புதன், 5 ஆகஸ்ட், 2020

கலைமாமணி அறந்தை நாராயணன் சேர்வை



60 பறையர் குடும்பங்கள், 25 வலையர் குடும்பங்கள், 2 செட்டியார் குடும்பம், 2 இஸ்லாமியக் குடும்பம், 3 சேர்வை எனப்படும் கள்ளர் குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் பெயர் சிறுகாசாவயல் – கள்ளக்காத்தான். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் (இன்று ஆவுடையார்கோவில் வட்டம்) வெள்ளாற்றங்கரையில் – வடகரையில் – ஆவுடையார்கோவிலிருந்து 11கி.மீ தூரத்தில் உள்ள இயற்கை எழில்கொஞ்சம் கிராமம் அந்த கிராமம். அந்த கிராமத்தில் வசித்துவந்த 3 கள்ளர் குடும்பத்தில் ஒரு குடும்பத்தின் பெயர் ‘ரெங்கூன் சேர்வைக்குடும்பம்’. இந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன் ஏதோ ஓர் காரணத்தால் தனது 15 வயதில் ஊரைவிட்டுப் புறப்பட்டு சென்னை சென்று சேருகிறான். 

சென்னையில் பல்வேறு கடைகளில், நிறுவனங்களில் வேலைசெய்து தன் வயிற்றுப்பாட்டை ஓட்டிக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் ஒரு கட்டத்தில் ஜனசக்தி அச்சகத்தில் வேலைசெய்து வருகிறான். பணிபுரியும் இடம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பாசறையாதலால் மார்க்சீயக் கொள்கைகளை அங்கு பணிபுரிந்த தோழர்கள் மூலமும் அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மூலமும் கற்றுத் தேர்கிறான். 

கற்றுக்கொண்ட சித்தாந்தப் பின்னணியில் கட்டுரைகள், கவிதைகள் எனப் படைப்புப் பல படைக்கிறான். அவனது படைப்புகள் படிப்பவரை எழுச்சிகொள்ளச் செய்கின்றன. இதெல்லாம் நிகழ்ந்தேறிய காலம் 1960கள் ஆகும். 15வயதில் தன் ஊரை விட்டுப்போன அந்த இளைஞன் தன் 25 வயது வாக்கில் அந்தக் கிராமத்திற்கு வருகிறான். தன் குடும்பத்தாரோடு ஓரிரு வாரங்கள் அங்கு வசிக்கிறான். அப்போது அவன் காணும் சமூக நிலவரங்கள் அவனுக்குப் பெரு வியப்பையும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன. ஒருநாள் வயல்வெளிப் பகுதியில் வெள்ளைச் சட்டை, வெள்ளைவேட்டி, தலையில் உருமா எனப்படும் முண்டாசோடு ஒரு மனிதர் வந்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த ஒருவர் அந்த மனிதரைத் தன் அருகில் அழைக்கிறார். ‘யார் நீ! எங்கே போகிறாய்?! என்று இவர் கேட்டதும் அவர் தான், ஏகணிவயல் பகுதியிலிருந்து மின்னாமொழிக்குப் போகிறேன் என்கிறார். “ஏகணிவயலில் நீ யார்?” என்று மீண்டும் இவர் கேட்க, ‘நான் பறைய வீட்டுப் பையன்’ என்று சொன்னவுடன் அந்த சேர்வைக்காரர் ஓங்கி அறைந்து,” “ஏன்டா! பறப்பயலுக்கெல்லாம் வெள்ளையும் சொள்ளையும் கேக்குதா?! எவ்ளோ திமிரு இருந்தா எங்க ஊருக்குள்ளே முண்டாசு கட்டிக்கிட்டு வருவ’ என்று திட்டி, அவரது சட்டையையும் உருமாவையும் கால்செருப்பையும் கழற்றவைத்து, ‘எல்லாத்தையும் கக்கத்தில் இடுக்கிக்கிட்டே ஓடிப்போ’ என விரட்டியடிக்கிறார். 

இதையெல்லாம் பார்த்த இந்த இளைஞன், “இந்த அடிமைத்தனத்திலிருந்து இந்த மனிதர்களை மீட்டுச் சுதந்திர மனிதனாய் வாழவைக்கத்தானே நாம் படித்த கம்யூனிசம் வழிகாட்டுது. அதை இங்கே செஞ்சு காட்டுனா என்ன?” என்று எண்ணினான். ஒவ்வொரு நாளும் அந்தக் கிராமத்தில் இந்தப் பறையர் மக்கள் படும் இன்னல், இழிவு, மன உளைச்சல் எல்லாவற்றையும் பார்த்த அந்த இளைஞனால் பல இரவுகளில் தூங்க முடியவில்லை. தூங்கிக் கிடக்கும் இந்த மக்களைத் தட்டி எழுப்பி விடுதலை மனிதனாக்குவது எப்படி என்று ஒவ்வொரு நாள் இரவிலும் சிந்தித்திருக்கிறான். இப்படிப் பலநாள் சிந்தித்த அந்த இளைஞன் ஒரு நாள் இரவில் படுக்கைத் தளையிலிருந்து எழுந்து பறையர் சேரிக்குப் போனான். ஏற்கனவே அவ்வப்போது பேசிப் பழகியிருந்த பறையர் வீட்டு இளைஞர்களான காளி என்.இரத்தினம், சன்னாசி இன்னும் சிலரை எழுப்பி அழைத்து “நீங்கள் எல்லோரும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறணும்னா எல்லாரும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருங்க… நான் ஒங்களுக்குப் பக்கபலமாக இருக்குறேன்” என்று அந்தக் காலத்தில் கீழத் தஞ்சையில் தோழர் பிஎஸ்ஆர் நடத்திவந்த போராட்ட முயற்சிகளின் அனுபவங்களையெல்லாம் சொல்லி விழிப்புணர்வை ஊட்டினான். 

ஓரிரு நாள் இரவுநேர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின்மூலம் பத்துப்பதினைந்து பேரைத் திரட்டிவிட்டான் அந்த இளைஞன். அந்தக் காலத்தில் அறந்தாங்கி வட்டாரத்தில் ஆவுடையார்கோவில் பகுதியில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களாகத் திகழ்ந்த அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணா கபே தோழர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் கே.ஆர்.சுப்பையா, வி.ச. மாவட்டச் செயலாளர் தோழர் அப்புக்குட்டி, ஒன்றியக் உறுப்பினர்கள் தோழர் கருப்பூர் காளிமுத்து, தோழர் ஜெயமாலைப் பிச்சை ஆகியோரை அழைத்துக் கொண்டு 1975ஆம் ஆண்டில் ஒருநாள் இரவில் அந்தச் சிறுகாசாவயலைச் செங்கொடி பறக்கும் வயலாக மாற்றினான். 

போராட்டத்தை வீரம் செறிந்த போராட்டமாக நடத்தி வெற்றி கண்டது இந்தக் கிராமம். ஒருமுறை, தெக்குத்திப் பகுதியிலிருந்து 50, 60 அடியாட்களைக் (அவர்களும் வேறு ஒரு பிரிவு தாழ்த்தப்பட்ட மக்கள் ) கொண்டுவந்து தங்கவைத்துக்கொண்டே அச்சுறுத்தி வந்ததோடு, ஒரு மாதக் கணக்கில் ஆயுதத் தாக்குதலும் நிகழ்த்தியிருக்கிறார்கள் மிராசுதார்கள். விடுதலை உணர்வும் சமத்துவ வேட்கையும் கொண்ட இந்த அடித்தட்டு மக்களும் அவர்களோடு ஒரு மாதகாலத்துக்கும் மேலாக ஆயுதம் தாங்கிப் போராடி, அடியாட்களை ஓடஓட விரட்டி வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய போராட்டம் நடந்த காலத்தில் அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் கம்யூனிஸ்டுகளாக மாறிப் போராட்டத்தில் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு குடும்பமும் நிலம்வாங்கி நிலம்வாங்கி நில மீட்புப் போராட்டத்தால் குறைந்த விலைக்கு வாங்கி இன்று நிலம் இல்லாத பறையர் குடும்பமே இல்லை என்ற தன்மதிப்புநிலை இந்த ஊரில் உருவாகியிருக்கிறதென்றால், அதற்கு வித்திட்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் அந்த இளைஞனையே சாரும்… அதுசரி… யார்தான் அந்த இளைஞர் என்ற ஆர்வ வினா உங்கள் சிந்தனையில் முளைக்கிறதல்லவா?! அந்த இளைஞர் வேறு யாருமல்ல.. ஜனசக்தியில் ‘எரிமலை’யாய் எழுதிவந்த அறந்தை நாராயணன்தான் அந்தக் கிராமத்து மறுமலர்ச்சிக் குறியீடு.

இக்கால கட்டத்தில் நிமிர்ந்த நடை, நேரான பார்வை, எவருக்கும் வளையாத பேனா இவற்றுடன் சினிமாவின் மேன்மைக்கு, வளர்ச்சிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துகொண்ட ஜனசக்தி' பத்திரிகையின் துணையாசிரியரும், பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினருமான தோழர் அறந்தை மு.நாராயணன் பல நூல்களை எழுதினார். அந்நூல்கள் மக்களால் பெரிதும் பாராட்டப்பெற்றன.

முற்போக்கு எழுத்தாளர் அறந்தை நாராயணனின், சினிமாவைப்பற்றிய அவருடைய பார்வை, தகவல்களைத் தொகுத்த நேர்த்தி, இடைஇடையே இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் இணைத்த விமர்சனங்கள் அனைத்தும் கவர்ந்த அம்சங்கள்.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆதார பூர்வமான தகவல்களுடன் நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர் அமரர் அறந்தை நாராயணன் அவர்களேயாவார்.

அறந்தை நாராயணன் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் பரிணமித்தவர். தமிழ் திரைப்பட வரலாற்றை முழுமையாக முதல் முதலில் தமிழ் சினிமாவின் கதை, விடுதலைப் போரில் தமிழ் சினிமா ஆகிய நூல்களை எழுதியவர். இதற்காக தேசிய விருது, சோவியத் நாடு விருது, கலைமாமணி விருது பெற்றவர். தமிழ் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க முடியாத கலைஞர் அறந்தை நாராயணன்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்