கிபி 1797 ல் புதுக்கோட்டை மன்னர் விஜய இரகுநாத தொண்டைமான் தன்னிடம் அடப்பக்காரராக வேலை செய்த கூத்தப்பன் என்பவரிடம் கொண்ட அன்பினால் அவரது பெயரால் அன்னதான சத்திரம் ஒன்றை புதுக்கோட்டை- ராமேஸ்வரம் மார்க்கத்தில் கட்டினார். அடப்பகாரசத்திரம் - விசுவாசத்திற்கு மன்னர் அளித்த பரிசு
* பெளர்ணமி அன்று சத்திரத்திற்கான கொடைகளை அளித்தார்.
* அன்னதான கூடத்துக்கு சில ஊர்களையும், 70 பாத்திரங்கள், 100 பசுமாடுகளும், 200 ஆடுகளும் தானமாக வழங்கினார்.
* அடப்பன் கூத்தப்பனின் சிலையை அன்னதான கூடத்தின் வாயிலில் நிறுவினார்.
* மன்னர்கள் தங்களது சிலைகளை வைத்து புகழ்பரப்புவதே வழக்கம். ஆனால் தன்னிடம் பணிபுரிந்த அடப்பகாரரின் விசுவாசத்தை பாராட்டி அவரது பெயரால் சத்திரம் கட்டி , அவரது சிலையை வைத்து மரியாதை செய்த தொண்டைமான் மன்னரின் ஈகை குணம் போற்றுதலுக்குரியது.
* அடப்பகாரரின் பேரால் கட்டப்பட்ட சத்திரம் உள்ளதால் இந்த பகுதி இன்று அடப்பகார சத்திரம் என்றே அழைக்கப்படுகிறது.
* 220 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பல தலைமுறைகளை கண்ட சத்திரம் இன்றும் நல்ல நிலையில் கம்பீரமாக காட்சி அளத்தாலும், சரியான பராமரிப்பின்றி உள்ளது.
அடைப்பக்காரர் என்பது அரசருடனேயே இருந்து தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் பதவி. எளிய சேவகனின் பணி அல்ல. அது அரசனுடனேயே இருந்து அனைத்து ரகசியங்களையும் தெரிந்துகொண்டு மந்திராலோசனைகளில் இடம்பெறுப்வரின் பொறுப்பு கொண்டது.விஸ்வநாதநாயக்கர் கிருஷ்ணதேவராயரின் அடைப்பக்காரராக இருந்தவர். தஞ்சை நாயக்கர் மரபின் முதல்நாயக்கரான சேவப்ப நாயக்கர் விஜயநகர மன்னர் அச்சுதப்பநாயக்கரின் அடைப்பக்காரராக இருந்தவர்தான்
இருநூற்றாண்டுகளாக நட்பின் அடையாளமாக விளங்கும் அன்னதான சத்திரம், காக்கப்பட வேண்டிய வரலாற்று சிறப்பிடம் என்பதில் ஐயமில்லை.
(அடப்பகாரன் செப்பேடு (கிபி1797)தொண்டைமான் செப்பேடுகள்)
தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்