வியாழன், 28 மார்ச், 2019

அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர்




இந்திய தேசிய விடுதலைக்காக தனது விரல்களை வெட்டிக்கொண்ட வீரர் அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர். 

ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கட்டை விரலை வெட்டிக்கொள், ரேகை வைக்காதே என்று தேவர் ஐயா கூறினார். இந்திய தேசிய விடுதலைக்காக இந்திய சுதந்திர போராட்டங்களில், தன்னுடைய போராட்டங்களில் தன் கை விரலை வெட்டிக்கொண்டவர், தியாகி பெரியதம்பி மழவராயர். அத்திவெட்டி காந்தி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பெற்றவர்.

மறைக்கப்பட்ட, போற்றப்பட வேண்டிய ஒரு மாவீரரின் வரலாறு :-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அத்திவெட்டி பிச்சினிக்காட்டை சேர்ந்த விவசாயி ஆ.பெரியதம்பி மழவராயர் என்பவர் கடுமையான பஞ்சக்காலத்தில் தன் குடும்பத்தை பாதுகாப்பதற்காக கப்பலில் சிங்கப்பூர் சென்று, 1936 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற ஆ.பெரியதம்பி மழவராயர் தண்ணீர் இலாக்காவில் வேலையில் சேர்ந்துள்ளார், அப்போது சிங்கப்பூர், மலேயா என்ற ஒன்றுப்பட்ட நாடாகவே இருந்துள்ளது. 

ஐப்பானிய ஏகாதிபத்தியத்தின் காலணி நாடாக இருந்ததால் எந்தவிதமான ஜனநாயக உரிமையும் கிடையாது, இந்தியாவில் தாதாகள் என்பது போல சிங்கப்பூரில் கேங்கர்களின் அராஜகம் தலைவிரித்து ஆடியகாலம், எதாவது ஒரு கேங்கரின் வேண்டிய ஆளாக இருந்தால் தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

பெரியதம்பி மழவராயர் வேலையில் சேர்ந்த வாட்டர் டிபார்ட் மென்ட்டில் அதிகாரியாக இருந்த லோலன் என்ற வெள்ளையன் பெரும் குடிகாரனாகவும், தொழிலாளியை கொடுமைப்படுத்துபவனாகவும் இருந்துள்ளான். எந்த நேரமும் போதையில் இருப்பதால் தொழிலாளியிடம் நாளை ஒரு இடத்திற்கு வரசொல்லிவிட்டு, அவன் வரமாட்டான், அல்லது வேறு ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்ப்பான். இவை தொழிலாளியாகிய இந்தியர்களை சங்கடப்படுத்தியுள்ளது. 

ஒரு நாள் ஆ. பெரியதம்பி மழவராயரிடம் நாளை காலை 7 மணிக்கு தாம்சன் ரோடு 7-வது மைலில் வந்து நில்லு நான் வந்து வேலை சொல்கிறேன் என்று சொல்லியுள்ளான். அவனது ஆணைபடி பெரியதம்பி மழவராயரும், அவருடைய ஆட்களும் குறிப்பிட்டபடி அங்கு சென்று இருந்துள்ளனர், அதிகாரி காலதாமதமாக 11 மணிக்கு வந்து இதுவரை என்ன செய்தாய் என்று கடுகடுத்த முகத்துடன் டேய் ஃபூல் உனக்கு இங்கு வேலை இல்லை போ, இந்தியாவிற்கு உங்கள் அப்பன் காந்தி வேலை தருவான் என்று பேசியுள்ளான். 

அவனுடைய பேச்சு அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது. மேற்படி பெரியதம்பி மழவராயர், காந்தி மீது மிகவும் பற்றுள்ள காந்தியவாதி, காங்கிரசில் சேர்ந்து இந்தியாவில் பல போராட்டங்களிலும் பங்கேற்றவர், எனவே காந்தியையும் இழிவுப்படுத்தி, பேசிவிட்டானே என்று இனி இந்த முட்டாள் கவர்மென்டில் வேலை பார்ப்பதில்லை என்று உறுதிகொண்டு கம்பெனி கொடுத்த உடைகளை எல்லாம் கலைந்து வெள்ளைக்கார அதிகாரியிடம் எரிந்துவிட்டு அவர் தங்கியிருந்த ரேஸ்கோர்ஸ் ரோடு 9-நம்பர் இல்லத்தில் மூன்றாம் மாடியிலிருந்து வந்தே மாதரம், வந்தே மாதரம் என உரத்த குரலில் சொல்லி கீழே குதித்துள்ளார்.

காலில், கையில் சில சிராய்ப்பு, சிறிது வலி இருந்துள்ளது வேறு பெரியகாயமோ, உயிருக்கு ஆபத்தோ இல்லாது தப்பித்துள்ளார். அவருடைய உறவினர் நண்பர்கள் பெரியதம்பிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பேசிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் நடந்துள்ளது.

உடல்நிலை சரியானவுடன், சுதந்திரம் மற்றும், காந்தியின் மீது கொண்ட அன்பால், வெள்ளையர் மீது ஏற்பட்ட கோபத்தில் மாடியில் இருந்து குதித்து, தன் எதிர்ப்பை பதிவு செய்த பெரியதம்பி மழவராயரை, அவரின் சகோதரர் உட்பட அனைவரும் சேர்ந்து இந்தியாவில் இருந்த உறவினர்களிடம் தம்பிக்கு பைத்தியம் பிடித்துள்ளது ஊருக்கு அனுப்பிவைக்கிறேன் என்று கூறிவிட்டு, எனக்கு எந்த பைத்தியமும் இல்லையென்று சொன்னதையும் நம்பாமல், கேட்காமல் எல்லோறும் சேர்ந்து இந்தியாவில் சொந்த ஊரான அத்திவெட்டிக்கு அனுப்பிவைத்துவிட்டனர்.

மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிர் பிழைத்த பெரியதம்பி மழவராயர் அன்று முதல் மாமிசம் உண்பதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டு அதன்படியே நடந்துள்ளார். 

சொந்த ஊறுக்கு வந்த பெரியதம்பி மழவராயர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை அமைத்து செயல்பட துவங்கியுள்ளார். 

1939-ம் ஆண்டு வாக்கில் காந்திஜி கடவுளின் பெயரை சொல்லி உயிர் பலி (ஆடு, மாடு, கோழி) செய்ய கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இதையடுத்து அத்திவெட்டி வடக்கு தெரு கோவிலில் ஆடு வெட்டி சிறப்பு பூசை நடக்கிறது என்று தெரிந்தவுடன் அங்கே வந்து சுவாமியின் பெயரை சொல்லி ஆடு, கோழிகளை பலியிடாதே என்றும், ஜமீன் ஒழியபோகிறது, வெள்ளையன் வெளியேறப்போகிறான், நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க போகிறது என்று போர்டு எழுதிவைத்துவிட்டு, இதை பற்றி மக்களிடம் உரத்த குரலில் பேசிவிட்டு தனது கட்டை விரலை வெட்டி எதிரே வைத்துவிட்டு உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

இவரின் நடவடிக்கைகளை பார்த்த பொதுமக்கள் ஆடு, கோழி பலியிடுவதை நிறுத்திவிட்டு பெரியதம்பியை சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை முடிக்கவைத்தனர்.

1941-ம் ஆண்டு சுதந்திரம் கேட்டு கால் நடையாக டெல்லி சென்ற சத்தியாக்கிரகிகளுக்கு தஞ்சை மாவட்டத்தை கடக்கும் வரை தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுக்கும் பொறுப்பினை ஏற்று திறன்பட செயலாற்றியுள்ளார்.

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் போராட்டத்தின் போது 144 தடை உத்தரவை மீறி, சுதந்திரம் வழங்கு, என கோசமிட்டுக்கொண்டு நூற்றுகணக்கானவர்களுடன் பட்டுக்கோட்டை நகரத்திற்குள் ஊர்வலமாக சென்றதற்காக காவல்துறை தடியடி நடத்தி 50 பேர்களை மட்டும் கைது செய்து144 தடையை மீறியதற்காக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெரியதம்பிக்கு மழவராயர் மட்டும் 8 மாதம் கடுங்காவல் தண்டனை மற்றவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைத்தனர். பெரியதம்பி மழவராயர் அலிபுரம் ( ஆந்திரா மாநிலம்) சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அதே சிறையில், காந்திஜியும் இருந்துள்ளார், மகாத்மா காந்தி சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த போது பெரியதம்பியும் 21 நாட்களைக் கடந்து சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.


தண்டனை காலம் முடிந்து வெளிவந்தது மீண்டும் 1943ல் பட்டுக்கோட்டை முன்சீப் கோர்ட்டுக்கு சென்று முன்சீப்பைப் பார்த்து காந்திஜியை காரணமின்றி கைது செய்து வைத்திருக்கும் ஏகாதிபத்திய வெள்ளையர் அரசாங்கத்தில் இந்தியனாகிய நீ வேலை செய்யாதே, வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறு என கோசமிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியதால் கைது செய்யப்பட்டு 43 நாட்கள் ரிமாண்டில் வைத்திருந்தபோது அந்த 43 நாட்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் 1 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு அலிபுரம் சிறையில் அடைத்துள்ளனர். அலிபுரம் சிறைக்குள் கைதிகளை நடத்தும் கொடுமையை கண்டித்து போராட ஏற்பாடு செய்தபோது இதை அறிந்த சிறைக்காவலர்கள் தனிச்சிறையில் அடைத்து உணவு தண்ணீர் சரியாக கொடுக்காமல் கொடுமைபடுத்தியதை தாங்கிக்கொண்டு சிறை வாழ்க்கை முடிந்து வெளிவந்துள்ளார்.

1946ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்ற போது. எதிர்ப்பாளர்கள் சிலர் கூட்டத்தில் கல்வீசி கலாட்டா செய்துள்ளார்கள். இதனால் இது இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாறி பல விரும்பதகாத நடவடிக்கைகள் ஏற்பட்டபோது இதை எதிர்த்து இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி கைது செய்யப்பட்ட இருதரப்பினைரையும் வழக்கு இல்லாது விடுதலை செய்யக்கோரி, பட்டுக்கோட்டை சின்னக்கடைத் தெருவில் ஆள்காட்டி விரலை வெட்டி வைத்துவிட்டு சாகும்வரை உண்ணாவிரதம் என்று எழுதி ஒட்டிவிட்டு உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளார். 

இதற்கு ஆதரவாக திரளான மக்கள் இவருடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். நான்கு தினங்களுக்கு பின் பட்டுக்கோட்டை ஏ. நாடிமுத்து பிள்ளை சிறையிலிருந்த அ.கோபால்சாமி, சலீம் உள்ளிட்ட அனைவரையும் சிறையிலிருந்து விடுதலை பெற்று அவர் முன் கொண்டு வந்து நிறுத்தி பெரிய தம்பியிடம் உண்ணா விரத்தை கைவிட வேண்டியுள்ளார் கோரிக்கை நிறைவேறியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டுள்ளார்.

மூன்று தினங்கள் கழித்து இந்து –முஸ்லீம் இருதரப்பையும் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டம் பட்டுக்கோட்டை சந்திராவிலாஸ் பங்களாத் தோட்டத்தில் ஏ. நாடிமுத்துபிள்ளை, ஆ. பெரியதம்பி மழவராயர் ஆகிய இருவரின் தலைமையில் இருதரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒற்றுமைபடுத்தி இதற்கு மேல் நாங்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஒற்றுமையாக இருப்போம் என உறுதியளித்த பின் சேர்ந்து உணவருந்த வைத்து ஒற்றுமைப்படுத்தியுள்ளார்கள்.

இதே காலத்தில் கள்ளுக்கடை கூடாது மது அரக்கனை ஒழித்துக்கட்டு என்று பட்டுக்கோட்டை தாலுக்காவில் 6 இடங்களில் நடந்த கள்ளுக்கடை மறியலில் மேற்படி பெரியதம்பி மழவராயர் மதுக்கூரில் கலந்துக்கொண்டுள்ளார். இவறுடன் கோவிந்தசாமி செட்டியார் அவர்களும் கலந்துக் கொண்டுள்ளார் இப்போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர்களை கைது செய்து கால்நடையாக பட்டுக்கோட்டை அழைத்து சென்று ரிமாண்டு செய்துள்ளனர். 

கைதுசெய்தவர்களை விடுதலை செய்யசொல்லி மோதிர விரலை வெட்டி வைத்துவிட்டு உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இதற்கு ஆதரவான இயக்கத்திற்கு வெளியில் ஏற்பாடு நடைபெறுவதை பார்த்த அதிகாரிகள் மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்து மறுதினமே அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.

இதுபோன்று எண்ணற்ற போராட்டத்தை நடத்திய ஆ. பெரியதம்பி மழவராயர் அத்திவெட்டியிலும் சுற்றுவட்டாரத்திலும் இளைஞர்கள் மத்தியில் சுதந்திர வேட்க்கையையும் தேசப்பற்றையும் உருவாக்கியுள்ளார். இப்பகுதியில் இருந்த ஜமீன்தார்களை எதிர்த்து ஜமீன் ஒழிப்பை வலியுறுத்தி நடைப்பெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தி, சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

1947 சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15க்கு சில தினங்களுக்கு முன்பு பெரியதம்பி மற்றும் தம்பிக்கோட்டை மரவக்காடு சீனிவாசன் உட்பட 16 பேர்களை போலீஸ் கைது செய்து பட்டுக்கோட்டையில் ரிமாண்டில் அடைத்துவைத்திருந்து ஆகஸ்ட் 21ல் சிறையிலிருந்து வெளியே விட்டுள்ளனர். 

1948 ஜனவரி 30ல் மதவெறி கோட்ச்சேயால் காந்திஜி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து வெள்ளை உடை அணிவதில்லை என்று சபதம் ஏற்று அதையே இறுதிகாலம் வரை கடைபிடித்து வந்துள்ளார். காந்தியின் மரணம் பெரியதம்பி மழவராயரை மிகவும் பாதித்துள்ளது. அவர் தெருவிலே வரும்போது யாரைப்பார்த்தாலும் வந்தே மாதரம் என்பார் பதிலுக்கு அவர்களும் வந்தே மாதரம் என்பார்கள். அனைவரிடமும் பற்றுதலாக இருப்பார்.ஆங்கிலேயரை விரட்டிய பிறகு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று நடத்திய முறைகளில் திருப்தி இல்லாது இருந்துள்ளார்.

இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினையும், அதையொட்டி நடந்த கலவரத்தில் மரணமடைந்த பல்லாயிரக்கணக்கானவர்களை நினைத்து இதற்காகவா சுதந்திரம் பெற்றோம் என கண்ணீர் வடித்து இயக்கத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருந்துள்ளார். 

1950-ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற நிர்மான ஊழியர் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு பயிற்சி அளிப்பதற்காக வந்திருந்த காந்திஜியின் பேரப்பிள்ளைகளான ஸ்ரீயுதகனு காந்தி, ஸ்ரீமதி ஆபா காந்தி, மற்றும் திரேந்திரமஜீந்தார், கிருஷ்ணதாஸ் காந்தி, சுவேனேஜி இவர்கள் பெரியதம்பியின் போர் குணத்தையும், காந்திஜி மீதான பற்றுதலையும் அறிந்து இதற்கு மேல் எந்த கோரிக்கைகாகவும் அங்ககீனம் செய்துகொள்ளகூடாது என்று வலியுறுத்தி பெரியதம்பியை பாராட்டி கௌரவித்து காந்திஜி மீது சத்தியம் பெற்றுள்ளனர், பெரியதம்பியை பட்டுக்கோட்டை பகுதி மக்கள் தியாகி காந்தி என்று தான் அழைப்பார்கள்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கிய 5 ஏக்கர் நிலம் அரசாங்கம் வழங்கியதை வறுமையின் காரணமாக பெற்றுக்கொண்டார். நிலம் கொடுத்த ஒலயகுன்னத்திற்கே சென்று சிறிது காலத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வைரம்பாள், தனபாக்கியம் எனற இரு மனைவியும், ராமலிங்கம், மாணிக்கம் என்ற மகன்களும், காந்திமதி என்ற மகளும் இருந்தனர்.

இவருடைய கடும் உழைப்பால் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் சுதந்திரம் போராட்ட வீரர்கள் இருந்த ஊர் என்ற பெருமை அத்திவெட்டிக்கு கிடைத்தது. நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று கருதும் ஊழல், மோசடி ஆட்சியாளர்களை பார்க்கும் போது எழுதப்படிக்க தெரியாத பெரியதம்பி மதிக்கதக்க மாமனிதர் ஆவார்.

இந்தியாவின் தேசபற்று, தேச விடுதலை பெறவேண்டுமென்ற உயர்ந்த நோக்கம் எழுதப்படிக்க தெரியாத அந்த ஏழை விவசாயிடம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை அவர் குறித்த வாழ்க்கை குறிப்பில் பார்க்க முடிகிறது. 

குறிப்பு:
காந்தி எனது தெய்வம், என்னும் தியாகி பெரியதம்பியின் வாழ்க்கை வரலாற்று பிரசுரத்திலிருந்து

நன்றி : திரு. ஆர்.சி. பழனிவேல், மாநில மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-தஞ்சாவூர்















அத்திவெட்டி கள்ளர் மரபினரில் பல நூறு பேர் INA இருந்தவர்கள். அங்குள்ள பழமையான  சோழர் கோயிலில் மற்றும் அங்குள்ள கோயில்களில் கள்ளர்களுக்கு முதல் மரியாதை தரப்படுகிறது. சிங்கப்பூர்  Mr Singapore - 1962 ஆண்டு SR சந்திரன் மழவராயர்.

இங்கு கள்ளர் மரபினரின் வாணாதிராயர், மழவராயர், சேண்டபிரியர் , விஸ்வராயர் பட்டங்களை உடையவர்கள் உள்ளனர்.






வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்