தமிழகத்துப் பழம்பெறும் நகரங்களுள் அதிகம் அறியப்படாத ஆனால், தனக்கே உரிய விதத்தில் முக்கியத்துவம் கொண்ட நகரம் - புதுக்கோட்டை.
மன்னர் காலத்துக் கோயில்கள், அரண்மனைகள், நீர்த்தேக்கங்கள், கடைத்தெருக்கள் எனப் புதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புறக் குடியிருப்புகளும் நாகரிகம் செழித்தோங்கிய நிலப்பரப்பு. இப்போதும் அதன் தன்மை மாறாது நவீனத் தோற்றம் தாங்கி நிற்கிறது,
இச்சிறு நகரம்!
நிலவமைப்பு, பரப்பளவு, வடிவமைப்பு, வாழ்விட தன்மை, காலநிலை என்று நிலைநிற்கும் புதுக்கோட்டையின் குடிமக்கள் வரலாறு சித்தன்னவாசல், நார்த்தாமலை என நெடியது. அதேபோல், அரச வரலாறும் சோழர்கள் தொட்டு தொண்டைமான் வரை நீளும்.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களாக சோழர் காலத்து நார்த்தாமலை கற்கோயிலாயினும் தொண்டைமான்களின் அரண்மனை, கடைத்தெருக்கள், மாநிலத்தின் இரண்டாம் முக்கிய அருங்காட்சியகம், நூற்றாண்டு கண்ட தேவாலயமாயினும் இன்றும் களிப்புணர்த்துகிறது.
அடர்பச்சை நீரில் பாதிப் படிக்கட்டுகளை மூழ்கடித்த குளத்து நீர். உச்சிமுனையின் இலைகள் உதிர்ந்தும், அதன் அடிபாகத்தில் பசுமையான இலைகளோடும் உள்ள ஓர் அரசமரம். பளிச்சிடும் வண்ணங்களான சாந்தநாத சுவாமி கோயில் கோபுரம்.
மல்லாக்க அலையடிக்கும் கடலின் நீலம், அதன்மீது வெள்ளலைகள் போல் மேகங்கள். அவற்றை ஏந்தி நிற்கும் கத்தோலிக்க தேவாலயத்துக் கோபுரங்கள்.
மொத்த வரலாற்றை அடுக்கியும், நிறுத்தியும் வைத்துப் பாதுகாக்கும் அருங்காட்சியகம்!
மின்சாரக் கம்பிக்கும் மேலே பறக்கும் பறவை. பாதி வெள்ளையாகவும் பாதி நீலமாகவும் உள்ள ஆகாயம். விடியுமா என்று மக்கள் காத்திருக்கும் நீதிமன்ற வாசல், அதன்பின்புறம் மறைந்தபடி ஒளிரும் சூரியன்.
சாலையின் இருபுறமும் மரங்களைப் போல் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள். அதன் நடுவுல மேலே தெரியும் தெரியும் வாய்க்கால் போன்ற வானம். கீழே ஒற்றையடிப் பாதை பூமி. இருபக்க கட்டடங்களை இணைக்கும் மின்சாரக் கம்பிகள். வாகனங்களிலும் நடந்தும் பயணிக்கும் நவீன மனிதர்கள்.
ஈரத்தை மட்டும் விட்டுவிட்டு இறங்கிய தெளிவான நீரில் மிதக்கும் மேகம். பயணித்தவர்களின் தடங்களை மட்டும் வைத்திருக்கும் கரை ஒதுங்கிய படகு. இது நவீனத்தில் சிதைந்தப் புதுக்குளம்.
உளிகளின் சத்தம் அடங்கிய சிறுசிறு சிலைகள் உள்ள நார்த்தமலை கற்கோயில். அதன் கோபுரத்தில் இடுக்கில் வேர்விட்ட செடி.
போரும்-புறமும் ஆன திருமயம் மலைக்கோட்டை. மரங்களுக்கிடையே உள்ள கட்டிடங்களை குறிவைத்திருக்கிறது ஹார்ட்டின் வரைந்த பீரங்கி.
புதிய அரண்மனையின் மேல் பறக்கும் புறாக்கள் யாரிடம் தூது செல்கிறதோ?