செவ்வாய், 20 மார்ச், 2018

வேங்கடமலையாண்ட கள்வர் கோமான் மாவண் புல்லி




வேங்கடமலையாண்ட கள்வர் கோமான் புல்லி, அகம் புறம் ஆகிய சங்கநூல்களில் எட்டுக்கும் மேற்ப்பட்ட பாடல்களில் போற்றப்படுகிறார். இவரது போர்திறன், கொடை, வேங்கடமலையின் சிறப்பு ஆகியவற்றை பல புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளாக புல்லியின் புகழ் பாடிக்கொண்டிருக்கும் சங்கநூல் பாடல்களை காண்போம்.

வேங்கடம்" என்ற கூட்டுச் சொல் (Compound word) வேம் கடம்' என்ற இரண்டு சொற்களாலாயது. வேம்-கடம்=வேங் கடம் என்றாயிற்று. கடம்' என்பது பாலை நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

'" கடத்துக் கவைமுட் கள்ளிக் காய்விடு"
என்ற குறுந்தொகைப் பாடலில் கடம்" என்ற சொல் பாலையைக் குறித்தமை
கடம்-பான்ல நிலம்;

சிலப்பதிகாரத்திலும், 'கடம்பல கிடந்த காடுடன் கழிந்து' -சிலப். காடுகாண்-அடி 90 (கடம்-காட்டகத்து நெறி! என்ற அடியிலுள்ள கடம் பாலை நிலத்து வழியினைக் குறிக்கின்றதைக் காண்க. கடம்' என்பதற்கு உரையாசிரியர் அருஞ்சுரம்' என்று பொருள் கூறுவர். பிங்கலந்தை கடம்" என்பதனை ‘மலைச்சாரல்’ என்று கூறும். "புறவணி கொண்ட பூநாறு கடத்திடை' -நற்-48 என்ற நற்றிணை அடியில் கடம்" என்பது புதர்கள் அடர்த்த காடு என்ற பொருளில் வந்துள்ளது. வேம்' என்பது எரிதல் என்ற பொருளையுடையது. எனவே, வேங்கடம் என்பது கொதிக்கின்ற நீரற்ற சுரம் அல்லது மலைச்சாரல்’ என்று பொருள் பட்டுப் பாலை நிலத்தைக் குறிக்கின்றது.





வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)


நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

(நெடியோன் குன்றம் - திருமாலவன் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் - குமரி; பௌவம் - கடல்; வரம்பு - எல்லை.)

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை

(புறநானூறு,17:1-2)

(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை

(மதுரைக்காஞ்சி:70-71)

என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.

வேங்கடத்துக்கு வடக்கில் வேறுமொழி (தெலுங்கு) இருந்து வந்தது என்பதனை மாமூலனார் அகநானூற்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,,,,,

(அகநானூறு, 211:7-8)

(உம்பர் - மேலே, வடக்கில்; மொழிபெயர் தேஎத்தர் - வேறு மொழி பேசும் நாட்டினர்.)

குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.

(குறுந்தொகை,11:6-7)

என்று கூறுகிறார்.

நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார்.

குணகடல் குமரி குடகம் வேங்கடம்

(நன்னூல்,சிறப்புப்பாயிரம்:8).





புல்லியார் வம்ச நடுகல்:

"கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"

அகநானூற்று பாடலான இப்பாடலில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டை அடக்கி ஆண்டவன் என்றும்,  வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் எனும் இனத்தின் கோமான்(அரசன்) என பொருள் கொள்ளலாம். 

புல்லியின் வாழ்க்கைமுறை:

"அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" 

தலைமை வாய்ந்த யானைகளின் தந்தங்களை,கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, தன்னை புகழ்ந்துபாடும் அலைகுடிகளான பாணர்க்கு பரிசளித்து மகிழ்வான்.கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.

இதுதவிர புல்லியியின் இனத்தை பற்றி 10 பாடல்கள் சங்கஇலக்கியமெங்கும் கிடைக்கிறது. இப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில், புல்லிகள் பதினென் வேளிர்குடிகளில் ஒருவராய் இல்லாது, சங்ககாலத்தில் பயின்றுவரும் ஆநிரைக்கள்வர்களில் தனித்துவம் வாய்ந்த ஓர் இனமாய் இருத்தல்கூடும். பெரியபுராணத்தில் கூடகண்ணப்பர் வரலாற்றை சேக்கிழார் கூறுகையில் வேங்கடமலையை ஒட்டிவாழும் பகுதிகளில் ஆநிரைகள்வர்கள் கூட்டமாய் சென்று பசுக்கூட்டங்களை கவர்ந்து, அதனால் செழிப்போடு அவ்வூர் இருந்தது என காட்டியிருப்பார். தொடக்கத்தில் புல்லிஇனம் ஆநிரை கவரும் "கரந்தைபோரில்" மட்டுமே ஈடுபட்ட இவ்வினம். நாளடைவில், தொண்டைமண்டலத்தில் ஆநிரைகாக்கும் குடியாக உயர்கிறது. இதற்கு அக்காலத்தில் ஏற்ப்பட்ட அரசு மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கக்கூடும். சங்ககாலத்தில் எவ்வரசக்கூட்டங்களுடனும் சேராது தனித்ததொரு வாழ்வியலை கொண்டிருந்த இவ்வினம், கிட்டத்தட்ட சங்ககாலம் தொடங்கி ஏறத்தாழ 1000 ஆண்டுகள் அவ்வாறே தனித்தவொரு குடியினராய் திகழ்ந்ததற்கு கீழ்க்கண்ட புல்லிநடுகல்லே சான்று. இந்த கள்வர் குலத்திலிருந்து கிளைத்த குடியாய் முத்தரையர் இனம் உருமாற்றமடைந்திருக்கூடும் என்ற ஐயத்தினை செந்தலை, மற்றும் கிள்ளுக்கோட்டை நடுகல் உணர்த்துகிறது. இரண்டாம்நந்திவர்மன் காலத்திலேதான் முத்தரையர் கல்வெட்டு அரசமரபினராய் தஞ்சைபகுதியில் கிடைக்கிறது. அதற்குமுன் தொண்டைமண்டல பகுதி நடுகல்லில் மட்டுமே இவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. இரண்டாம் நந்திவர்மனின் கடிநகரம் இன்றைய கண்டியூரைசுற்றியுள்ள பகுதிகள். இப்பகுதியில் அவருக்கு ஆதரவான ஒரு குடி முத்தரையர் மட்டுமே! பன்னிரன்டு வயதில் அரியனையேறிய நந்திவர்மன் தாயாதி பிரச்சனையில் கடிநகரம் தோற்றுவித்து அங்கேகுடியேற, சித்திரமாய பல்லவராஜனும், பாண்டியனும் சிறைபடுத்த திருத்தணியிலிருந்து பெரும்டையொடு உதயேந்திரன் வந்து அவர்களை வென்று நந்திவர்மனை மீட்டான். அப்போரில் முத்தரையரின் பங்கு பெரியதாய் இருந்திருக்கும். இப்போருக்கு பிறகே குவாவன் முத்தரையன் எனும் முத்தரைய மன்னனின் முதல் கல்வெட்டு பொன்விளைந்தபட்டி அருகே கிடைக்கிறது. இதன்பிறகே முத்தரையர் மரபு  அரச உருவாக்கம் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. அதன்பின் நிருபதுங்கன் காலம் வரை பல்லவருக்கு கீழிருந்து சிறப்பாய் ஆட்சிபுரிந்தனர். இவர்களில் சிறந்த மன்னனாய் கருதப்படும் சுவரன்மாறன் தன் கல்வெட்டுகளில் "கள்வர் கள்வன்" என கூறிக்கொள்கிறான். எனவே சங்ககாலத்தில் தன்னை "கள்வர் கோமான்" என கூறிக்கொள்ளும் புல்லி மரபு இவர்களாய் இருக்கக்கூடும் என நடனகாசிநாதன் முதலானோர் கூறுகின்றனர்.

கீழே கானும் நடுகல் கல்வெட்டு, ஆநிரைகவரும் குடியாய் இருந்த புல்லிகள் அதன்பின் காவல்காக்கும் குடியாய் மாறி நிரைமீட்டு இறந்த வெட்சிபோர் வீரனை பற்றி கூறுகிறது.

"புல்லியார் கொற்றாடை நிரை

மீட்டுப்பட்ட கல் கோனாரு"



1) நித்தமும் போரை தொழிலாக கொண்ட கள்வர்கள் - (அகநானூறு பாடல் 61)

"வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்" – மாமூலனார்.

பசிய காலும் மாண்புறும் வரியும் உடைய வலிய வில்லானது சிறுது காலம் கூட தழைக்காது, தொடந்து முழங்கும் முயற்சியோடு தனது வில்லிலே நாணைப்பூட்டி எதிரிகளின் மார்புகளில் அம்புகளை பாய்ச்சுகின்ற கள்வர்களின் தலைமகனாக விளங்கும் மாவண் புல்லி என மாமூலனார் கள்வர்களின் போர்த்தொழிலை வர்ணிக்கிறார்.

2) கள்வர் கோமான் புல்லி - (அகநானூறு பாடல்-61)

"அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" - மாமூலனார்

தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளை(தந்தங்களை), கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, நாளோக்கச் சிறப்பினை செய்யும், கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.

3) மழவரை வென்று திறை பெற்ற புல்லி - (அகநாறூறு பாடல்-61)

" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்" – மாமூலனார்


மழவர்களை அடக்கி வென்று அவர்களிடம் திறை பெற்ற மிக்க வலிமையுடைய, புல்லி என்பவனின் திருவிழாக்களால் சிறப்புறும் வேங்கடம் என, புல்லியின் பேராண்மையையும், அவன் ஆட்சி செய்த வேங்கடமலையின் சிறப்பினை மாமூலனார் புகழ்கிறார்.


4) பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு போர் யானைகளை கள்வர் கோமான் புல்லி பரிசளித்தல் - ( அகநானூறு பாடல் 27)

" வடவயின் வேங்கடன் பயந்த வெண்கோடு யானை, மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை " - மதுரை கணக்காயனார்

வடதிசையில் உள்ள வேங்கடத்து மன்னன் அளித்த போர்யானைகளை உடைய , வீரப்போரில் வல்லவர்களான பாண்டியர்கள் அறம் காத்த கொற்கை என புலவர் மதுரை கணக்காயனார், பாண்டிய மறவர்களின் புகழ் பாடுகிறார். சங்ககாலத்தில் கொற்கை துறைமுகம் சிறந்து விளங்கியதையும், புல்லி மற்றும் பாண்டியர்களுக்கு இடையே உள்ள சுமூக உறவையும் இந்த பாடல் உணர்த்துகிறது. மதுரை கணக்காயனாரின் மகனாரான நக்கீரர், பாண்டியன் நெடுஞ்செழியனை பற்றி பாடியுள்ளதால், இப்பாடலில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னன், தலையாலங்கானத்து போரில் வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என உணர்த்தும்.


5) மறப்போர் புல்லி - (அகநானூறு பாடல் 209)

"பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான் எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன் நேரா எழுவர் அடிப்பட கடந்த ஆலங்கானத்து அர்ப்பினும் பெரிது "

"மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்" - கல்லாடனார்


பொன் தகடுகள் வேய்ந்த நீண்ட தேரினை உடையவர் தென்னர் கோமான்
நெடுஞ்செழியன். கணைய மரத்தை போன்ற திரண்ட தோள்களையும், நீண்ட தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையானங்கானத்து போரில் எழுவரை வீழ்த்தியதாக பாண்டியனின் வீரத்தைதை புலவர் புகழ்ந்து பாடியுள்ளார். - இதே பாடலில் " மதம் கொண்ட யானைகளையும், மிகுந்த போர்வன்மையும் கொண்ட புல்லி என்பானது மூங்கில்களை உடைய நீண்ட சாரல்களை உடைய வேங்கடமலை" என வர்ணித்து புல்லியின் போர்திறனை போற்றியுள்ளார்.


6) வெண்கடம்பு பூச்சூடி களிறு வேட்டையாடும் கள்வர்கள் - (அகநானூறு பாடல் 83)

" களிற்றுக்கன்று ஒழித்த உவகையர் கலிசிறந்து கருங்கால் மராஅத்து
கொழுங்கொம்பு பிளந்து"


"நறவுநொடை நல்இல், பதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை நல்நாட்டு வேங்கடம்" – கல்லாடனார்

மணங்கமழும் வெண்கடம்பின் பூக்களை சுருள்போன்ற தன் தலைமயிரில்
சூடிக்கொண்டு , உரல் போன்ற காலினை உடைய பெண் யானையிடமிருந்து களிற்று கன்றை பிரித்து கூட்டி வருவர் கள்வர்கள். வெண்கடம்பு மரத்தின்
நாரைக்கொண்டு யானைக்கன்றை கட்டுவர். அத்தகைய இளையர்களுக்கு பெருமகன், கள்வர் கோமான் புல்லி யின் அழகிய கொடிகளையுடைய வேங்கடமலை என வேங்கடமலையின் சிறப்பினை உணரத்துகிறார் கல்லாடனார்.


7) வேங்கடமலையின் சிறப்பு - ( அகநானூறு பாடல் 141)

"நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக் கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத் 
தேம்கமழ் நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந்தாரோ"

- நக்கீரர்( மதுரை கணக்காயனாரின் மகனார்)

"கற்பாறையிடையே வளர்ந்த வேங்கையை போல புள்ளிகளை உடைய பூவின் இடையே அன்று பூத்த நாரத்தையின் மலர்கள் உதிரும்படி, முசுக்கலை என்ற ஆண் குரங்குகள் பாய்ந்து துள்ளும், நெடிய மலைத்தொடரை கொண்ட வேங்கட மலை " வேங்கடத்தின் அழகை வர்ணிக்கிறது இப்பாடல்.

8) இயற்கை எழில் கொஞ்சும் வேங்கடம் - (அகநானூறு பாடல் 211)

"திண்நிலை மறுப்பின் வயக்களிறு உரிதொறும் தண் மலை , ஆலயின் தாஅய் உழவர், வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்" – மாமூலனார்.

வலிமை பெற்ற களிறானது, வெண் கடம்பு மரத்தில் உராயும் போது, பரவும்
கடம்பின் பூக்கள், மழைக்காலத்தில் பெய்யும் பனியை போல எங்கும்
பரவிக்கிடக்கும். அப்படி உதிரந்த பூக்கள் பாறைகளில் காய்ந்து இருக்கும்.
இத்தகைய குளிர்ச்சி பொருந்திய சோலைகளை கொண்ட வேங்கடமலை என புல்லியின் தேசத்தை மாமூலனார் எடுத்துரைக்கிறார்.


9) போர்யானைகளால் சிறந்த வேங்கடமலை - (அகநானூறு பாடல் 213)

" வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு
நெருங்கோட்டு ஒங்குவெள், அருவி வேங்கடத்து உம்பர்" – தாயங்கண்ணனார்


போர் பயிற்சி பெற்ற யானைகளை கொண்ட தொண்டையர் வாழும் வேங்கடமலையானது, மேகங்கள் தவழும், வெண்மையான அருவிகள் விழும் மலை உச்சிகளை உடையது என வேங்கடத்தின் அழகை புகழ்கிறார் புலவர்.
புல்லிக்குன்றம் – வேங்கடம் - (அகநானூறு பாடல் 295)

"ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து " - மாமூலனார்


" ஒலிசெய்யும் வீரக்கழல் அணிந்த காலினனான புல்லி என்னபானது குன்றமான வேங்கடம் என புலவர் புல்லியின் வேங்கடமலையை குறிப்பிடுகிறார். புல்லியின் நன்னான்டில் கோவலர் - (அகநானூறு பாடல் 311)


" வருவழி வம்பலர் பேணிக் கோவலர் மழவிடை பூட்டிய குழாஅய் தீம்புளி செவியடை தீரத தேக்கிலைப் பகுக்கும் ' புல்லி நன்னாட்டு' உம்பர்" - மாமூலனார்

"வழிப்போக்கர்களின் பசியினை தீர்க்கும் பொருட்டு, தங்களது பசு
கன்றுகளின் கழுத்திலே தொங்கும் குழாய்களில் அடைக்கப்பட்டுள்ள
புளிச்சோற்றினை , கோவலர் பகிர்ந்து அளிப்பர். அத்தகைய ஈகை தன்மை கொண்ட மக்கள் வாழும் புல்லி என்பான் காத்து வரும் வேங்கட நன்னாடு என என மாமூலனார், கோவலர்களின் நற்குணத்தையும், புல்லி என்பவன் வேங்கட நாட்டை காத்தருள்வதையும் புகழ்ந்துள்ளார்.

(அகநானூறு பாடல் 359 )


" வீழ்ப்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை, சூர்புகழ் அடுக்கத்து, மழைமாறு
முழங்கும் பொய்யா நல்லிசை மாவண் புல்லி " – மாமூலனார்


நெடிய கால்களை உடைய களிற்றியானையானது, தெய்வங்கள் வாழும் மலை பக்கத்தே, இடியோடு மாறுபட முழங்கும் இடமான பரிசிலர்க்கு பொய்யாத நல்ல புகழினையும், சிறந்த வண்மையையும் உடைய புல்லி யின் வேங்கடம் என புகழ்கிறார்.

10) புல்லி நன்னாட்டில் இடையர்கள் - (அகநானூறு பாடல் 395)

" மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர் வேங்கடம்" – மாமூலனார்


இடையர்கள் வெண்மையான அரிசியை உலக்கையால் குத்தி, மண்பானையில் ஏற்றி அவிலாழிகிய சோற்றினை ஆக்குவர்.இக்காட்சிகள் நித்தம் நடைபெறும் , தேனிறால் தொங்கும் உயர்ந்த பாறைகளையுடைய மங்காத புகழ் கொண்ட புல்லி என்பானது வேங்கட நன்னாடு என வேங்கடத்தின் புகழை பாடுகிறார் மாமூலனார்.

13) புல்லிய வேங்கடம் - (புறநானூறு பாடல் 385)

"புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஒங்கல் வானத்து உறையினும் பலவே" - கல்லாடனார்


அம்பர் கிழான் என்வனை வாழ்த்தும் கல்லாடனார், புல்லியின் வேங்கடமலையில் வீழ்ந்த மழைத்துளியினும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.


இவ்வாறு பல புலவர்களால் கள்வர் கோமான் புல்லியின், வீரம், கொடை ஆகிய பண்புகள் பாடப்பட்டுள்ளது. வரலாற்று இருட்டடிப்பில் சிக்கிய பல மன்னர்களில் புல்லியும் ஒருவர் என கொள்ளலாம். புல்லியை பற்றி பல பாடல்களில் பாடிய மாமூலனார், மௌரியரின் தமிழக படையெடுப்பு பற்றியும் பாடியுள்ளதால், புல்லியின் காலம் 2100-2200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழகத்தின் வட எல்லையாக சீரும் சிறப்புமாக திகழ்ந்த வேங்கடத்தை தமிழகம் இழந்தாலும் வரலாற்று ஏடுகள் என்றும் வேங்கடத்தை உரிமை கொண்டாடி கொண்டே இருக்கும்! புல்லியின் புகழை பாடிக்கொண்டே இருக்கும்.







தொகுப்பு :உயர் திரு . சியாம் சுந்தர் சம்பட்டியார்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்