புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவாதி அருகே உள்ள பாலகிரி எனும் பெயர் கொண்ட வையாபுரி என்கிற இயற்கை எழில் சூழ் தலத்தில் வள்ளி, தெய்வானை,உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி குமரமலை முருகன் கோயில்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது குமரமலை. இந்த மலைக்கு அருகிலுள்ள குன்னக்குடிபட்டி என்ற கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் அய்யாச்சாமி என்கிற சேதுபதி வாழ்ந்து வந்தார்.
இவர் ஒரு தீவிர முருக பக்தர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முப்பது நாட்களும் விரதமிருந்து, திருக் கார்த்திகையன்று காவடி எடுத்து, கால்நடையாக பழனிக்குச் சென்று பழனி ஆண்டவனை வழிபட்டு விரதத்தை முடிப்பார். 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது.
"பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே! இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்!' என்ற வேதனையுடன் படுக்கைக்குச் சென்று கண்ணயர்ந்தார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன், "சேதுபதி, வருந்தாதே! இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.
அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று "குமரமலை' என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்!' என்று சொல்லி மறைந்தார்.
கனவு கலைந்து திடுக்கிட்டுக் கண் விழித்த சேதுபதி, பொழுது புலர்ந்ததும் நீராடி முடித்து, கனவில் முருகன் குறிப்பிட்ட இடத்தை தேடிச் சென்றார். கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடி களின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடம் அதுவே என்று அங்கு அமர்ந்து அவனை நினைத்து வழிபட்டார். பின் அவை அனைத்தையும் தன் பூஜை அறையில் கொண்டு வந்து வைத்துவிட்டு, அந்த இடத்தில் அவனது அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அவரும் அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.
அந்த ஆண்டு முதல் சேதுபதி பழனி முருகனுக்குச் செலுத்த வேண்டிய காணிக் கையை இங்கேயே செலுத்தி, திருக்கார்த்திகை விரதத்தை முடித்தார். அப்பகுதி மக்களும் அவர் வழியில் பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தை பழனி முருகன் கோவிலாக நினைத்து வழிபடத் தொடங்கினார்கள். சேதுபதியின் மறைவிற்குப் பின்னும் இந்த நிலை தொடர்ந்தது.
200 ஆண்டுகளுக்குமுன் சேதுபதியைப் போன்ற முருகன் அடியார்களில் ஒருவரான அப்பாவு ஐயர் என்பவர் இந்த வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுத பாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்டார். அன்றிரவு அந்த அடியவரின் கனவில் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, "அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள்; தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார்.
முதலில் வேல் உருவிலும் அதைத் தொடர்ந்து அவன் திருவுருவிலும் அவனே வழிகாட்டிய வித்தியாசமான- சக்திமிக்க திருத்தலம் குமரமலை. குமரமலைக்கு அருகிலுள்ளது புல்வயல் கிராமம். இந்தக் கிராம அதிகாரி முத்துமீனாட்சி கவிராயர் குமரமலை முருகனின் பக்தர். இவர் தினசரி மலை அடிவாரத்தில் உள்ள சங்குக் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நாள்தோறும் வழிபட்டு வந்தார். அங்கேயே முருகன் சந்நிதிமுன் அமர்ந்து தவம் செய்து தினமும் ஒரு பாடல் வீதம் 100 பாடல்களைப் பாடி முடித்தார். அவர் எழுதிய 100 பாடல்களையும் நூலாகத் தொகுத்து "குமரேச சதகம்' என்று பெயரிட்டு, தன் பெய ரையும் "குருபாத தாசர்' என்று மாற்றிக் கொண்டார். அந்த நூல் பக்திப் பாடல் மட்டுமல்ல; நாம் ஒவ்வொருவரும் படித்து, உணர்ந்து, நடைமுறைப்படுத்த வேண்டிய அறநூல்.
குமரமலை முருகனை குலதெய்வமாகக் கொண்ட அய்யாச்சாமி வழிவந்தவர்கள் கீற்றுக் கொட்டகையாய் இருந்த கர்ப்பகிரக மண்டபத்தை கல் மண்டபமாக்கி, மேலும் சில திருப்பணிகளையும் செய்து, 1851-ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள். குமரமலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத பல்லவராயர், குமரமலையானின் அருளாற்றலை அறிந்து கோவிலை விரிவு படுத்தி, விநாயகர்- இடும்பன் மண்டபங்களை அமைத்து, 1898-ல் அடுத்த கும்பாபிஷேகத்தை நடத்தினார். இப்பகுதி மக்கள் மேற்பார்வையில் இருந்து புதுக்கோட்டை சம்ஸ்தானத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இக்கோவில் வந்தது.