வெள்ளி, 30 மார்ச், 2018

தமிழ்ப்பெருங்கவி கல்லல் மதுரகவி ஆண்டவர்.



கள்ளர் குடியில் பிறந்தவர் ஆண்டவர் அம்பலம் என்ற தெய்வத்திரு, தமிழ்ப்பெருங்கவி கல்லல் ( வேப்பங்குளம்) ஸ்ரீ மதுரகவி ஆண்டவர்.



கல்லல் சோமசுந்தரேஸ்வரர் சௌந்தரநாயகி கோயிலுக்கு சொந்தமான தேர் 100 ஆண்டை கடந்தும் தனது கம்பீர தோற்றத்தால் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாரம்பரிய பெருமை கொண்ட கல்லல். இங்குள்ள மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் சுந்தரரேஸ்வரர் செளந்தரநாயகி கோயிலுக்கு சொந்தமான தேருக்கு 100 வயது ஆகிறது.


கம்பீரமாக நிற்கும் அந்தத் தேருக்கு குன்னங்கோட்டை நாடு என அழைக்கப்படும் 22க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட இந்தப் பகுதிக்கான பண்பாட்டுச் சின்னமாக திகழ்கிறது. இந்தத் தேரின் திருப்பணி, கடந்த 1920 ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கி, 1921 ஆம் ஆண்டில் நிறைவடைந்துள்ளது.

குன்னங்கோட்டை பகுதி மக்களின் ஒத்துழைப்புடன், சிறிய சப்பரமாக இருந்த இத்தேரை, பெருந்தேராக கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர் வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மதுரகவி ஆண்டவர். கடந்த நூற்றாண்டின் தமிழ்ப்பெருங்கவியாக திகழ்ந்த மதுரகவி ஆண்டவர், பர்மாவில் தொழில் செய்து தாம் ஈட்டிய செல்வத்தின் ஒரு பகுதியையே இந்தத் தேரின் திருப்பணிக்காக செலவிட்டுள்ளார்.



தேர் செய்யும் காலத்தில் தங்கி இருப்பதற்காக அவர் எழுப்பிய ஸ்ரீ குகமணிவாசக நிலையம் என்ற மடாலயம் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மகனின் எதிர்பாராத மரணத்தால் இல்லறத்தில் இருந்து துறவறம் பூண்ட மதுரகவி ஆண்டவர், தமது முப்பத்தைந்தாவது வயதிலேயே திருத்தேரை திருத்தமுடன் செய்து முடித்ததாக கூறுகிறார் அவரது மகள் வழிப் பேரனான தமிழறிஞர் மெய்யாண்டவர்.



தேர்ப்பணியில் மட்டுமின்றி, தேமதுரத் தமிழ்ப்பணியிலும் சிறந்து விளங்கிய மதுரகவி ஆண்டவர், அண்ணபூரணி அம்மன் பிள்ளைத் தமிழ், முருகக்கடவுள் நீத்தல் விண்ணப்பம், திருவாசக அமுதசாரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட செவ்விலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். இத்தெய்வீக பனுவல்கள் மட்டுமின்றி, சந்தம் துள்ளும் செந்தமிழ்நாட்டுச் சிறப்பு போன்ற பண்பாட்டு பெருமை பேசும் பாடல்களையும் மதுரகவி ஆண்டவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு ஆண்டுகளை எட்ட உள்ள இந்தத் தேர் காலத்தால் பழுதான தேரின் சக்கரங்களை பெரும் பொருள் செலவில் புதிதாக மாற்றியமைத்து, அதன் கம்பீரப் பேரழகு சிறிதும் குறையாமல் அதன் மாண்பைக் காத்து வருகின்றனர் குன்னங்கோட்டை மண்ணின் மைந்தர்கள்.

வடமலை, தென்மலைநாட்டுக்கள்ளர்களின் நாட்டுக்கூட்டம் குன்னான்டார் கோவிலில்தான் அக்காலத்தில் நடந்துள்ளது. வரிகேட்டு வந்த நாயக்கர்களின் தலையை கொய்து வரியாக அளித்தவர்கள். கிபி 7 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரைக்கோவில் குன்னான்டார் கோவில், தொண்டைமான், மராத்தியர்கள்,நாயக்கர்கள் என எந்த மன்னருக்கும் கட்டுப்படாமல் தங்களை தாங்களே தன்னரசாக ஆண்டவர்கள். கானாடு, கோனாடு போரில் 12000 கள்ளர்கள் போரிட்டு கோனாட்டு வீரர்களை அழித்தொழித்து போரைமுடிவிற்கு கொண்டுவந்தவர்கள்.

கீழடி போன்ற புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளை தேடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நூறாண்டுகள் ஆன பின்னரும் கண்முன்னே கம்பீரம் குன்றாத கலைக் கோபுரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது கல்லல் தேர். பல பெருமைகளை கொண்ட கலைநய வேலைப்பாட்டுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இத்தேர் பல நூற்றாண்டை பெருமையுடன் கடந்து செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

சிவகங்கை மாவட்டம் கல்லல் சோமசுந்தரேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் திருக்கோயில் மாசிமகத் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. குன்னங்கோட்டை கள்ளர் மரபைச் சேர்ந்த நாட்டார் அனைவரும் இந்தத் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

கல்லலில் உள்ள இந்தத் தேரை, 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வேப்பங்குளத்தைச் சேர்ந்த மதுரகவி ஆண்டவர் சுவாமிகள் முன்னின்று, குன்னங்கோட்டை நாடு என்று அழைக்கப்படுகின்ற இருபத்தி இரண்டரை கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களின் உதவியோடு, செய்து முடித்தார்.

சைவசித்தாந்த பேரறிவாளரும், தமிழில் பெரும் வரகவியுமான ஆண்டவர் சுவாமிகள் தமது சொத்துக்களில் பெரும் பகுதியை விற்று, அதனை முழுமையும் இதற்காகவே செலவு செய்து இந்தத் தேரைச் செய்து முடித்துள்ளார். இந்தத் தேரைச் செய்வதற்காக தங்கியிருப்பதற்காக, கல்லல் தெப்பக்குளத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு மடத்தை நிறுவினார். அதற்கு மணிவாசக சரணாலயம் என்று பெயர்சூட்டினார். அந்தக் கல்வெட்டு இப்போதும் உள்ளது. அந்த மடத்தில் தங்கியிருந்து இந்தத் திருத்தேர்ப்பணியை அவர் மேற்கொண்டார். மாலைகண்டான் லெட்சுமணன் ஆசாரி பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இந்தத் திருத்தேரைச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதற்காக உழைத்துள்ளனர்.

இந்தத் தேரைச் செய்து முடித்த சில மாதங்களில் பர்மா திரும்பிய ஆண்டவர் சுவாமிகள் (துறவு பூணுமுன்னர் ஆண்டவன் அம்பலம் என அழைக்கப்பட்டுள்ளார்) அங்கு எதிர்பாராத விதமாக தமது ஓரே மகன் நாகுசாமி மரணமடையவே, அதில் மனமுடைந்த ஆண்டவர் சுவாமிகள், அங்கிருந்த அத்தனை சொத்துக்களையும் விற்று விட்டு தாயகம் புறப்பட்டு வந்து சேர்ந்தார். தமிழகம் வந்து சேர்ந்த ஆண்டவர் சுவாமிகள், சென்னை அருகே உள்ள திருவெற்றியூரில், கணபதி சாமி என்ற துறவியைச் சந்தித்து அவரிடம் தீட்சை பெற்று அன்று முதல் ஆண்டவர் சுவாமிகள் எனப் பெயர் விளங்கலானார்.

பின்னர் கல்லல் மடத்துக்குச் சென்று தங்கியிருந்த ஆண்டவர் சுவாமிகள், தத்தெடுத்த பிள்ளையும் அவரது குடும்பத்தினரும், மற்றும் வேப்பங்குளத்தில் உள்ள பங்காளிகளும் சேர்ந்து செய்த துரோகத்தால் மனம் நொந்து கல்லலில் இருந்து புறப்பட்டு, குன்னக்குடி, சிதம்பரம் எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்று தமிழ் கற்றுக் கொடுப்பதை தன் வாழ்வாக வரித்துக் கொண்டுள்ளார். இதனிடையே, கல்லல் மடத்துக்காக பல இடங்களில் சொத்துக்களை வாங்கி, அதனை வைத்து மடத்தைப் பராமரிக்குமாறும் கூறி, உரிய வகை செய்துள்ளார்.



இதனிடையே, அவரது சொந்த வாழ்க்கை குறித்துச் சில விவரங்களைப் பார்ப்போம். வேப்பங்குளம் சின்னையா அம்பலத்துக்குப் பிறந்த ஆண்டவர் அம்பலம் சிறுவயதிலேயே அறிவு நுட்பமும், செயல்திறனும் மிக்கவராக இருந்துள்ளார். பின்னர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் பயின்ற அவர், சுயமாகத் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து, பேரறிஞராக பரிணமித்ததுடன், வரகவியாகவும் விளங்கியுள்ளார். இளம் பிராயத்திலே பர்மா சென்ற அவர், அங்கு பெரும் பொருள் ஈட்டி உள்ளார். சொந்த ஊரான வேப்பங்குளத்தில் தோப்புகள், நிலங்கள் என வாங்கிக் குவித்துள்ளார்.

வெற்றியூர் எரணப்பனம்பலம் குடும்பத்தைச் சேர்ந்த காளியம்மை என்ற பெண்ணை முதல் தாரமாக மணந்துள்ளார். அவர்களுக்கு நாகுசாமி என்ற ஒரு மகன் பிறந்துள்ளார். ஒரு கட்டத்தில் காளியம்மை இறந்து போகவே, அந்த அம்மையாருக்கு சிறிய தாயார் மகளான , வேப்பங்குளம் ஆறுமுகம் சேர்வைகாரர் மகள் தெய்வானையை இரண்டாம் தாரமாக மணந்துள்ளார். 13 வயதிலேயே மணம் முடித்ததால், விவரம் எதுவும் அறியாமலேயே தெய்வானையும் வாழ்ந்து வந்துள்ளார். ஆண்டவர் அம்பலத்துக்கும், தெய்வானை அம்மாளுக்கும் ஒரே மகள். அவள் பெயர் சௌந்தர நாயகி. கல்லல் சோமசுந்தரம் சௌந்தரநாயகி அம்மன் நினைவாக அந்தப் பெயரை வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில்தான் கல்லலின் தங்கி தேர்த்திருப்பணியைத் தொடங்கும் காலத்தில் தான் தெய்வானை அம்மாள் கருவுற்றிருக்கிறார். மகள் சௌந்தரநாயகி பிறந்த பின்னர் பர்மா சென்ற ஆண்டவனம்பலம், ஒரே மகன் நாகுசாமியைப் பறிகொடுத்த நிலையில் தவக்கோலத்தில் ஊர் திரும்புகிறார். அப்போது சௌந்தர நாயகிக்கு சுமார் 5 வயதிருக்கும். அந்தக் காலக்கட்டத்தில், ஆண்டவர் சுவாமிகளுக்கு ஆண் வாரிசு இல்லாததால், அவருக்கு சுவீகார புத்திரராக பங்காளி வீட்டைச் சேர்ந்த யாரையாவது பிள்ளை எடுக்க வேண்டும் என அனைவரும் வற்புறுத்தினார்கள். வற்புறுத்தியதும் பங்காளிகளே.

பங்காளி வீடான சபாபதி வகையறாவைச் சேர்ந்த காளிமுத்து என்பவரை ஒருவழியாக ஆண்டவர் சுவாமிகளுக்கு பிள்ளையாக எடுத்தனர். காளிமுத்து மனைவி பெயர் காளியம்மை. வெற்றியூர் காளி என்று இந்த அம்மையாரைச் சொல்லுவார்கள். காளிமுத்துவுக்கு அருணாசலம், சோணைமுத்து என இரண்டு மகன்கள் பிறந்தனர். சொத்துக்களை நன்றாகவே அனுபவித்தனர். வாழும்காலம் வரை , ஆண்டவர் சுவாமிகளின் ஒரே மகளும் அக்காளுமான சௌந்தர நாயகிக்கு எந்த உதவியும் செய்யவில்லை. (சௌந்தரநாயகிக்கு மூன்று பெண்குழந்தைகள், இரண்டு ஆண்குழந்தைகள். ஆண் குழந்தைகளில் மூத்த மகனுக்கு ஆண்டவன் என்று பெயர் சூட்டினார்கள்.)



கடைசிவரை அக்காள் சௌந்தரநாயகி குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்யாத காளிமுத்து, அருணாசலத்துக்கும், சோணைமுத்துவுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத் தவறவில்லை. ஆனால், காளிமுத்துவும், அவரது மனைவி காளியம்மாளும் தெய்வானை அம்மாளையும், சிறுமியாக இருந்த சௌந்தரநாயகி அம்மாளையும் கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கினர்.

இந்த நிலையில்தான் நமசிவாயம் அம்பலம் மகன் சோணைமுத்து, (தூக்குத்தூக்கி) என்பவரின் தூண்டுதலில் ஆண்டவர் அம்பலகாரரை மனரீதியாக பலவீனப்படுத்தி, காளிமுத்து என்பவரைப் பிள்ளையாக எடுத்து சொத்துக்கள் முழுவதையும் எழுதி வாங்கி உள்ளனர். இதில் மனம் நொந்த ஆண்டவர் சுவாமிகள், பின்னர் தேசாந்திரியாகத் தமது பயணத்தைத் தொடங்கி உள்ளார். பல ஊர்களைச் சுற்றிவிட்டு, பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடியில், சிவகாமி அம்மாள் என்பவரது இல்லத்தில் சென்று தங்கி இருந்து, அங்கு தமிழையும், சைவ இலக்கியங்களையும் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். 1944 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி தம்மைத் தாமே அடக்கிக் கொண்டு சமாதி ஆகியுள்ளார்.

வேப்பங்குளத்தில், கள்ளர் மரபில் பிறந்த ஆண்டவர் என்ற ஒரு மனிதரின் மகத்தான வாழ்க்கையின் சிறு குறிப்பு இது. முழுமையான வரலாறு எத்தனை பெரியதாகவும், அரியதாகவும் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். வாழ்நாளில் பெரும் பொருள் ஈட்டிய ஆண்டவர் சுவாமிகள், தன் அகவாழ்வில் பெரிய அமைதி எதனையும் அடைந்து விடவில்லை. ஆனால், தான் பிறந்த சமூகத்துக்கு காலத்தால் அழியாத கம்பீரமான சின்னமாக கல்லல் தேரை உருவாக்கி உள்ளார்.

இத்தனை பெரிய வாழ்க்கையை, பிற சமூகத்தில் பிறந்த ஒருவர் வாழ்ந்திருந்தால், இந்நேரம் அவர்களை எத்தனை பெரிய அளவிலோ கொண்டாடி இருப்பார்கள். ஒரு பெரும் தேரைச் செய்தவர். மடத்தை நிறுவியவர். செந்தமிழ் நாட்டுச் சிறப்பு, திருவாசக அமுதசாரம், அன்னபூரணி அட்ட பிரபந்தம், மயூரகிரி முருகர் அநுபூதி,செந்தமிழ் நாட்டு சிறப்பு எனப் பல செந்தமிழ் நூல்களைப் படைத்தவர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வல்லத்தரசு ந.மு. வேங்கடசாமி நாட்டார் போன்ற சமகாலத்தில் வாழ்ந்த பேராளுமைகளுடன் தொடர்பில் இருந்த பெருமகன்.

தமிழ் தமிழர் வளர்ச்சி குறித்து இன்றைக்கு எண்பது ஆண்டுக்கு முன்னரே தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து உரைத்த பெருமகனார் நாவலர். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிப்படையாகக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் அதனைத் திருவருள் கல்லூரி என்ற பெயரில் அமைக்கவும் 1922-23ஆம் ஆண்டுகளில் கல்லல் ஸ்ரீ குகமணிவாசக சரணாலயம் என்னும் காண்டீப விருது பெற்ற குன்னங்கோட்டை நாட்டார் மடத்தை நிறுவிய வேப்பங்குளம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் உதவியுடன் முயன்றார். மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் தனது சொத்துக்களிலிருந்து 200 ஏக்கர் நிலம் கல்லூரி நிர்மாணிப்பதற்காக ஒதுக்கினார்.பிற்காலததில் அது பலரால் தையகப்படுத்தப்பட்டு விட்டது.அதற்கான ஆதாரம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் வாரிசுகளிடம் உள்ளது.

இத்தனை பெருமைகள் இருந்தாலும் அவர் பிறந்த சமூகம் அவரை இதுவரை கொண்டாடவில்லை. அவர் செய்துவைத்திருக்கும் தேருக்காகக் கூட நினைத்துப் பார்க்கவில்லை. எத்தனை நாகரிகமும், பெருமிதமும், வரலாற்று அறிவும் கொண்ட சமூகத்தில் அவர் பிறந்திருக்கிறார் பாருங்கள்.

ஆய்வு : திரு. ராஜேஸ் வல்லாளதேவர்

தலைவர் - கள்ளர் நாடு அறக்கட்டளை

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்