பட்டுக்கோட்டை விஸ்வநாதன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் பன்னைவயல், என்னும் ஊரில் பிறந்தார்.
ம.தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த அவர்,வைகோ அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கினர். பட்டுக்கோட்டை நகரசபைக்கு இரண்டு முறை தலைவராக பொறுப்பேற்ற இவர், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஒருமுறை இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இவரின் துணைவியார் ஜெயபாரதி விஸ்வநாதனை நிற்கவைத்து நகரசபை தலைவராக வெற்றிபெறவைத்தார்.
மதிமுக பிரிவிற்குமுன் திமுகவின் முக்கியநபராக இருந்த இவர், உள்கட்சி சண்டையில் சக திமுக பிரமுகர் சீனி.பண்ணீர்செல்வம் கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார். இதனைத்தொடர்ந்து திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது.
மதிமுக, திமுகவில் இருந்து பிரிந்தபோது இவரும் மதிமுகவில் இணைந்தார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுகவின் சார்பில் இவர் பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) யில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்று தோல்வியடைந்தார்.
பட்டுகோட்டை விஸ்வநாதன் , இது வெறும் பெயரல்ல தஞ்சை மாவட்ட அரசியலில் ஒரு சகாப்தம் . ஆம் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் ? என்ற பாடலுக்கு விடைதேடினால் சமகாலத்தில் எங்கள் (தஞ்சை)மாவட்டத்தில் மக்கள் மனதில் நிற்பவர் அமரர் . சு .விஸ்வநாதன் அவர்கள் தான் .
பொடா சிறைவாசம் முடிந்து மக்கள் வைகோ அவர்கள் நாற்பத்தி இரண்டு நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிற சமயம் பதினைந்தாவது நாள் செங்கிபட்டியில் இருந்து தஞ்சை நோக்கி பயணம் மதிய உணவு வல்லத்தில் என் தந்தையார் அப்போதைய நகர செயலாளர் யா .சேக் தாவுது அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் . மதிய உணவு முடித்து தலைவர் வைகோ சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயணம் தொடங்கும் வேளையில் ஒரு கணவன் மனைவி வருகிறார்கள் தலைவரை காண அந்த தம்பதியை பார்த்தமாத்திரத்தில் தலைவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி அருகில் இருந்த எனக்கு இவர்கள் யார் என்று புரியவில்லை . அறைக்கு வந்த என் தந்தையர் வந்தவரை ஆரத்தழுவி அகம்மகிழ்கிறார் நான் என் தந்தையிடம் கேட்டேன் இவர் யார் என்று இவர் தான் சேர்மேன் விஸ்வநாதன் என்றார் . அடுத்த நொடியே அவரிடமும் அப்போதைய சேர்மேன் திருமதி .ஜெயபாரதி விஸ்வநாதன் அவர்களிடமும் என்னை அறிமுகம் செய்து வைத்தார் .
அதன் பின்னர் எனக்கும் அவருக்கும் ஒரு நெருக்கம் ஏற்பட்டது 2006 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுகவோடு கூட்டணி ஏற்படுகிறது திருவோணம் , பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதிகள் கேட்டு தாயகத்தில் ஐந்து நாட்கள் மாவட்ட செயலாளர் , ஒன்றிய செயலாளர் சகிதம் கூடியிருக்கிறோம் . என்னை மட்டும் அருகில் அழைத்து அவ்வபோது உள்ள நிலவரம் குறித்து விவரிப்பார். பட்டுகோட்டை தொகுதி அறிவிக்கப்பட்டது ஏறக்குறைய வேட்பாளர் உறுதியாகிவிட்ட நிலையில் அறிவிப்புக்காக காத்திருந்தோம் .
முதல் தொகுதி திருமங்கலம் வீர .இளவரசன் , இரண்டாம் தொகுதி பட்டுகோட்டை சு .விஸ்வநாதன் என்று அறிவிப்பு வெளியானது . (இன்று இருவருமே நம்மோடு இல்லை)அன்று இரவே ராக்போர்ட் இரயில் மூலம் தஞ்சைக்கு புறப்பட்டோம் . தேர்தல் களம் சூடுபிடித்தது பொதுசெயலாளரும் இரண்டு நாட்கள் பட்டுகோட்டை தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் மிகுந்த எழுச்சி தொகுதி முழுவதும் காணப்பட்டது .
காமராசரை , வைகோவை தோற்கடித்த மக்கள் அல்லவா அண்ணன் விஸ்வநாதனும் தோல்வியடைந்தார் . எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்தவர் ,வெற்றிதோல்விகளை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளமட்டார் . நாட்கள் உருண்டோட எல்.கணேசன் என்னும் ஓநாய் இயக்கத்தை விட்டு ஓடியது . கட்சியால் சிலருக்கு செல்வாக்கு , சிலரால் கட்சிக்கு செல்வாக்கு . இதில் அண்ணன் விஸ்வநாதன் இரண்டாவது ரகம் . எல்.கணேசன் சென்ற பிறகு முதல் நிகழ்ச்சி சோழ மண்டல இயல் இசை நாடக மன்ற துவக்கவிழா தஞ்சையில் நடைபெற்றது அதில் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த தலைவர் வைகோ தஞ்சைக்கு வந்தார்.
காலை தமிழ்நாடு விருந்தினர் விடுதியில் நிர்வாகிகள் கூட்டம் . முதல் நாள் என் தந்தையார் உட்பட மூன்று நகரசெயலாளர்கள் எல்.கணேசனோடு சென்று விட்டதாக நாளிதழ்களில் அவதுறு செய்தி வந்தது . நிர்வாகிகள் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பொதுசெயலாளரை மூன்று நகரசெயலாளர்களும் எங்களோடுதான் இருக்கிறார்கள் என்று அண்ணன் விஸ்வநாதன் அறிவிக்கசெய்தார் . போனவர்கள் போகட்டும் எவர் போயினும் யாம் உன்னோடு தலைவர் வைகோ அவர்களே இது தமிழின் மீது ஆணை என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார் .
சற்றும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி 16-8-2007 அன்று இரவு 8.00 மணிக்கு வந்தது அண்ணன் விஸ்வநாதன் மறைந்தார் என்ற செய்தி. பொதுசெயலாளர் கலிங்கப்பட்டியில் இருந்து விடியற்காலை பட்டுகோட்டை வந்தடைந்தார் . உடலுக்கு மலர்மாலை வைத்து விட்டு கதறி அழுதது இன்று என் கண்களில் நிற்கிறது . ஓரத்தநாடு முதல் பட்டுகோட்டை பேராவூரணி வரை அன்று முழுவதும் கடைகள் வணிக நிறுவனங்கள் , பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன .
பட்டுகோட்டை தாலுக்காவே கண்ணீரில் மூழ்கியது . "நீங்க இருக்கிற தெம்பில் தானே நாங்க இருந்தோம் இப்போ நீங்க போய்டீங்களே இனி நாங்க எங்க போவோம்" என்ற மக்கள் கதறி அழுத கட்சி நெஞ்சை உலுக்கியது . மாலை வைத்துவிட்டு எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் அமர்ந்த தலைவர் வைகோ அன்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை தண்ணீர்கூட பருகவில்லை . மாலை 3.30 மணிக்கு உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு பண்ணவயல் அருகே அமைத்துள்ள அவரது தோட்டத்துக்கு எடுத்துச்செல்லபட்டது ஏறக்குறைய 9 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் தொடர்ந்தது . பொதுசெயலாளர் வைகோ , மூவேந்தர் முனேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் , செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திவாகரன் , மாணவரணி துணை செயலளார் பின்னை நல்லியக்கோடன் உள்ளிட்ட தலைவர்கள் நடந்தே ஊர்வலமாக சென்றனர் .
சிதைக்கு தீமூட்டிவிட்டு இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவரும் கண்ணீர் சிந்தினார்கள் . இறுதியாக பேச தொடங்கிய தலைவர் வைகோ துக்கம் தாளாமல் கனத்த குரலோடு நா தழுதழுக்க "எங்கள் தேரின் அச்சு முறிந்தது , எங்கள் வீணையின் நரம்பு அறுந்தது , எங்கள் படைகலனில் ஈடற்ற தளபதியை இழந்து விட்டோம் "
நிலவு இல்லாத வானம் , விக்ரகம் இல்லாத ஆலயம் , ஆயுதம் இல்லாத பாசறை என் ஆருயிர் சகோதர் விஸ்வநாதன் இல்லாத பட்டுகோட்டை " என்று பேச தொடங்கினார் பேசி முடிக்கையில் வீரனுக்கு என்றைக்கும் சாவுகிடையாது விஸ்வநாதன் மாவீரன். பட்டுகோட்டை என்றால் அஞ்சாநெஞ்சன் அழகிரி ( மதுரை மண்ணாங்கட்டி அல்ல ) பெயர் நினைவுக்கு வருவதை போல இனி பட்டுகோட்டை என்ற வரலாற்றில் மாவீரன் விஸ்வநாதன் பெயர் நிலைத்திருக்கும் என்றார் .
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்ற போது நானும் அண்ணன் நல்லியகோடன் , கார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டோம் . பட்டுகோட்டை முழுவதும் அண்ணன் விஸ்வநாதன் படங்களே காட்சியளித்தன அப்போது அண்ணன் நல்லியக்கோடன் சொன்னார் விஸ்வநாதன் வளர்ப்புகள் ஒன்று கூட வீண் போகவில்லை ஒரு நிகழ்ச்சி நடத்துவதென்றால் அது விஸ்வநாதன் வளர்ப்புக்கள் மட்டுமே முறையாக செய்வார்கள் என்றார் .அன்று அவர் வீட்டருகே வைக்கபட்டிருந்த படத்தை பார்த்து ஒருவர் அழுதுகொண்டே சொன்னார் "என் மகள் இன்று டீச்சரா இருக்க அதுக்குகாரணம் நீ , என் மகன் இன்று சர்வேயரா இருக்கான் அதுக்கு காரணம் நீ " எல்லாம் நல்ல இருக்கோம் அதுக்கு காரணமான நீ எங்க இருக்கே ?? என்று அழுது புலம்பினார் .
தலைவர் வைகோ சொன்னதை போல பட்டுகோட்டை என்ற வரலாற்றில் மாவீரன் விஸ்வநாதன் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை ."மறையவில்லை நீங்கள் , மறக்கவில்லை நாங்கள் " என்றும் உங்கள் நினைவை மறவா
வல்லம் . சே . பசீர்