திங்கள், 26 ஜூன், 2023

தொண்டைமான் நல்லூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர்




மக்கள் சிறப்புற வாழ வேண்டும்; மண்ணும் செழிப்புற தழைக்க வேண்டும் என்பதே மன்னர்களின் விருப்பம்! புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமானும், காடு-கழனி பசுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினார். குளம் வெட்டினார்; ஊருணி அமைத்துக் கொடுத்தார்; ஆங்காங்கே கிணறுகள் தோண்டவும் ஏற்பாடுகள் செய்தார். ஆம், மண்ணில் பொன்னாக நெல் விளைந்தால்தான் மக்கள் வயிறார சாப்பிட முடியும் என்பதில் கவனமாக இருந்தார் மன்னர்!

ஒருநாள், பல்லக்கில் ஏறி கிராமம் கிராமமாகச் சுற்றி வந்தார். பார்க்கும் மனிதர்களிடமெல்லாம் 'குறையேதும் உள்ளதா?' என்று கேட்டறிந்தார். வழியில் ஓர் ஊரின் எல்லையில், மரத்தடியில் சிலர் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர்களிடமும் விசாரிக்கச் சொன்னார். ''நாங்கள்லாம் வெளியூரு... என்ன ஊருங்க இது! கும்பிட சாமி இல்ல; குளிக்கத் தண்ணி இல்ல; அட... கால் நீட்டி கொஞ்சம் இளைப்பாறக்கூட வசதி கிடையாது'' என்று அலுத்துக் கொண்டனர்.

அவர்கள் அடியார்கள்; சிவனடியார்கள்! காசி க்ஷேத்திரத்தில் இருந்து புறப்பட்டு, வழியில் தென்படும் சிவாலயங்களை தரிசித்தபடி, ராமேஸ்வரம் நோக்கி பயணப் பட்டுக் கொண்டிருந்தனர். இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி சிவ தரிசனம் செய்தபடி, காசி தலத்துக்குச் செல்வோரும் உண்டு!






சிவனடியார்கள் சொன்னதும் விக்கித்துப் போனார் மன்னர். 'எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்' என்று வருந்தினார். 'ஒரு தேசத்தைப் பறந்து கடக்கிற காக்கா - குருவிக்குக்கூட, ஒரு குறையும் இருக்கக் கூடாது. அப்படி குறையின்றி நிறைவுடன் இருந்தால்தான், மன்னன், நல்லாட்சி செய்ததாக அர்த்தம்!' என்று தந்தை சொன்ன உபதேசத்தை எண்ணினார்; இதன்படி நடக்கத் தவறிவிட்டோமே... என கலங்கித் தவித்தார்.

பல்லக்கில் இருந்து இறங்கிய மன்னர், சிவனடியார்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டார்; தனக்காகவும் தனது படையினருக்காகவும் வைத்திருந்த உணவு மற்றும் பழங்களை அவர்களிடம் கொடுத்தார். கை நிறைய பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கினார். 'இனி உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது; எங்கள் தேசமும் மக்களும் நலமாக இருக்க வேண்டும் என, ராமேஸ்வரம் தலத்தில் பிரார்த்தியுங்கள்!' என்று வேண்டினார்.

இதையடுத்து மன்னர், அமைச்சர் பெருமக்களை அழைத்தார். ''இந்தப் பகுதியில் உடனடியாக குளம் வெட்டுங்கள்; சிவனடியார்கள் நீராடுவதற்கு வசதியாக இருக்கும். அப்படியே சத்திரம் ஒன்றும் கட்டுங்கள்; அங்கு, சமைக்கவும் பரிமாறவும் ஆட்களை நியமியுங்கள்; அடியவர்கள் குளித்து விட்டு, வயிறாரச் சாப்பிட்டு சத்திரத்தில் ஓய்வு எடுக்கட்டும். முக்கியமாக ஒரு விஷயம்... நீராடியதும் சிவலிங்க தரிசனம் செய்யாமல் உணவு எடுத்துக் கொள்ளமாட்டார்கள் அடியார்கள்! உணவு இல்லாமல்கூட இருப்பார்கள்; சிவ பூஜை செய்தே ஆகவேண்டும் என இறைநெறியுடன் வாழ்பவர்கள் அவர்கள். எனவே, குளமும் குளத்துக்கு அருகே சத்திரமும் சத்திரத்துக்கு அருகே சிவாலயமும் அமைப்பதற்கான பணிகளில் உடனே இறங்குங்கள்'' என்று உத்தரவிட்டார் மன்னர்.

அதன்படி குளத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டனர் சிலர்; அருகிலேயே சத்திரத்தை அமைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கினர் சிலர். இதற்கு அருகில், அழகிய சிவாலயம் அமைக்கும் பணியில் சிற்பிகள் முதலானோர் இரவு- பகலாக வேலை பார்த்தனர்.


பிறகென்ன... குறுகிய காலத்தில் கோயில் அமைந்தது; கும்பாபிஷேகமும் நடந்தது. இதன் பிறகு இந்த வழியே பயணிக்கும் அடியார்கள்... குளத்தில் நீராடி, சிவதரிசனம் முடித்து சத்திரத்தில் இளைப்பாறினர். அங்கே பரிமாறப்படும் அன்னதானத்தை ஏற்று, இரவில் அங்கேயே தங்கி, விடிந்ததும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்படிக் கிளம்பும் போது, 'மறுபடி இப்படி வந்தா, இங்கேதான் தங்கணும். அருமையான ஊரு' என்றனர். 'மன்னர் தொண்டைமான் நல்லா இருக்கணும்' என்று வாழ்த்தினர். இதனால் இந்த ஊர், தொண்டைமான் நல்லூர் என அழைக்கப்பட்டது!

புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள சிறிய கிராமம் தொண்டைமான் நல்லூர். பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை வழியே பயணித்தால், மன்னர் தொண்டைமான் வெட்டிய குளம் வருகிறது. அடுத்து சத்திரமும் அதையட்டியே ஆலயத்தையும் காணலாம். ஆனால், கோயிலின் இன்றைய நிலையைப் பார்த்தால், ரத்தக் கண்ணீரே வடித்து விடுவீர்கள்.

மிகவும் பழைமை வாய்ந்த ஆலயம் இது! ஆனால், சுமார் 500 ஆண்டுகளாக இங்கு கும்பாபிஷேகமும் நடைபெறவில்லை; திருவிழாக்களும் நடக்கவில்லை. முழுவதும் சிதிலம் அடைந்த நிலையில் இருக்கும் ஆலயத்தில், சின்ன தீபாராதனையோ நைவேத்தியமோ இல்லாமல், மெல்லிய திருவிளக்கின் வெளிச்சம்கூட பரவாமல் இருள் சூழ்ந்த நிலையில் அதேவேளை... அனைவருக்கும் அருள்பாலிக்கத் தயாராக இருக்கிறார் ஸ்ரீசிதம்பரேஸ்வரர். இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் இதுதான்! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசிவகாமி.

ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வழிபட்டாலே, ஒன்பது தலைமுறைக்கு அருள்பாலிக்கும் இறைவன், மின் வசதி இல்லாமல் இருப்பதுதான் கொடுமை. மதில், நுழைவாயில் கோபுரம் எதையும் காணோம்! சந்நிதிகளும் சிதிலம் அடைந்து, சீர்குலைந்து கிடக்கின்றன. ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியில் மண் வளர்ந்து புற்றாகிக் கிடக்கிறது!

தொண்டைமான்நல்லூருக்கு அருகில் மூகாம்பிகை பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள், தொண்டைமான் நல்லூருக்கு வந்து, தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கிளம்பிச் செல்லும் போது, சிதிலம் அடைந்து, பரிதாபமாக இருந்த இந்த ஆலயத்தைப் பார்த்தனர். இதையடுத்து சிலநாட்கள் கழித்து, மீண்டும் இங்கே வந்து, கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கினராம்!

''பிராகாரத்தில் இருந்த முட்செடிகளை அகற்றினர்; ஒவ்வொரு சந்நிதியிலும் குடிகொண்டிருந்த ஆயிரக்கணக்கான வெளவால்களை விரட்டினர். அந்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்புற சிதம்பரேஸ்வரர் துணை நிற்பார்'' என்கிறார் கந்தசாமி. 'தொன்மைமிகு திருக்கோயில் உயர்வாக்க மன்றம்' எனும் அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வருகிறார் இவர். பூஜைக்கு வழியில்லாத ஆலயங்களுக்கு, திரி, எண்ணெய், அபிஷேகப் பொருட்கள், பிரசாதப் பொருட்கள் ஆகியவற்றை மாதந்தோறும் வழங்கி வருகிறது இந்த அமைப்பு! தற்போது, இந்த அமைப்பினர், ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் தொண்டைமான்நல்லூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல் திருப்பணியால் அமைந்த கிழக்குப் பார்த்த ஆலயம். சிறிய மண்டபத்தில் நந்தி, கொடிமரம்; பலிபீடம். ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தெற்கு நோக்கி- நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள் ஸ்ரீசிவகாமி அம்பாள். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோர் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.

கல்வெட்டுகள், 'சத்திரத்துக் கோயில்' என்றே இந்த ஆலயத்தை குறிப்பிடுகின்றன. சத்திரம், குளம், கோயில் என சிவனடியார்களுக்காக ஆலயங்கள் அமைக்கப்பட்டதாம்! தொண்டைமான் நல்லூர், அம்மா சத்திரம், களமாவூர், நீர்ப்பழநி ஆகிய ஊர்களில் சத்திரக் கோயில்களை அமைத்தாராம் மன்னர்!

பத்தடி தூர இடைவெளியில் இன்றைக்கு ஹோட்டல்கள் பெருகிவிட்டன. அதேபோல், பாதயாத்திரை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. ஆனால், பழைமை மிக்க ஆலயங்களுக்கான சாந்நித்தியமும் சக்தியும் உயர்வானது என்பது உண்மைதான் இல்லையா?

'புதிதாக இடம் தேர்வு செய்து; சிலைகளை வடித்து பிரதிஷ்டை செய்வதைவிட, புராதனமான, புராணப் பெருமை கொண்ட ஆலயங்களைப் புதுப்பிப்பதற்கு ஈடான இறைப் பணி வேறெதுவும் இல்லை' என்று காஞ்சி மகாபெரியவர் அருளியுள்ளார்.

அதன்படி, பழைமை வாய்ந்த சத்திரக் கோயிலைப் பாதுகாப்பதும், சிதிலம் அடைந்த சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை சீர்படுத்துவதும், பரிதாபமாகக் காட்சி தரும் கோயிலை பளிச்சென மாற்றி, கும்பாபிஷேகம் நடத்துவதும் நம் கடமைதானே? ஓர் ஆலயத்தை சீர்படுத்திய புண்ணியம், நம் நாளைய தலைமுறைக்கும் போய்ச் சேரட்டும்!




புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகே உள்ளது தொண்டைமான் நல்லூர். திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். புதுக்கோட்டையில் இருந்து சுமார் 34 கி.மீ. கீரனூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு.

திருச்சி- புதுக்கோட்டை டவுன் பஸ்சில் ஏறி (கே-1), தொண்டைமான் நல்லூர் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஐந்து நிமிட தூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயம். ரூட் பஸ்சில் ஏறினால், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தொண்டைமான் நல்லூர். ஆட்டோ வசதி உண்டு.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்