தமிழ் எழுத்துச் சீரமைப்பு என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுமான முயற்சிகளாகும். தமிழை முதலில் தாமிழி எழுத்து வடிவம் கொண்டு எழுதினர். பின்பு தமிழின் எழுத்து வடிவம் பல மாற்றங்களை கண்டு இன்றைய நிலையில் நிலைத்துள்ளது. அச்சுத் துறை வளர்ந்த பின் அதன் தேவைக்கேற்ப அச்சுக் கோர்க்கவும், தட்டச்சு முறைக்காகவும் தமிழ் எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளன.
கான்சுடண்டின் சோசப்பு பெசுக்கி என்னும் இயற்பெயரும் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயரும் கொண்ட தமிழறிஞர் ஒரு சில தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தி அமைத்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. வீரமாமுனிவர் தமிழகத்தில் 1710இலிருந்து 1747 வரை மறைப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றினார்.
அதன் பிறகு 20 ஆம் நூற்றாண்டின் முதலாவதாக கள்ளர் மரபை சேர்ந்த திருக்களர் மு. சாமிநாத மாதவராயர் உபாத்தியாயர் எனும் சைவசமய அறிஞரால் 1910 ல் முதல் பதிப்பும் இரண்டாம் பதிப்பு 1921 இல் எழுதப்பட்டு திருக்கோட்டூர் மு. சீனிவாச தேவர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு 1922 இல் வெளியான நூல் "சைவசமயமும் தமிழ்ப்பாடையும்" . இந்த நூலில் தமிழர்கள் அனைவரும் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்த வேண்டும் என முதலில் வலியுறுத்தியுள்ளார்.