திருவையாற்றுக்கு அருகே உள்ளே திருபுவனத்தில் பிறந்த ஆத்மநாபன் இசைக்கடல் உருவாக்கிய பெருமை அவர் தந்தை குருமூர்த்தி அவர்களை சேரும்.
”உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்று தொல்காப்பியம் கூறியது. ஆனால் இன்றோ உலகம் என்பது அனைவருக்கும் பொதுவானது அறிவாலோ பொருளாலோ உடலின் நிறத்தினால் பிறப்பினாலோ உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்பதே பொதுவிதி. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார் அய்யன் திருவள்ளுவர். ”பிறப்பு ஒக்கும்” என்பது மனிதப் பிறப்புகளுக்கே, விலங்குகளும் இதர உயிரினத்திற்கும் சேர்ந்தது அல்ல.
”பிறப்பு ஒக்கும்” என்பது மனித இனம் முழுமைக்கும் பொருந்துமா? என்று கேள்வி எழுப்பி ஆய்ந்து பார்த்தால் ”ஒக்கும்” என்று சொன்னது சரியே என்பது வெளிப்படும்.
உலகத்தின் எந்தப்பகுதியில் குழந்தை பிறந்தாலும் அவற்றின் அவயவங்கள் (உடல் உறுப்புகள்) ஒன்றாகத்தான் இருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக அக்குழந்தைகள் எழுப்பும் இசை அதாவது அதை அழுகை என்று சொன்னாலும், இசை என்று சொன்னாலும் ஒன்றாகத்தான் இருக்கும். அதுவே உலகின் முதல் இசை,. முதல் கவிதை, முதல் மொழி. அந்த இசை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைகிறது. அந்த நாட்டின் பருவ நிலைக்கு ஏற்ப வளர்கிறது. அவ்வாறு வளர்ந்த இசையைக் கீழ்த்திசை இசை, மேற்கத்திய இசை என்று இசை வல்லுநர்கள் இரண்டாகப் பிரித்துப்பேசுகின்றனர்.
அவ்வாறு பிரிக்கப்படும் கீழ்த்திசை இசையில் மிகவும் தொன்மையானது தமிழிசை. இசையை நாம் ”பண்” என்று கூறுகிறோம். ”பண்”ணை ஏழிசையாய்ப் பிரிக்கின்றோம். சொற்களே இல்லாமல் ”பண்”ணை மட்டும். இசைப்பதைப் பண் விரிவாக்கம். ”இராக ஆலாபனை” என்று சொல்கிறோம். ”பண் என்னாம் பாட்டிற்கு இயைபு இன்றேல்” என்பது ஆன்றோர் வாக்கு! பண்ணோடு பாட்டும் சேர்ந்தால் மனிதனுக்கு இன்பத்தைக்கொடுப்பதோடு மனிதனுடைய உணர்வுகளையும் ஒருங்கிணைக்கிறது.
இசைக்கு மொழி தேவையில்லை. இசையைத் தமிழிசை, வடக்கத்திய இசை என்று பிரித்துப்பேசாதீர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். கருவி இசைக்கு (Instrumental Music) வேண்டுமானால் அது பொருந்தும், வாய்ப்பாட்டு இசைக்குப் பொருந்தாது.
சங்கத்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான ”பரிபாடல்” என்ற நூலும் தமிழின் இரட்டைக்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரமும் இசைத்தமிழ்ப்பாடல்கள் நிரம்பிய நூல்களாகும்.
இசை பிடிமானமில்லாத சமண, பெளத்தமதங்களிடமிருந்து நமது பண்பாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்க ஆழ்வார்களும், நாயன்மார்களும் பயன்படுத்தியது தமிழிசையே!
தமிழகத்தில் செஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர். மதுரை என்று தமிழகம் முழுவதையும் வென்ற விஜயநகர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள், தன்னாட்சி உரிமை பெற்றதும் தங்கள் தாய்மொழியான தெலுங்கு மொழியின் மூலமே இசையையும், நாடகத்தையும் ஊக்குவித்து வளர்த்தனர். அதனால் இசையில் தமிழ்மொழி சிறிது சிறிதாக காணாமல் போனது.
”ஏழிசையாய் இசைப்பயனாய்” இருந்த இறைவனை இசையில் மீட்டெடுக்க ராஜா ”சர்” அண்ணாமலை செட்டியார், மகாகவி பாரதியார், ராஜாஜி, கல்கி, ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் போன்ற பலர் அரும்பாடுபட்டு இசைத்தமிழ்ப்பாடல்களை, அதாவது தமிழிசையை உயிர்ப்பித்தனர்.
அரும்பாடுபட்டு மீட்டெடுத்த தமிழிசை இன்று மேலை நாட்டு இசைக்கருவிகளின் பேரொலி மூலம் மீண்டும் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது.
நம்முடைய தமிழ்மொழியும், தமிழ் இனமும், தமிழ்ப்பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டுமானால் தமிழிசை காப்பாற்றப்பட வேண்டும். அது தமிழிசையால் மட்டுமே முடியும்.
தமிழிசையை, இசைத்தமிழைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
தமிழிசை தழைக்க, தமிழிசை பற்றிய புரிதலும், அதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இளம் பெற்றோர்கள், இசையைத் தாய்மொழியில் சொல்லிக்கொடுக்கும் இசை அறிஞர்களை அடையாளம் கண்டு பக்தி இலக்கியம், சங்க இலக்கியம், கவிஞர்களின் பாடல்கள் என்று இசையின் அடிப்படையுடன் , தமிழ் மொழிப்பாடல்களைக் கற்று மேடையேற்ற ஆர்வம் காட்ட வேண்டும். படிப்புடன் சேர்த்து தமிழிசையை ஆண் -பெண் இருவரும் கற்றுத்தேற , அரங்கேற்றம் செய்ய, குறுந்தகடு வெளியிட்டு விழா எடுக்க ஊக்குவிக்கவேண்டும்.