திங்கள், 12 மார்ச், 2018

ஏழுகிளை பதினாலு நாட்டு கள்ளர்நாடு



பதினாலு நாடு அம்பலகாரர்கள் (ஏழு கிளை கள்ளர்கள்)



பதினாலு நாடு

1) குன்னங்கோட்டை நாடு,
2) தென்னிலைநாடு,
3) உஞ்சனை நாடு, (புதுக்கோட்டையிலும் ஒரு கள்ளர் உஞ்சனைநாடு உள்ளது )
4) இரவுசேரி நாடு,
5) செம்பொன்மார் நாடு,
6) கப்பலூர் நாடு,
7) இரும்பா நாடு,
8) சிலம்பா நாடு,
9) வடம்போகி நாடு,
10) தேர்போகிநாடு,
11) கோபால நாடு,
12) ஏழுகோட்டை நாடு,
13) ஆற்றங்கரை நாடு,
14) முத்து நாடு

கள்ளர்களின் பட்டம், வகையறா , கூட்டம் என்ற பிரிவுகள் போல இங்கே உள்ள கள்ளர்கள் கிளைவழி கள்ளர்கள் ஆவார்கள்.

சிவகங்கை நகரத்திலிருந்து கிழக்குப்பக்கமாக புதுக்கோட்டை கடற்கரை வரை பரவியுள்ள கள்ளர்நாடுகள் பதினாலு நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இது இன்றுள்ள சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை தாலுகா, தேவகோட்டை தாலுகா, காரைக்குடி தாலுகா, திருப்பத்தூர் தாலுகா, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, திருமயம் தாலுகா, அறந்தாங்கி தாலுகா, காளையார் கோவில் தாலுகா. போன்ற பகுதிகளில் பரவி அமைந்துள்ளது.


சிங்க வளநாட்டை கீழனை உஞ்சனை நாடு என்றும்,
காரள வளநாட்டை மேலனை செம்பொன்மாரி என்றும்,
கங்கை வளநாட்டை கண்ணனை தென்னிலை நாடு எனவும் பெயர் மாற்றம் செய்தனர்.

மேலும் ஒரு பகுதியைப் பிரித்து இரவு சேரிநாடு எனப்பெயரிட்டு தங்கை சிரியாளுக்கு கொடுத்தனர்.

இவர்களது பூர்வீகப்பகுதியான பாசிக்குடி நத்தம் வளநாட்டிலிருந்து அவர்களது உறவினர்கள் பலர் வந்து குடியேறினர். அவர்களுக்கும் நாடுகளை பகிர்ந்து கொடுத்ததில் மொத்தம் 14 நாடுகள் உருவாயின. மேற்கூறிய நான்கு நாடுகள் மையநாடுகளாக இருந்தபோதிலும் ஒவ்வொரு நாட்டிற்கும் சில உள்நாடுகளும் சில சேர்க்கை நாடுகளும் உள்ளன.

1) உஞ்சனை நாடு இது 32.5 கிராமங்களை உள்ளடக்கியது தலைமை கிராமம் உஞ்சனை.

இதனுள் உள்ள உள்நாடுகள்

நடுவிநாடு வெங்களூர் தலைமைக்கிராமம் 9.5 கிராமங்களை கொண்டது.

அமராவதி செஞ்சைநாடு 12.5 கிராமங்கள்.

சாக்கையா நாடு 22.5 கிராமங்களை கொண்டது

ஜெயங்கொண்டான் நாடு 11.5 கிராமங்களை கொண்டது.

கண்டதேவிநாடு 11.5 கிராமங்களையும், 2.5 சேர்க்கை நாடுகளை கொண்டது.

2. வடபோகிநாடு : 22.5 கிராமங்கள்.தலைமை கிராமம் ஆம்பங்குடி.

3. ஏம்பல்நாடு: 22.5 கிராமங்கள். தலைமை கிராமம் ஏம்பல். ஆத்தங்கரை நாடு தலைமை கிராமம் ஆத்தங்கரை.

4.செம்பொன்மாரிநாடு:22.5 கிராமங்கள்.

5.முத்துநாடு 96.5 கிராமங்கள்

6.தேர்போகி நாடு 22.5 கிராமங்கள் தலைமை அண்டக்குடி.

7.தென்னிலை நாடு : 96.5 கிராமங்கள்.தலைமை கிராமம் எழுவன்கோட்டை.

8.குன்னங்கோட்டை நாடு: 22.5 கிராமம்.தலைமை கிராமம் கல்லல்.

9.கப்பலூர் நாடு :58.5 கிராமம்.தலைமை கிராமம் கப்பலூர்.

10.இரவு சேரிநாடு:22.5 கிராமம்.இரவுசேரி தலைமை கிராமம்.

11.இரும்பாநாடு:42.5 கிராமம்.தலைமை கிராமம் சித்தனூர்.

உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி நாட்டு அம்பலக்காரர்களே பதினாலுநாட்டுக்கும் தலைமை அம்பலக்காரர்கள்.

இவர்களுக்கு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் முதன்மை மரியாதை வழங்கப்படுகிறது. இந்த பதினாலு நாட்டுக்கள்ளர்களும் சன்னவனம் சாரங்கோட்டை சிவன் கோயிலில் கூடி தங்களுக்குள் ஏழு தாய்வழிக் கிளைகளை உருவாக்கினர் அவை.

கிளைவழி

1.அரசியான்கிளை
2.அரியாதன் கிளை
3.பிச்சையாகிளை
4.சோழான் கிளை (சோலையான்)
5.அரசனன் கிளை (பெஸ்தான் )
6.தொண்டைமான்கிளை
7.குருவிலி கிளை

காணப்படும் பட்டங்கள் அம்பலம்,சேர்வை.


இக்கிளைப்படி தாய்மாமனும், சகோதரி மகளும் ஒரே கிளையை சார்ந்தவர்களாவர். அதனால் தாய்மாமன், அக்காள் மகள் திருமணம் இவர்கள் மத்தியில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

வரலாற்று ஏடுகளில் ஏழுகிளை கள்ளர் நாடுகள்

கிபி 1909ல் எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய Caste and tribes of southern india vol 3 ல் மேற்குறிப்பிட்ட 14 நாடுகளுக்கும் தலைமையாக "உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி நாட்டு அம்பலங்கள் உள்ளனர். இவர்களுக்கு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.


இனி இந்நாட்டார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை காண்போம்.

இலங்கை படையெடுப்பை எதிர்த்து போரிட்ட செம்பொன்மாரி நாட்டு கள்ளர்கள் ( கிபி 1171)




கிபி 1171 ல் பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டியனுக்கும், பராக்கிரம பாண்டியனுக்கும் வாரிசுரிமை போர் ஏற்படுகிறது. இந்த போரில் குலசேகர பாண்டியனின் கைக்கு ஆட்சி சென்றது. பராக்கிரம பாண்டியன் இலங்கை அரசர் பராக்கரம பாகுவின் உதவியை நாடினார். பராக்கரம பாகு, மாபெரும் படையை லங்கபுரா தண்டநாதா எனும் தளபதி தலைமையில் அனுப்பினார்.ஆட்சியை இழந்த பராக்கிரம பாண்டியன் கொல்லப்படுகிறார். குலசேகர பாண்டியனை வென்று பாண்டிநாட்டை பராக்கரம பாண்டியனின் வாரிசிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசர் தனது தளபதிக்கு உத்தரவிட்டார்.

லங்கபுராவை எதிர்க்க குலசேகர பாண்டியன் ,தன்னுடைய படைகளை இணைத்து கோட்டை கொத்தளங்களோடு திகழ்ந்த ஏழுகோட்டை நாட்டில் தயாராக இருந்ததாக மகாவம்ச நூல் கூறுகிறது.ஏழுகோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்றாகும்.


இலங்கை தளபதி லங்கபுரா ராமேஸ்வரம் வழியாக தமிழகத்தில் நுழைந்து தாக்குதலை நடத்தி சென்றான். லங்காபுராவை எதிர்த்த தமிழ் குறுநில மன்னர்களை தோற்கடித்து, தொடர்ந்து முன்னேறி கள்ளர் நாடாம் செம்பொன்மாரியை அடைந்தார். " செம்பொன்மாரி நாட்டு மாளவ சக்கரவரத்தியை சரணடையும்படி லங்கபுரா தூது அனுப்பினான். ஆனால் செம்பொன்மாரியில் இருந்த மாளவ சக்கரவர்த்தி லங்கபுராவை எதிர்த்து தாக்க தயாரானார்.

செம்பொன்மாரியில் இருந்த கோட்டையை பிடிக்க சோலியர்கள்( சோலையான் கிளை கள்ளர்கள்) இரு வருடமாக முயற்சி செய்தும் தோற்றதாக செம்பொன்மாரி நாட்டின். படைபலத்தை மகாவம்சம் விளக்குகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சோலையன் வழியினர் இன்றும் சோலைய கிளை கள்ளர்களாக வாழ்கின்றனர் என்பது சிறப்பிற்குரிய தகவல்.

இத்தகைய பலம் வாழந்த செம்பொன்மாரியை பெரும் யானைபடை கொண்டு தாக்கிய லங்கபுரா அரை நாளில் கைப்பபற்றினான். பிறகு 60,000 பேர் கொண்ட கள்ளர் மற்றும் மறவர்கள் படை இலங்கை தளபதியை தாக்கியது. ஆயினும் பெரும்பலம் கொண்டிருந்த லங்கபுரா ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து வெற்றி பயணத்தை தொடர்நதார். பெரும்போரிட்டு கள்ளர்கள் மறவர்கள் மற்றும் ஏனைய குறுநிலத்தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இலங்கையர்கள்.

(இலங்கை வரலாறு கூறும் "மகாவம்ச நூல் "வரிகள் (246-267)

மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட செம்பொன்மாரி இன்றும் கள்ளர் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. சொலையர்கள் என குறிப்பிடப்பட்ட சோலையன் கிளை கள்ளர்கள் இன்றும் வசித்து வருகின்றனர். இலங்கையில் எழுதப்பட்ட ஒர் நூலில் தமிழ் போர்குடிகளாக குறிப்பட்டது கள்ளர் மற்றும் மறவர் மட்டுமே.

கல்வெட்டுகளில் - உஞ்சனை நாடு

கிபி 12 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய தேவர் காலத்தில் உஞ்சனை நாட்டார்களுக்கு, செலுத்தவேண்டிய வரி தொடர்பான தகவல்கள் கொண்டுள்ள கல்வெட்டு, உஞ்சனை நாடு என இந்த பகுதியை குறித்துள்ளது( உஞ்சனை வட்டார க.வெ 6)



கிபி 1313 ல், இராசராசன் சுந்தரப்பாண்டியன் ஆட்சி காலத்தில் அரச மணவாள தேவன் என்பவருக்கு, கார்த்திகை மாதம் பிரசாதம் கொடுத்து பரிவட்டம் கட்ட தானத்தார் ஏற்பாடு செய்ததாக செய்தி கூறப்பட்டுள்ளது. அரசமணவாளதேவரின் வழியினாராக இன்றும் அரசியான் கிளை, அரசனன் கிளை ஆகிய கிளைகள் ஏழுகிளை கள்ளர் கிளைகளில் உள்ளது.( உஞ்சனை வட்டார க.வெ 11)


கிபி 1315 ல், சடையவர்மன் சுந்தரப்பாண்டிய தேவர் ஆட்சி காலத்தில், உஞ்சனை நாட்டார்கள் இறையிலியாக நிலத்தை அளித்துள்ளனர். அவ்வூர் காரர்களாக செழியதரையர், அதிகைமான், ஆளவந்தார், வீரபாண்டிய பல்லவதரையர், அண்டக்குடி கண்டத்தேவர், காணப்பேரயன், வீரசிங்கத்தேவன் முதலானவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் (உஞ்சனை வட்டார க.வெ 8)







கிபி 1315ல் ராசராசன் சுந்தரப்பாண்டியன் ஆட்சிகாலத்தில், சிதம்பரம் மடத்துக்கு, ,உஞ்சனை நாட்டார்கள் நிலம் அளித்துள்ளனர். அந்த நிலத்தின் மீதான வரிகளும் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட வரிகளின் பட்டியலில், ஆனைச்சாரல், குதிரைப்பந்தி, சிறைத்தேவை,, ஆள்வரி முதலியவை குறிக்கப்பட்டுள்ளது. குதிரைப்பந்தி என்பது குதிரைப்படையை பொறுத்து வாங்கப்படும் வரி. ஆனைச்சாரல் என்பது யானைப்படையினை பொருட்டு வாங்கப்படும் வரியாகும்.ஆள் தேவை என்பது வீரர்கள் தொடர்பான வரியாகும். சிறைச்சாலையின் பொருட்டு வாங்கப்படும் வரி, சிறைத்தேவையாகும். இவற்றின் மூலம் உஞ்சனை பற்று ஒர் படைபற்றாக திகழ்ந்ததை அறிந்துகொள்ளலாம். குதிரைப்படை, யானைப்படை என மாபெரும் படைப்பற்று உஞ்சனை நாட்டில் இருந்ததை கல்வெட்டு தெளிவுபடுத்துகிறது(உஞ்சனை வட்டார க.வெ 12)


கோனேரின்மை கொண்டான் என்பவரின் ஆட்சி காலத்தில் (கிபி 13-14 ஆம் நூற்றாண்டு) , உஞ்சனை நாட்டார்களுக்கு அரசு வரி விதித்த தகவல்கள் உள்ளது. ( உஞ்சனை வட்டார க.வெ 4)


கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாத்தூரான வீரபாண்டிய புரத்தில் வாழ்ந்த, காத்தான் நகர சேனாதிபதி என்பவன் உஞ்சனை கோயிலுக்கு நிலத்தை கொடையாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தின் ஒர் எல்லையாக தொண்டைமான் புன்செய் குறிக்கப்பட்டுள்ளது. தொண்டைமான் கிளை கொண்ட கள்ளர்கள் இன்றும் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.( உஞ்சனை வட்டார க.வெ 17)




உஞ்சனை நாடு இன்றும் கள்ளர் நாட்டு பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. 14 நாடுகளுக்கும் தலைமை வகிக்கும் 4 நாடுகளில் உஞ்சனை நாடும் ஒன்றாகும்.



கிபி 13 ஆம் நூற்றாண்டு, கண்டதேவி சொர்ணமூரத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு, பாண்டி மண்டலத்து தாழையூர் நாட்டு செம்பொன்மாரி பற்றை, " இந்நாட்டில் எங்கள் காணி பற்றில் " என குறித்துள்ளனர். இதன் மூலம் மாளவ சக்கரவரத்தி செம்பொன்மாரி நாட்டார் என்பது தெளிவுபடும். மகாவம்ச நூலில் செம்பொன்மாரி பற்றை பிடிக்க இலங்கை தளபதி மாளவ சக்கரவரத்தியிடம் போரிட்டதாகவும் கூறுகிறது. இவரோடு மும்முடிசோழன் சக்கரவர்த்தியும் செம்பொன்மாரி பற்றை சேர்ந்தவராக குறிக்கப்படுகிறார்.சோலையன் கிளை கள்ளர்கள் இன்றும் வாழ்வது குறிப்பிடத்தக்கது.( உஞ்சனை வட்டார க.வெ;; கண்டதேவி கல்வெட்டு 2)


கிபி 14 ஆம் நூற்றாண்டில், இராசாக்கள் தம்பிரானார் காலத்தில் அவ்வூர் கள்ளர் மக்கள் கண்டதேவி தூண் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர். (ஹஜிரா கல்வெட்டு 771-825)


தேவகோட்டை வெங்களூர் சிவன் கோயில் கல்வெட்டு கோனேரிமேல்கொண்டார் ஆட்சிகாலத்தை சேர்ந்தது( கிபி 14) . முத்தூற் கூற்றத்து சாத்த மங்கல மாளவ மாணிக்க ஈசுவரமுடையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றி கூறுகிறது.

"இச்செம்பொன்மாரி மாளவ மாணிக்கம் கானப்பேருடையான் மாளவசக்கரவரத்தி" என மாளவர் மாணிக்கம் குறிக்கப்படுகிறார். முத்து நாடான முத்தூற் கூற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளது( உஞ்சனை வட்டார க.வெ, வெங்களூர் கல்வெட்டு 1).

சேதுபதி செப்பேடுகளில்


முத்துநாடு, தென்னிலை நாடு (கிபி 1661)

திருமலை சேதுபதி காத்த தேவர் காலத்தில் மதுரை நாயக்க மன்னர் புண்ணியத்துக்காவும் , தளவாய் சேதுபதி காத்த தேவர் புண்ணியத்துக்காவும், தங்கள் மாதா, பிதா ஆகியோரின் புண்ணியத்திற்காகவும் திருப்பெருந்துறை ஆவுடைய பரம சுவாமியாருக்கு பூசை நடத்த அம்பலத்தாடும் பண்டாரம் வசம் பல சீமைகளில் உள்ள கிராமங்கள் கொடை அளிக்கப்பட்டது. அவற்றில் முத்துநாட்டுச்சீமை மற்றும் தேர்போகி நாட்டு சீமைகளில் உள்ள கிராமங்களையும் தானமாக அளித்ததாக இம்மன்னர் அளித்த திருப்பெருந்துறை செப்பேடு கூறுகிறது. முத்து நாடு கருமாணிக்க மன்னர்களால் ஆளப்பட்ட நாடாகும்.இது முத்தூற்கூற்றம், கப்பலூர் நாடு என கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. தேர்போகி நாடு மற்றும் முத்து நாடு 14 கள்ளர் நாடுகளில் உட்பட்டவை.

தென்னிலைநாடு ( கிபி 1684):-

இரகுநாத சேதுபதி கிபி 1684 ல் அளித்த " புதுக்கோட்டை செப்பேடு" அம்மாவாசை புண்ணிய நாளில் தென்னிலை நாட்டில் வளுவாபுரி வ
விசுவேசுவரருக்கும் அகிலாண்ட ஈஸ்வரி அம்மனுக்கும் காளையார் கோயில் சீமையில் தென்னிலை நாட்டில் அரிசிலையாற்றுப் பாய்ச்சலில் புதுக்கோட்டை, கள்ளிக்குடி, எடையன் வயல் ஆகிய மூன்று கிராமங்களை கொடையாக அளித்ததை கூறுகிறது. தென்னிலை நாடு 14 கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். புதுக்கோட்டை எனும் ஊர் காளையார் கோயில் பகுதியிலும் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தேர்போகி நாடு (கிபி 1709)

கிழவன் சேதுபதி காலத்தில் இரகுநாதராய தொண்டைமான் சகோதரியும், இராயதொண்டைமான் மகளுமான இராமநாதபுர சமஸ்தான அரசியுமான காதலி நாச்சியார் கிபி 1709ல் குமரண்டூர் வீரம நல்லூரில் இருக்கும் வெங்கடேசுவரய்யன் மகன் சங்கர நாராணய்யன் என்பவருக்கு ஓரு அமாவாசை புனிதநாளில் தேர்போகி நாட்டில் உள்ள களத்தூரை கொடையாக அளித்த செய்தியை களத்தூர் செப்பேடு கூறுகிறது. தேர்போகி நாடு ஏழுகிளை கள்ளர் நாடுகளில் ஒரு நாடாகும்.

ஏழுகோட்டை நாடு (கிபி 1733):-

இரகுநாத சேதுபதி காத்த தேவர் கிபி 1733 ல் வெளியிட்ட " திருப்பொற்கோட்டைச் செப்பேட்டில்" திருவாடுதுறை மடத்தில் அருளாட்சி நடத்திய பன்னீரெண்டாம் ஆதீனகரத்தா அவர்களிடம் மடத்தின் பூசைக்காக சேதுபதி அரசர் அம்பலவாணசுவாமி சன்னதியில் ஏழுக்கோட்டை நாட்டில் ஒரூர் வட்டவகையில் திருப்பக்கோட்டை எனும் ஊரை கொடையாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழுகோட்டை நாடு 14 கள்ளர் நாடுகளில் ஒன்றாகும்.




சேதுபதி மன்னருக்கு ஆதரவாக தேர்போகி, கப்பலூர் மற்றும் இரவுசேரி நாடுகள்( கிபி 1772)

கிபி 1772 ல் ஆங்கில தளபதி ஸ்மித் தலைமையிலான படை இராமநாதபுரத்தை தாக்கிய போது இராமநாதபுரத்துக்கு உதவியாக கப்பலூர் நாடு , தேர்போகி நாடு மற்றும் இரவுசேரி நாடு சென்றுள்ளது.

" தேர்போகி நாட்டுத் திரண்ட படைக்கலமும் இரவிகேசரி நாடும் யெண்வோண்ணா மன்னவரும் வெருவிச் சினந்து வெகுசேனை சூழ்ந்து வர கப்பலூர் நாடுங் கறுத்தக்கோட்டை நாட்டவரும் தளத்துடனே"( சிவ அம் பக் 109)

என கப்பலூர் நாட்டார், தேர்போகி நாட்டார்கள் மற்றும் இரவுசேரி நாட்டார்கள் படை உதவி அளித்ததை விளக்குகிறது.

முத்துவடுகநாதரை காக்க களம் கண்ட ஏழுகிளை கள்ளர் நாடுகள்(ஏழுக்கோட்டை நாடு , தென்னிலை நாடு, சிலம்பா நாடு, முத்து நாடு)( 21 Jun 1772)

இராமநாதபுரத்தை அடுத்து சிவகங்கையை நோக்கி திரும்பிய ஆங்கிலேயர் படை கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையில் தாக்கினர். இந்த போரில் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ள நாடுகளை பற்றி அம்மானை பாடுகிறது.


" தென்னிலை வளர்நாட்டு ஊரவரும், மேல் சிலம்பா நாட்டவரும் , சாவ முத்து நாட்டுத்தலைவர் வெகுசனமும் கண்டதேவி நாட்டு கனமான மன்னவரும் வண்டரெழுவங்கோட்டை மன்னருடன் கண்டமாணிக்கம் கனநாட்டு இராணுவமும் துண்டரிக்க னான துரை பாகனிச் சனமும் பட்டமங்கல நாட்டு பலசனங்கள் மெத்தவுமாய் திட்டமுட னாயுதங்கள் சேர்க்கை வெகு வாகவுமே, பள்ளத்தூர் நாடும், பாலைய நாட்டாரும் கள்ளற் சிலகுடியுங் காவலராரும் , நேரிய போரில் நிலையதனை விட்டகலா ஏரியூர் மல்லாக்கோட்டைக் கியல்புடைய சேதுபதியம்பலம் தீரன் வெகுசனமும் பேதமில்லா பெரியபிள்ளையம்பலமும்" (சிவ அம் பக் 122)

எழுவங்கோட்டை நாட்டார்கள், தென்னிலை நாட்டார்கள், சிலம்பா நாட்டார்கள், முத்து நாட்டு கள்ளர்கள் ஆகிய ஏழுகிளை கள்ளர் நாடுகளும் , பாகனேரிச் சனமும், பட்டமங்கல நாட்டார்களும்,
கண்டதேவி நாட்டார்கள், கண்டர்மாணிக்கம் நாட்டார்கள், பள்ளத்தூர் நாடு, பாலையூர் நாடு, கள்ளர் காவல்காரர்களும், மல்லாக்கோட்டை நாட்டு சேதுபதியம்பலம் தலைமையிலான் படை, பெரியபிள்ளை அம்பலம் படை முதலான நாட்டார் படைகள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆபத்தில் இருந்து காக்க உதவியுள்ளனர்.

இராமநாதபுர மன்னர் சிவகங்கையை தாக்கியபோது உதவிய தென்னிலை நாடு மற்றும் முத்துநாடு (கிபி 1794)



கிபி 1794ல் ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதி படமாத்தூர் கவுரி வல்லபதேவருக்கு ஆதரவாக இராமநாடு படையை அனுப்பி ஒரு சகோதர யுத்தத்தை நடத்தினார். அந்த போர் ஆனந்தூர் எனும் இடத்தில் நடந்தது. இப்போரில் மருதுபாண்டியருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர் நாடுகள்:-

" தென்னிலை நாட்டில் வளர் ராமச்சந்திரன் சேனையது நானூறு காலும் சமத்தான் தைரியவான் நாச்சியப்பன் சேர்வை நானூறு தளமதுவும் பெருமைமிகு பெரும்பாலைய நாடும், மாசில்லாக் கள்ளர் மல்லாக்கோட்டை நாட்டவரும், ஏரியூர் நாடும், எண்ணவொண்ணா மன்னவரும் முத்துநல்ல நாட்டவரும், முனைவீரமுள்ள திருப்பத்தூர் நாட்டவரும், பூரவரும் சிறுகுடி நாட்டவரும் " ( சிவ அம் பக் 172-174)

தென்னிலை நாட்டு வளர் ராமச்சந்திரன் தலைமையில் நானூறு பேர் கொண்ட படையும் மல்லாக்கோட்டை நாச்சியப்பன் சேர்வை, தலைமையிலான நானூறு பேர் கொண்ட படையும், பாலையூர் நாட்டவரும், மாசற்ற மல்லாக்கோட்டை கள்ளர்களும், ஏரியூர் நாட்டாரும், முத்து நாட்டு கள்ளர்களும் திருப்பத்தூர் மற்றும் சிறுகுடி நாட்டு கள்ளர்களும் மருதுபாண்டியருக்கு ஆதரவாக ஆனந்தூர் போரில் களம் கண்டுள்ளனர்.இவற்றில் தென்னிலை நாடு மற்றும் மற்றும் முத்து நாடு ஏழுகிளை கள்ளர் நாடுகளை சேர்ந்ததாகும்.


இங்ஙனம் மூவேந்தர் காலம் தொட்டு பிரிட்டீசார் காலம் வரையிலும் நாட்டுக்கு ஆபத்து நேர்ந்த காலங்களில் தங்களது உயிரை துச்சமென மதித்து, போர்களம் நோக்கி விரைந்தவர்களே, கள்ளர் நாட்டார்கள்! காலங்காலமாக இன்றும் மாறாமல் நாட்டு வழக்கங்கள் கடைபிடிக்கப்படுவதே கள்ளர் நாட்டு கட்டமைப்புகளின் வெற்றி. நாட்டார்களுக்கு அளிக்கும் மரியாதை கோட்டாவில் வந்ததல்ல, கொட்டிய இரத்தத்தால் வந்தது.



நாடு :கப்பலூர் 

கோவில் : தௌருபதி அம்மன் கோவில் கண்ணங்குடி

கப்பலூர் கள்ளர் நாட்டின் தலைவர் இராமசாமி அம்பலம் கள்ளர் நாடுகளிலில் கப்பலூரும் ஒன்று, இவர் தந்தை ஐயா . கரியமாணிக்கம் அம்பலம் 4 முறை காங்கிரஸ் கட்சியின் திருவாடனை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திரு. இராமசாமி அம்பலமும் ௩ முறை காங்கிரஸ் கட்சியின் திருவாடனை சட்டமன்ற உறுப்பினராகவும் பிறகு கப்பலூர் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு அந்த தொகுதியிலும் வென்று இன்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சிதலைவராக உள்ளார். கண்ணங்குடியில் ஐயா கரியமாணிக்கத்திற்கு திருவுருவ வெண்கல சிலை கப்பலூர் நாட்டுக்கள்ளர்களால் வைக்கப்பட்டுள்ளது.










நாடு: செம்பொன்மாரி

கோயில்:பூரண புஷ்பகலா சமேத செல்லையா ஐயனார்
அம்பலம்: இராமசாமி அம்பலம்

மேலச்செம்பொன்மாரி, கீழச்செம்பொன்மாரி. இந்த கோவிலில் வித்தியாசமாக தேங்காய் காணிக்கை அளிக்கின்றனர்.






உஞ்சனைநாடு - கண்டதேவி :-

கோயில்: சொர்ண மூர்த்தீஸ்வரர் சன்னதி. கண்டதேவி

இக்கோவிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இக்கோவில் குளத்தில் குளிக்க ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒரு படித்துறை உள்ளது. இங்கே கள்ளர்களுக்கு முழுமுதற் மரியாதை. தென்னிலை, உஞ்சனை, இறகுசெரி, செம்பொண்மாரி இந்த நான்கு நாடுகளுக்கு கண்டதேவி தேர் திருவிழாவில் பட்டுபரிவட்டம் மரியாதை உண்டு









நாடு :உஞ்சனை

கோயில்: உஞ்ச மாகாளியம்மன் கோவில் 


இது சேர்வை பட்டமுள்ள கள்ளர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் உஞ்சனையிலிருந்து மொட்டையன் வயல் செல்லும் வழியில் சிதலமடைந்து உள்ளது.  உஞ்சனையில் கள்ளர்களே அய்யனார் புரவி( குதிரை) எடுப்பது காலங்காலமாக இருந்த வழக்கம்












உஞ்சனை கள்ளர்நாட்டின் தலைவர் ஐயா இராம் அம்பலகாரர்

இவர் அம்பலத்திற்கெல்லாம் தலைமை அம்பலம் அதாவது ஏழரை நாட்டு அம்பலம் செம்பொன்மாரி நாடு, தென்னிலை நாடு, கப்பலூர் நாடு, ஆத்தங்கரை நாடு, முத்துநாடு,தேர்போகி நாடுகளின் அம்பலத்திற்கும் இவர்தான் தலைமை அம்பலம்.




தென்னிலை நாடு


ஏழுகிளை கள்ளர்சீமைகளில் ஒன்றான எந்நிலை வந்தாலும் தன்னிலை மாறாத தென்னிலை நாடு. தேவகோட்டை கள்ளர் சீமைகளிலேயே இதுதான் பெரியநாடு,பழமையான நாடு. ஏழுவன்கோட்டை தேர் திருவிழாவில் தென்னிலை  நாட்டுக்கு உரித்தானது அவர்களுக்கு பரிவட்டம் பட்டுபரிவட்டம் மரியாதை உண்டு  

நாடு: கண்ணணையாகிய தென்னிலை நாடு 


கோவில்:அருள்மிகு செல்லியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் இக்கோவில் எல்லா கிராமங்களிலும் உள்ளது!


தலைமை கிராமம்: எழுவங்கோட்டை


கிராமங்கள்: கோட்டூர், பெருவத்தி,சிறுவத்தி, இளங்குடி, திருமணவயல் இன்னும் 90+கிராமங்கள்.


தேவகோட்டை பகுதியில் தொண்ணூற்றாரரைக் கிராமங்களைக் கொண்ட தென்னிலை நாட்டிற்கு(தென்னிலை) வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில்.  வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில், எழுவன்கோட்டையிலிருந்து பனந்தோப்பு , தென்னீர்வயல் செல்லும் வழியில் உள்ளது.


தொன்மையான நாடு, கிராமம், சேர்க்கை கிராம், நகரம், கூற்றம், கோட்டம், மண்டலம், வளநாடு அனைத்திற்கும் காவல்தெய்வம் உண்டு.


காவல் தெய்வம் பெண்தெய்வம், அதன் பார்வை வடதிசை, கோயில் வாயிலும் வடதிசையே. வட திசையை எதிரியாய் பார்க்கும் மரபு இன்றுவரை நீள்கிறது.











நாடு: குன்னங்கோட்டை கள்ளர்நாடு

பொதுக்கோவில்:  திருச்சோமசுவரர் கோவில், காளையார் கோவில், சிறுவயல்

கள்ளர் கோவில்: குன்னமாகாளியம்மன்

அம்பலகாரர்: நாட்டுத்தலைவர் மேலப்பூங்குடியில் உள்ளோர்.

இது சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊரில் உள்ள குன்னமாகாளியம்மன் கோவிலை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஏறுதழுவதல் இந்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது.









இவர்கள் திருவேங்கடத்தானை குலதெய்வமாக உடையவர்கள். கண்ணை இழந்தவர்க்கு கண்கொடுத்த ஒரு பக்தருடைய வழியினர்.

இந்நாட்டவர்களுக்கு இவர்கள் பாண்டி வேந்தரிடத்தில் பாண்டிநாடு மதித்தான், திறைகொண்ட பெரியான், சிறுக்கொந்தி முதலிய பட்டங்கள் உண்டு.


நாயக்க அரசரிடத்தில் அவர்கட்குரிய 

பாசுபந்து, 
வாசமாலையும், 

சிவகங்கை, இராமநாதபுரம் அரசர்களிடத்தில் 

இரட்டை தீவிட்டி, 
இரட்டை சாமரை, 
தண்டிகை, சுருட்டி, 
இடைக்கம்பிலிகுஞ்சம், 
சாவிக்கொடை, 
காவிச்செண்டர், 
வெள்ளைக்குடை, 
சிங்கக்ககொடி, 
அனுமக்கொடி, 
கருடக்கொடி, 
புலிக்கொடி, 
இடபக்கொடி, 
மீனக்கொடி, 
பஞ்சவர்ணக்கொடி, 

என்னும் பதினெட்டு விருதுகளும், காண்டீபன் என்ற விருதாவளியும் பெற்றவர்கள்.

காளையார் கோவில், கல்லல் திருச்சோமேசுவரர், சிறுவயல் மும்முடிநாதர், கோயில் என்னும் சிவாலயங்களின் தேர்திருவிழாக்களில் இவர்கள் மேற்கண்ட விருதுகளுடன் வந்து பட்டுப்பரிவட்டம் முதலிய உரிமைகளை பெறுவர்.







இந்தநாடு தெற்கே காளையார் கோவிலும், வடக்கே ஆலங்குடியும் மேற்கே கல்லலும்,கிழக்கே கோயிலாம்பட்டியையும் எல்லையாக பல ஊர்களை உள்ளடக்கியது.


இந்நாட்டுத்தலைவர் தமது இறுதிகாலத்தில் தமக்குப்பின் தலைவராக இருக்க தமது குடும்பத்தில் ஒருவரை பட்டங்கட்டுவது வழக்கம் . இவர்களை பட்டத்துசாமி, பட்டத்து ஐயா என அழைக்கின்றனர்!

குன்னங்கோட்டை நாடு,தேவபட்டு கிராமத்தில் தேவபட்டு நாட்டார்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் வரலாறு சிறப்பு மிக்க திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டு










குன்னங்கோட்டை நாடு, (கல்லல்) தேவபட்டு அருள்மிகு ஸ்ரீ அந்தரநாச்சி அம்பாள் திருகோயில் மஞ்சுவிரட்டு திருவிழா.





ஆய்வு  
உயர் திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
உயர் திரு. பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார் 


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்