட்டியிருக்கிறேன். இன்றைய இந்தப் பதிவின் வாயிலாகக் கிடைக்கப் போகும் போற்றுதலும் தூற்றுதலும் அமரர் பெரி.சந்திரனையே தழுவட்டும்!

1860ஆம் ஆண்டுவரை (160 வருடம் முன்பு வரை) உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னாலை இரவுசேரி ஆகிய நான்கு நாட்டவரும் இணைந்தே கண்டதேவித் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள் :திருத்தேரை இழுத்திருக்கிறார்கள்! இந்த வரிசைப்படியே மாலை பரிவட்டம், காளாஞ்சி மரியாதைகளை அந்தந்த நாட்டு அம்பலங்கள் (நாட்டாண்மைகள்) ஏற்றிருக்கிறார்கள்.


1860இல் நான்கு நாடுகளுக்குள் ஏதோ பிரச்சனை? மற்ற மூன்று நாட்டவர்களையும் பகைத்துப் புறக்கணித்த உஞ்சனை நாட்டின் அன்றைய அம்பலம் விசயாலயன் "கண்டதேவித் தேரும் தேரின் வடங்களும் திருவிழாக்களும் மன்னிய மரியாதைகளும் இனிமேல் உஞ்சனை நாட்டவராகிய எமக்கு மட்டுமே சொந்தம்! "என்று சர்வாதிகாரமாக அறிவித்து செயல்படத் தொடங்கினார்!

விசயாலயன் எனும் பெயர் சோழப் பெருவேந்தன் ராசராசனின் பாட்டன் பெயர்! அவன் தான் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கியவன்!

1874வரை, தனித்துநின்று தேர்த்திருவிழாவை நடத்தி மரியாதைகளைப் பெற்றிருக்கிறது உஞ்சனை நாடு! 

1875ஆம் ஆண்டு ஆடியில் செம்பொன்மாரி, தென்னாலை,இரவுசேரி ஆகிய மூன்று நாடுகளும் கூடின "உயிரைக் கொடுத்தோ அல்லது எடுத்தோ நாம் நமது தேர்வட உரிமைகளை மீட்போம்! "என்று முடிவெடுத்திருக்கிறார்கள்! நகரத்தார் பெருமக்களும் இவர்களுக்கு துணை நின்றிருக்கிறார்கள்! உஞ்சனை நாட்டவரும் தயாராகவே வந்திருக்கிறார்கள்.தேர்க்களம் போர்க்களமானது!

உஞ்சனை நாட்டின் அம்பலம் விசயாலயன், வேட்டைக்காரன் பட்டி கடுந்தூசி கருத்தசாமி, சித்தாட்டிவயல் முத்துராவுத்தர் இலுப்பக்குடி நல்லப்ப உடையார், கடியாவயல் மாயாண்டிக் கருப்பன், தேருக்குக் கட்டை போட்ட கொந்தனிக் கோட்டை நன்னி ஆசாரி ஆகியோர் கோயில் வாசலிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள்! கொலையுண்ட அறுவரும் உஞ்சனை நாட்டவர்,

தேரோட வேண்டிய நான்கு வீதிகளிலும் குருதியோட்டம்!

அடுத்த ஆண்டிலிருந்து உஞ்சனையை தவிர்த்துவிட்டு மற்ற மூன்று நாட்டவரும் தேரை இழுத்திருக்கின்றனர்! துணைநின்ற நகரத்தார்கள் கண்டதேவிக் கோயிலில் புதிய பிரகாரத்தை எடுத்து புதுப்பித்து குடமுழுக்கும் நடத்தி, முதல் மரியாதைக்குரியவர்கள் ஆனார்கள். கண்டதேவிக் கோயிலை தேவகோட்டை நகரச் சிவன்கோயிலாக்கும் முயற்சிகள் நடந்தன! சொர்ணமூர்த்தி கோயிலின் முதல் மரியாதை தேவகோட்டை ஜமீன்தார் மேலவீட்டு சின்னச நாராயணன் செட்டியாருக்கு என்றாகிவிட்டது!

உஞ்சனை நாட்டம்பலம் விசயாலயன் கொல்லப்பட்டு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1895 இல்,தேரோட்டத்தன்று நாநாட்டவரும் ஒன்றுபட்டு கண்டதேவி இலுப்பைத் தோப்பில் கூடின. பல்லாயிரம் பல்லாயிரம் கள்ளர்கள்! கண்டதேவி அதுவரை காணாத பெருங்கூட்டம்! மாலை பரிவட்டம் மரியாதையை மீட்கத் திரண்ட கூட்டம்!

வெள்ளை அரசின், சிவகங்கை சமஸ்தானத்தின் அதிகாரிகளும், நகரத்தார்களும் ஜமீன்தார் சின்னநாராயணன் செட்டியாரும் வந்திருந்தனர்! 

கடியாவயல் சேர்வை நான்குநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நின்று வாதிட்டிருக்கிறார்!

"நான்கு நாட்டுக்கள்ளரும் ஒற்றுமையாய் தொடர்ந்து நிலைத்து தேரோட்டத்தை நடத்துவீர்களா? உங்கள் ஒற்றுமைக்குச் சான்று காட்ட முடியுமா? ஆங்கிலேய அதிகாரி கேட்டார்!

உடனே தன் தோள்த் துண்டைக் கையில் எடுத்து நாநாட்டின் பெருந்திரள் நோக்கி உயர்த்தித்
தாழ்த்தி, "உட்காருங்கள்! "என்றாராம் சேர்வை அடுத்த நொடி அந்தப் பெருந்திரள் அமர்ந்தது! "எழுந்திருங்கள்! "என்றார் கடியாவயல் சேர்வை 
தளபதிக்குக் கட்டுப்பட்ட சேனையென எழுந்தது ஏழுகிளைக் கள்ளர் கூட்டம் இவ்வாறு மும்முறை கட்டளையிட்டுக் போர்க்குடியினரின் ஒற்றுமையை காட்டினார் சேர்வை!

கண்டதேவித் திருவிழாக்களும் தேரும் வடங்களும் மன்னிய மரியாதைகளும் மீண்டும் நாநாட்டார் உரிமையாயின!

சிதைந்து போனார் சின்ன நாராயணன் செட்டியார், தன் விரலில் இருந்து வைர மோதிரத்தைக் கழற்றினார். கோயில் ராசகோபுர வாசல் படிக்கட்டில் வைத்தார், வைரத்தை பொடியாக்கினார். வைரத்தூளை தொண்டைக்குள் இறக்கினார்.

"சொர்ணமூர்த்தி கோயில் முதல் மரியாதையை நான் இழந்தால், அக்கணமே என் பிராணனையும் இழப்பேன்! "என்று தான் எடுத்திருந்த சபதத்தை இப்படியாக நிறைவேற்றிக் கொண்டார் அவர்! 

மீண்டும் நான்கு நாட்டுக் கூட்டம் நடந்தது. தேர்வடங்கள், மண்டகப்படிகள், மரியாதைகள் குறித்து தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்! செய்துகொண்ட அந்த உடன் படிக்கையை 30-07-1895 அன்று தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்கள்.

கண்டதேவி :
மண்டகப் படிகளும் மரியாதைகளும்!!

உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னாலை, இரவுசேரி ஆகிய நான்கு நாட்டார்களும் கண்டதேவித் தேர்த்திருவிழா தேர்வடங்கள், மண்டகப் படிகள், மரியாதைகள் குறித்து தங்களுக்குள் ஒரு ஒற்றுமை உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள்!

இதற்கான ஸ்டாம்ப் பத்திரங்களை 29-07-1895 மன்மத வருடம் ஆடி மாதம் 15 ஆம் தேதி, சார் பதிவாளர் கிருஷ்ணன் முன்னிலையில், நான்காம் எண் புத்தகத்தில் 68 ஆம் எண் தஸ்தாவேஜில் 5ஆம் பக்கத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது!

இந்த உடன்படிக்கையின் மூலப் பத்திரம் உஞ்சனை நாட்டு அம்பலகாரர் இராம, இராமசாமி யிடமும், நகல்கள் மூன்றில் முதலாவது செம்பொன்மாரி நாட்டம்பலம் இடங்கை செ, சுப்பு  ராமனிடமும், இரண்டாவது நகல் தென்னாலை நாடு ஈகரை பெரியதம்பி அம்பலத்திடமும், நான்காவது நகல் இரவுசேரி நாட்டம்பலம் உதிரப்புலி பழனியாண்டியிடமும் இருக்க வேண்டும்! "என்ற குறிப்பும் பத்திரத்தில் உள்ளது,

கீழணை என்கிற உஞ்சனை நாடு!
1 உஞ்சனை நாட்டின் அம்பலம் (நாட்டாண்மை) சன்னப்பன் இராம. இராமசாமி அம்பலம் 2  உஞ்சனை தம்பான் சுப. முத்துக்கருப்பன் அம்பலம்  3 சித்தாட்டிவயல் பூதப்பன் கரு,கருப்பணன் சேர்வை,4 சித்தாட்டிவயல் சிவந்தபுலி கரு கருப்பணன் சேர்வை

மேலணை என்கிற செம்பொன்மாரி நாடு,,,
5 நாட்டம்பலம் இடங்கை செ.சுப்புராமன் அம்பலம், 6 மேலச் செம்பொன்மாரி அம்பாவை பெரி, இருளப்பன் அம்பலம், 7 கீழ்க்குடி மாணிக்கமாலை கரு. நல்லமுத்து சேர்வை, 8 கீழச்செம்பொன்மாரி இளந்தாரி தா.இருளப்பன் சேர்வை, 9 ஆறாவயல் முத்துவேலு சிரவிழிக்குட்டி அம்பலம், 10 செட்டியாவயல் சுப்பராமன் கட்டத்தேவன் அம்பலம்,

கண்ணணை என்கிற தென்னாலை நாடு,,,
11 ஈகரை முத்துக் கருப்பன் பெரியதம்பி அம்பலம், 12 கோட்டவயல் உசிலப்பன் பழனியாண்டி அம்பலம், 13 வெட்டிவயவ் பழனிமுத்து சுப்பிரமணியன் அம்பலம் 14 சிந்தாமணி மாயழகு பொன்னுமணி அம்பலம், 15 கல்லூருணி இருளப்பன் சிலையப்பன் சேர்வை, 16 வீரை முத்திருளப்பன் முத்துக் கருப்பன் அம்பலம், 17 எழுவங்கோட்டை இராமசாமி சின்னையா அம்பலம், 18 சிலையப்பன் முத்துசாமி சேர்வை,

இரவுசேரி நாடு ...

19 நாட்டம்பலம் கீழக்குடியிருப்பு உதிரப்புலி இராம. பழனியாண்டி அம்பலம், 20 தளக்காவயல் உத்தண்டராய பெத்தபெருமாள் தேவன் 21 இரவுசேரி வேம்பலந்தான் காளிமுத்து ரகுநாதன் அம்பலம், 22 இரவுசேரி சேதுராமன் காளையப்பன் அம்பலம், 23 இரவுசேரி முத்தணன் காளிமுத்து சேர்வை 24 தாழையூர் முத்துகருப்பன் சோலைமலை அம்பலம்.

நான்கு நாடுகளின் அன்றைய அம்பலங்களும் பிரதிநிதிகளுமான இந்த 24 பேரும் பங்கேற்று கையெழுத்துப் போட்டு செய்து கொண்ட அந்த உடன் படிக்கையின் விபரம் ...

"கண்டதேவி சொர்ணமூர்த்தி கோயில் சந்நிதிகளிலும் குங்குமகாளி கோயில் சந்நிதிகளிலும் நடக்கின்ற திருவிழா மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்னிய மரியாதைகளை முதலாவதாக உஞ்சனை நாட்டாரும், இரண்டாவதாக செம்பொன்மாரி நாட்டாரும் மூன்றாவதாக தென்னாலை நாட்டாரும் நான்காவதாக இரவுசேரி நாட்டாரும் பெற்றுக் கொண்டு தங்கள் தங்கள் நாட்டவர்களுக்கு கொடுத்துக் கொள்ள வேண்டியது.

மேற்படி கோயில் தேர்த்திருவிழாவில் இரண்டாம் நாள் அன்ன வாகன மண்டகப்படியை தென்னாலை நாட்டாரும் மூன்றாம்நாள் பூத வாகன மண்டகப்படியை நடுவி  நாட்டாரும், நான்காம் நாள் கயிலாய வாகன மண்டகப் படியை இரவுசேரி நாட்டாரும் ஐந்தாம் நாள் யானை வாகன மண்டகப் படியை செம்பொன் மாரி நாட்டாரும் ஆறாம்நாள் ரிஷப (காளை) வாகன மண்டகப்படியை உஞ்சனை நாட்டாரும் ஏழாம்நாள் புஷ்பக விமான மண்டகப் படியை ஏழுகோட்டை நாட்டாரும் ஒன்பதாம் நாள் தேரோட்ட மண்டகப் படியை நான்கு நாட்டார்களும் பத்தாம் நாள் சப்தவாகன (ஏழு வாகனம்) மண்டகப்படியை நான்கு நாடுகளின் கணக்கப் பிள்ளைகளான வெள்ளாளர்களும் நடத்த வேண்டியது. 

மண்டகப்படிகளை நடத்துவோரே அந்தந்த நாளில் கோயிலின் மன்னிய மரியாதைகளை பெற்று தம்தம் நாட்டவர்களுக்கு வழங்க வேண்டியது.

ஒன்பதாம் நாள் தேரோட்ட மண்டகப் படியில் தேரின் மேலவடம் (மேற்குத்திசை வடம்) உஞ்சனை நாட்டாருக்கு உரியது,மிதிமரம் உஞ்சனை நாட்டை சேர்ந்தோருக்கு உரியது 

இரண்டாவது வடம் இரவுசேரி நாட்டாருக்கு உரியது!

மூன்றாவது வடம் தென்னாலை நாட்டாருக்கு உரியது! 

நான்காவதான கீழவடம் (கிழக்குத்திசை வடம்) செம்பொன் மாரி நாட்டாருக்கு உரியது! மிதிமரம் செம்பொன்மாரி நாட்டைச் சேர்ந்தோருக்கு உரியது

தேரோட்ட நாளில் கோயிலின் மன்னிய மரியாதைகள் உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னாலை, இரவுசேரி நாடு என்ற வரிசைப்படி உரியன!! 

மேற்கண்ட வியரப்படி நமது நன்மைகளை யோசித்து தீர்மானித்து இந்த ஒற்றுமை உடன் படிக்கையை நாம் செய்திருக்கிறோம்! இதன்படி நாம் நமது சந்ததி பரம்பரையாக நடந்து கொள்ள வேண்டியது!! "

இது தான் நாநாட்டார் 30-07-1895 அன்று தங்களுக்குள் உடன்பாடு கண்டு பதிவு செய்த பத்திரம்!

இதில் முதல் நாள் மண்டகப்படி பற்றியும் எட்டாம் நாள் பாரிவேட்டை மண்டகப்படி பற்றியும் எந்தக் குறிப்புமில்லை.

கண்டதேவி!
எட்டுக் கிராமங்களும்
படித்தலப் பணிகளும்!

சொர்ணமூர்த்தி கோயிலுக்கு பக்திப் பெருக்கொடு, உண்மையான தொண்டூழியம் செய்து கொண்டிருப்பவர்கள் பத்துநாள் மண்டகப் படிகளிலும் "சாமி தூக்கும் "மூன்று நாடுகளைச் சேர்ந்த எட்டு ஊர் கள்ளர்கள் தான் 

கண்டதேவி கோயிலின் பத்துநாள் திருவிழாவில் முதல்நாள் மண்டகப்படியை
சிவகங்கை தேவஸ்தானமும் இரண்டு மண்டகப்படிகளை நகரத்தாரும நடத்துகின்றனர்! 

தேரோட்டத்தையும் ஆறு மண்டகப்படிகளையும் நூற்றித் தொன்னூற்றி ஏழு கிராமங்களைக் கொண்ட நாநாட்டார்கள்  தான் தற்போது நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! 

ஆனால், இந்தப் பத்து நாட்களும் சாமி தூக்குவது, முதல் மூன்று நாடுகளைச் சேர்ந்த எட்டுக் கிராமக் கள்ளர்களின் கடமையும் உரிமையுமாக நீள்கிறது!

பெரியதும்  தொன்மையும் ஆன தென்னாலை நாட்டில், தெண்ணீர்வயல், பனந்தோப்பு  உடைப்பன்பட்டி ஆகிய மூன்று ஊர்கள் ...





உஞ்சனை நாட்டில், கண்டதேவிச் சேர்க்கைக்குரிய தாணிச்சாவூருணி, சிறுமருதூர் ஆகிய இரண்டு ஊர்கள் ...

செம்பொன்மாரி நாட்டில் ஆறாவயல், இருவணிவயல், சோணார்கோட்டை ஆகிய மூன்று ஊர்கள். 

இந்த எட்டு ஊர்களைத் தவிர, முதல் மூன்று நாடுகளைச் சேர்ந்த மற்ற ஊர்களுக்கோ, இரவுசேரி நாட்டுக்கோ, கண்டதேவி சொர்ணமூர்த்தி கோயிலில் சாமிதூக்கும் கடமையும் இல்லை :உரிமையும் கிடையாது! 

சாமி தூக்குவது எனில் என்ன?

பத்துநாள் மண்டகப் படிகளிலும், ஒவ்வொரு நாள் உற்சவத்திற்கும் உரிய யானை, காளை, மயில் அன்னம் போன்ற வாகனங்களை வாகனக் கொட்டகையில் இருந்தும், கடவுளர் திருமேனிகளை பாதகாப்பு அறையிலிருந்தும் வெளியே தூக்கிவந்து பல்லக்கு, சகடையில் தேரில் ஏற்றுவதையும், உற்சவம் நிறைந்ததும் அவற்றை உள்ளே தூக்கிச்சென்று பாதுகாப்பாக வைப்பதையும் தான் சாமி தூக்குவது என்றழைக்கிறார்கள்!

சாமி தூக்கும் எட்டுக்கிராமக் கள்ளருக்கும் தினமும் நூறுபடி புழுங்கல் அரிசி, "படித்தலம் " ஆக வழங்கபடுகிறது!

படித்தலம் பெறும் சாமிதூக்குவோரை "படித்தலத்தார் " என்றழைப்பது சிறப்புடையது எனக் கருதுகிறேன்!

பெரிய நாடான தென்னாலை நாட்டிலிருந்து வருகின்ற படித்தலத்தார், ஒவ்வொரு நாளும் உற்சவம் நிறைவு பெற்றதும், வாகனங்களையும் தெய்வத் திருமேனிகளையும் உள்ளே கொண்டு சேர்க்கும் பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள்

உஞ்சனை, செம்பொன்மாரி நாடுகளைச் சேர்ந்த ஐந்துகிராம படித்தலத்தாரும், உற்சவத்திற்கான வாகனங்களையும் தெய்வத் திருமேனிகளையும் வெளியே தூக்கிவந்து பொருத்தும் பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள்!

இந்த அடிப்படையில் தான், கோயில் நிர்வாகம் வழங்கும் படித்தலத்தில் பாதியை தென்னாலை நாட்டின் மூன்று கிராமங்களுளும், பாதியை மற்ற ஐந்து கிராம படித்தலத்தாரும் பகிர்ந்து கொள்கின்றனர்!

எட்டூர் படித்தலத்தாரின் உரிமையிலும் கடமையிலும் இதுநாள் வரை யாரும் பங்கு கேட்டு கோர்ட் படியேறவில்லை!

இங்கு உள்ள கோபால் நாடென்பது கோனார்கள் வாழும் பகுதி, உஞ்சனை போல செம்பொன்மாரி போல 14 நாடுகளில் ஒரு நாடல்ல! அது செம்பொன்மாரி நாட்டுக்குள் ஒரு அங்கம் கள்ளர்களுக்குரிய நாட்டு மரியாதை அவர்களுக்கும்உண்டு!செம்பொன்மாரி நாட்டின் இருபத்தியிரண்டரைக் கிராமங்களுக்குள் கோபால் நாட்டுக் கிராமங்கள் அடக்கம்


பதிவு : ஆறாவயல் பெரியய்யா


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்