வெள்ளி, 31 மார்ச், 2023

தஞ்சாவூரும் சோழரும்


"கேள்விக்குப் பதில்."

.1.விஜயாலய சோழன் முத்தரையர்களை வென்ற நேரடிச் சான்று உள்ளதா?

2.அபராஜிதவர்மன் சோழ நாட்டை விஜயாலருக்கு வழங்கிய சான்றுகள் உண்டா?

3.அரிசில் ஆற்றாங்கறை போர், திருப்புறம்பியம் போர் கூட்டனிகள் என்ன?


இம்மூன்று கேள்விகளுக்கும் சரியானப் பதில் வேண்டும் என குழு நண்பர்களுக்கு ஆவல்..


இக்கேள்விக்கு முழுமையானப் பதிலை ஒரு நீண்ட பதிவின் மூலமே தரமுடியும் என்பதால்.....


இந்த நீ....ண்ட........பதிவு.


விஜயாலயச்சோழர் தஞ்சையை யாரிடமிருந்து மீட்டார்...


இரண்டு செப்பேடுச் செய்திகள் உள்ளன.


1.திருவாலங்காடு செப்பேடு..


" விஜயாலயர் தனக்கு உரிமையான தனது மனைவியின் கரம் பற்றுவதுபோல் தஞ்சையைக் கைப்பற்றினார்..


( யாரிடமிருந்து என்ற விபரம் இல்லை. தஞ்சை என்பது விஜயாலயருக்கு உரிமையான ஒன்று என்றும் தெரிகிறது)


2. திருவிந்தளூர் செப்பேடு..


" விஜயாலயர் தஞ்சையை கம்பவர்மனிடமிருத்தது கைப்பற்றினார் "


யாரிடமிருந்து என்று தெரிகிறது..


விஜயாலயரின் முன்னோர் யாரென்று தெரியவில்லையே..

தீடிரென்று எங்கிருந்து வந்தார்..? எப்படிக் கைப்பற்றினார்.? தெலுங்குச்சோழருக்கும் இவருக்கும் தொடர்புண்டா..? என்ற பல கேள்விகள் எழும்..


இதற்குப்பதிலை அறிய..


8 ஆம் நூற்றாண்டு மத்திமக்காலம் முதல் 

9 ஆம் நூற்றாண்டு துவக்கம் வரை உள்ள தமிழக அரசர்கள் நிலை என்ன.? சோழ, பல்லவ பாண்டியர்களின் நிலைப்பாடு என்ன..?


கடைச்சங்ககால அரசர்கள் பற்றியத் தரவுகள் இலக்கியம் வாயிலாகக் கிடைக்கிறது...


கி.பி.3 முதல்..கி.பி.6 வரை சுமார் 300 ஆண்டுகள் களப்பிரர் ஆட்சி.. இக்காலத்தில் தமிழக வேந்தர்கள் பற்றிய எந்த செய்தியும் இல்லை..


களப்பிரர்கள் வீழ்த்தப்பட்டப் பிறகே பாண்டியர் மற்றும் பல்லவர் பற்றியத் தரவுகள் நமக்குக் கிடைக்கிறது..


பாண்டியரும்..

பல்லவர்களும்..

பேரரசர்களாகவும் அவர்களுக்குட்பட்ட சிற்றரசர்களாக சோழர்களும் இருந்தனர்..


களப்பிரர் காலத்திற்குப் பிறகு சோழர்களின் நிலை என்ன.? அவர்களது இருப்பு எவ்வாறு..?


சுருக்கமாகப் பார்ப்போம்..

----------------

பல்லவர் சாசனமான வேலூர்பாளையச் செப்பேடுகள், புத்தவர்மனைப்பற்றிக் கூறும்போது சோழர் படை என்னும் கடலுக்கு நெருப்பாய் நின்றவன் என்கிறது..

காலம் கி.பி.4..


ஆக.. கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலேயே கடல்போன்ற சோழர்படையை புத்தவர்மன் வென்றுள்ளார். சோழர்களின் இருப்புக்கு கி.பி.4 ஆம் நூற்றாண்டு சான்று இது..


இதே செப்பேடு சிம்மவிஷ்ணுவைப் பற்றிக்கூறும்போது 

( கி.பி.575 -600)...

காவிரி நீர் பாய்கின்ற செழுமையான வயல்களைக் கொண்ட சோழர்களை சிம்மவிஷ்ணு வென்றார்.


ஆக. கி.பி.6 ஆம் நூற்றாண்டில் காவிரிக்கரைப் பகுதியில் சோழர்கள் இருந்தனர்.


கி.பி.634. ..

இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு. காஞ்சியை முற்றுகையிட்ட செய்தியிலும் .. சோழர்கள் பற்றியக் குறிப்பு உண்டு. 


புலிக்கேசிக்குப் பிறகு வந்த சாளுக்கியன் விக்ரமாதித்தனும் சோழர்களை வென்றதாக தனது கத்வல் செப்பேட்டில் பதிவு செய்கிறார். காலம் கி.பி.674.


கோச்சடையன் ரணதீரன் என்னும் பாண்டிய மன்னன் சோழர்களை வென்று செம்பியன் என்னும் பட்டம் பெற்றதை வேள்விக்குடிச் செப்பேடுகள் உறுதி செய்கிறது.

காலம்.கி.பி.710 - 740.


ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டியன் கும்பகோணம் அருகே சோழர்களை வென்ற செய்தியை சின்னமனூர் செப்பேடுகள் உறுதி செய்கிறது.

காலம் கி.பி. 815 -  862.


ஆக..

கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.862 வரை சோழநாட்டில் சோழர்களது இருப்பு உறுதிசெய்யப்படுகிறது

பெயர்களை கல்வெட்டில் பொறிக்க இயலாத சிற்றரசர்களாக சோழர்கள் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவராகத்தான் கி.பி.862 இல் விஜயாலயச் சோழர் அறிமுகமாகிறார்.


இவர் தீடிரென்று வரவில்லை.. பரம்பரையாக சோழநாட்டில் இருந்த சோழர்களின் வழித்தோன்றல்தான் விஜயாலயர்.


சோழர்களது செப்பேடுகள் அனைத்தும் தங்கள் முன்னோர்களாக சங்கத்தமிழ் குறிப்பிடும் கரிகாலன், சிபி, கோச்செங்கண்ணான் இவர்களையே குறிப்பிடுகிறார்கள்..

இவர்களின் வழியேதான் விஜயாலயரின் முன்னோர்களும், பின்னோர்களும்...


அதாவது விஜயாலயரின் வழி வந்தோர் தமிழர்களே..

தமிழர்களே.. 


பெரியபுராணம் , திவ்யசூரி சரிதம், குருபரம்பரை போன்ற பக்தி இலக்கியங்களும்

கி.பி.6. - கி.பி.8 வரை உள்ள காலத்திய தமிழ் சோழர்களைப் பதிவு செய்கின்றன..


தெலுங்குச்சோழர்களுக்கும், விஜயாலருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை....


தெலுங்குச் சோழர்கள் யார்..?  இதற்கும் ஒரு நீண்ட விளக்கம் தேவைப்படும் என்றாலும்.... சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்...


கி.பி. 7 ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில்..

ஆந்திரா.. கர்நூல் மற்றும் கடப்பா மாவட்டத்தில் சோழர்களது பெயர்களைத்தாங்கியக் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இவர்கள் தங்களை காவிரிக்கு அணை கட்டிய  கரிகாலன் வம்சம் என்கின்றனர்.

கல்வெட்டுகள், செப்பேடுகள் கொண்டு

இவர்கள் ஒரு தனித்த ஆட்சியும், பல்லவர்களின் கீழும் இருந்துள்ளனர். தனஞ்செயவர்மன், சோழமகாராஜா,

புண்ணியகுமாரன் என்று நான்கு தலைமுறை பெயர்கள் கிடைக்கின்றன. இவர்களே தெலுங்குச்சோழர்கள்.

கரிகாலனின் வடபுல படையெடுப்பின் போது கரிகாலனுடன் சென்ற தமிழர்கள், ஆந்திராவில் தங்கி ஒரு ஆட்சியை ஏற்படுத்தியவர்கள் என்பது ஆய்வாளர்கள் முடிவு.. இவர்கள்தான் தெலுங்குச்சோழர்கள். இவர்களது முன்னோர் தமிழர்கள். தெலுங்குச் சோழர்களைப் பற்றிய விரிவாக வேறொரு பதிவில் விளக்குவோம்..


விஜயாலயருக்கும் தெலுங்குச்சோழருக்கும் எந்த தொடர்பும் இல்லை..


இக்காலத்திய முத்தரையர்கள் நிலை...


" முத்தரையர்கள்.."


கி.பி ஆறாம் நூற்றாண்டுமுதல், சோழ தேசத்தின் ஆற்றங்கரைப் பகுதியை ஆதிக்கம் செலுத்தியவர்கள் முத்தரையர்கள்....

தனியரசாகவும்..

பாண்டியர் மற்றும் பல்லவர்களின் கீழ் சிற்றரசகாவும் இருந்துள்ளனர்.


 இவர்கள் பல்லவர்களின் பட்டப்பெயர்களான பெரும்பிடுகு, விடேல் விடுகு என்னும் பட்டங்களை கொண்டிருந்தனர்..


பெரும்பிடுகு, விடேல் விடுகு என்னும் பட்டங்களுடன் தங்களை அழைத்துக்கொண்டதை செந்தலை கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன...


மேலும் முத்தரையர்கள் 

தங்களை தஞ்சையர் கோண் என்று அதாவது தஞ்சை அரசர்கள் என்று அழைத்துக்

கொள்வதால்.. தஞ்சையும் முத்தரையர் வசமே இருந்தது என்பது உறுதியாகிறது..


இவர்களது கல்வெட்டுகள் புதுக்கோட்டை மற்றும் செந்தலைப் பகுதியில் ஏராளமாய் உள்ளது..


புதுக்கோட்டை ..

நார்த்தமலையில் உள்ள ஒரு கல்வெட்டு நமக்கு முக்கியமான ஒன்று.


பல்லவன் நிருதுபங்கனின் 7 ஆம் ஆட்சியாண்டு. கி.பி. 869

நிருதுபங்கனின் கீழ் முத்தரையர் கல்வெட்டு.

அதாவது நிருதுபங்கவர்மனின் கீழ் முத்தரையர்கள் சோழநாட்டின் சிற்றரசர்கள்..


(நிருதுபங்கனின்

 7 ஆம் ஆட்சியாண்டில்..

புதுக்கோட்டை நார்த்தாமலை, தற்போது விஜயாலய சோழீஸ்வரம் என்னும் அழைக்கப்படும் கற்றளி மலையில் இளங்கோவதி முத்தரையர்  மகள் முகமண்டபம் எடுத்ததாக  கல்வெட்டு செய்தி..

No 365 of 1904)


செந்தலை கல்வெட்டுகள் இவர்களை,

தஞ்சை கோ ( தஞ்சை அரசன்)  என அழைப்பதால்,

இவர்கள் தஞ்சையை ஆண்டது தெளிவாகிறது.

 Ep.of. ind. Pa. 142, 143, 144.....


ஆக..

தஞ்சைப் பகுதியின் சிற்றரசர்களாக முத்தரையர்கள் இருந்தனர். நிருதுபங்கவர்மனின் கீழ்... ஆண்டு 869..


இக்காலத்திய பாண்டியர்களின் நிலை..


இனி..

இக்காலத்திய பாண்டியர்கள்...


ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன். கி.பி.830 - 862 


முதலாம் வரகுணபாண்டியர்க்கு பிறகு பாண்டிய அரசன் ஆனார்.ஏகவீரன், அவனிபசேகரன் என்னும்

சிறப்பு பெயர்களும் இவருக்குண்டு.. சித்தன்வாசலில்

உள்ள குகைக்கோவில் கல்வெட்டு இவரை,

 பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் - ஆர்கெழு

 வைவேல் அவனிபசேகரன் - சீர்கெழுசெங்கோல்

 சீவல்லபன்.. என்கிறது.. ( ins 368 of 1904) 


இப்பாண்டியனும் பல்லவன் நந்திவர்மனும் கடும்போர் செய்த இடம்தான் தெள்ளாறு.

இப்போரில் பாண்டியன் தோற்று நந்திவர்மன் வெற்றிபெற்றார்.


பாண்டியரும், பல்லவரும், 

நேருக்கு நேர் சந்தித்த களம்தான் தெள்ளாறு...


இங்கு நாம் ஒரு முக்கிய விடயத்தை அவதானிக்க வேண்டும்..


 நடைபெற்ற தெள்ளாற்றுப் போரில், பழயாறை சிற்றரசான சோழர்கள், பாண்டியர் பக்கம் நின்று 

 பல்லவர்களை எதிர்த்தனர்.


தெள்ளாற்றுப் போர்.. 


இன்றைய தென்னாற்காடு மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள தெள்ளாறு என்னும் இடத்தில் ...

பாண்டிய பல்லவப் படைகள் நேருக்குநேர் மோதின..

மிக கடும் யுத்தம்.. பல்லவர்களுக்கே வெற்றி.

போரில் தோற்ற பாண்டியர்கள் பின்வாங்கினர்..

பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் வெற்றி பெறுகிறான்.

 தெள்ளாறெரிந்த நந்திவர்மன்என்னும் பட்டம்

பெறுகிறான்.. பல்லவரது வெற்றியை நந்திகலம்பகம்

பலவாறு புகழ்கிறது..


பாண்டியர்களை, சோழநாட்டின் எல்லைவரை துரத்தியது பல்லவர்படை. சோழநாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் ஆனது.. 


குடமூக்குப்போர்..


பல்லவர்களிடம் கடும்தோல்வியுற்ற பாண்டிய அரன்

ஸ்ரீமாறன்,  மீண்டும் பெரும்படை திரட்டி பல்லவர்களை எதிர்க்க புறப்பட்டார்.. 

கங்கர் மற்றும்

சோழப்படைகளுடன் பல்லவர்களும் தயாரானர்கள்..


 இம்முறை சோழர்கள் பல்லவர் பக்கம் நின்று 

 பாண்டியர்களை எதிர்த்தனர்.


குடமூக்கு ( கும்பகோணம்) என்னும் இடத்தில் ..

பல்லவ பாண்டியர்கள் மீண்டும் நேருக்கு நேர் மோதினார்கள்.. இம்முறை பல்லவர்கள் சிதறி ஓட,

பாண்டியர்கள் வெற்றிபெற்றனர்.

குடமூக்குப்போரில் பாண்டியன் வெற்றிபெற்றதை

சின்னமனூர் செப்பேடுகள் இவ்வாறு கூறுகிறது.


  "கொங்கலரும் பொழில் குடமூக்கில் போர்குறித்து

 வந்தெதிர்த்த கங்க பல்லவ சோழ காளிங்க 

 மாகதாதிகள் குருதிப் பெரும்புணல் குளிப்பக்

 கூர்வெங்கணைத் தொடை நெகிழ்த்து. "


ஆக குடமூக்குப்போரில் பாண்டியர்களே வெற்றிபெற்றனர்.


இந்தப் போரில் பல்லவன் நந்திவர்மனின் மகன்

நிருதுபங்கன் தலைமையில் நடைபெற்றதாய் தெரிகிறது.. பல்லவர்களுக்கு ஏற்பட்ட பின்னடவை,

நிருதுபங்கன் வெளியிட்ட பாகூர் பட்டயங்களும்

உறுதி செய்கின்றன..


இனி இக்காலத்திய பல்லவர்கள் நிலை..


மூன்றாம் நந்திவர்மனுக்கு  இரண்டு வாரிசுகள்.. நிருதுபங்கன்.. மற்றும் கம்பவர்மன்..

இவர்கள் இருவரும் பல்லவ ராஜ்யத்தை ஆண்டார்களா.. என்பது ஒரு புதிர்..

இவர்கள் இருவரின் கல்வெட்டுகளும், ஒரே நேரத்தில்

தொண்டை நாட்டின்  இரு பகுதிகளிலும் கிடைக்கிறது..


அப்படியானால் பல்லவதேசத்தை இருவரும் பங்கிட்டு

ஆட்சி செய்தார்களோ..? என்னும் ஒரு கேள்வி.


கம்பவர்மனுக்கும், கங்க இளவரசி ஒருவருக்கும் பிறந்தவரே அபராஜிதன்.


தற்காலிகமாக கம்பவர்மனையும், அபராஜிதனையும்

தவிர்த்துவிட்டு, நிருதுபங்கன் பல்லவ அரசன் என்பதாக

நினைவில் நிறுத்துவோம்..


நிருதுபங்கனின் ஆட்சிபரப்பு தொண்டைநாடு மற்றும் சோழநாடு வரை பரவி இருந்தது.  


பல்லவர்களுக்கு கடும் சவாலாய் இருந்த பாண்டியன்

ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் . இப்பாண்டியன் தனது ஆட்சி காலத்தில் இலங்கையின் மீது படையெடுத்தார்..


அப்போதைய இலங்கை அரசர் ..

 முதல் சேனன் 

( கி.பி.831 - 851)

இவரது காலத்தில் பாண்டியப்படை ஈழத்தை தாக்கியது.

இலங்கையை சூறையாடி, செல்வங்கள் அனைத்தையும்

பாண்டியர்கள் கவர்ந்து சென்றனர் என இலங்கையின்

மகாவம்சம் கூறுகிறது..


பாண்டியனது இலங்கை வெற்றியை சின்னமனூர்

செப்பேடுகளும். 

"குரை கடலீலங் கொண்டும்"  என்னும்

செய்தியின் மூலம் உறுதி செய்கிறது.


சில ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீவல்லபனின் தயாதி ஒருவரான மாயபாண்டியன் என்பவர் பாண்டிய

வாரிசுரிமை பிரச்சனை எழுப்பினார்..


இப்போது இலங்கை அரசர் இரண்டாம் சேனன்..

இவரிடம் உதவிகோரினார் மாயபாண்டியன்.. ஏற்கனவே பாண்டியர்களின் மேல் கடும்கோபத்தில்

இருந்த இலங்கை அரசன், பெரும்படை ஒன்றை 

மாயபாண்டியனுக்கு ஆதரவாக அனுப்பினார்..


நடைபெற்ற கடும்போரில், பாண்டியன் ஸ்ரீவல்லபன்

இறந்திருக்க வேண்டும்.. 

இதை பாண்டியச் செப்பேடுகள்...

 பேராற்றல் காட்டி போர்புரிந்து போர்க்களத்தில்

 உயிர்துறந்தான் என்கிறது.


இந்நிகழ்வு கி.பி.860 ல் நடைபெற்று இருக்கவேண்டும்.

இதை மகாவம்ச குறிப்புகள் உறுதி செய்கிறது.


ஆக,  

இலங்கை அரசன் உதவியுடன் மாயபாண்டியன்

பாண்டிய அரசனாகும் சூழல் ஏற்பட்டது..


ஸ்ரீவல்லபனுடைய முதல் மகன் இரண்டாம் வரகுண பாண்டியன்.. தனது உரிமையான பாண்டியதேசத்தை

மீட்டுத்தருமாறு பல்லவன் நிருதுபங்கவர்மனுக்கு

செய்தி அனுப்புகிறார்..


நிருதுபங்கனும் பாண்டியனின் கோரிக்கையை ஏற்று,

பல்லவப் படையை பாண்டியனுக்கு ஆதரவாக அனுப்புகிறார்..


பல்லவப் படைகளும் பாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்டு, மாயபாண்டியனை வீழ்த்தி, இரண்டாம் வரகுணபாண்டியனின்  பாண்டிய அரசுரிமையை மீட்டுத்தந்தது..


 சடையவர்மன் என்னும் பட்டத்துடன்

இரண்டாம் வரகுணபாண்டியன் பாண்டிய அரசனாகிறார்.. 


பழனி அருகே உள்ள ஐவர் மலை எனப்படும் சமணர்

கோவிலில், வரகுணபாண்டியரின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, சகம் 792 

அதாவது கி.பி.870.. ( சகம் +78-- பொதுயுகம்) 

 *(Ins 705 of 1905)* 


ஆக,  இரண்டாம்  வரகுணபாண்டியன் பதவிக்கு வந்த

ஆண்டு ( 870 - 8)  கி.பி 862 என்பது உறுதியாகிறது.


வரும்வழியில், கும்பகோணம் அரிசிலாற்றங்கரையில்

பல்லவர்களை சோழர்கள் எதிர்த்தனர்.. கடும் போர்..

பல்லவர்களே வென்றனர்.. தோற்ற சோழர்கள் பின்வாங்கினார்கள்..


இந்தக் காலத்துக்குப் பொருத்தமான   சோழமன்னன் விஜயாலயச் சோழராகவே இருக்க முடியும்.


மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளையும், நிருதுபங்கன்

வெளியிட்ட பாகூர் செப்பேடுகள் உறுதிசெய்கிறது..


 "எவருடைய அருளால் பாண்டியர் சேனை

வெற்றிபெற்றதோ அந்த அரசன் உருவாக்கிய

நெருப்பு அரிசில் ஆற்றின் மறுகரையில்

 எதிரிகளின் கூட்டத்தை எரித்தது."


ஆக, 

பாண்டியனுக்கு பல்லவன் உதவியது உறுதியாகிறது.


இதை மெய்பிக்க மேலும் ஒரு சான்றுள்ளது..


கடலூர்..திருவதிகை வீரட்டாணேஷ்வரர் கோவில் கல்வெட்டு..

நிருதுபங்கனது 18 வது  ஆட்சியாண்டில், கோவிலுக்கு வரகுணபாண்டியன் 570 கழஞ்சு  பொன் நிவந்தம் அளிக்கிறார்.. ஒரே கல்வெட்டில் இரண்டு

அரசர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன..

 *( Ar. No 360 of 1921)* 


பல்லவன் நிருதுபங்கனின் ஆட்சியாண்டில்,

வரகுணபாண்டியன் நிவந்தம் அளிக்கிறார்..


ஆக, பல்லவன் நிருதுபங்கனும், பாண்டியன் வரகுணரும் ஒத்த நண்பர்களாயிருந்தனர் என்பது

தெளிவாகிறது....


அதே சமயம் பல்லவன் நிருதுபங்கன் மீது,

சோழன் விஜயாலயர் கடும் கோபத்தில் இருந்தார்

என்பதையும் நாம் யூகிக்கவேண்டும்..


பல்லவப் பேரரசிலும் ஒரு தயாதிப் பிரச்சனை உருவானது..


நிருதுபங்கவர்மனுக்கும்,  கம்பவர்மனின் மகனான

அபராஜிதவர்மனுக்கும் வாரிசுரிமை போட்டி எழும்பியது.. மோதல் வெடித்தது.. 


மோதலுக்குத் தீர்வு காண வழக்கம்போல் களம் காண

தீர்மானித்தார்கள்..


நிருதுபங்கவர்மனுக்கு ஆதரவாக அவனோடு நல்லுறவில் இருந்த பாண்டிய அரசன் வரகுணபாண்டியன் தயாரானார்.. தஞ்சையை ஆண்ட

சிற்றரசான முத்தரையர்களும், நிருதுபங்கன் பக்கம்தான் இருந்திருக்க வேண்டும்.


நிருதுபங்கவர்மன் மற்றும் வரகுணபாண்டியன் தலைமையில் ஒரு பெரும் படை தயாரானது.

இது ஒரு பக்கம்.


அபராஜிதவர்மன்..

 கங்க மன்னர் முதலாம் பிருத்வி.. சோழர்கள் ..

இது ஒரு பக்கம்.

சோழர்கள் சார்பாக விஜயாலரோ அவரது மகன் ஆதித்தனோ அல்லது இருவருமோ இணைந்திருக்கலாம்..


கடும் போர் நடைபெற்ற இடம்தான் திருப்புறம்பியம் ..


போரில் .. அபராஜிதன் வெற்றி. கங்கமன்னன் வீரமரணம். பாண்டியன் பின்வாங்கினார்.. இவ்வெற்றி சோழர்களுக்கே சாதகமானது.


திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி  உதயேந்திரம் செப்பேட்டில் மட்டுமே உள்ளது.


கங்கமன்னனான இரண்டாம் பிரித்விபதி, அபராஜிதனுக்காக பாண்டிய வரகுணனை வென்றான். பிறகு அப்போர்க்

களத்திலேயே பிரித்வீபதி உயிர்நீத்தான்.


Having defeated by  force the pandya lord varaguna at the head of the great battle of sripurambiya, and having( thus) made(his)   title aprajita.( ie, unconquared) significant, This hero entered heaven of ( his) friend by sacrificing his own life.


Udayandram plates of prithivipati 2

S.i.i. vol. 2. No 76

P.381 . & 387 .V.18


ஆக..

இப்போர் ..

அபராஜிதனுக்கும், வரகுண

பாண்டியனுக்கும் நடந்ததாகத் தெரிகிறது.


ஆதித்தச் சோழனோ, நிருதுபங்கனோ குறிப்பிடவில்லை.


இச்செப்பேடு முதலாம் பராந்தகனின் அனுமதியுடன், இரண்டாம் பிரித்வீபதியால் வெளியிடப்படுகிறது.

இச் செப்பேட்டில்  இப்போர் நடைபெற்ற செய்தி இருப்பதால், இப்போர் சோழர்களுக்கு சாதகமான ஒன்று. 


உயிர்நீத்த முதலாம் பிரித்வீபதியின் பேரன் இரண்டாம் பிரித்வீபதி,

பராந்தகனுடன் இணைந்து பாணர்களை வென்று செம்பியன் மாவலிவாணராயன் என்னும் பட்டமும் பெறுகிறான்..


ஆக... திருப்புறம்பியம் போரில் கங்கர்கள்.. சோழர்கள்..அபராஜிதன் கூட்டனி வெற்றிப் பெற்றது என்பது தெளிவாகிறது.


 அபராஜிதன் வெற்றியால்... அதுவரையில் தஞ்சைப்பகுதியை நிருதுபங்கனின் கீழ் இருந்த முத்தரையர் வசம் இருந்தது.. இனி அபராஜிதனுக்கு சொந்தமாகிறது.. அபராஜிதன் தந்தை கம்பவர்மன்.


அபராஜிதன் திரும்பக்

கொடுத்தானோ... அல்லது விஜயாலயர் தஞ்சை மீது படையெடுத்தாரோ..


திருவிந்தளூர் செப்பேடு இவ்வாறு கூறுகிறது..


" கம்பவர்மனிடமிருந்து தஞ்சையை விஜயாலயர் கைப்பற்றினார் "

கம்பவர்மனின் கீழ் இருந்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையை விஜயாலயர் கைப்பற்றினார் என்பதே பொருத்தமாகும்..





திருப்புறம்பியம் போர் நடைபெற்ற ஆண்டு கி.பி. 880 என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு..

நன்றி: ஐயா. மா.மாரிராஜன்..

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்