திங்கள், 26 ஜூன், 2023

17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையின் அரசியல் நிலை





கிபி 1686 ல் புதுக்கோட்டையின் பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றிய ரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். புதுக்கோட்டையில் பல்லவராயர் ஆட்சி செய்த பகுதிகள் பல்லவராயன் சீமை என்றே அழைக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் இரகுநாதராய தொண்டைமான் ஆட்சி அமைத்த பொழுது இன்றய புதுக்கோட்டை பகுதிகள் முழுவதும் சமஸ்தான எல்லையில் அடங்கவில்லை. புதுக்கோட்டையை சுற்றியிருந்த பல பகுதிகளில் பல குறுநில தலைவர்களின் ஆளுமையில் இருந்துள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த பிற அரசுகள் மற்றும் அவர்களின் அரசியல் நிலை குறித்து காண்போம்.

17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் மற்ற அரசுகள்:

கிபி 17 ஆம் நூற்றாண்டில் இன்றைய புதுக்கோட்டையின் பெரும்பான்மை பகுதி பல்லவராயர்களாலும், பிற குறுநில அரசுகளாலும் ஆளப்பட்டுள்ளது. 



பெருங்களூர் பல்லவராயர்கள்:-

தொண்டை மண்டலத்தில் இருந்து தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவருடன் புதுக்கோட்டையில் குடியேறிய பல்லவராயர்கள் கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையில் ஆதனக்கோட்டை, பெருங்களூர், வைத்தூர், திருக்கட்டளை, கலசமங்கலம், திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளை இவர்கள் ஆட்சி செய்துள்ளனர். இப்பகுதிகளில் இவர்களைப்பற்றிய பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. 



சிற்றம்பலக் கவிராயர் என்பவர் சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர் மேல் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா எனும் நூலை பாடியுள்ளார். இவரது காலம் கிபி 1650 ஆகும். இந்த காலகட்டத்தில் சிவந்தெழுந்த பல்லவராயர் ஆட்சி செய்த பகுதிகளாக, ஆலங்குடிநாடு, அமராபதிநாடு (பொன்னமராவதி), கடுவன்குடிநாடு ( விராலிமலை), செங்காட்டு நாடு, பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்மலை (திருமயம்), சந்திரலேகா நாடு, கொடுங்குன்ற நாடு (பிரான்மலை), திருக்கோளக்குடிநாடு மற்றும் கோனாடு. 



கிபி 1681 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு (968) , சிவந்தெழுந்த பல்லவராயர் ராச்சியம் பண்ணியருளுகையில் குடுமியான்மலை கோயிலுக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடுகிறது. இதுவே சிவந்தெழுந்த பல்லவராயர் பற்றி கிடைத்த கடைசி கல்வெட்டாகும். 



அறந்தாங்கி தொண்டைமான்கள் மற்றும் பாலைவன ஜமீன்:-



கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டை அறந்தாங்கி பாலையூரை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் என அழைக்கப்பட்டனர். அறந்தாங்கி தொண்டைமான்கள் வழி வந்தவர்கள் பாலையவன ஜமீன்களாக 20 ஆம் நூற்றாண்டுவரை ஜமீன்தார்களாக தொடர்ந்தனர். கிபி 1686 ஆம் ஆண்டை சேர்ந்த சங்குபட்டணம் செப்பேடு ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமான் ஆட்சி செய்யும்போது வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள நிலப்பகுதிகளை தானமாக அளித்துள்ளார். புதுக்கோட்டை யில் தொண்டைமான் ஆட்சி ஏற்பட்ட பிறகும் அறந்தாங்கி தொண்டைமான்கள் தனியரசு நடத்தியுள்ளனர். 

நகரம் ஜமீன்தார்கள்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை மராத்தியர்களால் உருவாக்கப்பட்ட நகரம் ஜமீன் கிபி 1735ல் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.(Manual of pudukkottai state vol 2 part 1 page 722)

வாராப்பூர் பாளையம் :-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை மராத்தியர்களால் ஜகநாத அய்யர் என்பவருக்கு வாராப்பூர் பாளயைம் அளிக்கப்பட்டது. கிபி 1735ல் வாராப்பூர் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.

கத்தலூர் பெரம்பூர் சிற்றரசர்கள்:-

விராலிமலை வட்டாரத்தில் அரசு செலுத்திய சிற்றரசர்கள் இப்பகுதியில் கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்துள்ளனர். 17 ஆம் நூற்றாண்டில் ஆவூர் பகுதியில் கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு பல உதவிகளை இவர்கள் செய்துள்ளனர். கிபி 1653ல் கள்ளர் நாடான கத்தலூரில் சர்ச் ஒன்று அமைக்கப்பட்டதாக பாதிரியார்கள் குறித்துள்ளனர். கிபி 1686ல் பெரம்பலூர் கத்தலூர் கள்ளர் ராசாக்கள் இப்பகுதியில் மிசினரிகளுக்கு உதவியதாக பாதரியார் குறிப்புகள் உணர்த்துகின்றன. (Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society /By Susan Bayly)
இந்த பெரம்பலூர் கத்தலூர் மதுரை நாயக்கர் பாளையங்களில் ஒன்றாக இருந்ததாக oriental historical manuscripts vol 2 ல் உள்ள ஒலைச்சுவடி தகவல்கள் கூறுகின்றது. 






குமாராவாடி பாளையம்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் லக்கய நாயக்கர் என்பவர் குமாராவாடி பாளையத்தின் தலைவராக இருந்தார். பெரம்பலூர் கத்தலூர் அரசுகளிடம் இருந்து விராலிமலையை இவர்கள் கைப்பற்றினர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையங்களில் இதுவும் ஒன்றாகும். பிற்காலத்தில் 18 ஆம் நூற்றாண்டில் இப்பாளையம் நமண தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது. (Manual of pudukkottai state vol 2 part 1 page 724)

மருங்காபுரி பாளையம்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை பொன்னமராவதி வட்டம் அம்மன்குறிச்சியை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் மருங்காபுரி பாளையக்காரர்கள். புதுக்கோட்டை கல்வெட்டு 760/875 ஆகியவை இப்பகுதியில் ஆட்சியாளர்களான பூச்சி நாயக்கர்களை பற்றி குறிப்பிடுகிறது. கிபி 1691 வரை இவர்கள் இப்பகுதியில் ஆட்சி செய்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் நமண தொண்டைமானால் இந்த பாளையம் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. (Manual of pudukkottai state vol 2 part 1 page 725)



கரிசல்பட்டு வாராப்பூர் பாளையம்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் பொன்னமராவதி பகுதியில் இருந்த பாளையங்களில் கரிசல்பட்டு வாராப்பூர் பாளையமும் ஒன்றாகும். இப்பாளையத்தை பொம்ம நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இந்த பாளையம் பிற்காலத்தில் தொண்டைமான்களால் கைப்பற்றப்பட்டது.
(Manual of pudukkottai state vol 2 part 1 page 725)

இலுப்பூர் பாளையம் :-

திருமலை நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாளையங்களில் இலுப்பூரும் ஒன்றாகும். இப்பாளையம் காமாட்சி நாயக்கர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்ந பாளையமும் 18 ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாத தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது.
(Manual of pudukkottai state vol 2 part 1 page 725)


செங்கீரை காண்டுவர்கள்:-

திருமயம் பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர்கள் காண்டுவர் என அழைக்கப்பட்டனர். 17 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி கிழவன் சேதுபதியால் புதுக்கோட்டை தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது.

குளத்தூர் பாளையம்:-

ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர்(1682-1689) காலத்தில் நமண தொண்டைமானின் போர் சேவைகளை பாராட்டி முத்து வீரப்ப நாயக்கர் நமண தொண்டைமானை குளத்தூர் பாளையத்தின் தலைவராக்கினார். கிபி 1682 முதல் 1750 வரை குளத்தூர் பாளையம் நமண தொண்டைமான் வம்சத்தால் ஆளப்பட்டு பிறகு புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.


அம்புநாட்டு அரசு மக்கள் முதல் புதுக்கோட்டை மன்னர் வரை:-

தொண்டை மண்டலத்தில் இருந்து வெங்கடசால பல்லவராயர் என்பவருடன் தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவர் புதுக்கோட்டை கேரளசிங்கவளநாட்டு பகுதியில் குடியேறி, பிறகு அங்கிருந்து அம்புக்கோயிலில் குடியேறினர். இவர்களை அம்புக்கோயில் அஞ்சுக்குடி அரையர்கள் என 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டிய தேவர் காலத்து புதுக்கோட்டை கல்வெட்டு 522 குறிப்பிடுகிறது. 



புதுக்கோட்டை கல்வெட்டு எண் 458, வல்லப பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் ஆனை தொண்டைமான் என்பவர் அம்புக்கோயில் சிவனு கொடை அளித்த தகவலை தருகிறது. 

கிபி 1734 ஆம் ஆண்டை சேர்ந்த நாஞ்சியூர் செப்பேடு, அழும்பில் அரச மக்கள் என தொண்டைமான்களை குறிப்பிடுகிறது.

17 ஆம், நூற்றாண்டில் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயர் ராமேஸ்வரம் நோக்கி தள யாத்திரை சென்றபோது அவரது யானைகளில் ஒன்று மதம்பிடித்து கட்டுப்பாட்டை மீறி மக்களை தாக்க ஆரம்பித்தது. யானைகளை போருக்கு பயிற்றுவிப்பதில் வல்லவரான ராய தொண்டைமான் மதம் கொண்ட யானையை அடக்கி ஸ்ரீரங்கராயரின் முன் நிறுத்தினார். தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர் , தொண்டைமானுக்கு" ராய ரகுத்த ராய வஜ்ஜிருடு ராய மன்னிடு ராயர்" எனும் பட்டத்தை அளித்து , நிலங்களையும் அளித்தார். இவற்றோடு சேர்த்து,அம்பாரி யானை, முரசு யானை, சிங்கமுகபல்லக்கு, பெரிய மேளங்கள், உலா வரும்போது கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, " கண்டபெருண்டா( யானையை ஒரு பறவை வேட்டை ஆடுவது போல்)" எனும் உருவம் பதித்த பதாகைகளை தனக்கு முன் எடுத்துசெல்லும் உரிமை( அக்காலத்தில் இந்த உரிமை சிற்றரசர்களுக்கே உரியது), பகல் நேரங்களில் தனக்கு முன்னும் பின்னும் விளக்குகளை எடுத்து செல்லும் உரிமை, இவரது புகழை பாடிச்செல்ல கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, சிங்கக்கொடி, மீன் கொடி, கருடக்கொடி, ஹனுமர்கொடி பயன்படுத்தும் உரிமை, குதிரைகள் படைசூழ செல்லும் உரிமை, வெண்குற்ற குடை உயபோகப்படுத்தும் உரிமை என சிற்றரசருக்கே உரிய பல உரிமைகள் ஆவுடை ரகுநாத தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது. ( (General history of pudukkottai state R.aiyar 1916 page 120: ராய தொண்டைமான் அணுராக மாலை)
ஸ்ரீரங்கராயரின் உதவியுடனே ராய தொண்டைமான் ஒரு சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துவிட்டார் என்பதை தொண்டைமானுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் உணர்த்துகிறது.

கிபி 1639ல் பல்லவராயர்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த போது, ஸ்ரீரங்க ராயரின் உதவியோடு தொண்டைமான், புதுக்கோட்டை பகுதிகளை பல்லவராயர்களிடம் இருந்து கைப்பற்றியதாக கிபி 1819 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை அரண்மனை குறிப்பு உணர்த்துகிறது. (General history of pudukkottai state R.aiyar 1916 page 120)

கிபி 1661 வரை உயிரோடு இருந்த ராய தொண்டைமான், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோயிலில் உள்ள சிற்ப மண்டபத்தை கட்டியுள்ளார் என திருக்கோகர்ணம் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.( தமிழக தொல்லியல் ஆவண கல்வெட்டு) 


இவருக்கு அடுத்து பொறுப்பேற்ற ரகுநாதராய தொண்டைமான், தஞ்சை நாயக்கர், திருச்சி நாயக்கர் ஆகியோருக்கு போர் உதவிகள் செய்துள்ளார்.திருச்சிராப்பள்ளியின் தலைமை அரசுக்காவலராக பொறுப்பேற்றுள்ளார். சேதுபதி வேண்டுகோளின்படி, தஞ்சை நாயக்கரின் பட்டத்து யானையை கவர்ந்து வந்தார்.எட்டயபுரம் பாளையக்காரரின் தலையை கொய்தார்.

கிபி 1686 ல் வெள்ளாற்றின் தெற்கே உள்ள சில பகுதிகள் மட்டுமே பல்லவராயர் வசம் இருந்துள்ளது. சிவந்தெழுந்த பல்லவராயர் கண்டதேவியில் சிவபூஜையில் இருந்தபொழுது கிழவன் சேதுபதியின் ஆட்கள் பல்லவராயரை சந்திக்க அழைத்துள்ளனர். ஆனால் பூஜை முடியாமல் வர இயலாதென பல்லவராயர் கூறிவிட்டார். இதனால் சேதுபதி தனது மகனை அனுப்பி சிவந்தெழுந்த பல்லவராயரை கொன்றார். சிவந்தெழுந்த பல்லவராயரின் உதவியாளர்கள் சின்ன பங்காரு மற்றும் பெரிய பங்காரு சேதுபதியின் மகனை ஈட்டியால் குத்தி கொன்றனர்.

பல்லவராயர் இறந்தபின் அவர் ஆட்சி செய்த பகுதிகளுக்கு தொண்டைமானை பொறுப்பில் அமர்த்த எண்ணிய சேதுபதி , திருமயத்தில் இருந்த தர்மபிள்ளை என்பவருக்கு இளந்தாரி அம்பலம் என்பவர் மூலம் தகவல் அனுப்பினார். ஆனால் தர்மபிள்ளை தன்னால் 1000 பேர் வாழும் முனிசந்தை, செங்கீரை பகுதிகளை மட்டுமே தர இயலும் என்றார் . இதன்பிறகு சேதுபதி தனது மோதிரத்தை அத்தாட்சியாக, இளந்தாரி அம்பலம் மூலம் அளித்து வெள்ளாற்றுக்கு தெற்கே பல்லவராயர் ஆண்ட பகுதிகளை தொண்டைமானுக்கு அளிக்கவேண்டும் என கூறினார். அதன்படி திருமயத்தை சுற்றியிருந்த பல்லவராயரின் பகுதிகள் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது.

வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டியுள்ள பகுதிகளே, சேதுபதியால் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டதாக இளந்தாரி அம்பலக்காரர் கும்மி எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. (General history of pudukkottai state R.aiyar 1916 page 127)

புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்றை எழுதிய ராதாகிருஷ்ணன் ஐயர், வெள்ளாற்றுக்கு வடக்கே ஆட்சி செய்த பல்லவராயர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தனியாட்சி செலுத்தியதாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே சேதுபதியின் ஆதிக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளைப்பற்றிய கல்வெட்டு / ஒலைச்சுவடி/ செப்பேடுகளில் சேதுபதிகளை பற்றிய எந்த குறிப்புமே இல்லை என அவர் தெரிவிக்கிறார். 
(General history of pudukkottai state R.aiyar 1916 page 134)

தொண்டைமானின் படையெடுப்புகளும் சமஸ்தான விரிவாக்கமும்:-

* குமாரவாடி பாளையக்காரரிடம் இருந்து விராலிமலையை வென்றார்.
* பூச்சி நாயக்கரை வதம் செய்து மருங்காபுரி பாளையத்தை இணைத்தார்.
* பெரம்பூர், கத்தலூர், ஆவூர் பகுதிகளில் படையெடுத்து வென்று புதுக்கோட்டை உடன் இணைத்தார்.
*கிபி 1723 ல் சேதுபதி திருவுடையத்தேவருக்கு பின் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் பங்கேற்று திருமயத்தை பெற்று புதுக்கோட்டையுடன் இணைத்தனர்.
*பொன்னமராவதி பகுதியில் ஆட்சி செய்த பொம்மி நாயக்கரை வீழ்த்தி, கரிசல்பட்டு- வாராப்பூர் பகுதிகளை இணைத்தார்
*நகரம் ஜமீன், பாலையவன ஜமீன்களின் கணிசமான பகுதிகளை புதுக்கோட்டையுடன் இணைத்தனர்.
* வாராப்பூர் பாளையக்காரரை வீழ்த்தி, வாராப்பூர் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.
*கிபி 1749 ல் கீழாநிலை கோட்டை கைப்பற்றப்பட்டது.
* கிபி 1756 ல் வல்லநாடு தாலுக்காவில் 10 கிராமங்கள் இணைக்கப்பட்டது.
* கிபி 1770ல் பட்டுக்கோட்டையின் சில பகுதிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.
* கிபி 1781 ல் ஐதர் அலியுடன் நடைப்பெற்ற போரில் வென்று அறந்தாங்கியை இணைத்தனர்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 123) 

17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையின் அரசுகளாக பல்லவராயர்களும், அறந்தாங்கி தொண்டைமான்களும் இருந்துள்ளனர். இவர்களைத் தவிர சிறு பாளையங்களாக குமாரவாடி, கத்தலூர், பெரம்பூர், குளத்தூர், மருங்காபுரி, காண்டுவன், இலுப்பூர், கரிசல்பட்டு வாராப்பூர், நகரம் ஜமீன் ஆகியவும் 17 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இப்பகுதியில் ஆட்சி செய்துள்ளனர். 

அம்புநாட்டை ஆட்சி செய்துவந்த தொண்டைமான்கள், கிபி 1639ல் புதுக்கோட்டை வட பகுதிகளை பல்லவராயரிடம் கைப்பற்றி, பிறகு கிபி 1686ல் கிழவன் சேதுபதி அதிகாரம் செலுத்திய வெள்ளாற்றுக்கு தெற்கே இருந்த பகுதிகள் சேதுபதியால் தொண்டைமானாருக்கு அளிக்கப்பட்டது. 


கிபி 1686க்கு பிறகு விராலிமலை, மருங்காபுரி, பெரம்பூர், கத்தலூர், ஆவூர், திருமயம், பொன்னமராவதி, நகரம் ஜமீன், வாராப்பூர், குளத்தூர், கீழாநிலைக்கோட்டை , அறந்தாங்கி உட்பட பல பகுதிகள் தொண்டைமான் மன்னர்கள் போரிட்டு பெற்றுள்ளனர். 



தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்