ஆங்கிலத்தில் எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston, 1855-1935) எழுதிய நூலில் கள்ளர்கள் பற்றிய குறிப்பும் உள்ளது. ஆனால் இவர் முழுவதும் களஆய்வு செய்து இதனை எழுதவில்லை. பல தகவல் பிராமணர்கள் கூறியதையே, இவர் பதிவு செய்துள்ளார்.
1901 ஆம் ஆண்டில் இப் பணிக்கான ஆய்வு வேலைகளைத் தொடங்கிய தர்ஸ்டன், 1907 ஆம் ஆண்டில் தென்னிந்திய இனவரைவியல் குறிப்புக்கள் (Ethnographic Notes on Southern India) என்னும் தலைப்பிலான நூலொன்றை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1909 ஆம் ஆண்டில், தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும் (Castes andTribes of South India) என்ற நூல் 7 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. கடைசியாகக் குறிப்பிட்ட நூல் வரிசையை தர்ஸ்டன், ரங்காச்சாரி என்பவருடன் இணைந்து உருவாக்கினார். இந்நூலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 2000 சாதிகள் மற்றும் பழங்குடியினரது இனவரைவியல் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
எட்கர் தர்ஸ்டன் எழுதிய நூலை விட, 1923 இல் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்களால் எழுதப்பட்ட கள்ளர் சரித்திரம் என்ற நூலை நாம் படித்தால் எட்கர் தர்ஸ்டன் எழுதிய பலதகவல் கற்பனையே என்று நாம் அறிய முடியும்.
ஆங்கிலத்தில் எட்கர் தர்ஸ்டன் எழுதி, முனைவர் க.இரத்னம் அவர்கள் தமிழாக்கம் செய்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட தென்னிந்தியக் குலங்களம் குடிகளும் (தொகுதி மூன்று) என்ற நூலில் (பக்கம் 71 முதல் 119முடிய உள்ள) கள்ளர் கள்ளன் என்ற பகுதி.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளர்களைப் பற்றிச் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் (1817-இல்) திரு.டி.டர்ன்புல் எழுதியுள்ள எழுதியுள்ள சிறப்பான விவரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுருக்க வரலாறே பின்வருவது :-
“கள்ளர்கள் பொதுவாக ஈட்டி எறிவதிலும், வளரி எனப்படும வளை தடியினை எறிவதிலும் திறமை மிக்க அஞ்சா நெஞ்சர்கள். இந்தப் போர்க் கருவி இச் சாதியாரிடையே பெருவழக்கினதான ஒன்றாகும். சுமார் 30 அங்குலம் உள்ள வளைவுடையதான ஒரு கருவியாகும் இது.
கள்ளர் என்ற சொல் சாதி, இனம், நாடு முதலிய வேறு பாடின்றித் திருடர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
கள்ளர் சாதியினர் இப் பெயருக்கு உரியவர்களாகத் திருடர் என்ற பொருளுக்கு உரியவர் போலவும், மதுரை அரசன் ஒருவனுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்குப் பெறாத ஒரு நாட்டுப் பகுதியை சேர்ந்த மக்களாகவும் வளர்ந்துள்ளதான பரிணாம வணர்ச்சி ஆராயப்பட வேண்டியதாகும்.
இவர்கள் தென் மாவட்டங்களில் நாட்டுப் புறப் பகுதிகள் பலவற்றில் பரம்பரையாகத் தங்கி வந்ததோடு அவற்றின் பல பகுதிகளைத் தங்களுக்கு உரிமை உடையதாகவும் ஆக்கி கொண்டனர். இவ்வாறு தங்களுடையதாக ஆக்கிக் கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் இவர்கள் தங்களுக்கெனத் தனியே ஒரு தலைவனையும் பெற்றிருந்தனர். அவனுடைய ஆணையின்படி அனைவரும் பணிந்து நடக்கும் கடப்பாடு உடையவர்கள். இவர்கள் அனைவரும் இன்றும் தங்கள் பெயருக்கு ஏற்பத் தங்கள் நாட்டுப் பகுதி வழியே பொருள்களைக் கொண்டு செல்லும் வணிகர்களுடைய பொருள்களை முழுதும் பறித்துக் கொள்வதில்லையெனினும் அவர்களிடமிருந்து ஏதேனும் பெற்றுக் கொண்டே அவர்களை அப்பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.
பயணிகள், யாத்திரை மேற்கொள்பவர்கள், பிராமணர்கள் ஆகிய அனைவருமே தாக்கப்பட்டு வழிப்பறிக்கு உள்ளாகின்றனர்.
பிராமணர்கள் உட்பட அனைத்துச் சாதியினரையும் தாக்கிக் கொல்லவும் இவர்கள் தயங்குவதில்லை.
வழிப்பறியின் போது ஒரு பிராமணன் கொல்லப்பட நேர்ந்தால் அத்தகவல் அப்பகுதிக்குரிய தலைவனுக்குத் தெரிவிக்கப்படுமாயின் அக் குற்றம் இழைத்தவனுக்குக் கொடிய ஒறுப்புத் தண்டனை விதிக்கப்பபடுவதோடு தண்டத் தொகையும் விதிக்கப்படுகிறது.
மேலும் அத்தகைய குற்றவாளிகள் சமூகத்திலிருந்து ஆறு திங்கள் வரை விலக்கி வைக்கவும படுகின்றனர். மேலூரைச் சேர்ந்த வேளாளரும், சேறுகுடி நாயுடுகளும் கீழ்நாட்டவர் எனப் பெயரிடப்பட்டதோடு அங்கு வாழ்ந்த கள்ளர்களும் அம்பலக்காரர் எனப் பட்டப் பெயரிடப்பட்டனர்.
“கள்ளர்பெண்கள் சிறிது பழி ஏற்படும்படி நடத்தப்பட்டதாக ஐயுற்ற அளவிலேயே பின் விளைவுகளைப் பற்றிச் சற்றும் எண்ணிப் பாராது கொதித்தெழுந்து தங்களுக்குப் பழி உண்டாக்கியவர்களைப் பழிக்குப்பழி வாங்குவர்.
கள்ளர் பெண்கள் தங்களிடையே உட்பூசலோ மனவேறுபாடோ கொள்வார்களாயின் அருவருப்பானதொரு பழக்கத்தை மேற்கொள்கின்றனர். பழிப்புக்கு உள்ளானவள் தன்னைப் பழித்துச் சாடியவள் வீட்டு வாசலில் தன் குழந்தையைக் கொண்டு வந்து கொன்று போட்டுத் தன் பழியினைத் தீர்த்துக் கொள்கின்றாள். அவளுடைய இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை காட்டுமிராண்டித் தனமானதாயினும் அதனைச் செய்து முடித்தவுடன் அவள் தன் பொருள்களை எடுத்துக் கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்படுவாள்.
அவளுடைய இந்த நடவடிக்கையினை அண்டை அயலார் தடுத்து நிறுத்த முற்படும்போது ஒரே களேபரமும் ஆர்ப்பாட்டமும் நிகழும். இது பற்றிய குற்றச் சாட்டுப் பின்னர் தலைமை அம்பலக்காரரிடம் சென்று கூறப்படும். அவர் அதனை ஊர்ப் பெரியவர்களிடம் எடுத்துக் கூறி அந்தப் பூசலில் தலையிட்டு அதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு கூறுவார்.
இந்த வழக்கினை ஊர்ப் பெரியவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கையில் குற்றமிழைத்தவளாகக் கருதப்படும் பெண்ணின் கணவன் தன் மனைவியே சண்டையை மூட்டிவிட்டுத் தவறிழைத்தவள் எனக் கருதப் போதுமான சான்றுகள் வெளிப்படக் காண்பானாகில், அவன் சபையோருக்குத் தெரியாதபடி தன் வீட்டுக்குச் சென்று, தன் குழந்தைகளில் ஒன்றினை அழைத்துக் கொண்டு, முன்பு தன் வீட்டுவாசலில் வந்து குழந்தையைப் பலியிட்டவள் முன்பு தன் வீட்டுவாசலில் வந்து குழந்தையைப் பலியிட்டவள் இல்லத்தை அடைந்து, அவள் வீட்டு வாசலில் நாலுபேர் பார்க்கத் தன் குழந்தையைக் கொன்றுபோடுவான். இவ்வாறு செயல்படுவதால் அவன் மீது சபையார் சுமத்த உள்ள தொல்லைகளிலிருந்தும் தண்டச் செலவிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டதாகக் கருதுகிறான். இந்த நிகழ்ச்சி உடனடியாக ஊர் அவையினருக்கு அறிவிக்கப்படும். அவர்கள் இழைக்கப்பட்ட குற்றத்திற்குத் தக்க வகையில் பழி வாங்கும் நிகழ்ச்சி நடந்து விட்டதென அறிவித்துவிடுவர். இவ்வாறு தானே முன் வந்து குற்றத்திற்கு ஆட்பட்டவன் பழி தீர்த்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையாயின் ஊர்ச்சபைக் கூட்டம் பதினைந்து நாள்களுக்குத் தள்ளி வைக்கப்படும்.
அந்தக் காலக்கொடு முடிவதற்குள்ளாகக் குற்றம் சுமத்தப்பட்டவனின் குழந்தைகளில் ஒன்று கொல்லப்பட வேண்டும். அதோடு அந்தக் காலக்கெடு வரையான நாள்களுக்கு அவையோருக்கான உணவு முதலியவற்றின் செலவுத் தொகையும் அவன் தலைமீது விழும்.
“இந்த நாடுகளைச் சேர்ந்த ஆண் பெண்களிடையே குறிப்படத்தக்க ஒரு பழக்கம் நிலவுகின்றது. இவர்கள் தங்கள் காதுகளைத் துணையிட்டுக் காதுமடல்கள் தோள்வரை நீண்டு தொங்கும்படியாக ஈயத்தாலான கனமான வளையங்களைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொள்கின்றனர். தொங்கும் காது மடல்கள் அழகு ஒன்றை மட்டுமே கருதி அவ்வாறு பெரிய துளை உடையனவாக ஆக்கப்படுவதில்லை. அதற்கு வேறு காரணமும் உள்ளது என்பதனை இவர்களுடைய நடைமுறைகள் புலப்படுத்துகின்றன.
இந்த நாடுகளின் வழியாக வணிகர்களோ, பயணிகளோ செல்லும்போது அவர்கள் அப்பகுதிகளில் எத்தகைய தொல்லைக்கும் ஆட்படாமல் கடந்து செல்ல வேண்டிய அந்த நாட்டுப் பகுதியினைச் சேர்ந்த சிலரின் நட்பினைப் பெறக் குறிப்பிட்ட ஒரு தொகையினை அவர்களுக்குச் செலுத்துவர். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் அவர்களோடு ஒரு சிறுமியை உடன் அனுப்புவர். அவ்வாறு அவர்களோடு அனுப்பப்படும் வழிகாட்டியான சிறுமி தன் காதுத் துளையில் ஒரு விரலை விட்டுக் கொண்டவளாக வழி நடத்திச் செல்வாள். இவ்வாறு ஒரு சிறுமியின் பாதுகாவலோடு வரும் பயணிகளைத் தாக்கி வழிப்பறி செய்ய எந்தக் கள்ளனும் துணியான்.
சில சமயங்களில் இத்தகைய பாதுகாவலினைப் பெற்றுச் செல்பவர்களும் தாக்குதலுக்கு உள்ளாவது உண்டு. அவ்வாறு தாக்கப்பட்டால் அச் சிறுமி உடனே ஒரு காதின் மடலை அறுத்துக் கொண்டு திரும்பிவந்து அவ்வாறு தாக்கப்பட்ட செய்தியினை அறிவிப்பாள். பின்னர் அச் செய்தி நாட்டுத் தலைவனுக்கும் பெரியவர்களுக்கும் அறிவிக்கப்படும். நாட்டுத் தலைவன் உடனே ஊர்ச் சபையினைக் (இச்சபைகள் பெரும்பாலும் ஊர்ப் பொதுவிடத்திலுள்ள பெரிய புளிய மரத்தின் அடியில் கூடும்) கூட்டுவான். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களாயின் தொடாந்து அதன் காரணமான எதிர் விளைவுகள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனையாக இரு காது மடல்களையும அறுக்கும்படி முடிவு செய்யும். முடிந்தால் குற்றவாளிகளுக்குத் தண்டத் தொகை விதிக்கப்படுவதோ பணம் பெற்றுக் கொண்டு அவர்களை மன்னிப்பதோ செய்யப்படும்.
இந்த ஏற்பாட்டால் பயணிகள் பொதுவாக இப்பகுதிகளில் பாதுகாவலோடு பயணம் மேற்கொள்ள முடிகின்றது. (இன்றுங்கூடத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொள்ளும் போது நீண்டு தொங்கும் காது மடல்களே தாக்குதலுக்கு உள்ளாகின்றன. காது மடல் அறுக்கப்பட்டதான வழக்குகளே காவல்துறைப் பதிவுகளில் மிகுதியிம் இடம் பெற்றுள்ளன(மதுரை மாவட்ட விபரக்குறிப்பு Gazetteer of the Madurai District).
“மேலூர் நாடு முதலில் வேளாளர்களுக்குரியதாக அவர்கள் தங்கி வாழ்ந்து பயிர்த்தொழில் நடத்தி வந்த பகுதியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் காஞ்சிவரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ள நாட்டைச் சேர்ந்த கள்ளர் சிலர் அப்பகுதியிலிருந்து கைவேல், குறுந்தடி, குண்டாந்தடி, வளரி ஆகியன ஏந்தி வேட்டை நாய்கள் தொடர வேட்டைக்குப் புறப்பட்டனர். அவர்கள் தங்கள் வேட்டையினிடையே ஒரு மயிலானது தங்கள் வேட்டைநாய் ஒன்றினை எதிர்த்து நிற்பதைக் கண்டனர். இதனைக் கண்டு மிகுந்த வியப்புக்கு உள்ளான அவர்கள் அந்த நாட்டில் வாழ்பவர்களும், அங்கு உறையும் உயிரினங்களும் மிக்க வீரமுள்ளனவாக இருத்தலால்அது நற்பேறு சேர்க்கும் நாடாதல் வேண்டும் என எண்ணினர்.
காஞ்சிவரம் பகுதியில் உள்ள தங்கள் நாட்டைவிட இந்த நாட்டில் வந்து குடியேறிப் பயிர்த்தொழில் செய்ய அவர்கள் விரும்பினர். அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் தங்களை வேளாளர் நற்கருத்தில் இடம் பெறும்படியாக ஆக்கிக் கொண்டனர். வேளாளர்களின் பணியாளர்களாகச் சேர்ந்த இவர்களை வேளாளர் அங்குத் தங்கி வாழ அனுமதித்தனர். காலப்போக்கில் அவ்வாறு தங்கியவர்கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தங்களோடு அழைத்து வைத்துக்கொண்டனர்.
புறத்தே வேளாளருக்கு நன்றியுள்ளவர்கள போலவும் கீழ்ப்பணிந்து நடப்பவர்கள் போலவும நடித்து வந்த இவர்கள் அதற்குரிய பயனைப் பெறும் காலம் கிட்டியது. சிறிது காலம் சென்றபின் வேளாளர்கள் கள்ளர்கள் மேல் தங்கள் விருப்பம் போல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிக் கள்ளர்கள் அவர்கள் பணியின்போது செய்யும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் உரிய தண்டனைகளை விதிக்கத் தொடங்கினர். இதனால் கள்ளர்கள் ஆத்திரம் கொண்டனர். படிப்படியாக அவர்கள் தங்கள் பண்ணையார்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி அவர்களைப் பலவந்தத்திற்கு உட்படுத்திப் பின்வரும் விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றி நடக்கச் செய்யும்படியாக உடன்படிக்கை செய்து கொண்டனர்.
அவ் விதிகளாவன :-
1. ஒரு கள்ளனுடைய பல் உடையும் படியாக அவனுடைய ஆண்டை அவனை அடிப்பானாயின் அக் குற்றத்திற்கு ஈடாக அவர் பத்துச் சல்லிச் சக்கரம் செலுத்த வேண்டும்.
2. கள்ளனின் ஒரு காது மடல் அறுபட நேருமானால் வோளளன் அவனுக்கு ஆறு சக்கரம் தண்டமாகத் தர வேண்டும்.
3. கள்ளனின் மண்டை உடைபடுமானால் வோளளன் அதற்குப் பதிலாகத் தன் மண்டையை உடைத்துக் கொள்ளாவிடில் முப்பது சக்கரம் தண்டமாகக் கள்ளனுக்குச் செலுத்த வேண்டும்.
4. ஒரு கள்ளனின் காலோ கையோ முறிந்து போகுமாயின் அவனை அரை மனிதனாகக் கருத வேண்டும். அத்தகைய சூழநிலையில் குற்றம் இழைத்தவன் ஒரு கலம் விதைக்கான நஞ்சை நிலத்தையோ, இரண்டு கூர்கும்(Koorkums) புஞ்சை நிலதையோ கள்ளனுக்குத் தனி உரிமை உடையதாக ஆக்கி வைப்பதோடு மேலும் அந்தக் கள்ளனுகு ஒரு துப்பட்டியும் அவன் மனைவிக்குச் சேலையும் தருதல் வேண்டும். அத்தோடு இருபது கலம் நெல்லோ வேறு தானியங்களோ கொடுத்துக் கைச் செலவுக்கு இருபது சக்கரங்களும் தரக் கடமைப்பட்டவனாவான்.
5. ஒரு கள்ளன் கொலைக்கு ஆளானாயின் குற்றம் இழைத்தவன் நூறு சக்கரம் தண்டத் தொகை செலுத்துதல் வேண்டும். அல்லது கொலைக்கு ஆளானவன் பக்கத்தைச் சேர்ந்தவர்களால் அவனது உயிர் போக்கப்பட உடன்படல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுக்குக் குற்றம் இழைத்தவன் உடன்படும்வரை குற்றம் இழைக்கப்பட்டவன் கூட்டாளிகள் குற்றம் புரிந்தவன் உடமைகளைச் சூறையாடுவதோடு தங்களுடையதாகக் கொள்ளவும் உரிமை உடையவர்களாவர்.
தங்கள் ஆண்டைகளின் மீது இத்தகைய உடன்பாட்டுக்கு ஒவ்வாதனவாகிய விதிகளைச் சுமத்தி அடாத வகையில் மிகுதியான பொருளைத் தரும்படி வற்புறுத்தி வேளார்களைக் கள்ளருக்கு அஞ்சும்படியாகவும், கள்ளரின் தயவை நாடி நிற்பவர்களாகவும், கள்ளர்கள் விருப்பம்போல் ஆடுபவர்களாகவும் மடக்கிப் போட்டு அவர்களை ஏழ்மையில் வீழ்த்தி, அவர்கள் தங்கள் ஊர்களையும், உடமைகளையும் ஒருங்கே கைவிட்டு வேறு நாடுகளில் சென்று குடியேறும்படியாகச் செய்து விட்டனர். நன்றி உணர்வும், பணிவுடைமையும் உள்ளவர்களாக இருப்போம் எனக் கூறிய உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு வேளாளர் பலரைக் கொலைக்கும் ஆட்படுத்தினர்.
இப்படியாகத் தங்கள் முந்தைய ஆண்டைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அற்றவர்களாக அவர்களுக்கு உரிய நாட்டை விட்டுத் துரத்திவிட்டுக் கள்ளர்கள் அப் பகுதியினை உரியவர்கள் மட்டும் அறிந்த காட்டுப் பகுதி என்ற பொருளில் தன்னரசு நாடு எனப் பெயரிட்டு ஆளத் தொடங்கினர். (இது தாங்களே ஆளும் நாடு எனவும் பொருள்படும் என மதுரை மாவட்ட விவரக் குறிப்பு விவரக் குறிப்பு விளக்கம் தந்துள்ளது).
சுருங்கக் கூறவேண்டுமானால் இந்தக் கள்ளர்கள் இறுதியில் அப்பகுதியை ஆண்ட அரசினையே களக்கும் அளவிற்குப் பலம் பெற்றவர்களாக எழுச்சி உற்றனர்.
அழகர்கோயிலில் குடி கொண்டிருக்கும் அழகரை வழிபடு தெய்வமாக இவர்கள் ஏற்றுக் கொண்டதோடு, தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் போதெல்லாம் அழகருக்குச் சிறப்பாகச் சமயச் சடங்குகளை நிறைவேற்றி வந்தனர். இன்றுவரை அழகரை வழிபட்ட பின்னரே இவர்கள் எந்தச் செயலிலும் ஈடுபடுவதோடு கோயிலவர்கள் கோயிற் பணிக்காகவோ தெய்வத் திருவிழாச் சடங்குகளுக்காகவோ பணமோ தானியமோ கேட்டு வரும் போதெல்லாம் இவர்கள் தங்களால் இயன்ற மட்டும் அவர்களுக்குக் கொடுத்து உதவுகின்றனர்.
இந்த நாட்டைச் சேர்ந்த கள்ளர்கள் கர்த்தாக்களைப் (Kurtaukles) பின்பற்றியவர்களாகச் சென்று இளவரசருக்கு உரிய உடமையான பசுக்கூட்டத்தைக் கவர்ந்து சென்று விட்டனர். இந்தக் களவினை அறிந்த இளவரசர் கன்றுகள் பாலின்றித் தவிப்பது அறிந்து அவற்றை அவிழ்த்துப் பசுக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று சேரும்படியாக விரட்டும்படி ஆணையிட்டார்.
கர்த்தாக்களின் நல்லெண்ணத்தையும், பெருந்தன்மையையும் கண்டு மனம் மகிழ்ந்த கள்ளர்கள் உடனே தங்கள் நாட்டிலுள்ளவர்களிடம் வீட்டுக்கு ஒரு பசுவாக ஆயிரம் பசுக்களைத் திரட்டி அவற்றோடு தாங்கள் கவர்ந்து வந்த பசுக்களையும் சேர்த்து மதுரைக்கு ஓட்டிவிட்டனர். இவர்களிடையே பூசலோ வழக்கோ நிகழும்போது இரு பக்கத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பக்கத்தவரை அம்பலக்காரர் பெயரைச் சொல்லிக் கைது செய்வதாகக் கூறுவர். அம்பலக்காரரை மதிப்புடையவராக நடத்துவதோடு அவரால் வழக்கை நடத்த நியமிக்கப்படும் நடுவர்களுக்கே இவர்கள் மதிப்பும் மரியாதையும் தருவர்.
“பண்ணை அடிமை முறை கள்ளர்களிடையே நிலவிய நீண்ட காலப் பகுதியில் எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் அப்போதைய அரசு தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கள்ளர்கள் அனுமதிக்கவில்லை. அரசுக்குரிய வரியினைச் செலுத்தும படியாகக் கேட்டால கள்ளர்கள் மிக ஆணவத்துடன், ‘‘வானம் பொழியுது, பூமி விளையுது, எங்கள் கால்நடை ஏர் ஊழுகின்றது, நாங்கள் நிலத்தில் உழைத்து அதனைப் பண்படுத்துகிறோம், நிலைமை இப்படி இருக்க அதன் விளைவுகளை உழைப்பவர் மட்டும்தானே அனுபவிக்க வேண்டும்? எங்களோடு ஒருத்தனைப் பணிந்து அவனுக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டும் எனக் கூறுவதேன்?“ எனக் கேட்பர்.
“விஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சியின் போது கள்ளர் குழு ஒன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் புகுந்த சூறையாடி அரசரின் உடமையான இரண்டாயிரம் காளைகளைக் கவர்ந்து சென்று விட்டது. இதனால் பெரிதும் எரிச்சலுற்ற மன்னர் இராமநாதபுரம், சிவங்கை ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் ஐந்து கோட்டைகளைக் கட்டுவித்து அந்த நாட்டின் முதன்மையானவர்களோடு தான் நல்லெண்ணமுடையவராக நட்புக் கொள்ளப் போவதாகக் கூறி அழைப்புவிடுத்து வருவித்து அவர்கள் மனத்தில் நம்பிக்கை வளரும்படியாகப் பல சிறப்புகளைச் செய்து இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான அவர்களைக் குத்திக் கொல்ல ஏற்பாடு செய்தார்.
அவ்வாறு கொலையுண்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை இராமேசுவரத்திற்குக் கடத்திக் கொண்டுபோய் அங்கு அவர் தேவதாசிகளாகவும், அடிமை மகளிராகவும் ஆக்கினார். புகழ் பெற்ற அந்தத் தீவில் தற்போது உள்ள ஆடல் மகளிர் அந்தக் கள்ளர் சாதியின் வழிவந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.“
பதினெட்டாம் நூற்றாண்டில் காப்டன் ரம்லெ (Captain Rumley) கள்ளர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்காக அனுப்பப் பட்டான். கள்ளர் நாட்டினர் அவன் பெயரைக் கேட்ட அளவிலே அஞ்சிக் கலங்கினர். அவனை மதித்துப் போற்றிய அவர்கள் அவனை ரம்லெசாமி என அழைத்ததோடு பின்னர் அந்தப் பட்டப் பெயராலலேயே அவனைக் கள்ளர்கள் சுட்டுவராயினர்.
“திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற போரின்போது கிளைவ், ஸ்டிரிங்கர் லாரன்ஸ் ஆகிய இருவரின் குதிரைகளையும் இரு கள்ளர் சகோதரர்கள் திருடிச் சென்றுவிட்டனர் என்ற செய்தி பதிவுகளில் உள்ளது.
வழக்கு வரலாறாகக் கூறப்பட்டு வரும் செய்தி வருமாறு :-
“மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில், திருமலையின் பள்ளியறையில் அவருடைய கட்டில் உயர இருந்து சங்கிலியில் பிணைக்கப்பட்டுத் தொங்கும் கதை வழக்குப்படி ஓர் இரவில் ஒரு கள்ளன் அரண்மனையின் மேற்கூரையில் கன்னம் வைத்து சங்கிலிகள் வழியாகக் கீழே வந்து அரசருக்கு ஊரிய அணிமணிகளைக் கவர்ந்து சென்று விட்டான். அரசர் அக்கள்வனைப் பிடித்து வருபவனுக்கு ஒரு ஜாகீரைப் பரிசாகத் தரப் போவதாக அறிவித்தவுடன் அந்தக் கள்ளன் தானே நேரில் வந்து சேர்ந்தவனாக வாக்களித்தபடி ஜாகீரைத் தருமாறு கேட்டான். அரசரும் சொல் தவறாது அவனுக்கு ஜாகீரைத் தந்து உடனே அவனைச் சிரச் சேதமும் செய்தார்.“ (மதுரை மாவட்ட விவர குறிப்பு Gazetteer of the Madurai district).
“தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் புதுக்கோட்டைப் பகுதியிலும் மிகுதியாகக் காணப்படும் நடுத்தர உடல்வாகும், கறுத்த நிறமும் கொண்ட பழங்குடிகள் கள்ளர்கள், திருட்டு எனப் பொருள்படும் கள்ளம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்த பெயரே கள்ளன் எனப் பொதுவாக வழங்கி வருகின்றது.
திரு.நெல்சன் அவர்கள் மதுரை மாவட்டக் கையேட்டில் இவ்வாறு கொளவ்து பொருந்துமா என ஐயம் தெரிவித்துள்ளார். முனைவர் ஒப்பெர்ட் (Dr.Oppert) இக் கருத்தை ஏற்றுக் கொள்கின்றார். பல்லவர் நாடான தொண்டை மண்டலமே கள்ளர்கள் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த நாடாதல் வேண்டும். இவ்வகுப்பாரின் தலைவரான புதுக்கோட்டை மன்னர் இன்றும் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டு வருகிறார். கள்ளர்கள் குறும்பர்களின் ஒரு பிரிவினர் எனக் கொள்ள ஏற்ற பல காரணங்கள் உள்ளன. முதலில் படை வீரராக இருந்த இவர்கள் அதனைக் கைவிட வேண்டி வந்தவுடன், கொள்ளையில் ஈடுபட்டுத் தங்களுடைய திருட்டு, வழிப்பறி ஆகியவற்றால் மற்றவர் வெறுப்பினுக்கு மிகுதியும் ஆட்பட்டு விட்டதால் கள்ளன் என்ற பெயருக்கு உரியவர்களான இந்தச் சாதியினருக்கு அப்பெயரே சாதிக்குரிய பட்டப் பெயராக நிலைத்துவிட்டது (ஜி. ஒப்பெர்ட் - சென்னை இலக்கிய அறிவியல் இதழ். 1888-89, G.Oppert-Madras Joura. Lit. Science 1888-89).
கீழ்த்திசைக் கையெழுத்து மூலங்களைத் தொகுத்த மறைத்திரு டபிள்யூடெய்லர் கள்ளர்களைக் குறும்பர்கள் என்றே இனங்காண்கின்றார். அவருடைய இந்த முடிவினைத் திரு நெல்சனும் ஏற்றுக் கொள்கின்றார். மக்கள் கணக்கொடுப்புப் பதிவுகளில் குறும்பன், கள்ளர் சாதியின் பல உட்பிரிவுகளுள் ஒன்றாகப் பதியப்பட்டுள்ளது“ என மதுரை மாவட்ட விவரக் குறிப்பில் கள்ளர்களைப் பற்றித் திரு எச்.எ.ஸ்டுவர்ட் கூறியுள்ளார்.
பதினொன்றாம் நூற்றாண்டில் பாண்டிய அரசினைச் சோழர்கள் வெற்றி கொள்வதன் முன் சோழ நாடு அல்லது தஞ்சாவூரே கள்ளர்களுக்கு உரிய வாழ்விடமாய் இருந்து அந்த வெற்றியின் பின்னர் கள்ளர்கள் பாண்டிய நாட்டில் குடியேறியவர்களாதல் வேண்டும்.
தஞ்சாவூரில் கள்ளர்கள் பெரும் எண்ணிகையிரான பிராமணர்களின் தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளனர். தங்கள் தலையை மழித்துக் கொள்ளும் பழக்கத்தை மேற்கொண்டுள்ள இவர்கள் பிராமணர்களைப் புரோகிதர்களாக அமர்த்துகின்றனர். இங்கு இவர்கள் திருமணத்தில் மணமகனே மணமகளுக்குத் தாலி கட்டுகின்றான். மற்றப் பகுதிகளில் மணமகன் உடன் பிறந்தவளே அதனைச் செய்கிறாள்.
தஞ்சையின் எல்லைக்கு அப்பால் மதுரையில் வாழும் இவர்கள் இனத்தவர்கள் தங்கள் தலைமயிரை இன்னமும் குடுமியாக முடிந்து கொள்ளும் பழகக்கத்தையே மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் சாதிக்காரர்களையே புரோகிதர்களாக அமர்த்துகின்றனர். ஒரு சாதியின் ஒரு பிரிவினருடைய இத்தகைய முன்னேற்றம் காலப்போக்கில் அச்சாதி முழுவதையுமே சமுகப் படிநிலையில் உயர்த்தி விடக் கூடியதாகும்.“ எனத் திரு டபிள்யூ.பிரான்சிஸ் 1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில் எழுதியுள்ளார்.
கள்ளர்களினுடைய வளர்ச்சிப் போக்கினைப் பற்றி, “மற்றவர்களின் வாழ்க்கை முறையினை - சிறப்பாக மாவட்டத்தின் முன்னேற்றம் பெற்றுள்ள பகுதிகளில் - பின்பற்ற ஆர்வங் கொண்ட கள்ளர்க்ள் பிராமணர்கள், வேளாளர்கள் ஆகியோரின் நடைமுறையினைப் பின்பற்றுகின்றனர். இதனால் இடத்திற்கு இடம் இவர்களுடைய பழக்கவழக்கங்களில் பெரிதும் வேறுபாடு காணப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளர்களுக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளர்களுக்கும் இடையே பழக்க வழக்கங்களில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது“ எனத் தஞ்சாவூர் மாவட்ட விவரக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
“நல்ல வருமானம் தரும் உழவுத் தொழிலோடு நிலவுடமைக்கு உரியவர்கள் என்றதொரு தற்காப்பு உணர்ச்சியும் சேர்ந்து கள்ளர்கள், படையாச்சிகள் ஆகியோருள் பெரும்பாலானவர்களைப் போதுமென்ற மனங்கொண்ட, ஆர்வத்தோடு உழைக்கும் இனத்தவர்களாக மாற்றிவிட்டது. இன்று அவர்கள் பயிர்த்தொழிலிலும் அது தொடர்பான வழக்குகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டவர்களாக உள்ளதால் சட்டத்திற்குப் புறம்பான தங்களுடைய பரம்பரைச் செயல்களில் ஈடுபட மனம் இருந்தாலும் அதனைப பற்றி நினைக்க நேரமற்றவர்களாக உள்ளனர்.
காவிரிப் படுகையில் வளமான பயிர்த்தொழில் நடைபெறுவதான பழைய திருவாடி வட்டத்தின் ரயத்துவாரி நிலங்களின்பெரும்பகுதிக்கு உடமையாளர்களாக விளங்குபவர்கள் கள்ளர்களே.
பொதுவாக இவர்கள் செல்வ வளம் படைத்த உயர்குடியினராகவே உள்ளனர். காவேரியின் கரை சார்ந்த ஊர்ப்புறங்களைச் சார்ந்த கள்ளர்களான உழவர்கள் உடையிலும் தோற்றத்திலும் பொதுவாக வேளாளர்களை ஒத்தவர்களாக உள்ளனர்.
தெற்கே இருந்து அண்மையில் வந்த குடியேறியவர்களுள் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்த வந்த, புதுமைக்கு ஆட்படாத, மற்றவர்களுடன் வம்பு வழக்கு வைத்துக் கொள்ளாத கள்ளர்களை பரம்பரையாக வாழும் கள்ளர் குடியிருப்புகளிடையே மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இவர்கள் தெற்கே இருந்து வந்து குடியேறியவர்கள் என்ற பொருளில் அவ்வாறு வந்தேறிய மற்றச் சாதியாரோடும் சேர்த்து தெற்கத்தியார் என்று வழங்கப்படுகின்றனர்.
இத்தெற்கத்தியார் புதுக்கோடையின் எல்லை சார்ந்த மாவட்டத்தின் பகுதிகளிலேயே காணப்படுகின்றனர். இப் பிரிவைச் சேர்ந்த கள்ளர்கள் பெண்களைப் போலத் தலை முழுக்க நீளமாக மயிர் வளர்க்கின்றனர். ஆண்களும் பெண்களும் பனையோலைப் பாம்படங்களை இட்டுக் காது மடல்களின் துளைகளை மிகப் பெரியதாக ஆக்கிக் கொணடுளள்னர்“ எனத் தஞ்சாவூர் மாவட்டக் கையேட்டில் கூறப்பட்டுள்ளது.
தெற்கத்தியார் என்ற வழக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் வந்து குடிபுகுந்த கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரையும் மற்ற வந்தேறிகளையும குறிப்பதாகும்.
மாயவரத்தில் இவ்வழக்கு கள்ளர், அகமுடையார், வலையர் ஆகியோருக்கு உரியதாக வழங்கப்படுகிறது.
1891 கணக்கொடுப்பு அறிக்கையில் அகமுடையார், கள்ளர் என்பன மறவர்களின் உட்பிரிவாகக் குறிப்பிடத்தக்க வகையில் பெரும்பான்மையோரால் பதியப்பட்டுள்ளது.
“மறவர் என்பதும் கள்ளர்களின் உட்பிரிவில் ஒன்றாகக் காணப்படுவதால் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரிடையேயும் நெருங்கிய உறவு உள்ளது என்பதில் சிறிதும் ஐயுற வேண்டியதில்லை.
கள்ளர் சாதியின் தோற்றம் மறவர், அகமுடையார் சாதியரின் தோற்றம் போல் புராணத் தொடர்புடையதாக இந்திரன், கௌதம முனிவரின் மனைவியாகிய அகலிகை, ஆகியோரை மூலமாகக் கொண்டதாக உள்ளது. கதை வழக்குப்படி கொளதம முனிவரும், இந்திரனும் மற்றவர்களோடு அகலிகையினை அடையப் போட்டியிட்டனர். இப்போட்டியில் கொளதம முனிவரே வெற்றி பெற்றார். இதனால் மனக் கொதிப்படைந்த இந்திரன் எத்தகைய ஆபத்துவரினும் அகலிகையை அடைந்தே தீர்வது என முடிவு செய்தவனாக மதி நுட்பமுடையவானக ஒரு தந்திரத்தைக் கையாண்டு வெற்றியும் பெற அகலிகை அவன் வாயிலாக மூன்று மக்களைப் பெற்றொடுத்தாள்.
அவர்கள் முறையே கள்ளன், மறவன், அகமுடையான் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். இந்த மூன்று சாதியார்களும் தேவன் வழிவந்தவர்கள் எனக் கூறிக் கொண்ட தேவன் என்ற பட்டப் பெயரையும் சூட்டிக் கொள்கின்றனர்“ எனத் திரு எப். எஸ் முல்லலே எழுதுகிறார் (சென்னை மாநிலத்துக் குற்றம்புரி வகுப்பார் பற்றிய குறிப்புகள். S.S.Mullaly - Notes on criminal Classes of the Madras Presidency).
இந்தக் கதையின் மற்றொரு வழக்குப்படி கூறப்படுவதாவது :-
“கௌதம முனிவர் ஒருக்கால் தன் இல்லத்தை விட்டுத தொழில் மேல் வெளியே சென்றார். அவர் இல்லத்தில் இல்லாத இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்திரன் அவருடைய மனைவியிடம் வரம்பிகந்தவனாகச் சிற்றின்பம் துய்த்தான். இதன் விளைவாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். முனிவர் திரும்பி வந்தபோது அவர்களுள் ஒருன் கதவின் பின்புறம் திருடனைப் போல் மறைந்து கொண்டான். அப்போதிருந்து அவன் கள்ளன் என வழங்கப்படுகின்றான். மற்றொருவன் ஒரு மரத்தின்மீது ஏறிக்கொண்டு விட்டானாகையால் மறவன் என்றழைக்கப்பட்டான். மூன்றாமவன் உள்ளம் தளராது மன உறுதியுடன் வீட்டகத்திலேயே நின்றான். ஆகையால் அவன் அகத்தில் உறுதியுடையவன் எனற பொருளில் அகமுடையான் என அழைக்கப்பட்டான். இப்பொயர் அகம்படையான் எனத் திரித்ததாக வழங்குகின்றது.“ (சென்னை ரெவியூ - 1899 Madras Review 1899). ஒரு கள்ளன் மறவனாவான் என்ற தமிழ்ப் பழமொழி ஒன்று வழங்குகின்றது. மரியாதைக்குரியவனானவுடன் அவன் அகமுடையானாவான். பின்பு படிப்படியே உயர்ந்து வேளாளனாகி அதிலிருந்து முதலியாராக உயர்வான்.
“கள்ளர் மாட்டிறைச்சி தவிர மற்ற விலங்குகளை உண்பதோடு போதை தரும் மதுவகைகளையும் கட்டுப்பாடின்றிப் பயன் படுத்துவர்.
வழக்கமாக பயிர்த்தொழிலாளராகவும், வயல் வேலையாள்களுமாக உள்ள இவர்களுள் பலர் ஊர்க் காவலர்களாகவும் மற்ற இடங்களிலும் காவல் பணியாளர்களாகவும் தொழில் செய்கின்றனர். பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தத் திருட்டையும் கொள்ளையையுமே நம்பியுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி நகரத்தில் குடியிருப்பவர்கள் கள்ளர் சாதியினைச் சேர்ந்த்த ஒருவனை இந்தக் கள்வர்களிட்மிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். அவ்வாறு வைத்துக் கொள்ளும் வழக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பார்களேயாயின் அவர்கள் தங்கள் உடமையினைப் பறிகொடுக்க நேரிடும். இதற்கு மாறாகக் கள்ளன் ஒருவனைப் பணியாளனாக வைத்துக் கொண்டிருக்கும் வீட்டில் எதிர்பாராது திருட்டு ஏதேனும் போய்விடுமானால் திருட்டுப்போன பொருள்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் சேர்ப்பிக்கப்படும்.
மதுரை நகரில் சில தெருக்களில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு வீட்டிற்கு நான்கணா என்று கள்ளர் சாதித் தலைவன் வசூலித்துக் கொண்டு அதற்கு ஈடாக அத் தெருக்களில் திருட்டேதும் நிகழாமல் பாதுகாப்பு அளிக்கிறான் என நான் கேள்விப்பட்டேன்“ என்று 1891-ஆம் ஆண்டுக் கணக்கொடுப்பு அறிக்கையில் திரு.எச்.எ. ஸ்டுவர்ட் எழுதியுள்ளார்.
“கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்களே தென்மாவட்டங்களில் நிகழும் குற்றங்களில் பெரும்பாலானவற்றிற்குக் காரணமானவர்கள். இது அவர்களுடைய மக்கள் தொகையின் எண்ணிக்கையின் விகிதத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாக உள்ளது.
1897-இல் சிறைச்சாலைகளின் மேற்பார்வையாளர்களின் முதல்வர் மதுரைச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 42 சதவீதத்தினரும் பாளையங்கோட்டைச் சிறைச் சாலையில் உள்ள கைதிகளில் 30 சதவீதத்தினரும் இந்த மூன்று சாதிகளுள் ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
1894-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் 137 கால்நடைத் திருட்டுக்களை இம்மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்தியிருக்க, மற்றச் சாதியினர் 47 திருட்டுக்களை மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். இது இம்மூன்று சாதியினையும் சேர்ந்தவர்களுள் 1497பேருக்கு ஒருவர் திருட்டு நிகழ்த்தியுள்ளதாக ஆகும்.
இதற்கு மாறாக மற்றச் சாதியார்களுள் 37,830 பேருக்கு ஒருவரே திருட்டு நிகழ்த்தியவர்களாக உள்ளனர். திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இவர்களைப் பற்றியதான குற்றச் செயல்களின் புள்ளி விவரங்கள் மோசமானவையாகவே உள்ளன.
அண்மைக் காலம்வரை குடிக்காவல் எனக் கூறப்படும் அச்சுறுத்திப் பொருள் பறிக்கும் முறையினை இவர்கள் மேற்கொண்டிருந்தனர். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஊராருக்கும் தங்க்ள் ஊரில் திருட்டு நிகழாமல் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையினைச் செலுத்தி வந்தனர். அத்தொகையைச் செலுத்துவதில் நிலுவை இருக்குமானால் அந்த ஊர்களில் உடனே கால்நடைத் திருட்டுக்களின் எண்ணிக்கை மிகுவதோடு எதிர்பாராத தீ விபத்துக்களின் எண்ணிக்கையும் உயரும். அண்மையில் மதுரையைச் சார்ந்த ஊர் மக்கள் இத்தகைய பயமுறுத்தலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.
இந்த அச்சுறுத்தலால் இயல்வாகவே பாதிப்புக்கு உள்ளான இடையர் சாதியைச் சேர்ந்த ஒருவானல் இந்த எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பெற்று 1893 வரை நீடித்தது“ எனத் திரு.பிரான்சிஸ் 1901 கணக்கெடுப்பு அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த எதிர்ப்பு இயக்கம் தங்கள் சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை மயக்கி அழைத்துக் கொண்டு சென்றதோடு பின்னர் அவளுடைய மகளையும அழைத்துச் சென்று இருவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்ட கள்ளர் சாதிக் கயவன் ஒருவன் மீது இடையர் சிலர் கொண்ட கோபத்தால் மூண்டெழுந்ததாகும்.
1896 - ஆம் ஆண்டு காவல்துறைச் செயல்முறை அறிக்கையில் கள்ளருக்கு எதிரானதான இந்த இயக்கம் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :-
“பல சிற்றூர்களில் காவல் முறைப்படி காவல்காரர்களாகக் கள்ளர்கள் பலர் இருந்தனர். காவல் முறைப்படி காவல்காரர்கள் அதற்கான கட்டணம் பெற்றுவந்தனர். சில இடங்களில் ஊராரின் பொருள்களைத் திருட்டிலிருந்து காப்பாதற்காகத் திருட்டுப் போகுமானால் அதற்கு ஈடான தொகையை வழங்குவதற்காக வரி செலுத்தாதவர்களாக நிலத்தையும் அனுபவித்து வந்தனர். இந்த முறையினால் கள்ளர்களின் தொல்லைக்கு மிகுதியும் உள்ளானவர்கள் ஆட்டிடையர்களே. அவர்களுடைய மறியையும் வெள்ளாட்டையும் கள்ளர்கள் எளிதில் கவர்ந்து சென்றனர். செலுத்தப்படாத காவல் தொகையின் பாக்கிக்காக அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சுறுத்திப் பணம் பறிப்பதற்காகவும ஆடுகள் திருடிச் செல்லப்பட்டன.
இடையர் சாதியைச் சேர்ந்த ஒருவனால் தொடங்கப்பட்ட கள்ளர் எதிர்ப்பு இயக்கம் எங்கும் வேகமாகப் பரவியது. ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் ஊர்க் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்கள் கள்ளர்களை இனிக் காவலுக்கு அமர்த்திக் கொள்வதில்லை எனத் தங்கள் கலப்பையின் மீது அணையிட்டு முடிவெடுத்தனர். திருட்டுப் போகும் கால்நடைகளுக்கு ஈடுதரவும் கள்ளர்கள் நெருப்புக்கு இரையாகுபவர்களுக்கு ஈடுதரதவும் அவர்கள் தங்களுக்கான ஒரு நிதியை ஏற்படுத்தினர்.
இரவில் ஊர்க்காவலினை மேற்கொள்ள அவர்கள் தங்களுக்குள்ளாகவே காவவல்களை ஏற்படுத்தினர். ஊருக்கு ஊர் திருட்டுச் செய்தியினை விரைவாக அறிவிக்க அவர்கள் ஊது கொம்புகளைப் பயன்படுத்தினர். கொம்புகளின் முழக்கதைக் கேட்டதும் வந்து சேராத ஊரார்களுக்கு அவர்கள் அபராதம் விதித்தனர். இதனால் வட பகுதியில் இருந்த கள்ளர்களில் பலர் தங்கள் நிலத்தை விற்றபின் தங்கள் ஊரினை விட்டு வெளியேறினர். சில இடங்களில் அவர்கள் எதிர்த்து நின்றனர். ஆறு மாதங்கள் குற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஒருவன் தெரிவித்ததைப் போல மக்கள் வாளிகளைக் கூடக் கிணற்றடியிலேயே விட்டு வைக்கத் தொடங்கினர். ஓரிரு இடங்களில் கள்ளர்கள் ஒன்றாகக் கூடி ஊராரை எதிர்க்கத் தொடங்கினர். இதன் காரணமாகக் கலவரம் மூண்டது. ஓர் ஊரில் மூவர் கொலையுண்டதோடு கள்ளர் குடியிருப்புகள் நெருப்புக்கு இரையாயின. நெருப்பிட்டவர்கள் கோனார்களா, கள்ளர்களா என்பது இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் திண்டுக்கல் உட்கோட்டத்தில் ஊரார் ஒன்றாகத் திரண்டு இரண்டு ஊர்களில் கள்ளர் குடியிருப்புக்களை நெருப்புககு உள்ளாக்கினர்.“
“வீடுகளில் கன்னமிடுதல், வழிப்பறி, கூட்டுக் கொள்ளை, திருட்டுக் கால்நடைகளைக் கவர்தல் ஆகியனவே கள்ளர்கள் வழக்கமாக ஈடுபடும் குற்றச் செயல்கள். அவர்கள் வளரி தடியினையும், மேற்குக் கடற்கரைப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் வைத்திருப்பதைப் போன்ற கத்தியினையும் வைத்திருப்பர். அவர்கள் வீடுகளில் கன்னமிடும்போது முதலில் கதவுக்குக் கீழாகச் சுவரினைத் துளையிடுவர். உருவில் சிறிய சிறுவன் அதன் வழியே ஊர்ந்து உட்சென்று மற்றவர்களுக்காகக் கதவின் தாழ்ப்பாளினைத் திறந்து விடுவான். தூங்கும் பெண்களின் நகைகளை இவர்கள் திருடமாட்டார்கள். திருடிய பொருள்களைச் சாக்கடை, கிணறு, வைக்கோல்போர் ஆகிய பாங்கான இடங்களில் பதுக்கி வைப்பர். சிலசமயம் பொருளைப் பறிகொடுத்தவர்களிடம் துப்புக்கூலி எனப்படும தொகையினை அச்சுறுத்திப் பெற்றுக் கொணடு அதனை அவர்களுக்கே மீட்டுத்தருவர். குற்றங்கள் இழைப்பதில் பொதுவாகப் பெண்கள் பங்கு கொள்வதில்லை. எனினும் திருடும் பொருளைச் செட்டிகளிடம் விற்பதில் இவர்கள் ஆண்களுக்கு உதவுவர்“ எனத் திரு.எஃப்.எஸ்.முல்லலெ கூறுகின்றார்,(முந்து நூல் op.cit.).
“திருட்டுத் தொழில் தனக்கோ தன் இனத்திற்கோ இழிவு ஏற்படுத்துவதாக இவர்கள் கருதுவதில்லை. இவர்கள் திருட்டினைப் பிறப்புரிமையின் அடிப்படையில் தங்களுக்குரிய கடமையாக அமைந்த தொழிலாகக் கருதுவதே இதற்குக் காரணம் ஆகும். கள்ளன் ஒருவனை நீ எந்தச் சாதியினைச் சேர்ந்தவன் எனக் கேட்டால் அவன் கலக்கம் ஏதுமின்றித் தான் ஒரு கள்ளன் எனக் கூறுவான்“ என அப்பெ துபைஸ் குறித்துள்ளார்.
“பயணிகளை இரவில் வழிமறித்துக் கொள்ளை அடிப்பது கள்ளர்களின் முக்கிய தொழிலாகும். பெரியகுளத்திலுள்ள அம்மய்யநாயக்கனுலிருந்தும் மதுரையிலிருந்தும் செல்லும் சாலைகளிலேயே இவர்கள் இச்செயல்களில் அடிக்கடி ஈடுபடுவர். முதலில் வண்டி ஓட்டுபவனை அச்சுறுத்தி வண்டியின் போக்கினை மாற்றி அதனைச் சாலை ஓரத்துக் குழியில் இறக்குவர். பின்னர் கொள்கைக்கு உட்படும் பயணிகைளத்தரையில் குனிந்து, சாலையை நோக்கியபடி வண்டிக்கு முதுகுகாட்டியவர்களாக அமரச் செய்வர். கொள்ளையரில் சிலர் பின்னர் அவர்களுடைய மூட்டை முடிச்சுக்களைத் தேடி மதிப்புவாய்ந்த பொருள்களைக் கைப்பற்றுவர்.
இந்தக் கொள்ளைக் கூட்டத்தார் தற்போழுது வழிப்பறிக் கொள்ளையினைத் தொல்லையொனதென அடியோடு கைவிட்டவர்களாக அரசு அலுவலர்களின் பணப்பெட்டிகளையும் கால்நடைகளையும் கவரும் எளிதானதும், நல்ல பொருள் வரவு தருவதுமான களவுகளில் ஈடுபடுகின்றனர்.
கால்நடைகளைக் கவருவதிலேயே தற்போது இவர்கள் மிகுதியும் ஈடுபாடுடையவர்களாக உள்ளனர். கால்நடைகளை வசப்படுத்துவதில் இவர்கள் கெட்டிக்காரர்கள். சல்லிக்கட்டு (பார்க்க - மறவர்) இப்பகுதிகளில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பதற்கு இவர்கள் வாழ்க்கை நடத்த அன்றாடம் இது போலக் கால்நடைகளோடு போராட வேண்டியருப்தே காரணமாகலாம். திருடப்பட்ட கால்நடைகள் அன்றே இரவோடு இரவாக அங்கிருந்து இருபது முப்பது மைகள் ஒட்டிச் செல்லப்படுகின்றன. பின்னர், பகல் முழுதும் தெரிந்தவர்கள் வீட்டிலோ காடு மலைகளிலோ மறைத்து வைக்கப்பட்டு மறுநாள் இரவு மறுபடியும் தொலைதூரதத்திற்கு ஓடிச் செல்லப்பட்டு மறுபடியும் மறைத்துவைக்கப்படுகின்றன.
எந்தத் திசையில் சென்று தேடுவது என அறியாதவரான கால்நடை உரிமையாளர் அதனைத்தேடிச் செல்வதில் இந்நிலையில் நம்பிக்கை அற்றவராக இருப்பார். எனவே அவர் ஊரிலுள்ள எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவரான இடையாளினைத் தேடிச் சென்று அவர் தன் கால்நடையினைத் திரும்பக் கொண்டு வரின் உரிய துப்புக் கூலி எனப்படும் தொகையினைத் தருவதாகக் கூறுவார். அது பெரும்பாலும் கால்நடையின் விலை மதிப்பில் பாதியளவினதாக இருக்கும். கள்ளன் திருட்டுப் போன எருதுகளைத் தேடிச் செல்வதாகக் கூறி விரைவில் திரும்பி வந்து, அவற்றைத்தான் கண்டுபிடித்து விட்டதாகக் கூறித் துப்புக் கூலியினைப் பெற்றுக் கொண்டு, கால்நடைக்கு உரியவனிடம் குறிப்பிட்டதொரு இடத்தைக் கூறி அங்குச் சென்றால் அவன் தன் கால்நடைகளைக் காணலாம என அறிவிப்பான். அது பெரும்பாலும் ஆள் நடமாற்றமற்ற தனித்த இடமாக இருக்கும். உரியவன் அங்கு சென்று தன் கால்நடை கட்டப்பட்டிருப்பதைக் காண்பான். இவவ்ற தரப்பிடும தகவல் எப்பொழுதும் சரியானதாகவே இருக்கும்.
இம்முறைக்கு மாறாகக் கால்நடையைப் பறிகொடுத்தவன் காவலாக்ளிடம வழக்குக் கொடுப்பானாயின் அவன் தன் கால்நடையைத் திரும்பப பெற உதவ எந்தக் கள்ளனும் முன்வர மாட்டான். இறுதியில் அவை வேறு மாவட்டங்களுக்கோ திருவாங்கூருக்கோ கொண்டு சென்று விற்கப்படும். அல்லது தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு விடும். இதன் காரணமாகக் கால்நடைத் திருட்டு எதுவுமே காவலர்களிடம தொவிகிக்பப்டுவதில்லை.
கள்ளர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக வாழும் பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகள் நெருப்புக்கு இரையாகாமல் இருக்க வேண்டிக் கீற்று வேய்வதற்குப் பதிலாக ஓடுகள் வேய்வர் அல்லது மேலே தளம் இடுவர். கால்நடைகள் எப்பொழுதும் இரவு நேரத்தில் வீட்டுக்குள்ளாகவே கட்டி வைக்கப்படும். கள்ளர்கள் பற்றிய அச்சம் காரணமாக அவர்கள் அவற்றை இரவில் வயல்களில் விட்டுவைப்பதில்லை. நாள்தோறும் மாலையில் அவை கூட்டங்கூட்டமாகப் புழுதியைக் கிளறி எல்லோரையும் மூச்சுத் திணற வைத்தபடி ஊருக்குள் நுழைவதைக் காணலாம்.
ஒரு நாளின் 24 மணியில் 12 மணி நேரம் வயலில் நின்று எருவாகச் சாணமிட்டு வயலை வளப்படுத்த வேண்டிய அவை வீடுகளுக்கு வந்து சேர்கின்றன. எருமைகளை வீட்டுக்கு வெளியேயே கட்டிப் போடுவர். கள்ளர்கள் எருமைகளைத் திருடிச் செல்வதில் ஆர்வங் காட்டுவதில்லை. அவை விலை மதிப்பில் குறைந்தவை என்பதும் புதியவர்கள் பிடிக்க வரும்போது முரண்டு செய்பவை என்பதும் அவற்றை ஓர் இரவில் கொஞ்ச தூரம் நடத்திச் செல்ல முடியும் என்பதுமே அவற்றிடம் அவர்கள் ஆர்வங்காட்டாததற்கான காரணங்களாகும்.
கொள்ளையிலும், திருட்டிலும் மீள முடியாதபடி ஊறிப்போயுள்ள கள்ளர்கள் இன்றுவரை அரசு அதிகாரிகளுக்கு நிரந்தர தலைவலியாய் உள்ளனர். மாவட்டத்தில் நிகழும் திருட்டுக்களில் பெரும்பாலானவற்றிற்கு இவர்களே காரணமாக உள்ளனர். இதற்காக இவர்கள் சற்றும் மன வருத்தம் கொள்வதில்லை. கள்ளன் ஒருவன் தங்கள் சாதியின் செயலை நியாயப்படுத்த ஒவ்வொரு வகுப்பாரும் ஒரு வகையில் திருடுகின்றனர் என்பதனை அரசு ஊழியர்கள் கையூட்டுப் பெறுவதையும், வழக்குரைஞர் பகைமையை வளர்த்து அதன் காரணமாக வழக்காடக் கிடைக்கும் கட்டணத்தைப் பெறுவதையும் வணிகர் சாராயத்தில் தண்ணீரையும், சர்க்கரையில் மணலையும் கலப்படம் செய்வதையும் போன்றவற்றை எடுத்துக்கூறிக் கள்ளன் திருடும் முறையில் தான் வேறுபாடு உள்ளது என்றான்.
மேலுரைச் சுற்றியுள்ள பகுதியில் இச் சாதியார் பெரியாற்று திட்டத்தின் கீழ் அண்மையில் அப்பகுதியில் வந்து பாயும் நீரினைப் பயன்படுத்தி நன்செய் பயிர்கள் செய்வதில் ஈடுபட்டவர்களாகக் கால்நடைத் திருட்டை அடியோடு கைவிட்டு விட்டனர். அவ்வூருக்குத் தெற்கே உள்ள சில ஊர்க்காரர்கள் களவில் ஈடுபடுவது கூடாது எனவும், இலங்கைக்கும் பிற வெளிநாடுகளுக்கும் கூலிகளாகக் குடிபெயர்ந்து சென்றுள்ள பெண்கள் அனைவரையும் திரும்ப அழைத்துக் கொள்வது என்றும் தங்களுக்குள் பேசி உடன்படிக்கை எழுதி அதனைப் பதிவும் செய்துள்ளனர். மேலும் வயல்களிலிருந்து வறட்டிக்காகச் சாணத்தை எடுப்பதையும், குடிநீருக்கான ஊருணிகளில் இறங்கி அவற்றின் தூய்மையைக் கெடுப்பதும் போன்ற சிறு குற்றங்களையும் கைவிடுவதாக இவர்கள் செய்துள்ள முடிவுகள் மற்ற சாதியார்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் முன்னேற்ற வழிபட்ட செயல்களாகும்.
கள்ளர்கள் மீது பல்வேறு பழிகள் சுமத்தப்பட்டாலும் அவர்களிடம் காணப்படும் நல்ல பண்புகளையும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். கற்புடைமை பேணும் பெண்களின் ஒழுக்க நெறிப்பட்ட நடத்தையும், வீடையும் ஊரையும் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மை பேணிக் காப்பதும் அளவோடு குடிப்பதுமான பழக்கமும் அவற்றுற் குறிப்பிடத்தக்கவை, கள்ளர்கள் வாழும் ஊரில் உள்ள கள்ளுக்கடையால் லாபம் அடைவது மிக அரிது“.
அண்மையில் வெளியான ஒரு குறிப்பிலிருந்து (சட்டமும் குற்றவியலும் பற்றியதான செய்தித் தொகுப்பு 1,3.19 v8. வேலூர் Illustrated Criminal Investigation and Law Digest, 1, 3,1908 Vellore) துப்புக்கூலி பற்றிய பின்வரும் தகவல்களை நான் பெற்றேன்:- “கால்நடைத் திருட்டுக் குற்றத்திற்குக் கள்ளர்களே பெரிதும் பெறுப்பாக உள்ளனர். பெரும்பாலும் துப்புக்கூலியினைப் பெற்றுக் கொண்டு அவர்கள் திருடிச் சென்ற கால்நடைகளைத் திரும்பக் கொண்டு விட்டுவிடுகின்றனர். அலுவலகக் குறிப்புகளில் இந்தகைய திருட்டுப் பற்றிய பதிவுகள் மிகச் சிலவே. கால்நடையினைப் பறிகொடுத்த யாரும் அதனைப் பற்றி வழக்குப் பதிவு செய்ய நினைப்பதில்லை. அவர்கள் அது கயிற்றை அவிழ்த்துக் கொண்டு எங்கேனும் மேயச் சென்றிருக்கும் என்றே முதலில் நினைக்கின்றனர். துப்புக் கூலி முறை, கால்நடையைத் திருட்டுக் கொடுத்தவன் அதனைத் திரும்பப் பெற உதவுகின்றது. அவன் துப்புக் கூலியாகத் தன் கால்நடையின் மதிப்பில் பாதியினை தந்தால் போதுமானது. அவன் இழந்த கால்நடையினைத் திரும்பப் பெறும்போது லாமானதொரு உடன்பாட்டினைச் செயது கொணட முழுத் திருப்தியோடு இறுதியில் வீடு திரும்புகின்றான்.
மனக்குறைபட்டுக் கொள்ள இந்த உடன்பாட்டில் இடமில்லை. அதற்கு மாறாக உழவு வேலைகள் மேற்கொள்ள வேண்டிய சமயத்தில் தன் எருதுகள் தனக்குக் கிடைத்ததில் அவன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். உழவனுக்கு ஆண்டு முழுதும் எருதுகளின் உதவி தேவைப்படுகிறது. பருவ மழை பொய்த்துவிடும் சமயங்களில் வேண்டுமானால் அவை அவனுக்குச் சுமையாக இருக்கலாம். நீண்ட வறட்சிக்குப் பின் மறுபடியும் நல்லதொரு மழை பெய்தவுடன் ஒவ்வொரு உழவனும் தன் நிலத்தில் சென்று ஏர் உழத் தொடங்கிவிடுவான். அத்தகைய சயமத்தில் அவனுடைய எருதுகள் திருடப்படுமானால் அது அவன் வயிற்றில் அடிக்கப்பட்டதாகவே ஆகும்.
அவன் வருங்கால வாழ்வுக்கு வழியற்றவனாவான். அப்போது வாடகைக்கும் எருதுகள் கிடைக்கமாட்டா. இழந்த தன் எருதுகளை அதுபோன்ற சமயத்தில் திரும்பப் பெற அவன் எதனை வேண்டுமாயிலும் கொடுக்க முன் வருவான். அதுபோன்ற சமயங்களில் கண்ணோட்டமற்ற துப்புக்கூலி முறை அவன் உதவிக்கு வருவதால் அவன் அதனை நாடிச் செல்கின்றான். அதன் உதவியால் உடனுக்குடனோ சற்றுக் காலங்கடந்தோ அவன் தன் எருதுகளைத் திரும்பப் பெறுகின்றான்.
இதற்கு மாறாக அவன் காவல்துறையினரிடமோ குற்றவியல் நடுவரிடமோ சென்று வழக்குப் பதிவு செய்வானாயின் இழந்த எருதுகளைத் திரும்பப் பெறுவதற்கான வழி அடைபட்டுப் போகும். உழவு மாடுகளைத் திருட்டுக் கொடுத்தவன் எடுக்கும் நடவடிக்கைகளை உளவு அறிந்து சொல்லத் துப்புக்கூலி பெறுவோரின கையாட்கள் ஆங்காங்கே வேவு பார்த்தபடி இருப்பர். வழக்கு காவல்நிலையத்திறகுச் சென்று விட்டது எனத் தெரிந்து கொண்டவுடன் எப்படியும் தங்களிடமுள்ள எருது உரியவருக்குச் சென்று சேரமுடியாதபடி பார்த்துக் கொள்வர். இருவருக்கும் மிக நெருங்கிய ஒருவர் வேண்டுமானால் அது போன்ற சமயத்தில் அவர்களிடையே சமரசம் செய்து வைத்து வழக்குத் தொடுத்தவன் தன் எருதுகளைத் திரும்பப் பெற உதவக்கூடும். இது போன்ற சமயங்களில் திருடப்பட்ட கால்நடை ஊர்ப்பட்டியிலே அடைக்கப்படும். இவ்வாறு மற்றவர் நலித்தில் மேயச்சென்று ஊர்ப்பட்டியில் அடைக்கப்பட்ட கால்நடைகளைத் திரும்பப் பெறுவதை ஒத்ததே இம்முறை. குற்றம் புரிந்தவனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் போவதில்லை என இரு சாராரும் முழு மனத்துடன் ஆணையிட்டுக் கொட்ண பின்னரே இவ்வாறு ஊர்ப்பட்டி வாயிலாகக் கால்நடைகள் திரும்பப பெறபப்படும் முறை மேற்கொள்ளப்படுகிறது.
“முன்பு கூறிய வளரி தடியினைப் பற்றி முனைவர் ஒப்பெர்ட் எழுதுவதாவது:-(சென்னை அறிவியல் இலக். இதழ்கள், XXV Madras Journ. Lit. Science. XXV) “மான் வேட்டையாடும்போது மறவர்களும், கள்ளர்களும் பூமராங்கைப் பயன்படுத்துகின்றனர். சென்னை அருங்காட்சியகத்தில் மூன்று வளைத்தடிகள் (தந்தத்தால் இரண்டும் மரத்தால் ஒன்றும்) தஞ்சாவூர் போர்ப்படைச் சாலையிலிருந்து பெற்று வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை அரசரின் படைக்கலங்களுள் மரத்தாலான வளைத்தடிகள் எப்போதும் இருப்பில் இருக்கும். இவற்றுக்கான தமிழ்ப்பெயர் வளைதடி என்பதாகும்.“ வளைதடி தொடர்பாகப் புதுக்கோட்டை அரசின் திவான் எனக்குப் பின்வருமாறு எழுதித் தெரிவித்துள்ளார்.
“வளரி எனப்படும் வளைதடி சேகேறிய மரத்தாலான குட்டையான போர்க் கருவியாகும். சிலபோது இதனை இரும்பாலும் செய்வர். பிறை வடிவினதான இதன் ஒரு முனை மற்றொரு முனையைவிடத் தடித்ததாகவும் வெளிப்பக்கம் கூர்மை யாக்கப்பட்டதாகவும் இருக்கும். இதனை வீசுவதில் பயிற்சி பெற்ற ஆண்கள் மெலிந்த முனையினைக் கையில் பிடித்துத் தோளுக்கு மேலே தூக்கிச் சிலமுறை அதனைச் சுற்றி வீழ்த்தப்பட வேண்டிய குறியின் மீது மிக வேகமாகச் சென்று தாக்குமாறு குறிபார்த்து எறிவர்.
ஒரே வீச்சில் சில விலங்குகளையும், சிலசமயம் ஆள்களைக் கூட வீசி வீழ்த்தக் கூடிய வளையெறி வல்லுநர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. காட்டுக் கோழி முயல் ஆகியனவற்றை வேட்டையாட இன்றுங்கூட வளைதடி எப்போதாவது பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படினும் மேற் கூறியது போன்ற வல்லுநர்கள் இந்த மாநிலத்தில் தற்போது இருப்தாகத் தெரியவில்லை. இதன் பயன்பாடு பழைய வரலாறாகப் போய் விட்டது என்றே கருத வேண்டியுள்ளது. சென்ற நூற்றாண்டில் பாளையக்காரர்களுக்கிடையேயான போரில் இக்கருவி குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது என்பது வாய்வழி வரலாறாக வழங்கி வருகின்றது. இன்று அது முரடர்களான கள்ளர், மறவர் சாதியைச் சேர்ந்த போர் வீரர்களின் வழித் தோன்றல்களின் இல்லங்களில் செயலற்று உறங்குகின்றது.
சென்ற நூற்றாண்டில் கண்டோர் அஞ்சும்படியாகப் பயன்படுத்தப்பட்ட அதனை இன்று அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற போர்க் கருவிகளுடன் பழம்பெருமையின் சின்னமாகப் பூசை அறையில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஆயுதபூசை நாளில் (படைக் கருவிகளுக்கும் தொழிற் கருவிகளுக்கும் பூசையிடும் நாள்) அதனை வெளியே எடுத்துச் சுரண்டிச் சுத்தப்படுத்தி மீண்டும் அதற்குரிய இடத்தில் சேர்ப்பித்து விடுகின்றனர்.
1891 கணக்கெடுப்பின்படி கள்ளர்களின் உட்பிரிவுகள் எண்ணிக்கையில் மிகப் பலவாகப் பதியப்பட்டுள்ளன.
ஈசங்கநாடு (விசங்குநாடு),
குங்கிலியன்,
மேநாடு, நாட்டு,
பிரான்மலைநாடு,
சிறுகுடி என்பன அந்த உட்பிரிவுகளாம்.
1901 கணக்கெடுப்பு அறிக்கையில் பதியப்பட்டுள்ளபடி, “மதுரையைச் சேர்ந்த கள்ளர்கள் பத்து அகமணக்கட்டுப்பாடு உடைய முக்கிய பிரிவுகளாக உள்ளனர்.
(மேல் நாடு, சிறுகுடி, மேலக்கோட்டை, புறமனை ஆகிய நான்கு பிரிவுகளே அகமணக்கட்டுப்பாடு உடையன என எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது).
அவை அவர்கள் வாழும் நிலப்பகுதியினை அடிப்படையாகக் கொண்டமைந்தவை. அவை வருமாறு :-
1. மேல் நாடு
2. சிறுகுடி நாடு
3. வெள்ளூர் நாடு
4. மலைக்கோட்டை நாடு
5. பாகனேரி
6. கண்டரமாணிக்கம்
7. கண்டதேவி
8. புறமலைநாடு
9. தென்னிலை நாடு
10. பாளைய நாடு
புறமலை நாட்டின் பிரிவின்தலைவன் இடையர்களால் தேர்வு செய்யப்பட்டு அப்பதவியில் அமர்த்தப்படுகிறான் எனக் கூறப்படுகிறது.
கள்ளர், இடையர் ஆகிய இரு சாதியாருக்கும் இடையே இது போன்ற உறவு ஏற்படக் காரணம் என்ன என்பது தெளிவாகத் புலப்படவில்லை. நாடு என்பது இங்கு ஒரு வட்டாரத்தைக் குறிக்கும் பின்னிணைப்பாகும். இப் பிரிவுகள் மேலும் பல புறமணக் கட்டுப்பாடு உடைய வகுப்புகள் எனப்படும் உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மேல் நாட்டுக் கள்ளர்கள் வடக்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்குத் தெரு என மூன்று உட்பிரிவுகளைக் கொண்டுள்ளனர்.
சிறுகுடி கள்ளர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தாங்கள் வழிபடும் தெய்வத்தின் பெயர்களான ஆண்டி, மண்டை, அய்யனார், வீரமாகாளி என்பன போனற்வற்றைத் தங்கள் வகுப்பாரின் பெயராகக் கொண்டுள்ளனர்.
வெள்ளூர் நாட்டுக் கள்ளர்களின் வகுப்பு பெயர்கள் கேட்க விசித்திரமானவை. வேங்கைப் புலி, வெக்காலிப்புலி, செம்புலி, சாமிப்புலி, சம்மட்டி மக்கள், திருமான், சாயும்படைதாங்கி என்பன அவற்றுள் சிலவாம்.
தஞ்சாவூர் கள்ளர்களின் ஒரு பிரிவினர் தங்கள் வகுப்புக்களுக்குப் பல்லவ ராசா, தஞ்சாவூர் ராசா, தெற்கை வென்றவன், வல்லமை உடைய மன்னன் என்பன போன்ற பலவகை உயர்பட்டப் பெயர்களை உடையவர்களாக உள்ளனர்.
மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகள் சில நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாடு என்ற இப்பெயர் கள்ளர்கள் வாழும் பகுதிகளுக்கு உரியனவாகும் எனத் திரு.நெல்சன் கருதுகின்றார்.
ஒவ்வொரு நாட்டிலும் அதில் வாழும் பல சாதியினைச் சேர்ந்த மக்களிடையே எழும் வழக்குகளைத் தீர்த்து வைப்பதில் முன்னிற்பவன் அந்த நாட்டின் சாதியைச் சேர்ந்த நாட்டானே.
சிவகங்கைச் சமீனைச் சேர்ந்த தேவகோட்டையைச் சுற்றிலும் பதினான்கு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த முகவர்கள் கண்டதேவியில் உள்ள சுவர்ணமூர்த்தி சாமியின் ஆண்டுவிழாத் தொடர்பாகப் பேசி முடிவெடுக்க கண்டதேவியில் கூடுவர். அதே சமீனில் உள்ள ஊஞ்சனை, செம்பொன்மாரி, இறவாச்சேரி, தென்னிலை ஆகிய நான்கும் ஒரு குழுமமாக அமைந்துள்ளன. இவற்றுள் இறுதியில் கூறப்பட்ட தென்னிலை நாடே தலைமை தாங்குதற்குரியது.
சாதிக்குள் மூளும் எல்லா வழக்குகளும் அங்கேயே தீர்க்கப்பட வேண்டும். திருமணம் தொடர்பான உறவுகளில் இந்த நான்கு பிரிவுகளும் ஒரே அகமணக்கட்டுப்பாடுடைய பிரிவாக உள்ளன. அவை மேலும் பல கரைகள் எனப்படும் - குலங்களாக - உட் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வல்லம்பர்களிடையே இந்தக் கரை என்ற பிரிவு ஆண் சந்ததிகளின் வழிப்பட்டுச் செல்பவை. ஆனால் கள்ளர்களிடையே கரைப் பிரிவு நிலவுடைமை தொடர்பாக அமைபவை. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி ஒரு கரையைச் சேர்ந்த பிரிவினருக்கு மட்டுமே உரிய உடமையாக விளங்கும்.
அப்பகுதியின் சட்டப்படியான நில உரிமையாளர்கள் அக் கரைப் பிரிவினைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். ஒருவன் தன் நிலத்தை விற்க முற்படுமுன் கரையைச் சேர்ந்த முகவர்கள் உடன்பாட்டினைப் பெற வேண்டும்.
சிவகங்கையைச் சேர்ந்த நாட்டார் கள்ளர்கள் கிளை அல்லது பிரிவு எனப்படும் புற மணக்கட்டுப்பாடு உடைய கிளைகளாகப் பிரிவுபட்டுள்ளனர். அவை மறவர்களிடையே வழக்கில் உள்ளதைப்போலப் பெண்கள் வழிப்பட்டவை. பிராமணர்கள் உள்ளிட்ட சில சாதியாரிடையே ஒருவன் தன் சகோதரியின் மகளை மணந்து கொள்ளும் வழக்கம் உள்ளது. இது நடைமுறைக்கு முழுதும் இயையாததொரு வழக்கம். இந்த வழக்கம் மேற்குறிப்பிட்ட முறையிலான கிளைகளையுடைய கள்ளர்களிடையே அமைய வாய்ப்பில்லை. ஒரு சிறுமியின் தாய்மாமனும், அச்சிறுமியும் ஒரே கிளையினராக அமைந்து விடுவதுதான் இவ்வாறு இவர்களிடையே உடன்பிறந்தவள் மகளை மணக்கும் வழக்கு அமைய இயலாமல் போவதற்கான காரணமாகும். ஆனால் உடன்பிறந்த சகோதரன் சகோதரி ஆகியோரின் சந்ததிகள் தங்களிடையே மணஉறவு கொள்ள வழி உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் வேறு வேறு கிளையினைச் சார்ந்தவர்களான தங்களுடைய அன்னையரின் கிளையினைச் சேர்ந்தவர்களாக இருப்பதேயாகும்.
சுப்பன் (குரிவிலி கிளை) -- பச்சை (அரசிய கிளை)
கறுப்பன், மகன் (அரசிய கிளை) -- எல்லம்மா, மகள் (அரசிய கிளை)
இராமன் (பெதடன் கிளை) -- மீனாட்சி (அரசிய கிளை)
மேலே தரப்பட்டுள்ள உதாரணத்தில் மீனாட்சியும் கறுப்பனும் ஒரே கிளையை சேர்ந்தவர்களாக உள்ளதால் மீனாட்சி கறுப்பனை மணந்து கொள்ள முடியாது. என்றாலும் அவள் வேறு கிளையினைச் சேர்ந்த இராமனை அவன் எவ்வளவுதான் தன்னைவிட வயதில் சிறியவனாக இருப்பினும் மணந்து கொள்ளக் கடமைப்பட்டவள்.
சிவகங்கைக் கள்ளர்களிடையே ஒரு கிளையைச் சேர்ந்த ஒரு கள்ளன் இறக்கும்போது இறந்து போனவரின் உடமைகளுக்கு உரிமையுடையவன் அந்தக் கிளையினைச் சேர்ந்த மற்ற ஆண்களுக்குப் புதிய துணி வழங்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. அவ்வாறு துணியினைப் பெறும் ஆடவர்கள் அதனைத் தன்னுடன் பிறந்த சகோதரிக்கு வழங்கிவிட வேண்டும். அவள் உடன்பிறந்தவன் அவ்வாறு தராது போவானாயின் அவளுடைய கணவன் அதனைத் தன்னை அவமானத்திற்கு உள்ளாக்கியதாகக் கருதி அவளை விலக்கி வைத்து விடுவான்“ என்று 1891சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளைச் சுற்றி வாழும் கள்ளர்களிடையே பட்டப்பேரு என வழங்கப்படும் புறமணக்கட்டுப்பாடு உடைய குலப்பெயர்க்ள உள்ளன.
அவர்கள் முத்து உடையான், கறுப்ப தொண்டமான் என்பது போலத் தங்கள் குலப்பெயரைப் பட்டப்பெயராகப் பயன்படுத்துகின்றனர். தஞ்சாவூர் மாவட்ட விவரக் குறிப்பில் கள்ளர்கள் உட்பிரிவுகள் ஓநாயன், சிங்கத்தான் என்பது போல மேலும் பல சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
புறமலை நாட்டைச் சேர்ந்த் கள்ளர்கள் சுன்னத்து செய்து கொள்ளும் விசித்திரமான வழக்கத்தை மேற்கொள்கின்றனர். இந்த வழக்கத்தின் தோற்றம் ஊறுதியாகக் கூற முடியாததாக உள்ளது. மதுரை மாவட்டக் கையேட்டில் தங்கள் ஆட்சி முகமதியர் படையெடுப்பால் வீழ்ந்தவுடன் முகமதியர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட குறும்பர்கள் வடக்கு நோக்கி ஓடிவந்த பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வழக்கம் இது எனக் குறிக்கப்பட்டுள்ளது.
சுன்னத்துச் சடங்குக்காக நிச்சயிக்கப்பட்ட நேரம் நெருங்கியதும் சடங்கு செய்து கொள்ளும் சிறுவனை அவன் தாய்மாமன் ஊருக்குப் புறத்தே உள்ள தோப்புக்கோ ஒரு வெட்டவெளிக்கோ தன் தோளில் வைத்துத் தூக்கிச் செல்வான். அங்கு கூடியுள்ள அனைவருக்கும் வெற்றிலை வழங்கிய பின் ஒரு நாவிதன் சடங்கினைச் செய்து முடிப்பான். அந்த இடத்திற்குச் சிறுவனைத் தூக்கிச் செல்லும் போது வழிநெடுகவும், சடங்கின் போதும் சங்கு முழக்கப்படும்.
அச் சிறுவனுக்கு அப்போது புதிய ஆடைகள் புனைவிப்பர். மதுரை மாவட்ட விவரக் குறிப்பில், “ஒவ்வொரு கள்ள இளைஞனும் தன் அத்தை மகளை மணந்து கொள்ளும் உரிமையை வற்புறுத்தலாம். அவனுடைய சுன்னத்துச் சடங்கின் செலவினை அவனுடைய அத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே போன்று ஒவ்வொரு சிறுமியும் பூப்படையும் போது மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்கான செலவுகளை அவளுடைய தாய்மாமன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வற்புறுத்தப்படுவதற்குக் காரணம் அவன் தன் மகனுக்கே அவளை மணமுடித்துத் தர வேண்டும் எனக் கேட்கும் உரிமை பெற்றுள்ளமையாலேயே ஆகும். இந்த இரண்டு சடங்குகளும் ஒரே நேரத்தில் பல சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் செய்து வைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு நல்ல நாளில் சிறுவர் சிறுமியருக்கு நல்ல விருந்திட்டுச் சிறந்த ஆடைகளை அணிவித்து ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வர்.
பெண்களின் அன்னையர் வாழையிலையில் விளக்குச் செய்து ஏற்றி அதனை ஆற்று நீரில் மிதக்க விடுவர். சிறுவர்களுக்கு உள்ளூர் நாவிதன் சுன்னத்துச் சடங்கினை நிகழ்த்துவான்“ எனக் கூறப்பட்டுள்ளது. 1901 மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையில் சிறுகுடி கள்ளர்கள் பயன்படுத்தும் தாலியில் முகமதியர் சின்னமான பிறைநிலவும் விண்மீனும் பொறிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கள்ளர்களின் திருமணம் பற்றித் திரு எம்.எஸ்.நடேசசாஸ்திரி குறிப்பிட்டுள்ள (இந்து விழாக்கள், விரதங்கள், சடங்குகள், 1903, Hindu Feasts, Fasts and Ceremonies, 1903) செய்திகள் வருமாறு :- “மாட்டுப் பொங்கல் நாளன்று மாலை நேரம் நெருங்கும்போது கற்றாழை நார்க் கயிற்றிலும், துணியிலும் காசுகளை முடிந்து அவற்றைக் காளைகள் பசுக்கள் ஆகியவற்றின் கொம்பில் கட்டித் தொங்க விட்டபின் அவற்றைத் தப்பட்டை மற்றும் இன்னிசை முழக்கத் தோடு தெருவில் துரத்தி விடுவர். மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த ஊர்களில் - சிறப்பாகக் கள்ளர்கள் வாழும் ஊர்களில் - கன்னியர் எத்தகைய தீங்குக்கும் உள்ளாகாதவாறு காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்ட துணியினை அவிழ்த்துக் கொண்டு வந்து தங்களிடம் தரும் வீரமிக்க இளைஞர்களேயே தங்களுக்குரிய கணவராக வரிப்பர்.
பரபரப்பான இசை முழக்கத்தாலும் தப்பட்டை ஒலியாலும் கொம்புகளில் சுற்றப்பட்ட பணமுடிப்புகளோடு காளைகள் அச்சமுற்று மிரண்டு தெருவில் ஓடும்படியாகத் துரத்துவர். மிரட்சிக்கு உள்ளாக்குவர். கள்ள இளைஞன் ஒரு குறிப்பிட்ட காளையினைச் சுட்டிக் காட்டித் தான் அதனை அடக்கி அதன் கொம்பிலுள்ளதைக் கொண்டுபோகப் போவதாகக் கூறுவான். சில சமயங்களில் இந்த முயற்சி ஆபத்தில் முடிவதும் உண்டு. ஒரு காளையினைத் துரத்தி அடக்கும் செயலின் போது காயம் அடைவதைக் கள்ளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழிவாகக் கருதுவர்.
கிறிது சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரின் பாடலை எடுத்துக் காட்டித் திரு.கனகசபைபிள்ளை (ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் 1904) ஆயர்கள் இடையே அந்நாளில் நிலவிய இந்தப் பழக்கத்தைப் பின்வருமாறு விவரித்துள்ளார்:- “பெரிய நிலப்பரப்பு கூர்முட்களிட்டும், கம்பங்கள் நட்டும் வளைக்கப்படும். அவ் வளைவினுள் கொம்புகள் சீவிக் கூராக்கப்பட்ட வெறி கொண்ட காளைகளைத் துரத்தி வீடுவர். அந்த வளைவினை நோக்கியபடி உயரத்தில் மேடை அமைத்து அதில் மணம் செய்விக்கப்படுவதற்குரிய ஆயர் குலக் கன்னியர் நின்றிருப்பர்.
ஏறுதழுவ முற்படும் ஆயர் குல இளைஞர்கள் முதலில் முதிய ஆலம் அல்லது அரச மரங்களின் கீழ் இருக்கும் தெய்வங்களின் உருவங்களை அல்லது குளக்கரையில் இருக்கும் தெய்வங்களை வணங்கிய பின் சிவந்த காந்தள் மலர்களாலும், ஊதா நிறக் காயா மலர்களாலும் ஆன மாலைகளை அணிந்து கொள்வர். முரசு முழக்கம் ஏறு தழுவுதல் தொடங்க இருப்பதை அறிவித்தவுடன் அந்த இளைஞர்கள் வலைவினுள் குதித்து முரசு முழக்கத்தால் மிரண்டு அவர்கள் மேல் பாய்வதற்காக முனைபோடு சீறிய இளைஞனும் தான் தழுவி அடக்கத் தேர்ந்தெடுத்துள்ள காளையினை நெருங்குவான்.
அக்காளைகளோ வாலை உயர்த்தியபடி அவர்களைத் தாக்கக் கொம்புகளை முன்னோக்கி நீட்டியபடிக் கோபத்தோடு அவர்கள் மீது பாய முற்படும். சில இளைஞர்கள் பிடிப்பர். சிலர் ஒரு பக்கமாக ஒதுங்கி அவற்றின் வால்களைப் பிடிப்பர். மிக்க ஆற்றல் வாய்ந்த சில இளைஞர்கள் அவை அவர்களைத் துள்ளித் தரையில் தூக்கி வீசும்வரை அவற்றைப் பிடித்துத் தொங்குவர். நற்பேறு வாய்க்கப் பெறாத இளைஞர் பலர் இதுபோல வீழ்ந்து படுவர்.
சிலர் உடலில் சிறு காயமும் படாது தப்ப, மற்றவர்கள் காளைகளின் கால்களால் மிதிக்கப்பட்டும் அவற்றின் கொம்புகளால் குத்தித் துளைக்கப்பட்டும் வீழ்வர். சிலர் காயம்பட்டுக் குருதி வழிய நேர்ந்தாலும் மீண்டும் காளைகளின் மீது பாய்ந்து பற்றுவர். காளைகளை அடக்குவதில் இறுதியில் வெற்றிபெறும் மிகச் சிலர் அன்றைய ஏறு தழுவலில் வாகை சூடியவர்களாக அறிவிக்கப்படுவர். அதன் பின் பெரியோர்கள் ஏறுதழுவுதல் விழா முடிவுற்றதாக அறிவிப்பர் புண்பட்டவர்கள் வளைவிலிருந்து அகற்றப்பட்டு மருத்துவ உதவி அளிக்கப் பெறுவர். வெற்றி பெற்றவர்களும் அவர்களை மணக்க உள்ள கன்னியரும் அருகே உள்ள சோலைக்குச் சென்று மண ஏற்பாடுகள் நிகழும் வரை கூடியாடி மகிழ்வர்.
கள்ளர்கள் திருமணம் பற்றித் திரு.நெல்சன் தந்துள்ள விவரம் வருமாறு:-
“கள்ளர்களின் கருத்துப்படி ஓர் ஆணுக்கும் அவனுடைய அத்தைமகளுக்கும் இடையே ஏற்படும் மண உறவே பொருத்தமான மண உறவாகும். ஒருவனுக்கு அத்தகைய உறவு முறையிலான மணமகள் இருப்பாளானால் அவர்களுக்கிடையேயான வயதில் எவ்வளவு வேறுபாடு இருப்பினும் அவன் அவளையே மணந்தாக வேண்டும். பதினைந்து வயதுடைய ஒரு சிறுவன் அவனுடைய அத்தைமகள் முப்பது அல்லது நாற்பது வயதுடையவளாக இருந்தாலும் கூட அவளுடைய தந்தை அவனை வற்புறுத்துவனாகில் அவன் அவளை மணந்தாக வேண்டும். ஒருவனுக்கு இத்தகைய அத்தை மகள் வாய்க்கவில்லை யாயின் அவன் தன் அத்தை அல்லது ஒன்றுவிட்ட அத்தைமகள் அல்லது நெருங்கிய உறவினர் ஆகியவர்களுள் யாரேனும் ஒருவரை மணக்கக் கடமைப்பட்டவனாவான்.
அவனுடைய தந்தையோடு உடன்பிறந்த சகோதரனுக்கு ஒரு மகள் இருந்து அவள் தந்தை இவன் அவளை மணந்தாக வேண்டும் என வற்புறுத்தினால் இவன் அவளை அவளுடைய வயது வேற்றுமையைப் பொருட்படுத்தாது மணந்தே ஆக வேண்டும். மேற்குப் பகுதிகளைச் சார்ந்த கள்ளர்களின் பழக்கங்களில் ஒன்று விசித்திரமானது. ஒருத்தி ஒரே சமயத்தில் தொடர்ந்து பத்து, எட்டு, ஆறு, இரண்டு கணவர்களை உடையவளாக இருப்பாள். அவர்கள் அனைவரும் அவளுக்குப் பிறந்துள்ள குழந்தைகளுக்குத் தநதையராகப் பொதுவாக வைத்து எண்ணப்படுகின்றனர்.
இதனினும் வியப்பிற்குரியது அவ்வாறு அவளுக்குப் பிறந்த குழந்தைகள் வளர்ந்தபின் பத்து, எட்டு அல்லது ஆறு தந்தையருக்குப் பிறந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளாமல் தங்கள் தந்தையர் எட்டும இரண்டும் எனவும் ஆறும் இரண்டும் எனவும் நாலும் இரணடும் எனவும் கூறிக் கொள்வதுதான். இவ்வாறு தந்தையரின் எண்ணிக்கையை இவர்கள் பிரித்துக் கூறிக் கொள்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
மணச்சடங்கு நிகழ்ச்சியின் போது மணமகளின் உடன்பிறந்தவள் மணமகளின் பெற்றோரின் இல்லம் சென்று அவர்களிடம் இருபத்தொரு காளி பணமும் ஒரு சேலையும் தருவதோடு அப்போதே மணமகள் கழுத்தில் குதிரையின் மயிர் ஒன்றினைக் கட்டி விடுவாள். அதன்பின் அவள் மணமகளையும் அவள் உறவினர்களையும் மணமகன் இல்லத்திற்கு அழைத்து வருவாள். அங்கு விருந்து நிகழும்.
விருந்துக்காக மறிகள் வெட்டப்படும். அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கும்படியாகச் சாராயம் தாராளமாக வழங்கப்படும். அதன்பின் மணமக்கள் மணமகன் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு இரு வீட்டாரும் தங்களுக்கிடையே வளரி தடியினை மாற்றிக் கொள்ளும் சடங்கு சிறப்புக்கு உரியதாக நிகழ்த்தப்படும். மணமகள் இல்லத்தில் இன்னொரு விருந்து நடைபெறும். அப்போது மணமகளின் பெற்றோர் அவளுக்கு ஒரு மரக்கால் அரிசியும் ஒரு கோழியும் பரிசளிப்பர். அதன் பிறகு அவள் தன் கணவனுடன் அவன் இல்லம் அடைவாள்.
மணம் நிகழ்ந்த முதல் பன்னிரண்டு மாதங்களின் போது மணமகளின் பெற்றோர் மணமக்களைத் திருவிழாக்களின்போது ஓரிரு நாள்கள் அழைத்து விருந்து வைப்பதோடு அவர்கள் திரும்பும்போது அவர்களுக்கு ஒரு மரக்கால் அரிசியும் ஒருகோழியும் அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புவர்.
திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பொங்கல் விழாவின்போது மருமகனுக்கு ஐந்து மரக்கால் அரிசி, ஐந்து இணை புதுப்பானைகள், தட்டுக்கள், ஐந்து சீப்பு வாழைப்பழம், ஐந்து தேங்காய், ஐந்துகட்டி வெல்லம் ஆகியனவற்றைப் பரிசாக அளிப்பது வழக்கம். கணவன் மனைவியரில் யார் ஒருவர் விரும்பினாலும் மணமுறிவினை எளிதில் பெறலாம்.
தன் மனைவியிடம் திருப்தியுறாத கணவன் தன் உடமைகளில் ஒரு பாதியினை அவளுக்குத் தர முன் வருவானாயின் அவனை மணமுறிவு செய்து அனுப்பிவிடலாம். அதே போல ஒருத்தி தன் கணவன் செலுத்திய நாற்பத்தொரு காளி பணங்களைத் திரும்பச் செலுத்தியபின் அவனைப் பிரிந்து போகலாம். கைம்பெண் ஒருத்தி தன் விருப்பம்போல் ஒருவனை மணந்துகொள்ளலாம். அவ்வாறு மணக்க முன்வருபவன் அவளுக்குப் பத்துப் பணம் பரிசளிக்க வேண்டும்
நாட்டார் கள்ளர்கள் இடையே மணம் செய்து கொண்ட ஒருபெண்ணின் உடன் பிறந்தவன் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலின் போது அரிசி, ஆடு, சேலை ஆகியனவற்றை அவள் வாழ்நாள் முழுதும் தந்து வர வேண்டும் என்று மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் தொடார்பாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளரிதடியை மாற்றிக் கொள்ளும் வழக்கம் பலராலும் கைவிடப்பட்டு வருகின்றது. எனினும் ‘வளரிதடியினை அனுப்பி மருகளை அழைத்துவா‘ என்ற பழமொழி இன்னமும் வழக்கில் உள்ளது. மணமகள் கழுத்தில் கட்டப்படுவதாகக் கூறப்படும் குதிரையின் மயிருக்குப் பதிலாகப் பருத்தி நூலிலேயே தாலிகோத்துக் கட்டப்படுவதாகத் தெரிய வருகிறது.
குதிரை மயிரலான கழுத்து அணியினைப் பூப்படையாத சிறுமியரும், மணம் புரிந்து கொள்ளாத பெண்களும், கைம்பெண்களும் ஆகிய இவர்களே அணிந்து வருகின்றார்கள். இதே போன்ற கழுத்தணியினை மறவர், வலையர், மொரச பறையர், புறமலைக்கள்ளர் ஆகிய பிற சதியாரும் அணிந்து வருகின்றனர். புறமலைக் கள்ளர் பிரிவைச் சேர்ந்த பெண்களை அவர்கள் தங்கள் தாலியோடு கோத்து அணிந்து கொள்ளும் முக்கோண வடிவிலான பதக்கத்தை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.
“ஒரு சிறுமி பூப்படைவாளாயின் அவள் குழந்தைப் பருவத்திலிருந்து கழுத்தில் அணிந்து வந்த பாசிமணி மாலையை அகற்றிவிட்டுக் கள்ளர் சாதிப் பெண்களுக்கே உரிய குதிரை மயிராலான கழுத்தணியை அணிந்து கொள்கின்றாள். இதனை அவள், தான் இறக்கும்வரை கைம்பெண்ணாகிவிட்டாலும் கூடத் தொடர்ந்து அணிந்து வருவாள்.
செல்வர்களான கள்ளர்கள் குதிரை மயிருக்குப் பதிலாக வெள்ளியாலான கம்பி இழைகள் சிலவற்றை முறுக்கிக் கழுத்தணியாக அணிவர். திருமங்கலத்தில் உள்ள பெண்களில் பலர் வியக்கத்தக்க வகையில் அளவில் பெரிய ஆறு, ஏழு அங்குலங்கள் நீளமுள்ள பதக்கங்களைக் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர்“ என மதுரை மாவட்ட விவரக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1891 கணக்கெடுப்பு அறிக்கையில் “ஒரு கள்ளன் மணமுறிவுக்கு அடையாளமாக சாதியினைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் ஒரு வைக்கோல் துரும்பினைத் தருவான். தமிழில் ‘துரும்பினைக் கொடுத்தல்‘ என்று வழக்கு மணமுறிவினையும் ’துரும்பினை ஏற்றல்‘ என்ற வழக்கு மணமுறிவுக்கு உடன்பாடு தெரிவித்தலையும் குறிக்கும்“, எனக் குறிக்கப்பட்டுள்ளது.
கள்ளருள் சில பிரிவினர் பிராமணப் புரோகிதர்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டவர்களாகப் புராண முறையிலான திருமணச் சடங்குகளை மேற்கொள்கின்றனர். வயது வந்தபின் பெண்களுககு மணம் செய்வித்தலே இவர்களுடைய வழக்கம் எனினும் பிராமண வழிப்பட்ட கள்ளர் சிலர் குழந்தை மணம் செய்வித்தலையும் மேற்கொள்கின்றனர். இந்த வழக்கத்தினைப் புறமலைக் கள்ளனர்கள் தீவீரமாக எதிர்க்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்ணை மணம் செய்து கொடுத்தபின் அவள் முதன்முதல் பிள்ளை பெற்றுக்கொள்ளும்வரை ஆண்டுதோறும் அவளுக்குக் கோழி, அரிசி, ஆடு, வெல்லம், வாழைப்பழம், வெற்றிலை, மஞ்சள், பலசரக்குகள் ஆகியனவற்றைப் பிறந்த வீட்டார் கொடுத்துவர வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.
வயது வந்தபின் மணம் செய்விப்பதால் இவ்வாறு அன்பளிப்புத் தர வேண்டிய காலப்பகுதி குறைந்து அதிகப்படி செலவு மீதமாகின்றது. கள்ளர் பிரிவினர் சிலர் திருமணம் தொடர்பாக நான் சேகரித்த தகவல்களின்படி ஒரு பெண்ணின் திருமணத்திற்கு அவள் தாயம்மன் உடன்பாடு பெறுதல் இன்றியமையாதது எனத் தெரிய வருகின்றது. மண உறுதிச் சடங்கிற்கு மணமகன் தந்தையும் அவன் தாய்மாமனும் பெண் கேட்டுச் செல்வார்.
அங்கு விருந்து நடைபெறும், மணத்திற்காக் குறிக்கப்பட்ட நாளினை
மஞ்சள் தோய்த்த இரண்டு பனையோலைகளிலோ சிவப்புத் தாளிலோ எழுதுவர். தாய்மாமன்மார் அதனைத் தங்களுக்குள் மாற்றிக் கொள்வர். மணநாளன்று மணமகனின் உடன்பிறந்தவள் மலர், தேங்காய், வெற்றிலை, அகத்திக்கீரை, நெல், பால், நெய் ஆகியனவற்றை ஏந்திவரும் பெண்களோடு மணமகள் இல்லம் செல்வாள். ஒரு சேலையும் வண்ணானிடமிருந்து பெற்ற சிவப்புத் துண்டில் சுற்றப்பட்ட தாலிச் சரடும் அடங்கிய கூடையினை மணமகன் உடன்பிறந்தவளோ அவன் குலத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணோ ஏந்தி வருவாள், மணமகள் இல்லம் செல்லும் வழி நெடுக இரு பெண்கள் சங்கினை முழங்கியபடி இருப்பர்.
மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்கள் மணமகன் வீட்டிலிருந்து வந்தவர்களிட்ம அவனுடைய குலம் பற்றிக் கேட்பர். அவர்கள் நாங்கள் அகல்யகோத்திரதைச் சேர்ந்த தளவல நாட்டு இந்திர குலத்தவர் என்பதுபோல விடையிறுப்பர். மணமகன் உடன்பிறந்தவள் தாலியினை எடுத்துக் கூடியுள்ளவர்கள் தொட்டு வாழ்த்தும்படியாக அனைவரிடமும் காட்டிய பின் மணமகள் கழுத்தில் கட்டி அதற்கு மலர்களை அணிவிப்பாள். பின்னர் மணமகள் மணமகன் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாள்.
அங்கிருந்து மணமக்கள் மறுநாள் மணமகள் இல்லம் திரும்புவர் மணமுடித்துக் கொண்ட புது மணமகன் ஒரு பலகையில் அமர்ந்திருக்க மஞ்சள் நீரும், சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்த சோறும் அவர்களைச் சுற்றி ஆரத்தியாகக் காட்டப்படும். அப்போது பெண்கள் “கில்லா, ல்லலா, ல்லா; கில்லா, ல்லலா, ல்லா;“ எனக் குலவை இடுவர். இச் சடங்கு குலவையிடல் எனப்படும். சிலபோது இதனைத் தாலிகட்டும் போதும் நிகழ்த்துவர்.
தஞ்சாவூர் மாவட்ட விவரக் குறிப்பில் கள்ளர்கள் திருமணம் தொடர்பாகப் பதியப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு :- “மணமகன் மணமகள் வீட்டிற்கு வந்து சேரும் நிகழ்ச்சி சிலபோது சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக விளக்கப்பட்டுள்ளது. தன் தாய்மாமன் துணை வரக் குதிரையில் ஏறி மணமகள் இல்லம் அடையும் மணமகனையும் அவனுடன் வருவோரையும் ஏறிச் சென்று எதிர்கொண்டு மணப்பந்தலுக்கு அழைத்துச் செல்வான். அங்கு மணமகளின் தந்தை அவனை எதிர்கொண்டு வெற்றிலை பாக்கில் ஒரு ரூபாய் வைத்துத் தருவார். மணமகளின் தாயார் அவன் பாதங்களைப் பாலாலும், நீராலும் கழுவிக் கால்விரல்களுக்கு மெட்டி அணிவிப்பாள். தாலியினை நூலில் கோப்பதற்குப் பதிலாக வெள்ளி அல்லது தங்கத்தாலான கழுத்துச் சங்கிலியில் கோத்திருப்பர். எனினும் கறுப்பான தெய்வம் கோபம் கொள்ளும் என்ற அச்சத்தால் பின்னர் அதனை நூலிலேயே கோத்துக் கொள்வர்.
மணமகன் உடன் பிறந்தவளோ சுமங்கலியான வேறொருத்தியோ கையில் ஒரு விளக்கை ஏந்தி நிற்பாளெனினும் அது இடையில் அணைந்து போகுமேல் அபசகுனமாகப் போய்விடும் என்ற அச்சத்தால் அதனை ஏற்றாமலேயே வைத்திருப்பர். சில பகுதிகளில் தாலியினை மார்பில் தொங்கும்படியாக அணிவிப்பர்.
தன் கணவனோடு வாழ்ந்த வாழ்க்கையின் போது பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவள்கூட, விரும்பினால் அவனை விடுச் சென்று வேறொரு கணவனை மணந்து கொள்ளலாம். கைம் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் போது அவள் குழந்தைகள் இறந்துபோன கணவனுடைய வீட்டிலிருந்து வாழ்வதுபோல இங்கும் அவள் குழந்தைகள் முதல் கணவனுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். இந்த மறுமணம் தொடர்பாகக் கள்ளர் சாதிப் பெண்கள் பெற்றுள்ள உரிமையைப் பற்றி, “நூல் நூற்கின்ற கட்டையில் நூல் இல்லாதிருந்தாலும் இருக்கலாம் கள்ளர் சாதி பெண்கள் கழுத்து நூல் இல்லாது இருக்காது“ என்ற பழமொழியும் “ எந்த நூல் அறுந்தாலும் கள்ளர் சாதிப் பெண்கள் கழுத்து நூல் அறாது“ என்ற பழமொழியும் தெளிவு படுத்துவனவாம்.
நன்றி : காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்