ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கண்ணந்தங்குடி அக்கினி வீரனார்



தஞ்சாவூர் கள்ளர் நாட்டில் ஒன்றான கண்ணந்தங்குடி பகுதியில் அமைந்த கோவில் அக்கினி வீரனார்

திருச்சிக்கு அருகில், திருப்பராய்த்துறையிலுள்ள கோயிலின் தல விருட்சம் பராய் மரம். அதனாலேயே அத்தலத்தை ‘திருப்பராய்த்துறை’ என்று அழைத்தனர். அத்தகைய அரிதான புராணங்கள் புகழும் தேவதாரு எனும் தெய்வீக மரத்தோடும், சிவனின் அம்சமான அக்கினி வீரனாரோடு கீழையூர் கண்ணந்தங்குடி எனும் இத்தலம் திகழ்கிறது.

நாற்பத்தெட்டாயிரம் முனிவர்களும் ஒரே நேரத்தில் பிரம்மனை குறித்து தவமியற்றினர். பிரம்மா திகைத்துப்போனார். ‘இத்தனை எண்ணிக்கையில் இவ்வளவு நீண்டகால தவமா’ என்று மிரண்டார். அவர்கள் முன்பு தோன்றி, ‘‘ஏன் இத்தனை பேர் தவமியற்றுகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

‘‘உலகம் உய்யும் பொருட்டும், வேள்விகள் சிறக்கும் பொருட்டுமே செய்கிறோம். ஆனால், எங்களுக்குத் தேவை அமைதியான ஒரு தலம். மிருகங்களாலோ, மனிதர்களாலோ, இயற்கை சீற்றமான இடி, மின்னல்களாலோ எந்த பாதிப்பும் ஏற்படாத ஒரு தவச்சாலை வேண்டும்’’ என்றனர்.ஈசனின் பூரண சக்தி நிறைவாக உள்ள ஒரு தலத்தை பிரம்மன் கண்டார்.



அங்கு ஓங்கி வளர்ந்திருந்த பராய் மரங்களுக்குள் பரமன் அருவமாக கிடப்பதைப் பார்த்தார். தர்ப்பைப் புல்லை வளைத்து ஓர் இடம் நோக்கி வீச, அது தாருகாவனத்தில் சென்று வீழ்ந்தது. முனிவர்கள் மகிழ்ந்தனர். அவர்கள் மனமும் தியானத்தில் கவிழ்ந்தது. முனிவர்கள் பராய் தருக்களின் கீழ் பேரானந்தத்தை எய்தினர். அந்தப் புனித மரங்கள் இருந்த வனத்தை ‘தாருகாவனம்’ என்றழைத்தனர்.

அந்தப் புராணச் சுவடுகளின் சான்றாக இன்றும் இந்தப் பராய் மரத்தை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, கீழையூர் கண்ணந்தங்குடி. இந்தக் கிராம மக்கள் இந்த மரம் அறுநூறு வருடங்களாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மரத்திற்கடியிலேதான் இந்த ஊரைக் காக்கும் அக்கினி வீரனார் அருட்கோலம் பூண்டருளுகிறார். அக்கினி வீரனாரின் உருவத்தையும், வந்த விதத்தையும் திகைப்பு அகலாமல் விவரிக்கின்றனர்.

‘‘நாங்க சிறு வயசா இருந்தபோதும் சரி, விவரம் தெரிஞ்சு வாலிபமா வளர்ந்தபோதும் சரி அக்கினி வீரனாரை நிறைய தடவை பார்த்திருக்கோம். திடீர்னு சாயங்கால நேரத்துல செம்மண் புழுதி கிளம்பும். இந்தத் தெருவுல சுத்திகிட்டேயிருக்கும். குதிரை வர சத்தம் கேட்கும். சட்டுனு வெள்ளைக் குதிரையில வீரனார் போவாரு. ஒரு சொடுக்கு நேரத்துல வாளை வீசிக்கிட்டு வீரனாட்டம் பாய்ஞ்சு மறஞ்சுடுவாரு.

முதல்ல நாங்க யாரோ போகறாங்கன்னு நினைச்சு பெரியவங்ககிட்ட சொன்னபோது ‘வீரனாருடா அது, ஜாக்கிரதை’ன்னாங்க. சாதாரணமா யார் கண்ணுலயும் படமாட்டாரு அவரு. ஏதோ உங்க புண்ணியம் உங்களுக்கு தெரியறாருன்னாங்க. எங்களுக்கு ஒரு கஷ்டம்னா முதல்ல நிக்கறவரே அக்கினி வீரனாருதான். அவரை கனவுல கண்டவங்க உடனே பொங்க வச்சு, ஆட்டை பலி கொடுத்து நேத்திக்கடன் செய்வாங்க. இப்பவும் இந்த ஊர்ல இருந்து போனவங்க பல பேரை அவங்க கனவிலே தோன்றி, சொல்லி, இங்க அழைச்சிக்கிட்டு வந்துருக்காரு இந்த அக்கினி வீரனாரு’’ என்று அந்த கிராமத்தைக் காக்கும் வீரனாரைப் பற்றி தொடர்ந்து சிலிர்ப்போடு பேசுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது குரல் நெகிழ்ந்து அருமையான ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடுகிறார்கள். அப்பாடல் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் நீள்கிறது; அவ்வூரின் புகழ் பாடுகிறது; அக்கினி வீரனாரின் வீரத்தைப் பேசுகிறது; அவரின் பக்தர்களாக விளங்கிய சமூகத்தவரின் பிரிவுகளை வகைப்படுத்துகிறது. அழகான அர்த்தங்களோடும், அவர்களுக்கென்று அமைந்த உன்னத நாகரிகம் அப்பாடலில் தொனிக் கிறது. வாழ்க்கையை சீரமைக்கும் ஒழுக்கத்தை எளிமையான வரிகள் விவரிக்கின்றன. கேட்கக் கேட்கக் களிப்பூறும் தேனிசை பாயும் நாட்டுப்புறப் பாடல் அது.

சட்டென்று, அந்த பராய் மரத்தைப் பார்க்கும்போது ஒற்றைக்காலை மடித்து தவம் புரியும் யோகி போன்றிருக்கிறது. யோகியின் மேனி முழுதும் புரளும் செஞ்சடைகள் போல மரத்தின் அடிப்பாகம் முறுக்கிப் பின்னியிருக்கிறது.

மரமருகே நிற்கும்போது, ஒரு ஞானியின் சந்நதியில் கரைந்து போகும் மனம்போல திகைப்புணர்வு விஞ்சி நிற்கிறது. மரத்தை அண்ணாந்து பார்க்க பத்து விரல்களும் யோக முத்திரையை காட்டிக் கொண்டிருப்பது போன்றிருக்கிறது. ஒரு நாகம் தன் குடையை கவிழ்த்தாற் போன்று கிளைகள் நாற்புறமும் விரிந்து வளைந்திருக்கின்றன. பராய் இலைகளின் வாசம் நாசியை நெருடும்போது உள்ளம் சிறகாகிறது.

வில்வத்திற்கு இணையான தெய்வீக சக்தி உடையதாகத் திகழ்கிறது. அதுதவிர ஈசனின் அருட்சாரல் வீசும் பராய் மரத்தின் கீழ் பேச்சியம்மன் மற்றும் இதர தேவதைகளை நடுக்கற்கள் விக்ரகங்களாகப் பாவித்து ஆராதிக்கின்றனர். அக்கினி வீரனாருக்கு பராய் மரத்தடியிலேயே கோயில் அமைத்திருக்கின்றனர். இந்த அக்கினி வீரனாரின் சிலையைப் போன்றே திருச்செந்தூர் சந்நதியருகே ஒரு சிலை காணப்படுவதை இவ்வூரார் மெய்சிலிர்க்கச் சொல்கிறார்கள்.

இந்த அக்கினி வீரனார், பாதை மாறிப்போன பலரை நல்வழிக்குத் திருப்பி அவர்களின் வாழ்வைக் காத்திருக்கிறார். பூஜை நேரங்களில் அந்தச் சிறிய கோயிலின் சூழலே மாறிவிடுகிறது. எல்லோரையும் ஒரு சக்தி ஆக்ரமித்திருப்பதை எளிதாக உணர முடிகிறது.

எத்தனையோ பெரியவர்கள், பல்வேறு அனுபவங்கள், பல நூறு பக்தர்கள் என்று இத்தலம் பற்றிய அற்புதங்கள் நீள்கிறது. நூற்றாண்டுகள் கடந்தாலும் அருட் கோலோச்சிக் கிடக்கும் கிராம தேவதைகள் மையம் கொள்ளும் அற்புதமான பூமி அது.தஞ்சாவூருக்கு அருகேயுள்ள ஒரத்தநாடு எனும் ஊரை அடைந்து அங்கிருந்து 4 கி.மீ. தூரம் பயணிக்க கீழையூர் கண்ணந்தங்குடியை அடையலாம்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்