வியாழன், 29 மார்ச், 2018

ஒருங்கான் அம்பலம்


கக்கன் வாழ்ந்த தும்பைப்பட்டி கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள், மழைநீர் தேங்கும், பீக்குளத்திலும், பிற ஜாதியினர், 'ஊரணி' என்ற குளத்திலும் குடிநீர் எடுப்பது அக்காலத்தில் வழக்கம்.

வெளிவாசல் சென்று கை கால் கழுவுவதற்கும், மாடுகள் நீர் அருந்த, குளிப்பாட்ட பயன்படுத்தப்பட்ட அக்குளத்து நீரைத்தான், குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர் தாழ்த்தப்பட்ட மக்கள். அதே சமயம், எவரும் குளிக்காமலும், மாடுகள் வாய் வைக்காமலும், மிகவும் பாதுகாப்பாக காவலிட்டு, காப்புச் செய்து வந்த குளம் ஊரணி. இதில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் எடுக்கக் கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு.

இதை எதிர்த்து, 'தாழ்த்தப்பட்ட மக்களும், ஊரணியைப் பயன்படுத்த வேண்டும்.' என்ற தன் எண்ணத்தை, தம்முடன் இருக்கும் தலைவர் களான, ஒருங்கான் அம்பலம் மற்றும் கருப்பன் செட்டியார் என்கிற கருப்பையா செட்டியார் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார் கக்கன்.

நல்லுள்ளமும், மனித நேயமும் கொண்ட அந்த தலைவர்கள், இதற்கு ஆதரவு தெரிவித்ததுடன், இக்கொடுமையை எதிர்த்துப் போராட ஒப்புக் கொண்டனர். அதனால், அன்று ஊர்ப்பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த குப்பையன் (குப்புசாமி) தலைமையில், ஊரணியில் குடிநீர் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டினார் கக்கன். ஒருங்கான் அம்பலம் மற்றும் கருப்பையா செட்டியார் ஆகியோர் முன்செல்ல, மக்கள் பின் சென்றனர்.

அனைவரும் குளத்தில் குடிநீர் எடுத்து திரும்பும் போது, அம்பலவர் இனத்து மக்கள், கத்தி மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களுடன் வழி மறித்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் கைகளிலோ குடிநீர்; அம்பலவர் மக்களின் கைகளிலோ ஆயுதம். 'என்ன நடக்குமோ...' என்ற அச்சம், மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால், தெளிந்த சிந்தனை கொண்ட அந்த தலைவர்கள், இதற்கு அஞ்சவில்லை; காந்திய வழியில் எதிரணியினரைச் சந்திக்க முடிவு செய்தனர். ஒருங்கான் அம்பலம் முன்வந்து பேசத் துவங்கினார்...

'நானும் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவன் தான். நம்மோடு வாழும் மக்கள், கழிவுநீரைக் குடிப்பது என்ன நியாயம்? இயற்கையால் வழங்கப்பட்ட நீரைக் கொடுக்க மறுப்பது எவ்வளவு பெரிய கொடுமை...' என்றார். ஆனால், எவரும் அவர் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை; கூச்சல் அதிகமானது. அதனால், 'இவர்களை வெட்டி, உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால், முதலில் என்னை வெட்டிவிட்டு, பின் மற்றவர்களை வெட்டுங்கள்...' என்று சொல்லி, சாலையின் நடுவில் அமர்ந்தார், ஒருங்கான் அம்பலம்.

உடனே கருப்பையா செட்டியார், 'உங்க ஆயுதத்தால் தான் இந்த சமூகக் கொடுமைக்கு முடிவு ஏற்படும் என்றால், என்னைத் தீர்த்துக் கட்டி, பின் தீர்வு காணுங்கள்...' என்று அவரும் சாலையில் அமர்ந்தார். அவர்களை தொடர்ந்து கக்கன், 'இந்த இரு தலைவர்களை வெட்டுவதற்கு முன், என்னை வெட்டுங்கள்; எங்கள் சமுதாயத்திற்கு விடுதலை பெற்றுத்தர முன்வந்த இவர்கள் சாவதற்கு முன் நான் மரணம் அடைய வேண்டும். அதனால், என்னை முதலில் வெட்டுங்கள்...' என்று கூறி, சாலையில் அமர்ந்தார்.

எதிரணியில் இருந்த வன்முறைச் சிந்தனையாளர்களோ என்ன செய்வதென்று புரியாமல், தடுமாறினர். இறுதியில், 'இரவு ஊர்ப்பஞ்சாயத்தில் முடிவு செய்யலாம்...' என்று கூறி கலைந்து சென்றனர்.

அன்று இரவு, மிகப்பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்தது. இனக்கலவரமாக மாறிவிடக் கூடாது என கருதி, அனைத்து இன மக்களும் ஒன்று திரண்டு அமர்ந்திருந்தனர். ஒருங்கான் அம்பலம், கருப்பையா செட்டியார் ஆகியோரும் ஊர் பஞ்சாயத்தில் கலந்து, மனிதநேயச் சிந்தனை என்ற அடிப்படையில் வாதத்தை எடுத்து வைத்தனர். பல்வேறு எதிரணி சொல் வீச்சிற்கிடையே, இவர்களின் வாதத் திறமையால் தாழ்த்தப்பட்ட மக்கள், ஊரணியின் ஒரு மூலையிலும், ஜாதி இந்துக்கள் மறுமூலையிலும் நீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. 

இந்த முடிவும், சமுதாயக் கொடுமையின் மறுவடிவம் தான் என்றாலும், அன்றைய சூழலில், அந்த மக்களை அமைதிப்படுத்த, இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

தும்பைப்பட்டி 'கிராமத் தலைவர் பெரிய அம்பலம்' அவர்கள்  ஐயா கக்கன் சிறுவயதில் படிப்பை வறுமையின் காரணமாக நிறுத்தியபோது   படிப்புக்காக உதவி செய்தவர்.

நன்றி : செந்தில் தேவர் , கூடலூர் தேனி

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்