இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் மந்திரியாக இருப்பவர் செந்தில் தொண்டைமான். இவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆகும். இவருடைய பெற்றோர் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் வசித்து வருகிறார்கள்.
இலங்கையில் சிங்களர்களின் கடும் எதிர்ப்பை மீறி கம்பன், திருவள்ளுவர், கிருபானந்த வாரியார், பாரதியார், பாரதிதாசன் என 140 பள்ளிகளுக்கு தமிழில் பெயர்கள் சூட்டி அரசாணை வெளியீடு
இலங்கையில் இந்திய தமிழர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய, சிங்களரின் கட்டுப்பாட்டிலுள்ள மலையக பகுதியான ஊவா மாகாணத்தில் தமிழ் மாணவர்கள் படிப்பதற்காக 172 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 140 பள்ளிகளில் முழுக்க, முழுக்க தமிழ் மாணவர்கள் படித்த போதிலும் பள்ளியின் பெயர் மட்டும் சிங்கள மொழியிலேயே இருந்தது.
இவற்றுக்கு தமிழ் பெயரைச் சூட்ட வேண்டும் என கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர். போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், ஆட்சி அதிகாரம் சிங்களர்கள் கைவசம் இருந்ததால், அவர்கள் இந்த கோரிக்கையை செயல்படுத்த மறுத்து வந்தனர்.
இந்த சூழலில், தற்போது ஊவா மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் தமிழரான செந்தில் தொண்டமான், சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி 140 பள்ளிகளுக்கு இந்து கடவுள்கள், தமிழ் புலவர்கள், சான்றோர் பெருமக்களின் பெயரைச் சூட்டி அரசாணையை வெளியிட்டிருக்கிறார். அதில் கம்பன், திருவள்ளுவர், கிருபானந்த வாரியார், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்டோர் பெயர்களுடன் நம்ம ஊர், வைத்தீஸ்வரன் கோயிலை நினைவூட்டும் வகையில் வைத்தீஸ்வரா தமிழ் வித்யாலயம் எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை சிதைத்து சிங்களத்தை திணிக்கும் செயலில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் நிலையில், சிங்களர்கள் ஆளக்கூடிய பகுதியிலேயே, சிங்கள பெயர்களை நீக்கிவிட்டு தமிழ் பெயர்களை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.