தஞ்சை-ஒரத்தநாடு இடையில், 17 கி.மீ., தூரத்தில் மேலஉளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முதுபெரும் தியாகி எஸ்.நடராஜன், 99. இவரது மனைவி தனலட்சுமி, தன், 50வது வயதில் இறந்தார்.
தியாகிக்கு மகன் சிவராஜன், இந்திரா, மங்கையர்க்கரசி, சுசீலா ஆகிய, மூன்று மகள்கள் உள்ளனர்.
இவர்களில், மங்கையர்க்கரசி கணவர் ஜெகதீசன், 58, மேலஉளூர் கிராமத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவர், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளராக உள்ளார்.
தியாகி நடராஜனின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டத்திலுள்ள மேலஉளூர் கிராமம். விவசாயக் குடும்பம். தாய் வயிற்றில், நடராஜன் இருக்கும்போதே தந்தை சிவசாமி குமரண்டார் இறந்து விட்டார். அதன்பிறகு, தாய் மங்களம் மற்றும் தாய் மாமன் பழனியாண்டி கடம்புரார் ஆதரவில் வளர்ந்தார்.
கடந்த 1947ம் ஆண்டு, காந்தி துவங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து, இளம்வயதில் துடிப்பாக களப்பணியாற்றினார். அப்போது, உப்பு சத்யாகிரக போராட்டத்தில் பங்கேற்று, சிறைக்குச் சென்றார்.
வெள்ளையரை எதிர்த்து, காந்தி பல்வேறு அகிம்சை போராட்டங்களை அறிவித்து, நடத்தினார். குறிப்பாக, குஜராத்தில் தண்டி யாத்திரையை துவங்கி, உப்பு சத்யாகிரக போராட்டம் நடத்தினார்.
இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் துவங்கிய யாத்திரையில் நடராஜன் பங்கேற்றார். இப்போராட்டத்தில் பங்கேற்க போகும்போது, ஒரு பைசா கூட வீட்டில் இருந்து கொண்டு செல்லக்கூடாது. வெறுங்கையுடன் வீட்டை விட்டு வெளியேறி தேசத்துக்காக போராட வேண்டும் என்னும் கட்டுப்பாடு, கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, வெறுங்கையுடன் வீட்டை விட்டு வெளியேறி, தியாகி நடராஜனும் போராட்டத்தில் பங்கேற்றார்.
காந்தி துவங்கிய, "டெல்லி ஸலோ' போராட்டத்தில் பங்கேற்றபோது, சென்னை பூக்கடையில் கைது செய்யப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அலிபுரம், அந்தமான் சிறைகளில் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார். சொந்த கிராமத்தில் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றியதற்காக, வெள்ளைக்கார போலீஸாரால், தடியடிக்கு ஆளானார்.
தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது, 1960ம் ஆண்டு, மேலஉளூர் கிராமத்தில் காமராஜர் பெயரால் காலனியை நிறுவி, அதை திறக்க வருமாறு, காமராஜரையே, அழைத்துள்ளார். அதன்படி, 1960 மே, 21ல் எளிமையான காலனி திறப்பு நிகழ்ச்சியில் காமராஜர் பங்கேற்றார். அப்போது, தியாகி நடராஜன் மேலஉளூர் பஞ்., தலைவராக பொறுப்பு வகித்தார்.
தொடர்ந்து ஜில்லா போர்டு மெம்பராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது தனிப்பட்ட முயற்சியால் முதல்வர் காமராஜர் காலத்தில் மேலஉளூர் மற்றும் வாண்டையார் இருப்பு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது.
இறுதிக்காலத்தில் தியாகி பென்ஷன் பெற்று, எளிமையாக வாழ்ந்தார்.
எப்போதும் கதர் ஆடையை அணியும் வழக்கம் உள்ளவர்.
தியாகி எஸ்.நடராஜனின் மருமகன் ஜெகதீசன் கூறியதாவது:
தேசத்துக்காக போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றவர். தன், 100 வயதாக, ஆறு மாதமே இருந்த நிலையில் மேலஉளூர் கிராமத்திலுள்ள அவரது சொந்த வீட்டில் 2013 ஆகஸ்ட் 28ம் தேதி அதிகாலையில் வயோதிகம் காரணமாக, மரணம் அடைந்தார்.
சுதந்திரத்துக்காக போராடி பலமுறை சிறை சென்று, கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்த முதுபெரும் தியாகி எஸ்.நடராஜன் இறுதிச்சடங்கும் "எளிமையாக' நடந்தது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், அதிகாரிகள் யாரும், "மரியாதைக்காக' கூட பங்கேற்கவில்லை.
2014 , ஆக., 30ம் தேதி, "காலைக்கதிர்' நாளிதழில், "தஞ்சை முதுபெரும் தியாகிக்கு எளிமையான முறையில் இறுதி அஞ்சலி' என, செய்தி வெளியானது. அதன் பிறகு மேலஉளூர் கிராமத்தில் மறைந்த முதுபெரும் தியாகி எஸ்.நடராஜனுக்கு, ஒரத்தநாடு தாசில்தார் சார்பில் துணை தாசில்தார் மரியாதை செலுத்தி, தமிழக அரசு சார்பில் வருவாய்த்துறை மூலமாக இறந்த தியாகி ஈமச்சடங்குக்கு என, வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி 5,000 ரூபாயை அரசு சார்பில் உடனே வழங்க தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் தியாகிக்கு உரிய மரியாதையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உயரதிகாரியான கலெக்டரே நேரில் சென்று அளித்து, அஞ்சலி செலுத்த வேண்டும். முதல் மரியாதை தர வேண்டும். தேசத்துக்காக தியாகிகள் ஆற்றிய தியாகத்துக்கு மதிப்பும், கவுரவமும் அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் அப்பொழுது கோரிக்கை வைத்தனர்.