"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து "
(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
என்பது பனம்பாரனார் கூற்று. இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கே அரபிக்கடலையும் குறித்துள்ளார். வேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழ் மொழி பேசப்பட்டது என இப்பாடல் விளக்குகிறது.
கிபி 1ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அதாவது இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு, வேங்கடமலை முதல் மழநாடு வரை ஆட்சி செய்த கள்வர் கோமான் புல்லி, அகநானூறு,புறநானூறு,நற்றிணை ஆகிய சங்கநூல்களில் ஒன்பது பாடல்களில் போற்றப்படுகிறார். இவரது போர்த்திறன் கொடை, வேங்கடமலையின் சிறப்புகள் ஆகியவற்றை பல புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இவரது ஆட்சிப்பகுதி வேங்கடம் முதல் மழவர் நாடான தர்மபுரி , சேலம் ஆகிய பகுதிகள் வரையிலும் இருந்ததை பாடல்கள் உணர்த்துகின்றன.
” வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் “(அகம் 61)
பசிய காலும் மாண்புறும் வரியும் உடைய வலிய வில்லானது சிறுது காலம் கூட தழைக்காது, தொடந்து முழங்கும் முயற்சியோடு தனது வில்லிலே நாணைப்பூட்டி எதிரிகளின் மார்புகளில் அம்புகளை பாய்ச்சுகின்ற கள்வர்களின் தலைமகனாக விளங்கும் மாவண் புல்லி என மாமூலனார் கள்வர்களின் போர்த்தொழிலை வர்ணிக்கிறார்.
” அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்” (அகம்61)
தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளை(தந்தங்களை) , கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, நாளோக்கச் சிறப்பினை செய்யும், கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.
” மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்” (அகம் 61)
மழவர்களை அடக்கி வென்று அவர்களிடம் திறை பெற்ற மிக்க வலிமையுடைய, புல்லி என்பவனின் திருவிழாக்களால் சிறப்புறும் வேங்கடம் என, புல்லியின் பேராண்மையையும், அவன் ஆட்சி செய்த வேங்கடமலையின் சிறப்பினை மாமூலனார் புகழ்கிறார்.
“இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே”
(நற்றிணை பாடல் 14)
கடிய குதிரையை உடைய புல்லி என்பவரின் நாட்டிலுள்ள காட்டின் வழியாக தலைவி சென்றதாக மாமூலனார் உரைக்கிறார்.
” வடவயின் வேங்கடன் பயந்த வெண்கோடு யானை, மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை ”
( அகம் 27)
வடதிசையில் உள்ள வேங்கடத்து மன்னன் அளித்த போர்யானைகளை உடைய , வீரப்போரில் வல்லவர்களான பாண்டியர்கள் அறம் காத்த கொற்கை என புலவர் மதுரை கணக்காயனார், பாண்டியர்களின் புகழ் பாடுகிறார். சங்ககாலத்தில் கொற்கை துறைமுகம் சிறந்து விளங்கியதையும், புல்லி மற்றும் பாண்டியர்களுக்கு இடையே உள்ள சுமூக உறவையும் இந்த பாடல் உணர்த்துகிறது. மதுரை கணக்காயனாரின் மகனாரான நக்கீரர், பாண்டியன் நெடுஞ்செழியனை பற்றி பாடியுள்ளதால், இப்பாடலில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னன், தலையாலங்கானத்து போரில் வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என உணர்த்தும்.
” பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான் எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்பட கடந்த ஆலங்கானத்து அர்ப்பினும் பெரிது மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்”(அகம் 209)
பொன் தகடுகள் வேய்ந்த நீண்ட தேரினை உடையவர் தென்னர் கோமான் நெடுஞ்செழியன். கணைய மரத்தை போன்ற திரண்ட தோள்களையும், நீண்ட தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையானங்கானத்து போரில் எழுவரை வீழ்த்தியதாக பாண்டியனின் வீரத்தைதை புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.
இதே பாடலில் ” மதம் கொண்ட யானைகளையும் , மிகுந்த போர்வன்மையும் கொண்ட புல்லி என்பானது மூங்கில்களை உடைய நீண்ட சாரல்களை உடைய வேங்கடமலை ” என புல்லியின் போர்திறனை கல்லாடனார் போற்றியுள்ளார்.
” களிற்றுக்கன்று ஒழித்த உவகையர் கலிசிறந்து கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து நறவுநொடை நல்இல், பதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை நல்நாட்டு வேங்கடம்”
( அகம் 83)
மணங்கமழும் வெண்கடம்பின் பூக்களை சுருள்போன்ற தன் தலைமயிரில் சூடிக்கொண்டு , உரல் போன்ற காலினை உடைய பெண் யானையிடமிருந்து களிற்று கன்றை பிரித்து கூட்டி வருவர் கள்வர்கள்! வெண்கடம்பு மரத்தின் நாரைக்கொண்டு யானைக்கன்றை கட்டுவர். அத்தகைய இளையர்களுக்கு பெருமகன், கள்வர் கோமான் புல்லி யின் அழகிய கொடிகளையுடைய வேங்கடமலை என வேங்கடமலையின் சிறப்பினை உணரத்துகிறார் கல்லாடனார். இளையர் என்பவர் சங்ககால போர்க் குடியினர் என சென்னை பல்கலைக்கழக ஆய்வு நூல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. ( Chronology of early tamils/ chennai universiry 1932)
” நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக் கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத் தேம்கமழ் நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந்தாரோ”( அகம் 141)
கற்பாறையிடையே வளர்ந்த வேங்கையை போல புள்ளிகளை உடைய பூவின் இடையே அன்று பூத்த நாரத்தையின் மலர்கள் உதிரும்படி, முசுக்கலை என்ற ஆண் குரங்குகள் பாய்ந்து துள்ளும், நெடிய மலைத்தொடரை கொண்ட வேங்கட மலை வேங்கடத்தின் அழகை நக்கீரர் விவரிக்கிறார்.
“திண்நிலை மறுப்பின் வயக்களிறு உரிதொறும் தண் மலை , ஆலயின் தாஅய் உழவர், வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்”(அகம் 211)
வலிமை பெற்ற களிறானது, வெண் கடம்பு மரத்தில் உராயும் போது, பரவும் கடம்பின் பூக்கள், மழைக்காலத்தில் பெய்யும் பனியை போல எங்கும் பரவிக்கிடக்கும். அப்படி உதிர்ந்த பூக்கள் பாறைகளில் காய்ந்து இருக்கும். இத்தகைய குளிர்ச்சி பொருந்திய சோலைகளை கொண்ட வேங்கடமலை என புல்லியின் தேசத்தை மாமூலனார் எடுத்துரைக்கிறார்.
” வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெருங்கோட்டு ஒங்குவெள், அருவி வேங்கடத்து உம்பர்”( அகம் 213)
போர் பயிற்சி பெற்ற யானைகளை கொண்ட தொண்டையர் வாழும் வேங்கடமலையானது, மேகங்கள் தவழும், வெண்மையான அருவிகள் விழும் மலை உச்சிகளை உடையது என வேங்கடத்தின் அழகை தாயங்கண்ணனார் புகழ்கிறார்.
“ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து ”
(அகம் 295)
ஒலிசெய்யும் வீரக்கழல் அணிந்த காலினனான புல்லி என்பானது குன்றமான வேங்கடம் என மாமூலனார் புல்லியின் வேங்கடமலையை குறிப்பிடுகிறார்.
” வருவழி வம்பலர் பேணிக் கோவலர் மழவிடை பூட்டிய குழாஅய் தீம்புளி செவியடை தீரத தேக்கிலைப் பகுக்கும் புல்லி நன்னாட்டு உம்பர்”(அகம் 311)
வழிப்போக்கர்களின் பசியினை தீர்க்கும் பொருட்டு, தங்களது பசு கன்றுகளின் கழுத்திலே தொங்கும் குழாய்களில் அடைக்கப்பட்டுள்ள புளிச்சோற்றினை , கோவலர் பகிர்ந்து அளிப்பர். அத்தகைய ஈகை தன்மை கொண்ட மக்கள் வாழும் புல்லி என்பான் காத்து வரும் வேங்கட நன்னாடு என என மாமூலனார், கோவலர்களின் நற்குணத்தையும், புல்லி என்பவன் வேங்கட நாட்டை காத்தருள்வதையும் புகழ்ந்துள்ளார்.
” வீழ்ப்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை, சூர்புகழ் அடுக்கத்து, மழைமாறு முழங்கும் பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம் 359)
நெடிய கால்களை உடைய களிற்றியானையானது, தெய்வங்கள் வாழும் மலை பக்கத்தே, இடியோடு மாறுபட முழங்கும் இடமான பரிசிலர்க்கு பொய்யாத நல்ல புகழினையும், சிறந்த வண்மையையும் உடைய புல்லி யின் வேங்கடம் என மாமூலனார் புகழ்கிறார்.
” மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர் வேங்கடம்” (அகம் 393)
இடையர்கள் வெண்மையான அரசியை உலக்கையால் குத்தி, மண்பானையில் ஏற்றி அவிலாழிகிய சோற்றினை ஆக்குவர்.இக்காட்சிகள் நித்தம் நடைபெறும் , தேனிறால் தொங்கும் உயர்ந்த பாறைகளையுடைய மங்காத புகழ் கொண்ட புல்லி என்பானது வேங்கட நன்னாடு என வேங்கடத்தின் புகழை மாமூலனார் பாடுகிறார்.
“புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஒங்கல் வானத்து உறையினும் பலவே”(புறம் 385)
அம்பர் கிழான் என்வனை வாழ்த்தும் கல்லாடனார், புல்லியின் வேங்கடமலையில் வீழ்ந்த மழைத்துளியினும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.
வேங்கடமும் புல்லியும்……
பல்வேறு புலவர்களால் கள்வர் கோமான் புல்லியின், வீரம், கொடை ஆகிய பண்புகள் பாடப்பட்டுள்ளது. புல்லியின் வேங்கடம் போர்யானைகளால் சிறந்திருந்தது என்றும், புல்லியின் வேங்கடநாட்டை கடந்தால் அங்கு வேற்றுமொழியினர் வாழ்ந்ததாக அறிகிறோம். பாண்டியர்களின் யானைப்படை மாமன்னர் புல்லியால் அளிக்கப்பட்ட யானைகளை கொண்டிருந்தது. புல்லி நாட்டின் வீரர்கள் தாம் வாங்கும் பொருட்களுக்கு யானையையும், யானைத் தந்தங்களையும் விலையாக கொடுத்துள்ளனர். புல்லியின் வேங்கடம் விழாக்களால் சிறந்துள்ளது. புல்லியின் ஆட்சி வேங்கநாடு முதல் மழநாடு வரையிலும் பரவியிருந்தது. வேங்கடமலை மக்களை தொண்டையர் என கல்லாடனார் போற்றுகிறார். புல்லியை பற்றி பாடப்படும் அனைத்து பாடல்களும் பாலைத்திணை வகையை சேர்ந்தவையாக உள்ளன.
வீரர்கள் பலருடன் கானகம் சென்று, களிறு வேட்டையாடும் புல்லி, யானை தந்தங்களையும், அதனை விற்பதன் மூலம் கிடைக்கும் நெல்லையும் , புலவர்களுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார்.
புல்லிநாட்டின் ஆயர்கள் வரகு அரிசியால் சமைத்த உணவை பாலில் கலந்து விருந்தினருக்கு கொடுத்து மகிழ்வர். கோடையின் வெம்மையில் நீர்நிலைகள் வற்றியிருக்கும் காலத்தில், வேங்கட நாட்டின் வழிபோக்கர்களுக்கு , எருதுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் புளிச்சோற்றை தேக்கு இலையில் வைத்து ஆயர்கள் அளிப்பார்கள்.
வந்தோர்க்கு இல்லையென கூறாது வாரி வழங்கும், கள்வர் கோமான் புல்லியை புலவர்கள் ” பொய்யா நல்லிசை மாவண் புல்லி” என்றும் “நெடுமொழிப்புல்லி” என்றும் பாராட்டுகின்றனர்.
கள்வர் கோமான் புல்லியின் கருநாடகப் படையெடுப்பு
வேங்கடமலையை ஆட்சி செய்த கள்வர் கோமான் புல்லி மழநாட்டையும் பணியச் செய்துள்ளார் என அகநானூறு பாடல் 61 கூறுகிறது. சங்க கால மழநாட்டை அதியமான் எனும் சேர மரபினர் ஆட்சி செய்து வந்தனர். அவர்களை வீழ்த்திய கள்வர் கோமான் புல்லி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் வரை தனது ஆட்சிப்பரப்பை விரிவாக்கியுள்ளார்.( களப்பிரர்கள்/ நடனகாசிநாதன் Pg 4).தெற்கு நோக்கி நகர்ந்த வேங்கடமலைக் கள்வர்கள் பெங்களூரு வரையிலும் ஆளுமை செலுத்தியுள்ளனர்.
கர்நாடகத்தில் பண்டைய தமிழக பகுதிகள்
இளங்கோ அடிகள் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு
(சிலப்பதிகாரம்,வேனிற்காதை)
சிலப்பதிகாரத்தின் காலம் கிபி 2 ஆம் நூற்றாண்டு என்பது பொதுவான ஆய்வாளர்களின் கணிப்பு. இக்காலத்தில் தமிழகத்தின் வட எல்லையாக வடவேங்கடமும் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகள் கடலாக இருந்துள்ளது. அதாவது தமிழக பகுதிகள் மைசூர், பெங்களூர் முதலிய இன்றைய கர்நாடக பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது.
தமிழகத்தின் வட எல்லையில் இருந்த கர்நாடக பகுதிகள் பண்டைய காலத்தில் எருமை நாடு என அழைக்கப்பட்டது. அகநானூறு பாடல் 115, ” எருமை குடநாடு ” எனும் பகுதியை குறிப்பிடுகிறது. குடநாடு என்பது மேற்கு நாடு என பொருள்படும். இது சேரநாட்டின் வடபால் அமைந்திருந்த நாடாகும்.எருமை எனும் மன்னரின் ஆட்சியில் குடநாட்டின் பகுதிகளும் இருந்ததை இப்பாடல் விளக்குகிறது.
தொல்காப்பியர் தம் பாடலில் செந்தமிழ் வழங்கிய நாடுகள் பன்னிரண்டு என்று கூறுகிறார்.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி”
(தொல்.சொல், 400)
தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர், அப்பன்னிரு நாடுகள் இவை என்று குறிப்பிடுகிறார்.
“தென்பாண்டி, குட்டம், குடம் கற்கா, வேண், பூழி ,
பன்றி, அருவா, அதன் வடக்கு , நன்றாய
சீதம், மலாடு, புனல் நாடு, செந்தமிழ்சேர்
ஏதம் இல் பன்னிரு நாட்டு எண்”
தமிழ் வழங்கப்பட்ட பன்னிருநாடுகளில் குடநாடும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடநாடு அகநானூற்றில் எருமை குடநாடு என குறிப்பிடப்பட்டதை கண்டோம்.
புறநானூற்று பாடல்கள் 273, 303 ஆகியவற்றை எருமை வெளியனார் எனும் தமிழ் புலவர் எழுதியுள்ளார். அகநானூற்றில் பாடல் 72, எருமை வெளியனார் மகனார் கடலனார் என்பவர் எழுதியுள்ளார். இதன் மூலம் எருமை நாட்டுப் பகுதியில் பண்டைய காலத்திலேயே செந்தமிழ் புலவர்கள் வாழ்ந்து வந்துள்ளதை அறியலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் கிடைத்த பழமையான தமிழி கல்வெட்டில்
“எருமி நாடு குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறு போசில் இளயர் செய்த அதிட்டானம்” (IPS 01)
என எருமை நாட்டைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. எருமைநாட்டில் வாழ்ந்த காவுடி எனும் பெண் சமணத் துறவியின் சார்பாக எருமை நாட்டில் சிறுபோசில் எனும் இடத்தில் வாழ்ந்த இளையர்கள், சித்தன்னவாசலில் அதிட்டானம் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கிமு 1-2 ஆம் நூற்றாண்டு. இந்த காலகட்டத்தில் எருமை நாட்டில்( மைசூரில் தமிழ் போர்குடி வீரர்களாகிய இளையர்கள் வாழ்ந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துக்கிறது. கள்வர் கோமான் புல்லி, இளையர் பெருமகன் என புகழப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம், ஒடப்பட்டி எனும் ஊரில் கிடைத்த கல்வெட்டு 212 of 1910 ல் எருமை எறுவாடி என்பவரும் ,குணருண்டை வடுகன் என்பவரும் மான்வேட்டையின் போது இறந்த தகவலை தெரிவிக்கிறது. கங்க மன்னர் ஸ்ரீபுருஷரின் காலத்திய இக்கல்வெட்டில், குறிப்பிடப்படும் எருமை என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் எருமை நாடாகும்.
13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹய்சள மன்னர் வீரவல்லாளதேவரின் ஆட்சியில், பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்பல்லாபூர் எனும் ஊரில் கிடைத்த கல்வெட்டில்” வீரவல்லாளரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ” எருமரை நாடு ” எனும் பகுதி குறிப்பிடப்படுகிறது. (Epigraphica carnatica vol x)
இதன்மூலம் எருமை நாடு எனும் பண்டைய தமிழகப்பகுதி தெற்கு கர்நாடக பகுதிகளை சேர்ந்தது என உறுதியாகிறது.
வேங்கடமலையில் இருந்து ஆட்சி செய்த கள்வர் கோமான் புல்லி , தனது பலத்தால் மழநாட்டின் மேல் படையெடுத்து மழபுலத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் , பெங்களூர் போன்ற மழநாட்டு பகுதிகள் புல்லியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
பெங்களூர் பகுதியிலும் மழவர்கள் ஆளுமை இருந்ததை பெங்களூர் பகுதியில் சென்னப்பட்டினம் தாலுக்காவில் கிடைத்த கண்டராதித்த சோழர் கால கல்வெட்டு இப்பகுதியை பெரிய மழவூர் என குறிப்பிடுகிறது. ” கரிகால சோழ வளநாட்டு பெரிய மழவூர் என இப்பகுதி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது(Ep car vol ix)/ பிற்கால சோழர் சரித்திரம் சதாசிவ பண்டாரத்தார் பக் 65)
பெங்களூரில் புல்லியின் பெயரால் ஊர்:-
சங்க காலத்தில் மழநாட்டை அடக்கியாண்ட புல்லியின் அடையாளமாக பெங்களூரில் புல்லியூர் எனும் ஊர் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
பல்லவன் சிம்மவிஷ்ணுவின் கிபி 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹோஸ்கோட்டே செப்பேட்டில் பல்லவரின் தாயார் அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது. சிம்மவிஷ்ணுவின் தாயார் கங்க நாட்டில் ( பெங்களூரில்) , கோரிக்குந்தம் எனும் பகுதியில் புல்லியூர் எனும் ஊரில், தான் கட்டிய சமண கோயிலுக்கு அளித்த நிலக்கொடை பற்றி கூறுகிறது.
பெங்களூர் பகுதியில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு, புல்லியூர் நாடு எனும் பகுதியை குறிப்பிடுகிறது.
பெங்களூர் பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்த புல்லி மன்னரின் பெயரில் புல்லியூர் எனும் ஊரும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை இச்செப்பேடு நமக்கு உணர்த்துகிறது.
வேங்கம் முதல் பெங்களூரு வரை அதிகாரம் செலுத்திய புல்லியின் வழியினர் பிற்காலத்தில் வடக்கில் பல்லவரின் முன்னேற்றத்தால் தெற்கு நோக்கி நகர்ந்து பெங்களூரு நந்திமலையை மையமாக கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
கிபி 250 காலகட்டத்தில் களப்பிரர்கள், மூவேந்தர்களின் பலவீனத்தை பயன்படுத்தி சேர சோழ மற்றும் பாண்டிய மண்டலங்களை கைப்பற்றியுள்ளனர்.
பாண்டியரின் வேள்விக்குடி செப்பேட்டில் ” களப்ரன் எனும் கலியரன்” என களப்பிரரை குறித்துள்ளனர். களப்ரன் எனும் சொல் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.
களப்ரன் எனும் சொல்லின் நேர்மாறான தமிழ்ச்சொல் கள்வர் எனவாகும். கள்வர் கோமான் புல்லியின் வழியினர் என்பதால் இங்கு களப்ரன் என குறிப்பிடப்பட்டுள்ளனர். (Journal of the asiatic society vol 1)
பெங்களூருக்கு அருகில் ஹோஸ்கடேட் பகுதியில் கிடைத்த பழைய கன்னட எழுத்தில் அமைந்த கல்வெட்டு அப்பகுதியை ” ஸ்ரீ கள்வர் ராச்சியம்” என குறிப்பிடுகிறது. களப்பரராகிய கள்வர்களின் ராச்சியம் என எருமைநாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கிபி 4-5 ஆம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது. (Epi carnatic vol IX , pg 110)
பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையைத் தலைமையிடமாகக் கொண்டு களப்பிரர்கள் ஆட்சி புரிந்துவந்தனர்.
“அருளுடை பெரும்புகழ் அச்சுதர் கோவே
இணையை ஆதலின் பனிமதி தவழும்
நந்தி மாமலைச் சிலம்ப
நந்திநிற் பரவுதல் நாவலர் கரிதே’ ( களப்பிரர் ஆட்சியில் தமிழகம், மயிலை சீனி வேங்கடசாமி)
என்கிறது அமிர்தசாகரனார் எழுதிய யாப்பெருங்கலம் என்னும் இலக்கண நூலின் விருத்தியுரை மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள் . களப்பிர மன்னரான அச்சுத களப்பாளனை நந்திமலையோடு தொடர்புபடுத்துகிறது இப்பாடல்.
நந்திமலை அருகிலுள்ள சிக்கபல்லபூரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு: “நிகரில சோழ மண்டலத்துக் களவர நாட்டு நந்திமலை மேல்மஹா நந்தீஸ்வரம் உதயமகாதேவருக்கு” என்று உறுதி செய்கிறது (Epigraphic Carnatica Vol 10 – Chikballpur Inscription no. 21)
இருளறு திகிரியோடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நந்தி’ எனும் யாப்பெருங்கலத்தின் பாடல் வரிகள் திருமாலை வழிபட்டு பெருநிலத்தைக் களப்பிரர் பெற்றதாகக் கூறுகிறது. களப்பிரர்கள் திருமாலின் பால் பேரன்பு கொண்டிருந்ததை இச்செய்யுள்கள் உணர்த்துகின்றன.
களப்பிரர் தமிழரே
களப்பிரர் காலத்தில் தமிழ் மொழியின் பால் இவர்களுக்கு இருந்த பற்றும் புலமையும் இவர்களின் தாய்மொழி என்னவென்று நமக்கு உணர்த்தும்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் களப்பிர மரபினராவார். சிவபெருமான் மீது தூய தமிழ் பதிகங்களை இயற்றியவர். சிவனடியார்களுக்கு உதவுவதை பிறவிப்பயனாக எண்ணி வாழ்ந்தவர்.
பழங்கால தமிழி எழுத்துக்கள், களப்பிரர் காலத்தில் வட்டெத்துக்களாக உருப்பெற்றது.
பழமையான நான்கு வகைப் பாக்களோடு, புது விதமான பாக்கள் சேர்க்கப்பட்டு பன்னிரு வகையான செய்யுட்களை உண்டாக்கினர்.
பல தரப்பட்ட யாப்பிலக்கண நூல்கள் களப்பிரர் காலத்தில் உருவாயின. அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம் முதலியவை இவற்றுள் சிலவாகும்.
நரிவிருத்தம், சீவகசிந்தாமணி, எலி விருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, கொங்குவேள் பெருங்கதை , திருவிரட்டை மணிமாலை, அற்புத திருவந்தாதி, கயிலைபாதி காளத்திபாதி திருவந்தாதி, ஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், பாரெட்டு, போற்றி கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்திநாயனார் இரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி முதலான நூல்கள் களப்பிரர் காலத்தில் சைவ மற்றும் சமண சமயத்தவர்களால் இயற்றப்படடது.
பூச்சியபாதர் என்ற சமண முனிவரின் மாணவராகிய வச்சிரநந்தி என்பவர் மதுரையில் திராவிட சங்கம் என்ற ஒரு சங்கத்தைக் கி.பி. 470இல் நிறுவினார். இதனை நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கூறுவர். இச்சங்கத்தின் நோக்கம் சமண சமய அறங்களைப் பரப்புவதும், சமண சமயக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது.
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி நீதி நூல்களும், பக்தி இலக்கியமும் முதலில் தோன்றியது களப்பிரர் காலத்திலேயே ஆகும். சங்க காலத்தில் ஆசிரியப்பாவும், கலிப்பாவும் செல்வாக்குப் பெற்றிருக்க, களப்பிரர் காலத்தில் வெண்பா செல்வாக்குப் பெற்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை, ஆகிய ஒன்பது நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும்.
வேள்விக்குடி செப்பேட்டில் , பாண்டியன் கோச்சடையன் தன்னை “மன்னர் மன்னன் மதுர கருநாடகன் கொங்கர் கோமான்” என குறித்துள்ளார். மதுரை, கொங்குநாடு மற்றும் கருநாடக பகுதிகளில் ஆளுமை செலுத்தியதை குறிப்பிடும் வகையில் மதுர கருநாடகன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூர்த்திநாயனார் காலத்தில் பாண்டிய நாட்டை அரசாண்ட மன்னன் கன்னட நாட்டு அரசன் என்று சேக்கிழார் கூறுகிறார். “கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் மன்னர்” என்று அவர் கூறுகிறார் (திருத்தொண்டர் புராணம், மூர்த்திநாயனார் புராணம் 11, 24). ‘வடுகக் கருநாடர் மன்னன்’ என்பதன் பொருள் வடுக நாடாகிய கன்னட நாட்டைச் சேர்ந்த அரசன் என்பது பிற்காலத்து நூலாகிய கல்லாடம் ‘மதுரை வவ்விய கருநடர் வேந்தன்’ என்று கூறுகிறது (கல்லாடம், செய்யுள் 56).
பண்டைய தமிழக பகுதியான எருமைநாடு எனும் கருநாடக பகுதிகளை ஆட்சி செய்த வேந்தன் என்பதை குறிக்கும் வகையிலே களப்பிரரை கருநாட வேந்தன் என குறித்துள்ளனர். இதனைக்கொண்டு களப்பிரரை கன்னடர் என சிலர் திரித்து எழுதுகின்றனர்.
பெங்களூர் பகுதியில் உள்ள நந்திமலையை தலைமையிடமாகக் கொண்டு மேலைக் கங்கர் எனும் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துவந்த கல்வெட்டுகள் 6ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
கொடும்பாளூர் வேளிர்களும் கூட மைசூருக்கு அருகில் உள்ள துவாரசமுத்திரத்தில் இருந்து தமிழகத்தில் குடியேறிய மன்னர்கள் என்பதனை சங்க இலக்கிய பாடல்கள் உணர்த்துகின்றன. ( சங்கதமிழ் புலவர் வரிசை- புலவர் கா கோவிந்தன் பக் 44)
நன்னூல் எனும் தமிழ் இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவர் என்பவர், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது.
“திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை வினோத னமரா பரணன்
மெழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்”
என நன்னூல் சிறப்பு பாயிரத்தில் இவர் பாடியுள்ளார். எருமைநாடு என கர்நாடக பகுதியை மையமாக கொண்டு ஆட்சி செய்த கங்க மன்னரான சீய கங்கன் தூண்டுதலின் பெயரில், அவரது உதவியோடு நன்னூல் எனும் தமிழ் இலக்ண நூலை எழுதியாக கூறுகிறார். தமிழ் இலக்கண நூலை எழுதும் அளவிற்கு புலமை வாய்ந்த தமிழர்கள் எருமைநாட்டில் வாழ்ந்து வந்துள்ளதை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.
இக்கால நில வரம்புகளைக்கொண்டு வரலாற்றை நோக்க இயலாது. பண்டைய தமிழக எல்லைகள் கேரளம், தென்பாதி கர்நாடகம் மற்றும் ஆந்திராவின் தென்கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்துள்ளது.
அச்சுதக் களப்பாளன்’ என்னும் பெயர் கொண்ட களப்பிர மன்னன் ஒருவன் முடியுடை மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. ( தமிழர் வரலாறு PT srinivas ayyengar/ பக் 315-317)
சேர, சோழ, பாண்டியர்களை ‘அச்சுதன்’ இரும்புச் சங்கிலியால் பிணைத்து இழுத்து வந்த போது மூவேந்தர்கள் பாடிபுகழ்ந்து கெஞ்சியது.
சேரன் பாடியது:
திணை விதைத்தார் முற்றந்திணை யுணங்கும் செந்நெல்
தன்னை விளைத்தார் முற்ற மதுதானாம் கனைசீர்
முரசுணங்கும் சங்குணங்கும் மூரித் தேர்த் தனை
அரசுணங்கும் ‘அச்சுதன்’தன் முற்றத்து.
சோழன் பாடியது:
அரசர்குல திலகன் ‘அச்சுதன்’ முற்றத்தில்
அரசர் அவதரித்த வந்தால் – முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் கற்றளையை
வெட்டிவிடும் ஓசை மிகும்.
பாண்டியன் பாடியது:
குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்
நிறையறு திங்கள் இருந்தான் – முறைமையால்
ஆலிக்குத் தானை யலங்குதார் ‘அச்சுத’ முன்
வாலிக்கிளையான் வரை.
“குறையுளார் எங்கிரார்” என தொடங்கும் இப்பாடலில், வாழ்க்கையில் குறையிலாதவர், உலகில் எங்கே இருக் கிறார்கள், தன் மனைவியைப் பிரியவிட்டுக், கூரியவேல் உடையோனாகிய இராமனே, வாலியின் தம்பியாம் சுக்கிரிவன் மலைக்கு முன்பே, ஒர் ஆறு மாதம் முழுவதும் காத்திருந்தான் ; போர் எனக்கேட்டுப் பூரிக்கும் படையும் அசையும் மாலையும் உடையோனாகிய அச்சுதன் முற்றத்தின் முன் நான் காத்துக் கிடக்கின்றேன் என பாண்டியன் தன்னை ராமபிரான் போலவும், அச்சுதனை வாலியுடனும் ஒப்பிட்டு பாடியதால் கோபமடைந்த களப்பாளன், பாண்டியனுக்கு மேலும் ஒர் சங்கிலியால் கட்டினான். இதன்பிறகு பாண்டியன் அச்சுத களப்பாளனை புகழ்ந்து பாடுகிறார். பாண்டிய மன்னர் அச்சுதனை தில்லை அச்சுதன் என தில்லையோடு தொடர்புபடுத்தி கூறுகிறார்.
“குடகர் குணகடல் என்றார்த்தார் குடகர்க்கு
இடகர் வடகடல் என்றார்த்தார் – வடகடலர்
தென் கடலென்று ஆர்த்தார் தில்லையைச் ‘சுதானந்தன்’
முன் கடை நின்றார்க்கும் முரசு”.
மூவேந்தரும் அச்சுதக் களப்பாளனை சுத்தமான தமிழ் வெண்பாக்களால் பாடியுள்ளனர். பாண்டியன் பாடிய பாடலில் உள்ள குறையைக் கண்டு மீண்டும் ஒர் சங்கிலியால் பாண்டியனை கட்டியுள்ளார். இந்த அளவுக்கு தமிழ் புலமை கொண்டிருந்த எருமை நாட்டு மன்னர் தமிழ் மன்னரே என்பது உறுதி. வேற்று மொழி பேசும் மன்னரால் எங்கனம் இத்தகைய பாக்களை கேட்டு புரிந்து கொள்ள இயலும்? மூவேந்தரும் பாடிய பாக்களும் சுத்தமான தமிழிலே ஒலைச்சுவடிகளில் பதியப்பட்டுள்ளது. களப்பிர மன்னர் தமிழர் என்பதற்கு இதுவே நமக்கு உணர்த்தும்.
களப்பிரரை தமிழர் என்றும் புல்லியின் வழியினர் என்றும் கூறும் வரலாற்று ஆய்வாளர்கள்
சமீபத்தில் பூலாங்குறிச்சியில் கிடைத்த கல்வெட்டுகள், களப்பிரர் வரலாற்றில் புதிய வெளிச்சத்தை கொண்டு வந்துள்ளது. பிறமொழி கலப்பின்றி முழுவதும் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட தொன்மையான பெரிய கல்வெட்டு இதுவாகும்.
களப்பிரரை தமிழர் என்றும் புல்லியின் வழியினர் என்றும் கூறும் வரலாற்று ஆய்வாளர்கள்
History of pallavas of kanchi pg 85(S krishnaswami ayyengar 1928, Madras university historical series)
The age of imperial unity, vol 2, pg 223 Bharatiya vidya bhavan, 1951
* History of tamils p 535, PT srinivasa ayyangar,1929
* Studies in south indian jainism Pg 56( By M.S. Ramasami ayyangar , Maharaja’s college , vizianagaram 1922)
களப்பிரர் பக் 4 ( நடனகாசிநாதன், தமிழக தொல்லியல் துறை)
தமிழ்நாடும் களப்பிரர் ஆட்சியும், Pg 33(இர.பன்னீர்செல்வம்,1973)
*History of kongu part 1 Pg 141 , N mahalingam( International society for investigation of ancient civilization 1986)
*Ancient india and south indian culture pg 480 (S krishnaswamy ayyengar, Poonam book agency, Archaeological survey of india 1941
* காலந்தோறும் தமிழகம், பக் 48-புலவர் க கோவிந்தனார் 1998
General history of pudukkottai state vol 2 part 1
Kerala gazetter vol 2 1986 Ramachandran nair
Journal of epigraphical society of india vol x 1983
இராசராசன் 2010- தமிழக தொல்லியல் துறை
பாண்டியர் வரலாறு இராஜசேகரி தங்கமணி( விகடன் வெளியீடு)
புல்லியின் வம்சத்தவர்களைக் குறிக்கும் பிற்காலக் கல்வெட்டுகள்
சங்க காலத்தில் வேங்கடமலையை ஆட்சி செய்த புல்லியின் வம்சத்தினர் வழி வழியாக தங்களது பெயருக்கு பின் புல்லி எனும் அடைமொழியை சேர்த்து பயன்படுத்தியதை கல்வெட்டுகளினு உணர்த்துகின்றன. உதாரணமாக சங்க காலம் முதல் பிற்காலம் வரையிலும் அதியர் மரபினர் அதியமான் எனும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததைப்போல புல்லியின் மரபினரும் அவரது பெயரை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர். கள்வர் கோமான் புல்லியின் வம்சத்தினர் பற்றிய கல்வெட்டுகளைக் காண்போம்.
” புல்லியார் கொற்றாடை நிரை மீட்டு பட்ட கல் கோனாரு” — விழுப்புரம் மாவட்டம், கரடிகை பகுதியில், கிபி 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில், கள்வர் கோமான் புல்லி வழிவந்த புல்லியார் கொற்றாடை என்பவர் ஆநிரைகளை மீட்டு, கரந்தைப்போரில் உயிரிழந்த செய்தியினை தருகிறது. வேங்கட மலையை ஆட்சி புரிந்த புல்லியார் வம்சத்தினர் கிபி 6 ஆம் நூற்றாண்டு அளவில், தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததை விழுப்புரம் கல்வெட்டு உணர்த்துகிறது.(நடுகல் கல்வெட்டுகள் ர பூங்குன்றன்/ கவெ எண் 15)
” நிரை சிடும் பொன்முதுட் புல்லி“- தர்மபுரம் மாவட்டம், கோரையாறு எனும் ஊரில் கிடைத்த ஆறாம் நூற்றாண்டு நடுகல்லில், புல்லி வம்சத்தினர் நிரை கவர்தலில் ஈடுபட்டதை குறிப்பிடுகிறது. புல்லி வம்சத்தினரின் தெற்கு நோக்கிய இடம்பெயர்வு தொடர்ந்து கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.
கிபி 914 ஆம் ஆண்டை சேர்ந்த பராந்த சோழன் கால புதுக்கோட்டை கல்வெட்டு(IPS 47) , நக்கம் புல்லியார் எனும் பெண் கோயிலுக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடுகிறது.
கிபி 1007 ஆம் ஆண்டை சேர்ந்த முதலாம் ராசராசசோழன் கால புதுக்கோட்டை கல்வெட்டு (IPS 85) , புல்லி ஆனந்தன் மற்றும் புல்லி கூத்தன் ஆகியோர் அளித்த நிலக்கொடை பற்றி பேசுகிறது.
இன்றும் மதுரை மேலூர் பகுதியில் மாங்குளம் கிராமத்தில் “பொன்னம்பல புள்ளி” எனும் வம்சத்தை சேர்ந்த கள்ளர்கள் வசித்து வருகின்றனர். பொன்னம்பல புள்ளியை தங்களது வம்ச அடையாளமாக கொண்டுள்ளனர். அழகர் கோயிலில் நடைபெறும் திருமங்கை ஆழ்வார் வேடுபறி நிகழ்வில், பொன்னம்பல புள்ளி வம்சத்தார், சுழற்சி முறையில் பட்டு பரிவட்ட மரியாதை பெறும் உரிமையை கொண்டுள்ளனர்.
வேங்கட மலையை ஆட்சி செய்த புல்லியின் வம்சத்தினர் , தொடர்ந்து தங்களது பெயர்களோடு புல்லி எனும் பட்டத்தை சேர்த்து பயன்படுத்தி வந்துள்ளதை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி குடிபெயர்ந்த புல்லியின் வம்சத்தினர் புதுக்கோட்டை, மதுரை ஆகிய பகுதியில் பிற்காலத்தில் நிலைத்து வாழத்தொடங்கியுள்ளனர். இன்று அவர்களில் ஒரு குழுவினர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே , மாங்குளத்தில் உள்ள பொன்னம்பல புள்ளியார் எனும் பெயரோடு இன்றும் வாழ்ந்து வருகின்றனர். மேலூர் கள்ளர்கள் தங்களது பூர்வீகமாக தொண்டைநாட்டை குறிப்பிடுகின்றனர்.மேலூரில் உள்ள காஞ்சிவனம் சுவாமி கோயிலும் இக்கருத்துக்கு வலுவூட்டுகிறது.
ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
www.sambattiyar.com