திங்கள், 9 டிசம்பர், 2019

தஞ்சை ப்ரகாஷ் கரைமீண்டார்


கரைமீண்டார்என்பது சோழர் கல்வெட்டுகளில் காணப்படும் போர்விரர்களின் பட்டம். கடாரம் போன்ற நாடுகளில் போர்புரிந்து வெற்றியோடு கரை மீண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் ஆகும். அப்படி புகழ் பெற்ற கரைமீண்டார் குடும்பத்தில் பிறந்தவர்தான் தஞ்சை ப்ரகாஷ்.



கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்! - வெ.நீலகண்டன்

தஞ்சை ப்ரகாஷ்! 1980-90களில் தமிழகத்தின் கிழக்கு மண்டலத்தில் இலக்கியம் எழுதவந்த அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருந்த பெயர். வாட்டசாட்டமான உருவம், முன் வழுக்கை, நீண்டு பேணப்பட்ட தாடி, அடர் மீசை, அகன்று சுடர்விடும் கண்கள், வேட்டிக்குப் பொருத்தமற்ற சட்டை எனத் தஞ்சை ப்ரகாஷைப் பார்த்தவுடனே சிறிதானதொரு மிரட்சி தோன்றும். பேசத் தொடங்கிவிட்டால் அவருக்குள்ளிருக்கிற குழந்தைத்தனங்களும், அதற்கு நேரெதிரான அறிவாளுமையும் நம்மையறியாமல் அவருக்கு நெருக்கமாக்கி கட்டிப்போட்டுவிடும்.

படைப்பாளியாக, இதழாளராக, இசைக் கலைஞனாக, ஓவியனாக மட்டுமின்றி, ஒரு தீவிர இலக்கியச் செயல்பாட்டாளராகவும் இருந்த தஞ்சை ப்ரகாஷ், கரமுண்டார் வீட்டில் பிறந்தவர். அவருடைய பூர்வீகக் கிராமத்தின் பெயர் கரமுண்டார் கோட்டை. பெரும் மதில்கள்கொண்ட அந்த வீட்டில், ஊரின் கதைகளையெல்லாம் சுமந்துகொண்டு உலவித்திரிந்த அப்பாயிகளிடமிருந்து கேட்டுப்பெற்ற தன் தொன்ம உறவுகளின் ஆளுமைகளைத்தான் தன் அடர்மொழியில் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் எழுதிக் குவித்தார் ப்ரகாஷ்.

சர்க்கரை நோய், எலும்பு முறிவால் ஏற்பட்ட ஆஸ்டியோமைலட்டீஸ், சிறுநீரகக் கோளாறு என உடம்பில் பல்வேறு நோய்களைச் சுமந்துகொண்டு, ஒரு நொடியும் ஓய்வாக இருக்காமல் இலக்கியக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார் ப்ரகாஷ். ‘ஒளிவட்டம்’, ‘சும்மா இலக்கியக் கும்பல்’, ‘கதைசொல்லிகள்’, ‘தளி’, ‘தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை’, ‘தனிமுதலி’, ‘தாரி’, ‘கூடுசாலை’ என ஏராளமான இலக்கிய அமைப்புகளை நடத்தினார் ப்ரகாஷ். பத்து இலக்கியவாதிகள் கூடிவிட்டால், ராஜராஜ சோழன் சிலைக்குக் கீழே ஒரு கூட்டம் நடத்திவிடுவார். சினிமா, உலக இலக்கியம், புத்தக விமர்சனம், சிறுகதை வாசிப்பு என ராஜராஜனே மிரளும் அளவுக்கு அந்த இடம் இலக்கியத்தில் அரங்கேறியிருக்கிறது.

நல்லதொரு படைப்பைப் படித்துவிட்டால், எப்பாடுபட்டாகிலும் அந்தப் படைப்பாளியைப் பிடித்து நாலு வார்த்தை பாராட்டிப் பேசாமல் விட மாட்டார் ப்ரகாஷ். அதேநேரம், விமர்சனக் கூட்டங்களுக்கு அவரைக் கூப்பிடுவோர் ஒன்றுக்கு பத்துமுறை யோசித்துத்தான் அழைப்பார்கள். ‘சௌந்தர சுகன்’ என்ற இதழை நடத்தியவரான சுகனும் ப்ரகாஷூம் மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் இணைந்து பல இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்தியிருக்கிறார்கள். அந்த சுகனின் கவிதைப் புத்தக வெளியீட்டு விழா... வாழ்த்திப் பேசத்தான் ப்ரகாஷை அழைத்தார்கள். மைக்கைப் பிடித்து, “இந்தத் தொகுப்பில் கவிதைகளே இல்லை... எல்லாம் குப்பைகள்” என்று விலாச, அரங்கம் கலகலத்துவிட்டது. பொதுவாகப் ப்ரகாஷ் பேசுகிற எல்லா மேடைகளும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

சொல்லிக்கொள்ளும்படி ப்ரகாஷுக்கு சம்பாத்தியம் ஏதுமில்லை. அம்மா, டாக்டர். அப்பா எல்.ஐ.சி-யில் இருந்தார். ‘வருமானத்திற்கு’ குறையில்லை. அவர்கள் இருக்கும் வரை ப்ரகாஷின் இலக்கியமெல்லாம் அவர்களது வருமானத்தில்தான். அவருக்குப் பிறகு மனைவி மங்கையற்கரசி... கம்யூனிட்டி ஹெல்த் நர்ஸாக இருந்தார். அவரது சம்பளமெல்லாம் க.நா.சு-வின் ‘பித்தப்பூ’வாகவும், சி.எம்.முத்துவின் ‘கறிச்சோறா’கவும், ‘வெசாஎ’-வாகவும் ‘குயுக்தமா’கவும் மாறிவிடுவதுண்டு.

ப்ரகாஷ் நிறைய இதழ்களை நடத்தியிருக்கிறார். இதழ்களையும் ஓர் இயக்கம்போலவே நடத்துவார். இதழ்களின் செலவுக்கென எவரிடமும் போய் நிற்க மாட்டார். ‘குயுக்தம்’ இதழின் இரண்டாவது அட்டையில் கொட்டை எழுத்தில் இப்படி அறிவிப்பு இருக்கும்: “நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா? உங்கள் படைப்புகளை பத்திரிகைகள், புத்தக நிலையங்கள், பண்டித, புலவ, வித்வ சிரோன்மணிகள் மறுக்கின்றனரா? இதோ, குயுக்தம் அதற்கென வெளியிடக் காத்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். யாருடைய எழுத்தும் எந்தப் புரட்சியையும் எந்தக் காலத்திலும் செய்ததில்லை. செய்வோம் நாம். மறுப்பவர்களை மறுப்பதே அடுத்த கட்டத்துக்கு நம்மைக் கொண்டுசெல்லும். மறுப்போம், எதிர்ப்போம். எந்தத் தலையாட்டி மாடுகளுக்கும் நாம் துணை அல்ல. குயுக்தமாய் தவறு செய்வதில்லை. ஜெயிப்போம்!”

வெங்கட் சாமிநாதனுக்காகவே ‘வெசாஎ’ என்ற இதழைக் கொண்டுவந்தார். ‘வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்’ என்ற பதத்தின் சுருக்கமே ‘வெசாஎ’. அந்த இதழில் இரண்டாவது அட்டையைத் தவிர, 40 பக்கங்களிலும் ஒற்றை ஆளாக வெங்கட் சாமிநாதன் எழுதுவார். இரண்டாவது அட்டையில் ப்ரகாஷின் கடிதம் வரும். அந்த ஒற்றைப் பக்கத்தில் மேட்டிமை இலக்கியவாதிகளை வெளுத்து வாங்கிவிடுவார். மூன்றாவது இதழ் வருவதற்குள் ப்ரகாஷ் இறந்துவிட்டார். ‘பாலம்’, ‘சாளரம்’, ‘வைகை’ என்ற பெயர்களிலும் இதழ்களை நடத்தினார் ப்ரகாஷ். எல்லா இதழ்களுமே இரண்டோ மூன்றோதான் வந்திருக்கின்றன.

ப்ரகாஷின் அப்பா பெயர் கார்டன். அம்மா பெயர் கிரேஸ். தீவிரக் கிறிஸ்தவர்கள். ப்ரகாஷ் ஒரே பிள்ளை. ப்ரகாஷ் தமிழ் இலக்கியம் படித்தார். எந்தக் காலத்திலும் குடும்பத்தோடு ஒட்டுதலே இருந்ததில்லை அவருக்கு.

ரயில்வே, அஞ்சல் துறைத் தேர்வுகளை எழுதி, ஒரே நேரத்தில் இரண்டு துறைகளிலும் வேலை கிடைத்தது. ரயில்வேயைத் தேர்வு செய்தார் ப்ரகாஷ். காரணம், ஊர் சுற்றலாம். ரயில்வேயில் விபத்துப் பிரிவில் வேலை. பாலக்காட்டில் பணியாற்றினார். ஆனால், அவரது இயல்புக்கு அந்த வேலை பொருந்தவில்லை. அதிகாரிகளோடு பிரச்னை. திடீரென வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து நின்றார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. கார்டனும் கிரேஸும் தங்கள் பிள்ளையின் செயலைக் கண்டு மிரண்டுவிட்டார்கள்.

அதன் பிறகு ப்ரகாஷ் பார்க்காத வேலை இல்லை. தஞ்சாவூர் பஸ்ஸ்டாண்டில் பால் கடை, பேப்பர் கடை வைத்தார்; வெங்காய வியாபாரம் செய்தார்; ஆந்திராவிலிருந்து கல்கத்தா வரைக்கும் போய் வியாபாரம் செய்வார். அந்தப் பயணங்களில்தான், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம், உருது, ஒரியா, சம்ஸ்கிருத மொழிகளெல்லாம் அவருக்குக் கைவந்தது.

ஒரு கட்டத்திற்குப் பிறகு மதுரையில் நண்பரோடு சேர்ந்து பிரஸ் வைத்தார்.

பி.கே.புக்ஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி சில புத்தகங்கங்களைப் பதிப்பித்தார். பின், மதுரையைக் காலி செய்துவிட்டு தஞ்சாவூருக்கு வந்து ஸ்கிரீன் பிரின்டிங், ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்தார். எந்தத் தொழில் தொடங்கினாலும் அவை பகுதிநேரத் தொழிலாகவே இருந்தன. இலக்கியமே அவரது பிரதான பணி. கடையில் எப்போதும் பத்து இளைஞர்கள் இருப்பார்கள். வியாபார பேரத்தைவிட இலக்கிய விவாதங்களே கடையில் ஒலிக்கும். வாசிப்பு ஆர்வம், எழுத்து ஆர்வம்கொண்ட இளைஞர்களை ஓர் ஆசிரியராக இருந்து செம்மைப்படுத்தினார் ப்ரகாஷ். அதனால்தான் தஞ்சை வட்டார இளம் படைப்பாளிகள் அவரை ஆசான் என்று அழைத்தார்கள்.

படித்துக்கொண்டே, கற்றுக்கொண்டே இருந்தார் ப்ரகாஷ். பரீட்சார்த்த முயற்சிகளிலும் இறங்குவார். மெஸ்மரிசம் படித்தார். அங்கசாஸ்திரம் படித்தார். கிரிமினாலஜி படித்தார். ஓஷோவைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார். ரமணரை முழுவதுமாக வாசித்தார். வரலாற்றில் தீவிர ஆர்வம் உண்டு. கத்தைக்கத்தையாகக் கடிதங்கள் எழுதுவார். கடித இலக்கியம் என்றொரு வடிவத்தை முறைமைப்படுத்தி முகம் கொடுத்ததில் ப்ரகாஷின் பங்கு முக்கியமானது.

ப்ரகாஷ், பிப்ரவரி 2000-த்தில் காலமான பிறகு, ‘மிஷன் தெரு’ வீடு அமைதியில் உறைந்துகிடக்கிறது. ப்ரகாஷின் மனைவி மங்கையற்கரசி மட்டும் அந்த வீட்டில் இப்போது தனித்திருக்கிறார். அவ்வப்போது வந்துபோகிற சில உறவினர்களும், சில பூனைகளும் தவிர, பெரும்பாலான நேரங்களில் ப்ரகாஷின் வீடு அடைந்துதான் கிடைக்கிறது. வயதும், உடல் கோளாறுகளும் வதைக்க, மங்கையற்கரசிக்கு மிஞ்சியிருப்பவை எல்லாம் ப்ரகாஷ் பற்றிய நினைவுகள் மட்டும்தான்.

ப்ரகாஷ் பயன்படுத்திய பேனாக்கள் மை வறண்டு; முனை முறிந்துபோய்க் கிடக்கின்றன. தீயில் எரிந்தும், தண்ணீர் பட்டும் அழிந்து கசங்கிச் சிதறிக்கிடக்கின்றன ப்ரகாஷின் கையெழுத்துப் பிரதிகள். ப்ரகாஷ் சேகரித்து வைத்திருந்த அரிய நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா நூலகத்துக்கு வழங்கிவிட்டார் மங்கையற்கரசி. ஒரு கசங்கிய ஃபைலில் ‘த்வம்சம்’, ‘முகமன்’, ‘கடைசி மாம்பழம்’ ஆகிய சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதிகளை வைத்திருக்கிறார். அந்தக் காகிதங்களும் மக்கி மடங்கியிருக்கின்றன. ப்ரகாஷின் நினைவாக வைத்திருந்த ஒரு சட்டையைக்கூட ஒரு வாசகர் விரும்பிக் கேட்டபோது, மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டார் மங்கையற்கரசி. அவரின் மூக்குக் கண்ணாடியையும், வாசிக்கும்போது அவர் பயன்படுத்தும் மெழுகு விளக்கையும் மட்டும் ப்ரகாஷின் நினைவாக அந்த வீட்டில் வைத்திருக்கிறார்.

மங்கையற்கரசி, ஒரத்தநாடு அருகில் உள்ள கீழக்கண்ணத்தங்குடியைச் சேர்ந்தவர். ஒருவகையில் ப்ரகாஷுக்கு உறவுக்காரர். ஏற்பாட்டுத் திருமணம்தான். வீட்டு நிர்வாகம் முழுவதும் மங்கையற்கரசிதான். திருமணத்துக்குப் பிறகு ப்ரகாஷ் முன்பைக்காட்டிலும் சுதந்திரமாக இலக்கியப் பணியாற்றத் தொடங்கிவிட, ஓரளவு வாசிப்புப் பழக்கம் இருந்ததால், ப்ரகாஷின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு ஒரு குழந்தையைப்போல அவரைப் பார்த்துக்கொண்டார் மங்கையற்கரசி.

“ப்ரகாஷ் ரொம்பவே வித்தியாசமான மனிதர். திருமணத்துக்கு முன்பே இவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். திருமணமான முதல்நாளே, ‘என்னுடைய சுதந்திரத்துல எந்தச் சூழ்நிலையிலையும் நீ தலையிடக் கூடாது. என் போக்கைத் தடுக்கக் கூடாது’னு சொல்லிட்டார். அப்போ மதுரையில் பிரஸ் வெச்சிருந்தார். அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போய்விடும். அதனால், பிரஸ்ஸை மூடிவிட்டு தஞ்சாவூருக்கே வந்துட்டார். அதன் பிறகு, தஞ்சாவூரிலேயே ஸ்கிரீன் பிரின்டிங் கடையை ஆரம்பித்தார்.

அவருடைய செயல்பாடுகள்ல யாரும் தலையிட முடியாது. கத்தைக்கத்தையா கடிதம் எழுதுவார். நிறையப் பேர் தேடி வருவாங்க. குறிப்பா இலங்கையில இருந்து நிறையப் பேர் வருவாங்க. மணிக்கணக்கில் பேசிக்கிட்டே இருப்பார். மாலை ஆரம்பிக்கிற பேச்சு மறுநாள் மதியம் வரைக்கெல்லாம் போகும்.

எங்கிட்ட கொஞ்சம் பொய் சொல்வார். ஒரு ரூபாய்கூட அவர் கையில நிக்காது. யாராவது பணம் கேட்டால் அல்லது புத்தகம் போடனும்னா, ‘முக்கியமான செலவு’னு பொய் சொல்லி பணம் வாங்குவார். சி.எம்.முத்துவோட ‘கறிச்சோறு’ நாவலை அச்சுக்குக் கொடுத்திருந்தாங்க. அச்சகத்துல இருந்து எடுக்கப் பணமில்லை. என்னோட வளையலை வாங்கிட்டுப் போய் அடகு வெச்சுட்டார். புத்தகத்தை வித்துட்டு அதன் மூலம் திருப்பித் தர்றேன்னார். கொஞ்சநாள் கழிச்சு, ‘புத்தகம் சரியா விக்கலே... நாமளே நகையைத் திருப்பிடுவோம்’னு என்கிட்ட பணம் வாங்கிட்டுப் போனார். அந்தப் பணத்தையும் ஏதோ ஒரு இலக்கிய வேலைக்குச் செலவு பண்ணிட்டார்.

இந்த வீடு கட்டும்போது, 30,000 கையில கொடுத்தேன். ரெண்டு வண்டி மணல்தான் வந்துச்சு. அதுக்கப்புறம் எந்த வேலையும் நடக்கலே. பார்த்தா, கொஞ்ச நாள்ல க.நா.சுவோட ‘பித்தப்பூ’ புத்தகக்
கட்டு வந்து இறங்குது. அந்தக் காசை வெச்சு புத்தகம் போட்டுட்டார்.

எங்களுக்கு எல்லையம்மன் கோயில் பக்கத்துல ஒரு வீடு இருந்துச்சு. அதுல இருந்த நிலை, ஜன்னலெல்லாம் பேத்து எடுத்து, அவரோட கடையில கொண்டுபோய் போட்டு வெச்சிருந்தோம். எல்லாம் தேக்கு. பதினைஞ்சாயிரத்துக்கு மேல போகும். ஒருநாள் நான் கடைக்குப்போய் பார்த்தேன். நிலையையையும் காணோம், ஜன்னலையும் காணோம். விசாரிச்சா, ‘கடைக்கு வர்ற நண்பர்களுக்கு காபி, டீ வாங்கிக் கொடுத்ததுல டீக்கடைக்காரருக்கு 2,000 ரூபாய் கடனாயிடுச்சு. அந்தப் பணத்துக்குப் பதிலா நிலையையும் ஜன்னலையும் தூக்கிக் கொடுத்திட்டேன்’ங்கிறார். 2,000-த்தைக் கையில கொடுத்து, ‘இதைக் கொடுத்துக் கடனை அடைச்சுட்டு நிலையைத் தூக்கிட்டு வாங்க’னு அனுப்பினேன். அதுக்குள்ள புதுசாக் கட்டுன வீட்டுல நிலையை வெச்சுப் பூசிட்டார் டீக்கடைக்காரர். நிலையும் போச்சு, அதை மீட்கக் கொடுத்த ரெண்டாயிரமும் போச்சு.

இலங்கை எழுத்தாளர் டேனியல், ‘பஞ்சமர்’ புத்தகத்தை அச்சடிச்சுத் தரச்சொல்லி இவர்கிட்ட வந்தார். அப்போ பிரஸ் பெரிய அளவுல இல்லை. இந்தப் புத்தகத்தை அச்சடிக்கிறதுக்காகவே, அவங்க அம்மாவோட வைரத் தோடை 11,000 ரூபாய்க்கு வித்துட்டு, பிரஸ்ஸுக்கு ஈய எழுத்து வாங்கினார். கடைசி வரைக்கும் அவருடைய அம்மாவுக்கு இவர் தோடை வித்தது தெரியாது.

டேனியல்கிட்ட, ‘இவ்வளவு செலவாகும்’னு சொல்லித்தான் வேலையை ஆரம்பிச்சார். ஆனா, திட்டமிட்டதைவிட செலவு அதிகமாயிடுச்சு. ஆனா, டேனியல் ஒப்புக்கலே. ‘நீ முதல்ல எவ்வளவு செலவாகும்னு சொன்னியோ அதை மட்டும்தான் தருவேன். நீ புத்தகத்தை அச்சிட்டுக் கொடுக்கணும்’னு உறுதியா சொல்லிட்டார். என்னோட ஆறு பவுன் செயினை வித்துட்டுதான் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்தார் ப்ரகாஷ்.

எந்த இழப்பும் அவரைப் பாதிக்காது. இந்த வீடு மட்டும்தான் மிச்சம். தொடக்கத்துல அவரைப் புரிஞ்சுக்கிறதே கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்புறம் அவர் போக்குல விட்டுட்டேன்.

எப்பவும் இந்த வீட்டுல ஏதாவது ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கும். அவர் இறந்த பிறகு என்னால இந்த அமைதியைத் தாங்க முடியலே...ரொம்பச் சிரமப்பட்டேன். காலப்போக்குல பழகிடுச்சு. பல நேரங்கள்ல வீட்டுல விளக்குகளைக்கூட போடத் தோணாது. இருட்டும் அமைதியும் பழகிடுச்சு. அவரோட மூக்குக் கண்ணாடியை மட்டும் எப்பவும் என் கைக்குப் பக்கத்துல வெச்சிருப்பேன். அவரே கூட இருக்கிற மாதிரி தோணும்.

அவர் இறந்ததுக்குப் பிறகு, அவரோட அச்சேறாத சில சிறுகதைகளைச் சேர்த்து மொத்தத் தொகுப்புகள் கொண்டுவந்தாங்க. ஒருமுறை வீட்டுல தீப்பிடிச்சதுல அவர் எழுதி வெச்சிருந்த பல கையெழுத்துப் பிரதிகள் எரிஞ்சிடுச்சு. பாதி எரிஞ்ச பிரதிகளைத்தான் மீட்க முடிஞ்சது. அப்போ தண்ணீர் அடிச்சதுல நிறையப் பிரதிகள் தண்ணியில ஊறி வீணாகிடுச்சு. ரெண்டோ, மூணோ, அவரோட கையெழுத்துக்காக எடுத்து வெச்சிருக்கேன்.

சிகரெட், தண்ணினு எந்தக் கெட்டப் பழக்கமும் அவருக்கு இல்லை. எந்தச் செலவும் பண்ணிக்க மாட்டார். நல்லா சமைப்பார். மீன் பிரியாணி, இறால் பிரியாணி ரொம்ப ருசியா செய்வார். உருண்டைக் குழம்பு பிரமாதமா வைப்பார். ஏதாவது ஸ்பெஷலா சமைச்சார்னா, நண்பர்களுக்கெல்லாம் டிபன் கேரியர்ல எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுப்பார். அவர் எழுதியதைவிட, அவருடைய கதைகளைப் பதிப்பித்ததைவிட, நண்பர்களை எழுதத் தூண்டி அவற்றை இவருடைய முனைப்பிலேயே புத்தகங்களாக்குவார். அதனால்தான் இன்றைக்கும் அவருடைய பெயரை எங்கோ, யாரோ உச்சரிச்சுக்கிட்டே இருக்காங்க...” என்று தன் கணவரைப் பற்றிய நினைவுகளைப் பல்வேறு உணர்வுகளினூடாகப் பகிர்ந்துகொண்டார் மங்கையற்கரசி.

இப்போது அரவமில்லாமல் இருக்கிற ‘மிஷன் தெரு’ வீடு, ஒருகாலத்தில் இலக்கிய மையமாக விளங்கியது. நண்பர்கள் முன்னறையில் உட்கார்ந்து இலக்கியம் பேச, உள்ளே நெய் ததும்பத் ததும்ப மைசூர்பாகு செய்துகொண்டிருப்பார் ப்ரகாஷ். கேக் மிகச் சிறப்பாகச் செய்வார். பட்டாணி வறுத்துத் தருவார். அதற்கெனவே பெரிய பெரிய பாத்திரங்களை எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அவை இப்போது பரணில் கிடக்கின்றன.

ஒருமுறை டூவிலரில் வந்தபோது ஒரு விபத்து. இடுப்பில் ஏற்பட்ட எலும்பு முறிவைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் ப்ரகாஷ். உள்ளேயே இருந்து இன்பெக்‌ஷன் ஆகிவிட்டது. ஊர் ஊருக்கு அலைந்ததில் கல்லீரலில் நோய்த்தொற்று வேறு உருவாகி, உடல் முழுவதும் பரவிவிட்டது. வயிற்று வலி, உடல் சோர்வு, மயக்கம் என்று பல்வேறு பிரச்னைகள் பீடித்தன. சர்க்கரையும் வந்துவிட்டது. எல்லாம் சேர்ந்து சிறுநீரகத்தைப் பதம் பார்த்தது.

அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை குறைந்து இயற்கை வைத்தியத்தை நாடினார். ஆன்மிகத் தேடலும் ப்ரகாஷுக்கு உண்டு. பச்சைமலையில் உள்ள ஓர் ஆசிரமத்துக்குப் போவார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும், நோய் தீவிரமாகிவிட்டது. ப்ரகாஷ் இறந்தபோது அவருக்கு வயது 57.

சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், கட்டுரை, இதழியல், பதிப்பு என எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் ஆழமாகக் கால் பதித்தவர் ப்ரகாஷ். பல முன்முயற்சிகளைத் தொடங்கிவைத்தவர். உலக இலக்கியங்களை வாசித்தார். அவற்றோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு எழுதினார்; விமர்சித்தார். ஆள், பால் வேறுபாடில்லாமல் எவருடைய எழுத்தையும் கிழித்துத் தொங்கவிடுவார்.

தஞ்சை ப்ரகாஷின் எழுத்து தனித்துவமானது. உளவியல் தன்மையோடும், மனித உள்ளுணர்வுகளைச் சீண்டும் தன்மையோடும் அமைந்த அந்த எழுத்து, பலத்த விமர்சனத்துக்கும் உட்பட்டது. ஆண் - பெண் பாலியலை மட்டுமின்றி, பெண் - பெண் உறவுகளையும் அவரது நாவல்கள் நயமாகப் பேசின. பேசத் தயங்கும் ஆழ்மன எழுச்சியையும் அந்தரங்கங்களையும் நுட்பமாக அலசினார். அபத்தமாகிவிடும் வாய்ப்பை நூலிழையில் தவிர்த்து ரசமாக, கவிதாப்பூர்வமாக அதை மாற்றுவதுதான் ப்ரகாஷின் தனித்த யுத்தி.

‘கரமுண்டார் வூடு’ நாவல், அது வெளிவந்த காலகட்டத்தில் சூழலைப் பெரிதும் அதிர்வூட்டியது. இந்தியச் சமூகம் பெண்களைப் பாலியல் பயன்படுபொருளாக மட்டுமே பாதுகாத்து வருகிறது. பெரும்பாலான இந்தியப் பெண்கள் பாலியல் உச்சமென்றால் என்னவென்றே அறியாமல் தாம்பத்யத்தைக் கடந்துவிடுகிறார்கள். பெண்களின் வேட்கை, தாபம், விருப்பங்கள் எல்லாம் பெருமூச்சுகளிலேயே முடிந்துபோகின்றன. ‘கரமுண்டார் வூடு’ அம்மாதிரிப் பெண்களின் உளவியலையும் தேடலையும் வேட்கையையும் காதலையும் கவித்துவமாகப் பேசியது. ‘புளியமரத்தடியில் அப்பாயிகள் பேசிய ஊர்க்கதைகளின் ஒரு துளிதான் கரமுண்டார் வூடு’ என்கிறார் ப்ரகாஷ்.

‘கள்ளம்’ நாவலின் அடிநாதமும் ‘கட்டில்லாத காமம்’தான். தஞ்சை ஓவிய மரபில் வரும் கைதேர்ந்த ஓவியன் ஒருவனின் மகன்தான் இக்கதையின் மையம். காமம் என்பது உடல் சார்ந்ததா, மனம் சார்ந்ததா என்ற தேடலுக்கான முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்கிறது ‘கள்ளம்’. ஆண், பெண் உடல், கலவி, காதல் எனப் பல்வேறு இழைகளுக்கு மத்தியிலும், தஞ்சாவூர் கண்ணாடிச் சித்திரக் கலையின் நுட்பங்களையும் கலாபூர்வமாக உள்நுழைக்கிறார் ப்ரகாஷ்.

தஞ்சை ப்ரகாஷ் நாவல்களின் அடிநாதமாக இருப்பது, நாட்டுப்புறத்தன்மை. பாத்திரங்கள், வர்ணிப்புகள் வாயிலாக அக்காலகட்டத்தின் வட்டார வரலாற்றை நிரப்புகிறார் ப்ரகாஷ். சிறுகதைகளிலும் பெரும்பாலும் மிகையுணர்ச்சியற்ற காமத்தைத்தான் பேசுகிறார் ப்ரகாஷ். தஞ்சை வட்டார மொழி என்று வகைப்படுத்தவியலா தனித்த மொழிக்கட்டு ப்ரகாஷுக்கு வாய்த்திருந்தது.

ப்ரகாஷ் சிருஷ்டிக்கும் பாத்திரங்கள் அனைத்துமே, வயிற்றுப் பசி, உடற்பசி எனப் பசிக்காக அலைபவையாகவே இருக்கின்றன. தனது புனைவுலகை அவர் பேசாப்பொருள் களிலிருந்தே திறக்கிறார். ‘பசி: சரித்திரம் - காமம்: இலக்கியம்’ என்று பகுக்கிறார். தனது எல்லாப் படைப்புகளிலும் அவற்றையே நிலை நிறுத்துகிறார்.

‘ப்ரகாஷின் பாலியல் கற்பனைகள், பொய்யானவை. வெறும் சுயமைதுனக் கதைகள்’ என்ற விமர்சனமும் அவரது படைப்புகள்மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே பல பெரிய ஆளுமைகள் அவரை அங்கீகரிக்கவில்லை. பெரிய அளவிலான வாசகர் வட்டமும் அவருக்கு இல்லை. ஆனாலும், அவர் தன் போக்கில் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். அவரது மொழிக்கட்டின் மீதும், வடிவத்தின் மீதும் வைக்கப்பட்ட எந்த விமர்சனத்துக்கும் அவர் செவி கொடுக்கவில்லை.

‘புறா ஷோக்கு’ என்ற நாவலை எழுதி வந்தார். உடல்நிலை மோசமான நிலையிலும் அந்த நாவலை நிறைவு செய்துவிடும் தீவிரத்தில் தன்னைப் பார்க்க வருவோரிடம் சொல்லிச் சொல்லி எழுதச் செய்தார். ஆனால், நாவல் நிறைவடையும் முன்பே அவர் நிறைவடைந்தார்.

ப்ரகாஷின் வாழ்க்கையே பூடகமான ஒரு நாவல் மாதிரிதான் இருக்கிறது!

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்