செவ்வாய், 28 மார்ச், 2023

மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்


காவிரியாறு அகத்தியர் கமண்டலத்திலிருந்து வந்தது எனவும், காந்தன் அகத்தியர் யோசனை கேட்டுக் காவிரியாற்றைத் தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான் எனவும், பூம்புகாரை அடுத்த நாட்டில் தவம் செய்து கொண்டிருந்த கவேரன் என்ற சோழ மன்னன் வேண்டுகோளால் சோணாடு புக்கமையின் காவிரி, அவன் பெயரால் காவிரி எனப்பட்டது என்றும் மணிமேகலை கூறியுள்ளது.


அந்த காவிரிக்குக் கரை கட்டி அதில் ஓர் அணையை கட்டி மற்ற நாடுகளில் உள்ளவர்களெல்லாம் 'சோறுடையது சோழ வளநாடு' என புகழ செய்த மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்.
    காவேரி கரை கண்ட கரிகால சோழ தேவர்


சோழநாட்டில் உறையூர், கழார், குடந்தை, குராப்பள்ளி, புகார், வல்லம், பிடவூர், வெண்ணி போன்று பலபேரூர்கள் இருந்திருந்தாலும் சோழ நாட்டிற்குத்தலைநகராம் சிறப்புற்றிருந்தவை தொடக்கத்தில் உறையூரும், பின்னர்ப் புகாருமே ஆகும்.

அந்த சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும் முதற்காரணமானவன். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினத்தையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன். சான்றோர்களால் பட்டினப்பாலை பாடப்பெற்றவன் மாமன்னன் இரண்டாம் கரிகால சோழன்.

இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் முதலிய பல பெயர்களைப் பெற்றான். ரேனாண்டு சோழர், தெலுங்கச் சோழரும், கன்னட நாட்டிலும் சிற்றரசர் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கூறிக் கொண்டனர். பிற்காலச் சோழராகிய விசயாலயன் மரபினரும் தம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் இவனைக் குறித்து மகிழ்ந்தனர். வேதங்களில்கூட மூன்று இந்திரர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன்.

இவன் இளஞ் சேட்சென்னி, என்பவன் மகன். ‘இளஞ்சேட் சென்னி’ அரசாண்டவன் அல்லன், அரசனுக்கு இளையவன், அழுத்துார் வேள் மகளை மனந்தவன். அப்பெருமாட்டி கரிகாலனைப் பெற்றாள். கரிகாலன் வளர்பிறை போல வளர்ந்து பல கலைகளும் பயின்று ஒப்பற்ற இளஞ்சிங்க மாக விளங்கினான். அப்பொழுது உறையூரை ஆண்ட இவன் பெரிய தந்தை இறந்தான்; தந்தையும் இறந்தான். நாட்டிற் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரினின்றும் வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிவானாயினன். கழுமலத்து இருந்த யானையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு உரியவனைக் கொண்டு வருமாறு ஏவி, அந்த யானை பல இடங்களில் அலைந்து திரிந்து, கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது எடுத்துக் கொண்டு உறையூரை அடைந்தது. அது கண்ட பெருமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவராய்க் கரிகாலனைச் சோழ அரசன் ஆக்கினர்.

தாயத்தார் இவன் மீது அழுக்காறுற்று இவனைப் பிடித்து சிறைக் கூடத்தில் அடைத்தனர் அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்த அவர் சிறைக் கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனாகிய கரிகாலன் எவ்வாறோ தப்பி, தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் துணைப்பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாட்படைஞரைப் புறங்கண்டு, தாயத்தாரை ஒழித்து, அரசுரிமையைக் கைக் கொண்டு அரியணை அமர்ந்தான்.

இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள்.

இவன் எரிந்து கொண்டிருந்த சிறைக்கூடத்திலிருந்து வெளிப்பட்ட போது இவன் கால் கரிந்து விட்டதால் ‘கரிகாலன்’ எனப் பெயர் பெற்றான் என்று சில பழம் பாடல்கள் பகர்கின்றன. இங்ஙனமாயின், ‘முதற் கரிகாலன்’ என்பான் கொண்ட பெயருக்கு என்ன காரணம் கூறுவது.

இவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர பல மன்னர்களுடன் போரிட்டான், பட்டினப்பாலையில்

…பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின் நல்ல“, பொருள் :- “நீயோ இரவும் பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி, அவர தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் நாட்டுமக்கள் அழுது புலம்பும் ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; என்று கருங்குழலாதனார் பாடுகிறார்.

பகைவர் நாடுகளில் கரிகாலன் சோழப்படை புகுந்து பெரும் அழிவைவிளைவித்தது. அந்த போர்களோடு கள்ளர்களின் தொடர்புகளையும் ஆராய்வோமானால்

மாமன்னன் கரிகால சோழனால் வெற்றி கொண்ட நாடுகள், அதில் கள்ளர்களுக்குமான தொடர்புகள்

1) பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான்.

(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் ஒளிகொண்டார் ஒளிப்பிரியர் ஒளியாளியார். ஒளியுடையார், ஒளிவிராயர் )

2) பாண்டியருடன் போரிட்டான்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் தென்னவன், தென்னர்)

3) கற்கா - பாலக்காடு
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் கருக்கொண்டார்)

4) வேள் நாடு – திருவாங்கூர்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் வேள், வேள்ராயர்)

5) குட்டம் - கொச்சி
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் குட்டுவர் குட்டுவழியர், குட்டுவள்ளியர்)

6) குடம் -தென் மலையாளம்

7) பூழி- வடமலையாளம்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் பூழிநாடர், பூழியர்பிரான், பூழியூரார், பூழிராயர்)

8) இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் பொதியர்)

9) இருங்கோவேள்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் இருங்கள்ளர், இருங்களார், இருங்கோளர், இருங்கோஇளர்)

10) குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான். வேளாளர் பலரைக் குடியேற்றினான்.
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் குறும்பர், குறும்பராயர், அருமைநாட்டார், அருவாநாட்டார், அருவாத்தலைவர்)

11) திருக்கோவலூரைத் ஆண்டவன் மலையமான் சோழன் ஆட்சிக்கு உட்பட்டவன் ஆயினான்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் மலையமான், மலையராயர்)

12) வேங்கடம் வரை வெற்றிகொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ் சேனையுடன் புறப்பட்டான்; வடுகர் சிற்றரசர் பலரை வென்றான்.
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் வடுராயர், வடுகராயர், வண்டர்)

13) பின்னர்க் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மகத நாட்டு மன்னனை வென்றான். மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம்கொடுத்தான்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் மாகதராயன், மாதராயர், மாதைராயர், மாதுராயர்)

14) வச்சிரநாட்டு மன்னனை வென்றான், வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தர் அளித்தான்
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் வஞ்சிராயர், வச்சிராயர்)

15) அவந்தி மன்னனை வென்றான், அவந்தி வேந்தன் தோரணவாயில் வழங்கினான். பின்பு இமயத்தில் புலிக்கொடியைபறக்க விட்டான்.
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் புலிக்கொடியர், புலிக்கொடியோர்)

16) இங்ஙனம் இமயம் வரை இறுமாந்து சென்று மீண்ட கரிகாலன் இலங்கை நாட்டின் மீது தன் கருத்தைச் செலுத்தினான்; கப்பற் படை வீரரை அழைத்துக் கொண்டு இலங்கைத் தீவை அடைந்தான்; அதனை வென்று, தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆளவிட்டு மீண்டான்; மீண்டபோது பன்னிராயிரம் குடிகளைச் சோணாட்டிற்குக் கொணர்ந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈழமுடையான், ஈழமுண்டான், ஈழத்திரையன்).

17) ஆற்றின் இருமருங்கும் கரை அமைக்க முடிவு செய்தான். உடனே காவிரியாறு எந்தெந்த ஊர் வழிச் செல்கிறதோ, அவ்வூர் அரசர்க்கெல்லாம் கரை கட்டுமாறு திருமுகம் போக்கினான்; அத்துடன் அவரவர் பங்கையும் அளந்து கொடுத்தான். இக்கட்டளைப்படி சிற்றரசர் அனைவரும் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பதாயிரம் மக்களும் முயன்று கரை அமைத்தனர்.

கரை அமைப்பு வேலை முடிந்தபின், கரிகாலன், பற்பல வாய்க்கால்களையும் வடி மதகுகளையும் அமைத்துத் தண்ணிரை அழிவுறாமற் பாதுகாத்து, வேளாண் வாழ்க்கையை விழுமியதாக்கினான். அன்று முதல் கரிகாலன் ‘கரிகாற் பெருவளத்தான்’, காவிரிச்சோழன், காவிரிவெட்டி, பொன்னிநாடன் எனப்பட்டான்.

காவிரியாறு ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றது. சோழரும் அதுமுதல் ‘வளவர்’ எனப்பட்டனர். “பொன்னிக் கரை கண்ட பூபதி” (விக்கிரம சோழன் உலா-26)
(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் காவிரிவெட்டி, வளவர், காவிரிநாடன்)

18) திருச்சி திருவரங்கத்திற்கு மேற்கேகாவிரி ஆற்றுக்கிடையே 1080 அடி நீளமும், 40முதல் 60 அடிவரை அகலமும் கொண்டகல்லணையும் கட்டி காவிரியின் கரைகளைஉயர்த்திய பெருமையும் பெற்றவன் கரிகாலன்

17) சோழ நாட்டில் உள்ளகாடுகளை அழித்து, அவற்றை விளைச்சல்நிலங்களாக மாற்றினான். பாசன வசதிக்காகக்குளங்கள் வெட்டினான். கல்லணையைக்கட்டினான். இவன் காலத்தில்காவிரிப்பூம்பட்டினம் முக்கியத் துறைமுகப்பட்டினமாக விளங்கியது.

(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் காடுவெட்டி, காடுவெட்டியார், காடுவெட்டி சோழன்)

18) தொண்டை நாட்டைத் திருத்தினான். காடுகளை வெட்டி, மக்கள் உறைதற்கேற்ற சிற்றுார்கள் ஆக்கினான்; அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளைநிலங்கள் ஆக்கினான். தொண்டை மண்டலத்தின் தலைநகரம் காஞ்சிபுரம், கரிகாலன் அதனை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தான் அங்குப் பலரைக் குடியேற்றினான். தொண்டை நாட்டை ஆண்டுவருமாறு தன் மரபினன் தொண்டைமான் இளந்திரையன் விட்டுத் தன் நாடு மீண்டான்.

(தொடர்புடைய கள்ளர் பட்டங்கள் தொண்டைமான்)

மேலும் இவனுக்கு புகழ் சேர்ப்பது கரிகால் சோழன் தன்னைப் பட்டினப்பாலைஎன்னும் நூல் கொண்டு புகழ்ந்து பாடியகடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறுநூறாயிரம் பொன் பரிசு அளித்தவன் ஆவான்.

" தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும் "
(கலிங்கத்துப்பரணி, 198: 2-4) என்று குறிப்பிடுகிறது.


கரிகால் சோழன் காலத்தில் தமிழகம்செழிப்புற்று விளங்கியது. சமணப்பள்ளிகள்பலவும், பௌத்தப் பள்ளிகள் பலவும் பூம்புகாரில்சச்சரவு ஏதும் இன்றி அமைதியாக நடைபெற்றுவந்தன.

தவப்பள்ளி தாழ் காவின்
(பட்டினப்பாலை: 53)


கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.

துணை நின்ற நூல்

1 ) நூல் : சோழர் வரலாறு - ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்.
2 )நூல் : செம்மொழிப் புதையல் - சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
3 )நூல் : பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும் - மொழிஞாயிறு
ஞா.தேவநேயப் பாவாணர்
4 ) நலம் சான்ற கலன் சிதறும், பல் குட்டுவர் வெல் கோவே - மதுரைக்காஞ்சி ௧௦௫
5 ) கிபி 1226!! காஞ்சீபுரம்!! சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு (மாகதராயன் கல்லன்)
6 ) நூல் : அறந்தாங்கித்-தொண்டைமான்கள் - புலவர் ராசு

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்