ஆதித்தகரிகாலனை, இரண்டாம் ஆதித்தன் என்பர் ஆராய்ச்சியாளர். 957 முதல் 970 வரை ஆண்ட இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுக்கு இவன் முதன் மகனாவான். இவனது கல்லெழுத்துக்கள் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் கிடைத்துள்ளன; 5 ஆவது ஆட்சியாண்டு வரை காணப்பெறுகின்றன. இவன் 'பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப்பெறுகிறான். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனால் கி. பி. 966ல் வெல்லப்பெற்ற வீரபாண்டியனே இவனால் வெல்லப்பட்ட பாண்டியனாதல் கூடும். இவ்வாதித்த கரிகாலன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடிக்கு அருகில் உள்ள உடையார்குடியில் அனந்தீஸ்வரம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. இந்த சிவன் கோவில் கருவறையின் மேற்குப் புறத்தில் ஒரு சாசனம் காணப்படுகிறது.
ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த சாசனம், ஆதித்த கரிகாலன் கொலையை அடுத்து கொலை தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது.
"பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்... றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம்" என்கிறது இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி.
இந்தக் கல்வெட்டிலிருந்து சோமன், அவனுடைய தம்பி ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் ஆகியோர் ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர்.
சோமன், அவனுடைய தம்பி ரவிதாசன், அவனுடைய தம்பி பரமேஸ்வரன் ஆகிய மூவரும் யார்? இவர்கள் எதற்காக இந்தக் கொலையைச் செய்தனர் என்பது அடுத்த கேள்விகள். இதில் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்பது பாண்டிய நாட்டு அந்தண அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டத்தைக் குறிக்கிறது. இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் என்பது சோழ நாட்டு அந்தண அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பட்டத்தைக் குறிக்கிறது. ஆகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் ஒருவர் பாண்டிய நாட்டிலும் மற்றொருவர் சோழ நாட்டிலும் அதிகாரிகளாக இருந்திருக்கின்றனர்.