|
இங்குதான் ‘ஸ்ரீகயிலாசநாதர்’ என்ற திருநாமத்துடன் சிவனார் அருள் பாலிக்கும் பழைமையான ஒரு சிவாலயம் கம்பீரமாக அமைந்துள்ளது. ராஜ கோபுரம், மண்டபங்கள், அழகும் சிற்ப நயமும் நிறைந்த பரிவார விக்கிரகங்கள், திருக்குளம் என்று ஆலயம் சற்று விரிவாகவே உள்ளது.
|
முன் காலத்தில் தஞ்சைப் பகுதியை ஒட்டி தென் பெரம்பூர், வெள்ளாம்பெரம்பூர், கள்ளப் பெரம்பூர் ஆகிய பகுதிகள் இருந்தன. இவை மொத்தமும் சேர்ந்து ‘பிரம்பு நாடு’ என்றே அழைக்கப்பட்டன. ‘தேவாரத்தில் அப்பரால் குறிக்கப்படும் ‘பிரம்பில்’ எனும் வைப்புத் தலம் தஞ்சைக்கு அருகில் உள்ள இந்தக் கள்ளப்பெரம்பூரே!’ என்று ஈரோடு தங்கவேலனார் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அதே நேரம், ‘அப்பர் குறிப்பிடும் பிரம்பில் திருத்தலம், மயிலாடுதுறைக்கு அருகில்- மங்கை நல்லூரை அடுத்துள்ள பெரம்பூராகும்’ என்று செங்கல்வராயப் பிள்ளை குறிப்பிடுகிறார். என்றாலும், கள்ளப்பெரம்பூரையே வைப்புத் தலமாக கொள்கிறார் கள் தஞ்சைவாசிகள். வழிபாட்டுக்கு வலு சேர்ப்பதில் தவறில்லைதான். இதுவே வைப்புத் தலம் என்பதற்குச் சில கல்வெட்டு ஆதாரங்களும் உண்டு என்கிறார்கள் தஞ்சைவாசிகள்.
‘சோழர்கள் காலத்திய ஆறு கல்வெட்டுகள் இந்த ஆலயத்துக்கென்று உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திய ஒரு கல்வெட்டில், இந்த ஊர் பிரம்பில் என்றும், இராஜ சுந்தரி சதுர்வேதி மங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே அரசனின் மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலை ‘ஸ்ரீகயிலாயம்’ என்றும், ‘குலோத்துங்க சோழீச்சரம்’ என்றும் குறிப்பிடுகிறது. எனவே, தற்போது ஆலயத்தில் காணப்பெறும் கட்டுமான அமைப்பு, முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் செய்யப்பட்ட திருப்பணியே! அதாவது சுமார் 900 வருடங்களுக்கு முன்பு.
தவிர, மூன்றாம் ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங் கன் ஆகிய சோழ அரசர்களின் கல்வெட்டுகளோடு, தஞ்சை நாயக்க அரசன் விஜயராகவன், இந்தக் கோயிலுக்கு அளித்த கொடை பற்றிய செய்தி கூறும் கல்வெட்டு ஒன்றும் உண்டு என்கிறது ஒரு குறிப்பு.
|
கந்த சஷ்டி பத்து நாள் உற்சவம் கோலாகலமாக நடக்கும். இதுல சூர சம்ஹாரம், கோயில் உபயம். அதுக்கான புறப்பாடு வாகனங்கள் எல்லாம் அப்ப இருந்தது. மடங்களும் அன்ன சத்திரங்களும் கோயிலுக்கு அருகே இருந்தன.
|
‘‘சூரிய பூஜை இங்கே சிறப்பு. ஒவ்வொரு வருஷமும் பங்குனி மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் செந்நிறக் கதிர்கள் கயிலாசநாதரை தரிசிக்கும் காட்சியைக் காணலாம். சூரிய பூஜையின்போது கயிலாசநாதரை தரிசிப்பது சிறப்பு. ஆலயத்துக்கு வெளியே சூரிய புஷ்கரணி. இதுதான் தலத்தின் தீர்த்தம். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் தரும் தலம் இது. அவர்கள் இங்கு வந்து ஸ்ரீகயிலாசநாதரை வழிபட்டு, அபிஷேகம் செய்து விளக்கேற்றி வழிபட்டால், நலம் பெறுவார்கள்.
|
நுழைவுப் பகுதியில் இரண்டு பெரிய தூண்கள். இதுதான் கோயிலின் துவக்கம். இங்கு ஒரு ராஜ கோபுரம் இருந்திருக்கலாம் என்கிறார்கள். வெளியே திருக்குளம். சூரிய புஷ்கரணி. நீர் நிரம்பி அழகாகக் காட்சி தருகிறது. கொடிமரம் இல்லை. பலிபீடம். நந்தி மண்டபம். பிரதோஷ நந்திதேவர் இங்கே காட்சி தருகிறார். பழைய நந்திதேவரின் தலையை யாரோ விஷமிகள் சிலர் பின்னப்படுத்தி விட்டதால், புதிய நந்திதேவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய நந்தி தேவரும் அருகிலேயே இருக்கிறார். பிரதோஷ வழிபாடு நடந்து வருகிறது.
ஆலயத்தினுள் நுழையுமுன் _ அதாவது பிரதோஷ நந்திதேவருக்கு வலப் பக்கமாக அம்மன் சந்நிதி. முழுக்க முழுக்க செங்கல் கட்டுமானம்.
|
அம்பாள் திருநாமம்: ப்ரமத்ஸ ஸ்ரீமதி நாயகி. தமிழில், பெரியநாயகி என்கிறார் கள். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற விஸ்தாரமான அமைப்புடன் திகழ்கிறது அம்மன் சந்நிதி. தரைத் தளத்தை விட சற்று உயரத்தில்- அதாவது ஏழு படிகள் ஏறிச் சென்றே அன்னையை தரிசிக்க முடியும். அம்மனை வலம் வரும் வசதி உண்டு. ஆனால், செடிகள் மண்டிக் கிடக்கின் றன. செல்வது சிரமம். சந்நிதிக்கு விமா னம் உண்டு. முதலிலேயே, சக்தியைத் தரிசனம் செய்ததாலோ என்னவோ.... ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் ‘சக்தி கணபதி’ தரிசனம் தருகிறார். ஆலயம், கருங்கல் மற்றும் செங்கல் கட்டுமானம் கொண்டு விளங்குகிறது. அடுத்து வருவது ராஜகோபுரம்.
பிராகார வலம் வருவோம். துவக்கத்தில், மடப் பள்ளி. ஏகத்துக்கும் சிதிலமாகி காணப்படுகிறது. ‘‘தினமும் இரண்டு மரக்கால் அரிசி வடித்து பிரசாத விநியோ கம் நடந்த மடப்பள்ளி இது. பொங்கல், புளி சாதம், தயிர் சாதம் என்று வேளா வேளைக்கு விதம் விதமாக பிரசாதம் போடுவார்கள். இதெல்லாம் நானே பார்த்திருக்கிறேன். ஆனால், சமீபத்திய நிலைமையைச் சொல்லவே மனம் வேதனைப்படுகிறது. இந்த மடப் பள்ளி அடுப்பின் புகையைப் பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன’’ என்கிறார் தியாகராஜ ஐயர் என்பவர். இவர், இதே ஊர்க்காரர்.
|
கயிலாசநாதரின் கோஷ்டத்தில் திருஞான சம்பந்தரை தரிசிப்பது வித்தியாசமான ஒன்று. இதுபோல் அமைந்த திருத்தலங்கள் அபூர்வம். ‘அப்பரால் வைப்புத் தலமாகப் பாடப்பட்டிருப்பதால், திருஞானசம்பந்தர் இங்கு வந்து சென்றிருக்கலாம்’ என்பது ஆன்மிக பிரமுகர்கள் சிலரது கருத்து. தவிர கோஷ்டத்தில் நடராஜர், குக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகிய விக்கிரகங்கள் காட்சி தருகின்றன. கோஷ்டத்தில் இருக்க வேண்டிய பிரம்மா, துர்கை ஆகிய விக்கிரகங்கள் இல்லை. களவாடப்பட்டு விட்டனவாம். ஈஸ்வரனின் கோஷ்டத்தில் நடராஜர் இருப்பதும் வெகு அபூர்வம். தரிசிக்க வேண்டிய வடிவம் இது. பிராகாரத்தில் பரிவாரங்களாக நிருதி கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டி கேஸ்வரர் ஆகிய விக்கிரகங்களும் இருக்கின்றன. நான்கு திருக்கரங்களுடன் அழகாக, சிற்ப நயத்துடன் காணப்படுகிறது ஸ்ரீசுப்ரமண்யரது விக்கிரகம்.
பிராகாரத்தில் நெல் நிரப்பி வைப்பதற் காக இரண்டு பெரிய பத்தாயங்கள் (குதிர்கள்) இருக்கின்றன. ஆலயம் வசதியாக இருந்த காலத்தில் இவற்றில் நெல்லைக் கொட்டி வைத்து, மீதியை அம்பாள் சந்நிதிக்கு முன் சேகரித்து வைப்பார்களாம். பொருள் வைப்பு அறை, சேதமாகிப் போன ரிஷபம் மற்றும் மூஞ்சூறு ஆகிய வாகனங்களை இங்கே காணலாம். கோயிலின் தல விருட்சமான வன்னி மரம் சுமார் இருநூறு வருடங்கள் பழைமையானதாம்.
|
பைரவர், பசுபதீஸ்வரர், நாகர் போன்ற விக்கிரகங்களும் அருள் பாலிக்கின்றன. பிராகார வலம் முடிந்து ஸ்ரீகயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறோம். சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தலத்தைக் கயிலாயம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் சோழ மன்னர்கள். பழைய ஓலைச் சுவடிகளில் இந்த ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவாம். அவ்வப்போது, ‘இந்தக் கயிலாசநாதருக்கு அபிஷேகம் செய்து வணங்க வேண்டும் என்று எங்கள் ஜோசியர் சொல்லி இருக்கிறார்’ என்று வெளியூர்களில் இருந்து அன்பர்கள் சிலர், கஷ்டப்பட்டு இந்த ஆலயத்தைத் தேடி வருவதும் உண்டாம்.
|
குறிப்பாக, சித்தப் பிரமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த ஆலயம் பரிகாரமாகச் சொல்லப் பட்டுள்ளதாம். கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர் ஒரு காலத்தில் கன ஜோராகத் தான் ஆட்சி செலுத்தி வந்திருக்கிறார்.
கிழக்கே பார்த்த லிங்கத் திருமேனி. முன்னால் ஒரு மண்டபத்தில் விநாயகர், இரண்டு லிங்க வடிவங்கள், தம்பதி சமேதராக சூரிய பகவான் அவரைச் சுற்றிலும் மற்ற நவக்கிரக மூர்த்திகள் ஆகியோரது சிலா திருமேனிகள் அருள் பாலிக்கின்றன. பள்ளியறை இருக்கிறது. மகா மண்டபத்தில் பலிபீடம்; நந்திதேவர். சமீப காலத்தில், அடியார்களின் திருக்கூட்டத்தைப் பெருமளவில் பார்த்திராத கயிலாசநாதர், கண் கொள்ளா தரிசனம் தருகிறார்.
|