வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சந்தனத்தேவன்



தமிழகத்தின் ராபின்வுட் "சந்தனத்தேவன்"

வெள்ளையர்களின் ஆட்சியில்,  பாராம்பரிய காவல்முறை ஒழிக்கப்பட்டு,  தேச காவல் தொழில் புரிந்த போர்க்குடியினரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது. தேசக் காவலராக இருந்த சந்தனத்தேவனின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு,  வன்முறையை நோக்கி தள்ளப்பட்டு சரித்திரத்தில் இடம்பெற்ற கள்ளர் சமூக வீரன் சந்தனத்தேவனின் இரத்தம் படிந்த வரலாற்றுப் பக்கங்களை காண்போம்.

மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி வட்டத்தை சேர்ந்த கே. போத்தம்பட்டி எனும் ஊரை சேர்ந்தவர் கருப்பத்தேவன்.  அவருக்கு மாயாண்டித்தேவன், சந்தனத்தேவன், புன்னைத்தேவன் எனும் மூன்று புதல்வர்கள் இருந்தார்கள்.

சந்தனத்தேவனுக்கு, கருத்தப்பட்டியை சேர்ந்த பெரியகருப்பத்தேவன் மகள் மூக்காயியைத் திருமணம் செய்து வைத்தார்கள். பெரியகருப்பத்தேவன் கருத்தப்பட்டியை சுற்றியுள்ள,  பாலகோம்பை,  கொளிஞ்சிப்பட்டி,  இராமகிருஷ்ணபுரம் போன்ற பகுதிகளுக்கு காவல்காரராய் இருந்து வந்தார். 

காவல்முறை ஒழிப்பு 

கிபி 1906ல் பெரியகருப்பத்தேவன் மற்றும் அவரது உறவினர்களான காவல்காரர்களுக்கு காவல் கூலி கொடுப்பதை ஊர்மக்கள் நிறுத்திக்கொண்டனர்.  பாரம்பரிய காவல் முறையை ஒழிக்க எண்ணிய வெள்ளையர்கள் ஊராரிடம் காவல் முறைக்கு எதிரான கருத்துகளை திணித்து,  குழப்பத்தை விளைவித்தனர். 

பாரம்பரியமாக செய்து வந்த காவல் தொழில் கள்ளர்களுக்கு பாதிக்கப்பட்டது. கள்ளர்கள் தொடர்ந்து காவல் கூலி கேட்டும் பலனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கருத்தப்பட்டிக்காரர்கள் 1906ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி கொளிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர்களின் மாடுகளை கடத்தி வந்தனர்.

தங்களது காவல்கூலியை கொடுத்தால் தான் மாடுகளை ஒப்படைப்போம் என கள்ளர்கள் மிரட்டினர். ஆனால் கொளிஞ்சிப்பட்டிக்காரர்கள் கிருஷ்ணாபுரம் கிராம முனிசிப் உதவியுடன் தங்களது மாடுகளை திரும்பப் பெற்றனர்.

1906ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி,  சந்தனத்தேவன் மற்றும் அவனது மாமா பெரியகருப்பத்தேவன் தலைமையில் அரிவாள், வேல்கம்பு, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றுடன் சென்ற கள்ளர்கள்,  கொளிஞ்சிப்பட்டியை சேர்ந்த தலைவர் பெரிய ஒச்சன் என்பவரின் வீட்டைத் தாக்கினர். பெரிய. ஒச்சனின் வீட்டை உடைத்து,   வைக்கப்போர்களுக்கு தீ மூட்டி,  மீட்டுச் சென்ற மாடுகள் மீண்டும் கடத்தி சென்றனர்.

அதிர்ச்சியடைந்த பெரிய ஓச்சன் அருகிலிருந்த ஊர்க்காரர்கள் ஏழு பேருடன் கள்ளர்களிடம் சென்று மாடுகளை திரும்ப பெற முயன்றனர்.  அப்பொழுது கள்ளர்கள் மாடுகளை தர மறுத்து எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். கள்ளர்களின் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.  இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின் சந்தனத்தேவனும் அவரது கூட்டத்தாரும் காட்டில் மறைந்தனர்.  காட்டில் மறைந்திருந்த சந்தனத்தேவனும் அவரது கூட்டத்தாரும் தங்களது வாழ்வாதரத்திற்காக வெள்ளையர்களின் நிர்வாகப்பகுதிகளை தாக்கி,  கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

சந்தனத்தேவன் தலைமையில் அவரது அண்ணன் மாயாண்டி, தம்பி பின்னத்தேவர், மாமனார் பெரிய கருப்பத்தேவன், விட்டித்தேவன், மொக்கையத் தேவன், குருநாதத்தேவன், நண்டுபுலி பெருமாள்தேவன், பெரியாண்டித்தேவன், சுப்பத்தேவன், சின்னக்கருப்பத்தேவன்,  முத்துக்கண்ணுத்தேவன், பூச்சி என்கிற சின்னவீரத்தேவன், வகுரத்தேவன் ஆகியோரை உள்ளடக்கிய பெருங்கூட்டமே காடுகளில் இருந்து செயல்பட்டு வந்தனர். பெரும் வசதி படைத்தோரையும், வெள்ளையர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டோரையும் தாக்கி கொள்ளையடித்து,  தாங்கள் பயன்படுத்தியது போக மீதியை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவியதாக சந்தனத்தேவன் பற்றிய கதைப்பாடல்கள் கூறுகின்றன. தங்களைப் பிடித்துக் கொடுக்க முயன்றோரையும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்தோரையும் தாக்கினர்.

பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தேடுதல் வேட்டை:-

சந்தனத்தேவன் குழுவினரைப் பிடிக்க அன்றைய உத்தமப்பாளையம் சரக காவல் ஆய்வாளர்,  தர்மராஜ் அய்யர் தீவிரம் காட்டினார்.  1906 மே முதல் ஜீலை காலகட்டங்களில் சந்தனத்தேவன் குழுவைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். சந்தனத்தேவன்,  அண்ணன் மாயாண்டி, தம்பி பின்னத்தேவர், மாமனார் கருப்பத்தேவர் தவிர அனைவரையும் காவல்துறை கைது செய்தது. சந்தனத்தேவன் தலைக்கு ரூபாய் 500 சன்மானமாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்பும் சந்தனத்தேவனை பிடிக்க இயலவில்லை. இவரைப்பிடிக்க வெங்கடேஸ்வர அய்யர் தலைமையில் எனும் காவல் ஆய்வாளர் தனி அதிகாரியாக நியமிக்கப்பபட்டு தேடுதல் வேட்டை துரிதப்படுத்தப்பட்டது. எனினும் போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை.

துரோகமும் பலி தீர்த்தலும்

மக்களின் ஆதரவு இன்றி சந்தனத்தேவனை கைது செய்யமுடியாது என்பதனை அரசாங்கம் உணர்ந்தது. சின்னமனூர் பகுதியில் செல்வாக்கோடு திகழ்ந்த மருதமுத்து சேர்வை என்பவரின் உதவியை போலீஸ் நாடியது. அவர் சந்தனத்தேவனையும், அவரது கூட்டத்தாரையும் பிடித்துத் தருவதாக,   போலீசாரிடம் உறுதியளித்தார். அதன்படி மருதமுத்து சேர்வை, மார்க்கையன் கோட்டையில் இருந்த சந்தனதேவனது உறவினர்களை மிரட்டி சந்தனன் இருப்பிடத்தை கூறுமாறு துன்புறுத்தினார்.குறிப்பாக சந்தனத்தேவனது தாயை மிகவும் அவமானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சந்தனத்தேவனது உறவினர்களை கண்காணித்து போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்தார்.


தாயை அவமானப்படுத்தியதால் கடுங்கோபமடைந்த சந்தனத்தேவன் மருதமுத்து சேர்வையை பலிவாங்க முடிவுசெய்தார். தான் சரணடைய விரும்புவதாகவும், தன்னை நேரடியாக நீதிமன்றத்தில் ஒப்படைத்து தனது வழக்குகளை நடத்த வேண்டும் என மருதமுத்துவுக்கு தூது அனுப்பினார்.  மருதமுத்துவும் இதற்கு ஒப்புக்கொண்டு , சந்தனத்தேவனை சந்திக்க தயாரானார். 

1906 ஆம் ஆண்டு அக்டோபர் 30 தேதி இரவு 8 மணியளவில்,  மார்க்கையன் கோட்டையை சேர்ந்த சுப்பத்தேவன் என்பவர் மருதமுத்து சேர்வையையும் அவரது பாதுகாவலர்களையும் அழைத்துக்கொண்டு கருத்தப்பட்டிக்கு அருகில் இருந்த ஒரு புளியந்தோப்புக்கு அழைத்துச் சென்றார்.அன்று பௌர்ணமி தினமானதால் பகலைப்போல வெளிச்சம் இருந்தது. மருதமுத்து காவல் ஆய்வாளர் அளித்த துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தார். அவரது பாதுகாவலர்கள் அரிவாள், வேல்கம்பு, கத்தி, தடி முதலியவற்றை வைத்திருந்தனர். அவர்கள் புளியந்தோப்பினை அடைந்தவுடன் மறைந்திருந்த சந்தனத்தேவன் வெளியில் வந்து அவர்களை வரவேற்றார். அப்பொழுது சந்தனத்தேவனின் கூட்டாளிகள் தங்களது ஆயுதங்களை மருதமுத்துவின் முன் ஒப்படைத்தனர். அப்பொழுது சந்தனத்தேவன் தன்னைப்போலவே,  தன் மாமனார் பெரியகருப்புத்தேவனுக்கும் நீங்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டான். மருதமுத்து இதற்கு ஒப்புக்கொண்டு தலையசைத்தார்.  அப்பொழுது சோளக்காட்டிற்குள் ஒளிந்திருந்த பெரியகருப்புத்தேவன்,  வெளியில் வந்து, ஐயா என்னையும் காப்பாற்றுங்கள் எனக்கூறி, மருதமுத்துவின் காலில் விழ முயன்றார். இதனால் மருதமுத்து குனிந்து பெரியகருப்பு தேவரை தடுக்க முயன்றார்.

அந்த நேரத்தில் அருகில் இருந்த வேல்கம்பை பிடுங்கிய சந்தனத்தேவன், மருதமுத்துவைப் பார்த்து " எங்க ஆத்தாவையாடா அவமானப்படுத்தினாய்? " எனக் கூறிக்கொண்டே மருதமுத்துவை குத்தித் தள்ளினார். மருதமுத்துவின் அருகில் இருந்த பின்னத்தேவன் அரிவாளை எடுத்து மருதமுத்துவின் தலையை வெட்டி துண்டாக்கினான்.  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருதமுத்துவின் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஒடினர். சந்தனத்தேவனும் அவரது கூட்டாளிகளும்,  மருதமுத்துவின் பிணத்தை எடுத்துக்கொண்டு மறைந்து சென்றனர். மறுநாள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசாருக்கு மருதமுத்துவின் இரத்தம் படித்த கைக்குட்டையும், அவரது கழுத்தை வெட்டும்போது துண்டான சட்டைக் காலர் துண்டு மட்டுமே கிடைத்தது.  கடைசிவரை மருதமுத்துவின் பிணத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. 

சண்டையும் சரணடைதலும்:-

மருதமுத்து சேர்வையின் கொலைக்கு பிறகு சந்தனத்தேவனும் அவரது கூட்டாளிகளும் மிகவும் பிரபலமடைந்தனர். காவல்துறை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. அவரது கூட்டாளிகளில் சிலரையும்,  அவருக்கு உதவியோரையும் காவல்துறை கைது செய்தது.  ஆனாலும் மக்கள் மத்தியில் சந்தனத்தேவனுக்கு இருந்த ஆதரவு குறையவில்லை. சந்தனத்தேவனது சமூகத்தை சார்ந்தவர் மட்டுமல்லாது வேற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் சந்தனத்தேவனுக்கு உதவி வந்தனர்.  

அவர்களில் முக்கியமானவர்களான முத்துசாமிப்பிள்ளை, அம்பட்ட சீனி  ஆகியோர் சந்தனத்தேவனுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியமும் அளித்தனர். இந்த நிலையில் சந்தனத்தேவனுக்கும் அவரது தம்பி பின்னத்தேவனுக்கு மலேரியா காய்ச்சல் வந்தது. இதனால் சிகிச்சைக்காக பூதிப்புரத்தில் இருந்த தங்களது மாமா வீட்டில் இவர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்களைப் பற்றிய தகவலை அறிந்த போலீசார் இவர்கள் தங்கியிருந்த வீட்டை, 1907 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அன்று சுற்றி வளைத்தனர்.

போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்,  பதிலுக்கு இவர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசார் சுட்டதில் பின்னத்தேவனது காலில் குண்டு பாய்ந்தது. பின்னத்தேவனுக்கு ஆண்டிப்பட்டியில் முதலுதவி அளித்தபின் சிறையில் அடைத்தனர். இம்முறையும் சந்தனத்தேவன் தப்பிவிட்டார். மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு வலுவிழந்து இருந்த சந்தனத்தேவன்,  1907 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பெரியகுளம் நிதிமன்றத்தில் சரணடைந்தார்.

இறுதியாக சந்தனத்தேவனின் அண்ணன் மாயாண்டித்தேவனும் அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். அவரது மாமனார் பெரிய கருப்பத்தேவன் மற்றும் வரகுணத்தேவனும் கைது செய்யப்பட்டனர்.  சந்தனத்தேவனை பிடிக்கும்  முயற்சியில் ஈடுபட்ட போலீசார்களுக்கு சன்மானங்கள் அளிக்கப்பட்டது. சந்தனத்தேவன் மீது கொலை கொள்ளை வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடந்தது. சந்தனத்தேவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 1907, ஏப்ரல் 4 ஆம் தேதி, தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. 
சந்தனத்தேவனது மாமனாருக்கும், வரகுணத்தேவனுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. 

சந்தனத்தேவனின் அண்ணன் மாயாண்டிக்கு கொள்ளை வழக்கிற்காக பத்து ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது.சிறையில் இருந்து விடுதலைப்பெற்ற மாயாண்டி திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்ததாகவும் ,குழந்தைக்கு சந்தனம் என பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்த பெண் குழந்தையின் வாரிசுகள் தற்போது மார்க்கையன் கோட்டை கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தூக்குமேடையேறிய  சந்தனத்தேவன்  :-

தண்டனை வழங்கப்பட்ட சந்தனத்தேவன் சில மாதங்களுக்குள் மதுரை சிறையில் தூக்கிலடப்பட்டார். தூக்கில் போடும் முன் சந்தனத்தேவனது கடைசி ஆசை என்ன என கேட்கப்பட்டது? அதற்கு அவர், நான் வாழாத என் சொந்த ஊரில் என் பிணமாவது வாழவேண்டும் , அதனால் எனது பிணத்தை சொந்த ஊரான கே போத்தம்பட்டியில் அடக்கம் செய்து விடுங்கள் என கூறிவிட்டு,  தூக்குக் கயிற்றை தானே கழுத்தில் மாட்டிக்கொண்டார்.சந்தனத்தேவனுக்கு தூக்கு தண்டனை இயற்றப்பட்டது.

சந்தனத்தேவன் நினைவிடம்:-

சந்தனத்தேவனின் உடலை கே போத்தம்பட்டி நாட்டாண்மைக்காரர் மடத்துக்கார ஒச்சப்பத் தேவரும், தேனி பூதிப்புர நாட்டாண்மைக்காரரும் பெற்றுக்கொண்டனர்.சந்தனத்தேவனின் உடல் மாட்டுவண்டியில் மதுரையில் இருந்து கே.போத்தம்பட்டிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சந்தனத்தேவனுக்கு அஞ்சலி செலுத்தினர். 

போத்தம்பட்டிக்கு அருகில் இன்றைய பேரையூர் சாலையில் பம்பைக்கார நாயக்கருக்கு மானியமாக கொடுக்கப்பட்ட இடத்தில், சந்தனத்தேவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டு,  சமாதி கட்டப்பட்டது.  முக்கிய தினங்களில் சந்தனத்தேவனின் சமாதியில்,  விளக்குகள் ஏற்றி மக்கள் வணங்கி வந்துள்ளனர்.  அந்த இடம் பலரது கைமாறி தற்போது,  நல்லத்தேவன்பட்டியை சேர்ந்த பசும்பொன் என்பவரின் வசம் உள்ளது. சந்தனத்தேவனின் சமாதி பராமரிப்பு இன்றி , மண்மேடாக காட்சி அளிக்கிறது.

நாட்டுப்புற பாடல்களில் சந்தனத்தேவன்:-


சந்தனத்தேவன் போலீசாரிடம் பிடிபடாமல் , வசதி படைத்தோரிடம் இருந்து செல்வங்களை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தார். இதனால் மக்கள் மத்தியில் சந்தனத்தேவனுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்துள்ளது.

நாட்டுப்புற விழாக்களில் சந்தனத்தேவனைப் பற்றிய பாடல்கள் மக்களால் பாடப்பட்டு வந்துள்ளது. மக்களின் வாழ்வோடு சந்தனத்தேவன் கதை ஒன்றிணைந்து இருந்தது. சந்தனத்தேவனை தூக்கிலிட்ட பின்,  திருச்சி சாமிப்பிள்ளை என்பவர் " சந்தனத்தேவன் சிந்து " என்ற நாட்டுப்புற பாடல் தொகுப்பை வெளியிட்டார்.  இத்தொகுப்பில் சந்தனத்தேவனின் ஆற்றல் மற்றும் வீரம் முதலியவை புகழப்பட்டுள்ளது. 

சந்தனத்தேவனின் கதையை பிண்ணனியாக கொண்டு மன்னர் காலத்தை மையமாகக் கொண்டு " சந்தனத்தேவன்" எனும் திரைப்படமே 1939ல் வெளிவரும் அளவுக்கு சந்தனத்தேவன் கதை அக்காலத்தில் பிரபலமாக இருந்துள்ளது. 

சு சக்திவேல் அவர்கள் எழுதிய " சமூக கதைப்பாடல் ஒர் ஆய்வு"  எனும் புத்தகத்தில் சந்தனத்தேவனை இங்கிலாந்து நாட்டுப்புற கொள்ளையன் ராபின்வுட்டோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். தமிழகத்தின் பழமையான காவல் முறையை ஒழிக்க வெள்ளையர்கள் மேற்க்கொண்ட முயற்சிக்கு பலியானவரே சந்தனத்தேவன்.

சந்தனத்தேவனின் ஆற்றலையும், பெருமையையும் கூறும் நாட்டுப்புற பாடல்கள் சிலவற்றை காணலாம்

"எல்லாரு காடுதானும் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு - ஏலங்கிடி லேலோ

சந்தனத்து காடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ

எல்லாரு வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சு வீடு- ஏலங்கிடி லேலோ

சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான மச்சு வீடு- ஏலங்கிடி லேலோ

எல்லாரு கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும்சட்டை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுசட்டை- ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும்சட்டை - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்ச்சோறு- ஏலங்கிடி லேலோ

சந்தனம் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
சரியான சம்பரிச்சோறு- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் ஏறும்வண்டி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் ஏறும்வண்டி - ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் வெட்டும்கத்தி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் வெட்டும்கத்தி - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ

எல்லாருங் கட்டும்பொண்ணு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கருத்தப்பொண்ணு- ஏலங்கிடி லேலோ

சந்தனம் கட்டும்பொண்ணு - ஏலங்கிடி லேலோ
சரியான செவத்தப்பொண்ணு- ஏலங்கிடி லேலோ

எல்லாருங் போடும்மிஞ்சி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளிமிஞ்சி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும்மிஞ்சி - ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளிமிஞ்சி- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டு வெற்றிலை- ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்து வெற்றிலை- ஏலங்கிடி லேலோ

எல்லாரு துணிப்பெட்டியும் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் துணிப்பெட்டிதான் - ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டி- ஏலங்கிடி லேலோ

எல்லாரு படுக்குங் கட்டில் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கைத்துக்கட்டில்- ஏலங்கிடி லேலோ

சந்தனம் படுக்குங் கட்டில் - ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில்- ஏலங்கிடி லேலோ

எல்லாரு கழுத்திலேதான் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம்- ஏலங்கிடி லேலோ

சந்தனம் கழுத்திலேதான் - ஏலங்கிடி லேலோ
சரியான சென்பகப்பூவாம்- ஏலங்கிடி லேலோ

எல்லாருங் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர்- ஏலங்கிடி லேலோ

சந்தனம் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத் தண்ணீர்- ஏலங்கிடி லேலோ

எல்லாரு சாப்பிடும் இலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம் இலை- ஏலங்கிடி லேலோ

சந்தனம் சாப்பிடும் இலை - ஏலங்கிடி லேலோ
சரியான  வாழை இலை- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் படுக்கும் பாயி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரப்பாயி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் படுக்கும் பாயி - ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும் மோதிரம் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் - ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும் மோதிரம் - ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும் சண்டை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற வாய்ச்சண்டை - ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும் சண்டை - ஏலங்கிடி லேலோ
சரியான வாள்ச்சண்டை - ஏலங்கிடி லேலோ

 எல்லாரும் குடியிருப்பு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பட்டிக்காடு - ஏலங்கிடி லேலோ

 சந்தனம் குடியிருப்பு - ஏலங்கிடி லேலோ
சரியான கரட்டுக்காடு - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் துடைக்குள்ளேதான் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற சதையெலும்பு - ஏலங்கிடி லேலோ

சந்தனம் துடைக்குள்ளேதான் - ஏலங்கிடி லேலோ
சரியான நரிக்கொம்புதான் - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போலீசென்றால் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நடுக்கந்தான் - ஏலங்கிடி லேலோ

சந்தனத்துக்குப் போலீசென்றால் - ஏலங்கிடி லேலோ
சரியான சக்காந்தமாம் (ஏளனமாம்)- ஏலங்கிடி லேலோ

( மலையருவி, Madras government oriental series, 1958, பர்சீ மாக்வீன் என்பவரால் தொகுக்கப்பட்டது )

பாமர மக்களால் பாடப்பட்ட இப்பாடல்கள் சந்தனத்தேவரின் செல்வ வளம், வீரம் முதலியவற்றை விளக்குகிறது. சந்தனத்தேவன் வாள்ச்சண்டை அறிந்தவன் என்றும், உடல் வலிமையுள்ளவன் என்றும், போலீசாரைக் கண்டு அச்சமில்லாதவன் என்றெல்லாம் புகழப்பட்டுள்ளார். 

போலீசார் சந்தனத்தேவனை தேடும் காலகட்டத்தை குறிப்பிடும் மற்றொரு நாட்டுப்புற பாடல் தொகுப்பு:-

"ஆயிரம் ரூபா தாரேன்
ஐக்கோட்டு வேலை தாரேன்
சந்தனத்தை பிடித்தவருக்கு
சருக்காரு வேலை தாரேன்"

என அரசாங்கம் அறிவிப்பு தந்ததாக பாடல் கூறுகிறது.

"ஆயிரம் ரூபா வேண்டாம்
ஐக்கோட்டு வேலை வேண்டாம்
சந்தனத்தை பிடிக்க வேண்டாம்
சருக்காரு வேலை வேண்டாம்"

என மக்கள் பாடுவதாக அமைந்துள்ளது, சந்தனத்தேவனுக்கு மக்களிடம் இருந்த ஆதரவை நமக்கு விளக்குகிறது.

" ஏட்டை இழுத்து வச்சு
 இன்ஸ்பெக்டரை கட்டி வச்சு
துவரங்காயைத் தின்னச் சொல்லி
மாட்டுரானே சந்தனமும்" 

என சந்தனத்தேவனுக்கும் போலீசாருக்கும் இருந்த பகைமை எடுத்துரைக்கப்படுகிறது.

"மகனுக்கு மல்லு வேட்டி
தாயாருக்கு சாயச் சீலை
பெண்டாட்டிக்கு பொட்டுச் சீலை
போய் எடுத்தான் சந்தனமும்"

என மற்றொரு பாடல் சந்தனத்தேவனின் குடும்பம் பற்றி குறிப்பிடுகிறது.

தமிழர் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருந்த தேசக் காவல் முறையை ஒழிக்க பிரிட்டீசார் எடுத்த முயற்சிகளின் விளைவாக,  காவலை தொழிலாக செய்து வந்த போர்க்குடியினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். வெள்ளையர்களின் தூண்டுதலால் சாதாரண பொதுமக்கள் காவல் தொழிலை இழந்த போர்க்குடியினருக்கு எதிராக திரும்பினர்.19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் போர்குடி மரபினர்,  

காவல் தொழிலை பாதுக்காக்க,  வன்முறையை கையில் எடுத்தனர். இதன் விளைவாக பல சச்சரவுகள் மற்றும் கலகங்கள் ஏற்பட்டன.  இத்தகைய வாழ்வாதார ஒழிப்பு நடைமுறையால் கொள்ளையனாக மாற்றப்பட்டவரே சந்தனத்தேவர். வசதி படைத்தோரை தாக்கி கொள்ளையடித்து,  ஏழை எளிய மக்களுக்கு அளித்து மகிழ்வித்த சந்தனத்தேவர்,  மக்களிடம் ஒரு கதாநாயகனாகவே உயர்ந்தார். 

இதன் விளைவாகவே அவரைப் பற்றிய நாட்டுப்புற பாடல்கள் பாமர மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ளது. தேசக்காவல் முறை ஒழிப்பால் வன்முறையை நோக்கி தள்ளப்பட்டு, வெள்ளைய ஆதிக்கத்துக்கு எதிராக செயல்பட்டு மாண்ட சந்தனத்தேவனின் புகழ் என்றும் போற்றுதலுக்குரியது.  சந்தனத்தேவனின் சமாதியை முறையாகப் பராமரித்து வழிப்பட்டு வருவதே சந்தனத்தேவருக்கு நாம் செலுத்தும் மரியாதை! 




ஆதார நூல்கள்:- 
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்: சுந்தர வந்தியத்தேவன் (545-555)
தமிழர் நாட்டுப்பாடல்கள் தா.வானமாமலை
The anti kaval movement of 1896, Anand pandian 
The indian economy ane social history review 

நன்றி : சியாம் சுந்தர் சம்பட்டியார்.


முழுமையாக வரலாற்றை அறிய http://www.sambattiyar.com/தமிழகத்தின்-ராபின்வுட்/ பக்கத்தில் பார்க்கவும்.

பூணூல் - சோழர் பாண்டியர் - தேவர்









பூணூல் அணியாத மாமன்னர் ராஜராஜ சோழதேவர் 


கள்ளர்கள், மறவர்கள் பூணூல் அணிவதில்லை, அதனால் இவர்கள் சத்திரியர்களில்லை என்று பல கதைகள் எழுதிவருகிறார்கள். அதை எழுதியது, யார் என்று பார்த்தால் சூத்திரர்கள் என்று குறிக்கப்பட்ட, கடந்த 500 ஆண்டுகளாக தெளிவான வரலாற்று குறிப்புகள் உள்ளன. அதில் எந்த போரும் செய்யாத, இந்த நூற்றாண்டில் தங்களை சத்திரியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் சாதிகளாகவே இருக்கின்றன. ந்த பூணூல் பற்றி ஆய்வோமானால்    

பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது வேட்கோவரான குயவர். பானை குயவ பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது கம்மாளர். நகை, பாத்திரம், மரக்கலம், சிற்பம் கட்டிடம், போர் கருவிகள் உருவாக்க பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை விற்கள் தாங்கிக்குள் விட்டு முதுகோடு இணைத்து அணிந்து பயன்படுத்தியது வேடரும் போர் காவல் வீரரும். வேட்டையாட போரிட காவல்காக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.

சிற்பங்களில் பூணூல்

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களில் பலவகைப் பூணூல்களைப் பார்க்கலாம். இவை நூலால் செய்யப்பட்டவை, துணியால் செய்யப்பட்டவை, ருத்ராக்‌ஷ மாலையால் ஆனவை என மூன்று வகை. சிலர் அணிந்துள்ள பூணூல் உபவீதம் என்ற வகையில் இடது தோள் மேலிருந்து வலது இடுப்பில், கைக்குக் கீழாகச் செல்லும். பிறர் அணிந்துள்ள பூணூல் நிவீதம் என்ற வகையில், இடது தோள் மேலிருந்து வலது கைக்கு மேலாக இருக்குமாறு இருக்கும். சிலர் சன்னவீரம் என்ற வகையில் இரு பூணூல்களை இரண்டு தோளிலிருந்தும் மாறு கையை நோக்கிச் செல்லுமாறு அணிந்திருப்பார்கள்.

தேவர்கள், அசுரர்கள், கடவுள்கள், ராஜாக்கள் என அனைத்து ஆண்களும் பூணூல் அணிந்துள்ளனர். சில மனிதர்களுக்குப் பூணூல் இல்லை என்பதையும் இந்தச் சிற்பங்களில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.


'அர்ஜுனன் தபசு’ என்று சொல்லப்படும் பெருந்தவ வெளிப்புற சிற்பத் தொகுதியில் காணப்படும் சிவனின் சிற்பம். இவர் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். உபவீதமாக அணிந்துள்ளார். அருகில் உள்ள பூதகணங்கள் பூணூல் அணியவில்லை.


அசுரர்  மகிஷாசுரனை எடுத்துக்கொள்வோம். தேவியுடன் போரிடும் மகிஷனின் சிற்பத்தை வலப்புறம் பார்க்கலாம். மகிஷனும் கனமான துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளான். மகிஷனுக்குமேல் உள்ள ஓர் அசுரனும் வஸ்திரத்தால் ஆன பூணூலை அணிந்திருப்பதை  காணமுடிகிறது.


ஆக, கடவுள்களுக்கு உண்டு; அசுரர்களுக்கு உண்டு. தேவகணங்களுக்கு இல்லையா என்றால் பூணூல் அணிந்த கணங்களும் உண்டு, அணியாத கணங்களும் உண்டு.


பூணூல் அணிந்துள்ள கணம் ஒன்றின் படத்தை வலப்பக்கத்தில் காணலாம். வராக மண்டபத்தில் துர்கையின் அருகில் காணப்படும் இந்த கணம், துணியால் ஆன பூணூலை அணிந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம்.


கோவர்தன சிற்பத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் ஓர் இடையனைக் கட்டி அணைத்து பயத்தைப் போக்குவிக்கும் நிலையில் உள்ள பலராமன் அணிந்திருப்பது துணியால் ஆன பூணூல். அருகே, ஒரு கையால் மலையைத் தூக்கிக்கொண்டு நிற்கும் கிருஷ்ணன் அணிந்திருப்பது இரண்டு பூணூல்கள். இரண்டுமே துணியால் ஆனவை. ஆனால், பலராமன் அணைத்துக்கொண்டு நிற்கும் இடையன் பூணூல் அணிவதில்லை. 



திரிமூர்த்தி மண்டபத்தில் பிரம்ம சாஸ்தாவாக நிற்கும் சுப்ரமணியர் அணிந்திருக்கும் பூணூலை இடப்பக்கம் காணலாம். இந்தப் பூணூல் ருத்ராக்‌ஷ மணிகளால் ஆனது. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று செல்லுமாறு அணியப்பட்டுள்ளது. 




இங்கே படுத்திருக்கும் விஷ்ணு அணிந்திருப்பது நிவீதமாக துணியால் ஆன பூணூல். கீழே இருக்கும் ஆயுத புருஷர்களில் வலப்பக்கம் தெரிபவர் நூலால் ஆன பூணூலை அணிந்துள்ளார் - நிவீதம். கீழே இடப்பக்கம் உள்ளவர் ருத்ராக்‌ஷத்தால் ஆன பூணூலை நிவீதமாக அணிந்துள்ளார். மேலே உள்ள கணங்களில் இடப்பக்கம் உள்ள கணம் துணியால் ஆன பூணூலை உபவீதமாக அணிந்துள்ளது. அருகில் உள்ள பெண் போன்ற உருவம் பூணூல் ஏதும் அணிந்தாற்போலத் தெரியவில்லை. மது, கைடபன் இருவரில் ஒருவர் முதுகில் பூணூல் ஓடுவதைப் பார்க்கலாம். எனவே மற்றவரும் பூணூல் அணிந்திருக்கத்தான் வேண்டும் என்பதை யூகிக்கலாம். 


சோழர்களின் முற்காலச் சிற்பங்கள் பல்லவர் சிற்பங்களின் கூறுகளைப் பின்பற்றியனவாகவே இருந்தன. உயரமான மகுடம். மெல்லிய உடலமைப்பு, தடித்த பூணூல் அமைப்பு ஆகியவை இடம்பெற்றன. பின்னர்ப் பல புரிகளைக் கொண்ட பூணூல் அமைப்பு, சிம்ம முகத்துடன் கூடிய அரைக் கச்சை, கண்ட மாலை ஆகியன அமைக்கப் பெற்றன.

பிற்காலச் சோழர் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் முற்காலச் சோழர் சிற்பங்களைவிடச் சற்று அதிக அளவில் இடம்பெற்றன. சிற்பங்களின் முகம் வட்டமான அமைப்பினை உடையதாயும், இலேசான சதைப் பற்றுடனும் காணப்பட்டது. உடலமைப்பு குறுகிக் காணப்பட்டது. 


ஸ்ரீ உடையார் ராஜராஜசோழத்தேவர்  சிற்பத்தில் பூணூல் இல்லாமலும் உள்ளது. திருவலஞ்சுழியில், நின்ற நிலை, பூணூல் இல்லை, வணங்கிய நிலை.


கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில்,  சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீச்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் என்றும் கருதுகின்றனர். அடியாருக்கு (இராசேந்திரன்/சண்டீச்வரர்) பூணூல் இல்லை


கடவர்யார் சிலை பூணூல் இல்லை



கிருஷ்ணதேவராயர் பூணூல் இல்லை


 விஸ்வநாதநாயக்கர் பூணூல் இல்லை




Madurai Thirumalai Nayakar with his Queen.in Azhagar Kol Temple.



சிவந்தெழுந்த பல்லவராயன் பூணூல் இல்லை



அறந்தாங்கி தொண்டைமான் பூணூல் இல்லை





சிற்பங்களில் மூவேந்தர் ஆட்சி முடிவதற்கு முன்பும், அதற்கு பிறகு முற்றிலும்  பூணூல் இல்லாமல் மன்னர் , சிற்றரசர்கள் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ன.


தமிழ் மண்ணில்  பூணூலின் பழமையை அறிவோமானால்  

தமிழ் மண்ணில் நான்கு வர்ண முறை கடைபிடிக்க வில்லை, ஆனாலும் தமிழ் புலவர்கள் தமிழ் மண்ணில் தொழில்கள் அடிப்படையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்துள்ளனர். இவர்களில் யார் பூணூல் அணிகிறார்கள். முப்புரி நூல் ந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு குலத்தவருக்குமே உரியது. 

வாரியார் அவர்கள் தரும் விளக்கம் 

புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது. புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் ", இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது. அந்த காலத்தில் வேத வியாசம் பண்ணுபவர்கள் - ஆட்சி புரிபவர்கள் - மேலை நாடு சென்று தொழில் புரிபவர்கள் மட்டுமே படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே அந்தணர்கள் - பாடம் சொல்லி தர விரும்பியவர்கள் , க்ஷத்ரியர்கள் - அரசாள விரும்பியவர்கள் , வைசியர்கள் - வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமே குருகுலம் சென்று படித்தனர். அவர்கள் மட்டுமே இதனை அணிந்தனர். முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர். காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும், குடுமபஸ்தான் - இரு புரியும், சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தனர் என்று விளக்கம் தருகிறார்.



பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது வேட்கோவரான குயவர். பானை குயவ பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை ஆரம் நீளம் பார்க்க பயன்படுத்துவது கம்மாளர். நகை, பாத்திரம், மரக்கலம், சிற்பம் கட்டிடம், போர் கருவிகள் உருவாக்க பூணூலை பயன்படுத்தினார்கள். பூணூலை விற்கள் தாங்கிக்குள் விட்டு முதுகோடு இணைத்து அணிந்து பயன்படுத்தியது வேடரும் போர் காவல் வீரரும். வேட்டையாட போரிட காவல்காக்க பூணூலை பயன்படுத்தினார்கள்.

சூத்திர குலத்தவர் என்று குறிப்பிடப்படும் நாயன்மாரில் ஒருவர் சிறுத் தொண்ட நாயனார், இவர்  மாமாத்திரர் குலம் (வழிவழி மருத்துவன் றொழில் செய்யும் ஓர் மரபு), இவரை பற்றிய பாடல்  "முந் நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர்" ((சிறுத் தொண்டர் வரலாறு / பாடல் எண் 23 ~ ”) என்று குறிப்பிடுகிறது.

மறை ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவர் சிவாகமக் கருத்துக்களைத் தொகுத்து 727 குறட்பாக்களாக அருளியுள்ளார். இதனைப் பதிப்பித்து உரையும் கண்டவர் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். நூல் பெயர் "சைவ சமய நெறி" ( உட் தலைப்பு -ஆசாரியார்)

அந்தணர் ஏழு நூல் தரிக்கக் கடவர் என உணர்த்துகிறார் (பாடல் எண் -49 -ல்), மன்னர்கள் மூன்று , வைசியர்கள் இரண்டும் ஏனைய சூத்திர குலத்தவர் முதலானோர்க்கு ஒரு பூணூலும் தரிக்கக் கடவர் என ஆகம விதியை உணர்த்துகிறார் (பாடல் எண் 50). தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க / விற் பயிலும் சூத்திரர் (பாடல் எண் 52 ). தர்ப்பண காலத்திலும், அர்ச்சனை செய்யும் போதும், அக்னி காரிய காலத்திலும் இப் பூணூலைத் சூத்திரர் தரிக்கக் கடவர். சூத்திரர்களுள் எக் காலத்திலும், பூணூல் தரிக்க உரிமை உடையோர் (பாடல் எண் 53 )

ஆகமங்களில் விதிக்கப் பட்டவாறு நால் வகை வருணத்தாரும், முப்புரி நூல் தரித்தற்கு உரியர் என சிவ பெருமான் வகுத்த, ஆகம நூல் அனுமதித்துள்ளது. 53-ஆம் பாடலில் வகுத்த விதி, ஏனைய குலத்தவருக்கும் விலக்கு அன்று என ஊகித்து அறிக. 


மனுச்சட்ட ஆட்சி முறை தமிழ்நாட்டில் முயலப்பட்ட போது சொத்து வைத்திருக்கும் உரிமை, என பல உரிமைகள் தடுக்கப்பட்டன. அதனை எதிர்த்து உருவான போராட்டம் வலங்கை-இடங்கைப் போராட்டத்தின் பகுதியாக உருவெடுத்தது. இப்போராட்டம் மக்களை வாட்டியெடுத்த வரிச் சுமையிலிருந்து மீள்வதற்காக உருவாகிய இப்போராட்டம் பூணூல் அணிதல், பட்டம் கட்டுதல், திருமணம், சாவு ஆகியவற்றின் போது சங்கூதுதல், குடைபிடித்தல் போன்ற விருதுகளை நிலைநிறுத்தும் போராட்டமாகத் திசை திருப்பப்பட்டது. விருதுகள் பெரும்பாலும் புற அணிகளே. குடைபிடித்தல், செருப்பணிதல், தலைப்பாகை கட்டல், வாள் வைத்திருத்தல், விளக்கு கொண்டு செல்லல், சிவிகையில் செல்லல், சாமரம் வீசுதல் போன்ற 72 விருதுகள் மன்னர்களால் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளுக்காக மக்கள் வலங்கை 98 சாதியினர், இடங்கை 98 சாதியினர் என்று பிரிந்து நின்று தம்முள் ஓயாத சண்டை இட்டுக் கொண்டனர். அரசும் பார்ப்பனர்களும் ஒரு புறத்தாருக்கு மட்டும் புதுப்புது விருதுகளை வழங்கி இச்சண்டையை முடுக்கிவிட்டனர்.

பூணூல் அணிவது பற்றி நம் நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் இயக்கங்களும் கணக்கற்றவை. வலங்கை இடங்கைப் போராட்டங்கள் தவிர இராமனுசரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட பூணூலணிவித்து வைணவர்களாக்கினார். ஆனால் வேதாந்த தேசிகர் தலைமையில் இதற்கெதிராகத் தோன்றிய வடகலை இயக்கம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எனவே தென்கலையினர் வடகலையினரை விட இழிந்தவர்கள் என்ற நிலை இன்றும் கூட நிலவுகிறது.

அரசர்கள் கோயில் வழக்குகளையும், யாருக்குக் கோயிலில் முதல் மரியாதை யாருக்கு இரண்டாம் மரியாதை, யார் யார் எந்தெந்த வாகனத்தில் செல்லலாம், யார் யார் பூணூல் அணியலாம் என்பன போன்ற வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ளனர். மங்கம்மாள் சௌராஷ்டிரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளாள்.

பூணூலுக்கும் குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் சம்பந்தம் இல்லை, எல்லா சாதியினரும் அணியும் ஒன்றே. அந்தணர்கள், மற்றும் சில குடிகள், அந்த வழக்கத்தை விடவில்லை. மற்றையவர்களின் வாழ்வில் பழக்கம் குறைந்துவிட்டது. ஆனால் கருமாதி செய்யும் போது பூணல் அணியும் பழக்கம் எல்லா சாதியினரிடமும் இன்றும் உண்டு. முக்குலத்தோர், பறையர்கள் என்று எல்லா தமிழ் சாதிகளுக்கும் உள்ளன.

பார்ப்பனர்களுக்குதான் பூணூலா? எத்தனை பார்ப்பனர்கள் இன்று பூணூல் அணிகிறார்கள் என்பது வேறு விஷயம். 

இன்றும் பார்ப்பனர் தவிர எப்போதும் பூணூல் அணிந்து கொள்ளும் சாதியினர் 

1 ) பூநூல் அணிந்த வேளார் அல்லது குலாலர்
2 ) விஸ்வகர்மா (கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார், கம்மாளர், பத்தர், ஆசாரி, ஆச்சாரி என்றும் கூறுவர்)
3 ) செட்டியார் (நாட்டுக்கோட்டை செட்டியார் , தேவாங்க செட்டியார்) 



ஒரு சிற்பி எவ்வாறு இருக்கவேண்டும் என்று ஒரு சிற்பநூல் இலக்கணம் வகுத்துள்ளது..

" ஸ்தபதீநாம் சதுர்வேத தஸ; கர்மா விதியதே| ஸிகாயஜ் ஞோபவீ தஞ்ச ஜபமாலா கமண்டலும் || கூர்மபீட: ஸிரச்சக்கரம் யோக வேஷ்டிர லங்கர் தம்| பீதவஸ்த்ரஸித ப்ரஷ்டம் விபூதிர்க் கந்தலேபநம் || ஸிவிவமந்த்ரம் ஸிவத்யாநம் ஸிவபூஜா விதீயதே | ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸாநாம் ஹ்ருத யேத்யாந ஸில்பிநாம்."

எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும் ; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும் ; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும் ; தலையிற்ற் சிகையை உடையவனாயும் ; பூணூலைத் தரித்தவனாயும் ; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சக்தனத்தையும் அணிந்தவனாயும் மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்ம விஷ்ணு மகேசுரரை இருதயத்தில் தியானிப்பவனாய் இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்பது இதன் பொருளாகும்.

அதாவது இவர்கள் கூற்றுப்படி சூத்திரனான அந்த சிற்பி.. அப்போ நான்கு வேதங்கள் கற்று, தலை முடி கிராப் வெட்டி, பூணூல் அணிந்து பட்டு பீதாம்பரம் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளாதான் 



விஸ்வகர்மா தங்களை அக்னி குலம் என்று கூறிக்கொள்கின்றனர். திருமணத்தில் அணியும் பூணூலைக் கழற்றாமல் தொடர்ந்து அணிந்து வருகின்றனர். ஐந்தொழிற் கொல்லர்களாகிய விசுவகர்மர்கள் குறித்த இன்னொரு செய்தியும் உண்டு. ஆச்சாரியர் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; கொல்லர்கள் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் அதன் முடிவில் அவர்களும் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசாரியன் என்றால் ஆசிரியன் என்று பொருள் கூறுவர். ஆசாரி என்பது கொல்லர், தச்சர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள குலப்பெயர். ஆசு எனப்படும் அச்சு அல்லது சட்டத்தை அரிகிறவன் என்று இதற்கு விரித்துப் பொருள் கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் பூணூல் அணியும் வழக்கமும் சிவதீட்சை பெறும் வழக்கமும் இருந்ததததாக குறிப்பிடுகிறார், Rev. James Cartman, OBE, M.A., B.D., M.Th. தன்னுடைய Hinduism in Ceylon என்ற நூலில்.

பெண்களும் பூணூல் அணிந்த காலம் உண்டு. சந்நியாசிகளில் சிலர் பூணூல் அணிவதில்லை. சங்கராச்சாரியார்கள் அணிவதில்லை. 

சுப காரியங்கள் செய்யும்போது இடது தோளிலிருந்து குறுக்காகவும், அசுபங்கள் போது மாற்றியும், தாம்பத்திய உறவில் ஈடு படும்போது நேராக மாலையாகவும் அணிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகும் முன் மூன்று நூல். திருமணம் ஆனால் ஆறு நூல். தந்தை உயிர் தவறினால் ஒன்பது நூல். தாய் உயிர் தவறினால் 12 நூல். என்றும், பூண் + நூல் = பூணும் நூல் , அதாவது அணியக் கூடிய நூல் என்று சிலர் கூறுகின்றனர்.

பிராமணர்கள் பூணூல் அணிந்து கொள்வதற்கான காரணம் பற்றி அவர்கள் கூறும் கூற்று ஒன்றாக இருந்தாலும் தமிழறிஞர்களின் கூற்று வேறுவிதமாக இருக்கிறது. போர்வீரர்கள் மரபினர் தொடர்ந்து போர்செய்து வந்ததால் அவர்கள் எப்போதும் அம்பு கூடுகளை வாருடன் இணைத்துத் தமது மார்பின் குறுக்கே அணிந்திருந்ததால் மார்பின் குறுக்கே வெள்ளைத் தழும்பு நிரந்தரமாகியது . அதைப் பார்த்த பிராமணர்கள் அந்த வெள்ளைத் தழும்புக்கு மாற்றாகப் பூணூல் அணிந்ததாகத் தமிழறிஞர்கள் உரைக்கின்றார்கள்.


வரி நவில் கொள்கை மறை நூல் வழுக்கத்து
புரிநூல் மார்பர் உறைபதி சேர்ந்து [ சிலம்பு : மதுரைக்காண்டம். புறஞ்சேரி இறுத்த காதை]

வேதநூல்களின் நெறியிலிருந்து வழுவி வரிப்பாடல்களைப் பாடும் கொள்கை கொண்டவர்களான முப்புரிநூல் அணிந்த பிராமணர்கள் வாழும் ஊரை அடைந்தார்கள்.வரிப்பாடல் என்பது காதலையும் காமத்தையும் பாடும் பாடல். கோவலன் அங்கே இருந்தவர்களுடன் யாழில் இசைப்பாடல்களை வாசித்து மகிழ்ந்து களிக்கிறான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.  கொற்றவையின் கோலத்தை வருணித்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். ( கொற்றவை வணங்கியவர்கள் கள்ளர் , மறவர் . இன்று கள்ளர் கோவில்களில் வேளாளர், பறையர் கோவில் பூசாரிகளாக இருப்பதை பொருத்திப்பார்க்கவேண்டும்)  

கள்ளர் நாட்டில் கள்ளர் பெரியபூசாரிகள் தங்க பூணூல் அணிவது பரம்பரியமாக இருக்கின்றது.

பூணூல் தகராறு.

மங்கம்மாள் ஆட்சியின் இறுதிக் காலமான 1705ல் மதுரை ஆளுநராக இருந்த ஜொஸ்யம் வெங்கடரங்க ஐயர் சௌராஷ்டிரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமையும் பார்ப்பன ஆசாரங்களும் இல்லை என்று கூறி,18 சௌராஷ்டிரர்களைப் பிடித்து திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பி சிறையில் அடைக்கும்படி செய்தார். இதன் பின்னர் ராணி மங்கம்மாளால் சௌராஷ்டிரரும் பூணூல் அணியலாம் எனும் உரிமையைப் பனை ஓலைச் சுவடியில் எழுதி அரசு முத்திரையுடன் தரப்பட்டது. 

தமிழ்நாடு சாலியர்-பட்டாரியர் சமுதாய வரலாறு (பக்: 36)


இப்படி எல்லா சாதிக்கும் பொதுவான பூணூல், இன்று நாகரிகம் வளர்ச்சியில் பெரும்பாலான சாதிகளிடம் மறைந்துவிட்டது. கள்ளர்களின் ஆண்கள் மற்றும் பெண்கள் காது வளர்த்தல் இன்று முழுவதுமாக மறைந்து கள்ளர் பூசரிகளிடம் மட்டுமே காதில் வளையமாக உள்ளது. இன்று கள்ளர்கள், பூணூலை இறப்பில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வளரி என்ற கள்ளர்கள் ஆயுதமும், இன்று மறைந்தே போய்விட்டது.



இப்படியாக பூணூல் நாண்கு வருணத்திற்க்கும் (தமிழர் ஆதி பண்பாட்டிற்க்கு பொருந்தாத) பொதுவாக இருக்கையில், சிலர் நாங்கள் தான் பிராமணர், சத்திரியர், அது எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நவீன காலத்தில் கூட கனவுலகத்தில் வாழ்கின்றார்கள்.


நன்றி : பத்ரி சேஷாத்திரி (சிற்பங்களில் பூணூல்)

கருமாமுகில் திருநிறத்துக் கற்கள்வன் ஸ்ரீ ராஜ ராஜ சோழத்தேவர்

வியாழன், 27 பிப்ரவரி, 2020

ஆதித்தகரிகாலன் சோழதேவர்




ஆதித்தகரிகாலனை, இரண்டாம் ஆதித்தன் என்பர் ஆராய்ச்சியாளர். 957 முதல் 970 வரை ஆண்ட இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுக்கு இவன் முதன் மகனாவான். இவனது கல்லெழுத்துக்கள் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் கிடைத்துள்ளன; 5 ஆவது ஆட்சியாண்டு வரை காணப்பெறுகின்றன. இவன் 'பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப்பெறுகிறான். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனால் கி. பி. 966ல் வெல்லப்பெற்ற வீரபாண்டியனே இவனால் வெல்லப்பட்ட பாண்டியனாதல் கூடும். இவ்வாதித்த கரிகாலன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான்.


கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடிக்கு அருகில் உள்ள உடையார்குடியில் அனந்தீஸ்வரம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. இந்த சிவன் கோவில் கருவறையின் மேற்குப் புறத்தில் ஒரு சாசனம் காணப்படுகிறது.


ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த சாசனம், ஆதித்த கரிகாலன் கொலையை அடுத்து கொலை தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது.


"பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்... றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம்" என்கிறது இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி.


இந்தக் கல்வெட்டிலிருந்து சோமன், அவனுடைய தம்பி ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் ஆகியோர் ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர்.


சோமன், அவனுடைய தம்பி ரவிதாசன், அவனுடைய தம்பி பரமேஸ்வரன் ஆகிய மூவரும் யார்? இவர்கள் எதற்காக இந்தக் கொலையைச் செய்தனர் என்பது அடுத்த கேள்விகள். இதில் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்பது பாண்டிய நாட்டு அந்தண அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டத்தைக் குறிக்கிறது. இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் என்பது சோழ நாட்டு அந்தண அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டத்தைக் குறிக்கிறது. ஆகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் ஒருவர் பாண்டிய நாட்டிலும் மற்றொருவர் சோழ நாட்டிலும் அதிகாரிகளாக இருந்திருக்கின்றனர்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்