செவ்வாய், 21 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ இராஜராஜ சோழத்தேவர்




சுந்தர சோழங்கதேவருக்கும், வானவன் மாதேவியாருக்கும், பொ.ஆ. 947 ல்  பிறந்தவர் இராச கேசரி முதலாம் இராசராசன்.

சுந்தரச்சோழருக்கு பராந்தகன் என்னும் பெயரும் உண்டு. இவருக்கு மூன்று வாரிசுகள். குந்தவை நாச்சியார், ஆதித்த கரிகாலன், அருமொழி என்னும் இராசராசன்.

சோழப் பேரரசர்களில் வெகு முக்கியமானவர் அருமொழி என்னும் இயற் பெயர் கொண்ட இராஜராஜ சோழன்.

(இவரின் பெயரால், கள்ளர் மரபினரில் அருமொழிதேவர் என்ற பட்டம் அமைந்திருப்பது சிறப்பு)

இவரும், இவர் எழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோவிலும் வரலாற்றுலகில் வெகுபிரபலம்.







பிறந்த தினம் 

இராஜராஜர் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம், ஒவ்வொறு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தஞ்சை இராசராசேச்சரத்தில் ‘உடையார் இராசராச தேவர் திருச்சதயத் திருவிழா’ எனவும், திருவையாற்று உலோகமாதேவீச்சரத்தில் ‘உடையார் திங்கள் சதய விழா’ எனவும், செங்கற்பட்டுத் திருவிடந்தை வராகப் பெருமான் கோவிலில், யாண்டுதோறும் ஆவணித் திங்கள் சதயநாள் தொட்டு, ‘இராசராசன் திருவிழா’ என ஏழுநாள் நடந்தது எனவும், வரும் கல்வெட்டுகளை நோக்க, இவன் பிறந்த நாள் சதயநாள் என்பது தெரிகிறது. 

இவர் பிறந்த ஐப்பசி மாதமான சதயம் நட்சத்திரத்தை எவ்வாறு முடிவு செய்தார்கள். ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகே ஐப்பசி சதயம் என்று முடிவானது.

பொதுவாக ஒரு அரசன் பிறந்த நட்சத்திரம் வரும் அனைத்து மாதங்களும் விழாவாகக் கொண்டாடப்படும். தஞ்சைப் பெரியகோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டது. அதில் இராஜராஜன் அவதரித்த சதய திருநாளும் ஒன்று. 12 மாதங்களிலும் வரும் சதய நட்சத்திர நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. ஐப்பசி சதையம் என்னும் விசேடக்குறிப்பு தஞ்சை பெரியகோவிலில் இல்லை.

கலிங்கத்துப்பரணி நூலில் இராஜராஜனை சிறப்பிக்கும் போது 

"சதய நாள் விழா உதியர் மண்டலந்தன்னில் வைத்தவன் "

என்னும் பாடல்வரிகளின் மூலம் இராஜராஜன் சதய நாளில் பிறந்தவர் என்பது உறுதியாகிறது. ஆனால் எந்த மாத சதயம் என்னும் தரவு கலிங்கத்துப்பரணியில் இல்லை.

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை கோவிலில் இராஜராஜனது ஒரு கல்வெட்டு உள்ளது. ( Trsvancore archaeological series vol 1) இக்கோவிலுக்கு தானங்கள் அளித்து தான் பிறந்த ஐப்பசி சதயநாளில் விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கல்வெட்டை ஆய்ய்வு செய்த தொல்லியல் அறிஞர் T.A.கோபிநாதராவ், இராஜராஜன் பிறந்தது ஐப்பசி மாத சதய நட்சத்திரமே என்றார். ஆனால், இதே திருநந்திக்கரைக் கல்வெட்டில் 11 மாத சதய நாள் குறிப்பும் கொண்டாடப்பட்டது. சித்திரை மாதத்தில் வரும் சதயம் பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.




எனவே இராஜராஜர் சித்திரை மாதத்து சதயத்தில் பிறந்திருக்கலாம் என்னும் ஒரு முடிவும் முன்வைக்கப்பட்டது. இதை உறுதிபடுத்தும் விதமாக திருப்புகளூர் அக்னீஸ்வரர் கோவில் கல்வெட்டு.

இராஜராஜனின் மனைவியருள் ஒருவரான பஞ்சவன் மாதேவியார், தானும் இராஜராஜனும் பிறந்த 12 மாத சதய திருநாள் கொண்டாட ஏற்பாடு செய்கிறார். 11 மாதத்தில் வரும் சதய விழாவிற்கும் 10 கலம் நெல் நிவந்தமாக அளித்து விழா நடந்தது.

ஆனால் சித்திரை சதயம் மட்டும் 256 கலம் நெல் நிவந்தமாக அளித்து பெரும் விழாவாக நடந்தது. ஆகவே, இராஜராஜன் பிறந்தது சித்திரை சதயமே என்னும் கூற்று வலுவானது.

திருவாருர் இராஜேந்திரன் கல்வெட்டு ... 

தான் பிறந்தது ஆடிமாத திருவாதிரை என்றும், தனது தந்தை இராஜராஜன் பிறந்தது ஐப்பசி சதயம் என்றும் பதிவுசெய்கிறார். சாசனம் இவ்வாறு உள்ளது.

" அய்யன் பிறந்து அருளிய ஐப்பிகை சதய திருவிழா. "

ஆக.. இராஜராஜன் பிறந்தது ஐப்பசி சதயமே என்னும் கூற்று வலுவானது.

ஆனால் திருவையாறு கல்வெட்டு. இராஜராஜனின் மனைவியான தந்தி சந்தி விடங்கியார் எடுத்த உலோகமாதேவிஸ்வரம் கோவில் கல்வெட்டு.
அனைத்து மாத சதயதிருநாளும் விழாவாகக் கொண்டாடப்பட்டு
சித்திரை சதயமே பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

எண்ணாயிரம்.
அழகிய நரசிம்ம பெருமாள் கோவில் கல்வெட்டு. ( No. 341 / 1917 ) சித்திரை சதயமே பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆக இராஜராஜர் பிறந்தது சித்திரை சதயமா..? என்னும் ஓர் ஐயம் வலுவாக எழுந்தாலும், சர்ச்சைக்கு முடிவு செய்யும் விதமாக

திருவெண்காடு கோவில் கல்வெட்டு.
S.i.i.vol 5.no 979. தெளிவாய் கூறுகிறது..

" திரு அவதாரம் செய்தருளின ஐப்பசி திங்கள் சதயத்திருநாள் "

இக் கல்வெட்டில் ஐப்பசி சதயத்தைத் தவிர வேறு எந்த மாத நட்சத்திரமும் இல்லை. தெளிவாகவே திரு அவதாரம் செய்தருளின என்பதால், இராஜராஜர் பிறந்தது ஐப்பசி மாதத்து சதய நாளே என்பது உறுதியாகிறது.

அப்படியானால் அந்த சித்திரை சதயம்...? ஒரு அரசன் பிறந்த நட்சத்திரம் வரும், வருடத்தின் முதல் மாதம். அதாவது, வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் சதயநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஒரு நியதி என்கிறார் கல்வெட்டு ஆய்வாளார் குடந்தை சேதுராமன் அவர்கள்.

முடிவாக இராஜராஜன் பிறந்தது ஐப்பசி மாத சதய நட்சத்திரமே என்பது உறுதியாகிறது.

ஆட்சி கட்டில்

இராஜராஜர் பிறந்தநாளைக் கொண்டு, இவர் முடிசூடிய வருடத்தை எண்ணிக்கையில் கொண்டாடுகிறோம். இராஜராஜர் சோழ அரசராகப் பதவியேற்றது கி.பி. 985. இதன் அடிப்படையில் 2020 ல் வரும் சதயம் இவரது 1035 வது வருடம்.

இவர் கி.பி. 985 சூன் திங்கள் 25-ஆம் நாள் அரசு கட்டில் ஏறினான்.

குடும்பம்






பாட்டி செம்பியன் மாதேவியார் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். இவரே இராஜராஜ சோழரை சிறப்புடன் வளர்த்தவர். இராஜராஜரின் அத்தையின் பெயர் அறிஞ்சிகைப் பிராட்டியார், அவரது கணவர் பாணர் குலத்தின் தலைவன்.

ராஜ ராஜனின் மனைவிகள்

  1. உலகமகா தேவியார்,
  2. திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், 
  3. திருபுவன மாதேவியார்,
  4. அபிமானவல்லியார், 
  5. திரைலோக்கிய மாதேவியார், 
  6. பஞ்சவன் மாதேவியார், 
  7. பிருதிவி மாதேவியார், 
  8. இலாட மாதேவியார், 
  9. மீனவன் மாதேவியார், 
  10. நக்கன் தில்லை அழகியார், 
  11. காடன் தொங்கியார், 
  12. கூத்தன் வீராணியார், 
  13. இளங்கோன் பிச்சியார்’ 





என பதினாறு பேரின் பெயர்கள் ‘நம் பெண்டுகள்’ என்று அவராலேயே தஞ்சைப் பெரிய கோவிலில் கொடைப்பற்றிய குறிப்பில் பொறித்து வைக்கப் பட்டுள்ளது. தந்திசக்தி விடந்தை என்றழைக்கப்படும் உலக மகா தேவியாரே பட்டத்து அரசி என்றும் கல்வெட்டுக்கள் மற்றும் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன. 

பாட்டி, தாய் மற்றும் மனைவிகள் பிறந்தது மழவராயர், மலையமான் சேதுராயர், வானாதிராயர், பழுவேட்டரையர், கொடும்பூரார் பட்டமுடைய குடும்பத்தில் ஆகும்.

இப்பட்டங்கள் அனைத்தும் கள்ளர் மரபினரினருக்கு  உரியதாக சோழமண்டலத்தில் உள்ளது.



இராஜராஜ சோழத்தேவருக்கு, பெரு வீரனாகிய இராசேந்திரன் ஒரே புதல்வன் ஆவார். வேறு புதல்வர் இலர். ஆனால், பெண் மக்கள் இருவர் இருந்தனர். அவர்களுள், மூத்த பெண் மாதேவடிகள் என்னும் பெயரினள் (புத்தமதம் தழுவினார்). இளைய பெண் இரண்டாம் குந்தவையாவள். 

குந்தவை, கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றனள். (பேரன்தான் முதற் குலோத்துங்கன்).

இராசராசனுக்கு மூன்று பெண்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கொள்கை . 

வானவன் மாதேவியார் எனப்பட்ட திரிபுவனமா தேவியார் மகனே இராசேந்திர சோழன். இளங்கோன் பிச்சியார் என்பவர் வல்லவரையன் மகளார். வல்லவரையார் வாண்டிய தேவர் என்பவன் இராசராசன் தமக்கையாரான குந்தவியைார் கணவன். எனவே, பிச்சியார் என்பவர் இராசராசன் அத்தை மகளார் ஆவர். 

இராசராசன் தன் முன்னோர்பால் மிக்க மதிப்பு வைத்திருந்தான். அருங்குணங்கள் ஒருங்கே அமையப் பெற்ற அவ்வண்ணல் தம் பாட்டனான அரிஞ்சயன் என்பானுக்கு மேல்பாடியில் கோவில் கட்டி 'அரிஞ்சிகை ஈச்சுரம் எனப்பெயரிட்டான்.

திருமுக்கூடவில் ஒரு மண்டபம் கட்டி அதற்குத் தன் பாட்டியான செம்பியன் மாதேவியின் பெயரிட்டு அழைத்தான்.

முறைப்படுத்தப்பட்ட கல்வெட்டுகள்

சோழப் பேரரசை நன்கனம் அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசனே ஆவன். 

தனது ஆட்சியாண்டுகளில் முறையே நடைபெற்ற போர்ச் செயல்களை முறையே வெளிவந்த கல்வெட்டுகளில் முறைப்படி குறித்து வரலானான். 

அக்குறிப்புகளே இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன. பட்டயம் அல்லது கல்வெட்டுக்குத் தொடக்கமாக ஒரு தொடரை அழகாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். ‘இஃது இவனது பட்டயம் அல்லது கல்வெட்டு’ என்று எளிதில் கூறிவிடத் தக்கவாறு அத் தொடக்கம் இருக்கிறது. அது ‘திருமகள் போல...’ என்பதாகும். இவனது வீரமகனான இராசேந்திரன் கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை. இங்ஙனமே பின்வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வேறுவேறு தொடக்கம் கொண்டவை. 

போர்கள்

இராசராசன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 985, இவன் சேர நாட்டிற் படையெடுத்த ஆண்டு கி.பி.989.எனவே இவன் ஏறத்தாழ நான்காண்டுகள், தன் படையைப் பெருக்குவதிற் செலவழித்தான் எனலாம். 

சேர நாட்டின்மீது சென்ற படைக்குத் தலைமை பூண்டவன், பஞ்சவன்மாராயன் என்னும் பெயர்கொண்ட இராசேந்திர சோழனே ஆவன். 

மலைநாடு, அடைதற்கு அரியதாய் மலையும் கடலும் குழ்தரப் பரசுராமனால் அமைக்கப்பட்டதென்று திருவாலங்காட்டுச் செப்பேடு செப்புகிறது. இம்மலை நாட்டுத் துறைமுகப் பட்டினமான காந்தளூர்ச் சாலையில் போர் நடந்தது. அப்போரில் சேரனும் பாண்டியனும் சேர்ந்து சோழரை எதிர்த்தனர். பாண்டியன் அமரபுசங்கன் என்பவன்; சேரன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி (கி.பி. 978-1036) என்பவன். போரில் சோழர்படை வெற்றி பெற்றது. இராசராசனது 4ஆம் ஆண்டுக் கல்வெட்டு ‘காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தருளி’ எனக் குறிப்பதால், இராசராசன் காந்தளூரில் இருந்த சேரர் மரக்கலங்களை அழித்தவன் என்பது புலனாகிறது. ஆயினும், கி.பி 993 முதலே இராசராசன் கல்வெட்டுகள் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் காணக் கிடைத்தலால், இரண்டு நாடுகளையும் வென்று சோழர் ஆட்சியை அங்கு உண்டாக்கி அரசியல் அமைதியை நிறுவ நான்காண்டுகள் ஆகி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. 

காந்தளூர் சாலைப் போர்


ராஜராஜ சோழன் தலைமையேற்றுச் சென்று பெற்ற பெரும் வெற்றி நிகழ்வு. இந்தச் சிறப்பின் காரணமாகவே ராஜராஜ சோழனுக்கு கேரளாந்தகன் என்ற அடைமொழி சூட்டப்பட்டது. இதன் நினைவாகவே,  தஞ்சை பெரியகோயிலின் நுழைவிடத்தில் முதலாவதாக உள்ள கோபுரத்துக்கு கேரளாந்தகன் திருவாயில் எனப் பெயரிடப்பட்டது. கேரளன் என்பது சேரனையும்,  அந்தகன் என்பது இமயனையும் குறிப்பதால் சேரனுக்கு இமயன் என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டது. 

(கள்ளர் மரபினரின் கேரளாந்தகர் பட்டமும், இங்கே குறிப்பிடத்தக்கது )

பஞ்சவன் மாராயன் பாண்டியனை ஒடச்செய்தான்; விழிஞம் என்னும் துறைமுகத்தைக் கைக்கொண்டான்.

இராசராசனுக்குத் தென்ன பராக்கிரமன் என்னும் விருதுப்பெயர் இருத்தலாலும், பாண்டி நாட்டிற் பற்பல இடத்தும் இவன் கல்வெட்டுகள் இருத்தலாலும், பாண்டிய மண்டலம் 'இராசராச மண்டலம் என வழங்கப் பெற்றமையாலும், இராசராசன் பாண்டிய நாட்டை முழுவதும் வென்று அடக்கி ஆண்டான்.

(கள்ளர் மரபினரின் தென்னதிரையர், தென்னப்பிரியர், தென்னரையர், தென்னவராயர் தென்னவன், தென்னர் என்ற பட்டங்கள் குறிப்பிடத்தக்கது)

குடமலை நாடு என்பது குடகு நாடாகும். 

அந்நாட்டில் உதகை என்பது அரண் மிகுந்த இடமாக இருந்தது. இராசராசன் தன் தூதனைக் குடமலை நாட்டிற்கு அனுப்பினான். அவனைக் குடமலை நாட்டரசன் சிறை செய்தனனோ, அல்லது கொன்றனனோ புலப்படவில்லை. இராசராசன் அங்குப் படையெடுத்துச் சென்றான், உதகையை அடைய 18 காடுகள் தாண்டினான்; காவல்மிகுந்த உதகையை அழித்தான் குடமலைநாட்டைக் கைப்பற்றினான். இச்செயல் கி.பி. 1008 - க்குச் சிறிது முன் நடைபெற்றதாகும். இப்போரைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணியிலும் மூவர் உலாவிலும் காணலாம். 

இப்படையெடுப்பின்போது குடமலை நாட்டை ஆண்டவன் மீனிசா என்பவன். போர் நடந்த இடம் பனசோகே என்பது. மீனிசா, போரில் திறம்பட நடந்துகொண்டதால், அவன் வீரத்தைப் பாராட்டிய இராசராசன், அவனுக்குச் சத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் சூட்டி, மாளவி என்னும் ஊரை நன்கொடையாகக் கொடுத்தான்.

(கள்ளர் மரபினரின் கொங்காள்வார், கொங்குதிரையர்  என்ற பட்டங்கள் குறிப்பிடத்தக்கது )

இராசேந்திரன் பிறகு கொல்லத்தின்மீது சென்று, கொல்லம், கொல்ல நாடு, கொடுங்கோளுர் முதலிய பகுதிகளில் இருந்த சிற்றரசரை வென்று மேலைக் கடற்கரை நாட்டையும் கைப்பற்றி, எங்கும் பெருவெற்றி பின்தொடர மீண்டான். இவ்வெற்றிகட்குப் பின் இராசராசன் ‘கீர்த்தி பராக்கிரம சோழன்’ என்னும் விருதுப்பெயர் பெற்றான்.

(கள்ளர் மரபினரின் கொல்லத்தரையர், குட்டுவர், கொடுங்களார் பட்டங்கள் குறிப்பிடத்தக்க ஒன்று)

கங்கபாடி என்பது மைசூரின் பெரும் பகுதியாகும். தலைநகரம் தலைக்காடு என்பது. இவர்கள் சோழர் பேரரசை எதிர்த்து நின்றவர்; பல்லவர் கால முதலே பல நூற்றாண்டுகளாகக் கங்கபாடியை ஆண்டு வந்தவர். நுளம்பர் என்பவர் இவர்கட்கு அடங்கியவர். இராசராசன் கொங்கு நாட்டிலிருந்து காவிரியைத் தாண்டிக் கங்கபாடியில் நுழைந்தான்; முதலில் தடிகைபாடியைக் கைக்கொண்டான், கங்கபாடியையும் கைப்பற்றினான்.

(துறையார், துறையாண்டார் மைசூர் படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள், கள்ளர் மரபினரின் துறையார் ஒரத்தநாடு வட்டத்தில் துறையாண்டார்கோட்டை மற்றும் திருச்சி பகுதிகளில் வாழ்கின்றனர்)

நுளம்பபாடி என்பது மைசூரைச்சேர்ந்த தும்கூர், சித்தல் துர்க்கம் கோட்டங்களும், பெங்களுர் கோலார், பெல்லாரிக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதனை ஆண்டவர் நுளம்பப் பல்லவர் என்பவர். இவராட்சியில் சேலம், வட ஆர்க்காடு கோட்டங்களின் வடபகுதியும் சேர்ந்திருந்தது.  இந்நிலப் பகுதி இராசராசன் பேரரசிற் கலந்துவிட்ட பிறகு, நுளம்பப் பல்லவர் சிற்றரசராகவும் சோழ அரசியல் அலுவலாளராகவும் இருக்கலாயினர். 

ஐயப்பன் மகனான கன்னராசன் என்பவன் தடிகைபாடியின் ஒரு பகுதியை இராசராசற்கு அடங்கிய சிற்றரசனாக இருந்து ஆண்டு வந்தான் : ‘நொளம்பாதி ராசன்’ என்பவன் இராச ராசன் தானைத் தலைவனாக இருந்தான். ‘நொளம்பாதி ராசன் சொரபையன்’ என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான்.

தொண்டை நாட்டிற்கு வடக்கே கீழைச்சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. கிருஷ்ணையாறு முதல் வடபெண்ணையாறு வரை இருந்த நாடு சீட்புலிநாடு, பாகிநாடு என்று பெயர் பெற்றிருந்தது. இராசராசன் காருகுடியைச் சேர்ந்த பரமன் மழபாடியார் என்னும் மும்முடிச்சோழன் என்ற சேனைத் தலைவனைப் பெரும்படையோடு அங்கு அனுப்பினன். அத்தலைவன் பீமன் என்னும் அரசனை வென்று அந்நாடுகளைச் சோழப் பேரரசில் சேர்த்தான் மந்தை மந்தையாக ஆடுகளையும் பிற பொருள்களையும் கைக் கொண்டு மீண்டான் என்று காஞ்சிபுரக் கல்வெட்டொன்று கூறுகிறது.

(கள்ளர் மரபினரின் மழுவாடியார் பட்டங்கள் குறிப்பிடத்தக்க ஒன்று )

கி.பி. 999-இல் இராசராசன் வேங்கி நாட்டைக் கைப்பற்றிச் சக்திவர்மனை அரசனாக்கினன். சக்திவர்மன் சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக- ஆனால் தனி அரசனாக இருந்து வேங்கி நாட்டை ஆண்டுவந்தான். இவன் இளவலான விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகளான குந்தவ்வையை மணம் செய்து கொடுத்தான். இவ்விரண்டு செயல்களாலும் கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசின் சிறந்த உறுப்பாக விளங்கியது. கீழைச் சாளுக்கிய மரபு சோழமரபுடன் ஒன்றுபட்டுவிட்டது.

இராசராசன் தான் கலிங்கத்தை வென்றதாகக் கூறியுள்ளான்.  

கி.பி. 993-இல் வெளிவந்த கல்வெட்டுகளிலேயே இராசராசன் ஈழ மண்டலத்தை வென்றமை குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசனான ஐந்தாம் மகிந்தன் தென்கிழக்கில் இருந்த மலை அரணையுடைய ‘ரோஹணம்’ என்னும் இடத்திற்குச் சென்று விட்டான். அச்சந்தர்ப்பத்தில் இராசராசன் வட இலங்கையைக் கைப்பற்றி, அதற்கு மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயரிட்டான்.

இப்படையெடுப்பினால் அநுராதபுரம் அழிவுற்றது. பொலநருவா சோழர் தலைநகரம் ஆனது; அது ‘ஜனநாத மங்கலம்’ என்று பெயர் பெற்றது; 

இராசராசன் தான் தஞ்சாவூரிற்கட்டிய பெரிய கோவிலுக்கு ஈழத்திலிருந்து பணமும் இலுப்பைப் பாலும் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.

இரட்டபாடி என்பது இராட்டிரகூடர் அரசாண்ட நிலப்பகுதி.  கி.பி. 992-க்கும் பிறகு அரசனான சத்தியாஸ்ரயன் இராசராசனுடன் போரிட்டான் போலும் இராசராசன் சத்யாஸ்ரயனுடன் போரிட்டு அவனது செல்வத்தைத் தஞ்சைப் பெரிய கோவில் கட்டச் செலவழித்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.



இராஜராஜ பெரும்பள்ளி என்னும் ஒரு புத்தர் கோவில், உத்தமசோழஸ்வரம், வானவன் மாதேவிஸ்வரம் என்னும் கோவில்கள் இருந்த கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன

(கள்ளர் மரபினரின் ஈழதரையர், ஈழம்கொண்டார், மாவிழிசுத்தியார் பட்டங்கள் குறிப்பிடத்தக்க ஒன்று)

இராசராசன் கங்கபாடி, வேங்கி மண்டலம் இரண்டிற்கும் தன் மகனான பேராற்றல் படைத்த இராசேந்திரனையே மகா தண்டநாயகனாக வைத்திருந்தான். இங்ஙனம்செய்துவைத்த பாதுகாவலால், மேலைச் சாளுக்கியர் சோழநாட்டின் மீது படையெடுக்கக் கூடவில்லை.

பழந்திவு பன்னிராயிரம்


இராசராசன் அலைகடல் நடுவிற் பலகலம் செலுத்தி, முந்நீர்ப் பழந்தீவு பன்னிராயிரமும் கைப்பற்றினன். இங்ஙனம் சென்ற இடம் எல்லாம் வெற்றிச் சிறப்பெய்திய இராசராசன் சயங்கொண்ட சோழன் எனப்பட்டான். அதுமுதல் தொண்டை மண்டலம் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ எனப்பட்டது. இராசராசன் உய்யக் கொண்டான் மலை (திருக்கற்குடி) நாயனார்க்குப் பொற்பட்டம் ஒன்றை அளித்தனன். அதன் பெயர் 'சயங்கொண்டசோழன்’ என்பது கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள ஊரும் ‘சயங்கொண்ட சோழபுரம்’ எனப்பட்டது.

(கள்ளர் மரபினரின் பட்டங்கள் பழங்கொண்டார், செயங்கொண்டார் குறிப்பிடத்தக்க ஒன்று)

பழந்தீவு எனும் மாலைத்தீவுகளிலு புலிக்கொடியை பறக்கவிட்ட சோழர் குல இந்திரர்கள். பழங்கொண்டார்கள் ஒரத்தநாடு வட்டத்தில் பழங்கொண்டான் கோட்டை, பழங்கொண்டான் குடிகாடு முதலிய பகுதிகளில் மிகுந்து வாழ்கின்றனர்.

பழுவேட்டரையர் கந்தன் மறவன் என்பவன் ஒரு சிற்றரசன். இப்பழுவேட்டரையர் கீழ்ப் பழுவூர். மேலப்பழுவூர்களை ஆண்டுவந்தவர். இவர் மரபிற்றான் முதற்பராந்தகன் பெண் எடுத்தான். அதுமுதல் இம்மரபினர் சோழர்க்குப் பெண் கொடுக்கும் உரிமைபெற்றிருந்தனர். இவர்கள் இராசராசனுக்குக் கீழ்த் தம்மாட்சி நடத்தினோர் ஆவர்.

(கள்ளர் மரபினரின் பட்டங்கள் பழுவேட்டரையர் குறிப்பிடத்தக்க ஒன்று)

வட ஆர்க்காடு கோட்டத்தில் இலாடராயர் என்னும் சிற்றரச மரபினர் ஆண்டுவந்தனர். இவருள் உடையார் இலாடராயர் புகழ்விப்பவர் கண்டன் ஒருவன். அவன் மகன் உடையார் வீரசோழர் என்பவன் ஒருவன். 

(கள்ளர் மரபினரின் இலாடராயர் பட்டங்கள் மன்னை சுற்றுவட்டத்தில் மிகுந்து வாழ்கின்றனர்)

கடப்பைக் கோட்டத்தில் மகாராசப் பாடியை ஆண்டு வந்த துக்கரை என்னும் பெயருடைய வைதும்பராயன் மகன் நன்னமராயர் என்பவன் திருவல்லம் (வடஆர்க்காடு) கோவிலுக்குத் தானம் செய்துள்ளான்.

(கள்ளர் மரபினரின் பட்டங்கள் வைதும்பராயர் குறிப்பிடத்தக்க ஒன்று)

சேனாதிபதி குரவன் உலகளந்தான் என்பவன் ஒருவன். இவன் ‘இராசராச மகாராசன்’ எனப்பட்டான். இவன் சோழப் பேரரசு முழுவதும் அளந்து வரிவிதிக்கப் பொறுப் பாளியாக் இருந்த பெரும் அரசியல் அறிஞன் ஆவன். உலகளவித்த திருவடிகள் சாத்தன் என்பவன் ஒருவன். இவனும் மேற்சொன்ன பணியில் ஈடுபட்டிருந்தனன்.

(கள்ளர் மரபினரின் பட்டங்கள் உலகங்கத்தார் குறிப்பிடத்தக்க ஒன்று)

ஈராயிரவன் பல்லவரையன் - மும்முடிச் சோழன் என்பவன் அரசியல் வருவாயைக் கவனித்த பெருந்தரக்காரன் ஆவன்

(புதுக்கோட்டை பல்லவரையர் , கள்ளர் மரபினராக இன்றும் வாழ்கின்றனர்)

கோலாரை ஆண்ட கங்கர் மரபினனான திருவையன் சங்கரதேவன் என்பவன் ஒர் உயர்தர அலுவலாளனாக இருந்தான். 

(கங்கர், கங்கநாட்டார், சங்கரதேவர் பட்டமுடைய கள்ளர் மரபினர் வாழ்ந்துவருகின்றனர்)

பருத்திக்குடையான் வேளான் உத்தம சோழன் என்பவர் அமைச்சராக இருந்தார். கள்ளர் மரபினரின் பருதிகொண்டார் பருதிக்குடையார் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்த வருகின்றனர்.

வேளைக்காரப்படை

இப்படையைப் பற்றி விவரங்கள் அறிதல் இன்றியமையாதது. இப்படைவீரர் உற்ற விடத்து உயிர் வழங்கும் தன்மையோர். இவர் படைகள் 14 இருந்தன. இவர் ‘இன்னவாறு செய்வேன், செய்யா தொழியின் இன்ன கேடுறுவேன்’ என வஞ்சினம் மொழிந்து, சொன்னவாறு நடப்பவர், தம் சோர்வால் அரசர்க்கு ஊறுநேரின், தாமும் தன் உயிரை மாய்ப்பர். தம் அடியார்க்கும் கேடு உண்டாகாது காத்தலின் முருகனை வேளைக்காரன் என்பர் திருவகுப்பு நூலுடையார் எனின், இவர் தம் சிறப்பினை என்னென்பது ‘வேல’ என்னும் வடசொல் ‘ஒப்பந்தம்’ முதலிய பொருள்களைத் தருவது. அது தமிழில் வேளை என வரும். அரசனிடத்தில் உண்டு உடுத்து அவனைக் காக்கவும் சமயம் நேரின் அவனுக்காக உயிர் விடுவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு உடனுறைபவரே வேளைக்காரர் எனப்படுவர். இங்ஙனம் அமைந்த வேளைக்காரர் பல படைகளாக அமைந்திருப்பர்.

கள்ள வேளைக்காரர் சரணம்



சீனர் உறவு : இராசராசன் கடல் வாணிகத்தைப் பெருக்கினான்; கி.பி.1015-இல் முத்துகள் முதலிய பல உயர்ந்த பொருள்களைக் கையுறையாகத் தந்து தூதுக் குழு ஒன்றைச் சீனத்துக்கு அனுப்பினான். அக்குழுவினர்பேச்சை அரசனுக்கு நடுவர் மொழி பெயர்த்தனர். அரசன் அவர்களைத் தன் அரண்மனைக்கு அடுத்திருந்த விடுதியில் தங்கவிட்டான். அவர்கள் சென்ற காலத்தில் சீன அரசனது பிறந்தநாள் விழா நடந்தது. அரசன் அவர்கட்குப் பல பல பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினான். இக்குறிப்புச் சீனர் நூல்களிற் காணப்படுகிறது.

(கள்ளரில் சீரளுரில் சீனத்தரையர் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்)

விருதுப்பெயர்கள் : இராசராசன் கொண்ட விருதுப் பெயர்கள் மிகப் பலவாகும். 

இராசராசன், 
மும்முடிச் சோழன், 
மும்முடிச் சோழன், 
சயங்கொண்ட சோழன் 

என்னும் பெயர்கள் மண்டலப் பெயர்களாகவும் வளநாடுகளின் பெயர்களாகவும் வழங்கின. 

இவையன்றி, இராசராசற்கு  

சோழேந்திர சிம்மன், 
சிவபாதசேகரன், 
க்ஷத்திரிய சிகாமணி, 
ஜனநாதன், 
நிகரிலி சோழன், 
இராசேந்திர சிம்மன், 
சோழ மார்த்தாண்டன், 
இராசாச்ரயன், 
இராச மார்த்தாண்டன், 
நித்திய விநோதன், 
பாண்டிய குலாசனி, 
கேரளாந்தகன், 
சிங்களாந்தகன், 
இரவிகுல மாணிக்கம், 
தெலுங்க குல காலன்

முதலியனவும் வழக்கில் இருந்தன. இப்பெயர்கள் பல சேரிகட்க இடப்பட்டிருந்தன என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறிவோம். சான்றாகத் தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள திருக்களித்திட்டையில் பின்வரும் பெயர்கொண்ட சேரிகள் இருந்தன; 

  1. அருள்மொழிதேவச் சேரி, 
  2. ஜனநாதச் சேரி, 
  3. நித்தவிநோதச் சேரி, 
  4. இராசகேசரிச் சேரி, 
  5. நிகரிலி சோழச் சேரி, 
  6. அழகிய சோழச் சேரி, 
  7. சிங்களாந்தகச் சேரி, 
  8. குந்தவ்வை சேரி, 
  9. சோழகுல சுந்தரச் சேரி, 
  10. இராசமார்த்தாண்டச் சேரி, 
  11. இராசராசச் சேரி 

என்பன.


சோழர் காலஓவியங்கள்






தமிழகத்து கலைகளின் பொற்காலங்களில் சோழர் காலமும் ஒன்று. வழக்கம்போலவே தஞ்சை பெரியகோவில். பெரியகோவிலில் ஓவியக்கலையும் மிக உச்சத்தில் இருந்தது. சோழர்கள் ஓவியம் தீட்டுவதிலும் சமர்த்தர்கள் என்பதை பெரியகோவில் ஓவியங்கள் ஆயிரம் ஆண்டை கடந்தும் சான்றுகளாய் உள்ளன. கருத்து, அழகு, இயற்கையான வர்ணம் என்று காலத்தை வென்று இன்றும் நம் கண்களுக்கு காட்சிகளாகின்றன. ஓவியம் என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது அஜந்தா மற்றும் உலகில் உள்ள மிகப்பழமையான ஓவியங்கள்.

இந்த ஓவியங்களுக்கு  இல்லாத ஒரு  சிறப்பு பெரியகோவில் ஓவியங்களுக்கு உண்டு. பெரியகோவில் ஓவியத்தை அதிசியம் என்றே அழைக்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சோழர்களின் ஓவியங்கள் மீது, 17 ம் நூற்றாண்டில் நாயக்கர்கள் ஓவியம் வரைகின்றனர். அதாவது ஓவியத்தின் மேலேயே ஓவியம் வரைகின்றனர்.

20  ம் நூற்றாண்டில் இவ்விடயம் கண்டறியப்பட்டு , நாயக்கர் கால ஓவியத்தை உரித்து எடுத்தால் உள்ளே சோழர் ஓவியம். 300 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிறப்பு எடுத்த சோழர் கால ஓவியம். அதே அழகிய வர்ணச் சேர்க்கை. கருத்தாளமிக்க கண்கவர்ச் சித்திரங்கள்.

1931 ம் வருடம் ஜுன் 9 பெரியகோவிலிருந்து யுரேகா என்று சத்தமிட்டு ஓடிவந்தார் ஒருவர். அவர் பெயர் S.k.கோவிந்தசாமி. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர். இவர்தான்  பெரியகோவில் ஓவியத்தை முதன்முதலில் கண்டறிந்து வெளியிட்டவர்.

சோழர் கால வரலாற்று கலை நிகழ்வுகளில் இச் சம்பவம் மிகப்பெரும் கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். சித்திரக் கலையின் சோழர் காலத்தை உலகுக்கு வெளிப்படுத்திய நாள்.  

தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியக் கலை வளர்ந்த அளவுக்கு, உலகிலேயே வேறு எங்கும் இந்த அளவுக்கு நாட்டியக் கலை வளர்த்தாக அறிய இயலவில்லை கல்வெட்டில் அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் அவர்களுக்கு உரிய உரிமைகள் ஆகியவை கூற பெறுவதோடு நாட்டிய நங்கை களாக விளங்கிய 400 பேருக்கும் இரண்டு தளிச்சேரி அமைத்து அவருக்கு வழங்கப்பட்ட வீடுகளின் வீட்டு இலக்கமும் அவர்கள் முன்பு பணி செய்த இடமும் அவர்களின் சொந்த ஊர் அனைத்தும் கல்வெட்டில் காணப்படுகின்றன

இவர்களுக்குத் துணை நின்ற நாட்டிய ஆசிரியர்கள் பக்கவாத்திய கார்களின் பெயர்களும் அவர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் விபரமும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன இதற்குரிய ஆணையை ராஜராஜசோழனின் நேரடியாக அளித்துள்ளார்

சோழ மண்டலம் முழுவதிலும் இருந்து இங்கு வந்து பணிபுரிந்த ஆடல் மகளிருக்கு ஆளுக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலம் அளிக்கப்பட்டுள்ளது

வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல்லை இவர்கள் பெற்றார்கள் இங்கு பணிபுரியும் பெண்கள் இறந்தாலோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலோ உரிமை உடைய அவர்கள் குடும்பத்தாரே இக்காணி பெற முடியும் இவ்வாறு அடுத்து முறையாக வருபவர்களுக்கு ஆடற்கலையில் தகுதி இல்லாமல் போய்விட்டால் தகுதி உடைய வேறு ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு பின் வேறு யாரும் இல்லாத பட்சத்தில் வேறு ஒருவரை நியமிக்க அரசு ஆணை கூறுகிறது

நட்டு வம் செய்ய 12 ஆசிரியர்களும் 

கானம் பாட 5 பேரும்.

மொராவியம்என்னும் இசைக்கருவி இசைப்போர் இரண்டு பேரும் 

வாங்கிய மென்னும் குழல் கருவி இசைப்பவர்கள் மூவரும் 

பாடவியம் இசைப்பதற்கு 5 பேரும்

உடுக்கை வாசிப்பதற்கு இருவரும்

வீணை வாசிப்பு இருவரும் 

ஆரியம் பாடுவோர் மூவரும் 

தமிழ் பாட நால்வரும் 

கொட்டி மத்தளம் இசைக்க இருவரும் 

முத்திரை சங்கு ஊத மூன்று பேரும்

பக்க வாத்தியம் இசைக்க 5 பேரும்

காந்தர்வர்கள் 75 பேரும் 

தளிச்சேரிப் பெண்களுக்கும் கந்தர்வர்களுக்கும் பணி மேற்பார்வையாளர் இருவரும்

தலைமை கணக்கர் ஒருவரும் கீழ்க்கணக்கு ஏழுபேரும் 

மத்தளம் இசைப்பவர்கள் 66 பேரும் திருப்பள்ளித் தொங்கல் பிடிக்க 10 பேரும் 

விளக்கு பணிகளுக்காக 7 பேரும்

நீர் தெளிப்பதற்கு நால்வரும்

சன்னாளியல் இருவரும் 

திரு மடைப்பள்ளி க்கு மண்பாத்திரங்கள் அளிக்க 10 பேரும் 

துணிகளை துவைப்பதற்கு இருவரும் 

காவி திமை செய்வான் என்னும்

கண்காணிப்பாளர் இருவரும்

நாவிதம் செய்ய அறுவரும்

கோலிளைமை செய்பவர் நால்வரும். துணி தைப்பவர்கள்

இருவரும் ரத்தத்னையான் ஒருவரும் 

கண்ணான் ஒருவரும் 

தச்சு வேலை செய்பவர்கள் ஐந்து பேரும் 

சாக்கைக் கூத்து ஆட நால்வரும் அனைத்துப் பணிகளுக்கும் மேற்பார்வையாளர்கள்

ஒருவருமாக மொத்தம் 258 பேர்களுக்கு நிவந்த காணி அளிக்கப் பெற்றது
இவர்களது பணிகளுக்கு ஏற்ப சிலருக்கு இரண்டு காணி உரிமை யும் இரண்டு வேலி நிலமும் 200 கலம் நெல் சிலருக்கு அறை காணி நிலமும் கிடைத்தன 

அனைத்துப் பணியாளர்களின் ஊரும் பெயரும் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்


தஞ்சாவூர் தூண் கல்வெட்டு


1989ம் வருடம் தஞ்சை சீனிவாசபுரம் அருகிலுள்ள ராஜராஜன் நகரில் வீடு கட்ட அஸ்திவாரத்திற்கு தோண்டிய போது ஒரு பெரும் கற்றூண் ஒன்று கிடைத்தது. கல்வெட்டுகளோடு கூடிய அந்த தூணின் பெருமை அறியாத அந்த வீடு கட்டும் ஒப்பந்ததாரர் அந்த தூணை 70 துண்டுகளாக உடைத்து வீடு கட்டிட பயன்படுத்த முனைந்துள்ளார். அதை பார்த்த அப்பகுதி மக்கள் சிலர் ஹிந்து பத்திரிக்கை நிருபர் திரு.வி.கணபதி என்பவருக்கும் வரலாற்றாய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் விஷயத்தை தெரிவிக்க அர்கள் பதறியடித்து வந்து கல்வெட்டை உடைந்த பகுதிகளாக மீட்டனர். தொல்லியல் துறையினரால் பின்னர் படிக்கப்பட்ட அக்கல்வெட்டு அரும்பெரும் தகவல்கள் அடங்கிய பொக்கிஷமென தெரிய வந்தது.







பாடல் வடிவில் இருந்த அக்கல்வெட்டுகள் ராஜராஜரின் புகழை பாடுவதுடன் மற்ற கோவில் சாசனங்கள் போலில்லாது இருந்ததால் அவை கண்டிப்பாக ராஜராஜரின் அரண்மனையில் இருந்த கல்வெட்டாக இருக்கலாமென பல வரலாற்றறிஞர்கள் உறுதி செய்தனர். அந்த கல்வெட்டுப் பகுதிகளை தற்சமயம் தஞ்சை இராசராசன் அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அடுத்து தூணின் மூன்று புறங்களில் கிரந்த தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள வடமொழி பாடலின் விளக்கத்தை காண்போம்.

கல்வெட்டு பாடல் விளக்கம்:

"இராஜகேசரிவர்மன் எனப் பட்டம் பூண்ட இராஜராஜனுடைய திருவடிகள் மற்ற அரசர்கள் தலையில் சூடியுள்ள மகுடங்களால் அலங்கரிக்கப்பட்டதாகும்.

மும்முடி சோழனே! இந்த உலகத்தைப் பொன்னாலாகிய லாகுவலயத்தை அணிந்த உன் புயங்கள் தான் தாங்குகின்றன என்று சாதாரண மக்கள் சொல்கின்றனர். ஆனால் உன்னால் வெல்லப்பட்ட பகைவர்களின் தலைகளின் மேல் வைத்த உன் திருவடியல்லழா இந்த பூமியை தாங்குகின்றன.

அரசே உன் காலடியில் வீழ்ந்த பகைவர்களின் மகுடங்களில் உள்ள இரத்தினங்களால் சிவந்த பொற்பாதங்களை உடையவன். இத்தகைய நீ உன் எழிலால் மட்டுமின்றிக் கரங்களில் ஏந்தியுள்ள பாம்பைப் போன்ற வாளாலும் பகைவர்களின் உள்ளங்களை கலங்கச் செய்கிறாய்.

நிலமாகிய மனைவியைக் காப்பதில் சிறந்த கணவனாகவும், இந்த மும்முடி மன்னன் ஒருவனே சிற்றரசர்களை வெப்பத்திலிருந்து காப்பதில் பெருங்குடை போன்றவனாகவும், மகளிரின் உள்ளத்தை கவர்வதில் மன்மதனுக்கு நிகரானவனாகவுவேம் மவிளங்குகிறான்.

இராஜராஜன் குற்றமற்ற செல்வம், கலைகள் போற்றப்படும் ஆலயங்கள் ஆகியவற்றில் எப்போதும் ஈடுபாடு கொண்டவன். இதற்கு முன்பு இவனை ஒத்த ஒருவன் பிறந்தெதில்லை..இத்தகைய மும்முடி சோழன் இந்த பூமியை நெடுங்காலம் அள்வானாக.

அறிவிற் சிறந்த மும்முடிச் சோழனே! கடும் நோயால் துன்புறுகிறவர்கள் திருநீற்றைக் காப்பாகத் தரித்துக் கொள்வதைப் போல உன் திருவடித் துகள்களை தங்கள் மகுடங்களில் காப்பாகப் புனைந்துக் கொண்ட காணத்தால் நல்ல மரபில் தோன்றியவர்களும் போரில் பெரும் விருப்பமுடையவர்களூமாகிய அரசர்கள் அனைவரும் தற்சமயம் அச்சமற்றவர்களாகத் தலைநிமிர்ந்து நடக்கின்றனர்.

இராஜராஜனே இந்திரனுக்கு ஒப்பான உன்னுடைய ஆட்சியில் காட்டில் வசிப்பவர்களும் நிலத்தின் வளங்கள் அனைத்தையும் பெற்று இன்பமுற்று வாழும்போது, நின் பகைவர்கள் நெல்லிக்கனியையயும், வில்வப்பழத்தையும் அருந்தி(இவையாவது கிடைத்ததே என்று) மகிழும் நிலையில் உள்ளனர். இச்செய்தி மிக வியப்பிற்குரியதன்றோ!

மும்முடிச் சோழனே! நின் பகைவர்கள் வானின் வழியே தப்பியோட முயன்றால் அங்குள்ள வில்லைப் பார்த்தும், கடல் வழியாக செல்லவிழைந்தால் அங்குள்ள மீனை பார்த்தும், காட்டில் புகுந்து தப்ப நினைத்தால் அங்குள்ள புலியை கண்டும் அஞ்சுகின்றனர்.

மும்முடிச் சோழன் ஒருவனே தன்னைப் பணியும் சிற்றரசர்களை இடுக்கண்களிலிருந்து காப்பவனாகவும், மங்கையர்களின் மனங்கவர்ந்து அவர்களை மகிழ்வூட்டுவதில் மன்மதனைப் போன்றவனாகவும் விளங்குகிறான்.

குறைவற்ற செல்வச் செழிப்பாலும், அறுபத்து நான்கு வகைப்பட்ட கலைகளின் சிறப்பாலும், அறிவுநூற் கல்வியாலும் பெருமை பெற்றுள்ள இந்த மன்னனே என்றென்றும் சோழநாட்டை ஆள்வானாக!"

தஞ்சை அரண்மனைகளின் தலைமையான மாளிகையின் பெயர் இருமுடிச்சோழன் என்பதாகும். இந்த அரண்மனையின் திருமதில் மும்முடிச்சோழன் என்று பெயர் பெற்றிருந்தது. மும்முடிச்சோழன் எனும் பட்டத்திற்குரியவன் மாமன்னன் இராஜராஜ சோழனே என்பதை இக்கல்வெட்டுப்பாடல் எடுத்துரைக்கின்றது.

இங்குதான் ராஜராஜ சோழனின் அரண்மனை இருந்தளது.

செப்புச்சிலை


குஜராத், கலிக்கோ அருங்காட்சியகத்தில் உள்ள 
செப்புச்சிலை இராஜராஜர்தான் என்றும், இல்லை என்றும் பல கருத்து பரிமாற்றங்கள்.

அந்த சிலைகளைப்பற்றிய ஒரு எளிய அறிமுகம். தஞ்சை இராஜராஜேஷ்வரம், பெருவுடையாருக்கு பல நிவந்தங்களும் வந்து குவிகின்றன.
அரசர், அரண்மனை பெண்டிர், படைத்தலைவர்கள்,
அமைச்சர்கள், குடிமக்கள், என்று நிவந்தங்கள் வந்து
நிரம்பின.

செப்பு படிமங்களும், பிரதிமமும் நிறைந்தன, அவ்வாறு கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்..

" பொய்கை நாட்டு கிழவன் ஆதித்த சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் "

இவரும் தன் பங்குக்கு செப்பு படிமங்களை தானமாக அளித்தார்.

சுந்தரர், பரவை நங்கையார், சம்பந்தர் என்று நாயன்மார்களின் படிமங்களை எடுத்தார். இருந்தும் அவருக்கு ஒரு குறை. எத்தனையோ அடியார்களின் படிமங்களை எடுத்தும், நிறைவில்லை அவருக்கு. கதைகளில் கேட்டறிந்த அடியார்களுக்கு படிமம் எடுத்தாகி விட்டது. ஆனால் கதைகளிலும், காப்பியங்களிலும் கண்டும் கேட்டுமிராத, பல உன்னத சாதனைகளுக்குச் சொந்தக்காரராய் ஒருவர் உள்ளாரே. நாடு கொண்டாடும் தென்கயிலாயமாய்
தட்சிணமேருவை இவ்வுலகிற்கு அளித்த அடியார், மக்களுக்கான மன்னனாய் வாழும் பெரும் அடியார் அல்லவா இவர்..? இவருக்கு படிமம் எடுக்காமல் இருப்பதா..? எடுத்தே விட்டார்.

மாமன்னர் இராஜராஜ சோழனுக்கும்..
பட்டத்தரசி லோகமாதேவிக்கும்...
செப்பு படிமம் எடுத்தே விட்டார்..
தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு. ( Ssi vol 2 no 38.)
தனது தலைவனை பெரியபெருமாள் எனக்குறிப்பிட்டு,
இராஜராஜனுக்கும், லோகமாதேவிக்கும் எடுத்த படிமங்களை பற்றி விரிவாகச் சொல்கின்றன. படிமங்களின் நீளம் அகலம் உயரம், குறிப்பிட்டு அவைகளுக்கு வழங்கப்பட்ட பொன் முதலான ஆபரணங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

எத்தனையோ கனவுகளுடன், ஆசை ஆசையாய், பொய்கைநாடு என்னும் சிறு கிராமத்தைச் சேர்ந்த தென்னவன் என்பவர் தன் மன்னனுக்காக எடுத்த 
இராஜராஜர் மற்றும் லோகமாதேவியின் திருமேனிகள், இப்போது நம்மிடம் வந்துவிட்டது.

ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களால் மீட்கப்பட்ட, மாமன்னன் ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டு மீண்டும் பெரியக்கோயிலில் வைக்கப்படுவதென்பது, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சரித்திரச் சாதனையாகவே போற்றப்படுகிறது.


ராஜ ராஜ சோழன் இறந்த பிறகு பழையாறை உடையாளூரில் எழுப்பப்பட்ட அவருடைய மாளிகைக்கு 'தேவர் திருமாளிகை'என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ( இது பள்ளிப்படை என்று நிரூபிக்கப்படவில்லை)






வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்