புதுக்கோட்டையிலிருந்து ஆதனக்கோட்டை செல்லும் மார்க்கத்தில் கூழியான்விடுதி என்னும் ஊரில் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத்தலைவர் திரு.ஆ. மணிகண்டன் குழுவினரால் மைல்கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரபு எண்கள் பயன்படுத்தப்படாமல் தமிழ் எண்களும் ரோம எண்களும் பயன்படுத்தப்பட்டுளளன என்னும் செய்தி 21.04.2014 நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.
இதே சாயல் கொண்ட மைல்கல் ஒன்று புதுக்கோட்டை அறந்தாங்கி, ஆலங்குடி மார்க்கத்தில் மேட்டுப்பட்டி கேட் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் தென்புறம் கிழக்கு நோக்கிச் சாய்ந்து கிடக்கிறது. இதை ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் துணைத் தலைவர் ராசி. பன்னீர்செல்வன் உடன் இணைந்து 06.10.2013 அன்று கண்டறிந்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை – விராலிமலை சாலையில் அன்னவாசலில் ஒரு மைல்கல் உள்ளது. இது அரசு மாணவர் விடுதிக்கு நேர்எதிரில் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 200 அடி கிழக்கு – வனத்து சின்னப்பர் குருசடிக்கு மேற்கு ஜெயமேரி இல்லம் என்னும் வீட்டின் முன்புறம் உள்ளது. இந்த மைல்கல் சாலையைப் பார்த்தவண்ணம் நடப்பட்டுள்ளது. கல்லின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஊர்ப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் இரண்டு திசைகளிலும் இருந்து வரும் பயணிகள் தெரிந்துகொள்ள வசதியாகவே இந்த ஏற்பாடு. தற்போது கீழே கிடக்கும் மேட்டுப்பட்டி, கூழையான் விடுதி மைல்கற்கள் இரண்டும் இவ்வாறு சாலையைப் பார்த்தபடி நடப்பட்ட கற்களாகவே இருந்திருக்க வேண்டும் இவை போன்ற மைல்கற்கள் பழமையான பாதைகள் இருந்ததற்கான அரிய ஆதாரங்களாகும்.
ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ள இந்த மைல்கற்களில் ஊர்கள் அமைந்த திசைகள் குறிப்பிடப்படவில்லை. முதல் இரண்டு கற்களில் புதுக்கோட்டை என்னும் ஊர்ப்பெயர் மேல்பகுதியிலும் ஆதனக்கோட்டை என்னும் ஊர்ப்பெயர் கீழ்ப்பகுதியிலும் வெட்டப்பட்டுள்ளன.
அன்னவாசல் மைல்கல்லில் புதுக்கோட்டை மேல்பகுதியிலும் விராலிமலை கீழ்ப்பகுதியிலும் வெட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் கல் இருக்கும் இடத்திலிருந்து மேற்கு/தெற்குத் திசையில் அமைந்த ஊர்கள் கல்லின் மேல்பகுதியிலும் கிழக்கு/வடக்குத் திசையில் அமைந்த ஊர்கள் அவற்றுக்குக்; கீழ்ப் பகுதியிலும் பொறிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
கள்வர் கள்வன் பெரும்பிடுகு சுவரன் மாறன் கிபி- 8 ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை அன்னவாசலில் நடைபெற்ற போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக போரிட்டு பாண்டியர்கள் மற்றும் சேரர்களை வென்றுள்ளார். கிபி-1757 ல் ஹைதர் அலிப்படையின் எதிராக ஆங்கிலேயர்களுடன் இணைந்து 1000 குதிரைகளையும், 100 கள்ளர் வீரர்களையும் அன்னவாசலில் நிறுத்தி புதுக்கோட்டை தொண்டைமான்.
கள்வர் கள்வன் பெரும்பிடுகு சுவரன் மாறன் கிபி- 8 ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை அன்னவாசலில் நடைபெற்ற போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக போரிட்டு பாண்டியர்கள் மற்றும் சேரர்களை வென்றுள்ளார். கிபி-1757 ல் ஹைதர் அலிப்படையின் எதிராக ஆங்கிலேயர்களுடன் இணைந்து 1000 குதிரைகளையும், 100 கள்ளர் வீரர்களையும் அன்னவாசலில் நிறுத்தி புதுக்கோட்டை தொண்டைமான்.
எழுத்தமைதி
முதல் இரண்டு மைல்கற்களில் புள்ளி வைத்து எழுதப்பட வேண்டிய மெய்யெழுத்துகள் புதுககோடடை, ஆதனககோடடை எனப் புள்ளி இல்லாமலேயே எழுதப்பட்டுள்ளன. ஓலைச் சுவடிகளில் புள்ளி இல்லாமல் எழுதுவது போலவே கல்வெட்டுகளிலும் எழுதும் முறை உண்டு. அதே முறையில் மைல்கல்லிலும் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. மேட்டுப்பட்டி கேட் மைல் கல்லில் மட்டும் ஆதனக்கோட்டை என்னும் பெயரில் “ட” முழுமையாக விடுபட்டுள்ளது. ஆதனக்கோடை என உள்ளது. இடது பக்கத்திலிருந்து எழுத்துகளைக் கொத்திக்கொண்டே போகும் போது இடப்பற்றாக்குறையால் இது விடப்படடிருக்க வேண்டும்.
தமிழ் வரிவடிவங்களை அடுத்து ஆங்கிலத்தில் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன. தொலைவைக் குறி;க்க தமிழ்ப் பெயர்களுக்கு அடுத்து தமிழ் எண்களும் ஆங்கிலப் பெயர்களுக்கு அடுத்து ரோமன் எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது தமிழ்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது உச்சரிப்பது போலவே எழுதுவது வழக்கம். ஆனால் மைல்கற்களில் உள்ள ஆங்கில எழுத்துகள் தற்போது எழுதப்படும் ஒலி எழுத்து முறையில் இல்லை. தற்போது PUDUKKOTTAI என எழுதப்படுகிறது. இது POODOOCOTAY என மைல்கல்லில் எழுதப்பட்டுள்ளது. அதேபோல ATHANAKKOTTAI என்பது ATHANACOTAY என எழுதப்பட்டுள்ளது. இவை பூடூகோ(ட்)டய், ஆதனகோ(ட்)டய் என உச்சரிக்கப்பட்டிருக்கின்றன.
அன்னவாசல் மைல்கல்லில் தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஆங்கிலம் என்றவாறு ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. மெய்யெழுத்துக்ள புள்ளியிடப்பட்டுள்ளன. தற்போது விராலிமலை என எழுதப்படுவது விறலிமஸல என எழுதப்பட்டுள்ளது. றகரமும் லகர ஐகாரமும் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு முற்பட்டவை ஆகும். புதுக்கோட்டை என்னும் ஊர் ஆங்கிலத்தில் POODOOCOTTAY என இரண்டு T வருமாறு எழுதப்பட்டுளளது.
இதிலிருந்து அன்னவாசல் மைல்கல் முதல் இரண்டு கற்களைக் காட்டிலும் ஓரிரு ஆண்டுகள் பிற்பட்டது ஆகலாம். கல்லின் மென்தன்மையால் மேல்பக்கம் சிதையத் தொடங்கியுள்ளது.
1920 இல் வெளியிடப்பட்ட A MANUAL OF THE PUDUKKOTTAI STATE என்னும் நூலில் PUDUKKOTTAI, ATHANAKKOTTAI என்றே எழுதப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மட்டும் PUDUKOTAH எனவும் உச்சரிக்கப்பட்டுள்ளது (ப.244). எனவே மைல் கற்களில் வெட்டப்பட்டிருப்பது 1920க்கு முந்தையதாகும்.
ஆங்கிலேயர்கள் முதன்முதலில் இந்த ஊர்ப்பெயர்களை உச்சரித்த முறை எனலாம்.
மைல்கற்களின் காலம்
புதுக்கோட்டை என்னும் ஊர்ப்பெயரை ஆவூரில் தங்கியிருந்த பாதிரியார் வெனான்சியஸ் புச்செட் 1700 இல் தயாரித்த நில வரைபடத்தில் குறித்துள்ளார். இதன் ஒலிப்புமுறை குறித்து அறிய இயலவில்லை. சென்னை கவர்னராக இருந்த ஜார்ஜ் பிகாட் 28.09.1975இல் தொண்டைமானுக்கு எழுதிய கடிதம் விஜய ரகுநாத ராயத் தொண்டைமானுக்கும் (1730-1769) ஆங்கிலேயருக்கும் எற்பட்ட அரசியல் ஒப்பந்தமாகக் கருதப்பட்டது. 1769-1789 வாக்கில் ஹைதர் அலிக்கும் தொண்டைமானுக்கும் நடைபெற்ற போரின் இறுதியில் ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முக்கியக் கேந்திரமாக நிலைபெற்றுள்ளது. 05.06.1804இல் ஆங்கிலேயரால் நில அளவை மேற்கொள்ளப்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எல்லைகள் வரையறை செய்து எல்லைக் கற்கள் நடப்பட்டதாகத் தெரிகிறது.
ராஜா விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் (1807-1825) 10 வயதுச் சிறுவனாக இருந்ததால் அரச காரியங்களை சித்தப்பா விஜயரகுநாதத் தொண்டைமான் கவனித்து வந்துள்ளார். இதனால் தஞ்சாவூர், மதுரை ஆட்சியாளராக இருந்த மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் புதுக்கோட்டை அரசின் ஆட்சியாளராகவும் (RESIDENT) 1807 பிப்ரவரியில் நியமிக்கப்பட்டார். தொண்டைமான்களின் நெருங்கிய உறவினரைப் போலவே அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். தஞ்சாவூரில் இருந்து பிளாக்பர்ன் புதுக்கோட்டைக்கு வந்து விராலிமலை வழியாக மதுரைக்குப் போன பாதையில் இதுபோல் மைல்கற்கள் நடப்பட்டிருக்கலாம்.
1813இல் புதுக்கோட்டை – ஓலைச்சுவடிப் புள்ளிவிவரக் கணக்கு (STATISTICAL ACCOUNT OF PUDUKKOTTAI IN 1813 – Palm Leaf Gazetteer) என்னும் ஓலை ஆவணம் புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் உள்ளது. தற்போது அச்சு நூலாக இது வெளிவந்துள்ளது. இதில் 1813இல் புதுக்கோட்டைச் சீமையின் பல்வேறு புள்ளி விவரங்கள் 13 வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் பத்தாவது புள்ளி விவரம் பாதைகள், பெருவழிகள் பற்றியதாகும். இந்நூலில் கும்பினித் திட்டக் கணக்கு என்னும் தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 1813க்கு முன்பே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடித் தலையீடு புதுக்கோட்டைப் பகுதியில் இருந்ததையே இது காட்டுகிறது.
WILLIAM JOHN BUTTERWORTH எழுதிய THE MADRAS ROAD BOOK, Etc.(1839) நூலின் பக்கம் 34 இல் POODOOCOTAY என்னும் வரிவடிவம் ஆளப்பட்டுள்ளது. எனவே இதற்கும் முன்பே ஆங்கிலேயர் ஆவணங்களில் புதுக்கோட்டை என்னும் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆவணங்களில் இடம்பெறுவதற்கு முன் POODOOCOTAY என்னும் ஒலிப்புமுறை நடைமுறைக்கு வந்திருக்கச் சாத்தியம் உள்ளது.
எழுத்தமைதி, கல்லெழுத்துப் பொறிப்பு முறை, எல்லை வரையறை, ஆங்கிலேய ஆட்சியாளர் நியமனம் ஆகியவற்றை நோக்க புதுக்கோட்டை மைல்கற்களின் காலம் 1750-1800க்கு இடைப்பட்ட 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகிறது.
தொலைவு
அன்னவாசல் மைல்கல்லில் புதுக்கோட்டை 10 மைல் (சுமார் 16 கி.மீ) தொலைவிலும் விராலிமலை 14 மைல் (22.5 கி.மீ) தொலைவிலும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூழையான் விடுதி மைல்கல் புதுக்கோட்டை 9 மைல் (சுமார் 14.5 கி.மீ) தொலைவிலும் ஆதனக்கோட்டை 6 மைல் (சுமார் 9.5 கி.மீ) தொலைவிலும் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அன்னவாசல் கல்லிலும் கூழையான் விடுதிக் கல்லிலும் குறிப்பிடப்பட்டுள்ள தூhரம் இப்போதைய தார்ச்சாலையில் நடப்பட்டுள்ள கி.மீ. கற்களில் எழுதப்பட்டுள்ள தொலைவிற்குச் சரியாகவே உள்ளது.
மேட்டுப்பட்டி கேட் மைல்கல் அங்கிருந்து புதுக்கோட்டை 5 மைல் (சுமார் 8கிமீ) தொலைவிலும் ஆதனக்கோட்டை 10 மைல் (சுமார் 16 கி.மீ) தொலைவிலும் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது. அன்னவாசல் மைல்கல்லும் கூழையான் விடுதி மைல்கல்லும் குறிப்பிடும் பாதைகள் இன்று தார்ச்சாலைகளாக மாறிப் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மேட்டுப்பட்டி மைல்கல் குறிப்பிடும் ஆதனக்கோட்டை மார்க்கம் எல்லார்க்கும் புலப்படும்படியாக இல்லை.
மேட்டுப்பட்டி மைல்கல் சொல்லும் ஊர்ப்பெயர்களைப் பார்க்கும் போது அது கூழையான் விடுதி மைல்கல்லோடு தொடர்புடையதாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இரண்டுமே புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை ஊர்களின் தூரங்களைப் பற்றியே பேசுகின்றன. எனவே, இவை ஏதொவொரு வழித்தடத்தை உணர்த்தும் கற்களாக இருக்கலாம் என்னும் முடிவுக்கு வரவேண்டியுள்ளது. இந்த வழித் தடம் புதுக்கோட்டை – தஞ்சாவூர் மார்க்கத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் .
தற்போது மேட்டுப்பட்டியில் இருந்து நேராக ஆதனக்கோட்டைக்குச் செல்ல நேரடித் தார்ச்சாலை எதுவும் இல்லை. ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் மேட்டுப்பட்டியில் இருந்து மிகக் குறைந்த தொலைவில் ஆதனக்கோட்டையை அடைய ஏதோவொரு பாதை புழக்கத்தில் இருந்துள்ளது. மேட்டுப்பட்டி மைல்கல் உணர்த்தும் இந்த வழி எதுவென அறிய வேண்டியுள்ளது.
தங்குமிடங்கள் வழியே
பயணிகள் தங்கி இளைப்பாறிச் செல்ல புதுக்கோட்டை மாவட்டத்தில் பயணியர் மாளிகைகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல் வீடுகள் இருந்துள்ளன. இதன் மறுதலையாக எங்கெல்லாம் இத்தகைய தங்கும் இடங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் பாதைகள் இருந்தன எனக் கொள்ளலாம். மழையூருக்கு வடக்கில் தஞ்சை நகரைச் சேர்ந்த குப்பன் ஐயங்கார் 1806 வாக்கில் கட்டிய சத்திரம் இருந்துள்ளது. கூழியான விடுதி மேல்புறம் ராஜஸ்ரீ சிவானந்தபுரம் துரை என்பவர் 1763 வாக்கில் பயணிகள் பயன்பாட்டிற்கு அமைத்த சத்திரம் இருந்துள்ளது.
வடவாளம் மாகாணத்தில் ஊரின் வடபுறம் அதே ராஜஸ்ரீ சின்னத்துரை திருமலையப்பன் தொண்டைமானால் ஒரு சத்திரம் 1788 வாக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இது ராஜஸ்ரீ சின்னத்துரை சத்திரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது சின்னையா சத்திரம் என்னும் ஊராக உள்ளது. சின்னையா சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு எதிரில் இன்றும் இந்தச் சத்திரம் உள்ளது. மேலும், முள்ளுரில் ராஜஸ்ரீ திருக்கோகர்ணம் துரை சத்திரம், வடவாளத்தின் மேற்கில் முத்தழகு அம்மை சத்திரம். வாராப்பூருக்குக் கிழக்கில் நல்லகுட்டிராயன் சத்திரம் முதலான சத்திரங்கள் இருந்திருப்பதை 1813 ஓலைச்சுவடிப் புள்ளிவிவரக் கணக்கு மூலம் அறியமுடிகிறது.
வெலிங்டன் பிரபு டிசம்பர் 1933இல் வருவதற்கு முன்பே ஆங்கிலேய ஆளுநரின் முகவர் மற்றும் விருந்தினர்கள் வருகையின் போது தங்கிக் கொள்ள அழகிய விருந்தினர் மாளிகை புதுக்கோட்டையில் இருந்துள்ளது.
தஞ்சாவூருக்கும் மதுரைக்கும் பயணம் செய்த ஆங்கிலேயர்கள் புதுக்கோட்டை வந்து தங்கிச் சென்றுள்ளனர். மேலும், ஆதனக்கோட்டை, நார்த்தாமலை, மிரட்டுநிலை ஆகிய ஊர்களிலும் பயணியர் ஓய்வு இல்லங்கள் இருந்துள்ளன (A MANUAL OF THE PUDUKKOTTAI STATE P. 247) தற்காலத்தில் ஆதனக்கோட்டைக்கு முன்னால் நெடுஞ்சாலையின் மேல்புறத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைப் பயணியர் மாளிகை இதன் தொடர்ச்சி எனலாம்.
தொண்டைமான்களுக்கு ஆதனக்கோட்டை முக்கியமான கேந்திரப் பகுதியாக இருந்துள்ளது. ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றியபின் புதுக்கோட்டை மீது படையெடுத்தார். ஹைதரின் படையை ராய ரகுநாதத் தொண்டைமானின் (1769-1789) படை ஆதனக்கோட்டை அருகே தோற்கடித்தது. ஆதனக்கோட்டை புதுக்கோட்டையின் வடக்கு எல்லையாக/ நுழைவாயிலாக(TOLL GATE) இருந்துள்ளது.
தொண்டைமான்கள் காலத்தில் புதுக்கோட்டை நகரம் சுமார் இரண்டரை மைல் (4 கி.மீ) சுற்றளவில் மதில்கள் சூழ வாடி எனப் பெயரிடப்பட்ட காவல் வாயில்களுடன் விளங்கியதாகத் தெரிகிறது. இதனால், புதுக்கோட்டை நகர எல்லைக்கு வெளியே சமஸ்தானத்து முக்கியஸ்தர்கள், ஆங்கிலேயர்/படையினர் பயன்படுத்தும் பாதைகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேட்டுப்பட்டி கேட் என்னும் பெயர் புதுக்கோட்டை நகர எல்லையின் கிழக்கு நுழைவாயிலைக் குறிப்பதாக உள்ளது.
பாதையின் பயணம்
புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றில் தஞ்சாவூருடன் தொடர்புடையதாக நான்கு பாதைகள் தெரியவருகின்றன. பெருமா நாட்டில் பிரான் மலையில் இருந்து தஞ்சை நகரத்துக்குப் போகிற பெரும்பாதை (ஏடு16), தஞ்சாவூரிலிருந்து கறம்பக்குடி (கரம்பைக்குடி), பிலாவிடுதி (பிலாவடி விடுதி) வழியாக தெற்கே சேதுபாவா சத்திரம் போகும் பாதை (ஏடு 1479 ப.1), புதுக்கோட்டையிலிருந்து பெருங்களுர் வழியாக வடக்கே தஞ்சை நகரம் போகும் பாதை, வல்ல நாட்டில் தெற்கே இருந்து வடக்கே தஞ்சை நகரம் போகும் பெரும்பாதை (ஏடு 1479 ப.2) ஆகிய நான்கும் ஒலை ஆவணங்கள் மூலம் தெரியவருகின்றன.
புதுக்கோட்டையில் இருந்து வடக்குவாடி மார்க்கமாக முள்ளுர் வந்து தஞ்சை நகரம், கறம்பக்குடி போகும் ரஸ்தா பெரும்பாதை என வேறோர் ஒலையில் (ஏடு 1595 ப.1) ஒரு பாதை குறிப்பிடப்படுகிறது. இதுவும் மேலே சொல்லப்பட்ட இரண்டாவது பாதையும் ஒரே வழியைக் குறிப்பன.
பிரான்மலையில் இருந்து பொன்னமராவதி – கொப்பனாப்பட்டி – காரையூர் விலக்கு – தேனிமலை – அரசமலை – குமரமலை – பெருமாநாடு – திருவப்பூர் - திருக்கோகர்ணம் வழியாகப் புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையை அடைந்து தஞ்சாவூர் செல்லும் வகையில் பெருமாநாடு சாலை அமைந்திருக்க வேண்டும்.
வல்ல நாட்டில் இம்மனாம்பட்டிக்கு (இம்பான்டான் பட்டி) வடக்கில் 1313 வாக்கில் சோழன் கரிகாலனால் கட்டப்பட்ட ஒரு கோட்டை இருந்துள்ளது (ஓலை 1429 ப1). இது அல்லாமல் இம்மனாம்பட்டிக்கு வடக்கில் வேப்பங்குடிக்கு மேற்கில் பொற்பனைக்கோட்டை (பொற்பளையாங்கோட்டை) மைந்திருந்ததாகப் (ஓலை 1429 ப.2) பதிவு உள்ளது.
தஞ்சாவூர் - ரகுநாதபுரம் - கறம்பக்குடி – ஆலங்குடி – திருவரங்குளம் - வல்லத்திராக்கோட்டை – மிரட்டுநிலை – அரிமளம் பாதையே சோழர்கள் தஞ்சாவூரிலிருந்து வல்ல நாட்டிற்கு வந்து போகப் பயன்படுத்திய வல்லநாட்டுப் பெரும்பாதை எனலாம்.
புதுக்கோட்டை – பெருங்களுர் வழிப் பாதையும் அரிமளம் - தஞ்சாவூர் வல்லநாட்டுப் பாதையும் பெரும்பாதைகளாக இருந்துள்ளன. இவ்விரு பெரும்பாதைகளுக்கும் இடையில் புதுக்கோட்டை நகருக்கு வெளியே புறவழிச் சாலையாக ஒரு பாதை இருந்திருக்க வேண்டும் என்பது ஏற்கனவே மேடடுப்பட்டி மைல்கல் நமக்குச் சொன்ன சேதி.
ராசராசன் பெருவழி
Thirukkattalai temple southwall Inscription |
ராசராசன் பெருவழிக்குச் கிழக்கில் இருந்த நிலம் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, ராசராசன் பெருவழி திருக்கட்டளை தான நிலத்திற்கு மேற்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். மேற்குப்பக்கம் என்றால் அது தெற்கு வடக்காகச் செல்லும் வழியாகவே இருந்திருக்கும்.
மேட்டுப்பட்டி கேட் என்னும் இடம் முன்பு திருமலைராய சமுத்திரம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. இன்றும் ஆவணங்களில் இப்பெயரே காணப்படுகிறது. கபில வள நாட்டு மாகாணத்திற்கு உட்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. மேட்டுப்பட்டி மைல்கல் காட்டும் மேட்டுப்பட்டி – ஆதனக்கோட்டை வழித்தடமே திருக்கட்டளைக்கு மேற்கில் செல்வதாகக் குறிப்பிடப்படும் ராசராசன் பெருவழியாக இருக்க வேண்டும்.
ஆகவே அப்பெருவழியை கண்டறியும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத்தலைவர் திரு.ராசி.பன்னீர்செல்வன், சுற்றுச்சூழல் அலுவலர் திரு.மதி. நிழற்பட வல்லுநா திரு. மணிகண்டன் ஆகியோரின் துணையுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டேன்.
மேட்டுப்பட்டி கேட்டில் இருந்து நேராக வடக்கு நோக்கி வந்தால் திருக்கட்டளை தார்ச் சாலையில் புதுக்குளம் தாண்டி நகராட்சிக் குப்பைக் கிடங்கிற்குக் கிழக்கு – திருக்கட்டளைக்கு மேற்கில் கலசக்காட்டில் வந்து சேர்கிறது (1 கி.மீ) தொல்லியல் துறை கம்பிவேலி அமைத்துப் பாதுகாத்துவரும் முதுமக்கள் தாழிகள், பெருங்கற்படை சமாதிகள் முதலானவற்றை இங்கு பார்க்கலாம். இப்பகுதியைக் கடந்து வடகிழக்கில் காட்டுப்பாதையில் சென்றால் பெயர்காண இயலாத கலச (மங்கல)க் கோயில் (0.5 கி.மீ) வருகிறது.
கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் உள்ள காட்டு வழியில் சென்றால் போஸ் நகர் வழியாக வரும் மணிப்பள்ளம் தார்ச்சாலையில் மணிப்பள்ளத்திற்குக் கிழக்கில் வந்து சேர்கிறது (1.5 கி.மீ).
இங்கிருந்து தார்ச்சாலைக்குச் குறுக்கே கடந்து காட்டு வழியில் வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும். பின்பு வலது புறம் திரும்பி வடகிழக்கில் செல்லும் காட்டு வழியில் பயணிக்க வேண்டும். காட்டுப்பாதை முடியும் இடத்திற்கு வந்தால் தார்ச்சாலையில் அம்பாள்புரம் (3. கி.மீ) வந்து சேரும்.
அங்கிருந்து வடவாளம் -புதுப்பட்டி சாலையில் அம்பாள்புரம் விலக்கினை (1 கி.மீ) அடையலாம். அங்கிருந்து வடவாளம் (0.5 கி.மீ) செல்ல வேண்டும்.
வடவாளத்தில் காயாம்பட்டி பிரிவிற்குக் கிழக்கே சாலையின் இடது பக்கத்தில் ஜல்லிக்கல் சாலையில் பிரிந்து செல்ல வேண்டும் இந்தச் சாலை குளக்கரை வழியாகச் செல்கிறது. குறிப்பிட்ட தூரம் வரை வாகனத்தில் போகலாம். இடையில் குறுக்கிடும் காட்டாற்றைக் கடந்து செல்ல இப்போது பாலம் ஏதும் இல்லை. முன்காலத்தில் இருந்திருக்கக் கூடும். அங்கிருந்து நடந்து சென்றால் சின்னையா சத்திரத்தின் தென்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலை அடையலாம். இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் சின்னையா சத்திரம்தான் (1 கி.மீ).
அங்கிருந்து மைல்கல் இருக்கும் தூரம் 1 கி.மீ ஆதனக்கோட்டை 9..5 கி.மீ சேர்ந்தால் 20 கி.மீ வருகிறது. இந்த இடைவழியே பொருத்தமாகத் தோன்றுகிறது. இது அல்லாமல் கிழக்கில் போகும் காயாம்பட்டி வழியில் சென்றால் 24 கி.மீ மேற்கில் போகும் இச்சடி வழியில் 22 கி.மீ வருகிறது.
காலப்போக்கில் ஏற்பட்ட ஊர்களின் பெருக்கம், விரிவாக்கம், காட்டின் எல்லைத் திருப்பம் முதலியவற்றால் சில இடங்களில் பாதை மறைந்துவிட்டது. மாற்றுப்பாதையே முதன்மையாகிவிட்டது. பழைய பாதை என்பதால் அங்கங்கே தொடர்ச்சி அறுபட்டும் காட்டுப் பகுதிகளில் தைல மரங்களை வெட்டிக் கொண்டுபோவதற்கான இணைவழிக்ள மிகுந்தும் காணப்படுகிறது. இதனால் வழிதவற நேர்கிறது.
மேற்கண்ட காரணங்களால் நான்கு சக்கர வாகனம் செல்லும் தார்ச்சாலையில் தூரத்தைக் கணக்கிட்டதற்கும் இருசக்கர வாகனத்தில் சென்று கணக்கிட்டதற்கும் இடையே ஏற்த்தாழ 6 கி.மீ வேறுபாடு வந்தது. இருசக்கர வாகனத்திற்கு பதிலாகக் கால்நடையாகச் சென்று கணக்கிட்டால் இன்னும் சுமார் 3 – 4 கி.மீ குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய சாலைகள் ஊருக்குள் புகுந்து வருவதால் தூரத்தைக் கணக்கிடும் போது மாறுபாடு ஏற்படுகிறது. தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அளவிட்டால் மேட்டுப்பட்டி – ஆதனக்கோட்டை 16 கி.மீ என்னும் கணக்கீடு சரியாகவே இருக்கும்.
நாயக்கர் காலத்தில் கார்குறிச்சி (திருக்கட்டளை), சிங்கமங்கலம் முதலான பகுதிகளில் படைகள் தங்கி இருந்ததாகக் கல்வெட்டுகள் (711,683) தெரிவிக்கின்றன. தொண்டைமான்கள் புதுக்கோட்டை நகரைப் புதிதாக அமைத்த பின்பு புதுக்கோட்டை, பொற்பனைக்கோட்டை முதலான ஊர்கள் படைகள் தங்கும் இடங்களாக இருந்திருக்கக் கூடும்.
மைல் கற்களில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட்டிருப்பது, திசைகள் காட்டும் அம்புக்குறி ஏதும் இல்லாதது ஆகியன ராணுவ முக்கியத்துவம் உடைய பாதை அல்லது குறிப்பிட்ட வகையினர் மட்டுமே பயன்படுத்திய பாதை என்பதைக் காட்டுவதாக அமைகிறது. ஆங்கிலேயத் தளபதிகள் இந்த புதுக்கோட்டை மேட்டுப்பட்டி சாலையைப் பயன்படுத்திக் கூழையான் விடுதியில் புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் இணைந்து ஆதனக்கோட்டை சென்றிருக்கச் சாத்தியம் உள்ளது.
மேட்டுப்பட்டி மைல்கல் காட்டும் ஆதனக்கோட்டை வழித்தடமே திருக்கட்டளைக் கோயில் கல்வெட்டு குறிப்பிடும் ராசராசன் பெருவழியாகும். இந்தப் பெருவழி இன்னும் பழமையின் அடையாங்களோடுதான் உள்ளது. பெருங்கற்காலச் சின்னங்கள், சோழர்கள், தொண்டைமான்கள் முதலானோரின் கோயில்கள், கோட்டை கொத்தளங்கள், சத்திரங்கள், ஆங்கிலேயர் தங்கும் விருந்தினர் மாளிகைகள் என வரலாற்றுச் சின்னங்கள் நீள்கின்றவழியெங்கும் உள்ளன. எனவே, இடைக்காலத்திய ராசராசன் பெருவழி ஆங்கிலேயர் காலத்தில் அடைந்த மாற்றம் வரலாற்றில் ஏற்றுச்கொள்ளக் கூடியதே ஆகும்.
இவை போன்ற மைல்கற்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பிற பகுதிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. அக்கற்கள் வெளிப்படுத்தும் வழித்தடங்கள் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கக் கூடும்.
இவை போன்ற மைல்கற்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பிற பகுதிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. அக்கற்கள் வெளிப்படுத்தும் வழித்தடங்கள் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கக் கூடும்.
மிக்க நன்றி : நடைநமது (nadainamathu.blogspot.com )