வியாழன், 19 செப்டம்பர், 2019

புரட்சி வீரர் க. முத்துசாமி வல்லத்தரசு




புரட்சி வீரர் க. முத்துசாமி வல்லத்தரசு B.A., B.L., K.M.P அவர்கள் ஸ்ரீ C. கண்ணுசாமி  வல்லத்தரசு ,  B. கோபனப்பதி அமையாருக்கும் மகனாக June 12, 1901 பிறந்தார். 

மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை மற்றும்  புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி மேலும் அரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்   படித்தார். மனைவி ஸ்ரீமதி திலகவதி அம்மாள் (September 11, 1947 ). இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள் ஆவர்.



க.மு.வல்லத்தரசு அரசியல்வாதி மட்டுமல்ல. சமூக சீர்திருத்தச் சிற்பியும்கூட. அதற்கு ஓர் உதாரணம் 1932 ஆம் ஆண்டு சிப்பாய் குட்டிச்சாமிக்கும், இரவிக்கை அணிந்து மணப்பெண்ணாக வீற்றிருந்த பிரகதாம்பாள் என்கிற பெண்மணிக்கும் க.மு.வல்லத்தரசு திருமணத்தை நடத்தி வைத்தார். 



தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் இரவிக்கை அணிந்து செய்துகொண்ட முதல் (புதுக்கோட்டை சமஸ்தானத்தில்) புரட்சிகரத் திருமணம் புதுக் கோட்டை காந்திநகரில் வல்லத்தரசு தலைமை ஏற்று நடத்தி வைத்தார் என்பது வரலாறு பதிவு செய்துள்ள உண்மை.





‘தோழர் வல்லத்தரசு பாட்டு’ 


புதுவை முரசு(13.04.1931)

‘புதுக்கோட்டைத் தோழர் முத்துச்சாமி வல்லத்தரசு,பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி அவர்களை புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வரி உயர்வு காரணமாக ஏற்பட்ட கலவர வழக்கில் சிறைப்படுத்தியிருந்தார்கள். பிறகு சிறையிலிருந்து விடுதலை செய்து கந்தர்வகோட்டைக்குப் பக்கத்தில் கொண்டு வந்து விட்டுப் போனதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இதிலிருந்து இனி அவர் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் இருக்கக்கூடாதென்ற கருத்து போலும்! இதைத்தான் அங்குள்ள பார்ப்பனர்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்தார்கள்’ என்று இதைக் கண்டித்து குத்தூசி குருசாமி புதுவை முரசு(23.11.31) இதழில் எழுதினார். ‘தோழர் வல்லத்தரசு நாடு கடத்தப்பட்டார்’ என்ற தலைப்பில் வல்லத்தரசின் சிறப்பைப் பாராட்டி பார்ப்பனீயத்தைக் கடுமையாகச் சாடி குத்தூசி எழுதினார். பாரதிதாசன் இதைப்போன்றே கவிதையில் ‘தோழர் வல்லத்தரசு பாட்டு’ என்ற தலைப்பிட்டு எழுதினார். ‘கேளாயோ பார்ப்பனீயம் என்னும் குன்றே!’ எனத் தொடங்குகிறது அப்பாடல்.

‘மகத்வமுறு பார்ப்பனிய மலையே!எங்கள்

வல்லத்தரசன் எதிர்நின்று வாதம் செய்து

சகத்தினிலே உன்புகழை நிலைநாட்டாமல்

சர்க்காரின் காலடியை நக்கிப்

பகுத்தறிவன், இளஞ்சிங்கன், உனைத் தொலைத்துப்

பழிதீர்க்கும் ஆயத்தன், குன்றத் தோளன்

நகும்படிக்கும் வித்தாய்! பின்பு

நாடு கடத்தச் செய்தாய் நாயே! நாயே!’

என்று நிரபாரதியும், நீதியாளருமான தோழர் கே. முத்துசாமி வல்லத்தரசுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் பாவேந்தர் கோபம் கொண்டு வெகுண்டு எழுதியுள்ளதை இக்கவிதையில் காணலாம்.


பெரியார் வெளியிட்ட அறிக்கை 

கே.எம். வல்லத்தரசு, சுயமரியாதைப் பிரச்சாரத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்டவர் என்பதைக் அறிந்த பெரியார் குடிஅரசு இதழில்,  அது பற்றிப் பெரியார் வெளியிட்ட அறிக்கை 

“புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப்பழக்க வழக்கங்களையொழித்து அவர்களைப் பார்ப்பனர்களிடம் ஏமாறாமலிருக்கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ., பி. எல்., அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும். சென்ற வருஷத்தில் புதுக்கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்ததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளேயே வசிக்கக் கூடாதென, சமஸ்தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மையிலேயே அரசாங்கத்தின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியைத் தவிர வேறில்லை என்றுதான் நாம் கூற வேண்டியிருக்கிறது. திரு. வல்லத்தரசு அவர்கள், புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் கூடிக் கொண்டு செய்த காங்கிரஸ் கிளர்ச்சிக்கு விரோதமாகக் கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் கிளர்ச்சி தலையெடுப்பதற்கு விரோதமாக இருந்தார். பார்ப்பனர்களைப் பாமர மக்கள் நம்பி அவர்களுடைய சாஸ்திரங்களுக்கும், மதங்களுக்கும், சடங்குகளுக்கும் கட்டுப்பட்டுக் கிடப்பதை அகற்றப் பாடுபட்டார்.

பார்ப்பனர் சூழ்ச்சியில் ஈடுபட்ட பாமர மக்களைக் கண்விழிக்கச் செய்து பகுத்தறிவுடையவராக்கப் பிரசாரம் பண்ணும் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டவ ராயிருந்தார். இதன் பயனாகப் புதுக்கோட்டையில், நமது சுயமரியாதை இயக்கமும், அதி தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது. இக்காரணத்தால் அந்தச் சமஸ்தானத் திலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் அவர்மேல் துவேஷமும், பொறாமையுங் கொண்டு, அவரை எப்பொழுது அழுத்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புதுக்கோட்டை கலகமே ஒரு காரணமாக அகப்பட்டது. எப்படியோ எந்தக் காரணத்தாலோ, யார் வைத்த கொள்ளியோ வீடு வெந்து போயிற்று. அரசாங்கத்தாரும், ஒரு நல்ல தோழரை வெளியேற்றி விட்டார்கள் என்று நாம் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் திரு. வல்லத்தரசு அவர்களை வெளியேற்றி விட்டதினால், புதுக்கோட்டையில் சமதர்மக் கொள்கை பரவவொட்டாமல் செய்து விடலாம் என்று வீண் எண்ணங் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் எண்ணம் பயனற்றது என்பதை மாத்திரம் கூறுகிறோம். இனிதான் அந்த சமஸ்தானத்தில் நமது இயக்கக் கொள்கைகள் அதி தீவிரமாகப் பரவுமென்பதைக் கூறுகிறோம். இறுதியாகத் திரு. வல்லத்தரசு அவர்களும், தம்மை சமஸ்தானத்தார் வெளியேற்றியது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமது கொள்கையாகிய சமதர்ம ஊழியத்தைத் தளர்ச்சியின்றி பிரிட்டிஷ் இந்தியாவில் புரிந்து புகழ்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பார்ப்பன ஆதிக்கம் பெற்ற சுதேச சமஸ்தானத்தில், சமதர்ம நோக்கமுடைய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு நேர்ந்த கதியைப் பார்த்தவர்கள், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த சுயராஜியம் ஏற்படுமாயின் சமதர்ம நோக்கமுடைய நம் போன்றவர்களுக்கெல்லாம் என்ன கதி நேருமென்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம். - குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.01.1932







திரு.க.மு.வல்லத்தரசு அவர்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மக்களுக்கு கடலில் வீணாக சென்று கலக்கும் உபரி நீரை காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின் மூலம் கரூர் அருகே உள்ள மாயனூரில் தடுப்பு அணை ஏற்படுத்தி புதுக்கோட்டை மற்றும் தென் தமிழ்நாட்டின் பல இலட்சம் ஏக்கர் பாசன வசதி கிடைத்திட உரிய திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை 05.05.1954-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார். இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் ஆண்டுதோறும் கடலில் சென்று வீணாக கலக்கும் 210 T.M.C. தண்ணீரில் 10 TMC தண்ணீரை பயன்படுத்தி கரூர் , திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் , தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 8 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீர் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு தேவையான அளவு உபரி நீர் கிடைக்கும்.





ஜீவாவும், ராகவனும், நீலாவதியும், வல்லத்தரசும் ஈ.வெ.ராவிடமிருந்து விலகி தனி அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். ப. ஜீவானந்தம், சாத்தான் குளம் அ. இராகவன், புதுக்கோட்டை முத்துசாமி, வல்லத்தரசு ஆகியோர் 14.04.1936இல் திருச்சி தென்னூரில் கூடி ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யின் ஆரம்பக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.

மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழ்நாட்டின் சுதந்திர போராளி கே முத்துசாமி வல்லதராசு குறித்த நினைவு தபால்தலை வெளியிட்டது .

இந்து நாளிதழில் வந்த கட்டுரை

க.மு.வல்லத்தரசு சுயமரியாதை, சமதர்மம்

சிங்காரவேலர், பெரியார், ஜீவா ஆகியோருடன் இணைந்து 1933-ல் ‘ஈரோடு சமதர்மத் திட்ட’த்தை உருவாக்கியவர்களுள் புதுக்கோட்டை க.முத்துசாமி வல்லத்தரசுவும் ஒருவர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான அவர், காதல், சாதிமறுப்பு, வைதீகச் சடங்குகள் அற்ற திருமணங்களையும் பெண்கள் மறுமணங்களையும் தாமே முன்னின்று நடத்தியவர்.

1938-ல் ராஜபாளையத்தில் ஜமீன் முறையை ஒழிக்க வலியுறுத்தி, நடைபெற்ற மாநாட்டில் வல்லத்தரசு முக்கியப் பங்காற்றினார். 1945 அக்டோபரில், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற, காங்கிரஸ் கட்சியின் மதராஸ் மாநில கமிட்டிக் கூட்டத்தில், தலைவர் பதவிக்கான தேர்தலில் காமராஜரை வெற்றிபெறச் செய்ததில் அவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.
அதே ஆண்டில், திருச்சி திண்ணனூரில் நடந்த காங்கிரஸ் கமிட்டியில் குற்றப் பரம்பரைச் சட்டத்தை நிறுத்திவைப்பதற்காக தீர்மானம் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றினார். புதுக்கோட்டை சமஸ்தான சட்டமன்றத்துக்குக் குன்றாண்டார்கோவில், திருமயம் ஆகிய தொகுதிகளிலிருந்து 3 முறை தேர்தெடுக்கப்பட்டார்.

மன்றத்தில் ஏழைகளின் குரலாய் ஒலித்தார். புதுக்கோட்டை சமஸ்தான காங்கிரஸ், புதுக்கோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தலைவராகச் செயல்பட்டார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ராமநாதபுரம்-திருவாடானை சிறையையும், தேவகோட்டை நீதிமன்றத்தையும் தகர்த்து சின்ன அண்ணாமலையை விடுவித்தார். அதனால், தஞ்சாவூர், வேலூர் சிறைகளில் இரண்டரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டையில் பரம்பரை மன்னர் ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்த முன்னோடி இவர். பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்க வலியுறுத்தி மக்கள் இயக்கங்களையும் நடத்தியவர். இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக, சுதந்திரம் பெற்று சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டை, இந்தியாவுடன் இணைந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் (1952) போட்டியிட, காங்கிரஸ் கட்சி வல்லத்தரசுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராககுடிசை வீடு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த புதுக்கோட்டையைத் தனி மாவட்டமாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதலில்குரல் எழுப்பியவர் வல்லத்தரசு நீர்ப்பாசனபிரச்சனைக்கு நிலையான தீர்வுகாண காவிரி உபரிநீரை புதுக்கோட்டைக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தொலைநோக்குப் பார்வையோடு அன்றே குரல் கொடுத்தவர்.
மொழிவாரி மாநிலப் பிரிப்பு நடந்தபோது நமது மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசியவர்.
தான் வழக்கறிஞராகப் பணியாற்றிய தொடக்க காலத்திலேயே ஏழைகளுக்கு கட்டணமின்றி வழக்காடியதோடு அவர்களின் உணவு, போக்குவரத்துச் செலவுகளுக்கும் உதவி செய்தவர் வல்லத்தரசு. கார்ரல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூலின்சாரத்தைச் சிறையிலிருந்தவாறே முதன்முதலில்தமிழில் எழுதியவர்.
பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருத்துறைப்பூண்டி சுயமரியாதை மாநாட்டிலிருந்து வெளியேறி, பின் மன்னார்குடியில், ஜீவாவோடு இணைந்து, சுயமரியாதை சமதர்மக் கட்சியை தொடங்கினார். ஏழைகளின் கல்வி, வேலை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மக்களின் பங்கேற்போடு, 25 ஆண்டுகளுக்கான ஒரு வேலைத் திட்டத்தை வகுத்தார்.


க.முத்துச்சாமி வல்லத்தரசு அவர்களின் பேரனும், மறைந்த மூத்த வழக்கறிஞர் K.M.G.வல்லத்தரசு அவர்களின் மகனுமான, வழக்கறிஞர் திரு.K.M.G.முத்துச்சாமி வல்லத்தரசு அவர்கள்


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்