திங்கள், 26 ஆகஸ்ட், 2019

காங்கேயர் வரலாறு





காங்கேய அம்பலகாரர்... காங்கேயம்பட்டியின் முதன்மை காங்கேயர் என்றும் நாளத்தொண்டு காங்கேயர் என்றும் அழைப்பர். இன்றும் பொங்கல் பண்டிகையின் போது கோயில் மாட்டை அவிழ்த்து விட்ட பிறகு காங்கேய அம்பலகாரர் வீட்டு மாட்டை முதலில்  அவிழ்க்க வேண்டும் என்பது தான் முறை.

காங்கேயன்பட்டி சமஸ்தான வித்வான் அப்பாவுபிள்ளை ஆவார்.





காங்கேயர், சோழங்கர் உறவு முறையானது 10ம் நூற்றாண்டு தொடங்கியது என்று கொள்ளலாம். காங்கேயம்பட்டி காங்கேய அம்பலகாரர் அவர்கள், சோழகம்பட்டி சோழங்கதேவ அம்பலகாரர் வம்சத்தில்  திருமணம் ஆனவர். இன்றும்  சோழங்கதேவ அம்பலகாரர்களுக்கு நெருங்கிய உறவுகள் சோழகன்பட்டி, தொண்டராம்படுகை, திண்ணக்குளம் போன்ற ஊர்களில் சோழங்கதேவ அம்பலகாரர் பட்டம் தாங்கியவர்கள் இருக்கின்றனர்.





புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ தொலைவில் அமைந்துள்ளது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகத்தில் பல நகரங்கள் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் சூழத் திகழ்ந்ததை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் விளக்கமுற எடுத்துரைக்கின்றன.


உறையூர், நான்மாடக்கூடல் எனும் மதுரை, கரூவூர் வஞ்சி ஆகிய மூவேந்த~களின் தலை நகரங்களும், பல குறுநில மன்னர்களின் தலைமை ஊர்களும் அகழிகள் சூழப் பெற்ற கோட்டைகளுடன் திகழ்ந்தன என்பதை இலக்கியம் பகரும் எண்ணற்ற சான்றுகள் வழி அறியலாம். பிற்கால வரலாற்றிலும், தமிழகத்தில் அகழிகள் சூழ்ந்த பெரு நகரங்களாக காஞ்சி, தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை ஆகிய நகரங்கள் விளங்கின. ஆனால் அங்கு திகழ்ந்த அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து அமைந்த கோட்டை, அகழி ஆகியவைகளும் கால வெள்ளத்தில் கரைந்து அவை இருந்த சுவடுகள் கூட இல்லாமல் மறைந்து விட்டன.

வல்லம் கோட்டை(தஞ்சை) சங்க காலத்தில் திகழ்ந்த வல்லம் கோட்டை(தஞ்சை) கி.பி. 1850க்குப் பிறகு தான் சுவடு அழிந்தது. இருப்பினும் அதனைச் சூழ்ந்து திகழ்ந்த அகழியின் ஒரு பகுதி மட்டும் இன்றும் காட்சி தருகின்றது. வல்லம் சரிழந்த பின்னர் வல்லத்தரசுகள் கள்ளர் முதுகுடியில் கலந்துவிட்டார்கள். ஆனால் சங்க காலத்துக் கோட்டை ஒன்று முழு தடயத்தோடு புதுக்கோட்டைக்கு அருகில் இருப்பது பலரும் அறியாத செய்தியாகும்.

புதுக்கோட்டையும் பழைய கோட்டையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதிகளின் சான்றுகளை மிகுதியாகப் பெற்றுள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருமயம் வட்டம் குருவிக் கொண்டான்பட்டி எனும் ஊரில் கிடைத்த பழைய கற்கால ஆயுதமொன்று சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.

புதுக்கோட்டையை ஒட்டி அமைந்துள்ள சித்தன்னவாசல், அன்னவாசல், ஒலியமங்கலம் போன்ற இடங்களில் பெருங்கற்சின்னங்கள் எனப் பெறும் இறந்தோரின் நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் இன்றும் காணப்பெறுகின்றன. சங்கத் தமிழ் நூல்களில் குறிப்பிடப் பெறும் கோனாடு, ஒல்லையூர் கூற்றம் என்பவை தற்போதைய புதுக்கோட்டை நகரம் சார்ந்த பகுதிகளேயாகும்.




கள்வர் கள்வன் பெரும்பிடுகு சுவரன் மாறன் கிபி- 8 ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை அன்னவாசலில் நடைபெற்ற போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக போரிட்டு பாண்டியர்கள் மற்றும் சேரர்களை வென்றுள்ளார். கிபி-1757 ல் ஹைதர் அலிப்படையின்  எதிராக ஆங்கிலேயர்களுடன்  இணைந்து 1000 குதிரைகளையும், 100 கள்ளர் வீரர்களையும் அன்னவாசலில் நிறுத்தி புதுக்கோட்டை தொண்டைமான்.

புதுக்கோட்டை அரையர்கள்

பாண்டியர்களின் கல்வெட்டுகளில் ‘புதுக்கோட்டை அரையர்கள்’ என்ற குறிப்பு காணப் பெறுகின்றது. பிற்காலத்தில் தொண்டைமான் மன்னர்களின் நாடாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைநகராக கி.பி.1686லிருந்து இந்நகரம் விளங்கிற்று. ஏறத்தாழ கி.பி.1650க்குப் பிறகே புதுக்கோட்டை திட்டமிட்டு விரிவு பெற்ற ஒரு நகரமாக உருவாக்கம் பெற்றது. இந்நகரத்தின் கிழக்கில் அமைந்த கலசமங்கலம் (திருக்கட்டளை) மேற்கில் திகழும் திருவேட்பூர், திருக்கோகர்ணம் ஆகிய ஊர்கள் பழமைச் சிறப்பு வாய்ந்தவையாகும்.

தொண்டைமான்கள் புதுக்கோட்டை நகரைப் புதிதாக அமைத்த பின்பு புதுக்கோட்டை, பொற்பனைக்கோட்டை முதலான ஊர்கள் படைகள் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இக்கோட்டையில் இருந்த பனைமரத்தில் தங்க பனம்பழம் காய்த்ததாகவும் அதனால் பொற்பனைக்கோட்டை என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

பொப்பண்ண கோட்டை

தற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த குடியிருப்புக்கள் ஆகியவை கட்டுமானங்களாக உருப்பெறுவதற்கு அடிப்படையாய் விளங்கியது, இந்நகரத்திற்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமே ஆகும். அப்பழைய கோட்டையின் பெயர் பொப்பண்ண கோட்டை என்பதாகும்.








மக்கள் வழக்கில் தற்போது அக்கோட்டை பொற்பனைக் கோட்டை என்று அழைக்கப் பெறுகின்றது. இக்கோட்டையின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பொப்பண்ண முனீஸ்வரர் என்ற காவல் தெய்வமே தற்போதைய புதுக்கோட்டை நகரத்தவர்க்கு கண்கண்ட காவல் தெய்வமாகும். பொற்பனை ஈஸ்வரன் கோயிலின் பனை மரங்கள் பொன்னால் ஆன காய்களை காய்த்ததாக ஒரு புராணக் கதையைக் கூறி அந்தத் தெய்வத்திற்கு பொற்பனை முனீஸ்வரன் என்றும், அங்குள்ள கோட்டையை பொற்பனைக் கோட்டை என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால் அந்தக் கோட்டைதான் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்ற செய்தி தமிழ் கூறு நல்லுலகம் அறியாத செய்தியாகும்.

பொற்பனைக் கோட்டை முனீஸ்வரருக்கு  பூசாரிகளாக கள்ளர்குல அம்பலக்காரர்களே உள்ளனர். கனங்குமரன் என்ற கோட்டைப் படைத்தலபதியின் பெயர் பொறித்த நடுகல்லும் கண்டறியப்பட்டுள்ளது. கிளிப்பண்ணாடர் போன்ற பல பட்டம் உடைய கள்ளர்களின் குல தெய்வமாக  பொற்பனை முனீஸ்வரர் உள்ளார்.

இங்கே சொடுக்கவும் (click here)👉  பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை முனிஸ்வரர் கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுல்லா தளமாக விளங்கி வருகின்றது. இக்கோவிலில் தினந்தோறும் சிறப்பு அபிசேகம் வழிபாடுகள் செய்வது வழக்கம். ஞாயிற்று கிழமைகள் தோறும், மேலக்கோட்டை நுழைவு வாயிலில் ஒன்பது அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தரும் பொற்பனை முனீஸ்வரருக்கு பால் பழங்கள் உள்ளிட்ட ஐந்து வகையான அபிசேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. 


பொன்பரப்பினான் கோட்டை என்றழைக்கப்பட்ட பொற்பனைக் கோட்டையில் வானாதிராயர்கள் என்னும் மன்னரின் கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கோட்டையின் அடிந்த மதில் சுவர்களில் காவல் தெய்வங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்றும் கம்பீரத் தோற்றத்துடன் உள்ள சிற்பம் கோட்டையின் மேல் தலத்தில் உள்ள மேலக்கோட்டை முனியும், கீழ் புறம் உள்ள கீழக்கோட்டை முனி, நடுவில் உள்ள காளி கோவில் ஆகும்.

சங்க காலக் கோட்டை

பல நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் அமைந்த வட்ட வடிவ மண் கோட்டை, சுற்றிலும் அமைந்த அகழி ஆகியவற்றோடு தற்போது காணப்பெறும் பொப்பண்ண கோட்டை ஏறத்தாழ 50 அடி உயரமும், 50 அடி அகலமும் உடைய மண்மேடுடைய கோட்டையாக விளங்குகிறது. அகலமான இம்மண் கோட்டை மீது செங்கல்லால் அமைந்த நெடுமதில் முன்பு இருந்து காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், மனிதர்களின் தேவையாலும் அழிந்துவிட்டது.

புதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்களிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. 

அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.

பொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.

தமிழ் வளர்த்த காங்கேயர்கள்

சோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. பின்னர் மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) காலந்தொட்டு பாண்டியர்களின் பிரதிநிதிகளாக திருமயம், குடுமியான்மலை, ஆலங்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை பகுதியின் ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் காங்கேயர்கள் ஆவர். மூன்று பெரும் சோழப் பேரரசர்களுக்கு அவைக்களப் புலவராய் இருந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தருக்கு காங்கேயன் ஒருவன் புரவலனாக விளங்கியதால் கூத்தர் அக்காங்கேயனைப் புகழ்ந்து “நாலாயிரக் கோவை” எனும் நூலில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜேந்திர சோழ காங்கேயராயன்

இராஜேந்திர சோழ காங்கேயராயன் என்பான் விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். குடுமியான்மலை சிவாலயத்தில் “காங்கேயராயன் திருமண்டபம்” என்ற பெயரால் அழகிய மண்டபம் ஒன்று திகழ்ந்ததைச் சுந்தர பாண்டியனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கூறுகின்றது. பிள்ளையார்பட்டி சிவாலயத்தில் காங்கேயராயன் சந்தி என்ற பெயரில் சிறப்பு பூ சை நிகழ்த்தப் பெற்றதை சுந்தர பாண்டியனின் மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது.

  1. கண்டன் உதையஞ்செய்தான் காங்கேயன்,
  2. ஆற்றூருடையான் பொன்னன் காங்கேயன்,
  3. கண்டன் அக்கணி பெருமாள் காங்கேயன்,
  4. காங்கேயராயன்,
  5. கண்டன் அழகுகண்ட பெருமாள் காங்கேயன்,
  6. உடையார் காங்கேயராயர்



எனப் பல காங்கேயர்கள் புதுக்கோட்டைப் பகுதியின் ஆட்சியாளர்களாய் விளங்கியதைக் கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டைப் பகுதியில் இவர்களது செல்வாக்கு சிறந்து திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொப்பண்ண காங்கேயன்

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு ஆக்கமளித்து தமிழ் செய்ய உதவியவன் பொப்பண்ண காங்கேயன் என்பான் என்பதை, அந்நூலின் பாயிரத்தில் ,

“காற்றைப் பிடித்துக் கடத்திலடைத்த கடிய பெருங்
காற்றைக் குரம்பை செய்வார் செய்கை போலு மற்காலமெனும்
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கேயர் கோனளித்த
சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை செய்வித்ததே”

எனக் காணப் பெறும் இப்பாடல் எடுத்துக் கூறுகின்றது.

எனவே அடியார்க்கு நல்லார் எனும் அருந்தமிழ்ப்புலவனுக்கு சோறிட்டு தமிழ் செய்த பொப்பண்ண காங்கேயன் வாழ்ந்த கோட்டைதான் புதுக்கோட்டைக் கருகிலுள்ள “பொப்பண்ண கோட்டை” என்பதில் ஐயமில்லை. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரத்தைக் காத்தவன் வாழ்ந்த பொப்பண்ண கோட்டை இரண்டாயிரம் ஆண்டு பழைமையுடைய கோட்டை என்பதும் தனிச்சிறப்பாகும்.


கிபி 1226!! காஞ்சீபுரம், சுந்தரபாண்டியன் கால கல்வெட்டில் உள்ள நேரடியாகவே காங்கேயன் கல்லன் என்றே குறிக்கின்றது. காங்கேயன் கள்ளன் பாடகத்தில் (அளவுள்ள) நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் பொருள்.

கள்ளர்நாடுகளில் மிகப்பெரியது தஞ்சை வளநாடு கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட சிதறல் நாடுகளை உள்ளடக்கியது. ஏரிமங்கலம் நாட்டுக்கள்ளர்கள் குதிரைகளை கடிவாளம் இல்லாமல் இயக்குவதில் வல்லவர்கள். மின்னல் தோன்றி மறைவதற்குள் ஒன்றிணையும் திறன் படைத்தவர்கள். தஞ்சைக்கள்ளர்களின் பூர்வீக நாடுகளில் கொற்கை நாட்டிற்கு அடுத்த படியாக ஏரிமங்கலநாடு உள்ளது.


ஏரிமங்கல நாடு  மொத்தம் ஆறுகரைகள் உள்ளது. 
ஆறாவதுகரை : காங்கேயர் பட்டம் உடைய கள்ளர்கள்,  
கிராமம் : காங்கேயம்பட்டி





முன்னாள் தமிழ்நாடு கள்ளர் பேரவை தலைவர், கள்ளர்நாடான தந்தி நாட்டிலிருந்து முதன் முதலில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வான திரு.M.M.சந்திரகாசன் காங்கேயர் (1922-2004). 




வேங்கடசாமி நாட்டாரின் முப்பாட்டனார் யோகப்புலி நாட்டாருக்கு ஐந்து மனைவிகள். அதில் ஒரு மனைவி காங்கேயர். காங்கேயம்பட்டி காங்கேயர் அம்பலக்காரர் திருமண உறவை கொண்டுள்ளனர். 


காங்கேயர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழும் ஊர்

  1. பெரிய காங்கேயன் பட்டி
  2. காங்கேயன்பட்டி
  3. சின்ன காங்கேயன் பட்டி



பொற்பனைக்கோட்டை நடுகல்

1.கோவென்கட்டிற் நெதிர –

2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்

3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு

4) அங்கபடை தாணைத் தணயன் கணங்

5) குமாரன் கல்







என்று வாசிக்கப்பட்டுள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் 5 வரிகள் இடம்பெறுகின்றன. கோவென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டதை குறிப்பதாக 2013 ல் வெளிவந்துள்ள ஆவணம் இதழில் கண்டுபிடிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழகத்தில் கிடைத்த நடுகல் கல்வெட்டுகளில் தொன்மையான கல்வெட்டு தேனி மாவட்டம் புலிமான் கோம்பையை சேர்ந்ததாகும்.

இதற்கு அடுத்தபடியாக கிடைத்த தமிழகத்தின் இரண்டாவது தொன்மையான நடுகல் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது.

கடைச்சங்க காலத்தை சேர்ந்த இந்த கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்துள்ளது.

" கொங்கர் விண்ணக்கோன் என்பர் நடத்திய ஆகொள் போர் பற்றிய கல்வெட்டு இதுவாகும்"

" கொங்கர், கொங்கத்தரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் புதுக்கோட்டையில் கொங்கதிரையன்பட்டி முதலான ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.


பாடிகாவல்

கிபி 1476 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு 715ல், பாடிகாவல் உரிமை பெற்ற காங்கேயர் என்பவருக்கு அவ்வூர் குடியினர் அளிக்க வேண்டிய மரியாதைகள் பற்றிய குறிப்பு உள்ளது. நெல், கோயில் உரிமை எனும் பல உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளது. பறையர் மற்றும் பள்ளர் ஆடி, கார்த்திகைகளில் கோழியை அளிக்க வேண்டும் என்றும், இடையர் பால் மற்றும் நெய் அளிக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வலையர்கள் ஆடி மற்றும் காரத்திகைக்கு ஒரு கூடு முயல் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கல்வெட்டு 843 லும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலையர்கள் வேட்டையாடி வாழந்து வந்ததாக புதுக்கோட்டை மேனுவல் Vol 1 கூறுகிறது. அதற்கு சான்றாக வலையர்கள் வேட்டையாடி முயலை வளர்த்து வந்ததும், அதுவே அவர்களின் முக்கிய தொழிலாகவும் இருந்துள்ளதை இந்த கல்வெட்டு எடுத்துக்காண்பிக்கிறது.



 பொற்பனைக்கோட்டையின் அமைப்பு

வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டருடனும் , 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது. கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமுடனும் , 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்துள்ளது, கோட்டையின் மேற்புறத்தில் பத்து அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. 

இதன் வெளிப்புறத்தில் நான்கு அடி கால அகலத்தில் சங்க செங் கல்கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. சாதாரண மண் மேடல்ல கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும்.

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (405) இங்கே சுடுமண் என்பது சுட்ட மண்ணாலான செங்கலை குறிக்கிறது. இட்டிகை நெடுஞ்சுவர் என அகநானூறு ( 167 : 13) பகிர்கிறது இங்கே இட்டிகை எனப்படுவது செங்கலாகும்.


பொற்பனைக்கோட்டைப் இரும்பு உருக்காலைகள் - செந்நாக்குழி

செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன்மூலம் இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது. 

இதே போன்றதொரு காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது கிடைக்கப்பட்ட தகவல்களும் , தரவுகளும் , பெயர்களும் சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. 

அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின் பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது மேலும் செந்நாக்குழியும் சங்க கால வழக்கில் உருக்கு உலையை இந்நாள் வரை மரபொழியாமல் இருந்திருப்பதையும் உணரமுடிகிறது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்.



வானூர்தியிலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கும்போது இக்கோட்டையின் மாட்சிமை நமக்குப் புரியும். அங்குள்ள செங்கற்களும், பானை ஓடுகளும், மணிகளும், ஈமச்சின்னங்களும், 2300 ஆண்டு கால தொடர் வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. புரிசை, கோட்டை, மதிலரண், இஞ்சி எனப் பல பெயர்களால் குறிக்கப் பெறும் இரண்டாயிரம் ஆண்டு வயதுடைய இக்கோட்டையைக் காப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.


நன்றி
முனைவர் குடவாயில்
பாலசுப்பிரமணியம்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்