வெள்ளி, 31 மார்ச், 2023

குந்தவை நாச்சியார் மதம் மாறினாரா.



அருமொழி என்னும் இயற்பெயர் கொண்ட இராஜராஜ சோழத்தேவர் பிறந்த வருடம் கி.பி 947 என்பதாக அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 

குந்தவை நாச்சியார் இவரது அக்காள் என்பதால் அவர் பிறந்த வருடம் தோராயமாக கி.பி. 945.

கண்டாதிரத்தன், அரிஞ்சயர், இவர்களுக்குப்பிறகு பதவிக்கு வந்த, மதுரைகொண்ட இராசகேசரி என அழைக்கப்பட்ட சுந்தரச்சோழரின் ஆட்சிக்காலம் 17 ஆண்டுகள். இவரது 17 ம் ஆட்சியாண்டு வரை கல்வெட்டு கிடைக்கிறது 
*( S.i.i vol 3 no 118)*

சுந்தரச்சோழனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த மதுராந்தகன் என்னும் உத்தமச்சோழனின் ஆட்சிக்காலம் 16 ஆண்டுகள். இவர் பதவிக்கு வந்தது கி .பி 970 - 971 என்பதை பல வானியல் குறிப்புகள் கொண்டு (கலி, சகம்) நிருபிக்கப்படுகிறது.. இவரது 16 ம் ஆண்டு வரை கல்வெட்டு கிடைக்கிறது.

உத்தமச்சோழரின் 12 ம் ஆட்சியாண்டில் குந்தவை நாச்சியார் இடம் பெறுகிறார். கோவில் ஒன்றுக்கு 500 கழஞ்சு பொன் நிவந்தம் தருகிறார்.
*( S.i.i. vol 19. Ar no 606 of 1920)*













உத்தமச்சோழனின் 
ஆட்சிக்காலத்தில் 500 கழஞ்சு பொன் நிவந்தம் தரும் ஒரு சிறப்பான அரச மாதராக குந்தவை இருந்துள்ளார். உத்தமச்சோழனுக்கு பயந்து ஊரை விட்டு ஓடவும் இல்லை. குகையில் அமர்ந்து தவம் செய்யவும் இல்லை. எந்த நத்தர் பாபவும் குந்தவைக்கு அடைக்கலம் தரவில்லை.

முதலாம் இராஜேந்திரரின் ஆறாம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப்பணிகள் மேற்கொண்டார். கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார்.

அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார். இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம், ஆக தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் என்பது உறுதி. தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார்
என்பது உச்சபட்ச கற்பனை.

குந்தவையின் கணவர் வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது நாம் அறிந்த ஒன்று. வந்தியதேவனுக்கு மேலும் மூன்று மனைவிகளும் இருக்கிறார்கள்.

இராஜேந்திரரின் ஆட்சியாண்டில், வந்தியத்தேவரின் மற்றொரு மனைவி மந்தார கௌரவனார் குந்தாதேவி என்பவர் பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோவிலுக்கு நிவந்தம் தருகிறார். 
*(ins 243 of 1915)*

அதே கோவிலில் வந்தியத்தேவரின் மேலும் ஒரு மனைவியான இந்தளா தேவியார் நிவந்தம் தருகிறார்.
*Ins 191 of 1915.*

இராஜராஜன் காலம் முழுவதும் வாழ்ந்து, இராஜேந்திரன் காலத்தில் சாமந்தராக அதாவது படைத்தலைவராக வந்தியத்தேவன் இருந்துள்ளார்.

இதை பண்டாராத்தார், சாஸ்திரி, போன்ற பல அறிஞர்கள் உறுதி செய்கின்றனர்.

ஆக வந்தியதேவன் மூன்று மனைவிகளுடன், சகலசம்பத்துடன், தீர்க்காயுசாய் வாழ்ந்தவர் என்பது
நிச்சயமான ஒன்று.

தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார். தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத்திருமேனிகள்
எடுத்துள்ளார். 

துலுக்க நாச்சியார் யார்..?

முதலில் இந்த துலுக்கர் என்ற சொல்லாடலே 13 ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் வந்தது. அதற்கு முன்பாக இஸ்லாமியர்களை துருக்கர் அல்லது சோணகன் என்று அழைக்கப்பட்டனர். தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில், சோணகன் சாவூர் பரஞ்சோதி என்பவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு நிவந்தம் தருகிறார். இவரே இராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

கி.பி 13 ம் நூற்றாண்டின் தொடக்கம், இஸ்லாமிய படையெடுப்பு தமிழகத்தில் துவங்கியது, தமிழகத்தில் பல இடங்களில் தாக்குதல், ஸ்ரீரங்கம் கோவிலும் தாக்குதலுக்கு உள்ளானது.

ஸ்ரீரங்கத்து ரங்கநாதரின் உற்சவர் திருமேனி அபகரிக்கப்பட்டு டில்லி சென்றது. டில்லி பாதுசாவின் மகள், அரங்கனின்்திருமேனியை நேசிக்கிறார். இங்கிருந்து சென்ற ஒரு குழு, டில்லிபாதுசாவை சந்தித்து முறையிட்டு, ரங்கன் சிலையை மீட்டு வந்தது. 

அரங்கனை காணாது துடித்த
டில்லி பாதுசாவின் மகள், ஸ்ரீரங்கம் வந்து அரங்கனைகாணாது உயிர் விட்டார். பீபி நாச்சியார் என்றும், துலுக்க நாச்சியார் என்றும் அழைக்கப்பட்டு இன்றும் திருவரங்க கோவிலில் இஸ்லாமிய முறைப்படி வணங்கப்படுகிறார். சமய நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. இந்நிகழ்வுகளை கோவிலொழுகு நூல் சரியாக கூறுகிறது.

இதில் குந்தவை நாச்சியார் எஙகே வருகிறார். துலுக்கநாச்சியாருக்கும் குந்தவைக்கும் என்ன சம்பந்தம்..?

17 ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோவில்.. அம்மை நோய் வராமல் இருக்க, 18 ம் நூற்றாண்டில் பாடப்பட்ட மாரியம்மன் தாலாட்டுப்பாடல் 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த குந்தவை நாச்சியாருக்கும், மாரியம்மன் தாலாட்டிற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.




உறையூரில் உள்ள நத்தர் வலி பாப தர்ஹா  வழக்கமான தர்ஹாக்களில் ஒன்று. அங்கு குத்துவிளக்கு இருப்பதும், தர்ஹாவிற்கு இந்துக்கள்செல்வதும், மற்ற அனைத்து தர்ஹாவிலும் நடைபெறும் வாடிக்கையான நிகழ்வு.

இங்குதான் குந்தவை அடக்கமானார் என்பது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. ஆக.. சுத்தி சுத்தி எப்படி வந்தாலும். குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றும் இல்லை..

*வதந்திகளை நம்ப வேண்டாம்..*

கட்டுரை : ஐயா. மா. மாரிராஜன்

இராஜராஜன் காலம் பொற்காலமே



இராஜராஜன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.



1. இராஜராஜன், இனம் கடந்து குலம் மாறி திருமணம் செய்து வைத்தார். 


 அனைத்து அரசர்களும் குலம் மாறி கலப்பு மணம் செய்தவர்கள்தான். சேர, சோழ, பாண்டிய, பல்லவ, அனைவரும் கலப்பு மணம் செய்தவர்கள்தான். சான்றுகள் உண்டு.

2.சோழர்களின் மூலம் தெலுங்கு 

நிச்சயமாக இல்லை. தெலுங்குச்சோழர்கள் என்பவர்கள் தமிழர்கள். அவர்கள் மூலம் தமிழ்தான். சான்றுகள் உண்டு.

3. இராஜராஜன் சமஸ்க்ருத்தை வளர்த்தார். தமிழை வெறுத்தார்.

தவறு. அனைத்து மன்னர்களின் ஆட்சியிலும் சமஸ்க்ருதம் செல்வாக்கான மொழியாக இருந்தது. எந்த ஒரு அரசனும் எந்த ஒரு மொழியையும் வெறுக்கவில்லை. ஆட்சிமொழியாக தமிழ்தான் இருந்தது. இராஜராஜன் காலத்திலும் ஆட்சி மொழியாக, அரசனின் ஆணைகள் அடங்கிய அனைத்து செய்திகளும் கல்வெட்டில் தமிழில்தான் உள்ளது. சான்றுகள் உண்டு) 

4. இராஜராஜனின் காலத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. 

தவறு. இராஜராஜன் காலத்திற்கு முன்பிருந்த பிராமணர்களின் செல்வாக்கு இராஜராஜன் காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. இராஜராஜன் காலத்தில் ஒரு பிரம்மதேயமோ, சதுர்வேதிமங்கலமோ வழங்கப்படவில்லை. இராஜராஜன் காலத்தில் ஒரு அடிநிலம்கூட பிராமணர்களுக்கு வழங்கப்படவில்லை. சான்றுகள் உண்டு

5. இராஜராஜனின் காலத்தில் பிராமணர்களே உயர் அதிகாரிகளாக இருந்தனர். 

தவறு. 10 அதிகாரிகள் இருந்தால், அதில் மூவர் மட்டுமே பிராமணர். 7 பேர் அனைத்து சமூகத்தினர். சான்றுகள் உண்டு.

6. சாதிய பாகுபாடு, தீண்டாமை இருந்தது. 

தவறு. அவ்வாறு இல்லை. சமூக நீதி இருந்தது. சான்றுகள் உண்டு

7. தஞ்சைபெரிய்கோவில் அதிகார பீடமாக இருந்தது. 

தவறு. பெரியகோவில் வருமானம் முழுவதும் மக்களுக்கே சென்றது. 
கோவிலுக்குச் சொந்தமான ஒரு நிலத்திலிருந்து 3000 கலம் நெல் வருமானம் வந்தது என்றால் அந்த 3000 கலம் நெல் முழுவதும் மக்களுக்கே ஊதியமாக வழங்கப்பட்டது. பெரியகோவில் , தஞ்சை மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. சான்றுகள் உண்டு.

8. கோவில் வழிபாடு சமஸ்க்ருதத்தில் இருந்தது. 

தவறு. தமிழில் இருந்தது. சான்றுகள் உண்டு

என்னென்ன சான்றுகள்..? அது தரும் தரவுகள்.. சரியான வரலாற்று நிகழ்வுகள்..

சமீப காலமாக இராஜராஜன் மீது வைக்கப்படும் பலமான குற்றச்சாட்டு ஒன்று. இராஜராஜன் பார்ப்பன அடிமை. இராஜராஜனின் ஆட்சி பார்பனீயத்தின் நீட்சி.
நிலங்களை எல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கினார்.

புனைவுகளாகவும், யூகமாகவும் பல பதிவுகள், கட்டுரைகள். இது சரிதானா..?

இராஜராஜன் எந்த நிலத்தை எந்த பார்ப்பணர்க்கு எப்போ வழங்கினார்.? என்ன சான்று.? என்ற கேள்வியை எழுப்பினால் குற்றம் சாட்டியவர்களிடம் பதில் இருக்காது.

அப்போ, இராஜராஜன் பிராமணர்களுக்கு நிலமே வழங்கவில்லையா.? என்ற கேள்வியை நம்மிடம் கேட்டால்..

நமது பதில் .......

" ஆம்."

இந்த ஆம் என்ற பதிலை சொல்வதற்கு நீண்ட விபரங்களை சுருக்கமாக அறியவேண்டியது அவசியமாகிறது.

நீண்ட நெடுங்காலமாகவே தமிழ் சமூகத்தில் பிராமணர்களின் பங்கும் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது.

தமிழகத்தை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் ஏராளமான சிற்றரசர்கள் அனைவரும் பிராமணர்களை போற்றி அவர்கள் நலன் காத்துள்ளனர். அனைத்து அரசர்களும் இதை ஒரு சம்பிரதாய கடமையாகவேச் செய்துள்ளனர்.

யாகம் வளர்த்தல். படையெடுப்புக்கு நாள் குறித்தல். பட்டாபிசேக மூகூர்த்தம் கணித்தல்.
இன்னும் பல மங்கலகரமான செயல்களுக்கு பிராமணர்களின் பங்களிப்பு அவசியமானதாக இருந்தது.

இப்பிராமணர்களுக்கு குடியிருக்க வீடு, நிலம், பொன், பொருள் என்று அனைத்து அரசர்களாலும் வாரிவழங்கப்பட்டது.

இவ்வாறு பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பிரம்மதேயம் என்றும், சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டன.

சிலப்பதிகாரமே பிராமணர்களின் குடியிருப்பை பிராமணர் இருக்கை என்று கூறுகிறது..

ஒரு அரசன் ஒரு குறிப்பிட்ட நிலம் அல்லது கிராமத்தை சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் பிராமணர்களுக்குத் தானமாக வழங்குவான். எந்த ஊர்..? என்னவகையான தானம்.? தானம் பெறும் பிராமணர்கள் யார்.? அவர்கள் கோத்திரம் சூத்திரம் என்ன.? தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள், வரையறைகள்.. விபரங்கள் அனைத்தையும் அரச ஆணையாக வெளியிடுவார்கள். இந்த ஆணைகள் ஒரு செப்புப்பட்டயத்தில் பொறிக்கப்பட்டு ஆவணமாக பதிவுசெய்யப்படும். இந்த ஆவணங்கள்தான் செப்பேடுகள்..

இந்தியாவில் காணப்படும் அனைத்துச் செப்பேடுகளும், பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்களின் விபரங்களையே கூறுகிறது.

சேர, சோழ, பாண்டிய, பல்லவ, மற்றும் பல சிற்றரசர்களின் செப்பேடுகள் பெரும்பாலும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலதானத்தையே கூறுகிறது. ஒரு சில செப்பேடுகள் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தானத்தைக் கூறும்.

பல்லவர்..பாண்டியர்..சோழர்... 

இம்மூவரின் செப்பேடுகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டால்....

பல்வ அரசர்கள் ஏராளமானோர் பிராமணர்களுக்கு நிலத்தானம் வழங்கியுள்ளனர்.

பாண்டிய அரசர்கள் ஏராளமானோர் நிலதானம் பிராமணர்களுக்கு வழங்கியுள்ளனர்.

சோழர்களும் வழங்கியுள்ளனர்.

தானம் வழங்கியதன் ஆவணமாக அரசர்கள் வெளியிட்டச் செப்பேடுகள் உள்ளன.

இந்த அனைத்து அரசர்களிலும் ....
விதிவிலக்காக ஒருவர் உள்ளார். அவர் எந்த ஒரு நிலத்தையும் எந்த ஒரு பிராமணர்க்கும் தானமாக வழங்கவில்லை. வழங்கியதற்கான செப்பேடு இல்லை..

அவர்தான்....

பார்ப்பனிய அடிமை என்று விமர்சிக்கப்படும் ..

"இராஜராஜசோழன்"

இராஜராஜன் காலத்தில் பிராமணர்களுக்குத் தானம் வழங்கிய எந்த ஒரு செப்பேடும் இல்லை.

இராஜராஜனின் தந்தை சுந்தரச்சோழன் தானம் கொடுத்துள்ளார். மகன் இராஜேந்திரன் கொடுத்துள்ளார். 

இராஜராஜன் கொடுக்கவில்லை.

இராஜராஜன் கொடுத்த செப்பேடு ஆவணம் ஒன்றே ஒன்றுதான். 

நாகப்பட்டினம் சூடாமணி புத்தவிஹாரம் ஒன்றுக்கு ஆனைமங்கலம் என்னும் கிராமத்தை பள்ளிச்சந்தமாகக் கொடுத்துள்ளார்.

இதைத்தவிர்த்து இராஜராஜன் எந்த நிலதானமும் கொடுக்கவில்லை..

மற்ற அரசர்கள் கொடுத்த நிலதானம் எவ்வாறு.? எந்த அரசன் ..? யாருக்கு..? நபர்கள் எத்தனை.? 


இராஜராஜன் நேரிடையாக எந்த ஒரு நிலதானமும் வழங்கவில்லை..

மற்ற அரசர்கள் வழங்கிய தானம் பற்றிய விபரங்களை சுருக்கமாகப் பார்த்தால்..

பிராமணர்களுக்கு நிலம் வழங்கும் நிகழ்வு கடும் கட்டுப்பாட்டின்பேரில் வழங்கப்பட்டது.

போகிறபோக்கில் ஊரில் உள்ள அனைத்து பிராமணர்களுக்கும், நிலங்களா வாரி வழங்கவில்லை..

தகுதியான, வேதாகமங்களில் சிறந்த, ஏழைகளான, வெளியூரில் இருந்து இங்கு வந்து குடியேறிய,
பிராமணர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் பிறகே அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.

தானம் பெறும் பிராமணர்களுக்கான நிபந்தனைகளை செப்பேடுகளே பட்டியலிட்டுள்ளது.

வாய்மைபேசுபவர்களாகவும், பிறர் நலனில் விருப்பம் கொண்டவராகவும், வேள்விகள் செய்பவர்களாகவும், அறிவாளிகளின் அறிவுத்தேவையை பூர்த்திசெய்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளும் உண்டு.

நிலதானம் பெறும் பிராமணர்கள் நல்லவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், ஏழைகளாகவும் (நல்கூர் நற்பார்ப்பார்) வறுமையில் உள்ள சிறந்த பிராமணர்கள்.

108 பேர் தானம் பெற்ற செய்தியை இரண்டாம் நந்திவர்மனின் புல்லூர்ச் செப்பேடு கூறுகிறது.

ஐந்தே கால் பட்டி நிலத்தை ( 6300 குழி) அரசன் காசு கொடுத்து விலைக்கு வாங்கி பிராமணர்களுக்கு தானம்கொடுத்த செய்தி முதலாம் பரமேஷ்வர பல்லலனின் கூரம் செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அக்ரஹாரம் ஒன்று உருவாக்கப்பட்டு பிராமணர்களுக்கு வழங்கப்படும்போது.

அரசுக்குச் சொந்தமான நிலம்மட்டுமே அக்ரஹாரமாக வழங்கப்படும். ஊருக்கு பொதுவான ஏரி, வாய்க்கால், குளம், குடியிருப்பு, மண்டபம் இவைகள் அக்ரஹாரத்தில் அடங்காது. இவைகள் நீங்கித்தான் அக்ரஹாரம் உருவாக்கப்படும். இவ்விபரங்களை கரந்தைச் செப்பேடு தெளிவாகக் கூறுகிறது.

தானமாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு முழுவரிவிலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை. 

அக்ரஹாரம் உருவான முதல் எட்டு ஆண்டு வரிவிலக்கு. எட்டாம் ஆண்டு முதல் கால்பங்கு வரி. 9 ம் ஆண்டு முதல் அரைப்பங்குவரி. 10 ஆண்டு முதல் முழு வரி.

10 ம் ஆண்டு முதல் பிராமணர்களும் மற்றவர்களைப்போலவே அரசுக்கு வரி செலுத்தவேண்டும். இவ்விபரங்களும் கரந்தைச் செப்பேட்டில் தெளிவாக உள்ளது..

அரசர்கள் கொடுத்த தானங்களின் பட்டியலில் ஒரு சிலவற்றை பார்ப்போம்..

இராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழன் வழங்கிய அன்பில் செப்பேடு. கி.பி.961.

சுந்தரச்சோழன் தனது அமைச்சர் அநிருத்த பிரம்மாதிராசருக்கு நல்விழான்குடி என்னும் ஊரிலிருந்து 10 வேலி நிலத்தை கருணாகரமங்கலம் என்று பெயர் சூட்டி ஏகபோக பிரம்மதேயமாக வழங்கினார்.

முதலாம் பராந்தகன் வழங்கிய வேளஞ்சேரி செப்பேடு. கி.பி.932.

வேதங்களிலும் வேதாகமங்களிலும் சிறப்புபெற்ற அந்தணர்களுக்கு தாழைவேடு, மயங்காறு, கீழகல் என்ற மூன்று ஊர்கள் பிரம்மதேயமாக பராந்தகனால்
வழங்கப்பட்டது.

இராஜராஜனின் மகன் இராஜேந்திரனால் வழங்கப்பட்ட தானம்.

கரந்தை செப்பேடு.
முதலாம் இராஜேந்திரன். 
கி.பி.1020.

புதிதாக அக்ரகாரம் ஒன்று உருவாக்கப்பட்டு,
திரிபுவனமகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடப்பட்டு 1080 அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டது.

இராஜராஜனின் பேரன் வீரராஜன் வழங்கிய தானம்.

சாரலச்செப்பேடு.
வீரராஜேந்திரன்.
கி.பி.1069.

மூன்று அந்தணர்களுக்கு மதுராந்தகசதுர்வேதி மங்கலம் என்னும் பெயர் வீரராஜேந்திரனால் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது.

பல்லவர் கால தானங்கள்..


சிம்மவர்மனின் பீகிரச்செப்பேடு.
கி.பி. 5 ம் நூற்றாண்டு.



பீகிர என்னும் கிராமம் காஸ்யப கோத்ரம் தைத்ரிய சாகை விலாச சர்மனுக்கு தானமாக வழங்கப்பட்டது.



இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் உதயேந்திரம் செப்பேடு.
கி.பி.752.

நந்திவர்மனின் படைத்தலைவனான உதயசந்திரனின் விருப்பப்படி , செய்யாற்றின் கரையில் உள்ள வெள்ளாட்டூர் கிராமத்தையும் , கொற்றக் கிராமத்தையும் ஒன்றாக்கி உதயச்சந்திரமங்கலம் என்று பெயரிட்டு108 அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.

இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடி செப்பேடு.
கி.பி. 754.

ஏகதீரமங்கல கிராமம் என்ற பெயரில் பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்து சாந்தோக சூத்திரத்தை பின்பற்றும் நல்ல பிராமணான சாமவேதி ஜ்யேஷ்டபாத சோமயாஜி என்பவருக்கு பிரம்மதேயமாக வழங்கப்பட்டது.

இரண்டாம் நந்திவர்மன்.
புல்லூர்ச் செப்பேடு.

பல்குன்ற கோட்டத்து கீழ் வேணாட்டு நெல்லியுர் , புல்லூர், குடியூர், தக்காறு, என்னும் நான்கு ஊர்களின் பழையபெயர் நீக்கி நயதீரமங்கலம் என்று பெயரிடப்பட்டு 108 பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது.

முதலாம் பரமேஸ்வரன்.
கூரம் செப்பேடு.
கி.பி. 660 - 690

மனையிற் கோட்டத்து பன்மாநாட்டு பரமேஸ்வரமங்கலத்து எல்லைக்குட்பட்ட நிலத்தை 25 பங்காக்கி அதில் 20 பங்கு பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது.

இரண்டாம் நந்திவர்மன்.
தண்டந்தோட்டம் செப்பேடு. கி.பி.789.

பல்லல அரசன் இரண்டாம் நந்திவர்மன் 58 வயதை கடந்ததன் நினைவாக ஆந்திராவைச்சேர்ந்த 308 பிராமணர்களுக்கு தஞ்சை..தண்டதோட்டத்தில் குடியிருப்பு வழங்கப்பட்டது.

நிருதுபங்கவர்மனின் சித்ரூர்ச் செப்பேடு.

சிரூர் கிராமத்தை 53 பிராமணர்களுக்கு பிரித்வி மகாதேவி சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் தானமாக வழங்கப்பட்டது.

பாண்டியர் கால தானங்கள்..

வேள்விக்குடி செப்பேடு. பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன்.
கி.பி. 770.

பல்யாக முதுகுடுமி பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் யாகம்வளர்க்கும் அந்தணர்களுக்கு வேள்விக்குடி என்னும் ஊரை தானமாக வழங்கியிருந்தார். பிறகு வந்த களப்பிரர் காலத்தில் இந்த பிரம்மதேயம் ரத்தானது.
பாண்டியன் கடுங்கோன் என்பவர் மீண்டும் களப்பிரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டார். பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில் மீண்டும் வேள்விக்குடி என்னும் ஊர் அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.

சின்னமனூர் செப்பேடு.
ராசசிம்மபாண்டியன்.
கி.பி.916.

பராந்தக சர்மன் என்னும் பிராமணருக்கு நற்செய்கைபுத்தூர் என்னும் ஒருகுடியிருப்பை மந்தார கௌரவ மங்கலம் என்னும் பெயரில் தானமாக வழங்கினார்.

சீவரமங்கலம் செப்பேடு.
பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன்.

தென்களவழி நாட்டுப்பகுதியைச் சேர்ந்த வேலன்குடி என்ற ஊர் சீவரமங்கலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வடநாடான மகத நாட்டிலிருந்து ( இன்றைய பீகார்) வந்து வேலன்குடி கிராமத்தில் குடியேறிய சிசு மிஸ்ராவின் மகன் சுஜாதாபட்டன் என்பவருக்கு தானமாக வழங்கப்பட்டது.

மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் சற்று சுருக்கமானவையே.. 

இன்னும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் குறித்த ஆவணங்களான செப்பேடுகள் உள்ளன.

இராஜராஜன் காலத்திற்கு முன் உள்ளவர்களும் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.

இராஜராஜன் காலத்திற்கு பின் உள்ளவர்களும் பிராமணர்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளனர்.

இராஜராஜன் காலத்தில் அவர் வழங்கிய தானம் பற்றிய எந்த ஒரு செப்பேடும் இல்லை.

அவர் வழங்கிய செப்பேடு ஒன்றே ஒன்றுதான்.. நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரம் என்னும் புத்தர் கோவிலுக்கு ஆணைமங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக வழங்கினார்..

இந்த ஒரு செப்பேடு ஆவணத்தைத்தவிர இராஜராஜன் பிராமணர்களுக்கு நிலதானம் வழங்கியதாக எந்த ஒரு செப்பேடும் இல்லை.

செப்பேடுகளில் இல்லை. கல்வெட்டுகளில் இருக்கிறதே என்ற ஒரு கேள்வி எழும்..

செப்பேடுகளில்தான் எந்த அரசன்.. எந்த பிரமாணர்களுக்கு..எந்த இடத்தை.. எப்போது வழங்கினார் என்ற விபரம் இருக்கும். 

கல்வெட்டில் இந்த விபரங்கள் இருக்காது.
பொதுவாய் சதுர்வேதிமங்கலம், பிரம்மதேயம் என்றுதான் இருக்கிறது.

உதாரணமாக..

இராஜரஜனின் கல்வெட்டில் வரும்..
இரவி குல சூளமணி சதுர்வேதி மங்கலம் என்பது முதலாம் பராந்தகன் காலத்திலேயே இருந்தது.

செம்பியன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என்பது உத்தமச்சோழன் காலத்திலேயே கொடுக்கப்பட்டது.

சத்ரியசிகாமணி வளநாட்டின் பட்டினக் கூற்றத்து பிரம்மதேயமான சிவளைக்குடி. சத்ரியசிகாமணி என்பது இராஜராஜனின் பெயராக இருந்தாலும், சிவளைக்குடி பிரம்மதேயம் அவர் காலத்தில் கொடுக்கப்பட்டதுதான் என்பதை அக்கல்வெட்டைக் கொண்டு முடிவு செய்ய இயலாது.

இராஜராஜனின் நேரடிப்பெயரைச் சுட்டும் சிவபாதசேகரமங்கலம், முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் கல்வெட்டு ஆரம்பமாகிறது..

சுருங்க கூறினால்...

இராஜராஜன் பிராமணர்களுக்கு நிலம் வழங்கியிருந்தால், மற்ற அரசர்களைப்போல் நிச்சயம் செப்பேடு ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அப்படியொரு செப்பேடு இல்லை என்பதால்,

இராஜராஜன் எந்த ஒரு பிராமணருக்கும் நிலதானம் வழங்கவில்லை என்னும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது..

இராஜராஜனைத் தவிர மற்ற அனைத்து அரசர்களும் தானம் செய்துள்ளனர்.

ஆனால்...
அனைத்து பழிச்சொல்லும் இராஜராஜன் மீது...?

15 ம் நூற்றாண்டுகளுக்குப்
பிறகு நடந்த சமூக மாற்றங்களை 10 ம் நூற்றாண்டு சோழர்கள் மேல் பழி. குறிப்பாய் இராஜராஜன் மீது போடுகிறார்கள்.

மேலும் சில கல்வெட்டுகள்.. நிலவுடமையின் ஒப்புமை பட்டியல்களை வேறொரு பதிவில் பார்ப்போம்..

இராஜராஜன் காலம் பொற்காலம்தான். 

தமிழகத்தை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவர் காலங்களும் பொற்காலம்தான்.

பார்ப்பனீய எதிர்ப்பு என்னும் பெயரில் தமிழின பேரரசன் ஒருவரை இழிவு படுத்தும் செயல் 
தவறான ஒன்று.








பெரியகோவில் அதிகார வர்க்கத்தின் மையமாக இருந்தது. அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டது. மக்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. கோவில் அனைத்துச் சொத்துக்களையும் பார்ப்பனர்களே அனுபவித்தனர்.

இவையனைத்தும் பொய்யான, யூகமான, வன்மமானக் குற்றச்சாட்டுகள்..

அனைத்து விபரங்களும் கோவிலில் கல்வெட்டு சாசனங்களாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோவிலின் மொத்த வருமானமும் ஊதியமாக, நிவந்தமாக பொதுமக்களுக்கே வழங்கப்பட்டது.

பெரியகோவிலின் வருமானம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்.
அதன் மூலம் வருமானமாகப் பெறப்பட்ட நெல்.

தானமாகப் பெறப்பட்ட காசு மற்றும் பொன் விபரங்கள்.

விளக்கெரிக்க தானமாக வழங்கப்பட்ட ஆடு, பசு, எருமை, பொன், காசு.

அரசர் மற்றும் அதிகாரிகள் வழங்கிய செப்புத்திருமேனிகள்.

இறைவனுக்கு தானமாக வழங்கப்பட்ட ஆபரணங்கள், பாத்திரகள் மற்ற பொருட்கள்.

கோவிலுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு.? அதன் மூலம் வருவாயாக வந்த நெல் எவ்வளவு.? வருமானமாக வந்த நெல் எவ்வாறு செலவு செய்யப்பட்டது.?

சுருக்கமாகப் பார்ப்போம்.

S.ii.vol 2.no 4 ,5 , 92 ல் காணப்படும் கல்வெட்டுகளில் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை பட்டியலிடுகிறது.

அருள்மொழிதேவ வளநாட்டு இங்கனாட்டு பாலையூர் என்னும் ஊரிலிருந்து பெரியகோவிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்திலிருந்து ஒரு ஆண்டிற்கு வருவாயாகக் கிடைத்தநெல்
12 530 கலம் 2 தூணி 1 குறுணி 1 நாழி.

இராஜேந்திரசிங்க வளநாடு மருத்துவக்குடி என்னும் ஊரிலிருந்து வருவாயாகக் கிடைக்கப்பட்ட நெல்
68987 கலம் 2 தூணி 2 குறுணி 6 நாழி.

ராஜேந்திரசிங்க வளநாட்டு ஊரிலிருந்து கிடைத்த நெல்
51390 கலம் 2 தூணி 1 பதக்கு 1 குறுணி 7 நாழி 1 உரி.

இன்னும் சில ஊர்களின் வருவாயும் சேர்த்து
ஒட்டுமொத்த வருவாயாக..

ஆண்டுக்கு..
1,15,000 கலம் நெல்..

300 கழஞ்சு பொன்

2000 காசுகள்.

இந்த ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் கலம் நெல் எவ்வாறு செலவிடப்பட்டது.?

கோவிலில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊதியமாகவும், நிவந்தமாகவும் வழங்கப்பட்டது.

பட்டியலைப் பார்ப்போம்.

கோவிலின் வெளிப்புறச்சுவற்றில் வடமேற்குப்பகுதியில் காணப்படும் நீண்ட கல்வெட்டில் காணப்படும் பணியாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியவிகிதமும்..

கணக்கெழுதுவான்
6 × 200= 1200 கலம் நெல்.( ஆறு பேர்க்கு வருடத்திற்கு 200 கலம் நெல் ஊதியம்)

கீழ்க்கணக்கு.
12 × 75 = 900 கலம்.

தளிச்சேரிப் பெண்டுகள்..
400 × 100 = 40000 கலம்

நட்டவும் செய்வான்
6 × 200 = 1200 கலம் நெல்.

கொட்டாட்டுப் பாட்டு
5 × 150 = 750

கானபாடி.
5 × 150 = 750

வங்கியம்.
2× 150 = 300.

பாடவியம் .
4 ×200= 800

உடுக்கை வாசிப்பான்.
2 × 150=300

வீனை வாசிப்பான்
2 × 150 =300

தமிழ் பாடுவான்
4 ×150 = 600

ஆரியம் பாடுவான்
3 × 150 =450

கொட்டி மத்தளம்.
2 ×100= 200

முத்திரைச் சங்கு.
1 ×100 =100

பக்கவாத்தியம்
5 ×75= 375

காந்தர்வன்
75 ×75= 4125

மத்தளம் இசைப்பவர்கள்.
60 × 75 = 4500

திருவாய்க்கேள்வி
7 ×100 = 700

நாயகம் செய்வான்
2× 200= 400

கணக்கு.
4× 200 =800

கீழ்க்கணக்கு
8× 150 =1200

உவச்சர்
11 × 50 =550

சகடை கொட்டிகள்
11 × 50 = 550

திருப்பள்ளித் தொங்கல் பிடிக்கும் ஆளுக்கு உள்படுவான்
1 ×100= 100

ஆள்.
10× 50= 500

விளக்குடையார்களுக்கு உள்படுவான்
1 × 100 = 100

ஆள்
7 ×50 =350

நீர்தெளியான்
4 × 50 = 200

சன்னாளியன்
3 ×75 = 225

திருமடைப்பள்ளிக் குசவருக்கு உள்படுவான்
1×100 = 100

ஆள்.
10× 50 =500

வண்ணத்தார்
2 × 100= 200

காவிதிமை செய்வான்
2 × 50 =100

நாவிதம் செய்வான்
2 × 50 = 100

திரு ( கணி)
1 ×100 =100

ஷை„ கீழ் ஆள்
2× 50 = 100

கோலினிமை செய்வார்
2 × 150= 300

அம்பட்டன்
1× 100= 100

தய்யான்
2 × 100 = 200

ரத்தினத் தய்யான்
1× 150 =150

கன்னான்.
1 ×100 = 100

தச்சு ஆசாரியம்
1 ×150 =150

மேற்படி ஆள்
2× 150 =300

தச்சு
2× 75= 150

பாணன்
4 ×150= 600

கண்காணித்தட்டன்
1× 100= 100

திருமெய்க்காப்பு
118× 100= 11800

பண்டாரம் செய்வார்.
( விபரங்கள் சிதைவு)

திருபரிகாரம் செய்வான்
166 நாள் 1 பதக்கு

நிலையாய் தீட்சித்தார்
10 நாள் 3 குறுணி.

மொத்தம் 88, 750 கலம் நெல் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் தேவராத் திருப்பதியம் பாடுவோர் 48 பேரும். , உடுக்கை வாசிப்போன் ஒருவர், மத்தளம் கொட்டுபவர் ஒருவர் என்று 50 பேர்களுக்கு நாளொன்றுக்கு முக்குறுனி நெல் ஊதியமாக ஆண்டுக்கு 1125 கலம் நெல் வழங்கப்பட்டது.
(Vol 2 no 65)

கோவில் ஊழியத்திற்காக பரிசாரகர் பண்டாரி , மற்றும் கணக்கர், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களையும் சேர்த்து..

நிவந்தமாக, ஊதியமாக லழங்கப்பட்ட மொத்த நெல்லின் அளவு..
98, 880 கலம்.

வருமானமாக வந்த மொத்த நெல்லின் அளவு 1 ,15 000 கலம்.

சிலரது ஊதிய விபரங்கள் சிதைவுற்றுள்ளது..

ஆகவே...
பெரியகோவில் வருமானம் முழுவதும் பொதுமக்களுக்கே ஊதியமாக வழங்கப்பட்டது.

கோவிலானது அதிகார வர்க்கத்தினரின் மையமாக இருக்கவில்லை..

பொதுமக்களின் வாழ்வாதார மையமாக இருந்தது என்பதுதான் கல்வெட்டு கூறும் வரலாற்று உண்மை.







கடந்த பதிவின் தொடர்ச்சியாக, தஞ்சை பெரியகோவிலில் பணிபுரிந்த மற்ற மற்ற ஊழியர்களின் வருமானத்தை கணக்கீடு செய்தால்....

வியப்பால் விழிகள் விரிவடையும்...


இராஜராஜீவரம் என்னும் பெரியகோவிலில் பெரிய திருவிழா என்னும் ஓர் விழா ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்...


இத்திருவிழா.. கொடியேற்றம், ஆடவல்லான் எழுந்தருளல்..  என்று மூன்று நாட்கள் நடக்கும்..  


இத்திருவிழாவில்  முதல்நாளான கொடியேற்ற நாளன்றும், மூன்றாம் நாளான ஆடவல்லான் எழுந்தருளும் போதும் ..


பறை இசைக் கலைஞர்கள் ஐந்து பேர்  பறைகொட்டி  விழாவை சிறப்பித்தார்கள்.. இவர்கள் கடிகையர்கள் என்று அழைக்கப்பட்டனர்...





முதல் நாள் கொடியேற்ற நாளன்று பறை கொட்டும் ஐவர்க்கு ஊதியமாக ஒருவர்க்கு அரைக்காசு வீதம் ஐவர்க்கு இரண்டறை காசுகள் வழங்கப்பட்டது..


 கல்வெட்டு வரிகள்..


  "ராஜராஜீவர உடையார்

ஆட்டை பெரியதிருவிழாக்கு திருக்கொடியேற்ற நாளன்று திருப்பறையறிவு கொட்டாங் கடிகையர் ஐவர்க்கு பெயரால் காசு அரைக்காசு இரண்டறையும்.."

இதேபோல்... மூன்றாம் நாளான ஆடவல்லான் எழுந்தருளும்போதும் பறைக் கொட்டப்பட்டது..


கல்வெட்டு வரிகள்...


" ஆடவல்லான் எழுந்தருளின்றுள்ளட்டு மூன்று நாளன்று திருப்பறையறிவு கொட்டங் கடிகையர் ஐவர்க்கு பெயரால் அரைக்காசு இரண்டறையும்.." 


ஆக... இரண்டுநாள் மட்டும் பறை இசைக்கும் கலைஞர் ஒருவரின் ஊதியம் (1/2 +1/2 )..

ஒரு காசு....

ஒரு காசின் இன்றைய மதிப்பை கணக்கிடுவோம்..


பறை இசைக்கலைஞர் ஒருவரின்  சம்பளம் இரண்டு நாட்களுக்கு 1 காசு...


இதே பெரியகோவிலில் ஒரு காசின் மதிப்பும் கல்வெட்டாக உள்ளது.


ஒரு காசுக்கு 1200 வாழைப்பழம் கிடைக்கும்.


மூன்று ஆடுகளின் விலை ஒரு காசு.


ஒரு கழஞ்சு பொன்னின் விலை இரண்டு காசு.

1/2 கழஞ்சு பொன்னின் விலை ஒரு காசு.

பறை இசை கலைஞர்களின் ஊதியத்தை பொன்னைக் கொண்டு இன்றைய மதிப்பை கணக்கிடுவோம்.


இரண்டு நாட்களுக்கு கலைஞர்கள் பெற்ற ஊதியம் 1 காசு.


1காசுக்கு 1/2 கழஞ்சு பொன் வாங்கலாம்.


ஒரு கழஞ்சு என்பது

 5.2 கி.

1/2 கழஞ்சு என்பது

 2.6 கி.

ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய மதிப்பு 

ரூ.4500.

2.5 × 4500.= 11, 700  ரூபாய்.


ஒரு நாள் ஊதியம் 

ரூ.5850

நன்கு கவனியுங்கள்..


பறை இசைக் கலைஞர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.5850.


ஆக.. பறை இசைக்கும் கலைஞர் ஒருவரின் சம்பள விகிதத்தை அறியும்போது பிரம்மிப்பின் உச்சத்தை அடையலாம்.


இராஜராஜன் சமஸ்க்ருதத்தை போற்றினார். சமஸ்க்ருதத்தில் வழிபாடு செய்தார்.






நிச்சயமாய் இவ்விரண்டு கருத்துகளும் தவறான ஒன்று. ஆதரமற்றப் புனைவு ..

சோழர்காலத்தில், குறிப்பாய் இராஜராஜன் காலத்தில் சமஸ்க்ருதம் ஒரு சம்பிரதாய மொழியாக மட்டும் இருந்தது.

ஆனால்..
தமிழ் மொழி பேச்சுமொழியாகவும், வழக்குமொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் இருந்தது. இதை பெரியகோவில் கல்வெட்டுகளைக் கொண்டே நிருபிக்கலாம்..

பெரியகோவில் கல்வெட்டுகளில் மொத்தம் 107 கல்வெட்டுகள். இவற்றில் சோழர் கல்வெட்டு 89. இராஜராஜன் காலத்துக் கல்வெட்டுகள் 64.

இந்த 64 கல்வெட்டுகளும் மிக நீண்டதாய் தோராயமாக 2865 வரிகள் கொண்டதாய் உள்ளன.

கல்வெட்டுகளின் தொடக்கமாய் சமஸ்க்ருத அனுஷ்டுப் என்னும் ஒரு யாப்பில்.
" " ஏதத் விஸ்வ "" என்று தொடங்கும் வடமொழி ஒன்றரை வரியை தவிர மீதமுள்ள அனைத்துவரிகளும் தமிழ்தான்..

அதாவது 3865 வரி எழுத்துக்களில் ஒன்றரை வரி மட்டுமே சமஸ்க்ருதம்.
மீதமுள்ள அனைத்து எழுத்துக்களும். தமிழ்தான். இடையிடையே ஓரிரு சொற்கள் மட்டும் கிரந்தத்தில் இருக்கும்.

அதாவது பெரியகோவில் கல்வெட்டுகளில்
98.99999 விழுக்காடு தமிழ் மொழிதான்.

இக்கல்வெட்டு சாசனங்களில் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிவந்தம், வழிமுறை, ஊழியர்களின் ஊதியம், வழிபாடு, திருவிழா, ......
என்று பல தகவல்கள் கல்வெட்டில் உள்ளன.

இப்போதைக்குத் தேவையான வழிபாடுப் பற்றியத் தரவுகளைத் தொகுத்தால்...

வைதீக நெறிப்படியான வழிபாட்டுத்தரவுகளோ, யாகம் வளர்த்தலோ, யாகத்திற்கு நெய்வழங்க நிவந்தமோ, இது மாதிரியானத் தகவல்கள் கோவிலில் இல்லை..

திருமுறைப் பாடல்களாம், தீந்தமிழ் பதிகங்கள் பாடும் ஓதுவார்கள் 48 பேர்.
உடுக்கை வாசிக்க ஒருவர், கொட்டி மேளம் வாசிக்க ஒருவர் என 50 பேர் இருந்துள்ளனர்.

ராஜராஜனின் பிரத்யோக குருக்களாக ஈசான சிவபண்டிதர் என்னும் வைதீக நெறியாளர் ஒருவர் இருந்தாலும்,

பெருவுடையாருக்கு அர்ச்சனை செய்யும் சைவாச்சார்யரக பவனப்பிடாரன் என்னும் திருமுறை பாடும் ஒருவரே இருந்துள்ளார்.

கோவில் திருவிழா மற்றும் ஆடவல்லான் எழுந்தரும் நாள், இவைகள் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவியான பறை கொட்டி ஆரம்பம் ஆகிறது.

பெருவுடையாருக்கு திருமஞ்சன நீராட்டு முறையான நீர் வழிபாடே இருந்தது. திருமஞ்சன நீரில் இடும் இலாமிச்ச வேர், பெருஞ்செண்பக மொட்டு, ஏலவரிசி ஆகியவற்றுக்கான தரவுகள் கிடைக்கிறது.

யாகம் வளர்த்த எந்த ஒரு தரவும் இல்லை.

தமிழ் பாட இருவர் இருந்துள்ளனர். ஆரியம் பாட இருவர் இருந்துள்ளனர்.

ஆக.. பெரியகோவிலில் சமஸ்க்ருத வழிபாடே பிரதானமாக இருந்தது என்பதற்கு சான்றில்லை.. ஆகம விதிப்படி குடமுழுக்கு நடந்தது என்பதற்கும் சான்றில்லை.



பொதுவாய் கோவில் இறைவனுக்கு கொடை கொடுப்பவர்கள், ஒரு வேண்டுதலுக்காக, ஒரு நேர்த்திக்கடனாக , பரிகாரமாக அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக நிவந்தம் கொடுத்தேன்
என்று கல்லில் வெட்டுவது வழக்கம்.

ஆனால், தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகளில் அந்தமாதிரியான வேண்டுதல்களோ, காரணமோ குறிப்பிடப்படவில்லை.
பெருவுடையாருக்குக் கொடுக்கிறேன் என்றுதான் உள்ளது. எதற்காகக் கொடுத்தேன் என்ற விபரம் இராது..

ஆனால், ஒரே ஒருவர் மட்டும் ஒரு வேண்டுதலை பெருவுடையார் முன் வைத்து நிவந்தம் கொடுக்கிறார்.

வேண்டுகோள் விடுப்பவர் இராஜராஜர்தான்.

என்ன வேண்டுதல்..?

பெருவுடையார் கோவிலுக்கு தினமும் ஒரு விளக்கெரிக்க ஆழாக்கு நெய் வேண்டும்.

இந்த ஒரு ஆழாக்கு நெய் வழங்க இடையர்களுக்கு நிவந்தம் தரப்படும்.

ஆடு என்றால்.. 96
பசு என்றால்.. 48.
காசு என்றால் 32 காசுகள். ( 3 ஆடுகளின் விலை 1 காசு. 32 காசுக்கு 96 ஆடு வாங்கலாம்) ..
எருமைகள் என்றால் 16.

இவற்றில் ஏதோ ஒன்றை பெற்றுக்கொண்ட இடையர்கள் கோவிலில் விளக்கெரிக்க ஆழாக்கு நெய் வழங்குவார்கள்.

ஏராளமான ஆடுகள், பசுக்கள், எருமைகள், காசுகள் நிவந்தமாக வழங்கப்பட்டன.

இராஜராஜரும் விளக்கெரிக்க நிவந்தம் கொடுக்கிறார். ஒரு வேண்டுதலையும் வைக்கிறார்..

தனது படையில் இருக்கும் வீரர்கள் போருக்குச் சென்று திரும்பும் போது எந்த ஊனமும் இல்லாமல் பத்திரமாக திரும்பவேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் முன்வைத்து அவ்வீரன் பெயரிலேயே நிவந்தம் வழங்கப்பட்டது.

" உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் குடுத்த கால்மாட்டில் அடுத்த ஆடு அறுபத் தொன்பதும் பெருந்தரம் உத்தரங்குடையான் கேரள வீதிவிடங்கன் வில்லவ மூவேந்த வேளான், தன்னை உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்கு வைத்த காசில் குடுத்த காசு ஒன் பதினால் காசு ஒன்றினுக்கு ஆடு மூன்றாக
தொண்ணூற்றாறினால் "

விளக்கெரிக்க நிவந்தமாக 96 ஆடுகள் தரப்படவேண்டும். 69 ஆடுகளை இராஜராஜர் தன்பெயரில் கொடுக்கிறார். ( தனக்காக எந்த வேண்டுதலும் வைக்கவில்லை.) மீதம் 27 ஆடுகள் தரப்படவேண்டும். 27 ஆடுகளுக்கானத் தொகை 9 காசுகளை தனது படைவீரன் ஒருவனது பெயரில் கொடுக்கிறார். போரில் ஊனம் அடையாமல் இருக்க ... என்ற வேண்டுதலுடன் 9 காசுகளைத் தருகிறார்.

வில்லவன் மூவேந்த வேளான் தன்னை உடையார் இராஜராஜர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ...

இதுமாதிரியான செய்திகள் பல இடங்களில் பெரியகோவிலில் காணக்கிடைக்கிறது.

ஒரு அரசன். தனது படைவீரர்கள் போரில் காயம் படாமல் இருக்க வேண்டுதலுடன் நிவந்தம் அளித்து ...

பெருமைமிகு தமிழக வரலாற்றில் இடம்பிடித்த பெருவேந்தன் இராஜராஜன்..


இக்கோவிலில் நடைபெற்ற ஒவ்வொறு நிகழ்வும் பிரம்மாண்டம்..




நன்றி கட்டுரை : ஐயா. மா.மாரிராஜன்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்