வெள்ளி, 31 மார்ச், 2023

சோழர் செப்பேடுகள்


ஒரு அரசனின் நில தானங்கள், கொடைகள், சலுகைகள். இதைக்குறித்த அரசனின் ஆணைகளை செம்புத் தகடுகளில் பொறிக்கப்பட்டு அவைகள் ஆவணங்களாக அறிவிக்கப்படும். இந்த செம்பு பட்டயங்களே செப்பேடுகள் எனப்படும்.

இந்த செப்பேடுகளில் தானம் குறித்த செய்தி பிரதானமாக அமைந்தாலும், மேலும் பலத் தகவல்களும் பதிவுசெய்யப்படுகிறது.

அரசனின் விபரம், அவனின் முன்னோர், அவனது வாரிசு விபரம், அவனது வெற்றி, இன்னும் பல விபரங்கள் அச் செப்பேட்டில் காணப்படுகிறது. இவ்விபரங்கள் மிகச்சிறந்த வரலாற்றுத் தரவுகளாக உள்ளன.


அரசன் வழங்கும் கொடையானது முடிவு செய்யப்பட்டு, அதன் விபரங்கள் ஒரு ஓலையில் எழுதப்படும். ஓலையில் எழுதப்பட்ட விபரங்களை அரசு உயர் அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். அதன் பிறகு ஓலையில் உள்ள விபரங்கள் செப்பேடுகளில் பொறிக்கப்படும்.

செம்பு கட்டிகளை உருக்கி அடித்து பட்டைகளாக செய்வார்கள். அதன் இலகுவான பரப்பின் மேல் விபரங்களை ஒரு பண்டிதர் எழுத்தால் எழுதுவார். அதன் பிறகு பட்டயங்கள் நன்கு காய்ந்த பிறகு எழுத்தின் மேல் உளி கொண்டு செதுக்கி செப்பேடுகள் முழுமையடையும். ஒவ்வொறு பட்டையத்திலும் எண்கள் இடப்படும்.



பட்டைகளின் ஓரத்திலோ, நடுவிலோ துளைகள் இடப்படும்.

இவ்வாறு எழுதப்பட்ட செப்பு பட்டயங்கள் ஒரு வளையத்தில் கோர்க்கப்படும். வளையத்தின் முகப்பில் அரசனது முத்திரையும் செம்பில் செதுக்கி இணைப்பார்கள்.

சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், மற்றும் பல சிற்றரசர்கள் ஏராளமான செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர்.

















இதுவரை சோழர் காலத்திய செப்பேடுகளாக நமக்கு கிடைத்திருப்பவை..

1. உதயேந்திரம் செப்பேடு..
( முதல் பராந்தகச் சோழனால் வெளியிடப்பட்டது
கி.பி. 922)

2 வேலஞ்சேரிச் செப்பேடு.
( முதல் பராந்தகச் சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 932)

3 அன்பில் செப்பேடு. (சுந்தரச் சோழனால் வெளியிடப்பட்டது
கி.பி 961.)

4 . திருச்செங்கோடு செப்பேடு. - 
( இராசகேசரி. வெளியிடப்பட்டது.
கி.பி.961)

5 . திருச்செங்கோடு செப்பேடு - 2 

6. சென்னை அருங்காட்சியகச் செப்பேடு.
( உத்தமச் சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 986) 

7. பெரிய லெய்டன் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. கி.பி. 1005)

8. திருவாலங்காட்டுச் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1018)

9. கரந்தைச் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1020)

10. திருக்களர்ச் செப்பேடுகள் 
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1030)

11. எசாலம் செப்பேடு.
( முதலாம் இராஜேந்திரன். 
கி.பி. 1037)

12 . திருக்களர் செப்பேடு. 2
(முதலாம் இராசாதிராசன்)

13. சாராலச் செப்பேடு.
( வீரராஜேந்திரன்.
கி.பி. 1069)

14.சிறிய லெய்டன் செப்பேடு.
( முதலாம் குலோத்துங்கசோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1090)

15. திருக்களர்ச் செப்பேடு. - 3 
( முதலாம் குலோத்துங்கன். 
கி.பி.1098 )

16. திருக்களர்ச் செப்பேடுகள் - 4 (இரண்டாம் இராஜராஜன்.
கி.பி. 1164)

17. திருக்களர்ச் செப்பேடு. - 5 
மூன்றாம் குலோத்துங்கன்.
கி.பி. 1207)

18. திருவிந்தளூர் செப்பேடு..
( இரண்டாம் இராஜேந்திரன்) 


சோழர் செப்பேடுகள்.


சோழர் செப்பேடுகள் என்னும் நூல் 2013 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைகழகம் வெளியிட்டது.

மிகச்சிறந்த நூல். பதிப்பாசிரியர் புலவர் வே. மகாதேவன்.

இணைப்பதிப்பாசிரியர் முனைவர் க.சங்கரநாரயணன்.

சோழர்களின் செப்பேடுகள். அதில் உள்ள விபரங்கள் பற்றிய தகவல்களின் முழுமையானத் தொகுப்பு..

1/4 டெம்மி. பெரிய அளவு..1215 பக்கங்கள். ஏறக்குறைய ஒரு தலையணை சைஸ்.

விலை. ரூ. 1350.

சோழர்களது செப்பேடு பற்றிய விபரங்கள் முழுமையாக எழுதப்பட்டுள்ளது. எந்த ஒன்றும் விடுபடவில்லை.

செப்பேடுகள் என்றால் என்ன.?
அதில் எழுத்துக்கள் எவ்வாறு எழுதுவார்கள்.? அடிப்படை விபரங்கள். ஒவ்வொறு செப்பேட்டின் முழுத்தரவும் உள்ளது.

எங்கே, எப்போது கிடைத்தது, ? எந்த ஆவணத்தில் பதிவிடப்பட்டது.? இலச்சினை மற்றும் ஏடுகள் விபரம். சமஸ்க்ருத சுலோகம்.. தமிழாக்கம்.. அதன் விளக்கம்.. தமிழ்ப் பகுதி.. விளக்கவுரை.. பொழிப்புரை.. குறிப்பிட்ட செப்பேட்டுடன் தொடர்புடைய ஆய்வு செய்திகள் , கல்வெட்டுகள், என்று முழுமையான தகவல்கள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது.

சோழர் செப்பேடுகள் பற்றிய விபரங்கள் அடங்கிய முற்றிலும் முழுமையான நூல் இது. எந்த ஒரு சுய சார்பு கருத்துக்களையும் திணிக்காத, என்ன உள்ளதோ அதை மட்டுமே கொடுத்த. ஆகச் சிறந்த ஆய்வு நூல்
.









உதயந்திரம் செப்பேடு. முதாலாம் பராந்தகன் சோழத்தேவர் (கி.பி. 922)

சோழர்களது செப்பேடுகளில் காலத்தால் மிகவும் மூத்தது உதயேந்திரம் செப்பேடு ஆகும்.

கி.பி. 1850 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள உதயேந்திரம் என்னும் ஊரின் சௌந்திரராஜபெருமாள் கோவில் தர்மகர்த்தாவிடம் இச்செப்பேடு தொகுதிகள் இருந்தது.

இச்செப்பேட்டை வாசித்த கல்வெட்டாய்வாளர் திரு ஹூல்சு அவர்கள் தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி எண் 2 பாகம் 3 ல் 76 ம் எண் சாசனமாக பதிப்பித்தார். மதுரை கொண்ட கோபரகேசரி பராந்தகனின் 15 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.

இச்செப்பேட்டில் 7 பட்டைகள் உள்ளன. செப்பேட்டின் முதல் பகுதி வடமொழியிலும், இரண்டாம் பகுதி தமிழ் மொழியிலும் உள்ளது.

907 ல் ஆட்சிக்கு வந்த பராந்தகசோழனின் 15 ம் ஆட்சியாண்டில் இச் செப்பேடு வெளியிடப்பட்டதால் இச்செப்பேட்டின் காலம் கி.பி. 922.

கங்கமன்னன் இரண்டாம் பிருத்விபதியின் வேண்டுகோளை ஏற்று, உதயச்சந்திரமங்கலம் என்னும் ஊரில் வாழும் பிராமணர்களுக்கு இரண்டு கிராமத்தை தானமாக வழங்கினார் சோழ வேந்தன் பராந்தகன். தானமாக வழங்ப்பட்டபகுதி வீரநாரயணச்சேரி என்று பராந்தகனது பெயராலே வழங்கப்பட்டது. இதற்கான அரச ஆணைதான் உதயேந்திரம் செப்பேடு.

இச்செப்பேட்டில் அதிமுக்கியமான வரலாற்றுத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சோழ சரித்திரத்தில் மிகப்பெரும் பங்காற்றிய திருப்புறம்பியம் போர் பற்றிய குறிப்பு இச்செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது.

இனி செப்பேட்டில் காணப்படும் செய்திகளின் அவசியாமானவைப் பற்றியத் தொகுப்பு.

முதல் பகுதியில் சோழ அரச பரம்பரை பற்றியும், இரண்டாம் பகுதியில் கங்க மன்னர்களின் வரிசையும் உள்ளன. பிறகு தானம் பற்றிய செய்தி..

ஆரம்ப செய்யுட்கள் கடவுள் வாழ்த்துகளுடன் துவங்குகின்றன.

செய்யுள் 1&2

பெருமாள், சிவன், பிரம்மா, வாழ்த்துகள்.

செய்யுள் 3

திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார். பிறகு மரீசி. அதன் பிறகு கோத்திரத்தை உருவாக்கிய கச்யபர், அதன் பிறகு சூரியன். பிறகு ருத்திரசித், சந்திரசித் .. இந்தக் குலத்தில் அரசர்களின் உத்தமனான சிபி தோன்றினான். அவன் புறாவை காத்தவன்.

செய்யுள் 4 - 11

கோக்கிள்ளி,
சோழன்,
கரிகாலன்,
கோச்செங்கணான்

போன்ற அரசர்கள் தோன்றிய சோழர்குலத்தில் வெற்றித்திருமகனான விஜயாலயன் தோன்றினான்.

அவனுக்கு மகனாக ஆதித்தன் பிறந்தான். அந்த ஆதித்தனுக்கு மகனாக ஸ்ரீவீரநாரயணன் ( பராந்தகன்) தோன்றினான். எதிரிகளுக்கு காட்டுத்தீ போன்றவன் கோவில்கள் எடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டான்.கேரள அரசனின் மகளை மணந்தான். இரு பாண அரசர்கள் மற்றும் வைதும்பர்களை வென்றான். பாண்டியர் தலைவனை போரில் சீர்குலைத்த அவனது படை மதுரையை கைப்பற்றியது. பாண்டியன் இராசசிம்மன் தோற்று பின்வாங்கினான்.

செய்யுள் 12 முதல் கங்கர்களின் வம்சம் பற்றிய செய்திகள் ...

கங்கர்குல முதல்வன் கொங்கணி , பாணர்களை வெல்வதற்காக பட்டாபிசேகம் செய்யப்பட்டான். ஸ்ரீவிஷ்ணுகோபன், அரி, மாதவன், துர்வினீதன், பூவிக்ரமன் பிறப்பால் பெருமைகொண்ட கங்கர் குலத்தில் சிவமாரனின் மகனாக பிருதிவீபதி ( முதலாம்) தோன்றினான்.

உதயேந்திரம் செப்பேட்டின் 18 வது செய்யுள் திரும்புறம்பியம் போர் பற்றிய செய்தியை பதிவு செய்கிறது.

வீரனான பிரிதிவீபதி திரும்புறம்பியத்தில் நடந்த போரில் வரகுணபாண்டியனை வென்றான். அபராஜிதனின் வெற்றியை உறுதி செய்துவிட்டு அப்போர்க் களத்தில் இறந்தான்.

செய்யுள் 19 - 28

முதலாம் பிருதிவீபதியின் மகனாக மாரசிம்மன்.அவனுக்கு (இரண்டாம்) பிருதிவீபதி பிறந்தான். இவன் அரசர்களில் சிங்கம் போன்றவன். பராந்தகச் சோழனிடமிருந்து பாணர்களுக்கு அரசனாகும் ஆணையான மாவலிவாணராயன் என்னும் பட்டம் பெற்றான்.

மகாபலியின் வழிவந்த பாணர்களின் அரசு அவனுக்கு வழங்கப்பட்டது அத்திமல்லன் என்னும் பெயரைப் பெற்றான். தான் வழங்கும் தானத்தை பராந்தகச் சோழன் பாதுகாக்கவேண்டும் என்று தலையால் வணங்கி கேட்கிறான். கடைக்காட்டூர் என்று பெயருள்ள கிராமத்தை உதயச்சதுர்வேதிமங்கலத்திற்குக் கொடுத்தான். சமணர்களுக்கு உரிமையான இரண்டு பட்டிகளை விலக்கி அரசன் நிலத்தை வணங்கினான்.

அரசனின் ஆணையும், நில எல்லைகளும் வரையறை செய்யப்படுகின்றன.

இத்துடன் இச்செப்பேட்டு செய்திகள் நிறைவு பெறுகின்றன..

இச்செப்பேட்டில் நமக்கு கிடைக்கக்கூடிய அவசியத்தரவுகள்.

விஜயாலயன் மகன் ஆதித்தன். அவனது மகன் பராந்தகன். அவன் கேரள இளவரசி ஒருவரை மணந்தான். வாணர் மற்றும் வைதும்பர்களை வென்றான். இராசசிம்ம பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றினான்.

திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி இச்செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது. வேறு எந்த ஒரு சோழர் சாசனத்திலும் திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி இல்லை.

சோழ கங்கர்களின் உறவு மற்றும் கங்க அரசர்களின் பட்டியலும் இச்செப்பேடு மூலம் நமக்குக் கிடைக்கிறது.







வேளஞ்சேரி செப்பேடு. முதலாம் பராந்தகன் சோழத்தேவர் (கி.பி. 932)

6.10.1977 ஆம் வருடம். திருத்தணி அருகே உள்ள வேளஞ்சேரி என்னும் கிராமத்தில் உள்ள ஒருபள்ளிக்கூடம். பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது புதைந்திருந்த சிலைகள் சிலவற்றைக் கண்டார்கள். விடயம் அறிந்து வந்த தொல்லியல் துறையினர் அங்கே கிடந்தவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் இயக்குநர் இரா.நாகசாமியின் மேற்பார்வையில் திரு.நடன காசிநாதன் அவர்கள் அந்த பள்ளிக்குச் சென்று அங்கே கிடைத்த பொருட்களை பார்வையிட்டார். அதில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேட்டுத் தொகுதிகள் இருந்தன.

பராந்தகச்சோழரின் செப்பேடு ஒன்று. அபராஜிதப் பல்லவரின் செப்பேடு ஒன்று.

பராந்தகனின் செப்பேடு வேளஞ்சேரி செப்பேடு என்றும், அபராஜிதனின் செப்பேடு திருத்தணிச் செப்பேடு என்றும் தொல்லியல் துறையால் அழைக்கப்பட்டன.

இந்த செப்பேடுகளில் காணப்படும் விபரகளை திரு. நாகசாமி அவர்கள், திருத்தணி மற்றும் வேளஞ்சேரி செப்பேடுகள் என்னும் தலைப்பில் தொல்லியல் துறை வெளியீடாக ஒரு நூலை வெளியிட்டார்.

வேளஞ்சேரி செப்பேடு ஐந்து பட்டைகளைக் கொண்டது. பட்டைகளின் இருபுறமும் எழுத்துக்கள் உள்ளன. இப்பட்டைகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு வளையத்தின் முகப்பில் இலச்சினை உள்ளது.

வட்ட வடிவமான இலச்சினையில் சோழர்களின் முத்திரை.
இரு மீன்களின் முன் ஒரு புலி அமர்ந்துள்ளது. இரு புறமும் இரு விளக்குத் தாங்கிகள் உள்ளன. மேலே குடைகளும் சாமரங்களும் உள்ளது. மொத்த அமைப்பின் கீழ் வில் ஒன்று படுக்கை வசமாக உள்ளது.. இலச்சினையின் விளிம்பில் கிரந்த எழுத்தில் சுலோகம் உள்ளது.

" ஸ்ரீமத் சந்ரந்த்யதேரேவ
சோளம்ஸ ஸ்ரீகாமணே |
சாஸனம் சோளபூபர்த்து பரகேசரி வர்ம்மண||

" சந்திரனை போன்ற ஒளி கொண்டவனும் சோழத்தின் தலையிற் சூடும் மணியை போன்றவனுமான பரகேசரிவர்மனின் சாசனம். "

செப்பேட்டின் முதல் பகுதியில் 29 வரிகள் வடமொழியிலும், இரண்டாம் பகுதியில் 48 வரிகள் தமிழிலும் உள்ளன.

முதலாம் பராந்தகளிள் 25 ஆம் ஆட்சியாண்டில் இச் செப்பேடு வெளியிடப்பட்டது.

மேலிருஞ்சேரு என்னும் கிராமத்தைச் சேர்ந்த அந்தணர்களுக்கு நிலம் வழங்கிய அரசனின் ஆணைதான் இச் செப்பேடு..

முதல் பகுதியில் மங்கல வாழ்த்தோடு துவங்குகிறது..

செய்யுள் 1-7

திருமால் வாழ்த்து. திருமாலின் நாபியில் உதித்த பிரம்மா. அவருக்கு பின் மரீசி. அவருக்கு மகனாக கச்யபர். அவருக்குப்பின் சூரியதேவர். இக்குலத்தில் உசிநரன் என்னும் மன்னன் பிறந்தான். சோழர்குலத் திலகம் சிபி பிறந்தான். அக்னித்தேவன் அவனை சோதிக்கும் பொருட்டு பருந்தாக வந்தபோது, தன் சதையை பருந்துக்குக் கொடுத்து புறாவைக் காத்தான்.

செய்யுள் 8 

பனிமலையின் தடத்தை பதித்தவனும், காவிரியை இரு கரைக்குள் அடக்கியவனுமான கரிகாலன் அக்குலத்தில் பிறந்தான்.கரிகாலனது ஆணையால் காஞ்சியில் மேகத்தைத் தொடும் மாளிகைகள் உண்டாயிற்று.

செய்யுள் - 9

சிலந்தியின் தியாகத்தால் உவகை கொண்ட சிவன் அதை சோழர் மரபில் மன்னனாக பிறக்கச் செய்தார். கோச்செங்கண்ணான் என்னும் பெயரில் சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்தது.

செய்யுள். 10 - 15

அந்தக் குலத்தில் ஒற்றியூரன் என்பவன் பிறந்தான். அவனுக்கு, எதிரிகளாகிய தொடர்களுக்கு காட்டுத்தீயானவன் ( விஜயாலயன்) பிறந்தான். அவனுக்கு குபேரனுக்கு சமமான பெருமையுடைய ஆதித்தன் பிறந்தான். ஆதித்தனிடமிருந்து எதிரிகளுக்கு கூற்றுவன் போல் பராந்தகன் தோன்றினான். அவன் இராமேஷ்வரம் ,கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம், இவற்றில் தன் வீரத்தால் கொண்டுவரப்பட்ட தங்கத்தைக் கொண்டு துலாபாரம் ஏறினான்.

செய்யுள் 16 - 17

ப்ரம்மவிருத்திராசன் வேண்டுகோள் விட, கிளிநல்லூரைச் சேர்ந்த சர்வதேவன் என்பவன் இச்சாசனத்தின் ஆணத்தி ஆவான். தானத்தை பராந்தகச் சோழன் நீர் வார்த்து பக்தியோடு அளித்தான். உருத்சன் என்னும் பெயரையுடையவன் இச்சாசனத்தைச் செய்தான். இந்த தர்மத்தை காக்க வேண்டி வீரசோழன் யாசிக்கிறான்..

தமிழ்ப்பகுதியில் தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் வரையறைகள் குறிக்கப்பட்டுள்ளன.

இச்செப்பேட்டில் நமக்குக்கிடைக்கும் சில அவசியத்தரவுகள்.

கரிகாலன் இமயமலையில் தடம்பதித்த செய்தி. காவிரியாற்றுக்கு கரை எழுப்பியது. காஞ்சியில் மாளிகைகள் எடுத்தது. 



கோச்செங்கணானின் முற்பிறப்பான சிலந்தி வரலாறு. விஜயாலனின் தந்தை பெயர் ஒற்றியூரன்.

அன்பில் செப்பேடு. சுந்தரச்சோழத்தேவர் (கி.பி. 961)

இச்செப்பேடு சுந்தரச் சோழரின் 4 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. அவர் 957 ல் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்னும் ஆய்வாளர்களின் கணிப்பின்படி இச் செப்பேட்டின் காலாம் கி.பி. 961.

திருச்சிக்கு அருகே உள்ள அன்பில் என்னும் ஊர். இவ்வூரில் உள்ள ஒரு விவாசாயி தனது வீட்டின் பராமரிப்பு பணியின்போது அடித்தளத்தைத் தோண்ட இச்செப்பேடு கிடைத்தது. அவ்வூரில் உள்ள லெட்சுமணன் செட்டியாரிடம் செப்பேட்டை அந்த விவசாயி கொடுத்தார். செட்டியார் அவர்கள் தமிழ்தாத்தா உ.வே. சாமிநாதஐயரிடம் கொடுத்தார். அவர் கல்வெட்டாய்வாளார் திரு.கோபிநாதராவ் அவர்களிடம் ஒப்படைத்தார்.

திரு. T.a. கோபிநாதராவ் அவர்கள் இச்செப்பேட்டு விபரங்களை Epigraphy indica vol 15 ,,ல் Page no 44 - 72 வரை பதிப்பித்தார்..

இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழனின்
4 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.

தனது அமைச்சரான அன்பில் என்னும்
ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரம்மாதிதாசருக்கு 10 வேலி நிலத்தை கருணாகரமங்கலம் என்று பெயர் சூட்டி சுந்தரச்சோழன் கொடையாக வழங்கினார். இதற்கான ஆவனமே இச்செப்பேடு.

மொத்தம் 11 பட்டைகள் உள்ளன. பட்டைகளின் இருபக்கமும் எழுத்துக்கள் உள்ளன.

கோர்க்கப்பட்ட வளையத்தின் முகப்பு இலச்சினையில் சோழர் முத்திரை உள்ளது. அமர்ந்துள்ள புலியின் முன் இரட்டை கயல். படுக்கைவசமாய் வில். இரு விளக்குதாங்கிகள், இரு சாமரங்கள், ஒரு குடை உள்ளன. இலச்சினையின் விளிம்பில் சாசன சுலோகம் உள்ளது.

" ஸஸ்வத் விஸ்வம்பரா நேத்ரம் லஷ்மீஜய ஸரோருஹம் சாஸநம் ஸ்ரீமத் ராஜ கேஸரி வர்ம்மண "

உலகிற்கு கண் போன்றதும் இலட்சுமியின் கையில் உள்ள வெற்றித் தாமரை போன்றதுமான இந்த சாசனம் ராஜகேசரி வர்ம்மணுடையது..

திருமால் மற்றும் பரமேஷ்வரனின் காப்பு செய்யுளுடன் துவங்குகிறது.

செய்யுள் 1- 11

திருமகளின் கணவனான விஷ்ணுவின் திருவடித்தாமரைகள் உங்களுக்கு செல்வத்தை வழங்கட்டும். பிறைச் சந்திரனை சடையில் தரித்த பரமேச்வரனின் தோள்களாகிய தண்டங்கள் உங்களுக்கு பெரும் செல்வத்தை வழங்கட்டும்.சிறந்த சோழர் குலம் இவ்வுலகை காப்பாற்றட்டும். சோழமரபின் மூலமாக திகழ்வன் சூரியன். தாமரைக் கண்ணனான பெருமாளின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார். பிரம்மாவிடமிருந்து மரீசி தோன்றினார். மரீசியிடமிருந்து கச்யபர் தோன்றினார். அவரிடமிருந்து அர்யமா என்னும் பெயருடைய சூரியன் தோன்றினார். சூரியனிடமிருத்தது சிபியின் பரம்பரை தோன்றியது. அந்தக்குலத்தில் உபசத் என்னும் மகாவீரன் பிறந்தான். உருத்திரசித், சந்திரசித், உசீநரன் .. அவனுக்கு சிபி பிறந்தான். அவன் தனது உடல் சதையை வெட்டி தராசில் இட்டு புறாவைக் காத்தான்.

செய்யுள் 12 - 15

அந்தக்குலத்தில் சோழன் என்னும் மன்னன் பிறந்தான். அதன்பிறகு இம்மன்னனின் பெயரையே மற்றவர்களும் பெற்றனர். அவர்கள் ஆண்ட நாடும் சோழநாடு என்று பெயர் பெற்றது. இக்குலத்தில் சென்னி, கிள்ளி, முதலானவர்களைத் தொடர்ந்து கரிகாலன் ஆண்டான். இவர்கள் ஆண்டு சுவர்க்கம் சென்றபிறகு, எல்லா ஊர்களிலும் சிவனுக்கு கோவில் எழுப்பிய கோச்செங்கணான் பிறந்தார். இவனிடமிருந்து நல்லடிக்கோன் என்னும் மன்னன் பிறந்தான். அதன் பிறகு வளபன் தோன்றினான். அதன்பிறகு இந்திரனுக்கு சமமான ஸ்ரீகண்டன் தோன்றினான்.

செய்யுள் 16 - 20

இவனுக்கு அடுத்து வெற்றிகளின் உறைவிடமாகத் திகழ்ந்த விஜயாலயன் தோன்றினான். வீரமும் வலிமையும் உடைய விஜயாலனிடமிருந்து இராசகேசரி ( ஆதித்தன்) தோன்றினான். அரசர்களில் நாரயணன் போன்றவன் அவன். காவிரியின் இரு கரைகளிலும் சிவனுக்கு கற்றளியாக பெருங்கோவில்கள் எடுத்தான். அவனிடமிருந்து வீரசோழன் ( பராந்தகன்) தோன்றினான். வீரத்தின் எல்லையாகத் திகழ்ந்த அவனது புகழ் எல்லாத் திசைகளிலும் பரவியது.

செய்யுள் 21 - 24

அவன் வேரூன்றி நின்ற மன்னர்களை விளையாட்டாய் பிடுங்கி எறிந்தான். மதுரையை கைப்பற்றினான். பழுவேட்டரையர் என்னும் கேரள மன்னனின் மகளை மணந்தான். அவர்களுக்கு அரிஞ்சயன் பிறந்தான். அவன் வைதும்பக்குலத்தில் தோன்றிய கல்யாணியை மணந்தான்.

செய்யுள் 25 - 30

அந்த வைதும்ப மகளிடத்தில் தன் பாட்டனின்( பராந்தகன்) குணத்தையும் பெயரையும் கொண்ட அரசன் தோன்றினான். மன்மதனையொத்த அழகுடைய அவன் சுந்தரன் என அழைக்கப்பட்டான்.
உதயசூரியனின் அழகைப் பெற்றிருந்தான். அவனது நாடு பல்வேறு மரங்கள் சூழ வளமுடன் இருந்தது. எல்லைக் காடுகளில் அவனது போர் யானைகள் எதிரிகளற்று தத்தம் பெண் யானைகளோடு விளையாடின. அவனது ஆட்சியில் எந்த ஒரு மனிதனும் நோயினால் இறந்தது இல்லை.அனது படைகள் எழுப்பும் புழுதி வானுலகை அடையும் அளவிற்குப் பெரிது.

செய்யுள் 31 - 46

அவனுடைய அமைச்சராக அனிருத்தர் என்னும் பெயருடையவர் இருந்தார்.
அந்தணர்களில் சிறந்தவர். குணக்குவியல்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். ஸ்ரீரங்கநாதர் கோவிலில் பங்குனி உற்சவத்தில் பெரும் அமுது படைப்பார்.அவருடைய தந்தை நாரயணன் என்னும் பெயருடையவர். அவருடைய பாட்டனார் பெயரும் அனிருத்தர் என்பதாகும். அவரும் ஸ்ரீரங்கநாதருக்கு பெரும் அமுது படைப்பார். அவருடைய கொள்ளுபாட்டனாரும் வேண்டி நிற்கும் அனைவருக்கும் தானிய மழை பொழிந்தவர். இவருக்கு அரசன் அன்பால் ஒரு கிராமத்தை அளித்தான். பத்துவேலி நிலத்தை கருணாகரமங்கலம் என்று பெயர் சூட்டி நிபந்தனைகளுடன் பெண் யானையால் எல்லை குறிக்கப்பட்டு வழங்கினான். பிரமாதிராசன் என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தான். பல்லவமுத்திராதிராசன் என்போன் ஆணத்தியாக செயல்பட்டான். மாதவப்பட்டன் என்பவன் இந்த செப்பேட்டை யாத்தான்.

இத்துடன் வடமொழிப்பகுதி நிறைவுற்று, அடுத்தத் தமிழ் பகுதியில் நிலத்தின் எல்லைகள், பிடி சூழ்தல் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

இச்செப்பேட்டில் நமக்குக் கிடைக்கும் சில அவசிய வரலாற்று செய்திகள்..

சங்க இலக்கியங்களில் காணப்படும், இளஞ்சேட்சென்னி, நெடுமுடிக்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன், போன்றவர்களின் பின்னொட்டு பெயர்கள் இச்செப்பேட்டில் காணப்படுகிறது.

இச்செப்பேட்டில் மட்டும் வரும் ஸ்ரீகண்டன் என்ற பெயருடைய சோழ மன்னனை தெலுங்குச் சோழர் என்று சிலர் கூறுவர். இது முற்றிலும் தவறு. வல்லம் தலபுராணத்தில் பழயாறையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் ஸ்ரீகண்டச்சோழன்.

முற்காலச் சோழர்களில் கோச்செங்கணானுக்குப் பிறகு தகவல் இல்லை என்று ஒரு கருத்து பொதுவாக நிலவினாலும், இச்செப்பேட்டில் கோச்செங்கணான் மகனாக நல்லடிக்கோன் என்பவர் இருக்கிறார்.

விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்தன், காவிரியின் இரு கரைகளிலும் சிவனுக்கு பல பெருங்கோவில்கள் எடுத்த செய்தி சிறப்பான ஒன்று.

பழுவேட்டரையரின் மகளை பராந்தகன் மணந்தான். அவர்களுக்கு பிறந்தவனே அரிஞ்சயன்.

பழுவேட்டரையரின் மகளும், பராந்தகனின் தேவியும், அரிஞ்சயரின் தாய். இவரின் பெயர் அருமொழிநங்கை. திருச்சென்னம்பூண்டிக்கல்வெட்டு. S.i.i. vol 8 no 520.

வைதும்பர் மகளான கல்யாணியை அரிஞ்சயன் மணந்தான். இவர்களுக்கு பிறந்தவரே சுந்தரச் சோழன்.

சுந்தச் சோழரின் அமைச்சர் அனிருத்தரின் சிறப்பு. அவரது கொடையளிக்கும் குணம். அவரது முன்னோர்களின் பெருமையும் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.




சுந்தரச்சோழதேவர் திருச்செங்கோடு செப்பேடு 1 & 2 .

தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி எண் 3 ல் . 213 மற்றும் 212 ஆம் எண் சாசனமாக இவ்விரண்டு செப்பேடு விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. பதிப்பித்தவர் H.கிருஷ்ணசாஸ்திரி. திருச்செங்கோடு முத்துச்சுவாமி அவர்களிடமிருந்து தனக்கு இந்த செப்பேடு கிடைத்ததாகவும், விபரங்களை படியெடுத்தபிறகு அவரிடமே இச்செப்பேட்டை ஒப்படைத்தாகவும் சாஸ்திரி எழுதியுள்ளார்.

இந்த செப்பேட்டில் இலட்சினை இல்லை. முழுவதும் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில கிரந்த எழுத்துக்கள் மட்டும் உள்ளது.

முதல் செப்பேடு, இராசகேசரி வர்மனின் 5 ஆம் ஆண்டு. இந்த இராசகேசரி இராஜராஜன் என்பதாக சாஸ்திரி எழுதியுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ராசகேசரி என்பது சுந்தரச்சோழனே என்று முடிவு செய்துள்ளனர்.
5ம் ஆட்சியாண்டு என்பதால் செப்பேட்டின் காலம் கி.பி. 962.

முதல் செப்பேட்டுத்
தொகுதயில் மூன்று ஏடுகள் உள்ளன.

தூசியூரில் எழுந்தருளியிக்கும் திருமூலஸ்தானமுடைய பரமேச்வரனுக்கு பஞ்சமாசப்தம் கொட்டும் உவச்சர்களுக்கு, கொல்லி மழவனான ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் என்பவர் நிலதானம் வழங்கும் விபரங்கள் இச்செப்பேட்டில் உள்ள முக்கியப் பகுதியாகும்.

இரண்டாம் செப்பேடு ஒரே ஒரு பட்டை மட்டும் கொண்டதாக உள்ளது. இது இராசகேசரியான சுந்தரச்சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. இரண்டு தனித்தனி ஆவணங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளன..

முதல் ஆவணம், தூசியூரில் வாங்கப்படும் வீட்டுவரிகளை நிலைநிறுத்துவது குறித்து விபரங்கள்.

இரண்டாம் ஆவணம், ஈழத்துபட்ட கொல்லி மழவன் பிரதிகண்டவர்மன் சுந்தரச்சோழனின் தந்தையின் தாகசாந்திக்காக வழங்கப்பட்ட தானம் குறித்த செய்திகள்.

சுந்தரச்சோழனின் 9 ம் ஆட்சியாண்டில். ஈழப்போர் ஒன்று நடைபெற்றது. அப்போரில் கலந்து கொண்ட கொடும்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளான் இறந்தார். இச் செய்தியை திருவெண்காடு கல்வெட்டு பதிவுசெய்கிறது. இப்போரிலே கொல்லி மழவனும் கலந்து கொண்டு இறந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து..

கொல்லிமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசர்கள், கொல்லி மழவர்கள் மற்றும் மழவரையன் என அழைக்கப்பட்டனர்.








சென்னை அருங்காட்சியகச் செப்பேடு. உத்தமச்சோழத்தேவர் 16 ஆம் ஆட்சியாண்டு. (கி.பி.986)

தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி
3 ல் எண் 128 ல் இச்செப்பேடுப் பற்றிய விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இச்செப்பேடு யாரிடமிருந்து எவ்வாறு கிடைத்தது என்ற விபரத்தை அறியமுடியவில்லை என்று இச்செப்பேட்டை பதிப்பித்த H. கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் குறிப்பிடுகிறிர்.

தற்போது இச்செப்பேடு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

மொத்தம் 5 பட்டைகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு முகப்பு இலச்சினை உள்ளது.

உத்தமச்சோழனின்
16 வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. இச்செப்பேட்டின் காலம் கி.பி. 986

முகப்பு இலச்சினையில் வழக்கமான சோழ முத்திரையே உள்ளது. ஒரு புலி, இரண்டு மீன், படுக்கைவசமாய் வில், இரண்டு விளக்குத்தூண்கள், ஒரு குடை, இரண்டு சாமரங்கள்.

சாசன சுலோகம் இலச்சினையில் பொறிக்கப்பட்டுள்ளது.

" ந்யாயனாம் ஸாஸனம் குர்வத் ஸாஸனம் சக்ரபூப்ருதாத ஸாஸனம் பரகேசரி வர்ம்மண.."

நியாயங்களை நெறிபடுத்தும் ஆணைச்சக்கரத்துள் அடங்கிய அரசர்களுக்கு ஆணையான இது பரகேசரிவர்மணின் சாசனம்..

காஞ்சிபுரம் ஊரகத்துதேவர் கோவிலில் நிவந்தங்களை சரிசெய்யவும், புதிய நிவந்தங்கள் தரவும் அரசனால் இடப்பட்ட ஆணையே இச்செப்பேடு..

வடமொழிப்பகுதியின் உரைநடை பிறகு நான்கு செய்யுள்கள் அதன்பிறகு தமிழ்ப்பகுதி ... இவ்வாறு அமைந்துள்ளன.. இச்செப்பேட்டுத் தொகுதியில் மேலும் சில ஏடுகள் கிடைக்காமல் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடமொழிப்பகுதியில் உள்ள நான்கு செய்யுட்களின் சுருக்கம்..

அவனும், அந்த இருமரபு வழி சேர்ந்த பட்டசாலிகளுக்கும், கருவுளான்படி, கம்சாகப்படி, அதிமானப்பாடி, ஏற்றுவழிச்சேரி என்ற சிற்றூர்களிலும் இருநூறு பொன்களைக் கொடுத்தான். அதிமானபாடி , கருவுளான்பாடி சிற்றூர்களில் பிறந்த நெசவாளர்களை பெருமாளுக்காக தராசு மற்றும் நாழியில் பெற்ற தங்கத்தின் வட்டியாகப் பெற்ற பணத்தின் வரவு செலவுகளை நிர்வாகம் செய்யும் ஸ்ரீகார்யமாக நியமித்தான்.

ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பம் இருநாழி அரசியும் ஒரு நாழி எண்ணையும் சோழநியமத்தில் இருப்பவர்களால் ஊரகத்திலிருக்கும் மூவுலகுடையார்க்கு வழங்கவேண்டும். அவ்வாறு வழங்குவதால் அரசுக்குரிய வரியை செலுத்த வேண்டாம் என்று மதுரையை சீர்குலைத்த சோழன் ஆணையிட்டான். இவ்வாணையை நகரமக்கள் ஒப்புக்கொண்டனர்.

ஊரகத்தில் இருக்கும் பெருமாளின் ஸ்ரீகார்யம் பார்ப்பவர்களோடு சோழர்நியமத்தில் வசிக்கும் குடும்பத்தலைவர்களால் எழுதப்பட்ட வரவுசெலவுகளை அரசனுக்குரிய துணியை நெய்யும் அந்த நான்கு ஊரைச்சேர்ந்தவர்களுக்கு காட்டவேண்டும்..

தமிழ்ப்பகுதியில்..

பரகேசரிவர்மரான உத்தமச்சோழனின் 16 ஆம் ஆட்சியாண்டில் இவ்வாணை வெளியிடப்படுகிறது. காஞ்சியிலுள்ள தனது அரண்மனையில் சித்திரக்கூடத்தில் எழுந்தருளியபோது இவ்வாணையை உத்தமச்சோழன் பிறப்பிக்கிறார். இவ்வாணைக்கான விண்ணப்பம் செய்தவர் உத்தமச்சோழனின் அதிகாரி மூவேந்த வேளான் நக்கன் கணிச்சன் என்பவன்.

ஊரகத்து பெருமாளுக்கு வருமானமான, கோல்நிறைக்கூலி ( தராசால் நிறுக்கப்படும் பொருட்களுக்கான வரி)
காலளவுக்கூலி ( அளந்து விற்கப்படும் பொருட்களுக்கான வரி) கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், பொன், வருமானங்ளுக்குண்டான வட்டி, இக்காரியங்களை நிர்வாகம் செய்ய கருவுளான்பாடி மற்றும் அதிமானப்பாடியை சேர்ந்தவர்களை நியமிக்க விண்ணப்பம் செய்து அது நிறைவேற்றப்பட்டது.

இக்கோவிலுக்கு ஏற்கனவே தானம் அளித்த மூன்று செய்திகளின் குறிப்புகளும் பதிவிடப்பட்டுள்ளது..

மேலும், உத்தமச்சோழனின் 16 ம் ஆட்சியாண்டில் சித்திரை திருவிழா நடத்தவும் நிவந்தம் கொடுக்கப்பட்டது.

இச்செப்பேட்டில் நமக்கு கிடைக்கும் சில அவசியத்தரவுகள்..

உத்தமச்சோழனுக்கு மதுரையை சீர்குலைத்த சோழன் என்னும் ஒரு பெயர் இருப்பது இச்செப்பேட்டில் மட்டும் காணப்படுகிறது.

கோவிலின் வருமான வரவு செலவுகளை இரண்டு ஊர்களைச் சேர்ந்த நெசவாளர்கள் மேற்பார்வையிட்டனர். இவர்கள் ராஜவஸ்த்ரம் தயாரிப்பவர்கள். அதாவது அரசனுக்குரிய ஆடைகளை நெய்பவர்கள்.

தற்போதைய காஞ்சிபுரம் , ஊரகம் உலகளந்தார் கோவிலே இச்செப்பேட்டில் இடம்பெறுகிறது.

ஊரகத்துப் பெருமாள் மேற்குப்பார்த்த முகமாக மிகப்பெரிய சுதையால் ஆன 30 அடி உயரத் திருமேனியாகும்.
இரண்டு கைகளை விரித்து வலது காலை ஊன்றி இடது காலைத்தூக்கிய திரிவிக்ரமனாகிய
உலகளந்த பெருமாள்.
வலது கால் மகாபலியின் தலையின் மேல் அழுந்தியவாறு உள்ளது.

" கச்சிபேட்டு ஊரகத்து நின்றருளினத் தேவர் "

என்று இச்செப்பேட்டில் குறிக்கப்படுகிறார்.









பெரிய லெய்டன் செப்பேடு. இராஜராஜ சோழத்தேவர். 21 ம் ஆட்சியாண்டு. (கி.பி. 1005)

ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள லெய்டன் அருங்காட்சியகத்தில் இச்செப்பேட்டுத் தொகுதிகள் உள்ளது.

இச்செப்பேட்டு விபரங்களை Epigraphy indica vol 22 இல் Page 213 - 266 வரை பதிப்பிக்கப்பட்டு 1933 ம் ஆண்டு வெளிவந்தது. பதிப்பித்தவர் K.v. சுப்பிரமணி ஐய்யர். இச்செப்பேட்டு எவ்வாறு .? யாரிடமிருந்து.? கிடைத்தது என்ற விபரங்கள் கிடைக்கவில்லை..

நாகப்பட்டினத்திலிருக்கும் சூடாமணி பௌத்த விஹாரத்திற்கு ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாகக் கொடுத்ததால் இச்செப்பேடு ஆனைமங்கலச்
செப்பேடு என்றும் அழைக்கப்படும்.

இராஜராஜனின் 21 ஆம் ஆட்சியாண்டில் இந்தக் கொடை வழங்கப்பட்டது. இராஜராஜன் மறைவிற்குப் பிறகு அவரது மகன் இராஜேந்திரன் காலத்தில் இச்செப்பேடு வெளியிடப்பட்டது.

இந்த செப்பேட்டில் 21 பட்டைகள் உள்ளன. 111 வரிகள் வடமொழியிலும் 332 வரிகள் தமிழ் எழுத்துக்களிலும் உள்ளன.

முகப்பு இலச்சினையில் இரு மீன்கள், புலி, இரு பக்கமும் விளக்குத்தாங்கிகள், இதன் மேல் தீபம், கொடை, இருபுறமும் சாமரம், கிடைமட்டமாய் வில், இவைகள் உள்ளன..

முகப்பு இலச்சினையில் இராஜேதிரசோழனின் சாசனம் உள்ளது.

" ராஜத் ராஜன்ய மகுட ஸ்ரேனி ரத்னேஷூ ஸாஸநம் இதி ராஜேந்திர சோளஸ்ய பரகேசரி வர்ம்மண."

அரசர்களின் முடிகளின் வரிசையில் ரத்னம் போன்று திகழும் இது பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழனின் சாசனம். "

சத்திரியசிகாமணி வளநாட்டில் பட்டினக்கூற்றத்தில் நாகப்பட்டினம் என்னும் ஊரில் கடாரத்து அரசன் மாரவிசயோதுங்க வர்மனால், அவனது தந்தையின் பெயரில் சூளாமணி விஹாரம் ஒன்று எடுக்கப்பட்டது. அந்த புத்த விஹாரத்துக்கு ஆனைமங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக இராஜராஜன் வழங்கிய ஆணையே இச்செப்பேட்டு விபரங்களாகும்.

வடமொழிப்பகுதி ..

செய்யுள் 1 - 5


விஷ்ணுவின் தோள்கள் உங்களுக்கு செல்வத்தைப் பெருக்கட்டும். சோழவம்சம் முழு உலகத்தையும் காக்கட்டும். அரசர்களுள் முதல்வனான மனு சூரியனுக்குப்பிறந்தான் பிறகு இட்சுவாகு. பிறகு மாந்தாதா. இவனது மகனாக முசுகுந்தன். அவன் மகனாக வளபன். அந்தக் குலத்தில் புகழ் பெற்ற சிபி தோன்றினான். பிறருக்காக தன் வாழ்க்கையை காத்தவன்.

செய்யுள் 6 


அந்தக் குலத்தில் சோழன் என்னும் மன்னன் பிறந்தான். அதற்குப்பிறகு தோன்றிய அரசர்கள் அவன் பெயரான சோழனென்னும் பெயரை பூண்டனர்.

செய்யுள் 7 - 8


அதன் பிறகு எல்லா எதிரிகளையும் வென்ற இராசகேசரி பிறந்தான். பிறகு பரகேசரி பிறந்தான். இராசகேசரி மற்றும் பரகேசரி என்னும் இந்த மன்னர்களின் பெயரை மாறி மாறிச் சூடிய மற்ற அரசர்களின் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

செய்யுள் 9 - 12.


அதன் பிறகு கூற்றுவனை வென்றவனான மிருத்யுசித் தோன்றினான். பிறகு வியாக்கிரகேது, பஞ்சபன் பிறந்தான். அந்தக்குலத்தில் காவிரிக்கு கரை எடுத்த கரிகாலன் தோன்றினான். அந்தக்குலத்தில் கோச்செங்கணான் என்னும் புகழ் பெற்ற அரசன் பிறந்தான்.

செய்யுள் 13 - 17


சோழர்குலத்தில் எல்லா அரசர்களையும் வெல்லும் திறன்பெற்ற விஜயாலயன் பிறந்தான். அவனுக்கு மகனாக அளவிடமுடியாத ஒளிபொருந்திய ஆதித்தன் பிறந்தான். அந்த ஆதித்தனிடமிருந்து பராந்தகன் என்னும் அரசன் பிறந்தான். சூரியகுத்தின் கொடியை போன்ற அந்த அரசன் சிதம்பரத்தில் பிறை சூடிய பெருமாள் கோவிலுக்கு பொன் வேய்ந்தான்.

செய்யுள் 18 - 20


பராந்தகனுக்கு முத்தீயைப் போன்ற மூன்று புதல்வர் பிறந்தனர். இராசாதித்தன். கண்டராதித்தன். அரிஞ்சயன். பராந்தகன் சுவர்க்கத்தை அடைந்தப்பிறகு இராசாதித்தன் தலைவனான். கிருஷ்ணராஜனோடு நடந்தப் போரில் அவனை படையோடு சேர்ந்து கலங்கடித்தான்.
கூறான அம்புகளால் நெஞ்சு பிளக்கப்பட்டு யானையின் மீது அமர்ந்தவாறே சொர்க்கம் சென்றான்.

செய்யுள் 21 - 23


அதன்பிறகு இராசாதித்தனின் தம்பியும் பெரும் புகழ் பெற்றவனுமான கண்டராதித்தன் அரசன் ஆனான். அவன் மதுராந்தகன் என்னும் பெயரையுடைய மகனை பெற்றான். காவிரியின் வடகரை பூமீயில் தன் பெயரால் ஒரு கிராமத்தை உருவாக்கினான். அவன் சுவர்க்கம் சென்ற பிறகு எதிரி என்னும் காட்டுக்கு காட்டுத்தீ போன்ற அரிஞ்சயன் ஆண்டான்.

செய்யுள் 24 - 25.


அந்த அரிஞ்சயனுக்கு பராந்தகன் ( சுந்தரச்சோழன்) பிறதான். சேவூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தன் கூரிய அம்புகளின் தொகுதியால் திசைகளை நிரப்பினான்.

செய்யுள் 26 - 30


அவன் கரிகாலன் என்னும் மறுபெயருடைய ஆதித்தனையும், சூரியகுலத்திற்கு சிரோமணி போன்ற இராசராசனையும் பெற்றான். அந்த பராந்தகன் இறந்த பிறகு ஆதித்தன் ஆண்டான். அவன் போரில் வீரபாண்டியனோடு இலீலையாய் விளையாடினான். அந்தப்போர் கர்வபட்ட யானையோடு சிங்கக்குட்டி மோதுவது போல் இருந்தது. ஆதித்தனுக்குப் பிறகு கண்டராதித்தனின் மகனும் பெரும் தோள் வலிமையுடைய மதுராந்தகன் ஆண்டான். இவன் இந்திரனைப்போல் புகழையுடையவன். அந்த மதுராந்தகன் வானுலகம் சென்றபிறகு, சோழர் குலத்தின் விளக்கைப்போன்ற இராசராசன் அரியணை ஏறினான்.

செய்யுள் 31 - 34


இராசராசன்.. பாண்டிய , துளு, கேரளா, சிங்கள அரசர்களையும், சத்யாச்சரன் முதலான அரசர்களையும் வென்றான். எல்லா அரசர்களும் தங்களைக் காத்துக்கொள்ள நித்யவிநோதனான இராசராசனின் திருவடிகளில் அடைக்கலமானார்கள். இராசராசனை அவர்கள் இராசாச்சரயன் என்று போற்றினார்கள்.

செய்யுள் 35.


ஒளிபெற்ற பாதபீடத்தை உடைய இராசகேசரிவர்மரான இராஜராஜனின் 21 ம் ஆட்சியாண்டு. சத்ரியசிகாமணி வளநாடு, பட்டினக்கூற்றம் நாகப்பட்டிணத்தில்.....

ஸ்ரீவிஜயநாட்டின் தலைவனும் கடாகத்தின் அதிபதியும் சைலேந்திர வம்சத்தில் பிறந்தவனும் சூளாமணி வர்மனின் மகனான மாராவிஜயோதுங்க வர்மனால் , தனது தந்தையின் பெயரால் எடுக்கப்பட்ட உயர்ந்த பெருமையுடைய மிக அழகானதுமான சூளாமணி விஹாரத்தில் வீற்றிருக்கும் புத்தபகவானுக்கு ஆனைமங்கலம் என்னும் கிராமத்தைக் தானமாக இராஜராஜன் கொடுத்தான்.

செய்யுள் 35 - 40.


இந்த சக்க்கரவர்த்தி தெய்வத்தன்மை அடைந்தபிறகு, இவனது மகனான மதுராந்தகன் ( இராஜேந்திரன்) இந்த சாசனத்தை செய்தான். 


இந்த விஹாரம் வைபத்தோடு இவ்வுலகில் விளங்கட்டும்.கடார அதிபதி தனக்கு பிறகு வரும் மன்னர்களை இந்த அறத்தை காக்குமாறு வேண்டுகிறான். அனந்தநாரயணன் என்பவன் இந்த பிரசஸ்தியை யாத்தான்.

செய்யுள் 41 - 48


அரசனின் பெருந்தன அதிகாரியான தில்லயாளியின் ஆணைப்படி எழுதப்பட்டது. கிருஷ்ணன் என்பவனுடைய இரு புதல்வர்களான ஸ்ரீரங்கன், தாமோதரன்,
வாசுதேவனின் மகனான கிருஷ்ணனும், ஆராவமுதனின் மகனான புருஷோத்தமன். இவர்கள் ஐவரும் இந்த பிரசத்தியை செதுக்கினர்..

தமிழ்ப் பகுதியின் சுருக்கம்.

கோனேரிமை கொண்டான் 21 ஆம் ஆட்சியாண்டில், தஞ்சாவூர் புறம்படியில் இராசாச்ரய மாளிகையின் தெற்குப்பக்கம் உள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் போது, கடார அரசனான சூளமணிபன்பன் சத்திரியசிகாமணி வளநாடு பட்டணக்கூற்றம் நாகபட்டினத்தில் எடுத்த சூளாமணி பன்ம விஹாரபள்ளிக்கு 97 வேலி நிலப்பரப்புடைய ஆனைமங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக வழங்க ஆணை வெளியிடப்பட்டது.

விபரங்களை ஓலையில் எழுதியவர் அமுதன் தீர்த்தங்கரன். ஓலை எழுதுபவர்களின் தலைவர் ஓலை நாயகமாக இருந்தவர் கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயன்.

மேலும் பல அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசனின் ஆணை ஸ்ரீமுகமாக பட்டினக்கூற்றத்திற்கு சென்றது. சபையோர் அரசனின் ஸ்ரீமுகத்தை தலையில் தாங்கி, பிடிசூல் எல்லைகள் வகுக்கும் பணி தொடங்கியது.

இச்செப்பேட்டில் கிடைக்கும் சில அவசியத்தரவுகள்.

பராந்தகச் சோழன் தில்லை சிற்றம்பலத்திற்கு பொன்வேய்ந்த செய்தி.

பராந்தகனின் பிள்ளைகளாக இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், என்ற மூவர்தான் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏனோ உத்தமசீலியை பற்றிய குறிப்பு இல்லை.

பராந்தகன் இறந்தபிறகு இராசாதித்தன் ஆண்டான் என்னும் செய்தியும் சற்று ஆய்வுக்குரியது.

அதேபோல் சுந்தரச்சோழன் இறந்த பிறகு அவனது மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பதவியேற்றான் என்ற செய்தியும் சற்று வியப்புக்குரியது.

இச்செப்பேட்டின் மிக முக்கிய மைய நோக்கம்.

நாகப்பட்டினதில் உள்ள கடாரத்து அரசனால் எடுக்கப்பட்ட பௌத்த விஹாரமான சூடாமணி விஹாரதிற்கு இராஜராஜன் கொடை அளித்த நிகழ்வு.

செப்பேட்டில் இடம் பெறும் ஸ்ரீவிஜயமன்னனால் எழுப்பப்பட்ட
சூடாமணி விஹாரம்
18 ம் நூற்றாண்டு பிற்பகுதி வரை நாகப்பட்டினத்தில் இருந்தது.

1660 இல் டச்சுப்பயணி Woulter schouten என்பவர் நாகைக்கு விஜயம் செய்து இந்த புத்த விஹாரத்தை சீன பகோட என்று குறிப்பு எழுதினார்.

1724 ல் டச்சுப் பாதிரியார் பிரான்சிஸ் வேலன்டைன் ( Francois valentyn) என்பவர் இந்த விஹாரம் பற்றி குறிப்பு எழுதுகிறார்.

1846 இல்
சர் W. எலியட் என்னும் ஆங்கில அறிஞர் தான் எழுதிய பயணக்குறிப்பில் இவ்விஹாரம் பற்றி குறிப்பிடுகிறார். இந்த பௌத்த விஹாரம் நான்கு பக்க கோபுரங்களுடன் மூன்று நிலை கட்டிடமாக இருந்தது. சிமெண்ட் இல்லாமல் செங்கல்லால் எடுக்கப்பட்டது.

" Four sided tower of three stories constructed bricks closely fitted together with out cement. "

என்று எலியட் குறிப்பிடுகிறார்.

புதுச்சேரியிலிருந்து நாகைக்கு வந்த பிரஞ்சு பாதிரியார்களின் தூண்டுதலால் .. அப்போதைய ஆங்கில அரசு 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் நாள் சூடாமணி விஹாரத்தை இடித்தது.

இப்பகுதியில் நடந்த அகழ்வாய்வில் பல புத்தர் சிலைகள் கிடைத்தன.

தற்போது நாகையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தில் சூடாமணி விஹாரம் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.












திருவாலங்காட்டுச் செப்பேடு. இராஜேந்திர சோழத்தேவர் 6 ம் ஆட்சியாண்டில் கி.பி 1018 ல்
வெளியிடப்பட்டது.


சோழர்களது செப்பேடுகளில் மிகவும் பிரபலமான ஒன்று. சில அவசிய வரலாற்றுத் தரவுகளை கொண்ட செப்பேடு இது.

தொல்லியல் துறையின் 1903 -04 ஆண்டறிக்கையில் பதிவு செய்யப்பட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி எண் 3 ல் 205 ஆம் எண்ணில் திரு எச். கிருஷ்ண சாஸ்திரி அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.

இச்செப்பேடு தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

முகப்பு இலச்சினையுடன் மொத்தம் 31 ஏடுகள். பத்து ஏடுகளில் வடமொழிப்பகுதியும் இருபத்தொரு
ஏடுகளில் தமிழ்பகுதியும் பொறிக்கப்பட்டுள்ளன..

முகப்பு இலச்சினை. . மேல் பகுதியில் குடையும், அதன் இருபுறமும் சாமரங்கள் உள்ளன. இலச்சினையின் நடுவே இரு மீன்கள் மற்றும் ஒரு புலி. இதன் இருபுறமும் இரு விளக்குத்தூண்கள். கீழ் பகுதியில்
ஒரு வில்.

இலச்சினையின் விளிம்பில் சமஸ்கிருதத்தில்.

"ஸ்வஸ்திஸ்ரீ ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய
பரகேசரி - வர்ம்மனை : ராஜத் ராஜன்ய மகுட
ஸ்ரேணி ரத்னேஷு ஸாஸனம் "

அரசர்களின் திருமுடி வரிசையில் இரத்தினம் போன்று
திகழும் இது பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழனின் சாசனம்.

ஜெயங்கொண்ட சோழ மண்டலம் சிங்களாந்தகச் சதுர்வேதிமங்கலம் பிரமதேயமான பழையனூரை வெள்ளான் வகை கிராமமாக மாற்றி அதன் வருவாயை திருவலங்காடு மகாதேவருக்கு தேவதானமாக அளிக்கும் ஆணையே இச்செப்பேடு. இந்த ஆணை இராஜேந்திரசோழனின் 6 ம் ஆட்சியாண்டு 88 ம் நாளில் பிறப்பிக்கப்பட்டது.

வடமொழி பகுதியில் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து சோழ அரசர்களின் பட்டியல்
புராணத்திலிருந்து தொடங்கி சோழ மரபு விவரிக்கப்படுகிறது. சூரியனில் தொடங்கி விசுவசித் வரை செல்கிறது. பிறகு இலக்கிய அரசர்களான
பெருநற்கிள்ளி, கரிகாலன், கோச்செங்கனான்.

பிற்கால சோழர்களில் விஜயாலனில் தொடங்குகிறது. விஜயாலனில் தொடங்கி இராஜேந்திரன் வரை
நடந்த முக்கியநிகழ்வுகள் உள்ளன.

தமிழ்ப்பகுதியில் பழையனூர் கிராமத்தை தேவதானமாக திருவாலங்காடு மகாதேவருக்குத் தானமாக கொடுத்த நிகழ்வுகள் உள்ளன.

வடமொழிப்பகுதி.

செய்யுள் 1-2

ஸ்ரீகண்டனான பரமேஷ்வரனின் அணைப்பிற்கு ஏங்கும் பவானி நமக்கு
அருள் புரியட்டும்.. வெற்றித்திருமகள் வாசம் செய்யும் சோழர் வம்சம் இவ்வுலகை வெகுகாலம் காக்கட்டும்.

செய்யுள் 3.

சோழர்குலப்பெருமையை எடுத்துரைக்க இருக்கின்ற 50 எழுத்துக்கள் எமக்குப் போதவில்லை. சரஸ்வதி தாயே மேலும் சில எழுத்துக்களை அருள்வாயாக.

செய்யுள் 4 - 26

புராண அரசர்களின் பட்டியல் ஆரம்பம் ஆகிறது. சோழ முதல் அரசனாக
விவஸ்வான் ( சூரியன்) ஆரம்பம் ஆகிறார்.

இவரைத்தொடந்து

இட்சுவாகு, விகுட்சி, புரஞ்சயன், கட்சிவான், அர்யமா,
அனலப்பிரதாபன், வேனன், ப்ருது, துந்துமாரன், யுவனாச்வன், மாந்தாதா, முசுகுந்தன், வளபன், பிருதுலாட்சன், பார்த்திவசூடாமணி, தீர்க்கபாகு, சாங்கிருதி, பஞ்சபன், சத்தியவிரதன்,

செய்யுள் 27

சோழர்குல அணிகலனாக சிபி என்னும் மன்னன் தோன்றினான். கழுகுக்கு அஞ்சிய புறாவை காக்கும் பொருட்டு தன் உடல்மீதிருந்த பற்றை விடுத்தான் . உசீனரன் மகன் அவன். அவனுக்குப்பிறகு மருத்தன்.

செய்யுள் 28 - 32

அந்தக்குலத்தில் துசியந்தன், பரதன், என்று தொடங்கி. சோழன் என்னும் பெயருடையவன் அரசனான். இதன்பிறகே சூரியகுலத்தோன்றல் சோழர் குலமாக
அவதாரம் எடுத்தது.

சோழனின் மகனாக இராசகேசரியும், அவனது மகன் பரகேசரியும் பிறந்தனர். இதன் பிறகு வந்த சோழஅரசர்கள், இராசகேசரி மற்றும் பரகேசரி பட்டங்களை மாறி மாறி ஏற்றனர்.

செய்யுள் 33 - 41

அந்தக்குலத்தில்.

சித்திரதன், சித்ராச்வன், சித்ரன்வா, சுரகுரு, வியாக்ரகேது ( புலிக்கொடியோன்), நரேந்திரபதி, வசு,
விசுவசித், பெருநற்கிள்ளி, தோன்றினார்கள்.

செய்யுள் 42

அந்தக்குலத்தில் யானைகளுக்கும் ( கரி) கலிகாலத்திற்கும் காலனாக கலிகாலன் தோன்றினான்.காஞ்சி நகரை தங்கத்தால் புதுப்பித்தான். காவேரியின் கரைகளை கட்டி தன் புகழை காட்டினான்.

செய்யுள் 43

அவனுடைய வம்சத்தில் வலிமையுடைய கோச்செங்கனான் பிறந்தான். திரிபுரமெரித்த சிவனின் அருளால் தன் சிலந்தி பிறப்பை விட்டவர்..

செய்யுள் - 44 - 60

அந்த பெருமைமிகு குலத்தில் வீரத்திருவை உடைய விஜயாலயன் பிறந்தான். தஞ்சையை கைப்பற்றி
நிசும்பன் என்னும் அரக்கனை அழித்த துர்க்கைகக்கு கோவில் எடுத்தார்.

அவனது மகனாக ஆதித்தவர்மன்.
அபராஜிதன் என்னும் பல்லவனை போரில் வென்றான்.

அவனுடைய மகன் பராந்தகன் பாண்டியனையும் ஈழத்தையும் வென்றான். இவனது மகன் இராஜாதித்தர் கிருஷ்ணராசனுடன் போரிட்டு வீரசுவர்கம் சென்றான்.
அடுத்து அரிந்தமன் ( அரிஞ்சயர்) அரசன் ஆனான்.

அவனிடமிருந்து ( இரண்டாம்) பராந்தகன் (சுந்தரர்) தோன்றினான். சுந்தரன் ஆண்டபோது துன்பத்தால் எந்த ஒருவரும் " ஆ " என்னும் சொல்லை பயன்படுத்தியது இல்லை.

செய்யுள் 61 - 66

சுந்ரச்சோழனனுக்கு அருண்மொழி வர்மன் மகனாக பிறந்தான். சங்குச் சக்ர ரேகையுடன் திருமாலே அவதரித்தது போல் பிறந்தான். தந்தைவழி தாய்வழி இரு மரபுகளிலும் தூய்மையானவன். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சுந்தரன் தேவருலகை காப்பதற்கு தேவலோகம் சென்றான்.

செய்யுள் 66

சுந்தரச்சோழன் இறந்தப் பிறகு அவரது தேவியான வானவன் மாதேவி உடன் கட்டை ஏறினார்..

செய்யுள் 67 - 68

சுந்தரருக்குப்பிறகு அவனது மைந்தன் ஆதித்தன் ஆண்டான். போரில் பாண்டியனை கொன்றான். பாண்டியனின் தலையோடு உயர்ந்த தூணை தன்னநகரில் நிறுவினான். அதன் பிறகு ஆதித்தன் வானுலகை காணும் ஆசையோடு அஸ்த்தமனமானான்..

செய் - 69.

மக்கள் அனைவரும் அருண்மொழி வர்மனை அரசனாக பதவியேற்க வலியுறுத்தினர். சத்ரிய தர்மத்தின்படி இதை மறுத்த அருண்மொழி தன் சிற்றப்பா உத்தமச்சோழனிடம் நாட்டை ஒப்படைத்தான்.

செய்யுள் 70 - 84

திருமாலின் அவதாரமான அருண்மொழியை இளவரசனாக்கி, உத்தமசோழன் அரசனனான். அவனுக்குப்பிறகு அருண்மொழிவர்மன்
முடிசூடினான். இணையற்ற வலிமை கொண்ட அவன் தென் திசையில் தன் படையெடுப்பைத் துவக்கினான்.
அமரபுயங்கனை வென்ற அவனது படை கடலையே அகழியாக உள்ள உயர்ந்த விழிஞத்தைத் தாக்கி அழித்தது. கப்பல் மூலம் கடலை கடந்து இலங்கையை வென்றது. அவனுடைய கடல் போன்ற படையைக் கண்டு மேலைச்சாளுக்கிய மன்னன் சத்யாச்ரயன் புறமுதுகிட்டான். மலை மற்றும் கடல்கள் சூழ்ந்த கேரள நாட்டை வென்றான். கங்கர், கலிங்கர், ஒட்டர், சௌராஷ்டிரர்கள், சாளுக்கியர்கள் என அனைவரையும்
வென்றான்.

செய்யுள் 86-108

அருண்மொழியின் மகனாக மதுராந்தகன் (இராஜேந்திரன்) பிறந்தான். மன்மதனை போன்ற அழகுடையவன். அவனோடு போரிட்ட அரசர்கள் போரில் இறந்து வானில் ஒளிர்ந்தனர்.தனது வலிமை
கொண்ட படைகளோடு திக்குவிசயம் தொடங்கினான். வலிமைமிக்க பாண்டிய நாட்டை வென்றான். பாண்டிய நாட்டை பாதுகாக்க தனது மகனை சோழபாண்டியன் என்று அமரவைத்தான். பரசுராமனால் பாதுகாக்கப்பட்ட தேசமான கேரளத்தை
வென்றான்.பின்பு வடதிசை நோக்கிச் சென்றான்.

மேற்கு திசைக்கு தன் மகன் சோழபாண்டியனை காவல்
வைத்துவிட்டு காஞ்சிமாநகரை அடைந்தான். சாளுக்கிய அரசனான செயசிம்மனை எதிர்கொண்டான்.
இரட்டநாட்டின் தலைவனான அவன், இரவிகுல மன்னனின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல்
களம்விட்டு அகன்றான். பெறும் செல்வத்தை கைப்பற்றிய மதுராந்தகன் தன் நகரை அடைந்தான்.

செய்யுள் 109 - 119.

இராஜேந்திரன் தன் தேசத்தை கங்கை நீரால் சிறப்பிக்க முடிவு செய்தார். அறமறிந்தோரில் முதல்வனான தன்
படைத்தலைவனுக்கு ஆணையிட்டான். அத்தலைவனுடைய பெரும்படை கங்கையை நோக்கிச் சென்றது. யானைகளால் அமைக்கப்பட்ட பாலத்தால் நதியை கடந்தது. இந்திரரதன் என்னும் அரசன் முதலில் வெல்லப்பட்டான். பிறகு இரணசூரன் என்பவரை வென்று, கங்கை பகுதியின் அரசனான தர்மபாலனை வென்று தேவநதியான கங்கையை தன் தலைவனுக்கு கொண்டு வந்தான். கங்கை நதியோடு வரும் தன் படைத்தளபதியை கோதாவரி நதிக்கரையில் இராஜேந்திர சோழன் வரவேற்றார்.

செய்யுள் 120 - 124.

இராஜேந்திரன், ஒட்ட அரசனை வென்று அவன் யானைகளை கைப்பற்றினான். தன்னை தாக்க வந்த
யானையை தன் யானையை கொண்டே கொன்றான். தேவலோகம் போன்ற தன் நகருக்கு திரும்பினார்.
கடலை தாண்டி தன் பலம் கொண்டு கடாரத்தை வென்றார்.தன்நகரில் சோழகங்கம் என்னும் பெயரில்
கங்கை நீரால் ஆன வெற்றித்தூண் ஒன்று நிறுவினான்.

செய்யுள் 125 - 137.

மதுராந்தகன், முடிகொண்ட சோழபுரத்தில் தங்கியிருந்தபோது, அவரது 6 ம் ஆண்டில்,
இராமனின் மகனும், மதுராந்தகனின் முதலமைச்சரும்
கருணையின் பிறப்பிடமான சனநாதனை அழைத்து பழையயூனூர் கிராமத்தை திருவலங்காடு மகாதேவர்க்கு தானமாக அளிக்குமாறு ஆணையிட்டான். திருவலங்காடு என்னும் பெயருடைய அக்கிராமத்திற்கு கிழக்கிலும் தெற்கிலும் சிங்களாந்தக சதுர்வேதிமங்கலமும், மேற்கெல்லையாக நித்தியவினோத சதுர்வேதி மங்கலமும் அமைந்தது. உத்தமச்சோழதமிழதரையன்
திருமுகம் செய்தான். திருக்காலத்தி பிச்சன் விண்ணப்பம் செய்தான். சீமான் அரனெறி என்பவன்
பிடிசூழ்தல் வேலைகளை செய்தான். சங்கரனின் மகனான நாரயணன் என்னும் கவியால் இச்சாசனம்
செய்யப்பட்டது .. திருமகளின் பிறப்பிடமான இராஜேந்திர சோழன் அனைத்துலகத்தையும் வெல்லட்டும்.

இனி செப்பேட்டின் தமிழ்ப் பகுதி..

தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லை, பிடிசூழ்தல்,
அதை நிர்வகிக்கும் முறை பற்றி எடுத்துரைக்கிறது..

கோனேரிமைகொண்டான் இராஜேந்திரனின் சாசனமாக
பதிவுசெய்யப்படுகிறது.

கோனேரின்மைகொண்டான் இராஜேந்திரன் முடிகொண்ட சோழபுரம் (பழயாறை) மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஆணை. அவனது 6 ம் ஆட்சியாண்டு 88 ஆம் நாள் முதல்..

பழையனூர் கிராமத்தை பிரித்து திருவலாங்காடு கோவிலுக்கு தேவதானமாக
அளிக்கப்படுகிறது. . இனி இந்த கிராமம் அனைத்து வரிகளிலுமிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது..
ஏற்கனவே பிரம்மதேயமாக இருந்த இந்நிலத்தை
தேவதானமாக மாற்றி வேளான் நிலமாக கோவிலுக்கு
தானமாக வழங்கப்படுகிறது. .

இதன் மூலம் கிடைக்கும் வருவாயான 3238 கலம் 7 குறுணி 5 நாழி நெல் மற்றும் 193 கழஞ்சு 1 மஞ்சாடி 1மா தங்கம்.. இவையனைத்தும் ந
திருவாலங்காடு கோவிலுக்கு
கிடைக்கச்செய்வதே இத்தானத்தின் நோக்கமாகும்..

அரசனது ஆணையை
நிறைவேற்றும் அதிகாரிகள், ஓலை செய்தவர்கள்,
கையெழுத்திட்டவர்கள் விபரங்கள் என ஒரு பத்திரபதிவு நடந்துள்ளது. தானமாக வழங்கப்பட்ட
நிலத்தின் பரப்பளவை ஒரு பெண் யானையை அழைத்துச்சென்று நிலங்கள் அளக்கப்பட்டன.
பெண் யானை நடந்து போன பாதையை துல்லியமாக அதிகாரிகள் அடையாளமிட்டனர். .

இதற்குள் அடங்கிய நஞ்சை மற்றும் புஞ்சை வயல்கள், வீடுகள், தோட்டங்கள், ஆறுகள், வாய்க்கால், நீர் இல்லா தரிசு நிலங்கள், கன்று மேயுமிடம் , குளமும் கொட்டகமும் , புற்று , காடு , ஓடையும் உடைப்பும் , ஆறும் ஆற்று படுகையும் , மீன்பயில் பள்ளம் , மேல் நோக்கி வளர்ந்த மரங்கள், கீழ் நோக்கி தோண்டிய கிணறுகள்,கிடங்கும் ஏரியும், உடும்பு ஓடி ஆமைகள் ஊர்ந்து செல்லும் பகுதி, இவை அனைத்தும் தேவதானமாக கோவிலுக்கு வழங்கப்பட்டது.

அரசால் விதிக்கப்படும் அனைத்து வரிகளிலிருந்தும்
விலக்கு அளிக்கப்பட்டது..

சில நிபந்தனைகளும் உள்ளன..
வேளான் மக்கள் ஏற்கனவே உள்ள கால்வாய் நீரை மட்டும் பயன்படுத்தவேண்டும். தண்ணீரை வீணடித்தல் கூடாது. தென்னை பனை மரங்களில் கள் இறக்ககூடாது. பெரிய மாடிவீடுகளை சுட்ட ஓட்டினால் கட்டலாம்.

சாசனம் நிறைவு செய்யப்பட்டு பல்வேறு அதிகாரிகளும்
கிராமசபையினரும், பொதுமக்களும் கையெழுத்திட்டனர்.

மேற்கண்ட சாசனத்தை ஒப்பு நோக்கிய அரசு அதிகாரிகள்.

1.நித்தவினோத
வளநாட்டு பாம்புணி கூற்றத்து அரைசூருடையான் ஈராயிரவன் பல்லவயானான உத்தமச்சோழ பல்லவரையன்.

2. உய்யங்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு கேரளாந்தக சருப்பேதி மங்கலத்து கிருஷ்ணன் இராமனான இராஜேந்திர சோழ பிரம்மராயன்.

3. அரையன் சீகண்டனான மீனவன் மூவேந்த வேளான்.

ஓலையில் எழுதும் பணியை செய்தது உத்தமச்சோழ தமிழதரையன்.

மேலும் சில அதிகாரிகளும் இடம் பெறுகின்றனர்.

இச்செப்பேட்டில் நமக்குக் கிடைக்கும் சில அவசியத் தகவல்கள்.

கரிகால்ச்சோழன், காஞ்சி மாநகருக்கு பொன் வேய்ந்தது. காவிரிக்கு கரைகள் எழுப்பியது.

விஜயாலயன் தஞ்சையை கைப்பற்றி நிசும்பசூதனிக்கு கோவில் எடுத்த செய்தி இச்செப்பேட்டில் மட்டுமே கிடைக்கிறது.

முதலாம் ஆதித்தன் அபராஜித பல்லவனை வென்றது.

ஆதித்த கரிகாலன் பாண்டியன் தலையோடு தூண் ஒன்று நிறுவியது.

அருண்மொழி வர்மன் உத்தமச்சோழனுக்கு விட்டுக்கொடுத்தது.

இராஜராஜன் வெற்றிகள்.

இராஜேந்திரனின் வெற்றிகள்.. கங்கை படையெடுப்பு விபரங்கள்.. சோழகங்கம் ஏரியில் ஜல ஸ்தம்பம் நிறுவியது..

இது போன்ற வரலாற்றுத்தரவுகள் இச்செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன..

தமிழ்ப் பகுதியில் பிடிசூழ்தல் நிகழ்வுகளிலும் சமூகம் சார்ந்த பல விபரகள் உள்ளது.

இப்பகுதியை மட்டும் ஆய்வு செய்து பல அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளனர்.

சுவாரசியமான அவற்றில் ஒன்று.

அலிகார் பல்கலைகழகப் பேராசிரியை திருமதி சாந்திணீபீ என்பவர், இச்செப்பேட்டில் நில எல்லைகளாக குறிப்பிடப்படும் மரங்களின் வகைகளை பட்டியல் இடுகிறார்..

கடம்ப மரம், வன்னி மரம், வேப்பமரம், வெளுங்கு மரம், விளாமரம், ஆத்திமரம்,
கருவேல மரம், உசிலை மரம், புளிய மரம், வன்மறை மரம், வெள்வேல் மரம், கருங்காலி மரம், வன்கணை மரம், தென்னை மரம், செம்மணி மரம்,

இத்தனை வகையான மரங்கள் தானமாக வழங்கப்பட்ட பகுதியில் இருந்தன.




































எசாலம் செப்பேடு. இராஜேந்திரன் சோழத்தேவர் 25 ஆம் ஆட்சியாண்டு.
(கி.பி.1037)


விழுப்புரம் அருகே உள்ள எசாலம் என்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள இராமநாதசுவாமி ஆலயம். 1987 ம் ஆண்டு, ஆகஸ்ட் 11 ம் தேதி இக்கோவில் பராமரிப்பு பணியில் ஒரு கற்பலகையை நகர்த்தியபோது அதனடியில் இருபத்தாறு திருமேனிகளும், இந்த செப்பேட்டுத் தொகுதியும் கிடைத்தது.

செப்பேட்டு விபரங்கள் தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு தொல்லியல்த்துறை வெளியீடாக வெளிவந்தது.

முகப்பு இலச்சனையுடன் கூடிய 15 பட்டைகள் உள்ளன. வழக்கமான மற்ற செப்பேடு முத்திரையை விட இம்முத்திரையில் கூடுதல் விபரங்கள் உள்ளன.

அமர்ந்துள்ள புலியின் முன் உள்ள இரு மீண்கள், பாண்டியர்களை வென்றதைக் குறிப்பிடும். கிடைமட்டமாய் உள்ள வில் சேரர்களை வென்றதை குறிக்கும். புலியின் பின்புறம் ஒரு விளக்குத்தாங்கி, ஒரு வாள், ஒரு அம்பு மற்றும் அங்குசமும் உள்ளது. மீனின் பின்புறம் விளக்குத்தாங்கி ,வாள் , அம்பு மற்றும் ஒரு கோடாரி உள்ளது. வில்லின் கீழே சூலம், தோரணம், மற்றும் சாளுக்கியர்களை வென்றதன் அடையளமாய் பன்றி உருவமும் காணப்படுகிறது. மேற்புரம் கொற்றக்குடையும் இருபுறம் கவரிகளும் உள்ளன. கவரிகளுக்கு மேலே ஒரு சுவஸ்திக் சின்னம் மற்றும் ஒரு சக்கரமும் உள்ளது. இச்சக்கரம் பல நாடுகளை வென்ற இராஜேந்திரனின் அடையாளமாகப் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இவ்வமைப்பு இந்த செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது.

இலச்சினையில் ராஜேந்திரனின் சாசன சுலோகம் எழுதப்பட்டுள்ளது.

" ராஜத் ராஜன்ய மகுட ச்ரேணி ரத்னேஷூ சாஷநம் ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேசரி வர்ம்மண."

அரசர்களின் மகுடங்களில் ரத்தினம் போன்றும் திகழும் இது பரகேசரி வர்ம்மனான இராஜேந்திர சோழனின் சாசனம்.

இராஜேந்திரச் சோழனின் குருவானவர் சர்வசிவபண்டிதர். இவர் கட்டிய திரீவிராமீச்வரமுடையார் மகாதேவர் கோவிலுக்கு தானங்கள் வழங்கப்பட்ட விபரமே இச்செப்பேட்டின் நோக்கம்.

வடமொழிப்பகுதி..

செய்யுள் 1 - 6

பவானி அன்னையோடு மணக்கோலம் பூண்ட பரமேஷ்வரன் உங்களுக்கு அருளட்டும்.

எழுத்துக்களின் எண்ணிக்கையோ ஐம்பதுததான். சூரியகுல மண்ணர்களின் குணங்களோ எண்ணிக்கையை கடந்து இருக்கிறது. இந்த எழுத்துக்களைக் கொண்டு அவர்களின் பெருமையை எவ்வாறு கூறுவது. கலைமகளே, இவ்விடயத்தில் எனக்கு அருள் புரிவாயக.

கதிரவனுகு மகனாக மனு. அவனுக்கு இட்சுவாகு. அவனுக்கு முசுகுந்தன். அவனுக்கு மகனாக வளபன்.

அந்தக்குலத்தில் இராசகேசரி என்னும் மன்னன் தோன்றினான். அவனுக்கு மகனாக பரகேசரி பிறந்தான். அவன் எதிரிகளின் தொகுதியாகிய கடலுக்கு அகத்தியரை போன்றவன். இவர்களின் பெயர்களைக் கொண்டே சோழர் குலத்து அரசர்களின் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

செய்யுள் 7 - 11

அந்த வம்சத்தில் கரிகாலன் தோன்றினான். அவனுடைய ஆணையால் அரசர்கள் காவிரிக்கு கரை எடுத்தனர்.

அந்தப்பெருங்குலத்தில் இணையற்ற தோள்வலிமையுடைய விஜயாலயன் பிறந்தான். அவனுக்குப்பிறகு அவனுடைய மகனான ஆதித்தன் இப்புவியைக் காத்தான். ஆதித்தனுக்கு பராந்தகன் மகனாகப் பிறந்தான். சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனுக்கு தங்கத்தால் கோவில் செய்தான். அவனிடத்தில் அரிந்தமன் தோன்றினான். அவனுக்கு பராந்தகன் ( சுந்தரச்சோழன்) பிறந்தான்.

செய்யுள் 12 - 15

சுந்தரனுக்கு, திருமாலே அவதரித்தது போல் அருண்மொழிவர்மன் பிறந்தான். அவனுடைய கைகளில் வாழும் ரேகை வடிவில் சங்கும் சக்கரமும் இருந்தன.

அவன் கங்கம், வங்கம், கலிங்கம், மகதம், சிங்களர், ஆந்திரர், இரட்டர்கள் கேரளம், பாண்டியம், முதலிய எல்லா அரசர்களையும் வென்றான். தான் வென்ற செல்வத்தைக் கொண்டு தஞ்சையில் சிவனுக்கு இராசராசேச்சரம் என்னும் கோவில் எடுத்தான்.

அவனுடைய தமயனான கரிகாலன் போரில் பாண்டிய மன்னனை வென்று அவன் தலையை துண்டித்தான். துண்டிக்கப்பட்டத் தலையை தஞ்சை வாயில் மரத்தில் நட்டு வைத்தான்.

இராசராசனுடைய சிறியதந்தையான மதுராந்தகன் கலியின் வலிமையால் சாஸ்திரம் நழுவியதை சரிசெய்ய அவனுருவில் அவதரித்ததாகக் கூறுவர்.

செய்யுள் 16 - 20

இராஜராஜனின் மகன் இராஜேந்திரன். அழகின் மொத்த வடிவம். துணிவு, அறிவு, கருணை இவற்றின் பிறப்பிடம்.

சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மனை வென்றான். கடினமின்றி கங்கையை தன் நாட்டுக்கு கொண்டு சென்றதால் அவன் பகீரதனை வென்றவனாவான்.

தன்னால் நிறுவப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனுக்குக் கோயில் எடுத்தான்.

மதுராந்தகனுக்கு குருவாக, ஆகமங்களில் கரைகண்ட சிவபெருமானுக்குச் சமமான சர்வசிவாச்சார்யார் என்னும் பெயருடையவர் இருந்தார். அறிஞர்களின் நிதி போன்றவர் அவர்.

செய்யுள் 21 - 35.

ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் இராசராசசதுர்வேதி மங்கலம் என்னும் பெயருடைய கிராமம் உள்ளது.

இராஜேந்திரனின் குருவான அவர் எய்தார் என்னும் ஊரில் இராமேச்வரம் என்னும் பெயரில் சிவனுக்கு ஒரு கோவில் எடுத்தார். பவானியின் கணவனான பரமேச்வரன் கைலாயத்தை மறந்து இக்கோவிலில் வசித்தார்.

இராஜராஜனின் மகனான மதுராந்தகன் காஞ்சியில் வீற்றிருந்தான் . தனது இருபத்துநான்காவது ஆட்சியாண்டில் இராமேச்வரத்தில் குடிகொண்ட தேவருக்கு பூஜைக்காக நிலங்களை வழங்கினான். பிடிசூழ்தல் முதலான பணிகளைத் துவங்க ஆணையிட்டான். பனையூர் நாட்டில் நன்னாடு மற்றும் மேல்பாக்கம் என்ற பெயரையுடைய இரு கிராமங்களை இணைத்து விக்ரமச்சோழநல்லூர் எனப்பெயரிட்டு மகிழ்வோடு சிவனுக்கு அளித்தான் விக்ரமச்சோழதேவனான இராஜேந்திரன்.

அவனுடைய இருபத்தைந்தாவது ஆட்சியாண்டு முந்நூற்று எழுபத்தைந்து நாளில் அதிகரண புத்தகத்தில் எழுதினர்.

அவனது குரு இத்தானத்திற்கு விண்ணப்பம் செய்தவராவார். இராமனின் மகனான ஜனநாதன் என்பவர் மத்யஸ்தன் ஆவார்.
சங்கரனின் மகனான நாரயணன் என்னும் கவியால் இந்த சாசனம் செய்யப்பட்டது.

தமிழ்ப்பகுதியில்....

கோனேரின்மை கொண்டான் 25 ம் ஆட்சியாண்டில் பத்தாம் நாள்.. காஞ்சிபுர வீட்டில் இருந்து ஆணை பிறப்பித்தான்.

பிடிசூழ்தல் வேலை நடைபெற்ற விபரங்கள் உள்ளன.

பனையூர் நாட்டு இராசராசசதுர்வேதிமங்கலம்.. அந்நாட்டு வேறளந்த நன்னாடு ஏர்பாக்கமும் இணைந்து விக்ரமச்சோழ நல்லூர் எனப்பெயரிடப்பட்டது.
இவ்வூர் எய்தார் என்னும் கிராமத்தில் இராஜேந்திரனின் குரு சர்வசிவபண்டிதரால் எழுப்பப்பட்ட ஸ்ரீராமீச்வரமுடையார்க்கு தேவதான இறையிலியாக வழங்கப்பட்டது.

நிலத்தின் மொத்த அளவு, நீக்கப்பட்ட நிலத்தின் அளவு கழித்து மீதம் உள்ள நிலங்களின் வருவாய் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

ஒப்பு நோக்கிய அரசு அதிகாரிகள்..

1. கங்கை கொண்ட சோழபுர இராசவிச்சாதிர பெருந்தெருவில் வசிக்கும் சோனகன் சாவூர் பரஞ்சோதி.

2. கோவனாச்சனான கங்கை கொண்ட சோழ அணிமுரி நாடாழ்வான்.

3. நராக்கன் மாராயன் அருமொழியான் உத்தமச்சோழ பிரம்மராயன்.

4. நாரயணன் எடுத்தபாதமான உத்தமச்சோழக்கோன்.

வரியிடுதல், கணக்குப்புத்தகத்தில் குறித்தல், ஸ்ரீமுக ஆணைப்படி பிடிசூழ்ந்து எல்லைகள் வகுக்கப்பட்டு தானமாக பெறப்பட்ட பகுதி நிர்ணயம் செய்யப்பட்டது.

இச்செப்பேட்டின் மூலம் நமக்கு கிடைக்கும் சில அவசியத் தகவல்கள்.

தஞ்சைப் பெரியகோவிலை இராஜராஜன் எடுத்தது கல்வெட்டுகளால் அறியப்பட்டாலும், அச்செய்தி இச்செப்பேட்டிலும் காணப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் ஆலயத்தை இராஜேந்தின் எடுத்த செய்தி இச் செப்பேட்டில் மட்டும் காணப்படுகிறது. வேறு எந்த கல்வெட்டிலோ, செப்பேட்டிலோ இத்தகவல் இல்லை.

இராஜேந்திரனின் குருவாக சர்வசிவபண்டிதர் வடமொழிப் பகுதியில் ஐந்து சுலோகங்களில் இடம்பெறுகிறார். தமிழ்ப்பகுதியில் இவர் " உடையார் சர்வசிவபண்டிதர் " என்று அழைக்கப்படுகிறார்..

தஞ்சை பெரியகோவிலில் உள்ள இராஜேந்திரனின் கல்வெட்டிலும் இவர்

" உடையார் சர்வசிவபண்டித சைவாச்சார்யார் " என்றே அழைக்கப்படுகிறார்.

ஆகமங்களில் கரைகண்டவர் இவர் என்று செப்பேட்டில் குறிக்கப்பட்டாலும் இவர் ஆலயத்தில் பூஜை செய்யும் சைவாச்சார்யார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உருவம் படிமமாக எசாலம் கோவிலில் உள்ளது.

இந்த சாசனத்தை ஒப்பு நோக்கும் அரசு அதிகாரியாக இருந்தவர்களில் ஒருவர்
சோனகன் சாவூர் பரஞ்சோதி. பெரியகோவில் கல்வெட்டில் நாயகம் செய்யும் அதிகாரியாக இருந்தவர், இராஜேந்திரன் காலத்திலும் உயர் அதிகாரியாக இருந்துள்ளார். இவர் ஒரு இஸ்லாமியர் என்பது பெரும்பாலான அறிஞர்கள் முடிவு.





















நன்றி : கட்டுரை பதிவு
உயர்திரு. மா.மாரிராஜன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்