திங்கள், 26 ஜூன், 2023

தொண்டைமான் மன்னர்களின் அரசியல் கோட்டையாக திகழ்ந்த திருமயம் மலைக்கோட்டை




புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் உள்ளது. திருமயம் என்ற சொல் திருமெய்யம் என்ற பெயரில் இருந்து வந்தது. திருமெய்யம் என்றால் உண்மையின் இருப்பிடம் என்று பொருள்.  வடமொழிச் சொல்லான சத்யஷேத்திரம் என்ற பெயரில் இருந்து உருவானது. இங்குள்ள கோட்டைக்கு அருகில் இருக்கும்  சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது. மஹா விஷ்ணு மெய்யர் என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் திருமெய்யம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


கிழக்குப்புறம் அகழப்பட்டுள்ள குடைவரையில் திருமெய்யர் என்ற பள்ளிக்கூட பெருமாள் கிடந்த நிலையில் காட்சி தருகிறார். பிற்காலத்தில் இக்குடைவரையை முத்தரைய வம்சத்தைச் சேர்ந்த பெருந்தேவி என்ற அரசி விரிவுபடுத்தி மண்டபம் கட்டியுள்ளார். இவரின் கல்வெட்டின் காலத்தைக் கருத்தில் கொண்டு இக்குடைவரையின் காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9ம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என தொிகிறது. தொடர்ந்து சோழ மன்னர்கள்,  பாண்டிய மன்னர்கள், விஜயநகர அரசர்கள், சூரைக்குடி சிற்றரசர்களான பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள், பிறகு ராமநாதபுரம் சேதுபதிகள் 16, 17 நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். சேதுபதி மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட இப்பகுதியை பல்லவராயர்களும், பின்னர் 1636-ஆம் ஆண்டு தொண்டைமான் மன்னர்களும் ஆண்டனர்.


மிகவும் பழமையான கோட்டைகளில் திருமயம் கோட்டையும் ஒன்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இந்த கோட்டையின் கிழக்கு சுவர் பகுதியில் கிபி 12 (அ) 13ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் படியெடுத்து வெளியிடப்பட்டது.




அதில் கள்ள பற்றுள் தடிக்கு தேவர் கன்மி கண்கானி என வருகிறது. அதாவது கள்ளர் பற்றில் தடிக்கு தேவர் ஊழியர் கண்கானியின் நிலம் விற்றதாக தெரிகிறது.

இந்த கல்வெட்டின் காலம் மூலமாக திருமயம் கோட்டையின் காலமும் அதன் பழமையும் நன்றாக தெரிகிறது. 

இந்த கோட்டையில் சிவனுக்கும், திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உள்ளன. இது  ஆழ்வார்களால் பாடல்பெற்ற தலம். இங்கே இசை கல்வெட்டுக்கள் உள்ளது.  வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்புமிக்கது. வரலாற்று சின்னமான இக்கோட்டை இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.





இலக்கியங்களிலும் புராணங்களிலும் இவ்வூர் திருமெய்யம் என்று அழைக்கப்படுகிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தின் சத்தியமூர்த்திப் பெருமாளைப் புகழ்ந்து திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் பாடியுள்ளார். ஏழு சத்தியப் பெருமைகளான சத்தியமூர்த்தி, சத்யகிரி விமானம், சத்திய ஷேத்திரம், சத்தியபுரம், சத்யகிரி, சத்தியதீர்த்தம், சத்தியவனம் ஆகிய சிறப்புகளைக்கொண்டது இவ்வூர். வடமொழியில் சத்யஷேத்ராம் என்றும் தமிழில் திருமெய்யம் அழைக்கப்படுகிறது.

கிழவன் சேதுபதியின் காலத்தில் இந்த ஊர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம். ராமநாதபுரத்துக்கு எல்லையாக திருமயம் கோட்டை இருந்துவந்துள்ளது. எதிாிகளிடமிருந்து பாதுகாக்க கோட்டையில் பிரமாண்ட பீரங்கிகள் வைத்து காத்து வந்துள்ளார்.

கிழவன் சேதுபதி பின் சேதுபதி தாண்டத்தேவன் என்பவன் ஆட்சிபொறுப்பை ஏற்க்கொண்டதும் கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கருக்கும், தாண்டத் தேவனுக்கும் அரசுரிமை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு போர் ஏற்பட்டது. இந்த போரில் புதுக்கோட்டை மன்னரின் உதவியால் வெற்றி பெற்ற தாண்டத்தேவன் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னருக்கு திருமயம் கோட்டையை வழங்கினான். இந்த கோட்டை 1723ம் ஆண்டு முதல் தொண்டைமான் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.



திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன. பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதில்கள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதில்கள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன. இந்த நுழைவாயில்களில்  கோட்டை காவல் தெய்வங்களாக காக்கப்பட்டுவந்தன. வடக்கு வாயிலை பைரவரும், தென்கிழக்கு வாயிலை கருப்பரும், தெற்கு வாயிலை அனுமான், சக்தி கனபதி ஆகிய தெய்வங்களும் காத்து வந்தன. இக்கோயில்களில் இன்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது.


உள்கோட்டையின் கருங்கல் மதிலைச் சுற்றி மேல் பகுதியில் கட்டப்பட்டுள்ள செங்கற்களால் ஆன கைப்பிடிச் சுவற்றில் ஆயுதங்களை வைத்து கொள்வதற்கும் ஆட்கள் ஒழிந்து கொள்வதற்கும் இடைவெளிகள் காணப்படுகின்றன. உள்கோட்டைக்குச் செல்லும் பாதி வழியில் வலது பக்கத்தில் பாறையில் குடையப்பட்ட அறை (குகை) காணப்படுகிறது. ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பாகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் 20 அடி நீளம் கொண்ட  மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இதற்கு பக்கத்தில் ஆழமான சுனை ஒன்றும் உள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன.


கோட்டையின் மொத்த சுற்றளவு 40 ஏக்கராகும். கோட்டையின் மேலிருந்து பார்த்தால் பல மைல்களுக்கு அப்பால் வருபவர்களை கூட அடையாளம் கண்டுகொள்ள முடியும். இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இங்குள்ள கோயில்களில் இருப்பது வெறும் சிற்பங்கள் மட்டும் இல்லை. இதில் உயிரோட்டமுள்ள கதையை சித்தரித்துள்ளனர் சிற்பிகள். வரலாற்று சிறப்பு மிக்க திருமயம் கோட்டை தொண்டைமான் மன்னர்களின் அரசியலுடன் அதிகம் தொடர்புடையதாகும்.

தற்போது தொல்லியல் துறை கட்பாட்டில் உள்ள இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோட்டைக்கு வெளிநாட்டினர் அடிக்கடி சுற்றுலா வந்து செல்வது வழக்கம். இதேபோல் இந்த கோட்டையில் அவ்வப்போது  சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

நன்றி : திரு. சோழபாண்டியன், ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்