கிபி 1639 ல் புதுக்கோட்டை வெள்ளாற்றின் வடக்கே உள்ள பகுதிகளை கைப்பற்றிய ஆவுடைய ரகுநாத தொண்டைமானின் மகனான ரகுநாதராய தொண்டைமான் கிபி 1641 ல் பிறந்தார்.
இருநூறாண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட நீர்நிலைகள், வீதிகள், நகர அமைப்புகள், கல்லூரி, பாடசாலைகளும், நூல் நிலையங்களும் அமைந்த ஒரு நவீன நகரமாக இருந்த புதுக்கோட்டை என்ற நாடு உருவாக காரணமாக இருந்தவர் மன்னர் ரகுநாத ராய தொண்டைமான்.
இம்மன்னர் தொடங்கி வைத்த புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சி 263 ஆண்டுகள் இம்மண்ணில் தன்னிகரில்லா ஒரு ஆட்சியாக இருந்தது.
18ஆம் நூற்றாண்டு வரையிலும், இவர்களது ஆட்சி பகுதிகள் தொண்டைமான் நாடு என்றும், காடுகள் தொண்டைமான் காடுகள் என்றும்தான் அழைக்கப்பட்டு வந்தன.
புதுக்கோட்டை தென்பகுதி பாண்டியப் பேரரசிலும் வடபகுதி சோழ பேரரசிலும் உட்பட்டிருந்தன. 1334 ல் சுல்தானின் கீழும், பிறகு விஜய நகர பேரசின் கீழும், பிறகு 1640 தொண்டைமான் ஆட்சி மரபு ஏற்படும் வரை தென்பகுதி மதுரை நாயக்கர் ஆட்சியிலும், கிழக்கு பகுதி தஞ்சை நாயக்கரின் கீழ் இருந்தது.
மன்னர் ரகுநாத ராய தொண்டைமான், தனது செயற்கரும் செயல்களால் தந்தையை விஞ்சிய தனயனாக விளங்கினார். கி்.பி 1661 ஆம் ஆண்டு இவரது தந்தை இறந்த பிறகு தஞ்சை, மதுரை நாயக்கர் மற்றும் சேதுபதி மன்னர்களிடம் படைதலைவராக இருந்தார்.
ரகுநாதராய தொண்டைமான் விஜயநகர நாயக்கரின் படையுடன் சேர்ந்து பல போர்களில் கலந்துகொண்டு தனது வீரத்தை வெளிக்கொணர்ந்தார். இதன் மூலம் தனது செல்வாக்கை அவர் தக்கவைத்துக் கொண்டார். வீர தீர செயல்கள் மூலம் குறுகிய காலத்தில் மிக உயர்ந்த புகழை அடைந்தார்.
இராமேஸ்வரம் செல்லும் யாத்திரிகர்களைத் துன்புறுத்திய கொள்ளயரை அடக்கியதால், ரகுநாதராய தொண்டைமானின் வீரச்செயலைப் பாராட்டி, யானை, குதிரை, பெரிய ராமா பாணம் என்னும் விதுடன்வாளும், விலையுயர்ந்த வைர மாலை ஒன்றையும், "விஜய " என்ற பட்டமும் அப்போது தஞ்சையை ஆண்ட அச்சுத விஜய ராகவ நாயக்கர் வழங்கினார். இன்றும் புதுக்கோட்டை அரச குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ராணி மங்கம்மாள் மன்னர் கிழவன் சேதுபதி மற்றும் சில பாளையக்காரர்களின் உதவியை நாடினார். இந்த போரில் இரகுநாத ராயத் தொண்டைமான் பெரும் பங்கு எடுத்துக்கொண்டார்.
கிபி 1682 ல் சொக்கநாத நாயக்கர் காலத்தில், திருச்சியை நாயக்கர் ஆண்டபோது, மராத்தியர்கள் திருச்சி கோட்டையை பிடிக்க திடீர் தாக்குதல் நடத்தினர். ராணி மங்கம்மாள், ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். அந்த போரில் இவர்களின் வீரத்தை கண்டு மெச்சி, அம்புநாட்டு கள்ளர்களை ரகுநாதராய தொண்டைமான் தலைமையில் திருச்சியின் முக்கிய 12 பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்.
ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டார்.
மருங்காபுரி பூச்சிநாயக்கரின் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்:- ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டுள்ளதால், " ஸ்ரீரங்கம் திருவானைக்கால் பகுதிகளில் உள்ள கடைகள் ஒரு காசும், ஒவ்வொரு வீடும் வருடத்திற்கு 2 பணமும்,பெரிய கிராமங்கள் வருடத்திற்கு 10 கலம் நெல்லும், சிறிய கிராமங்கள் வருடத்திற்கு 5 கலம் நெல்லும் ரகுநாதராய தொண்டைமானுக்கு அளிக்க கடமைபட்டுள்ளனர்.
இவ்வாறு தஞ்சை நாயக்கர், திருச்சி நாயக்கர் மத்தியில் தனது வீரத்தால் பெரும் செல்வாக்கை பெற்றார் ரகுநாதராய தொண்டைமான், இதே காலத்தில் நாகலாபுரம் பாளையக்காரர் மற்ற நாயக்க பாளையங்களோடு சேர்ந்து கொண்டு, மதுரை நாயக்கருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார். நாயக்கர் தொண்டைமான்களின் உதவியை நாடினர். ரகுநாதராய தொண்டைமான் மற்றும் நமண தொண்டைமான் தலைமையிலான படை நாகலாபுரம் நோக்கி சென்றது. கலக்ககாரர்களை ஒடுக்கி, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட குதிரை, யானை, மற்ற போர்கருவிகளுடன் திருச்சி வந்தடைந்தனர் தொண்டைமான்கள்.
நமண தொண்டைமானுக்கு குளத்தூர் பாளையம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அம்பாரி யானை, ஆடல் மகளிர், முரசு, நரகஜ மேளம், கருடகொடி, அனுமர்கொடி, போர் முரசுகள், கண்ட பேருண்ட கருவி முதலியவை அளிக்கப்பட்டது. நமண தொண்டைமான் தன்னை, ரங்க முத்து கிருஷ்ண வீரப்ப நமண தொண்டைமான் என அழைத்துக்கொண்டார். (General history of pudukkottai state R.aiyar 1916 page 124,136)
மன்னர் கிழவன் சேதுபதி, இரகுநாத ராய தொண்டைமானையும், அவரது தம்பி நமண தொண்டைமானையும் அழைத்து தனது படைப்பிரிவுகளுக்குத் தலைவராக்கினார். கிழவன் சேதுபதிக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களை ரகுநாதராய தொண்டைமான் ஒடுக்கினார். கிழவன் சேதுபதியின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றார்.
மன்னர் கிழவன் சேதுபதியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தார் தஞ்சை நாயக்க மன்னர்.
மன்னார்குடியில் கட்டிவைக்கப்பட்டிருந்த தஞ்சை நாயக்கரின் பட்டத்துயானையை கைப்பற்றி, கறம்பக்குடிக்கு கொண்டுவந்தார் தொண்டைமான். அங்கிருந்து ராமநாதபுரம் மன்னரிடம் கொண்டு சேர்த்தார். தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய சேதுபதி, தொண்டைமானுக்கு மரியாதைகளை அளித்தார்.
எட்டயபுர பாளையக்காரரான நாயக்கர் வழியினர், கிழவன் சேதுபதிக்கு கட்டுப்படாமல் ஆட்சி செய்ய முயன்றனர். இவரை அடக்க படைதிரட்டி சென்ற ரகுநாதராய தொண்டைமான் எட்டயபுர பாளையக்காரரின் தலையை கொய்து கிழவன் சேதுபதியின் காலடியில் வைத்தார்.
இராமநாதபுர மன்னரின் பட்டத்து யானைக்கு ஒரு சமயம் மதம் பிடித்து, கட்டுபாடு இழந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இச்சமயத்தில் நமண தொண்டைமான் மிகுந்த வீரத்துடன் போரிட்டு பட்டத்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தார். (General history of pudukkottai state R.aiyar 1916 page 124)
ரகுநாதராய தொண்டைமானின் போர் உதவிகளால் மணம் மகிழ்ந்த கிழவன் சேதுபதி தொண்டைமானுடன் மண உறவில் இணைந்தார். ரகுநாதராய தொண்டைமானின் தங்கையான கதலி நாச்சியாரை தர்மபத்தினியாக ஏற்றார் (பொ.ஆ 1710 மன்னர் கிழவன் சேதுபதியுடன் உடன்கட்டை ஏறியவர் என்பது குறிப்பிடத்தக்கது)
பல்லவராயரின் அரசியல் போக்கில் மாறுதல் ஏற்பட்டு, தஞ்சை அரசர் பக்கம் சாய்வதாகவும் சேதுபதி செவிகளுக்கு ஒரு செய்தி எட்டிற்று. அதனால் அவர் அரசு பறிக்கப்பட்டது. அப்பகுதி கிழவன் சேதுபதியால் இரகுநாதராயத் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது.
கிழவன் சேதுபதியின் ஆதிக்கம் திருமயம் வரை இருந்தது. வெள்ளாற்றுக்கு தெற்கே கிழவன் சேதுபதி மேலாண்மை ஏற்ற பல்லவராயர் பகுதிகள் கிபி 1686 ல் சேதுபதி உதவியால் தொண்டைமான் பெற்றார். கிபி 1686 ல் வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள பல்லவராயர் பகுதிகள் கிழவன் சேதுபதி உதவியுடன் தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது என " இளந்தாரி அம்பலக்காரர்" சுவடிகள் கூறுகிறது.General history of pudukkottai state R.aiyar 1916 page 126)
வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகள் விசயநகர மன்னர் ஸ்ரீரங்கராயர் மேலாண்மை ஏற்ற பல்லவராயர் கையில் இருந்து தொண்டைமான் ஆதிக்கத்திற்கு வந்தது.
ரகுநாதராய தொண்டைமான் மன்னருக்கு மொத்தம் ஆறு மனைவிகள். அவருடைய சில பிள்ளைகளின் பெயர்கள்
1) பெரிய ராய தொண்டைமான்,
2) விஜய தொண்டைமான்,
3) முத்து விஜய தொண்டைமான்,
4) திருமலை ராய தொண்டைமான்,
5) சின்னராய தொண்டைமான்
6) ராஜகுமாரி பெரியநாயகி அம்மாள் ஆயி
விஜயநகர பேரரசின் பலம் குன்றிய நிலையில் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களும் தங்களின் செல்வாக்கை தமிழகத்தில் வலுப்படுத்திக் கொள்ள விரும்பிய போது, மராட்டியர் தங்களது ஆளுகைக்குத் தகுந்த பகுதியை இந்தப் பகுதியில் தேடிக்கொண்டிருந்தனர். மராட்டியர் 1674ல், தஞ்சை நாயக்கர்களிடமிருந்து கைப்பற்றி 1855 வரை அரசாண்டனர்.
கிபி 1700 ல் திருச்சி நாயக்கர்கள் தஞ்சையின் மேல் போர் தொடுத்தனர். இப்போரில் தஞ்சை மராத்தியருக்கு எதிராக இரகுநாத ராய தொண்டைமான் போரில் பங்கு கொண்டு மராத்தியரை வீழ்த்தினார். போரின் வெற்றியை அடுத்து தஞ்சையின் திருக்காட்டுப்பள்ளி பகுதியை, கைப்பற்றிக்கொண்டார். தஞ்சை சமஸ்தானத்தின் விவசாயத்தில் முக்கிய பங்காற்றிய திருக்காட்டுப்பள்ளியை இழந்த தஞ்சை மராத்திய மன்னர், தொண்டைமானை பழி தீர்க்க தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
தஞ்சை மன்னன் மராத்திய தளபதி, ஹிந்து ராவு தலைமையில் பெரும்படையை புதுக்கோட்டை நோக்கி அனுப்பினான். மராத்திய படைகள் பேரையூரில் முகாமிட்டு தாக்குதலுக்கு தயாராயிருந்தனர். சேதுபதி மன்னரின் படைகள் தளபதி இந்திரத்தேவன் தலைமையில், திருமயம் வழியாக புதுக்கோட்டையை அடைந்தனர். தஞ்சை, மராத்திய படைகளுடன் பெருமளவிலான முஸ்லீம் படைகளும், தொண்டைமானை தாக்க தயாராயினர்.
பெரும்படை கொண்டு கொண்டு தாக்கிய இந்திரத்தேவன், வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டைமான் படையை வீழ்த்தி, கவிநாடு கண்மாய் முதல் கடையக்குடி வரையிலான பகுதிகளை கைப்பற்றினார்.
முப்படையின் தாக்குதலையடுத்து, இரகுநாதராய தொண்டைமான், தன் படைகளுடன், கவிநாடு நோக்கி விரைந்தார். அவருக்கு உதவியாக அவரது மகன்கள் பெரிய ராய தொண்டைமான், விஜய தொண்டைமான், முத்து விஜய தொண்டைமான், திருமலை தொண்டைமான், சின்னராய தொண்டைமான் ஆகிய ஐவரும் போர்களம் விரைந்தனர்.
ஐந்து புதல்வர்கள் மற்றும் தன் படையின் உதவியோடு போரிட்ட ரகுநாதராய தொண்டைமான், போர்களத்தில் எதிரி படைகளை சூரையாடினார். மராத்திய படைகள் புறமுதுகு காட்டி ஒடியது. நாட்டில் நிலவிய பஞ்சம் தொண்டைமானின் வீரத்தை சிறிதும் குறைக்கவில்லை. சேது நாட்டின் தளபதியான இந்திரத்தேவனின் உயிரை பறித்தார்.
பல யானைகள், குதிரைகள், பல்லக்குகள் மற்றும் பெருமளவிலான போர்கருவிகள் தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது. எதிரி படைகள் சிதறுண்டு ஒடி மறைந்தனர். பஞ்சத்தால் அவதியுற்ற மக்களை மேலும் இன்னலில் அகப்படாமல் ரகுநாதராய தொண்டைமான் காத்தருளினார்.
ஒரே சமயத்தில் இரு சமஸ்தான படைகள் மற்றும் முஸ்லீம் படைகளை எதிர்த்து போரிட்டு வென்ற தொண்டைமானின் வீரத்திற்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.
குமாரவாடி பாளையக்காரரிடம் இருந்து விராலிமலையை வென்றார். பூச்சி நாயக்கரை வதம் செய்து மருங்காபுரி பாளையத்தை இணைத்தார்.
பெரம்பூர், கத்தலூர், ஆவூர் பகுதிகளில் படையெடுத்து வென்று புதுக்கோட்டை உடன் இணைத்தார். பொன்னமராவதி பகுதியில் ஆட்சி செய்த பொம்மி நாயக்கரை வீழ்த்தி, கரிசல்பட்டு- வாராப்பூர் பகுதிகளை இணைத்தார்.
போரில் வெற்றிபெற்ற பகுதிகளை தன்வசமாக்கி தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டார்.
1717–1721 ஆகிய ஆண்டுகளில் நாயக்கராலும் அவரது முதல் அமைச்சர் நாரணப்ப ஐயராலும் மிக்க இடுக்கண்களுக் குள்ளான கிறித்தவர்களும், கிறித்தவப் பாதிரிமார்களும் புதுக்கோட்டையில் அடைக்கலம புகுந்து அன்புடன் ஆதரிக்கப்பட்டு தலைமுறைகள் வாழ்ந்து வந்தனர்.
மன்னர் ரகுநாதராய தொண்டைமான் அனைவரும் போற்றும் படியாகவும், புகழும் படியாகவும் புதுக்கோட்டை பகுதியை சிறப்பாகவும், எல்லா போர்களிலும் வெற்றியை மட்டுமே பெற்று அதாவது 90 வயதுக்கு மேல் ஒரு மாபெரும் மாவீர்ராக ஆண்டு வந்தார்.
இவருடைய பிள்ளைகளெல்லாம் மரித்துவிட்டமையால் இவர்தம் பேரன்களில் மூத்தவராகிய விஜயரகுநாதனுக்கு முடி சூட்டிவிட்டு 1730-ல் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.
குறிப்பு :
புதுக்கோட்டை மன்னர்கள் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், அவர்கள் மன்னராக உயர்ந்ததை பற்றி குறிப்பிடும்போது, ராம்நாடு மன்னர் கிழவன் சேதுபதி , பல்லவராயரிடம் இருந்த பகுதிகளை பறித்து தனது மச்சானாகிய ரகுநாதராய தொண்டைமானிடம் அளித்ததாக மேற்போக்காக எழுதியுள்ளனர். கிழவன் சேதுபதியின் ஆட்சியை குறிக்கும் கல்வெட்டுகள் எதுவும் வெள்ளாற்றுக்கு வடக்கே கிடைக்கவில்லை. கிபி 1600 வரை விசயநகர மன்னர்களின் மேலாண்மையை குறிக்கும் கல்வெட்டுகளும், அதற்கு பிந்தைய கல்வெட்டுகளில் மன்னர்கள் தன்னிச்சையாக ஆட்சி புரிந்ததை குறித்துள்ளனர். இதன் மூலம் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் சேதுபதிகளின் ஆதிக்கம் இருக்கவில்லை என தெளிவு பெறலாம்.
விஜயநகர பேரரசின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே முடிந்துவிட்ட போதிலும், தொண்டைமான்கள் கிபி 1805 ல் வெளியிட்ட செப்பேட்டில் கூட " ஸ்ரீரங்க தேவ மகாராயர் பிரதிராச்சியம் பண்ணியருளுகின்ற நாளில்" என குறித்து தங்களது நன்றியுணர்ச்சியை காட்டியுள்ளனர். நாயக்கர் மேலாண்மை பற்றியோ, கிழவன் சேதுபதியின் மேலாண்மையையோ எங்கும் குறிப்பிடவில்லை.