வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சந்தனத்தேவன்



தமிழகத்தின் ராபின்வுட் "சந்தனத்தேவன்"

வெள்ளையர்களின் ஆட்சியில்,  பாராம்பரிய காவல்முறை ஒழிக்கப்பட்டு,  தேச காவல் தொழில் புரிந்த போர்க்குடியினரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது. தேசக் காவலராக இருந்த சந்தனத்தேவனின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு,  வன்முறையை நோக்கி தள்ளப்பட்டு சரித்திரத்தில் இடம்பெற்ற கள்ளர் சமூக வீரன் சந்தனத்தேவனின் இரத்தம் படிந்த வரலாற்றுப் பக்கங்களை காண்போம்.

மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி வட்டத்தை சேர்ந்த கே. போத்தம்பட்டி எனும் ஊரை சேர்ந்தவர் கருப்பத்தேவன்.  அவருக்கு மாயாண்டித்தேவன், சந்தனத்தேவன், புன்னைத்தேவன் எனும் மூன்று புதல்வர்கள் இருந்தார்கள்.

சந்தனத்தேவனுக்கு, கருத்தப்பட்டியை சேர்ந்த பெரியகருப்பத்தேவன் மகள் மூக்காயியைத் திருமணம் செய்து வைத்தார்கள். பெரியகருப்பத்தேவன் கருத்தப்பட்டியை சுற்றியுள்ள,  பாலகோம்பை,  கொளிஞ்சிப்பட்டி,  இராமகிருஷ்ணபுரம் போன்ற பகுதிகளுக்கு காவல்காரராய் இருந்து வந்தார். 

காவல்முறை ஒழிப்பு 

கிபி 1906ல் பெரியகருப்பத்தேவன் மற்றும் அவரது உறவினர்களான காவல்காரர்களுக்கு காவல் கூலி கொடுப்பதை ஊர்மக்கள் நிறுத்திக்கொண்டனர்.  பாரம்பரிய காவல் முறையை ஒழிக்க எண்ணிய வெள்ளையர்கள் ஊராரிடம் காவல் முறைக்கு எதிரான கருத்துகளை திணித்து,  குழப்பத்தை விளைவித்தனர். 

பாரம்பரியமாக செய்து வந்த காவல் தொழில் கள்ளர்களுக்கு பாதிக்கப்பட்டது. கள்ளர்கள் தொடர்ந்து காவல் கூலி கேட்டும் பலனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கருத்தப்பட்டிக்காரர்கள் 1906ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி கொளிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர்களின் மாடுகளை கடத்தி வந்தனர்.

தங்களது காவல்கூலியை கொடுத்தால் தான் மாடுகளை ஒப்படைப்போம் என கள்ளர்கள் மிரட்டினர். ஆனால் கொளிஞ்சிப்பட்டிக்காரர்கள் கிருஷ்ணாபுரம் கிராம முனிசிப் உதவியுடன் தங்களது மாடுகளை திரும்பப் பெற்றனர்.

1906ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி,  சந்தனத்தேவன் மற்றும் அவனது மாமா பெரியகருப்பத்தேவன் தலைமையில் அரிவாள், வேல்கம்பு, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றுடன் சென்ற கள்ளர்கள்,  கொளிஞ்சிப்பட்டியை சேர்ந்த தலைவர் பெரிய ஒச்சன் என்பவரின் வீட்டைத் தாக்கினர். பெரிய. ஒச்சனின் வீட்டை உடைத்து,   வைக்கப்போர்களுக்கு தீ மூட்டி,  மீட்டுச் சென்ற மாடுகள் மீண்டும் கடத்தி சென்றனர்.

அதிர்ச்சியடைந்த பெரிய ஓச்சன் அருகிலிருந்த ஊர்க்காரர்கள் ஏழு பேருடன் கள்ளர்களிடம் சென்று மாடுகளை திரும்ப பெற முயன்றனர்.  அப்பொழுது கள்ளர்கள் மாடுகளை தர மறுத்து எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். கள்ளர்களின் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.  இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின் சந்தனத்தேவனும் அவரது கூட்டத்தாரும் காட்டில் மறைந்தனர்.  காட்டில் மறைந்திருந்த சந்தனத்தேவனும் அவரது கூட்டத்தாரும் தங்களது வாழ்வாதரத்திற்காக வெள்ளையர்களின் நிர்வாகப்பகுதிகளை தாக்கி,  கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

சந்தனத்தேவன் தலைமையில் அவரது அண்ணன் மாயாண்டி, தம்பி பின்னத்தேவர், மாமனார் பெரிய கருப்பத்தேவன், விட்டித்தேவன், மொக்கையத் தேவன், குருநாதத்தேவன், நண்டுபுலி பெருமாள்தேவன், பெரியாண்டித்தேவன், சுப்பத்தேவன், சின்னக்கருப்பத்தேவன்,  முத்துக்கண்ணுத்தேவன், பூச்சி என்கிற சின்னவீரத்தேவன், வகுரத்தேவன் ஆகியோரை உள்ளடக்கிய பெருங்கூட்டமே காடுகளில் இருந்து செயல்பட்டு வந்தனர். பெரும் வசதி படைத்தோரையும், வெள்ளையர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டோரையும் தாக்கி கொள்ளையடித்து,  தாங்கள் பயன்படுத்தியது போக மீதியை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவியதாக சந்தனத்தேவன் பற்றிய கதைப்பாடல்கள் கூறுகின்றன. தங்களைப் பிடித்துக் கொடுக்க முயன்றோரையும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்தோரையும் தாக்கினர்.

பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தேடுதல் வேட்டை:-

சந்தனத்தேவன் குழுவினரைப் பிடிக்க அன்றைய உத்தமப்பாளையம் சரக காவல் ஆய்வாளர்,  தர்மராஜ் அய்யர் தீவிரம் காட்டினார்.  1906 மே முதல் ஜீலை காலகட்டங்களில் சந்தனத்தேவன் குழுவைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். சந்தனத்தேவன்,  அண்ணன் மாயாண்டி, தம்பி பின்னத்தேவர், மாமனார் கருப்பத்தேவர் தவிர அனைவரையும் காவல்துறை கைது செய்தது. சந்தனத்தேவன் தலைக்கு ரூபாய் 500 சன்மானமாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்பும் சந்தனத்தேவனை பிடிக்க இயலவில்லை. இவரைப்பிடிக்க வெங்கடேஸ்வர அய்யர் தலைமையில் எனும் காவல் ஆய்வாளர் தனி அதிகாரியாக நியமிக்கப்பபட்டு தேடுதல் வேட்டை துரிதப்படுத்தப்பட்டது. எனினும் போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை.

துரோகமும் பலி தீர்த்தலும்

மக்களின் ஆதரவு இன்றி சந்தனத்தேவனை கைது செய்யமுடியாது என்பதனை அரசாங்கம் உணர்ந்தது. சின்னமனூர் பகுதியில் செல்வாக்கோடு திகழ்ந்த மருதமுத்து சேர்வை என்பவரின் உதவியை போலீஸ் நாடியது. அவர் சந்தனத்தேவனையும், அவரது கூட்டத்தாரையும் பிடித்துத் தருவதாக,   போலீசாரிடம் உறுதியளித்தார். அதன்படி மருதமுத்து சேர்வை, மார்க்கையன் கோட்டையில் இருந்த சந்தனதேவனது உறவினர்களை மிரட்டி சந்தனன் இருப்பிடத்தை கூறுமாறு துன்புறுத்தினார்.குறிப்பாக சந்தனத்தேவனது தாயை மிகவும் அவமானப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சந்தனத்தேவனது உறவினர்களை கண்காணித்து போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்தார்.


தாயை அவமானப்படுத்தியதால் கடுங்கோபமடைந்த சந்தனத்தேவன் மருதமுத்து சேர்வையை பலிவாங்க முடிவுசெய்தார். தான் சரணடைய விரும்புவதாகவும், தன்னை நேரடியாக நீதிமன்றத்தில் ஒப்படைத்து தனது வழக்குகளை நடத்த வேண்டும் என மருதமுத்துவுக்கு தூது அனுப்பினார்.  மருதமுத்துவும் இதற்கு ஒப்புக்கொண்டு , சந்தனத்தேவனை சந்திக்க தயாரானார். 

1906 ஆம் ஆண்டு அக்டோபர் 30 தேதி இரவு 8 மணியளவில்,  மார்க்கையன் கோட்டையை சேர்ந்த சுப்பத்தேவன் என்பவர் மருதமுத்து சேர்வையையும் அவரது பாதுகாவலர்களையும் அழைத்துக்கொண்டு கருத்தப்பட்டிக்கு அருகில் இருந்த ஒரு புளியந்தோப்புக்கு அழைத்துச் சென்றார்.அன்று பௌர்ணமி தினமானதால் பகலைப்போல வெளிச்சம் இருந்தது. மருதமுத்து காவல் ஆய்வாளர் அளித்த துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தார். அவரது பாதுகாவலர்கள் அரிவாள், வேல்கம்பு, கத்தி, தடி முதலியவற்றை வைத்திருந்தனர். அவர்கள் புளியந்தோப்பினை அடைந்தவுடன் மறைந்திருந்த சந்தனத்தேவன் வெளியில் வந்து அவர்களை வரவேற்றார். அப்பொழுது சந்தனத்தேவனின் கூட்டாளிகள் தங்களது ஆயுதங்களை மருதமுத்துவின் முன் ஒப்படைத்தனர். அப்பொழுது சந்தனத்தேவன் தன்னைப்போலவே,  தன் மாமனார் பெரியகருப்புத்தேவனுக்கும் நீங்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டான். மருதமுத்து இதற்கு ஒப்புக்கொண்டு தலையசைத்தார்.  அப்பொழுது சோளக்காட்டிற்குள் ஒளிந்திருந்த பெரியகருப்புத்தேவன்,  வெளியில் வந்து, ஐயா என்னையும் காப்பாற்றுங்கள் எனக்கூறி, மருதமுத்துவின் காலில் விழ முயன்றார். இதனால் மருதமுத்து குனிந்து பெரியகருப்பு தேவரை தடுக்க முயன்றார்.

அந்த நேரத்தில் அருகில் இருந்த வேல்கம்பை பிடுங்கிய சந்தனத்தேவன், மருதமுத்துவைப் பார்த்து " எங்க ஆத்தாவையாடா அவமானப்படுத்தினாய்? " எனக் கூறிக்கொண்டே மருதமுத்துவை குத்தித் தள்ளினார். மருதமுத்துவின் அருகில் இருந்த பின்னத்தேவன் அரிவாளை எடுத்து மருதமுத்துவின் தலையை வெட்டி துண்டாக்கினான்.  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருதமுத்துவின் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஒடினர். சந்தனத்தேவனும் அவரது கூட்டாளிகளும்,  மருதமுத்துவின் பிணத்தை எடுத்துக்கொண்டு மறைந்து சென்றனர். மறுநாள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசாருக்கு மருதமுத்துவின் இரத்தம் படித்த கைக்குட்டையும், அவரது கழுத்தை வெட்டும்போது துண்டான சட்டைக் காலர் துண்டு மட்டுமே கிடைத்தது.  கடைசிவரை மருதமுத்துவின் பிணத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. 

சண்டையும் சரணடைதலும்:-

மருதமுத்து சேர்வையின் கொலைக்கு பிறகு சந்தனத்தேவனும் அவரது கூட்டாளிகளும் மிகவும் பிரபலமடைந்தனர். காவல்துறை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. அவரது கூட்டாளிகளில் சிலரையும்,  அவருக்கு உதவியோரையும் காவல்துறை கைது செய்தது.  ஆனாலும் மக்கள் மத்தியில் சந்தனத்தேவனுக்கு இருந்த ஆதரவு குறையவில்லை. சந்தனத்தேவனது சமூகத்தை சார்ந்தவர் மட்டுமல்லாது வேற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் சந்தனத்தேவனுக்கு உதவி வந்தனர்.  

அவர்களில் முக்கியமானவர்களான முத்துசாமிப்பிள்ளை, அம்பட்ட சீனி  ஆகியோர் சந்தனத்தேவனுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியமும் அளித்தனர். இந்த நிலையில் சந்தனத்தேவனுக்கும் அவரது தம்பி பின்னத்தேவனுக்கு மலேரியா காய்ச்சல் வந்தது. இதனால் சிகிச்சைக்காக பூதிப்புரத்தில் இருந்த தங்களது மாமா வீட்டில் இவர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்களைப் பற்றிய தகவலை அறிந்த போலீசார் இவர்கள் தங்கியிருந்த வீட்டை, 1907 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அன்று சுற்றி வளைத்தனர்.

போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்,  பதிலுக்கு இவர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசார் சுட்டதில் பின்னத்தேவனது காலில் குண்டு பாய்ந்தது. பின்னத்தேவனுக்கு ஆண்டிப்பட்டியில் முதலுதவி அளித்தபின் சிறையில் அடைத்தனர். இம்முறையும் சந்தனத்தேவன் தப்பிவிட்டார். மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு வலுவிழந்து இருந்த சந்தனத்தேவன்,  1907 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பெரியகுளம் நிதிமன்றத்தில் சரணடைந்தார்.

இறுதியாக சந்தனத்தேவனின் அண்ணன் மாயாண்டித்தேவனும் அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். அவரது மாமனார் பெரிய கருப்பத்தேவன் மற்றும் வரகுணத்தேவனும் கைது செய்யப்பட்டனர்.  சந்தனத்தேவனை பிடிக்கும்  முயற்சியில் ஈடுபட்ட போலீசார்களுக்கு சன்மானங்கள் அளிக்கப்பட்டது. சந்தனத்தேவன் மீது கொலை கொள்ளை வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடந்தது. சந்தனத்தேவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 1907, ஏப்ரல் 4 ஆம் தேதி, தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. 
சந்தனத்தேவனது மாமனாருக்கும், வரகுணத்தேவனுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. 

சந்தனத்தேவனின் அண்ணன் மாயாண்டிக்கு கொள்ளை வழக்கிற்காக பத்து ஆண்டுகள் சிறைதண்டனை அளிக்கப்பட்டது.சிறையில் இருந்து விடுதலைப்பெற்ற மாயாண்டி திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்ததாகவும் ,குழந்தைக்கு சந்தனம் என பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்த பெண் குழந்தையின் வாரிசுகள் தற்போது மார்க்கையன் கோட்டை கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தூக்குமேடையேறிய  சந்தனத்தேவன்  :-

தண்டனை வழங்கப்பட்ட சந்தனத்தேவன் சில மாதங்களுக்குள் மதுரை சிறையில் தூக்கிலடப்பட்டார். தூக்கில் போடும் முன் சந்தனத்தேவனது கடைசி ஆசை என்ன என கேட்கப்பட்டது? அதற்கு அவர், நான் வாழாத என் சொந்த ஊரில் என் பிணமாவது வாழவேண்டும் , அதனால் எனது பிணத்தை சொந்த ஊரான கே போத்தம்பட்டியில் அடக்கம் செய்து விடுங்கள் என கூறிவிட்டு,  தூக்குக் கயிற்றை தானே கழுத்தில் மாட்டிக்கொண்டார்.சந்தனத்தேவனுக்கு தூக்கு தண்டனை இயற்றப்பட்டது.

சந்தனத்தேவன் நினைவிடம்:-

சந்தனத்தேவனின் உடலை கே போத்தம்பட்டி நாட்டாண்மைக்காரர் மடத்துக்கார ஒச்சப்பத் தேவரும், தேனி பூதிப்புர நாட்டாண்மைக்காரரும் பெற்றுக்கொண்டனர்.சந்தனத்தேவனின் உடல் மாட்டுவண்டியில் மதுரையில் இருந்து கே.போத்தம்பட்டிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சந்தனத்தேவனுக்கு அஞ்சலி செலுத்தினர். 

போத்தம்பட்டிக்கு அருகில் இன்றைய பேரையூர் சாலையில் பம்பைக்கார நாயக்கருக்கு மானியமாக கொடுக்கப்பட்ட இடத்தில், சந்தனத்தேவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டு,  சமாதி கட்டப்பட்டது.  முக்கிய தினங்களில் சந்தனத்தேவனின் சமாதியில்,  விளக்குகள் ஏற்றி மக்கள் வணங்கி வந்துள்ளனர்.  அந்த இடம் பலரது கைமாறி தற்போது,  நல்லத்தேவன்பட்டியை சேர்ந்த பசும்பொன் என்பவரின் வசம் உள்ளது. சந்தனத்தேவனின் சமாதி பராமரிப்பு இன்றி , மண்மேடாக காட்சி அளிக்கிறது.

நாட்டுப்புற பாடல்களில் சந்தனத்தேவன்:-


சந்தனத்தேவன் போலீசாரிடம் பிடிபடாமல் , வசதி படைத்தோரிடம் இருந்து செல்வங்களை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தார். இதனால் மக்கள் மத்தியில் சந்தனத்தேவனுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்துள்ளது.

நாட்டுப்புற விழாக்களில் சந்தனத்தேவனைப் பற்றிய பாடல்கள் மக்களால் பாடப்பட்டு வந்துள்ளது. மக்களின் வாழ்வோடு சந்தனத்தேவன் கதை ஒன்றிணைந்து இருந்தது. சந்தனத்தேவனை தூக்கிலிட்ட பின்,  திருச்சி சாமிப்பிள்ளை என்பவர் " சந்தனத்தேவன் சிந்து " என்ற நாட்டுப்புற பாடல் தொகுப்பை வெளியிட்டார்.  இத்தொகுப்பில் சந்தனத்தேவனின் ஆற்றல் மற்றும் வீரம் முதலியவை புகழப்பட்டுள்ளது. 

சந்தனத்தேவனின் கதையை பிண்ணனியாக கொண்டு மன்னர் காலத்தை மையமாகக் கொண்டு " சந்தனத்தேவன்" எனும் திரைப்படமே 1939ல் வெளிவரும் அளவுக்கு சந்தனத்தேவன் கதை அக்காலத்தில் பிரபலமாக இருந்துள்ளது. 

சு சக்திவேல் அவர்கள் எழுதிய " சமூக கதைப்பாடல் ஒர் ஆய்வு"  எனும் புத்தகத்தில் சந்தனத்தேவனை இங்கிலாந்து நாட்டுப்புற கொள்ளையன் ராபின்வுட்டோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். தமிழகத்தின் பழமையான காவல் முறையை ஒழிக்க வெள்ளையர்கள் மேற்க்கொண்ட முயற்சிக்கு பலியானவரே சந்தனத்தேவன்.

சந்தனத்தேவனின் ஆற்றலையும், பெருமையையும் கூறும் நாட்டுப்புற பாடல்கள் சிலவற்றை காணலாம்

"எல்லாரு காடுதானும் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு - ஏலங்கிடி லேலோ

சந்தனத்து காடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ

எல்லாரு வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சு வீடு- ஏலங்கிடி லேலோ

சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான மச்சு வீடு- ஏலங்கிடி லேலோ

எல்லாரு கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும்சட்டை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுசட்டை- ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும்சட்டை - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்ச்சோறு- ஏலங்கிடி லேலோ

சந்தனம் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
சரியான சம்பரிச்சோறு- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் ஏறும்வண்டி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் ஏறும்வண்டி - ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் வெட்டும்கத்தி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் வெட்டும்கத்தி - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ

எல்லாருங் கட்டும்பொண்ணு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கருத்தப்பொண்ணு- ஏலங்கிடி லேலோ

சந்தனம் கட்டும்பொண்ணு - ஏலங்கிடி லேலோ
சரியான செவத்தப்பொண்ணு- ஏலங்கிடி லேலோ

எல்லாருங் போடும்மிஞ்சி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளிமிஞ்சி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும்மிஞ்சி - ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளிமிஞ்சி- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டு வெற்றிலை- ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்து வெற்றிலை- ஏலங்கிடி லேலோ

எல்லாரு துணிப்பெட்டியும் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் துணிப்பெட்டிதான் - ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டி- ஏலங்கிடி லேலோ

எல்லாரு படுக்குங் கட்டில் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கைத்துக்கட்டில்- ஏலங்கிடி லேலோ

சந்தனம் படுக்குங் கட்டில் - ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில்- ஏலங்கிடி லேலோ

எல்லாரு கழுத்திலேதான் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம்- ஏலங்கிடி லேலோ

சந்தனம் கழுத்திலேதான் - ஏலங்கிடி லேலோ
சரியான சென்பகப்பூவாம்- ஏலங்கிடி லேலோ

எல்லாருங் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர்- ஏலங்கிடி லேலோ

சந்தனம் குடிக்கிறது - ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத் தண்ணீர்- ஏலங்கிடி லேலோ

எல்லாரு சாப்பிடும் இலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம் இலை- ஏலங்கிடி லேலோ

சந்தனம் சாப்பிடும் இலை - ஏலங்கிடி லேலோ
சரியான  வாழை இலை- ஏலங்கிடி லேலோ

எல்லாரும் படுக்கும் பாயி - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரப்பாயி- ஏலங்கிடி லேலோ

சந்தனம் படுக்கும் பாயி - ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும் மோதிரம் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் - ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும் மோதிரம் - ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போடும் சண்டை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற வாய்ச்சண்டை - ஏலங்கிடி லேலோ

சந்தனம் போடும் சண்டை - ஏலங்கிடி லேலோ
சரியான வாள்ச்சண்டை - ஏலங்கிடி லேலோ

 எல்லாரும் குடியிருப்பு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பட்டிக்காடு - ஏலங்கிடி லேலோ

 சந்தனம் குடியிருப்பு - ஏலங்கிடி லேலோ
சரியான கரட்டுக்காடு - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் துடைக்குள்ளேதான் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற சதையெலும்பு - ஏலங்கிடி லேலோ

சந்தனம் துடைக்குள்ளேதான் - ஏலங்கிடி லேலோ
சரியான நரிக்கொம்புதான் - ஏலங்கிடி லேலோ

எல்லாரும் போலீசென்றால் - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நடுக்கந்தான் - ஏலங்கிடி லேலோ

சந்தனத்துக்குப் போலீசென்றால் - ஏலங்கிடி லேலோ
சரியான சக்காந்தமாம் (ஏளனமாம்)- ஏலங்கிடி லேலோ

( மலையருவி, Madras government oriental series, 1958, பர்சீ மாக்வீன் என்பவரால் தொகுக்கப்பட்டது )

பாமர மக்களால் பாடப்பட்ட இப்பாடல்கள் சந்தனத்தேவரின் செல்வ வளம், வீரம் முதலியவற்றை விளக்குகிறது. சந்தனத்தேவன் வாள்ச்சண்டை அறிந்தவன் என்றும், உடல் வலிமையுள்ளவன் என்றும், போலீசாரைக் கண்டு அச்சமில்லாதவன் என்றெல்லாம் புகழப்பட்டுள்ளார். 

போலீசார் சந்தனத்தேவனை தேடும் காலகட்டத்தை குறிப்பிடும் மற்றொரு நாட்டுப்புற பாடல் தொகுப்பு:-

"ஆயிரம் ரூபா தாரேன்
ஐக்கோட்டு வேலை தாரேன்
சந்தனத்தை பிடித்தவருக்கு
சருக்காரு வேலை தாரேன்"

என அரசாங்கம் அறிவிப்பு தந்ததாக பாடல் கூறுகிறது.

"ஆயிரம் ரூபா வேண்டாம்
ஐக்கோட்டு வேலை வேண்டாம்
சந்தனத்தை பிடிக்க வேண்டாம்
சருக்காரு வேலை வேண்டாம்"

என மக்கள் பாடுவதாக அமைந்துள்ளது, சந்தனத்தேவனுக்கு மக்களிடம் இருந்த ஆதரவை நமக்கு விளக்குகிறது.

" ஏட்டை இழுத்து வச்சு
 இன்ஸ்பெக்டரை கட்டி வச்சு
துவரங்காயைத் தின்னச் சொல்லி
மாட்டுரானே சந்தனமும்" 

என சந்தனத்தேவனுக்கும் போலீசாருக்கும் இருந்த பகைமை எடுத்துரைக்கப்படுகிறது.

"மகனுக்கு மல்லு வேட்டி
தாயாருக்கு சாயச் சீலை
பெண்டாட்டிக்கு பொட்டுச் சீலை
போய் எடுத்தான் சந்தனமும்"

என மற்றொரு பாடல் சந்தனத்தேவனின் குடும்பம் பற்றி குறிப்பிடுகிறது.

தமிழர் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருந்த தேசக் காவல் முறையை ஒழிக்க பிரிட்டீசார் எடுத்த முயற்சிகளின் விளைவாக,  காவலை தொழிலாக செய்து வந்த போர்க்குடியினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். வெள்ளையர்களின் தூண்டுதலால் சாதாரண பொதுமக்கள் காவல் தொழிலை இழந்த போர்க்குடியினருக்கு எதிராக திரும்பினர்.19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் போர்குடி மரபினர்,  

காவல் தொழிலை பாதுக்காக்க,  வன்முறையை கையில் எடுத்தனர். இதன் விளைவாக பல சச்சரவுகள் மற்றும் கலகங்கள் ஏற்பட்டன.  இத்தகைய வாழ்வாதார ஒழிப்பு நடைமுறையால் கொள்ளையனாக மாற்றப்பட்டவரே சந்தனத்தேவர். வசதி படைத்தோரை தாக்கி கொள்ளையடித்து,  ஏழை எளிய மக்களுக்கு அளித்து மகிழ்வித்த சந்தனத்தேவர்,  மக்களிடம் ஒரு கதாநாயகனாகவே உயர்ந்தார். 

இதன் விளைவாகவே அவரைப் பற்றிய நாட்டுப்புற பாடல்கள் பாமர மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ளது. தேசக்காவல் முறை ஒழிப்பால் வன்முறையை நோக்கி தள்ளப்பட்டு, வெள்ளைய ஆதிக்கத்துக்கு எதிராக செயல்பட்டு மாண்ட சந்தனத்தேவனின் புகழ் என்றும் போற்றுதலுக்குரியது.  சந்தனத்தேவனின் சமாதியை முறையாகப் பராமரித்து வழிப்பட்டு வருவதே சந்தனத்தேவருக்கு நாம் செலுத்தும் மரியாதை! 




ஆதார நூல்கள்:- 
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்: சுந்தர வந்தியத்தேவன் (545-555)
தமிழர் நாட்டுப்பாடல்கள் தா.வானமாமலை
The anti kaval movement of 1896, Anand pandian 
The indian economy ane social history review 

நன்றி : சியாம் சுந்தர் சம்பட்டியார்.


முழுமையாக வரலாற்றை அறிய http://www.sambattiyar.com/தமிழகத்தின்-ராபின்வுட்/ பக்கத்தில் பார்க்கவும்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்