வெளியீடு; தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
கல்வெட்டு இடம் : தர்மபுரி அருகே மூக்கனூர்.
கல்வெட்டு எண்; 113/1974.
கல்வெட்டு ஆண்டு;கி.பி 10,11 ம் நூற்றாண்டு.
கல்வெட்டில் உள்ள வாசகம் :
ஸ்ரீ கள்ள சோழன் ராஜநன் நம்....
த்தி மக்கள் அழிய பட்டாந்........
வீரனுடைய வலக்கரத்தில் கத்தி உள்ளது. மார்பில் அம்பு பாய்ந்துள்ளது. தலைமுடி மேலே முடியப்பட்டுள்ளது. மூன்று எருதுகள் உள்ளன. வீரனுக்கு மேல் மூன்று தேவகன்னியர் உளர். நடுகல் துண்டுகளாக உடைந்துள்ளது. கள்ள சோழ என்ற பெயர் காணப்படுகிறது.
1) இது ஒரு நடுகல், மன்னர்களுக்கு நடுகல் வைக்கப்படுவது இல்லை, வீரனுக்கு மட்டுமே நடுகல் வரும் என்றும் ……..
2) ஸ்ரீ கள்ள என்பது திருமால் என்பதை குறிக்கும் என்றும் ……….
3) பிற்கால சோழர்கள் பள்ளிப்படை மட்டுமே நினைவாக எழுப்பபடுவது வழக்கம் என்றும் ……
இப்படி பல கேள்விகள் உண்டு ........
1) முதலில் நடுகல்லில் உள்ள “ஸ்ரீ” என்ற பதம் வணக்கத்துக்குரிய என்பதைக் குறிக்கும் சமசுகிரத அடைமொழியாகவும், பெருமதிப்புக்குரிய என்பதைக் குறிக்கும் சமயச் சொல்லாகவும் விளங்குகிறது. ஸ்ரீ கள்ள சோழனில் உள்ள - இந்த ஸ்ரீ என்ற பதம் சோழ அரசனுக்கோ அல்லது சோழ குறுநில அரசனுக்கோ எடுத்த நடுகல்லகவே இருக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும். ஸ்ரீ என்ற கிரந்த எழுத்து மங்கலச் சொல் தந்தி வர்மன் காலத்தில் பல்லவர் கல்வெட்டுகளில் நிரந்தமாக இடம் பிடிக்கத் தொடங்கியது. சோழ மெய்க்கீர்த்தி மற்றும் கல்வெட்டில் “ஸ்ரீ” என்று பயன்படுத்தியதை நாம் காணமுடிகிறது. ‘'ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு".
2) மன்னர்களுக்கு நடுகல் வைக்கப்படுவது உண்டா.....
மன்னர்களுக்கு நடுகல் உண்டா என்றால், சங்ககாலத்தில் மன்னர்களும் போரில் நேரடியாக ஈடுபட்டுப் போர்க்களச் சாவை எதிர்கொண்டனர். இதனால் இவர்கள் நினைவாக நடுகற்கள் நடப் பட்டன. சங்ககாலத்தில் "கோப்பெருஞ்சோழன்”, தகடூர் நாட்டையாண்ட அதியமானுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது.
3) ஸ்ரீ கள்ள என்பது திருமால் என்பதை குறிக்குமா ……….
தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக கல் சமைத்துப் போற்றுவது நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை! முல்லையின் காட்டின் அடர் “கருமை” மாயோன் (திருமால்) ஆதி குடி நாட்டார் தெய்வம். மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும். கள்ளர்கள் "மாயோன்" வழி வந்தவர்களே.
* சோழர்கள் மெய்க்கீர்த்திகளில் தங்கள் குடியில் "திருமால்" பிறந்துள்ளதாகவும், தங்களை திருமாலின் அவதாரமாகவும் குறித்துள்ளனர்.
* திருமால் " கள்ளழகன்", "கள்ளர்பிரான்", "கள்ளர்பெருமான்", "கள்ளர் கோமான்" திருநாமங்களையே கொண்டுள்ளான்.
* உருத்திரங் கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படை, அந்நூலின் பாட்டுடைத் தலைவனான தொண்டைமான் இளந்திரையன் என்பான் திருமால் மரபில் உதித்த சோழர்களின் வழி வந்தவனாகக் கொண்டாடப்படுகிறான் (29-31)
" கமழ்குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி"
4) பிற்கால சோழர்களில் எல்லா மன்னர்களுக்கும் பள்ளிப்படை உண்டா என்றால், சோழர்களில் கண்டறியப்பட்ட பள்ளிப்படைகள் ஆதித்த சோழன் பள்ளிப்படை, அரிஞ்சய சோழன் பள்ளிப்படை மட்டுமே.
நடுகல் அரசர்கள், படைத்தலைவர், வீரர் எல்லோருக்கும் இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக.
* முதலில் நடுகல் பற்றி பார்ப்போமேயானால் நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை, பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும். இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.
* கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும். கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும்.
* ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) நடுகல்லின் மூன்றாவது கட்ட மாகும். வீரர் நினைவாகக் கல் நடப்படுகிறது. இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இரண்டாவது நூற்றாண்டு ஆகும்.
* நான்காவது வளர்ச்சி நிலையில் கல்லின் உயரம் குறைந்து வீரர் உருவம் பொறிக்கப்பட்ட நடுகற்கள் உருவாகின்றன. இதன் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு ஆகும். வீரரின் உருவம் மட்டுமின்றி எழுத்துக்களும் நடு கற்களில் பொறிக்கப்பட்டதை ‘எழுத்துடை நடுகல்’ என்று அகநானூறு (53) குறிப்பிடுகிறது.
* அய்யனார், சங்கிலிக் கருப்பன், பாவாடைராயன் போன்ற சிறு தெய்வங்களும் கள்ளர் குடியில் தோன்றிய நடுகல் தெய்வங்களே.
* ஆநிரை (வெட்சி) போரில் வீர மரணம் அடைந்த மன்னர்களுக்கு, வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. ஆநிரை கவர்தலுடன் அல்லது கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரையை மீட்டலுடன் தொடர்புடையதாகவே இப்போர்கள் பெரும்பாலும் அமைந்தன.
* "வெட்சி தானே குறிஞ்சியது புறனே’ என்று குறிப்பிடுகிறது. இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம் பூரணர் “வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வா றெனின், நிறைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிற நாட்டு ஆநிரையைக் களவிற்கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனாயிற்று என்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
* தொறு (சங்க கால ஆநிரை) கால்நடைக் கூட்டத்தைக் குறிக்கும் சொல் தொறு. தொழு என்றும் வழங்கும். தொறுப்பட்டி (நெய்த்தோர் பட்டி) நடுகற்களில், மாண்ட வீரனுக்கு அளிக்கப்பட்ட நிலம் பற்றிய செய்தி கி.பி. 9-10-ஆம் நூற்றாண்டிலிருந்து சுட்டப்படுகின்றது. இது, அரசு உருவாக்கம் நிலைபெற்ற காலத்துடன் தொடர்புடையது என்பதற்குச் சான்றாகும். மாண்ட வீரனுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்கு நெய்த்தோர்பட்டி என்று பெயர். நெய்த்தோர் என்பதற்கு இரத்தம் என்று பொருள் கொண்டு இரத்தம் சிந்துவதற்காகத் தரப்படும் நிலம் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இத் தானத்தினைக் "கல்நாடு" என்ற சொல்லாலும் கூறுகின்றனர்.
வெ.கேசவராஜ், ”தென்னிந்திய வீரக்கற்கள் – ஓர் ஆய்வு” என்னும் தலைப்பிலான தம் பிஎச்.டி. ஆய்வேட்டில், கல்நாடு என்பதற்கு எல்லை வகுத்துக் கல்நாட்டிக் கொடுத்த நிலத்தானம் என்று பொருள் கூறுகிறார்.
நிரைகவர சென்ற சோழன்.
இராஜகேசரி என்ற சோழ இளவரசன் கால் நடைகளை (எருமை மாடுகள்) கவரச்செல்லும் போது அவர் மெய்காவலர் கொலை செய்யப்பட்டதை பராந்தக சோழரின் கல்வெட்டு சொல்கிறது. இதில் வரும் ராஜகேசரி ராஜ ஆதித்த சோழர்.
நிரைகவர்தலில் இறந்த மெய்க்கவலரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 1500 குழி நிலம் (1குழி = 144 சதுரடி) கொடுக்கப்பட்டு உள்ளது.
சோழப்பெருவேந்தன் ராஜ ராஜ சோழனுக்காக ஆகோள் பூசலில் ஈடுப்பட்ட கள்ளர்கள் :-
ஹொட்டூர் வீரக்கல் ;
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம், பங்காபூர் வட்டத்தில் உள்ள ஹொட்டூர் எனும் ஊரில் மாண்ட ஒரு வீரனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல் ஒன்றில் காணப்பெறும் பழைய கன்னட எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் இராஜராஜனின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.
இந்த நடுகல்லான வீரக்கல்லில் உள்ள கல்வெட்டுச் சாசனத்தின் மைப்படி இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் எனும் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர்களிடம் இருந்ததை ஆராய்ந்து கட்டுரை வரைந்த லைனல் பானட் (Lionell Barnett) என்பார் அந்த நடுகல்லின் அமைப்பு பற்றியும், கல்வெட்டின் முலம், மொழிபெயர்ப்பு, ஆய்வுக்குறிப்பு ஆகியவற்றையும் விரிவுற எடுத்துரைத்துள்ளார். அக்கல்லின் மேற்புரம் அமைந்துள்ள ஒரு தெய்வத்தின் இருபுறமும் இருவர் சாமரம் வீசி நிற்க அவைகளுக்கு கீழாக ஆறுவரி கல்வெட்டு சாசனமும்,மீண்டும் ஒரு குறுக்கு கோடிட்டு அதற்கு கீழே ஏழிலிருந்து பன்னிரண்டாவது வரிவரையிலும் கல்லெழுத்துக்கள் காணப்பெற மீண்டும் சாசனத்திற்கு கீழாக நடுவண் மாண்டவீரன் வில் அம்புடன், மூவரும் போரிடவும்,பின்புலத்தில் ஆறு பசுக்களும் காணப்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
புத்தகம் : இராஜேந்திர சோழன் - குடவாயில் பாலசுப்பிரமணியன்
* வீரக்கல் ((Hero Stone), நடுகல் நடும் முறைகள் பற்றி "காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர" எனத் தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.
* கண்ணகிக்கு செங்குட்டுவன் அமைத்த நடுகல்லுக்குப் பூசை செய்ய அவள் தோழியான தேவந்தி என்பாளை அம்மன்னன் நியமித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
* “நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்’
நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர். நெய் விளக்கு ஏற்றியதால் உண்டானபுகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
* நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும் போது கள்ளும் படைத்து வணங்கினர்” என்று புறநானூறு கூறுகிறது. ‘நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது குறித்து ஔவையார் கூறுகிறார்.
* வழிச் செல்லும் பாணர்கள் வழியிடைக்காணும் நடுகற்களை வணங்கி யாழை வாசித்து செல்லுமாறு வழிப்ப்படுத்தப்பட்டனர்.
"ஓன்னாத் தெவ்வர் உலைவிடத்தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்…”
* கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பதின் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த வீரக்கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் முல்லை நிலத்துடன் தொடர்புடையனவாய் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகற்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் அதிகமானவை மலையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளிலேயே கிட்டியுள்ளன. ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளிலும் கடற்கரைப் பகுதிகளிலும் அரிதாகவே காணப்படுகின்றன. தமிழகத்தில் மலைகள் அதிகம் உள்ள பகுதிகளான மதுரை, தேனீ, கம்பம், சேலம். இங்கே எல்லாம் கள்ளர் நாடுகள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
* தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நடுகற்களில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வட்டெழுத்து வரி வடிவிலேயே எழுதப்பட்டுள்ளன. கி.பி. எட்டாவது நூற்றாண்டிற்குப் பிந்தைய கல்வெட்டுக்கள் தற்போதைய தமிழ் எழுத்து வடிவிற்கு மாறியுள்ளன.
* தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம் புலிமாங்கோம்பையில் பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றுள் மிகப் பழமையானவை என அறியப்படுகிறது. சோழ மண்டலத்தில் நடுகற்கள் அதிகம் கிடைக்கவில்லை. இப்பகுதிகளில் சங்க கால நடுகற்கள் ஏதும் கிடைக்கவில்லை. தற்போழுது, திண்டுக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில நடுகற்கள் கிடைத்துள்ளன. கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 202 கற்களும், ஆந்திராவில் 126 கற்களும், கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன. வடமொழியில் எழுதப்பட்ட நடுகற்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
* கிடைத்துள்ள 317 நடுகற்களைப் பட்டியலிட்ட போது அவற்றுள் 214 நடுகற்கள் ஆநிரை கவர்தலை மையமாகக் கொண்டு நிகழ்ந்த பூசலில் கொல்லப் பட்டோருக்கு நடப்பட்டுள்ளன. 317 நடுகற்களில் 180 இல் மன்னர்கள் அல்லது மன்னர் மரபு குறித்த பதிவுகள் உள்ளன.
நடுகல்லில் குறிக்கப்பட்டுள்ள அரசர், சிற்றசர், படை தலைவர், வீரர்
1) படைத் தலைவர் மகன் – நடுகல் (3 - 4 ஆம் நூற்றாண்டு) : -
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையில் விழுப்புரத்திற்கு 6 கி. மீ. வடக்கே அமைந்துள்ள ஏரியின் தலைமடைக்கு முன் நடப்பட்டுள்ள பலகைக் கல்லில் இந் நடுகல் வெட்டப்பட்டு உள்ளது. (நடு. பக்.470) / [விசய வேணுகோபால், பாண்டி, த. தொ. க. இதழ். பக். 15]
பிரையகம் யெறிந்த / க் கால்லப் போருட்ப / ட்டான் தெருக்கால்லா / ரு மகன் நீலகண்ட(ரைச) / ன் கல்
கால்லர் - காலாட்படை (Infantry); தெருக்கால்லார் - தெருக் காவல் மேற்கொள்ளும் காலாட்படை தலைவர்
பிரையகம் என்ற இடத்தை அழித்த காலாட்படையின் போரில் தெருக்காவல் மேற்கொள்ளும் காலாட்படைத் தலைவரின் மகன் நீலகண்ட அரைசன் வீரசாவடைந்தான். அவன் நினைவில் நட்ட நடுகல் இது. பண்டு நகரங்களின் தெருக்காவலுக்கு காலாட்படையே ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு படை பிரையகம் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டு அதை அழித்து உள்ளது. இது நகர் முற்றுகைப் போர் ஆகலாம். அப்போரில் அப்படையின் ஒரு ஆள், இதாவது, அரைசர் பொறுப்பில் இருந்த நீலகண்டன், படைத் தலைவரின் மகன் இறந்துள்ளான். கல்வெட்டில் அரசன் பெயர், ஆட்சி ஆண்டு குறிப்பிடாமல் உள்ளது. இக்கல்வெட்டு தமிழ் பிராமியில் இருந்து வட்டெழுத்து பிரியும் காலகட்டத்து எழுத்து பொறிப்பில் உள்ளது, மெய்எழுத்து புள்ளிகளுடன் உள்ளது. எனவே விஷ்ணு வர்மனின் இருளப்பட்டி கல்வெட்டிற்கும் முந்தையது இது எனலாம். இதை 3 - 4 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம்.
2) படைவீரன் - நடுகல் (7 ஆம் நூற்றாண்டு)
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நவலை எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற நடுகல் கல்வெட்டு உள்ளது (தரும. கல். 1974/61)
ஸ்ரீ சிவமார பருமற்கி யாண்டு மூன்றாவது / கந்தவாண்ணாதியரையர் புறமலை நாடாள / வாண பெருமன் கூடல்லெறிந்த ஞான்று சாத / வப்பன் / னார் படை / த்தன் கொட் / டி உண்ணி / பட்டான்
தன் - தன்னை; கொட்டி - அடித்து
கங்க மன்னன் முதலாம் சிவமாறனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 682) அவனுக்கு அடங்கிய சிற்றரசன் கந்தவாண் அதிஅரையன் புறமலை நாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது வாணபெருமன் கூடல் எனும் தீர்த்தமலையை அழித்த போது சாதவப்பன் என்பவனுடைய படை தன்னை அடித்து வீழத்த உண்ணி என்பவன் வீர சாவடைந்தான். வாண பெருமன் வாண மன்னனாக இருக்கலாம்.
3) அரசனுக்கு - நடுகல் (7 ஆம் நூற்றாண்டு)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் குழிதிகை எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டுக் கால நடுகல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. (E. I. Vol. 22,No.18, Pg. 113)
ஸ்ரீ கோவிசைய நந்தி / ச்சுர பருமர்கு யாண்டு / அம்பத்திரண்டாவது / பெருமானடிகள் மேல் / வல்லவரையன் படை வந் / து பெண்குழிக் கோட்டை அ / ழிந்த நான்று வாணரை / யர் மாமடி திருக எனத் திரிந்து பட்டார் கற்காட் / டு உடைய கங்கதி அரை / யர் கன்னாடு பெருங் க / ங்கர்
நான்று - ஞான்று, அப்போது ( at the time of); மாமடி - மாமன், மாமனார்; திருக - போருக்கு செல் என ஏவல்; திரிந்து - போர் மேல் சென்று; அதிஅரையர் - சிற்றரசர், படைத் தலைவர்.
பல்லவன் நந்தி வர்மனுடைய ஐம்பத்து இரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 783) பல்லவனான பெருமானடிகள் மேல் இராட்டிரக் கூடனான வல்லவரையன் படை நடத்தி வந்து பெண்குழிக் கோட்டையை அழித்த போது பல்லவனுக்கு அடங்கிய வாண அரையனானத் தன் மாமன் (அ) மாமனார் போருக்கச் செல் என்று ஏவ, உடனே போர் மேல் சென்று போரில் வீர சாவடைந்தார் கற்காட்டை ஆளும் கங்க அதி அரையர். அவர் நினைவில் கல்நாட்டு உடைய பெருங் கங்கர் இந்நடுகல் நிறுத்தினார்.
இக்கல்வெட்டில் குறிக்கப் பெறும் யாவரும் அரசர்களே எளியோர் எவரும் இலர்.பெருங் கங்கர் தந்தையாக இருக்கலாம். கற்காடு என்பதே களக்காட்டூர் ஆகும். இதில் குறிக்கப்படும் இராட்டிரக்கூடன் துருவன்
4) படைவீரன் - நடுகல் (9 ஆம் நூற்றாண்டு)
தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் கொளகத்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு.மா. கல். 86/1974)
மாந்த பருமற்கு இரபத்திரண்டா / வது வரி ஊரி நாட்டுவர் கரு இரும்புரை / சாத்தன்னோ / டு கற்றொறு / கொள்ளுட் ப / ட்டாரு கல்
கற் - கன்று; கொள்ளுட் - கவர்தலில்; கல் – நடுகல்
யாருக்கும் அடங்காமல் தனி ஆட்சி செலுத்திய மாந்த வர்மனுககு இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 728) வரி ஊர் நாட்டவரான கரு இரும்பொறை சாத்தன் என்பவனோடு சேர்ந்து கன்றையும் ஆநிரையையும் கவரும் போது எதிரணிப் படை நடத்திய காப்புப் போர் தாக்குதலில் வீர சாவடைந்தான் பெயர் குறிக்கப்படாத படைவீரன்.
5)பிற்காலச்சோழர்களின் முதல் கல்வெட்டு - விஜயாலய சோழனது படைவீரன் – நடுகல் (9 ஆம் நூற்றாண்டு)
பிற்கால சோழர்களின் முதல் அரசனாக விஜயாலய சோழனது மூன்றாவது ஆட்சியாண்டினைச் சேர்ந்த இக்கல்வெட்டில் விஜயாலயன் தஞ்சை கொண்ட கோப்பரகேசரி பன்மராக குறிப்பிடப்பட்டுள்ளார். இதுவே விஜயாலயன் சோழன் பற்றிய முதல் கல்வெட்டு (நடுகல்).
“தஞ்சை கொண்டகோப்பரகேசரி
பன்மர்க்கு யாண்டு 3-வது: கற்பூண்டி நாட்டுஅத்தீயூர் கரம்பை,
கலிதொடான்” முக்கண் அணியன் தொறுக்கொள (அத்) தொறு
மீட்டுப்பட்டான்.” (A.R. for 1935-6. பக்.72)
அணியன் என்பான் ஆநிரைகளை கவர்ந்து செல்ல அவற்றை மீட்பதற்காக நடைபெற்ற பூசலின் போது இறந்து பட்ட கற்பூண்டி நாட்டு அத்தியூரைச் சேர்ந்த கரம்பை முக்கன் என்பான் நினைவாக இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு வழி அறிந்து கொள்ளலாம்.
6) படைத் தலைவர் – நடுகல் (9 ஆம் நூற்றாண்டு)
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் இந் நடுகல் கல்வெட்டு உள்ளது. (E.I. Vol - IV, Pg 182)
ஸ்ரீ கோ விசைய நிரு / ப தொங்க விக்கிரம பரு / மற்க்கு யாண்டிருபத்தாறாவ / து படுவூர்க் கோட்டத்து மே / ல் அடையறு நாட்டு ஆமையூர் / மேல் நுளம்பன் படை வந்து தொறுக் கொள்ள பிரு / தி கங்கரையர் சேவகர் பெரு / நகர் அகரக் கொண்டக் காவிதி அகலன் கட் / டுவராயர் மகன் சன்னன் தளரா வீழ்ந்து பட்டான்
காவிதி - படைத் தலைவருக்கு அரசன் தரும் ஒரு பட்டம்; தளரா - மனங்குலையாமல், இளைப்பாராது
பல்லவன் நிருபதுங்க வர்மனுடைய இருபத்தாறாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 895) படுவூர்க் கோட்டத்தில் அடங்கிய மேற்கு அடையறு நாட்டுப் பகுதியான ஆமையூர் எனும் இன்றைய ஆம்பூர் மீது நுளம்பன் படை வந்து ஆநிரைகளைக் கவர்ந்தது. அப்போது பல்லவனுக்கு கட்டுப்பட்ட பிருதி கங்க அரையரின் படைத் தலைவனான அகலன் கட்டுவராயன் என்பவனுக்கு மகன் பொறுப்பு படைஅதிகாரி சன்னன் என்பவன் மனங்குலையாமல் போரிட்டு வீழ்ந்து வீர சாவடைந்தான். பெருநகர் அகரக் கொண்டக் காவிதி அகலன் கட்டுவராயனின் தந்தை. இக் கல்வெட்டில் குறிக்கப்படும் கங்க மன்னன் பிரிதி கங்க அரையன் என்பவன் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி ஆவான்.
7) படைத் தலைவர் - வாண்டையார் – நடுகல் (10 ஆம் நூற்றாண்டு)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் காட்டேரி என்ற ஊரில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இக்கால் வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (நடு. பக். 245)
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவீர பாண்டியனை / முடித்தலை கொண்ட / கோப்பரகேசரி பருமற்கு / யாண்டு நாலாவது பானைச் சுணையைப் பூத்து வாண்டை வந்தழித்த விடத்து ஒந் / டப்படுத்து எதிரே பத்தரம் மு / ருவிப் பட்டினத்துப் பட்டா / ன் தோவி டென்.
ஒண்ட - பதுங்கி, மறைந்து,ஒளிந்து; பத்திரம் - குற்றுவாள், அம்பு; பட்டினம் - கடற்கரை ஊர், காவிரிப் பூம்பட்டினம்.
சோழன் ஆதித்த கரிகாலன் உடைய நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.954) சோழனுக்குப் படைத் தலைவனாய் இருந்த பூத்து வாண்டை என்பவன் பானைச் சுணை எனும் ஊர் மேல் படை கொண்டு வந்து அழித்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிப்படுத்து கொண்டிருந்த தோவிடன் என்ற படைஆள் வாண்டைப் படை தனக்கு அருகே வந்ததும் திடீரென்று எழுந்து திகைப்புற எதிரே தோன்றி குற்றுவாளை உருவிப் போரிட்டு கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் வீர சாவடைந்தான். வாண்டையார் என்ற பெயருடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுடைய முன்னோர் சோழப் பேரரசில் படைத்தலைவராய் பொறுப்பில் இருந்து உள்ளனர். காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை ஊரான காவிரிப் பூம்பட்டினம். அத்து என்ற சாரியை பூம்புகாரில் என்று பொருள் தருவதால் கடல் கொண்ட பின் சிற்றூராகிப் போன புகாரின் ஒரு அண்டைப் பகுதியில் பானைச் சுணை என்ற ஊர் இருந்து உள்ளது எனலாம். எனவே போர் சோழ நாட்டில் நடைபெற்று உள்ளது. ஆனால் மாண்ட தோவிடன் வாணியம்பாடி வட்டம் காட்டேரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவன் நினைவில் இந் நடுகல் அவன் உறவினரால் அங்கு நடப்பட்டது. எனினும் தோவிடன் யார் சார்பில் போரிட்டான் என்ற செய்தி கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.
தெத்து வாண்டையார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் கந்தர்வகோட்டையில் உள்ளனர்
8) சிற்றரசர் – நடுகல் (10 ஆம் நூற்றாண்டு)
திருப்பத்தூர் அருகே பால்நாங்குப்பம் பகுதியில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நடுகல்லில் உள்ள சிலை, நான்கரை அடி உயரமும், நான்கரை அடி அகலமும் கொண்டுள்ளது. இக்கல்லில் வீரன் போர் கோலத்தோடு இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இடது கையில் பெரிய வில்லும், வலது கை மார்பின் மீதும் உள்ளது. இடுப்பில் உறைவாள் உள்ளது. கை விரல்கள் நேர்த்தியுடன் செதுக்கப்பட்டுள்ளன. தலைக்கொண்டை வலதுபுறம் வாரப்பட்டுள்ளது. கால்களில் வீரக்கழல்கள் உள்ளன.
நடுகல் பசுக்களைக் காப்பாற்ற நடந்த போரில் உயிர்நீத்த வீரனுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீரன் சிற்றரசன் ஏனெனில், அவர் சன்னவீரம் (மார்பு பகுதியில் அணியும் மாலை) அணிந்துள்ளார். இது, போர் கடவுளான முருகப் பெருமான் அணியக் கூடிய வீரத்தின் அடையாள சின்னமாகும். மேலும், தலைக்குப் பின்புறம் கிரீடம் உள்ளது. அதற்கும் மேல் பூமாரி பொழிவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த வீரன் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகிறது. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நடுகல் என்பது தெரியவருகிறது.
9) சிற்றரசர் – நடுகல் (16 ஆம் நூற்றாண்டு)
பேரணாம்பட்டு அடுத்துள்ள ரங்கம்பேட்டை கிராமத்தில், போரில் உயிரிழந்த குறுநில மன்னனின் நடுகல் ‘‘இடிந்த நிலையில் இருந்த கல் மண்டபத்தின் ஒரு பகுதியில் குதிரை மீது ஏறிச் செல்லும் வீரனின் நடுகல் உள்ளது. கையில் வாள் ஏந்தி குதிரை மீது அமர்ந்த வீரன் செல்வதும், உடன் 2 பெண்களும் பணியாட்களும் இருக்கிறார்கள். விஜயநகரப் பேரரசு காலத்துக்கு உட்பட்ட குறுநில மன்னனின் நடுகற்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. நீளமான வாள், அலங்காரம் செய்யப்பட்ட குதிரை, வெண் கொற்றக் கொடையுடன் நிற்கும் பணியாள், சாமரம் வீசும் பணியாள், அவரை வழியனுப்பும் 2 பெண்கள், உடன் இருக்கும் நாய் போன்றவை இதில் காணப்படுவதால் அவர் வேட்டைக்கு அல்லது போருக்குச் சென்று உயிரிழந்திருக்கலாம்.
10) நடுகல்லில் ராஜராஜன் வெற்றி செய்தி
(செங்கம் கல்வெட்டு)
தொண்டைநாடு, கொங்குநாடு, பாண்டியநாடு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிய ஒரு வலுவான அரசாக மாறியிருந்த சோழப் பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது சேர நாட்டில் இயங்கிவந்த காந்தளூர்ச் சாலையாகும். காந்தளுர்ச் சாலை கலமறுத் தருளிய கோவி இராஜராஜ கேசரி’ என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பது கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம். இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றி பெற்றான். காந்தளூர்ச் சாலை சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செங்கம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ‘நடுகல்’லில் ‘சாலைய் மறுத்து அங்குள்ள மலைஆளர் தலை அறுத்து’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காந்தளூர்ச் சாலைப் போரில் தன்னை எதிர்த்த மலையாளர்களின் தலையை அறுத்தான் எனபதை அறிய முடிகிறது.
11) கன்னர தேவன் தக்கோலம் போரில் வென்ற செய்தி நடுகல்லில் - அதக்கூர்(அடுக்கூர்) நடுகல்
பராந்தக சோழர் ஆட்சியின் இறுதி காலத்தில் கன்னர தேவன்
என்றழைக்கப்பட்ட மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இரட்டை மண்டலத்தாருடன் தக்கோலத்தில் நடந்த போர் மிகுந்த முக்கியத்துவமுடைய போராகும். இப்போரில் சோழ பட்டத்து இளவரசரான இராஜாதித்தர் போர்க்களத்திலேயே வீர மரணமடைந்தார். அப்போழுது ஏற்பட்டக் குழப்பத்தில் வெற்றிப் பெற்ற இரட்டை மண்டலத்தார் சோழர் பகுதிகள் சிலவற்றை சில காலம் தங்கள் ஆளுகைக்குக் கீழ் வைத்திருந்தனர். பின்னர் சுந்தர சோழர் ஆட்சிக்காலத்தில் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் தான் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டெடுத்து சோழப் பேரரசினில் இணைத்தார்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தக்கோலம் போரைப் பற்றி கிடைத்த முக்கியமான கல்வெட்டுச் சான்று கர்னாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதக்கூர் என்னும் கிராமத்திலுள்ள செல்லேஸ்வரர் கோவிலில் உள்ள நடுகல்(வீரக் கல்) ஒன்றில் கிடைத்தது. கி.பி 949-950ஆம் வருடத்தைய இக்கல்வெட்டு கன்னட கவிதை நடையில் உள்ளதாகும். இக்கல்வெட்டு முக்கிய நிகழ்வான கன்னர தேவன் என்றழைக்கப்பட்ட மூன்றாம் கிருஷ்ணன் தக்கோலம் போரில் சோழர்களுக்கு எதிராகப் பெற்ற வெற்றியையும் குறிக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் உடைய ஒரு போரினைப் பற்றியும் விளக்கப்பட்டிருப்பதால் இந்த அதக்கூர் (அடுக்கூர் என்றும் அழைக்கப்படுகிறது) நடு்கல் கல்வெட்டு வரலாற்றாய்வில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது.
12) குறு நில மன்னர் - நடுகல்
தேவிகாபுரம் தேவரடியார் குளம் அருகில் முள்வேலி மரவேர்களுக்கு அடியில் இருந்த 14 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த நடுகல் இருப்பது தெரியவந்த்து. இது தொடர்பாக ஆய்வு செய்த்தில் இந்நடுகல் இரு குறு நில மன்னர்களுக்கு இடையில் நடைபெற்ற போர் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலே உள்ள நடுகல்கள் மூலம் நம் அறிவது, அரசர் வீரமரணம் அடைந்து வின்னுலகத்திற்கு பயணிக்கும்போது, அவ்வீர அரசரை தேவலோக கன்னியர்கள் மூவர் வந்து, அவ்வரசரை வின்னுலகம் அழைத்துச் செல்வதாக கல்வெட்டுகளில் பொறித்து வைக்கும் கற்சிற்பங்கள் வெட்டிவைப்பது வழக்கம்.
அவ்வழக்கப்படியே, இச் சோழ ராஜனை மூன்று தேவ கன்னியர்கள் தெய்வ லோகத்திலிருந்து வந்து அவ்வரசரை எதிர்கொண்டு அழைத்துச் செல்வதாக " ஸ்ரீ கள்ள சோழன் ராஜநன் நம்" என்ற வீரக்கல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் மூன்று எருதுகள் சிற்பம் உள்ளதால் ஆநிரைப்போரில் சோழன் ஈடுபட்டு வீரமரணம் அடைந்துள்ளார்.