தஞ்சை மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த ஊரவர் சபையினராக அகளங்க பல்லவராயர், தியாகவினோத பல்லவராயர், ராசபுரந்திரப் பல்லவராயர், வீரவினோத பல்லவராயர், எதிரிலிச்சோழ பல்லவராயர், சோழவிச்சாதரப் பல்லவராயர், மாங்குடையான் ராசராசப் பல்லவராயர், முதலிய பல்லவராயர்களும்,
அதிகைமான் , கங்கதரையன், பரகலுடையதெலென்னார், பாசக்கழையான், திருவையாறுடையார், தேவகுலமுடையான் பெரிய உடையார், வல்லமுடையான் பெரிய உடையான் முதலியோர்களும் இருந்துள்ளனர்.
இவர்கள் இணைந்து வல்லத்தின் கோட்டைக்குள் அமைந்துள்ள கரிகாலச் சோளீஸ்வரமுடைய நயினார் கோயில் எனும் சிவாலயத்திற்காக, அக் கோயிலுடைய சிவாச்சாரியாரான ஆலிலுத் தேவன் பலவன் நாயகப் பட்டர் என்பவருக்கு, அவ்வூரைச் சேர்ந்த குமணன் குடிகாடு புஞ்சை நிலத்தை தடமாகக் கொண்ட [வழி] கூத்தங்குடி விளைநிலத்தில் இரண்டு குழி அளவு நிலம் இறையிலியாகத் தானமளித்துள்ளனர்.
இதே சாசனத்தில், அதே கோயிலின் மற்றொரு சிவாசாரியாரான புதுவலி வனநாயகப் பட்டர் என்பவருக்கு அதே கூத்தங்குடி விளைநிலத்தின் கீழ்பகுதி நிலத்தை, செம்பூண்டியைச் சேர்ந்த ஊரவர் சபையினரான "காட்டூருடையார்கள்" என்போர் இணைந்து சூரியச் சந்திரர் உள்ளவரை அனுபவித்துக் கொள்ளுமாறு தானமளித்துள்ளனர்.
மேலுள்ள இறையிலித் தான நிலம் காவலுக்குரிய நிலமாக இருந்துள்ளதை "...இவ்வூர் குடிகாடு கூத்தக்குடி 'காவலில்' விளைநிலம்" - எனும் தொடர் உணர்த்துகிறது. மேலும் இந்த சிவாலயம் கோட்டைக்குள் இருந்தது. ஆகவே மேற்சொன்ன பல்லவராயர் - காட்டூருடையார் முதலியோர்கள் படைப்பற்று ஊரவர்களாக இருந்திருக்க வேண்டும். அந்த கோட்டை சிவாலயமும் படைப்பற்றுச் சிவாலயமாகவே அமைந்திருத்தல் வேண்டும்.