விகடன் தடம் 2017 ஏப்ரல் இதழில் வெளியான சு.வெங்கடேசனின் கட்டுரை
(குற்றமும் தண்டனையும்)
"எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்"
(கருமாத்தூர் நாடு கரிசல்பட்டி சின்னுடையாத்தேவர் மகன் தும்மக்குண்டு நாடு சின்னாங்கி உடையாத்தேவர் வம்சத்தைச்சேர்ந்த (ஏழு பொன்பட்டி) எழுவம்பட்டி நல்லகருப்பத்தேவர் சுமார் 190 வருடங்களுக்கு முன் எழுதிய பிறமலை நாட்டின் குற்ற தண்டனைச்சட்டம்.)
தமிழகத்தில் உள்ளூர் சமூகத்தின் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கம் மற்றும் குற்ற தண்டனை முறைகளைப் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளனவா என்பது முக்கியமான கேள்விகளில் ஒன்று.1949 மற்றும் 1950-ம் ஆண்டுகளில் தென்இந்தியாவில் மானுடவியல் ஆய்வுக்காக வந்த லூயிஸ் டூமண்ட், மதுரைக்கு அருகில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வினை மேற்கொண்டார்.
'எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்' ஒன்று இருப்பதைக் கேள்விப்பட்டு, அதனைக் கண்டறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார். அது பலனளிக்கவில்லை. அந்த ஏடுகள் தீயில் அழிந்துவிட்டன என்று அவரிடம் சொல்லப்பட்டது. 'அது தீயில் அழியவில்லை' எனக்குத் தர அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால் அப்படி சொல்லுகின்றனர்' என்று கருதினார் லூயிஸ் டூமண்ட். இந்த பகுதி மக்களின் பழக்க வழக்க நடைமுறைகள், மரபுசார் மதிப்பீடுகள் அந்த ஏடுகளில் இருக்கலாம் என்று அவர் கருதி, தனது எண்ணத்தையும் பதிவு செய்துள்ளார்.
லூயிஸ் டூமண்ட் இந்த ஏடுகளை தேடிய அதே பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நானும், எனது தோழர்களும் தேடி அலைந்தோம். அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் பலரிடமும் கேட்டும் அவை கிடைக்கவில்லை. ஆனால், தோழர்கள் தங்கராஜூம், முத்துப்பாண்டியும் தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்தனர்.
அந்த முயற்சி ஒருநாள் பயனைத் தந்தது. ஊருக்குள்ளேயே தேடிக்கொண்டிருந்தவர்கள் தோட்டத்து வீடுகளை நோக்கி போனபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் எனக்கு போன் செய்து, "உடனே வா" என்றனர்.
நான், பெருமகிழ்வோடு அங்கு புறப்பட்டுப் போனேன்.ஒரு மாலை நேரத்தில் பம்புசெட்டில் குளித்தபடி அந்தப் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார். நான் கேள்வி மாற்றி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் அசரவில்லை. எதைக்கேட்டாலும், "எனக்கென்னப்பா தெரியும்" என்று ஒற்றைப் பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
நான், ஒரு கட்டத்தில் சோர்வடைந்தேன். அழைத்துப் போனவர்களைப் பார்த்து, "எதைக்கேட்டாலும் தெரியாது என்கிறாரே, அப்புறம் எதுக்கப்பா என்னை வரச் சொன்னீங்க?" எனக்கேட்டேன்.
"அவர்கிட்ட ஏடு இருக்கிறதாலதான் உன்னய வரச்சொன்னோம்" என்றார்கள்.
ஒரு நிமிடம் திகைத்துப் போனேன். ஏடு யாரிடமும் இருக்கப்போவதில்லை, அதனைப் பற்றி தெரிந்தவர் யாராவது இருந்தால் அவரிடம் பேசி, விஷயத்தை வாங்கலாம் என நினைத்து, மாதக்கணக்கில் அலைந்ததால் ஏற்ப்பட்ட பயிற்சி இது. பல நேரம் பயிற்சிதான் நம்மை தோல்வியடையச் செய்யும்.
நான் தோல்வியடைந்த கணத்தில் வெற்றி வாய்ப்பை உணரத் தொடங்கினேன். அவர் தலையைத் துவட்டிக்கொண்டே உள்ளே போனார், ஈரம் படாமல் போர்த்திய துணியோடு கொண்டுவந்து எனது கையிலே கொடுத்தார். லூயிஸ் டூமண்ட் அவ்வளவு அலைந்தும் கிடைக்காத ஒன்று எனது கையில் கிடைத்தது. பெரியவருக்கும், தோழர்களுக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.
காவல்கோட்டம் நாவலுக்கான தரவுகளை தேடி அலைந்த பயணம்தான் அது. வரலாற்றின் எவ்வளவோ தடயங்களை அது அள்ளி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் மிகச்சிறந்த ஒன்று எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்.
இந்த ஏட்டுச் சட்டம், எட்டு ஏடுகளையும் இருபது பத்திகளையும் கொண்டுள்ளது. அதில் பழக்கவழக்கம், சடங்கு முறைகள், உறவுகள் சார்ந்த விளக்கம் பலவும் இடம்பெற்றுள்ளன.
நான்காவது ஏட்டின் பத்தாவது பத்தி குற்றத்தையும், அதற்க்கான தண்டனையைப் பற்றியும் கூறுகிறது.
"ஆணுக்கு பலி சேதமானால், 70 பொன். கொண்டையை அறுத்துப்போட்டால், அதுக்கு பலி அபராதம் 24 பொன். ஒரு கண் சேதமானால் பலி 35 பொன். மூக்கு ஒரு பக்கம் சேதமானால் பலி 12 பொன். அதில், நடுத்தண்டு ஒரு பக்கம் சேதமானால் 24 பொன். மூணு அங்கோலமும் சேர்ந்து சேதமானால் பலி 35 பொன். முன் காதுக்குப் பலி 30 பணம். நடக்காது ஓவாயா போனால் பலி 12 பொன். கடுக்கன் போடுகிற காதுக்கு பலி 6 பொன். மேல்காதும், அடிக்காதும் சேர்ந்து போனால் பலி 15 பொன். கீக்காதும் நடுக்காதும் சேர்ந்து போனால், பலி 18 பொன். மூன்று அங்கோலமும் சேர்ந்து போனால், பலி 24 பொன். உதட்டுக்கு ஒரு பல் தெரிய ஓவாயாப் போனால், பலி 12 பொன். ஒரு பல் விழுந்து போனால், பலி 6 பொன். ஒரு பல் அசைவுக்கு பலி 30 பணம். கால் எலும்பு தெரிவுக்கு 12 பொன். கொண்டக்கை தெரிவுக்கு 12 பொன். மணிக்கட்டு முன்கொண்டைக்கு பலி 6 பொன். விரல் வரிசைக்கு வராமல் போனால், பலி 30 பணம். நெரிவுகளுக்கு இதில் பாதி. நெகத்துக்கு 5 பணம். இதில், கால் மிதிக்கவும், கை பிடிக்கவும் இல்லாமல் போனால், பலி 35 பொன். இதில், பாதி பலி பெண்ணுக்கு." என்கிறது 'எழுவம்பட்டி ஏட்டுச்சட்டம்'.
இதுபோன்ற எண்ணற்ற உள்ளூர் சமூகங்களின் பழக்கவழக்கங்களும், குற்ற முறைகளும் ஏதாவது ஒரு வகையில் தொகுக்கப்பட்டோ, நினைவின் சேகரமாகவோ இருக்கத்தான் செய்யும். அவற்றைக் கண்டறிவதும், திரட்டுவதும், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் செயல் அல்ல, நம்மையே பார்க்கும் செயல்.
எழுத்து : கள்ளர் நாடுஅறக்கட்டளை