செவ்வாய், 20 மார்ச், 2018

தஞ்சை மண்ணின் வட்டார இலக்கிய எழுத்தாளர் சி.எம்.முத்து குச்சிராயர்



சி.எம்.முத்து, தஞ்சாவூரை அடுத்துள்ள இடையிருப்பு என்னும் சிற்றூரில் 10 பிப்ரவரி 1950இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சந்திரஹாசன் கமலாம்பாள் ஆவர்.

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகளும், புதினங்களும் எழுதிவருகிறார். இவர் எழுதிய முதல் சிறுகதை எம்.எஸ்.மணியன் நடத்திய கற்பூரம் இதழில் வெளியானது. இவரது சிறுகதைகள் தீபம் (இதழ்), தென்றல், கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இனி ...

குச்சிராயர் குடும்பம்னா அப்படி ஒரு மரியாதை. சிங்கம் மாதிரி எங்க அய்யா. சுத்துப்பட்டு ஊருல பஞ்சாயத்தெல்லாம் அவரு தலைமையிலதான் நடக்கும்.

மூப்பனார், பூண்டி வாண்டையார்னு பெரிய மனுஷ சினேகிதம் வேற. 30 வேலிக்கும் மேல நிலம். மம்பட்டி... இல்லைன்னா அருவான்னு திரிஞ்ச எங்க பரம்பரையில பேனாமேல ஆசைப்பட்டு திசைமாறிப்போன ஆளு நான் மட்டும்தான்’’ என்றபடி வெள்ளந்தியாக சிரிக்கிறார் சி.எம்.முத்து.

தஞ்சை மண்சார்ந்த வட்டார இலக்கியத்துக்காகப் போற்றப்படுபவர். ‘நெஞ்சின் நடுவே’, ‘கறிச்சோறு’, ‘இவர்களும் ஜட்கா வண்டியும்’, ‘வேரடி மண்’, ‘ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும்’ உள்ளிட்ட நாவல்கள் முத்துவின் இலக்கியச் செழுமைக்குச் சான்று. ‘ஏழுமுனிக்கும் இளைய முனி’, ‘மழை’, ‘அந்திமம்’ போன்ற சிறுகதைகள் மூலம் தஞ்சை மண்ணின் வாழ்வியலை மேல்பூச்சு இன்றி பதிவு செய்தவர். அழுக்கு வேட்டியும், கிழிந்த பனியனுமாக கிராமத்து மண்ணழுக்கு ஒட்டி வாழும் முத்துவின் பேச்சில் எழுத்தாளனுக்கு உரிய இறுமாப்பும் தலைக்கனமும் ஈர்க்கிறது. ‘கதா’, ‘இலக்கிய சிந்தனை’ என இவரது எழுத்து சூடிய மகுடங்கள் ஏராளம்.


மம்பட்டியும் பேனாவும்!

‘‘ஜட்கா வண்டி, எடுக்க, உடுக்க வேலையாளு, ஊரு முட்டும் மரியாதைன்னு வசதியான வாழ்க்கை... பெரிய சுத்து வீடு. ஒரு பக்கம் நெல்லு... இன்னொரு பக்கம் கடலைன்னு வீட்டுக்குள்ள கால் வைக்க இடமிருக்காது. அய்யாவுக்கு எம்மேல ரொம்ப பிரியம். அண்ணன் திருநாவுக்கரசு நல்லா படிப்பாரு. எனக்கு ஏறல. வம்பு, வழக்குன்னு திரிஞ்ச பய நான். எல்லார்கிட்டயும் திமிர காட்டுவேன். எங்க வகுப்புல கருணாநிதின்னு ஒரு பையன். எப்ப பாத்தாலும் கதை, கவிதைன்னு எழுதிக்கிட்டே இருப்பான்.

வாத்தியாருங்க எதுக்கெடுத்தாலும் அவனைத்தான் கூப்பிடுவாங்க. ‘நம்ம எதுல குறைஞ்சு போயிட்டோம்... நாமளும் கதை எழுதணும்’னு முடிவு பண்ணி நேரா லைப்ரரிக்கு போனேன். ‘கண்ணாயிரத்தின் விதி’ன்னு ஒரு புத்தகம் இருந்துச்சு. அதை எடுத்துப் படிச்சேன். ஒரு நாப்பது பக்க நோட்டை வாங்கியாந்து, வாத்தியார் வர்ற நேரம் பாத்து அதுமாதிரியே ஒரு கதையை எழுத ஆரம்பிச்சுட்டேன்.

நமச்சிவாயம்னு ஒரு தமிழ் வாத்தியார். ‘என்னப்பா எழுதுறே’ன்னு கேட்டாரு. ‘கதை எழுதுறேன்யா’ன்னு சொன்னேன். நோட்டை வாங்கிப் பாத்தாரு. ‘எலேய்... பெரிய நாவலாசிரியரா வருவே போலிருக்கே. நல்லா எழுதியிருக்கேடா’ன்னு பாராட்டுனாரு பாருங்க... அதுவரைக்கும் பாராட்டே வாங்காத ஆளு நான். ஆகாயத்துல மிதக்குற மாதிரி இருந்துச்சு!

மறுநாளு அந்த நோட்டை கக்கத்துல வச்சுக்கிட்டு வயக்காட்டுக்குக் கிளம்பிட்டேன். ‘என்ன சின்னய்யா, பள்ளிக்கூடம் போகலையாடா’ன்னாரு அய்யா. ‘இல்லைய்யா. நான் கதையெழுதப் போறேன். இனிமே பள்ளிக்கூடம் போகமாட்டேன்’னு சொல்லிட்டேன். திட்டுனாரு... அடிச்சாரு... ஆனா பள்ளிக்கூடம் போகவே மாட்டேன்னு சாதிச்சுட்டேன். ‘சரி... ஒரு பய படிக்கிறான். இவன் விவசாயத்தைப் பாத்துக்கட்டும்’னு விட்டுட்டாரு.

தினமும் வயக்காட்டுக்குப் போயிருவேன். வரப்புகள்ல உக்காந்து எதையாவது எழுதுவேன். அய்யா வர்றப்போ ஏரைப் புடிக்கிறது, நாத்தள்ளிப் போடுறதுன்னு போக்குக் காட்டுவேன். எம்.எஸ்.மணியன் நடத்துன ‘கற்பூரம்’ பத்திரிகையில முதல் கதை வந்துச்சு. அதுக்குப்பிறகு ‘கண்ணதாசன்’, ‘தீபத்’துல எல்லாம் எழுதுனேன்.

அண்ணன் எஞ்சினியராகி, செகரட்ரியேட்ல வேலைக்குச் சேந்துட்டார். என்னால வயக்காட்டு வேலையில ஒட்ட முடியலே. வீட்டுல சொல்லாம, நானும் கிளம்பி சென்னை போயிட்டேன். அப்போ இலங்கையைச் சேர்ந்த சரோஜினி வரதராஜ கைலாசப் பிள்ளைங்கிறவர் ‘மாணிக்கம்’னு ஒரு பத்திரிகை நடத்துனார். அதோட சென்னை பிரதிநிதியா என்னை வேலைக்குப் போட்டாங்க. சம்பளம் 450 ரூவா. கிட்டத்தட்ட அண்ணன் வாங்கினதுக்கு இணையான சம்பளம்.

வேலைக்குச் சேந்து நாலு மாசத்துல அய்யாகிட்ட இருந்து ஒரு கடுதாசி வருது. ‘நம்ம ஊருக்கு போஸ்ட் ஆபீஸ் வந்திருக்கு. நீதான் போஸ்ட் மாஸ்டர். உடனே புறப்பட்டு வா’ன்னு எழுதியிருக்காரு. ‘நல்ல வேலை கிடைச்சிருக்கு. கதை எழுத வசதியாயிருக்கு. வரமுடியாது’ன்னு பதில் கடுதாசி போட்டேன். அய்யா நேரா வந்துட்டார். ‘இவன் குடுக்கிற சம்பளம் நம்ம வூட்டு வயக்காட்டு மூலையில விளைஞ்சிரும். எனக்கு வயசாயிருச்சு. வந்து பக்கத்துல இருந்து விவசாயத்தைப் பாத்துக்கடா’ன்னு கூட்டிட்டு வந்துட்டாரு. போஸ்ட் ஆபீஸ்ல மாதச் சம்பளம் வெறும் 94 ரூவா. வவுத்தெரிச்சலா இல்லை?’’ - முத்துவின் சிரிப்பில் எகத்தாளமும் உண்மையும் தெறிக்கின்றன.

‘‘அந்த வேலை ரொம்ப நாள் நீடிக்கல. ஆபீஸ்ல உக்காந்து கதை எழுதிக்கிட்டிருந்தா அதிகாரி பாத்துக்கிட்டிருப்பானா? கல்யாணம் பண்ணி வச்சா பொறுப்பு வந்திரும்னு அய்யா நினைச்சாரு. பொண்டாட்டி பேரு பானுமதி. எழுத்துன்னா கிலோ என்ன விலைன்னு கேக்குறவ.

வேலை போனவுடனே திரும்பவும் ஏரைப் பூட்டிக்கிட்டு வயக்காட்டுக்குப் போனேன். நான் முழுநேரமா விவசாயத்தில இறங்கின நேரம், மிகப்பெரிய இறங்குமுகம். உரம், பூச்சிக்கொல்லின்னு பழக்கமில்லாத சரக்கை எல்லாம் குடுத்து வயல்ல கொட்டச் சொன்னாங்க. விளைச்சல் கூடுச்சு. அதைவிட அதிகமா செலவும் கூடிப் போச்சு. நிறைய கடன் வாங்க வேண்டியிருந்துச்சு.

இன்னைக்கு பதினைஞ்சுக்கும் மேல புத்தகங்கள் வந்திருக்கு. ஆனா, பெரும்பாலான நிலம் கையவிட்டுப் போயிருச்சு. மிஞ்சியிருக்கறது 2 வேலி. அதுதான் ஜீவனம். 3 பசங்க இருக்காங்க. ஆனா, இன்னைக்கு உள்ள புள்ளைகளுக்கு விவசாயத்துல ஆர்வம் இல்லை. எங்க காலத்துக்குள்ளவே இதுவும் ரியல் எஸ்டேட்டுக்குப் போயிருமோன்னு பயமாயிருக்கு. நாளுக்கு நாள் வாழ்க்கை தேஞ்சுக்கிட்டேதான் இருக்கு. இந்த வாழ்வியலை முன்வச்சு ‘மிராசு’ன்னு ஒரு நாவல் எழுதிருக்கேன். என் வாழ்க்கையோட மொத்த செய்தியும் அதுல இருக்கும்.

40 வருஷம் எழுத்தும் இலக்கியமுமா வாழ்ந்திருக்கேன். ஏகப்பட்டதை இழந்திருக்கேன். 65 வயசுலயும் இடைவிடாம எழுதிக்கிட்டிருக்கேன். ஆனா இன்னமும் ஊருக்குள்ள என்னை எழுத்தாளனா யாருக்கும் தெரியாது. அதே குச்சிராயர்... அதே சின்னையா... அதே மைனர்... ஆனா ஜெயகாந்தனுக்கு, நாஞ்சில்நாடனுக்கு, கல்யாண்ஜிக்கு, எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, ஜெயமோகனுக்கு என்னையும், என் எழுத்தையும் தெரியும். அதுதான் என்னை எழுதத் தூண்டுது.


களையெடுத்து, கதிர் அறுத்து, கட்டுத் தூக்கி, இடுப்பொடிஞ்சு கிடக்கிற எங்கூரு மனிதர்களைக் கொண்டாடுறதுக்காகவே எழுதுறேன். எழுதுவேன். எங்க அய்யன் வச்சுட்டுப் போன 2 வேலி நிலம் மிச்சம் கெடக்கு. அதை இழந்தாலும் எழுதுறதை நிறுத்த மாட்டேன்...’’ - மென்ற வெற்றிலைக்குள் புகையிலையை அள்ளித் திணித்தபடி, மம்பட்டியை தூக்கிக்கொண்டு வயற்காட்டுப் பக்கம் கிளம்புகிறார் இந்த பேனாக்காரர்.



1989−ல் சி.எம்.முத்து எழுதிய " கறிச் சோறு " நாவலில் , ஜாதிக்குள், ஜாதி பார்க்கிற கள்ளர், மறவர் னத்தின் ஒரு நிகழ் கூறை கலை நயத்துடன் ஆராய்கிற நாவல்.


நா.விச்வநாதன், சா.கந்தசாமி, சி.எம்.முத்து


சொற்ப ஸ்கூல் கல்வி.ஆனால் ஏழெட்டுபேர் முத்துவை பி.எச்டி. செய்கிறது புதுமை. மனிதனின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒரு சொல்லில் முத்துவால் சொல் லிவிடமுடியும். சாதி உண்டு எனச்
சொல்லித் திடுக்கிடவைப்பது அவரது வழக்கம். நான் கள்ளன் அதுவும்ஒஸ்தியான 'வாகரைக் கள்ளன்' என்பார்.

தஞ்சாவூரின் எதார்த்தமே ஜாதி பேசுவது பேணுவதுதான். முத்து வெளிச்சமாக வெள்ளந்தியாகப் பேசுகிறது நிஜத்தையே. இன்றைய நடைமுறை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பபது உத்தமமானது.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்