சனி, 24 ஆகஸ்ட், 2019

பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்


‘நாடு சுத்தி கோட்டை... நடுவிலே நீர்வாவி! 
ஏழு சுத்து கோட்டை... எறும்பேறா மண்டபம்! 
பத்து சுத்து கோட்டை... பாம்பேறா மண்டபம்! 
தங்க பனையை உருவாக்கி எங்குலத்து மக்களுக்கு...
தங்கக் கனியை பசிக்குண்ண குடுத்த அய்யனே! 
தெற்கே விழுந்த சடை அய்யனே உங்களுக்கு... 
தென்னாடும் பூசையில! 
வடக்கே விழுந்த சடை அய்யனே உங்களுக்கு... 
வடநாடும் பூசையில! 
பூட்டய்யா உங்குதிர... 
புறப்படய்யா கொஞ்ச நேரம்... 
வந்தமரய்யா உன் மந்தையிலே! 
வந்திருக்கும் புள்ளைகளுக்கு... 
வந்து நில்லய்யா வாக்குச் சொல்ல!’

பொற்பனை முனீஸ்வரரது வாசலில் நாள்- கிழமை என்றில்லாமல், இந்த மந்திரச் சொற்கள் எந்த நாளும் ஒலிக்கின்றன.


கள்ளர் நாடுகளில் ஒன்றாக விளங்கும் வல்ல நாடு ஆனது திருக்கட்டளை, வல்லத்திராக்கோட்டை, மணிப்பள்ளம், திருவரங்குளம், திருக்கோகர்ணம் முதலிய பகுதிகளை உள்ளடக்கியது. இங்குள்ள கள்ளர் 36 பட்ட பெயர்களை, அதாவது தம்பிரான், அரையன், மாளுசுத்தியார், முனையத்திரியர் என பல்வேறு பட்டங்களை உபயோகிக்கின்றனர்.

பொ. ஆ 1730~1769 - மன்னர் முதலாம் விஜயரகுநாதராய தொண்டைமான் தெய்வ பக்தி மிகுந்த மன்னராக இருந்தபோதும் திருவரங்குளம் காடுகளில் தவம் செய்து தவவாழ்வு மேற்கொண்ட உத்தமா். இதனால் இவரை “சிவஞானபுரம் துரை” என்ற சிறப்பு பெயரோடு மக்கள் அழைப்பதுண்டு.

புதுகோட்டை- ஆலங்குடி பாதையில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பொற்பனைக்கோட்டை கிராமம்.  ஒரு முறை சக்தியும் சிவனும் புஷ்பக விமானத்தில் ஏறி பூலோகத்தைச் சுற்றி வரப் புறப்பட்டனர். வழக்கமாக அவர்களுக்குக் குடை பிடிக்கும் புஷ்பகாந்தனும் உடன் கிளம்பினான். பொற்பனைக் கோட்டை அமைந்துள்ள இடத்தில், அந்தக் காலத்தில் பொய்கை ஒன்று இருந்தது. தேவகன்னியர்கள், அடிக்கடி இங்கு வந்து நீராடிச் செல்வது வழக்கம். அன்றும் அவர்கள் அந்தப் பொய்கையில் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியே சிவ-பார்வதிதேவியுடன் சென்ற புஷ்பகாந்தன், தேவகன்னியரைக் கண்டு மெய்ம்மறந்தான். அவர்களின் அழகில் மயங்கி அந்த இடத்திலேயே நின்று விட்டான். ஒன்பது காத தூரம் கடந்த பிறகு திரும்பிப் பார்த்த சிவபெருமான், ‘‘புஷ்பகாந்தன் எங்கே?’’ என்று கேட்டார். ‘‘வழியில் ஒரு பொய்கையில் தேவகன்னியரைக் கண்ட அவன், அவர்களது அழகில் மயங்கி பனைமரம் போல் அங்கேயே நின்று விட்டான்!’’ என்றார் பார்வதிதேவி. உடனே, பொய்கைக்குத் திரும்பி வந்தார் சிவபெருமான். ‘புஷ்பகாந்தனுக்கு சிவபெருமான் என்ன தண்டனை கொடுக்கப் போகிறாரோ?’ என்ற பதைபதைப்புடன் தேவர்கள் பொய்கை அருகே வந்திறங்கினர்.

சிவபெருமான், ‘‘கடமையை மறந்து பனைமரம் போல் நின்ற, பொற்பனையாக மாறி... பூலோக ராஜனாக இங்கேயே நில்!’’ என்று புஷ்பகாந்தனிடம் கூறிவிட்டு மறைந்தார்.

அடுத்த கணமே கண்ணைப் பறிக்கும் ஜொலிப்புடன், பொன் பனைமரம் ஒன்று அங்கு தோன்றியது! அந்தக் காலத்தில் இங்கு வேட்டுவ இன மக்கள், கூட்டம் கூட்டமாக வசித்தனர். அவர்கள், தங்களது வனத்தில் பொன் பனை மரம் ஒன்று திடீரென தோன்றியிருப்பதைக் கண்டு மிரண்டனர். அந்த மரத்தில் இருந்து தினமும் ஒரு பொன் பனம்பழம் கீழே விழுந்தது. முதலில் அந்த பழத்தைத் தொடுவதற்கு பயந்த வேடர்கள், நாளடைவில் அதைக் கையில் எடுத்துப் பார்த்து அதிசயித்தனர்.

சிவபெருமானின் திருவிளையாடல் தொடர்ந்தது... பொற்பனை தோன்றிய இடத்துக்கு மேற்கில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர் கலசமங்கலம். இங்கு கட்டுடையான் செட்டியார் என்பவர் வசித்தார். பொன் பனம்பழத்தை சேகரித்து வைத்திருந்த வேட்டுவர்கள் சிலர், அவற்றுள் ஒன்றிரண்டை எடுத்து வந்து செட்டியாரிடம் தந்தனர். மாற்றுக் குறையாத அவற்றின் மதிப்பறிந்த செட்டியார், ‘‘இது போல் எத்தனை இருந்தாலும் கொண்டு வாருங்கள். நான் எடுத்துக்கறேன். அதுக்கு பதிலா, நீங்க வயிறார சாப்பிட தானியங்கள் தருகிறேன்’’ என்றார். அதன்படியே தினமும் பொன் பனம்பழத்தை எடுத்துக் கொண்டு போய், அவர்கள் செட்டியாரிடம் கொடுப்பதும் அவர் தானியம் தருவதும் வழக்க மாயிற்று. அதே நேரம், தங்களுக்கு புதுவாழ்வு கொடுத்த பொற்பனையை அந்த மக்கள் கடவுளாகக் கருதி வணங்க ஆரம்பித்தனர். பொற்பனையை உருவாக்கி விளையாட்டைத் துவங்கிய சிவபெருமான், மரத்தை பிரபலப்படுத்த இன்னொரு காரியமும் செய்தார்.


அந்தக் காலத்தில் வல்லம்கோட்டையை சுந்தரபுரி சோழன் ஆட்சி செய்து வந்தான். குஷ்டரோகத்தால் அவதிப்பட்ட அவனது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘‘தென் திசையில் உள்ள ஒரு வனத்தில் பொற்பனை ஒன்று உள்ளது. அதன் அருகில் இருக்கும் பொய்கையில் மூழ்கி எழுந்தால், உனது பிணி நீங்கும். இதற்குப் பரிகாரமாக அங்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபாடு நடத்து!’’ என்று அருளி மறைந்தார். மறு நாளே படை-பரிவாரத்துடன் புறப்பட்டான் சுந்தரபுரி சோழன். மிகவும் சிரமப்பட்டு பொற்பனையை கண்டுபிடித்த மன்னன், அருகில் இருந்த பொய்கையில் நீராடி பிணி நீங்கப் பெற்றான்.


திடீரென தங்களது தேசத்துக்குள் ஆள்- அம்பு- சேனையுடன் மன்னவன் வந்ததை கண்டு பயந்த வேட்டுவர்கள், புதர்களுக்குள் பதுங் கிக் கொண்டனர். அவர்களது அச்சத்தை போக்கிய அரசன், பொற்பனை வந்த அதிசயத்தைக் கேட்டு மெய்சிலிர்த்தான். அவர்கள் மூலம் கட்டுடையான் செட்டியார் பற்றியும் அறிந்து கொண்டான். அவரிடம் சென்று, வேட்டுவர்கள் கொடுத்த பொன் பனம்பழங்களைத் தருமாறு கேட்டான். ‘‘உங்களது கனவில் தோன்றியது போல், எனது கனவி லும் தோன்றிய சிவ பெருமான், இந்த பழங்களை உங்களிடம் ஒப்படைக்கச் சொன்னார்!’’ என்ற செட்டியார், தனது வீட்டு குதிரில் சேமித்து வைத் திருந்த 999 பொன் பனம் பழங்களை எடுத்து வந்து சோழனிடம் கொடுத்தார்.



அவற்றை வாங்கிக் கொண்டு, பொன் பனை மரம் நின்ற இடத்துக்கு அவன் வந்தபோது, அது மாயமாக மறைந்து போனது. இதனால் மனசொடிந்து போன மன்னன், ‘‘எனக்கு மறுவாழ்வு தந்த தெய்வம் இங்குதான் இருக்கிறது. அந்த தெய்வத்தைப் பார்க்காமல் இங்கிருந்து போக மாட்டேன்’’ என்று பொய்கையை சுற்றி வட்ட வடிவில், கோட்டை ஒன்று எழுப்பி, அங்கேயே தங்கி விட்டான். நாட்கள் நகர்ந்தன. இந்த கோட்டையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் திருவரங்குளம். இதையடுத்து இடையபட்டி கிராமம். தினமும் இங்கிருந்துதான் கோட்டைக்கு பசும்பால் கொண்டு வருவார்கள்.

ஓரு நாள் திருவரங்குளம் பகுதியில் திடீரென தோன்றிய மண் மேடு ஒன்று பால் கொண்டு வந்தவர்களை கால் இடறி கீழே விழச் செய்தது. இந்த சம்பவம் மறு நாளும் தொடரவே, கோபம் கொண்ட மக்கள், ஆயுதங்களால் மண் மேட்டை வெட்டினார்கள். அப்போது அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தின் மீது வெட்டு விழுந்து உதிரம் தெறித்தது. அந்த உதிரம் பட்ட அத்தனை பேருக்கும் பார்வை பறிபோனது.

இதைக் கேள்விப்பட்டு திருவரங்குளத்துக்கு ஓடோடி வந்தான் சுந்தரபுரி சோழன். தன்னிடமிருந்த பொன் பனம்பழங்களை விற்றுப் பொருளாக்கி, அந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஆலயம் ஒன்று எழுப்பினான்.  அதுவே திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில்.



புதுக்கோட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். குலோத்துங்க சோழீச்சரம் என அழைக்கப்பட்ட இந்தத் தலத்தின் நாயகனாம் சிவனாரின் திருநாமம். ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி என அழைக்கின்றனர். ஹரிதீர்த்தேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி பிரகாதாம்பாள் ஆவார். தல மரம் பொற்பனை ஆகும். இங்குள்ள திருச்சிற்றம்பல உடையார் காசி விசுவநாதருக்கு இணையானவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபட்டால் அவரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்

 



இக்கோயிலின் ராஜ கோபுரம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.



வல்லநாட்டுக்கள்ளர்களின் நாட்டுக்கூட்டம் திருவரங்குளம் கோவிலில் நடைபெறும்.  இக்கோயிலில் தினசரி நடைபெறும் நிகழ்வுகளில் முக்கிய செலவுகளை ஏற்கின்றனர்.( Manual of pudukkottai state 1910). கிபி 1539 ல் சிவந்தெழுந்த திருமலைராய பல்லவராயர் திருவரங்குளம் சிவன் கோயிலுக்கு நிலங்களை அளித்துள்ளார்.



ஆடிப்பூரத்திருவிழாவில்  முதல் மண்டகப்படி கண்டுவார் பட்டம் உடைய கள்ளர் குடும்பத்திற்கு உரியதாகும்.

சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்டவர் ஸ்ரீஅரங்குளநாதர். சிறிய மூர்த்தம்தான் என்றாலும் மிகப்பெரிய சாந்நித்தியம் கொண்டவர் சிவனார் என்கின்றனர் அடியார்கள். ஏழு தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான இந்தத் தலம், மிகச் சிறந்த பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தலங்களில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி. எனவே, இந்தத் தலத்து நாயகியின் திருநாமமும் அதுவே.


தலத்தில் அம்பாள் சந்நிதிக்கு முன்னே உள்ள ஸ்ரீசக்கரம் ரொம்பவே விசேஷம். இக்கோவிலில் பூரம் நட்சத்திரத்திற்குறியவர்களுக்கு சிறப்பான தலமாகும் அதைவிட பிள்ளைத்தத்து போன்ற பலவற்றுக்கு உயர்ந்த கோவிலாகும் வருடம்தோறும் வைகாசியில் இரட்டைத்தேரும் ஆடியில் அம்பாளுக்கு தனித்தேரும் நடைபெறுவது வழக்கம்

சுந்தரபுரி சோழன் பொன் பனம்பழங்களை விற்றுப் பொருளாக்கி, அந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஆலயம் கட்டிய செலவு போக எஞ்சிய பழங்களை ஆலயத்தின் அடித்தளத்தில் புதைத்து வைத்தான். மேலும் தனது கோட்டையின் வடக்கு வாசலில் பொற்பனைக்காளியையும், 


தெற்கு வாசலில் பெரிய ஐயனாரையும் காவல் தெய்வங்களாக நிறுத்தினான். 



வேட்டுவர் இனத்தினர் வழிபட்ட பொற்பனை மரத்தை பொற்பனை முனீஸ்வரராக்கி வழிபட்டதுடன், அவரையே கோட்டையின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளுக்கு காவல் தெய்வமாக்கினான். 

கீழக்கோட்டை ஆதி முனீஸ்வரர் ஆலயம்


பொற்பனைக்கோட்டையின் மேற்கு பகுதியில் உள்ள முனீஸ்வரரின் சிலை



பிற்காலத்தில் கோட்டை இடிந்து போனாலும் கோயிலுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. கோட்டைக்கு அருகில் (விளிம்பில்) வேட்டுவர்கள் வசித்த பகுதி, இன்று பொற்பனைக்கோட்டை கிராமமாக விளங்குகிறது. இந்த கிராமத்தின் கிழக்கு எல்லையில்தான் புகழ் பரப்பி நிற்கிறார் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்.




முனீஸ்வரரை சுற்றித் திறந்த வெளி பிராகாரத்தில் விநாயகர், பதினெட்டாம்படி கருப்பர், பொற்பனைக்காளி, முத்தாள் ராவுத்தர் ஆகிய தெய்வங்கள் இருக்கின்ற னர். இவர்களுள் முத்தாள் ராவுத்தர், முனீஸ்வரரின் கட்டளைகளை நிறைவேற் றும் முதல்மந்திரி. இவருக்கும் கூட ஒரு பின்னணி உண்டு. முத்தாள் ராவுத்தர் மெக்காவிலிருந்து வந்தவர். இவரும் அப்போதைய புதுக்கோட்டை மன்னரின் சம்பந்தியான பிலாவிடுதி கள்ளரும் நண்பர்கள். ஒரு முறை மன்னருக்காக நெய் பலகாரம் செய்து, அதை ஒரு குடத்தில் வைத்து மூடி, எடுத்து வந்தார் பிலாவிடுதி கள்ளர். அப்போது அவரிடம், ‘‘குடத்தில் இருப்பது என்னாங்காணும்?’’ எனக் கேட்டார் ராவுத்தர்.


‘‘அதுக்குள்ள முடி இருக்கு!’’ என்று தனது வழக்க மான நையாண்டித்தனத்துடன் பதில் சொன்னார் கள்ளர். இதனால் ஆத்திரமடைந்த ராவுத்தர், தனது ஸித்து விளையாட்டால், நெய் பலகாரத்தை ‘முடி’யாக மாற்றி விட்டார்! இதை அறியாத கள்ளர், மன்னரிடம் குடத்தைக் கொடுத்தார். அதை ஆவலுடன் திறந்து பார்த்த மன்னர், அதற்குள் முடி இருப்பதைக் கண்டு சினம் கொண்டார். விசாரித்தபோது, ‘ராவுத்தரின் வேலை இது!’ என்பதை அறிந்த மன்னர், முத்தாள் ராவுத்தரை அழைத்து வரச் சொன்னார். ராவுத்தரோ, ‘‘நான் வரமாட்டேன், வேண்டுமானால் மன்னரை இங்கு வரச் சொல்!’’ என்று மமதையுடன் கூறினார். ராவுத்தரை வெல்ல வேறு வழி கிடையாது என்பதை அறிந்த மன்னர், பொற்பனைக் கோட்டை முனியையும், தடிகொண்ட ஐயனாரையும் மனமுருகி வேண்டினார். ராவுத்தரின் செய்கை அறிந்து கடும் கோபம் கொண்ட முனி, ஆக்ரோஷத்துடன் கிளம்பி வந்து ஒரே மிதியாக மிதித்து ராவுத்தரை பலிவாங்கிக் கொண்டதுடன், அவரை தன் முன்னோடி தெய்வமாகவும் மாற்றிக் கொண்டார்.


புதுக்கோட்டை ஜமீனில் திவானாகப் பணி புரிந்தவர் சேஷையா சாஸ்திரி. அகலமான வீதிகளுடன் புதுக் கோட்டை நகரை அழகுற உருவாக்கியவர் இவர்தான். இவரது காலத்தில்தான் திருக்கோகர்ணம் மலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு பிரமாண்டமான சிலை வடித்தனர். அங்கிருந்து நகரின் முக்கியமான பதினாறு வீதிகளை வலம் வந்து, பிறகு சிலையை கொண்டு போய் கோயிலில் நிறுத்தினார்களாம். இன்றும் பொற்பனை முனீஸ்வரர், அந்த பதினாறு வீதிகளையும் சுற்றி வந்து புதுக்கோட்டை நகரை பாதுகாப்பதாக ஐதீகம். இன்றும் இந்த தெருக்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் முனீஸ்வரர் வந்து- செல்வதற்கு வசதியாக சிறு ஜன்னல்கள் அல்லது சிறு இடைவெளி விட்டு வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. பனை மரத்தை வைத்து பகவான் தோன்றினாலும், இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சம் பாலை மரமே! குழந்தை இல்லாதவர்களுக்கு, இந்த மரத்தின் இலைகளை முனீஸ்வரரின் பாதத்தில் வைத்து வணங்கி, உண்ணக் கொடுத்தால் வெகுசீக்கிரம் தொட்டில் கட்டும் யோகம் வரும். முனீஸ்வரரின் தங்கையாக, சூலாயுதத்துடன் இங்கு அமர்ந்திருக்கும் பொற்பனைக்காளிக்கு வளையல் வாங்கி கட்டினால் அவள், திருமணமாகாத பெண்களுக்கு கட்டாயம் மாலை எடுத்துக் கொடுப்பாள் என்பது இங்குள்ள மக்களின் அசையாத நம்பிக்கை.


ஏவல், பில்லி- சூனியம், காத்து-கருப்பு, மாந்திரீகம் ஆகியவற்றை தவிடு பொடியாக்கும் தர்மப் பிரபுவாக நிற்கிறார் பொற்பனை முனீஸ்வரர். குறை கேட்டு வருபவர்களுக்கு, சாமி அழைத்து குறி சொல்ல நித்தப் பொழுதுக்கும் இங்கே கோடாங்கிகள் இருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் முனீஸ்வரர் வாசலில் விலக முடியாத அளவுக்கு கூட்டம் வருகிறது. முனீஸ்வரருக்கென்று தனியே திருவிழா எதுவும் இல்லை. ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் பதினெட்டாம்படி கருப்பருக்கு பால்குட திருவிழா நடக்கிறது. அன்று காலை, புதுகையிலிருந்து பால்குடம் எடுத்து

வந்து கருப்பருக்கும், முனீஸ்வரருக்கும் அபிஷேகம் செய்கிறார்கள். மதியம் சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஜொலிக்கிறார் முனீஸ்வரர். திங்கட் கிழமை கருப்பருக்கு கடா வெட்டு. செவ்வாய்க் கிழமை சந்தனம் கலைப்பு. அத்துடன் திருவிழா முடிவடைகிறது.

புதுக்கோட்டையில் பிறந்த எவரும் ஒரு முறையாவது பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர் சந்நிதியை மிதிக்காமல் இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல புதுகைக்கு எந்த அதிகாரி மாறுதலாகி வந்தாலும் பொற்பனைக்கோட்டைக்கு வந்து விட்டுத்தான் அடுத்த வேலைக்குப் போவார்களாம்!

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். திருவரங்குளம் சிவாலயத்துக்குள் சுந்தரபுரி சோழன் புதைத்து வைத்ததாகச் சொல்லப்படும் பொன் பனம்பழங்களை எடுக்க இன்றைக்கும் ஒரு கோஷ்டி வட்டமடித்துக் கொண்டே இருக்கிறது! 

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்