புதன், 13 மார்ச், 2019

உபாத்தியாயர், தமிழறிஞர், சைவச் செம்மல், திருக்களர் மு. சுவாமிநாத மாதவராயர்










தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற தலங்கள் 274 என இதுவரை கணக்கிடப் பெற்றிருந்தது. கி.பி. 1917-ம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியில் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் மற்றொரு தலம் உள்ளதெனக் கண்டு பிடிக்கப்பட்டது. அத்தலம் தான் தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணாற்றங்கரையில் உள்ளது திருவிடைவாய் திருத்தலம். இத்தலம் திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

1921ஆம் ஆண்டு கருப்பு களர் சுப்பையா சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர். இவரது குடும்ப பட்டம் மாதவராயர்


தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டுபுரிந்த அறிஞர் பலருள் திருக்களர் மு. சுவாமிநாத மாதவராயரும் ஒருவர். அவர் தமிழுக்கும் சைவத்திற்கும் உடல்,பொருள், ஆவி ஆகிய மூன்றினாலும் தொண்டாற்றியவர். சற்றேறக்குறைய ஒருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அன்னாரை நினைந்து போற்றும் அளவிற்கு அவருடைய தொண்டு உண்மை மிக்கதாயிருந்தது என்பதை அவர்தம் ஆக்கங்களின் வழி அறியலாம்.

காலத்தால் அழிக்க முடியாத  தொண்டால் இறவாப் புகழுக்கு உரியவரானார். இவர் தோன்றிய குலமாகிய கள்ளர் குலத்திற்கு இவர் ஆற்றியுள்ள பணி மிகப் பெரியதாகும். அரச பரம்பரையைச் சேர்ந்த கள்ளர் இனத்தின் பெருமையைச் சூரிய குலக் கள்ளர் சரித்திரம் என்னும் நூல் வழி ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இந்நூல் கள்ளர் இனத்திற்குக் கிடைத்த அரிய வரலாற்றுப் பெட்டகமாகும்.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இவ்வினத்திற்கு ஏற்பட்டிருந்த பழியைத் துடைக்க இவரும் அரும்பாடுபட்டார் என்பதை இவர்தம் மாணவர்கள் இன்றும் பெருமையுடன் பேசுகின்றனர்.





வனப்பான உடல் வளத்தோடு அறிவுச் சுரங்கமாய்த் திகழ்ந்த இவர், திருக்களரில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றினை அமைத்து ஏழை எளிய மாணவர்களுக்கு இலவயமாகக் கல்வி வழங்கினார். இலக்கண, இலக்கியங்களையும்  கற்பித்து வந்த இவர் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றிவந்தார். எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த இவர் தம் வாழ் நாள் முழுவதும் ஒரு சைவ ஞானியாகவே வாழ்ந்திருக்கிறார். 

இந்த மகானிடம் கல்வி பயின்ற மாணவர் சிலர் திருக்களரில் இருக்கின்றனர். எழுபது வயது முதியவர் ஒருவர் கண்களில் கண்ணீர் மல்க  “ வாத்தியாரைப் பற்றிக் கேட்கிறீர்களா..? ஆள் நல்ல வாட்ட சாட்டமா இருப்பார், கணுக்காலுக்கு மேலே ஏற்றிக் கட்டிய ஒரு நாலு முழ வேட்டி.. அதேஅளவுக்கு மேலே ஒரு துண்டு போர்த்தியிருப்பார். கட்டை மிதியடி தான் அணிவார்.. அவர் தெருவில் நடந்துவந்தால் யாரும் சத்தமாகப் பேசமாட்டார்கள்., அவ்வளவு மரியாதை.அவருக்குத் தெரிந்து  யாரும் தெருவில் மீன் வாங்க மாட்டார்கள். வாத்தியார் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர் வாத்தியார் வரும்பொழுது வேண்டுமென்றே மீன் வாங்குவார், வாத்தியார் தன் வீட்டுக்குநேராக நின்றுகொண்டு வெண்பாவில் ஒரு வசைப் பாட்டு பாடிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிடுவார்.

இவர் பிறப்பு, வளர்ப்பு, கல்வி போன்ற செய்திகளை விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் இவர் எழுதிய திருக்களர் வைபவம் என்னும் நூலில் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளனன. அந்நூலிலும் இவர் தன்னைப் பற்றி எழுதவேண்டும் என்று எழுதவில்லை. திருக்களர் தேவஸ்தானத்தில் சிவத்துரோகம் செய்தோரைக் கண்டித்து எழுத, அதற்காகச் சிலர் இவரைத் தூற்றியுள்ளனர். அதற்குப் பதில் கூறும் முகமாகத் தம் குடிப்பெருமை, குலப்பெருமை, குணப்பெருமை முதலியவற்றை எடுத்துக்காட்டி, அவ்வழியில் வந்தவன், வாழ்பவன், பழி. பாவம் ஏதும் அறியாதவன் என எடுத்துக் காட்டியுள்ளார். அக்குறிப்புகளே இப்போது அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்குத் துணை புரிகின்றன.

திருக்களர் பெருமை

தாம் பிறந்து வளர்ந்து, தமிழுக்கும், சைவத்திற்கும் தொண்டாற்றிய திருக்காளர் என்ற ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது கடல் புடை சூழ்ந்த நெடு நிலவுலகிலே, தண்டமிழ் மண்டலத்திலே எண்ணிறந்த கோடி திருத்தலங் களுளொன்றாயும், மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலங் களுளொன்றாயும், தேவாரத்திருப்பதிகமுடைய (275) இருநூற்றெழுபத்தைந்து திருத்தலங்களுள் (7) ஏழு நீங்கலாக (268) இருநூற்றறுபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும், சோழவள நாட்டில் தேவாரத் திருப்பதிக முடையனவாய்  விளங்கும் (191) நூற்றுத் தொண்ணுற்றொரு தலங்களுளொன்றாயும் காவிரி நதிக்குத் தென்புறத் தேவாரமுடையனவாய் விளங்கும் (128) நூற்றிருபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய ஒவ்வொரு திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (105) நூற்றைந்து தலங்களுளொன்றாயும் விளங்கி நின்றது இத்தலம் என்பார்.

கல்வியும் தொழிலும்

கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக  திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.

திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம்.


பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர்.  நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள்  உரைக்கின்றனர். 

சிவத்தொண்டு

திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார்.

1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும்  பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார் தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.

இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர்  ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.  

தமிழ்ப்பணி

இம்மகானின் சைவப் பணியும், தமிழ்ப்பணியும் அளவிடற்கரியதாகும். நவீன வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் நாடு முழுவதும் நடையாய் நடந்து நற்பணியாற்றியுள்ளார். இவரெழுதிய சைவசமயமும் தமிழ்ப்பாடையும் (1921) என்றும் நூலில் தமிழின் பெருமைகளை வியந்து போற்றியுள்ளார். அக்காலத்திலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அவர் எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கனவாகும்.

நம்முடைய தமிழ்த் தேயத்திலே பூர்வீகத் தமிழர் மரபிலே பிறந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் கூடிய வரையில் முயற்சி செய்து ஆங்காங்கு பற்பல தமிழ்ப் பாடசாலைகளை ஏற்படுத்தி (இடைக் காலத்தில் சொரூப பேதமடைந்த ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, னா, னை, னெ, னே  இவ்வெழுத்துக்களுக்குப் பதிலாக ஆதிகாலத்திலிருந்தபடி ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, இவ்வெழுத்துக்களை அமைத்தும், ஆரிய பாடையிலிருந்து சேர்ந்திருக்கும் ஐ, ஸ, ஷ, க்ஷ, ஹ இவ்வெழுத்துக்களில் வகையறா அறுபத்தைந்து எழுத்துக்களை நீக்கியும்) சுத்தத் தமிழில் யாவும் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

இவரெழுதிய  நூல்கள் பல. இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவரெழுதிய நூல்களைப் பற்றி இவரே குறிப்பிட்டுள்ளார்.

திருக்களர்ப்புராணம்,
திருக்களர்ச்சார சங்கீரகம் திருக்களர் விளக்கம் ( 2,3,4, பாகங்கள்)
திருக்களர் வீரசேகரஞான தேசிகர் சரித்திரம்,
களப்பாள் கசேந்திரவரதர் புராணம்,
களப்பாள் சிவசேத்திர விளக்கம்,
திருச்சிற்றேமம் சிவசேத்திர விளக்கம்.
திருவிடும்பாவனம்
சிவசேத்திர விளக்கம். முப்பொருள்  விளக்கம் (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்கம் மகிமை)
திருக்கோட்டூர்ப் புராணம்
நாற்பொருள் விளக்கம்,
பசுமகிமை,
விபூதிமகிமை,
உருத்திராக்கம் மகிமை
திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம்,
பசுமகிமை, விபூதி மகிமை,
உருத்திராக்க மகிமை,
பஞ்சாக்கர மகிமை
திருவிடைவாய் கல்வெட்டினின்று 1917-ம் வருடங்கண்டு பிடித்தது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருவிடைவாய்த் தேவாரம்,
சைவ சமயமும் தமிழ்ப்பாட்டையும்,
சூரியகுலக் கள்ளர் சரித்திரம்.
செந்தமிழாரம்பப் போதனாமுறை

என்னும் புத்தகங்களை அச்சிற் பதிப்பித்து பலருக்கும் இனாமாகக் கொடுத்தார்.

கள்வர் கோமான் என்னும் பத்திரிகையும் நடத்தினார் என்ற செய்திகளை அறிய முடிகிறது.


இவர் எழுதிய “சைவ சமயமும் தமிழ் பாடையும்” என்ற நூலில் பழந்தமிழகத்தில் ஓடுகின்ற நதிகள் குறித்து கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.

பொன்முகலி நதி, நீவாநதி, குசத்தலை நதி, பழைய பாலி நதி, பாலி நதி, வேகவதி நதி, சேய் நதி, சங்கராபரணி நதி, பம்பை நதி, பெண்ணை நதி, கெடிலநதி, கோமுகநதி, மணிமுத்தா நதி, நிவா நதி, கொள்ளிட நதி, மண்ணி நதி, விநாயக நதி, புறவ நதி, கழுமல நதி, காவிரி நதி, வீரசோழி நதி, வாஞ்சி நதி, அரிசொல் நதி, திருமலைராச நதி, முடிகொண்ட நதி, வளப்ப நதி, குடமுருட்டி நதி, கபில நதி, கடுக்கை நதி, பாண்டவாய் நதி, முனிவாய் நதி, வெண்ணி நதி, வள்ளல் நதி, சந்திர நதி, அரிச்சந்திர நதி, வள நதி, பாமணி நதி, கோர நதி, அமராவதி நதி, நொய்யல் நதி, பவானி நதி, காஞ்சிவாய் நதி, சண்முக நதி, பற்குன நதி, சர்ப்ப நதி, வெள்ள நதி, அம்மணி நதி, அதிவீரராம நதி, வைகை நதி, சிலைமா நதி, சித்திர நதி, பச்சை நதி, தாமிரபரணி நதி, தந்த நதி முதலிய எண்ணிலாத நதிகள் நிறையப் பெற்றது நம்முடைய தமிழ்தேயம் என்று குறிப்பிடுகின்றார்.



















வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்