திங்கள், 26 ஜூன், 2023

திருநெல்வேலி தொண்டைமான்



திரு. சிதம்பரத் தொண்டைமான்
திரு. அருணாசலத் தொண்டைமான்
திரு. முத்தையா தொண்டைமான்
திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
திரு. தொ. மு. சிதம்பர ரகுநாதன்



தொண்டைமான் நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவனாம் நந்தியம் பெருமான் தொண்டைமானையும், கலிங்கப்போரில் வெற்றி கண்டு ஜயங்கொண்டானால் பரணி பாடப்பெற்ற கருணாகரத் தொண்டைமானையும் அறிவார்கள். இவர்கள் பரம்பரையிலே வந்தவர்கள்தான் புதுக்கோட்டை ஒன்றைக் கட்டி அதன் அரசர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த அரசப் பரம்பரையைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஏதோ குடும்பத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக புதுக்கோட்டையை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு நோக்கி நடந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் தென்பாண்டி நாட்டில் பொதிகை மலைச் சாரலில் தங்கி வாழ்ந்திருக்கிறார்கள்.

திருக்குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் முதலிய இடங்களில் மடாலயங்கள் நிறுவி அறக்கட்டளைகள் நடத்தி இருக்கிறார்கள். அப்படி வந்து தங்கிய அரச சகோதரர் ஒருவரின் பரம்பரையே சேர்ந்த திரு. சிதம்பரத் தொண்டைமான். சிதம்பரத் தொண்டைமான் அவர்களின் சிற்றப்பாதான் அருணாசலத் தொண்டைமான் என்பவர்கள். அவர்கள்தான், வண்ணச்சரபம் திருப்புகழ்ச்சாமிகள் முருகதாச சுவாமிகள் என்றெல்லாம் தமிழ் உலகம் நன்கறிந்த பெரியார், அருள்மிகு தண்டபாணி சுவாமிகளது முதல் சிஷ்யர். சிதம்பரத் தொண்டைமான் அவர்களும் அதே முருகதாச சுவாமிகளின் கடைசிக் காலத்தில் சிஷ்யராகச் சேர்ந்தவர்கள்.

சிதம்பரத் தொண்டைமானின் சீமந்த புத்திரர்தான் முத்தையா தொண்டைமான்அவர்கள். அவர் சிறந்த சித்ரீகராக வாழ்ந்தவர். கவிதை இயற்றும் திறனும் பெற்றிருந்திருக்கிறார். இராமலிங்க அடிகளாரின் பாடல்களையே பாடிப்பாடி செம்பாகமாக அடிகளாரைப் போலவே பாடவும் வல்லவர்களாக இருந்திருக்கின்றார். அவர்கள் பாடியவை திருவொற்றியூர் தியாகேசர் காதல், நெல்லை நாயகர் குறம், அருள் கடன் விண்ணப்பம், ஆட்கொண்ட பதிகம், பகவத் கீதை அகவல் முதலியன.


திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்



திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள், ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ என்று ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற நெல்லை மாநகரில் 1904 ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள் 22 ஆம் நாள் (22.7.1904) திரு. தொண்டைமான் முத்தையா அவர்களுக்கும், திருமதி. முத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர் ஐவர். பரம்பரையாகவே நல்ல தமிழ்ப் புலமையும், கலைஞானமும் செறிந்த குடும்பம் அது. 


தந்தையார், திரு. தொண்டைமான் முத்தையா, தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். சிறந்த ஓவியக் கலைஞர். புகைப்பட வல்லுநர். தந்தை வழி பாட்டனார், திரு. சிதம்பரம் தொண்டைமான் நல்ல தமிழ்ப் புலவர். வண்ணச் சரபம் தண்டபாணி த்தில் முறையாகத் தமிழ் பயின்றவர். நெல்லைச் சிலேடை, நெல்லைப் பள்ளு ஆகியவற்றை எழுதிய கவிஞர். ஆகவே தொண்டைமான் அவர்களுக்கு, கலை, இலக்கியம் ஆகிய இரண்டிலும் இயல்பாகவே பற்றும், ஆர்வமும், தேர்ச்சியும் ஏற்பட்டதில் வியப்பில்லை.











பாஸ்கரத் தொண்டைமானவர்களுடைய மாணவப் பருவம் திருநெல்வேலி, இந்துக் கல்லூரியில் கழிந்தது. அவர் கல்லூரியில் பயின்ற காலத்தில் அவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணமும் நடந்தேறியது. முறைப் பெண்ணாக பாலம்மாள் என்பவரே அவருக்குத் துணைவியாக வாய்த்தார். இனிய இல்வாழ்க்கையின் பயனாக நான்கு மக்கள் பிறந்தனர். இளையவர் இருவரும் இளமையில் மறைந்து போக, மத்த இருவரும் உள்ளனர்.

தொண்டைமானவர்கள் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றதும் வேலையும் தேடிவந்தது. முதன்முதலில், இப்போது வனவளத்துறை என்று அழைக்கப்பெறும் காட்டிலாகாவில் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் வருவாய்த்துறைக்கு மாறி, வருவாய்த்துறை ஆய்வாளராகப் பணியேற்றார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், உதவி மாவட்ட ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்து, ஐஏஎஸ் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ஓராண்டுக்கும் மேலாக பதவி வகித்த பின்னர், 1959 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். முப்பதாண்டு கால அரசுப் பணியின் முடிவில், நேர்மையானவர், திறமையானவர் என்ற நல்ல பெயரும் அவரை வந்தடைந்தது. ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து பரம்பரை வீட்டில் தங்கி, இலக்கியப் பணியை மேற்கொண்டார்.

தொண்டைமானவர்களை இளமைப் பருவத்தில் கவர்ந்தவர் சொல்லின் செல்வரான திரு. ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள். அவருடைய தூண்டுதலின் பேரில் கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்டு கல்லூரி நாட்களிலேயே ஆனந்த போதினி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பின்னர்த் தமிழறிஞர், முதுபெரும் புலவர் வெள்ளகால் திரு. சுப்பிரமணிய முதலியார் அவர்களுடனும், குற்றால முனிவர் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டு அவர்கள் அன்புக்குப் பாத்திரமாகி, அவர்களால் ஆட்கொள்ளப்பட்டார். 

தமிழறிஞர் வெள்ளக்கால் முதலியார் அவர்கள் மறைந்த பின்னர், முழுக்க முழுக்க ரசிமகணி டிகேசியின் பிரதம சீடராகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது புத்தேரியில் வாழ்ந்து வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களிடத்தும் தொண்டைமானுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ரசிகமணி அவர்களையும், கவிமணியவர்களையும் ஒருங்கே வரவழைத்து, கலைதெரி கழகம் என்ற அமைபின் மூவலம் பெரிய பாராட்டு விழாவை நெல்லையில் நடத்திப் பெருமை கூட்டினார்.

தொண்டைமானவர்களுடைய ரசிக உள்ளம், கம்பன் கலை, கவிதை இவற்றில் தோய்ந்து நின்றது. கம்பன் பக்தி ரசிகமணியின் கூட்டுறவில் மேலும் வளர்ந்தது. காரைக்குடி கம்பன் விழாவில் அவர் பங்கு பெரிது. கம்பன் அடிப்பொடி திரு. சா. கணேசன் அவர்களும், தொண்டைமான் அவர்களும் உடன்பிறவா சகோதரர்களாகவே பழகி வந்தனர். பிரபல எழுத்தாளர், திரு. தொ. மு. சிதம்பர ரகுநாதன் அவருடைய உடன் பிறந்த தம்பி.

சோழர்கள் ஆட்சியில் தஞ்சைத் தரணியில் ஆலயங்கள் பொலிவு பெற்று விளங்கின. மாடக்கோயிலகள் மூலமாக அந்தப் பொலிவுக்குப் புதிய வடிவுகண்டான் கோட்செங்கட்சோழன். செங்கற் கோயில்களை கருங்கற் கோவில்களாக அமைத்து அந்த வடிவுக்குப் புதிய வலிமை கண்டனர் பராந்தகனும், கண்டரரதித்தனும் அவன் மனைவியார் செம்பியன் மாதேவியாரும்.

விண்னை முட்டும் கோபுரமும் படைத்து அந்த வலிமைக்கு புதிய வனப்பும் சேர்த்தனர் ராசராசனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும். இத்தகைய சிறப்பு மிக்க ஆலயங்கள் அந்நியர் படையெடுப்பிலும், ஆட்சியிலும் பொலிவு குன்றி இருட்டடிப்புக்கு ஆளாயின.

ஆலயங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வித்திட்ட பெருமை கொண்டவர் அமரர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்.

தமிழ்நாட்டுக் கலைகளில் தொண்டைமான் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது, தமிழ்நாட்டுச் சிற்பக் கலைதான். அவர் தஞ்சையில் பணியாற்றியபோது, அங்கு தடுக்கி விழும் இடம் எல்லாம் கலைச் செல்வங்கள், சிற்ப வடிவங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டுபிடித்து, அவற்றைச் சேகரித்து, தலைநகராம் தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துவிட்டார். 

பொறுப்பான அரசுப் பணியிலிருந்தபோதும், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றின் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதி மக்களுக்கு விருந்து படைத்தார். 

அந்தக் கட்டுரைகளை, வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கல்கி பத்திரிகை பெருமை அடைந்தது. வேங்கடம் முதல் குமரி வரை என்ற கட்டுரை தொடர்களை கல்கி வார மலர்களில் வெளியிட்டு பக்தியில் பரவசத்துடன் பயனிக்க வைத்தவர் ஆன்மீகச் செம்மல் பாஸ்கர தொண்டைமான் அவர்கள்.

அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றியும், சரித்திரப் பிரசித்தி பெற்ற தலங்களைப் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் "கலைமணி" தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்தான்.


தொண்டைமானவர்களுடைய திருப்பணியைப் பாராட்டி, வணக்கத்துக்குரிய காஞ்சி முனிவர் ஒரு வித்வத் சதலைக் கூட்டி “கலைமணி” பட்டம் வழங்கி, பொன்னாடை போர்த்தி, சிறப்புச் செய்தார்கள். தொண்டைமானவர்களுடைய மணி விழாவின்போது, 

காஞ்சி பீடாதிபதி அவர்கள்,

“கலாமணி தொண்டைமான் ரீ பாஸ்கர சில்ப கல்பக

ஷஷ்டி பூர்த்யுத்லவே சர்வ மங்களா கருணாஸ்பதம்”

என்ற ஸ்லோகத்தையும் அருளி ஆசி கூறினார்கள்.

தொண்டைமானவர்களுடைய கலைத்தாகம் அதோடு தனிந்துவிடவில்லை. வேங்கடத்துக்கு அப்பால் இமயம் வரை உள்ள கோயில்களையும் கண்டு தெளியவேண்டும் என்ற அவா உந்த, வடநாட்டுப் பயணம் மேற்கொண்டு, பாரதம் முழுவதையும் வலம் வந்தார். அதன் பயனாக வேங்கடத்துக்கு அப்பால் என்ற தலைப்பில், கல்கியில் 56 கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு, அவை இன்று நூல் வடிவமும் பெற்றுவிட்டன. 

இவை தவிர பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், ரசிகமணி டிகேசி என்ற நூல்களும், கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, இந்தியக் கலைச் செல்வம், தமிழர் கோயில்களும் பண்பாடும் என்ற கலைக்கட்டுரைத் தொகுப்புகளும், மதுரை மீனாட்சி, ஆறுமுகமான பொருள், பிள்ளையார்பட்டிப் பிள்ளையார், கம்பன் சுயசரிதம், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும், பட்டி மண்டபப் பேருரைகள் என்ற நூல்களும் தொண்டைமான் எழுதியவற்றில் குறிப்பிடத்தக்கவை.

"வெள்ளைக்காலை வாழ்த்த உத்தமதானபுரத்திற்குத்தான் தகுதியுண்டு" என்பது இரசிகமணியின் கருத்து. அவரே "தமிழ்த் தாத்தா" உ.வே. சாமிநாத அய்யரவர்களுக்குக் கடிதம் எழுதி அவரது இசைவையும் பெற்று விட்டார். இந்துக் கல்லூரி மாடியில் நடந்த விழாவுக்கு அறிஞர்களும், தமிழன்பர்களும் திரண்டு வந்திருந்தனர். விழாத் தலைவரான "மகா மகோபாத்தியாய" டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு முதிர்ந்த பருவம். அவரை அழைத்துக் கொண்டு, வழிநடத்திச் சென்று தலைமைப் பீடத்தில் அமரவைத்த இளைஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.

விழாத் தலைவர் உ.வே.சா. பேசும்போது அவர் குறிப்பிட்டதை அப்படியே தருகிறோம்:- "என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே, படி, படி என்று தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கிவிட்டீர்கள். நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் படி, படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளை அவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது. என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான். அவன் வயதிலும், உருவத்திலும் சிறியவன்தான். ஆனால், அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வந்து அமரும் வரை என் கூடவே வந்து, படி, படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான். பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து "என்னை ஆண்டான்" என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் "பிள்ளையாண்டான்" என்று குறிப்பிட்டேன். இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!"

இதைக் கேட்ட வெள்ளக்கால் எண்பதாண்டு விழாக் குழுவில் செயலாளராக இருந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்கு நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி. "தமிழ்த் தாத்தா" தன்னைத் தம்பி என்று அழைத்ததால் பிற்காலத்தில் "தம்பி" என்ற புனைப்பெயரில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் தொ.மு.பா. எழுதினார்.

"தமிழ்த் தாயின் தவப் புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், "தம்பி" என்று அவர் அமுதூர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!" என்று பாஸ்கரத் தொண்டைமான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வாராம்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், நெல்லைக்குத் திரும்பினாலும், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றில் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் நுணுகி ஆராய்ந்து கட்டுரைகளாக வடித்தார் பாஸ்கரத் தொண்டைமான். இந்தக் கட்டுரைகள் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் "கல்கி" வார இதழில் தொடராக வந்தது.

வேங்கடத்துக்கு அப்பால்

பிள்ளைவாள்

தமிழறிஞர் முதலியார்

இரசிகமணி டி.கே.சி.

கலைஞன் கண்ட கடவுள்

கல்லும் சொல்லாதோ கவி

அமர காதலர்

தென்றல் தந்த கவிதை

தமிழர் கோயில்களும் பண்பாடும்

கம்பன் கண்ட இராமன்

அன்றும் இன்றும்

என்று தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம்.

இவரது நூல்கள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கிறது.

நீதிபதி மகாராஜன் தொகுத்தது போல, பாஸ்கரத் தொண்டைமானுக்கு இரசிகமணி எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. காரைக்குடி கம்பன் விழா என்றால், தவறாமல் ஆஜராகி விடுவார்கள், தொண்டைமான், மகாராஜன், ஆ.சி.ரா. போன்ற வட்டத்தொட்டி நண்பர்கள்.

இவர்களது உரையைக் கேட்பதற்காகவே இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். அது ஒரு காலம்!

வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதி வாழும் வரை, இவரது நூலும் வாழும். இவரது புகழும் வாழும்!

தொண்டைமானவர்கள் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல பேச்சாளரும் கூட. இலக்கிய மேடைகளிலும், வானொலியிலும் அவருடைய குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

தஞ்சைக் கலைக் கூடமும், அவருடைய நூல்களும் கலைமகளுக்கும் தமிழ் மகளுக்கும் அவர் விட்டுச் சென்ற சீதனமாகும். இன்னும் பதிப்பிக்கப் பெறாத அவரது கட்டுரைத் தொகுப்புக்கள் ஏறத்தாழ ஏழுக்கும் அதிகமாகவே இருக்கும். இந்த அறக்கட்டளையின் மூலம் அவற்றையும் பதிப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். தஞ்சைக் கலைக் கூடத்தில் அதை உருவாக்கிய தொண்டைமானவர்களுடைய உருவப்படமோ, பெயரோ இடம் பெறாதது அவருடைய நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் பெருங்குறையாகவே இருந்து வருகிறது. அந்தக் குறையும் நிவர்த்திக்கப்பட வேண்டும். அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பயன் தரவில்லை.

இலக்கியப் பணியையும், கலைத் தொண்டையும் தம் இரு கண்களாக மதித்து, அறுபதாண்டு காலம் வாழ்ந்த பயனுள்ள வாழ்க்கை, 1965 ஆம் ஆண்டு, மாாச் 31 ஆம் நாள் நிறைவு பெற்றது.

திருச்செந்தூர் மடமும் குற்றால மடமும்

சேவைகளில் எல்லாம் சிறந்தது, குற்றாலத்து மடத்தைத் தங்களது என்று உரிமை கொண்டாடிய குற்றாலநாதரது தேவஸ்தானத்தாரோடு போராடி, நீதிமன்றம் வரை போய் வாதாடி, மடத்தை மக்களுக்கு மீட்டுத் தந்ததே 1944 க்கு முன்னர் குற்றாலத்து மடம் கழுதைகள் அடைகிற மண்டபமாகத்தான் இருந்தது. கவனிப்பார் இல்லாமையால் பாபநாசம் மடம் எல்லாம் பிறர் கைவசம் போய்விட்டது. திருச்செந்தூர் மடமும் குற்றால மடமும் மட்டும் காப்பாற்றப்பட்டன. குற்றாலம் மடத்தை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ரீரமணாத்தாரணம் செய்து திறப்பு விழாவும் நடத்தி வைத்தார்.

அந்தத் திறப்பு விழாவுக்கு அரசர் பெருமானின் மைத்துனரான, கல்லாக்கோட்டை ஜமீன்தாரார் விஆர்பிஆர் சிங்கப் புலியாரை வரவழைத்து, ரசிகமணி டிகேசி அவர்கள் தலைமையில் ஒரு பெரிய திறப்பு விழாவும் நடத்தி வைத்தார். சூட் தாக்கல் செய்தார்கள். கேசை, முன்சீப் கோர்ட்டிலும், சப் கோர்ட்டிலும், பின்னர் ஹைகோர்ட்டிலும் வாதாடியவர்கள் தொ.மு.பா. அவர்களே. அத்தனைக்கும் தோன்றாத்துணையாயிருந்து உதவியதோடு தீர்வை செலுத்தப்படாமல் மடம் ஏலத்துக்கு வரும் நிலையில் இருந்தபோது, தொமுபா அவர்கள்தான் செக் அனுப்பி, மடம் ஏலம் போகாமல் காப்பாற்றினார்கள். மடத்திலிருந்து பத்து சென்ட் நிலத்தில் கூத்தர் குடில் என்ற குடிலைக் கட்டி, அதில் வரும் வாடகை, வருமானத்தில் இருந்து வருஷா வருஷம் தீர்வையும் அவர்களே கட்டி வந்த தன் காரணமாக, மடம், தேவஸ்தானத்துக்கோ அல்லது மற்றவர்களுக்கோ போய்விடாமல் அரண் செய்து காப்பாற்றினார். அவர்கள் செய்த சமுதாய சேவைகளில் எல்லாம் தலையாயது இதுதான். 







திரு. தொ. மு. சிதம்பர ரகுநாதன் 



1923 ஆம் ஆண்டு, ஆக்டோபர் திங்கள் 20 ஆம் நாள் (20.10.1923) திரு. தொண்டைமான் முத்தையா அவர்களுக்கும், திருமதி. முத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.


தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். இவர் எழுதிய சிறுகதைகளை வாசித்த புதுமைப்பித்தனுக்கு, அந்தக் கதைகள் மிகவும் பிடித்துப்போய், யார் இந்தப் பையன் எனத் தேடித் தேடி, சென்னையில் தினமணி ஆபீஸில் அவரை முதன்முதலாகப் பார்த்தபோது ``ஏ... நீ நம்ம ஆளுப்பா. உன்னைத்தான் இத்தனை நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன்” என்று சொல்லிக் கட்டியணைத்துக்கொண்டு, அந்த நிமிடத்திலிருந்து நெருக்கமாகிவிட்டாராம்.


அதன் பிறகு தன் இறுதிக்காலம் வரை அந்த நட்பையும் தோழமையையும் சிக்கெனப் பிடித்துக்கொண்டிருந்தவர் புதுமைப்பித்தன். அவர் சாகும் நாளில், கடைசி நிமிடத்தில் பார்க்க ஆசைப்பட்டு கண்கள் தேடியதும் இவரைத்தான். உடல் நோயால் வேதனை வந்தபோதெல்லாம் ``ரகுநாதா...” என்று அரற்றியதாக கடைசி நிமிடத்தில் அவரோடு இருந்த சிதம்பரம் எழுதுகிறார்.




தொ.மு.சி ரகுநாதன் - கதை1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்' நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் கமில் சுவலபில் மொழிபெயர்த்த அந்த நூல், 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. ரகுநாதன் எழுதிய `ஆனைத்தீ' என்ற சிறுகதைக்கு ஈடான ஒரு கதையை, தமிழில் வேறு யாரும் எழுதவில்லை என்பது எழுத்தாளர் சுந்தரராமசாமியின் அழுத்தமான கருத்து. அவர் பெயரைப் புறக்கணிப்பதில் நியாயம் ஏதும் இருக்க முடியாது. அரசியல்தான் இருக்க முடியும்.


புதுமைப்பித்தனோடு சேர்ந்துகொண்டு கல்கி உள்ளிட்ட புகழ்பெற்ற இலக்கிய உலக ஜாம்பவான்களை எல்லாம் கூர்மையான விமர்சனக் கணைகளால் வீழ்த்தியவர் தொ.மு.சி.ரகுநாதன். அதிரடியான எழுத்துகளால் பலருடைய பகையைச் சம்பாதித்துக்கொண்டவர். ஆனால், உண்மையை எந்தவிதமான சமரசத்துக்கும் இடமின்றி உரக்கச் சொன்னவர். முற்போக்கு இலக்கியம் என்ற வகைமையின் பயணத்துக்கு முதன்முதலாகப் பாதை போட்டவர்.


1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்' என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. கம்யூனிஸ்ட்டுகள் மீதான அடக்குமுறைக் காலம். போலீஸாரால் தேடப்பட்டுவரும் ஒரு தொழிற்சங்கத் தலைவர், போலீஸ் கண்ணில் பட்டுவிடுகிறார். போலீஸ் அவரைத் துரத்துகிறது. அவர் தப்பி ஓடி ஓடி, ஒரு சந்தில் நுழைகிறார். அங்கே ஒரு குடிசை வாசலில் ஒரு பெண் உட்கார்ந்து தன் குழந்தைக்குப் பால் புகட்டிக்கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணும் தீவிரமான ஒரு தொழிற்சங்கவாதி. தன் தலைவரை போலீஸார் துரத்திவருவதைப் பார்த்த அந்தப் பெண், தலைவரை  தன் குடிசைக்குள் நுழைத்து பின்வாசல் திறந்து தப்பி ஓடிவிடும்படி கூறுகிறாள். தலைவர் குடிசைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் போலீஸ் அவள் வீட்டுவாசலில் வந்து நின்றுவிட்டது. உடனே போலீஸ் உள்ளே போனால் தலைவர் பிடிபட்டுவிடுவார். என்ன செய்தாவது தலைவரைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் என்ன செய்வதென அவளுக்குத் தெரியவில்லை. திடீரென தன் மடியில் பால் குடித்துக்கொண்டிருந்த தன் குழந்தையின் கால்களைப் பிடித்துத் தூக்கிப் படிக்கட்டில் அதை ஓங்கி அடிக்கிறாள். தலை சிதறி குழந்தை இறந்துவிடுகிறது. இந்தக் கொடூரத்தைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிடுகிறார்கள். தலைவர் தப்பிவிடுகிறார்.


இது கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலதண்டாயுதம் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். இப்படியான சம்பவம், இங்கு மட்டும் நடக்கவில்லை. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் போரில் பின்வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஓரிடத்தில் நடந்துள்ளது. வியட்நாமிலும் ஜப்பானிலும் சோவியத் யூனியனிலும் இப்படிக் கட்சித் தலைவர்கள், தேசிய ராணுவம் இவர்களைக் காப்பதற்காகக் குழந்தையைக் கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.


`ஆனாலும் உண்மையும் யதார்த்தமும் ஒன்றா? கலை என்பது நடந்ததை நடந்ததாக எழுதுவதா? அப்படியானால், நடந்ததும் யதார்த்தமும் ஒன்றா? சம்பவ உண்மைக்கும் கலை உண்மைக்கும் வேறுபாடு கிடையாதா? இப்படியெல்லாம் கேள்விகளை எழுப்பியது அந்தக் கதை.' (பொன்னீலனின் தொ.மு.சி.ரகுநாதன் நூலிலிருந்து)


காவல்துறை களத்தில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடிக்கொண்டிருந்த அதே காலத்தில், எழுத்துலகில் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ்காரர்களாலும் `சுத்த இலக்கியவாதி’களாலும் கடுமையாகத் தாக்கப்பட்ட காலமாகவும் இருந்தது. ஹிட்லர் சோவியத் மீது படையெடுத்துச் சென்று தோற்ற காலமாகவும் இருந்தது.


`அகில உலக கம்யூனிஸ்ட் இயக்கம் சமாதான பஜனை செய்துகொண்டே யுத்தத்துக்குத் திட்டமிட்டுவரும் இந்தச் சமயத்தில், கம்யூனிசத்தின் உண்மைத்தன்மையை ஆதரவாளர்களின் வாய்மொழியிலிருந்தே தெரிந்துகொள்வது அவசியம். அதற்காகவாவது இந்தக் கதைத் தொகுதியை வாசிக்கலாம்' என்று ரகுநாதனின் முதல் சிறுகதைத் தொகுப்பைக் கடுமையான வார்த்தைகளோடு வரவேற்றது தினமணி நாளிதழ் (10-09-1950). அன்று கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கும் இந்தக் கதை மீது கடுமையான விமர்சனம் இருந்தது (தொ.மு.சி.ரகுநாதன் நினைவோடை-சுந்தர ராமசாமி). `நடந்ததைத்தானே எழுதியிருக்கிறார் அதற்கு ஏன் இத்தனை விமர்சனம்?' என்று இந்தக் கதையை ஆதரித்தோரும் இருந்தனர்.


சிறுத்தொண்ட நாயனார் சிவனடியார் ஒருவர் கேட்டார் என்பதற்காகத்தான் பெற்ற  பிள்ளையை வெட்டி கறி சமைத்து அன்போடு உபசரித்தார் என்ற கதையை, காலம் காலமாகக் கண்களை மூடி பக்திப்பரவசத்தோடு  `சிவசிவா' என்று கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு, உண்மையின் மீது கட்டப்பட்ட என் கதையை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று தடாலடியாகத் திருப்பியடித்தார் ரகுநாதன்.


ஆரம்பத்தில் அப்படித் திருப்பி அடித்தாலும் பின்னாளில்  `நீயும் நானும்' கதையை தான் எழுதியவிதம்  சரியல்ல என சுயவிமர்சனம் செய்துகொண்டார் ரகுநாதன். 1956-ம் ஆண்டில் இலங்கையில் பேசியபோது ``நான் சொல்லியிருப்பது ஒரு சம்பவமே! கதை என்ற அளவில் அதன் உருவாக்கம் சரியானதல்ல. யதார்த்த இலக்கியத்தின் உயர்நிலையே மானுட அன்புதான். மானுட அன்பு என்னும் சுடரை உள்ளுக்குள்கொள்ளாத இலக்கியங்கள் யதார்த்த இலக்கியங்கள் ஆக மாட்டா” என்று தன் கதையை தானே மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார். இதுதான் ரகுநாதன். அத்தோடு நில்லாமல் யதார்த்த இலக்கியம் என்றால், அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மிகயீல் ஷோலக்கவ்வின் கதை ஒன்றைக் கூறுகிறார்.


`இரண்டாவது உலக யுத்தம் முடிவுக்கு வந்த நேரம்,  ஜெர்மனி வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆனாலும் போர் முற்றிலும் ஓய்ந்துவிடவில்லை. பாசிசத்தின் தலைமையிடமான ரீஸ்டாக் கட்டடத்தின் மீது செங்கொடியை ஏற்ற சோவியத்தின் செஞ்சேனை வீரர்கள் ஐந்து பேர் ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டுக்கொண்டு செங்கொடியுடன் ஓடுகிறார்கள். கட்டட இடிபாடுகளுக்கு இடையே பிரசவத்துக்காகத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஜெர்மானியப் பெண்ணின் குரல் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. புதிய உயிரைப் பிறப்பிக்கும் வலியில் அவள் துடித்துக்கொண்டிருக்கிறாள். செங்கொடியைக் கீழே வைத்துவிட்டு அந்த ஐந்து பேரும் சேர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்காக அந்தப் பெண்மணியைத் தூக்குகிறார்கள். சாலையின் இருபக்கங்களும் பதுங்கியிருந்த ஜெர்மானிய ராணுவ வீரர்கள், அந்தச் செஞ்சேனை வீரர்களை ஒவ்வொருவராகச் சுட்டுக்கொல்கிறார்கள். கடைசி வீரர் அந்த நிறைசூலியை  மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பிறந்த குழந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ந்தபடி வெளியே வரும்போது சுடப்பட்டு இறக்கிறார். முகத்தில் புன்னகையுடன் அந்தச் செஞ்சேனை வீரன் மடிகிறான்'. இந்தக் கதையில் சுடர்விடுவதுபோல யதார்த்தம் சுடர்விட வேண்டும் என ரகுநாதன் பேசி முடித்ததாக பொன்னீலன் எழுதுகிறார்.


ஆனால், பெரும் விவாதப் புயலைக் கிளப்பிய சிறுகதையாக அது விளங்கியது. சிறுகதை மட்டுமல்ல, நாவல் இலக்கியத்திலும் புயலைக் கிளப்பியவர் ரகுநாதன். அவருடைய முதல் நாவலான `முதலிரவு', `காம உணர்ச்சி, மனிதனின் இதய உணர்ச்சியை மழுங்கடிக்கும் கீழ்த்தரமான உணர்ச்சி' என்ற பழங்கொள்கையைத் தவிடுபொடியாக்குவதற்காக எழுதப்பட்டது. பரபரப்பாக விற்பனையாகிப் பல பதிப்புகளைக்கண்டது. அதன் அமோக விற்பனையில் பொறாமைகொண்ட சில பதிப்பாளர்கள், அந்த நாவலை ஆபாசம் என்றும் அதைத் தடைசெய்ய வேண்டும் என்றும் அரசிடம் புகார் செய்தார்கள். இதுபற்றி பொன்னீலன் எழுதுகிறார், `அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் செட்டியார் கட்டபிரம்மசாரி. தீவிர காந்தியவாதியான அவர், திருக்குறளில் இருந்தே காமத்துப்பாலை நீக்கிவிட வேண்டும் எனப் பேசியவர். நாவலில் ஓரினச்சேர்க்கை, முறை பிறழ்ந்த  ஈரினச்சேர்க்கை, காந்தியப் பாலியல் நிலைக்கு எதிர்ப்பு எல்லாம் இருந்ததைப் பார்த்த அவர், புத்தகத்தைத் தடைசெய்து ஆணை பிறப்பித்தார்.


படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. புதுமைப்பித்தனிடம் நாம் காணும் அதே கிண்டலும்  நகையுணர்வும் சமூக விமர்சனமும் இன்னும் தெளிவான குரலில் ரகுநாதனின் கதைகளில் ஒலிக்கக் கேட்கலாம்.


பூடகமாகவோ இலைமறைக் காயாகவோ எழுதுவது ரகுநாதனுக்குப் பிடிக்காத ஒன்று. எழுத வேண்டும் என நினைத்துவிட்டால், தெளிவாகவும் வெளிப்படையாகவும் எழுதிவிடவேண்டியதுதானே என்பதுதான் ரகுநாதனின் போக்கு. அந்நிலைபாட்டின் சாட்சியங்களாக அவருடைய சிறுகதைகள் திகழ்கின்றன. அவர் அளவுக்கு சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களிலும் பாரதியிலும் புதுமைப்பித்தனிலும் ஆழ்ந்து தோய்ந்த இன்னொரு சிறுகதை எழுத்தாளரை தமிழ் இலக்கிய உலகம் இன்றுவரை பெறவில்லை.


`வென்றிலன் என்றபோதும்' என்ற சிறுகதை மகாபாரதக் காவியத்தை மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட முக்கியமான சிறுகதை. ஐந்து பேருக்கு மனைவியாக்கப்பட்ட பாஞ்சாலிக்கு, கர்ணன் மீதுதான் உண்மையான காதல் என்று கதை அதகளமாகப் பயணிக்கிறது. திரௌபதி பேசுவதான பாணியில் இரண்டாம் அத்தியாயம் தொடங்குகிறது:


``அரண்மனை மேன்மாட முன்றிலில் நின்று அர்த்தமற்று வானைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனதில் கவலைகள் மோதி மோதி நெஞ்சம் மரத்துப்போயிருந்தது. இறுகிப்போன இதயத்துக்குள்ளிருந்து குறுகுறுக்கும் நப்பாசையும், ஒதுக்க முடியாத துயரத்தின் உறுத்தலும் என்னை நிலைகொள்ளவிடாமல் அலட்டின. எனினும் கண்ணீர் சிந்தவோ, வாய்விட்டு அழுது நெஞ்சின் பளுவைக் குறைக்கவோ மனதில் தெம்பும் திறனும் இல்லை. காரணம், அன்றைய போர். ஒருபுறம் கர்ணன் என் காதலன். மறுபுறம் அர்ஜுனன் என் கணவன். இருவரும் போர் புரிகிறார்கள். இருவரில் யார் விழுவார்கள்? அவர்கள் வீழ்ச்சியைப் பொறுத்துதான் என் வாழ்க்கையும் இருக்கிறது. இப்படியெல்லாம் நெஞ்சக் குகையில் எண்ணங்கள் வெந்துகொண்டிருந்தன.”


கர்ணன் கொல்லப்பட்ட சேதி கேட்டு மனம் உடைந்து கட்டிலில் விழுந்து அழுகிறாள் பாஞ்சாலி. அவளுடைய நினைவுகளில் முன்னர் நடந்ததெல்லாம் சித்திரமாக விரிகின்றன. ``ஐவருக்கும் நான் பத்தினியானேன். எனக்கு வாய்த்த ஐந்து கணவன்மார்களும் என்னிடம் நடந்துகொண்டவிதம்தான் என்னை கர்ணன் பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச் சென்றது. இந்த ஐவருக்கும் மேலாக கர்ணனிடம்தான் எனக்கு மனசு ஒட்டக்கூடிய பாசம் இருந்தது.


தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவி என்றால், சதி என்ற தெய்விகப் பொருள். அவர் பள்ளியறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென நீதிசாஸ்திரம் போதிக்க ஆரம்பித்துவிடுவார். பீமரோ, காதலுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவர் அல்ல. இடிம்பைதான் அவருக்குச் சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜுனருக்கு, நான் பலரில் ஒருத்தி. அவருக்கு, சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரௌபதியானாலும் சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல சகாதேவர்கள் என் கண்ணுக்குக் கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக் குஞ்சுகளாகத்தான் தோன்றினர்.


இதனால்தான் இந்த ஐவரில் எவர் மேலும் அன்பு செலுத்த முடியவில்லை. உலகமும் அவர்களும், என் பரிவையும் பச்சாதாபத்தையும் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளட்டும். எனினும், எனக்கு கர்ணன்மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக்கூட கட்டுக்குலையாமல் காத்துவந்தது. இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் இன்றோடு உதிர்ந்தது என்றுதான் கொள்ளவேண்டுமா?”


இந்தக் கதையின் மையப்புள்ளியாக இருந்தது அர்ஜுனன் போரில் வென்றபோதும் அவன் கர்ணனிடம் தோற்றான் என்று நிறுவுவதே ஆகும். அர்ஜுனனின் புலம்பலாக வரும் வார்த்தைகள்...


``கர்ணன் என் அண்ணன்; என் எதிரி. இந்த உணர்ச்சியை என்னால் லகுவில் ஒதுக்கிவிட முடியவில்லை. இளமை முதல் அவனைப் பகைத்தே வந்திருக்கிறேன். இருவர் கைகளிலும் வில்லேறிய நாளிலிருந்து ஒருவருக்கொருவர் விரோதிதான். இன்று நான் கர்ணனைக் கொன்றுவிட்டேன். எனினும் நான் அவனை வென்றதாகவே எண்ண முடியவில்லை. கர்ணனின் மரணத்துக்காக இந்திரனும் கண்ணனும் அவனிடம் பிச்சை ஏற்கவேண்டியிருந்தது. தான் பெற்ற பிள்ளையிடம் தாய்மை உணர்ச்சியைக் காட்டி ஏமாற்றி, நாகாஸ்திரப் பிரயோகத்துக்கு குந்தி தடை விதிக்கவேண்டியிருந்தது. கடோத்கஜனை இந்தச் சூதில் பணயம் வைத்து வெட்டுக்கொடுக்கவேண்டி வந்தது. கர்ணனைக் கொன்றுவிட்டேன். எனினும் வெற்றி எனக்கல்ல.”


1940-களில் கலாசாரக் காவலர்கள் யாரும் தமிழகத்தில் தலையெடுத்திருக்கவில்லை. ஆதலால், பாஞ்சாலியின் ஆறாவது காதலை முன்னிறுத்திக் கலவரம் ஏதும் வெடிக்கவில்லை. இந்தக் கதையும் ரகுநாதனும் தப்பினார்கள். நமக்கு அற்புதமான ஒரு மறுவாசிப்புக் கதை கிடைத்தது. ரகுநாதனுக்கு இந்தப் பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயமும் ஆழ்ந்த புலமையும் பிதுரார்ஜிதச் சொத்தாகவே அவருக்கு வந்து சேர்ந்தது எனலாம்.


கதைஇவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.


அண்ணன் பாஸ்கரத் தொண்டைமான் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியாளராகவும், பெரும் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர். ரகுநாதனின் அப்பா ஒரு பிரம்ம சமாஜியார். வீட்டிலேயே பிரம்ம சமாஜக் கூட்டங்கள் நடக்கும். சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடுகொண்டவர். தாகூரிடம் ஈடுபாடுகொண்டவர். நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஆகவே, ஆரோக்கியமான செறிவான குடும்பப் பின்னணி ரகுநாதனுக்கு வாய்த்திருந்தது.


அவருடைய முழுப்பெயர் தொ.மு.சிதம்பர ரகுநாதன். கவிதைகளை மட்டும் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் எழுதுவார். அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருநெல்வேலியில். 1942-ல் `வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று, சிறை சென்றார். சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ நேர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். தினமணி, முல்லை, சக்தி, சோவியத் நாடு போன்ற இதழ்களில் ஆசிரியர் குழுவிலும் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.


பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார். சுந்தர ராமசாமியும் நெல்லை எஸ்.வேலாயுதமும் உதவியாக இருக்கிறார்கள். குடும்பப் பாகப்பிரிவினையில் அவருக்குப் பணமாகக் கிடைத்த 3,000 ரூபாயை முதலீடாகக்கொண்டு அந்த இதழைத் தொடங்கி நடத்துகிறார். இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.


`சாந்தி' இதழ்களை முழுமையாகத் தேடித் தொகுக்கும் பணியில் ரகுநாதனின் சீடரான தோழர் பேராசிரியர் ராமசந்திரன் ஈடுபட்டுள்ளார் என்பது ஆறுதல் அளிக்கும் தகவல்.


காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று

ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழையென்றே
கொங்கலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்'
என்கிற மணிமேகலைப் பதிகத்திலிருந்து சொல்லெடுத்து ரகுநாதன் எழுதிய `ஆனைத்தீ' என்ற சிறுகதை, அவரது கதைகளில் மிகச்சிறந்த படைப்பாகப் போற்றப்படுவது. `ஆனைத்தீ' போல நெஞ்சில் மூண்டெழும் காமத்தீ பற்றிய கதை அது.

தாமிரபரணிக் கரையில் கருப்பந்துறை சுடுகாட்டுச் சுடலைமாடன் கோயில் சாமி கொண்டாடியான கட்டாரித்தேவனுக்கு நாட்டாமைக்காரத் தேவரின் மனைவி இசக்கியின் மீது தீராத இச்சை. ``நல்ல மஞ்சக் கடம்புக் கட்டையில் செதுக்கி நிறுத்திய சித்திரப்பாவைபோல் இருப்பாள். தலையை அள்ளிச் செருகிக் கோழிவால் கொண்டை போட்டிருப்பாள். நெற்றியின் நடுவே ஓடி, உச்சி வகிடோடு முடியும் பச்சை குத்திய நாமம் அவளின் கண்களை அளக்க உதவும் கேந்திரமாகத் திகழும். அவளது அவயங்கள் யார் மனதையும் தடுமாறச் செய்யும். மாம்பழக் காவலுக்கு அவள்தான் தோட்டத்தில் இருப்பாள். கட்டாரித்தேவனுக்கு அவளோடு பேசுவதில் தனி இன்பம். மஞ்சள் பூசிய முகத்தில் துலாம்பரமாய் விளங்கும் வெற்றிலைக்காவி உதடுகளில் புன்னகை பூக்க, யாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசுவாள் இசக்கி.”


கட்டாரித்தேவனுக்குக் கலியாணம் ஆகியிருந்தபோதும் மனதில் எழும் குரூர ஆசையைக் கொல்ல முடியாமல் இருந்தான். சுடலைமாடனின் கொடை நடக்கும் அன்று, அவன் சாமியாடியாக வேடம் தரித்து சுடலையில் அமர்கிறான். மேளமும் தாளமும் பறை இசையுமாக சூழலே துடியாகி நிற்கிறது. அந்தக் காட்சியை நுட்பமாகவும் விரித்தும் ரகுநாதன் விவரிக்கும் பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உக்கிரமான பக்கங்களாக நம்மை நடுங்கச்செய்கின்றன. அதிலும் சுடலைக்குச் சென்று எரியும் பிணத்தின் வயிற்றுக்குள்ளிருந்து குடலை உருவி கட்டாரித்தேவன் வாயில் கவ்விக்கொண்டு திரும்ப ஓடிவரும் காட்சியை ரகுநாதன் விவரிப்பதை வாசிக்கும்போது நமக்கு ஈரக்குலை உண்மையிலேயே பதறும். எழுத்துக்கு இத்தனை ஆற்றல் உண்டா என வியக்கவைக்கும் பக்கங்கள் அவை.


கட்டாரித்தேவனின் கையாளாக வரும் வில்லுப்பாட்டுக் கலைஞன் வீராசாமிக்குக் கட்டாரியின் நோக்கும் போக்கும் எல்லாம் தெரியும். சுடலைக்குப் படையலாக வைக்கப்பட்ட சாராயத்தை கட்டாரி ஒரே மூச்சில் குடித்துவிட்டு அருள் வந்து இறங்குவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் இசக்கி வருகிறாள். அதைக் கட்டாரித்தேவன் பார்க்கிறான். அருள் வந்து இறங்கும் முன் அவள் வந்து அவனுக்குள் இறங்கிவிடுகிறாள்.


``தூரத்தில் இசக்கி பச்சைநிறக் கண்டாங்கிச் சேலையைச் சரிபண்ணியவாறே சிரித்துக்கொண்டு நின்றாள். இசக்கியின் வனப்பு கட்டாரியின் கண்களை ஈர்த்தன. கட்டாரிக்குத் தலைக்கிறக்கம் அதிகமாயிற்று. சுடலையையும் இசக்கியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென ஒரே ஆகாகாரம் செய்துகொண்டே துள்ளி எழுந்தான் கட்டாரி. அவன் உடல் கிடு கிடென ஆடியது.”


இப்படித் தொடங்கும் அந்தக் காட்சிவிவரிப்பு ஆகாகாரமாக நம் மனங்களில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறது. சுடலையிலிருந்து திரும்பி வந்து வாயில் கவ்விய குடலுடன் அவன் ஆடுவது கண்டு ஊரே வாய் பொத்தி நடுங்கி கைகூப்பி நிற்கிறது. ஆனால், இசக்கி மட்டும் கும்பிடாமல் கையால் நாடியைத் தாங்கியவாறே அவனை வியப்புடன் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.


வில்லுப்பாட்டுக் கலைஞன் சுடலைமாட சாமிக்கும் இசக்கிக்கும் உள்ள உறவைப் பாடுவதுபோல கட்டாரித்தேவனுக்கும் இந்த இசக்கிக்கும் உள்ள உறவை தன் சொந்தப்பாடலாகக் கட்டிப் பாடுகிறான்.


`ஏந்து நல்ல ஸ்தனமிரண்டாம்...  இசக்கி.

இந்திராணி மார்பழகாம்... இசக்கி
பின்னழகைக் கண்டவர்கள்
பிரமித்து நின்றிடுவார்... இசக்கி
முன்னழகைக் கண்டாலோ
மோகிப்பார் ஆயிரம் பேர்... இசக்கி
இசக்கி... இசக்கி என்று உடுக்கடித்து கட்டாரித்தேவனின் ஆட்டத்துக்கு முறுக்கேற்றும் காட்சியும் இந்தக் கதையின் எழுச்சிகரமான பக்கங்களாகும்.

நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டுமுறையோடும் அவர்களின் கலையோடும் பின்னிப்பிணைந்து மிளிரும் கதை இது என்றால்,  `சுருதிபேதம்' என்னும் கதை கர்னாடக சங்கீதத்தைப் பின்னணி இசையாகக்கொண்டு நம்மை மயக்குகிறது. நாகஸ்வரக் கலைஞரான நாகமுத்து, தான் மையல்கொண்ட பெண்ணான செல்வத்தின் பாட்டுக்கு நாகஸ்வரம் வாசிக்கும்போது தாள லயத்தை மாற்றி குறும்பு செய்கிறான். போகப்போக ரசிகர்கள் அவள் பாட்டுக்கு இவன் எப்படி வாசிக்கிறான் எனப் பார்ப்பதற்கு மாறாக, இவன் வாசிப்புக்கு அவள் எப்படிப் பாடுகிறாள் என்று பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவள் பாடலை நிறுத்தி சபையிலேயே விக்கி விக்கி அழுதுவிடுகிறாள்.


தாசி வடிவாம்பாளின் மகளான அந்தச் செல்வத்தைத் தேடி குற்ற மனதுடனும் அவளைச் சென்றடையும் நோக்குடனும் நாகமுத்து செல்கிறான். கதையின் அடுத்த திருப்பத்தில் செல்வம் நாகமுத்துவின் காதல் மனைவி ஆகிறாள். அடுத்த காட்சியில் வடிவாம்பாள் சாகக் கிடக்கிறாள். அப்போது நாகமுத்துவை அழைத்து ``உன் தகப்பன் வேல்சாமி நாதசுரக்காரருக்கும் எனக்கும் பிறந்தவள்தான் செல்வம். உன் அப்பா என்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டார். அதற்கு வஞ்சம் தீர்க்கவே உண்மையைச் சொல்லாமல் செல்வத்தை உனக்குக் கட்டிக்கொடுத்தேன். அவள் உன் தங்கை” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடுகிறாள். தங்கையுடனா இத்தனை நாள் சல்லாபித்திருந்தேன் என்ற குற்ற உணர்வில் குமைந்துபோகிறான் நாகமுத்து. பாட்டில் சுருதிபேதம் செய்த குற்றத்துக்கு என் வாழ்க்கையையே சுருதிபேதம் செய்துவிட்டாளே எனக் கலங்குகிறான். அப்புறம் எந்தப் பெண்ணுடனும் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள முடியாத உளவில் சிக்கலுக்கு அவன் ஆளாகிவிடுகிறான்.


கு.ப.ரா-வின் `ஆற்றாமை' கதையில் சொன்ன அதே விஷயம் ரகுநாதனின் இந்தக் கதையில் இன்னும் அழுத்தமாகவும் தலைமுறைக் கோபமாகவும் பளிச்சென வெளிப்படுவதைக் காண வியப்பாக இருக்கிறது. இதைப்போல `கிரஹணம்' என்ற கதையும் ஆண்-பெண் உறவுக்குள் ஏற்படும் ஊடல், கூடல் பற்றிய கதைதான்.


ரகுநாதனின் கதைகளை வாசிக்க வாசிக்க, இவர் புதுமைப்பித்தன், கு.ப.ரா இருவரையும் கலந்து வடித்த கலைஞரோ என்ற மயக்கம் நமக்கு ஏற்படுகிறது. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.


அவரது `பாரதி:காலமும் கருத்தும்' நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்' என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். அதனாலோ என்னவோ அந்த நூல் புறக்கணிக்கப்பட்டது. அத்தனை வலுவான நூலைக் கண்டுகொள்ளாமல், தன் சாவு சாக தமிழறிஞர்கள் அனுமதித்தார்கள். பெரும் கொடுமை அது.


புதுமைப்பித்தன் வரலாறு என்னும் நூல் அவரது படைப்புகளில் மகத்தான ஒன்றாக மதிக்கப்படுகிறது. அவர் இளவயதில் வெளியிட்ட `இலக்கிய விமர்சனம்' என்னும் நூல் தமிழின் முன்னோடியான நூல் என எதிர் அணியைச் சேர்ந்த க.நா.சு உள்ளிட்ட பலராலும் மதிக்கப்படும் நூல்.


தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். காலம் முழுவதும் யாரும் கிட்ட அண்ட முடியாத ஞானச்செருக்குடன் வாழ்ந்த அவர், பிற்காலத்தில் எளிதில் அணுக முடிபவராக மாறினார். அந்தக் காலத்தில் நானும் அவரை பாளையங்கோட்டை வீட்டில் சந்தித்து உரையாடும் சில வாய்ப்புகளைப் பெற்றேன். வாழ்நாள் முழுவதும் தன் புத்தகங்களோடும் எழுத்தோடுமே வாழ்ந்தார். மனைவி மக்களோடு (பெற்ற தாயுடனும்தான்) அவர் செலவழித்த நேரம் மிகக் குறைவு. எவரையும் சார்ந்திருக்காமல் தன் சொந்தக்கால்களில் நின்று சாதித்த அந்தக் கம்பீரமான ஆளுமை, 2001 டிசம்பர் 31 அன்று காலமானார்.







1950 களில் தொ.மு. சிதம்பர ரகுநாதனை ( திருச்சிற்றம்பலக் கவிராயர் ) ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த " சாந்தி " மாத ஏட்டின் சில இதழ்கள் 







தொ.மு. சிதம்பர ரகுநாதனை ஒரு முறை நாய் கடித்துவிட்டது. அப்போது அவருக்கு 7 வயது. .....அக்கா வீட்டுக்கு விடுமுறையில ரகுநாதன் சென்றிருந்தபோது அது அவருடைய தொடையைக் கடித்துக் குதறிவிட்டது.... வைத்தியர் வந்து பச்சிலையை வாயில் போட்டுக் கொண்டு கடிவாயிலிருந்து இரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி எடுத்தார். பின்னர் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் அவருக்கு 14 ஊசி தொப்புளைச் சுற்றிப் போட்டார்கள். படிப்பை நிறுத்திவிட்டார்கள். வெளியில் போகக்கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். முடி வெட்டக் கூடாது. வீட்டில் நல்லெண்ணெய்ச் சமையலே கிடையாது. ஊரில் இழவு விழுந்தால் யூகலிப்டஸ் ஆயிலைப் பஞ்சில் வைத்து அவர் தந்து சுவாசிக்கச் சொல்லி, மச்சில் கொண்டு அடைத்து விடுவார்கள். சவவாடை வந்துவிடக் கூடாதாம். நாற்பதாம் நாளில் அவருக்குக் கொஞ்சம் தலை கிறுகிறுத்ததாம். ஒரு வருடம் வீட்டுக்குள்ளேயே இருந்தார் அவர் - ”ரகுநாதன் வாழ்வும் பணியும்” - ஆசிரியர் பொன்னீலன். இது தொ.மு.சி.ரகுநாதன் குறித்த புத்தகம்..



திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி கள்ளர் குலத் தொண்டைமான் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பிரம்மராச்சதை அம்மன் கோவில் கொடை விழா அலங்காரம் முளைப்பாரி













தொண்டைமான் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீசுந்தரவிநாயகர் திருக்கோவில் , பாளையம்கோட்டை
திருநெல்வேலி




ஸ்ரீ வைகுண்டம் திருக்கோயில்





தொண்டைமான்  பரவர்  - சுண்ணாம்புக்கார பரவர் 






திருச்செந்தூர் கோயில் வீதியில் தொண்டைமான் பரவர்களுக்கு 200 வருட பழைய மண்டகப்படி கட்டிடம் உள்ளது. சங்கரன்கோயிலில் 20  தொண்டைமான் குடும்பங்கள் உள்ளனர். நீலா ஸ்டூடியோ உரிமையாளர் பழனிவேல் தொண்டைமான் அவர்கள் குடும்பம் பல தலைமுறை தலைமுறையாக மறவர்களுடன் திருமண பந்தம் உள்ளவர்கள்.

இப்படத்தின் ஆங்கிலக் குறிப்பிற்கும் (torch bearer); தமிழ்க் குறிப்பிற்கும் (சுண்ணாம்புக்கார குறும்பன்) தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.

தொண்டைமான் எனவும் அழைக்கப்பட்ட  சுண்ணாம்புக்காரன் என்ற ஒரு பிரிவும், குறும்பன் என்ற பிரிவும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது என்பது தேவநேயப் பாவாணர் அவர்களின் நூற்குறிப்பில் இருந்து தெரிகிறது.


பெயர் - தொண்டைமான், சுண்ணாம்புக்காரன்.

தொழில் - சுண்ணாம்புக்கல் நீற்றல், மேளம் தட்டுதல், இசைக் குழலூதல். பட்டம் = சோழகன்.









வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்