புதன், 28 ஆகஸ்ட், 2019

வரம் கொடுக்கும் வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள்!



கிராமத்தின் ஆரம்பத்தில் பிள்ளையார் கோயில், குளம், சிவன் கோயில், மத்தியில் பெருமாள் கோயில், கிராம எல்லை முடிவில் அய்யனார் போன்ற காவல் தெய்வங்களின் கோயில்களுடன் வியப்பூட்டுகிறது  வரகூர். 

17- ஆம் நூற்றாண்டில் பூபதி ராஜபுரம் என்ற வரகூர் கிராமம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தாலும் ராஜராஜசோழன் காலத்தில் 11ஆம் நூற்றாண்டின் முன் பகுதியில் ராஜேந்திர சிம்ம வளநாடு என்ற பெரிய பிரிவின் கீழ் இருந்த குருக்கை நாடு என்ற பகுதியில் இருந்ததாக தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

கந்தர்வப் பெண்ணான சந்திரலேகை, கன்வமுனிவரின் சாபத்தால் மானிடப் பெண்ணாக பிறந்து, சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். இவளின் பெயரால் சந்திரலேகை என்று பெயர் வழங்கியது. பின்னர் செந்தலை என்ற வழக்குச் சொல்லில் அழைக்கப்பட்டது. கி.பி. 871-901 வரை ஆட்சி புரிந்த ஆதித்த சோழன் காவிரிக்கரைப் பகுதி எங்கும் இருபுறமும் இரு நூற்றுக்கு மேற்பட்ட கோயில்களை எழுப்பினான். இம்மன்னன் வைதீக மார்க்கத்தை நிலை நிறுத்தியவன். அந்தணர்களையும், வேதங்களையும்
பாதுகாத்தவன். 

சோழர் ஆட்சியில் இங்கே அந்தணர்களும் படை வீரர்களும் அதிகாரிகளுமான கள்ளர் சமூகத்தினரும் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



கள்ளர்களில் நாயக்கர் பட்டம் உள்ளவர்கள் இங்கே வாழ்கின்றனர்.

பூபதிராஜபுரம் என்ற வரகூரில் கோயில் கொண்டுள்ள மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணர் (ஸ்ரீநிவாஸப் பெருமாள்) ஸ்ரீலட்சுமி  தேவியை தம் இடது தொடைப் பகுதியில் அமர்த்தி அணைத்துக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். உத்ஸவமூர்த்தி ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவியுடன் விளங்குகின்றார். 

மூலவரும் உத்ஸவரும் சிற்ப முறைப்படி, சோழர் காலத்து திரு உருவங்களாகும். பராந்தக சோழனால் நிர்மாணிக்கப்பெற்று வழிபடப் பெற்ற பெருமான் வரகூர் ஸ்ரீலட்சுமி நாராயணர் என்று கருத முடிகிறது. சோழர் காலத்தில் கருவறை பீடம் கருங்கல்லாலும் சுவர்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டவை. 

இத்தகைய பெருமைக்குரிய தலத்திற்கு, ஆந்திர தேசத்திலிருந்து வந்து பெருமாளை வழிப்பட்டுப் பேறு பெற்றவர் ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகள் ஆவார். கண்ணபிரானின் அருள் விளையாட்டில், உள்ளத்தை பறிகொடுத்த ஸ்ரீநாராயண தீர்த்தர், ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கினி என்ற அரிய அபிநய கிரந்தத்தை, வரகூர் கோயிலின் திருச்சந்நிதியில் இயற்றினார். 

ஸ்ரீநாராயண தீர்த்தரும் தஞ்சை நாயக்க மன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப் பெற்று மிலட்டூரில் தங்கியிருந்தார். அச்சுதப்ப நாயக்கர் பெயரால் வரி நீங்கிய கிராமமாக மிலட்டூர் பாகவதமேளா இசை விற்பன்னர்களுக்கு அளிக்கப் பெற்றதால் மிலட்டூருக்கு அச்சுதபுரம் என்ற பெயரும் உள்ளது. 

மிலட்டூரிலிருந்து ஸ்ரீநாராயண தீர்த்த சுவாமிகள் தல யாத்திரையாகப் புறப்பட்டு, காவிரி ஆற்றின் கிளையான குடமுருட்டி ஆற்றின் தென்கரையாக வரும் பொழுது நடுக்காவேரி என்ற இடத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் இரவு தங்கினார். அவருக்கு கனவில் ஒரு அந்தணக் கிழவர் தோன்றி,  "ஏ.. தீர்த்தா! காலையில் நீ விழித்த உடன் உன் முன் தோன்றும் விலங்கினை தொடர்ந்து செல். அது மறைந்த இடத்தில் தங்கி கண்ணனை பூஜிப்பாயாக!  உன் தீராத வயிற்றுவலி நீங்கிவிடும்'  என்று கூறி மறைந்தார். 

அதிகாலையில் விழித்தவுடன் கனவில் கண்டபடி தன் முன்னே காணப்பட்ட வெண்ணிற வராஹத்தை (பன்றியை) ஸ்ரீநாராயண தீர்த்தர் பின் தொடர்ந்து சென்றார். வராஹம் நடுக்காவேரிக்கு 5 கி.மீ.தூரத்தில் மேற்கே உள்ள வரகூர் வந்தடைந்து அக்ரஹாரத்தின் மத்தியில் உள்ள ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் நுழைந்து மறைந்தது. 

வராஹ ரூபத்தில் வந்து தனக்கு வழிகாட்டியது; பகவான்தான் என்று ஸ்ரீநாராயண தீர்த்தர் உணர்ந்தார். அவரும் கோயிலுக்குள் சென்று ஸ்ரீலட்சுமி நாராயணரை வழிபட்டார். தன்னை வாட்டிய ரோகம் நிவர்த்தியானதை உணர்ந்தார். அங்கு கூடி இருந்தவர்களுக்கும் வராஹ ரூப தரிசனத்தின் அற்புதத்தை கூறினார். அற்புதமான கீர்த்தனங்களை பாடினார்.

தீர்த்தர் அக்கோயிலின் பெருமையை உணர்ந்து அங்கேயே தங்க, அவர் முன் ஸ்ரீநிவாஸப் பெருமான் கண்ணபிரானாகக் காட்சியளித்தார்.  ருக்மணி- பாமா சகிதமாக கண்ணபிரான் காட்சியளித்தபோது பாமா தேவியார், தீர்த்தருக்கு அபயம் அளித்து பகவான் கோபிகைகளுடன் லீலை புரிந்ததைப் பாடும்படி கேட்டார். அதன்படி, ஸ்ரீநாராயண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கினி கிரந்தத்தை கோயில் சந்நிதியிலேயே பாடினார்.



தீர்த்தருக்கு வராஹம் காட்சியளித்த பிறகு அவ்வூர் வரஹாபுரி என்றாகி பின்னர், "வரகூர்'  என்று  அழைக்கப்படுகிறது. தஞ்சை மராட்டிய மன்னன் அமரசிம்மன் அவையில் கி.பி.1785-இல் இசை விற்பன்னராக இருந்து, வரகூர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் மீது பல அரிய கீர்த்தனங்களைச் செய்தவர் வரகூர் ஸ்ரீஆனைபாகவதர் என்பவர். பின்னர் வரகூர் கோபால பாகவதர் என்பவர் இருந்தார்.

குழந்தை பாக்கியம் இல்லாதோர் சுவாமியின் பாதத்தில் வெள்ளி காப்பு ஒன்றை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். பிறகு குழந்தை பிறந்தவுடன் அந்த காப்பை காணிக்கையாக செலுத்தி விடுகின்றனர். என்ன வரம் கேட்டாலும் உடனே கொடுத்துவிடுவார் இந்த பகவான்.  உறியடித் திருவிழாவை நேரில் கண்டால் பல கோயில்களுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

வழித்தடம்:  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கண்டியூர், நடுக்காவேரி மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பழமார்நேரி வழியாக வரகூர் செல்லலாம். 

தினமணி கட்டுரை
23.02.2018
பொ. ஜெயச்சந்திரன்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்