பர்மிய நாட்டில் கோவிந்தசாமி மாதுரார் - திருமதி சாலாட்சி தம்பதிகளின் மகனாக பிறந்தவர் வேணுகோபாலன். பல்வேறு இலக்கிய நயம் சொறிந்த நூல்களை படைத்தவர். சொந்தஊர் ஒரத்தநாடு மாவட்டதின் தென்னமநாடு கிராமம். கடல் கடந்து ஆண்டுகள் பல வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த பர்மிய மண்ணிலும் தமிழ்ப்பணியில் தளராது உழைத்து தாய்த் தமிழகத்தில் குடியிருக்க மீண்ட பின்பும் குன்றாதத் தமிழார்வத்துடன் இயங்கி வருபவர் கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார்.
பர்மாவில் வாழ்ந்த காலங்களில் அங்கு வெளிவந்த பல்வேறு தமிழ் நாளேடுகளில் கவிதை, கட்டுரைகளை எழுதி பர்மாவின் முன்னணிக் கவிஞராகவும் திகழ்ந்தார். தொண்டன் என்னும் தமிழ் நாளேட்டின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார். பர்மா தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளராகவும், பர்மா பொது பாதுகாப்பிலாகாவின் இராணுவ நீதிமன்றப்பணியாளராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து பர்மாவுக்கு வருகை தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ம்.பொ.சிவஞானம்,பேராசிரியர்கள் கி.வா. ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராய சொ,இலங்கை கா.பொ.இரத்தினம் ஆகிய தமிழ் அறிஞர்களை வரவேற்கும் குழுவில் வரவேற்பாளராக இருந்து சிறப்பாக செயல் பட்டுள்ளார். இவரின் கவிதைகளுக்காக அப்போதைய பர்மிய பிரதமர் ஊநூ அவர்களின் பரிசையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
பர்மாவில் இருந்து மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் 1964ஆம் ஆண்டு தொடங்கி தாயகம் திரும்பியபோது அவர்கள் அனைவரும் உடனடியாக அடுத்தடுத்து கப்பலில் பயனிக்க அவசரகால பயணச்சீட்டு வழங்கும் பொறுப்பாளராக இரங்கூனில் உள்ள இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டுள்ளார்.
பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்பட்டு தமிழகம் திரும்பி வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்தபின் மத்திய அரசின் நிறுவனமாகிய தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் தென் மாநிலங்களுக்கான இயக்குநறாகவும் பதவி ஏற்று, தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவராகவும் தமிழ்ப் பணிகளை ஆற்றியுள்ளார். தேன்முகில், வேலும் தமிலும், மனிதவேலி என்ற நூல்களையும், மண்ணின் மைந்தன், நினைத்ததே நடக்கும் நாடகங்களையும் அரங்கேற்றியுள்ளார்.
சோழமண்டல நாட்டுப்புறப் பாடல்கள், நேதாஜி கீதம் ஆகிய இரண்டு ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார். சோழமண்டலப் பாடல்கள் தமிழ்க் கொஞ்சும் தஞ்சை தரணியிலும், தமிழ்நாட்டிலும், கடல்கடந்து வாழும் கள்ளர்குல மக்களுக்காக சர்வதேச கள்ளர் பேரவை மூலமும் செவிதனில் நளினமிடுகின்றன. சோழமண்டல அமைப்பு, மண்டலத்தின் தலைநகரம், தஞ்சையின் எழில், தஞ்சை தரணியில் ஓடும் ஆறுகள்,சிறந்து விளங்கும் கோயில்கள், கரைபுரண்டு ஓடும் காவிரி,ஏருழுது, பரம்படித்து,நடவுநட்டு,நீர்பாச்சி, நெல்வளர்த்துப்பொங்கலிடும் பொலிவு அனைத்தும் இவரின் பாடல்களில் ஓங்கி ஒலிக்கின்றன.
கோ. வேணுகோபாலன் மாதுரார் அவர்களின் படைப்புகள்
1. சோழ மண்டலப் பாடல்கள்
2. தேன் முகில்
3. வேலும் தமிழும்
4. மண்ணின் மைந்தன் ( நாடகம் )
5. நினைத்ததே நடக்கும் ( நாடகம் )
6. நேதாஜி கீதம் ( ஒலிநாடா )