16 செப் 2016 ல் காவிரி பிரச்சனைக்கு உரிய தீர்வுகாண வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மன்னார்குடி விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் விவசாயி பாண்டியன் சேண்டபிரியர், அவரது மனைவி செண்பகவல்லி, இவரது மகன் விக்னேஷ் (26) இவர் மன்னார்குடி அர்பன் வங்கி பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, லார்டு செவன் ஹில்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னில் டி.எம்.இ. படித்துவிட்டு சென்னையில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்து கொண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்து கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார்.
தீக்குளிக்கும் முன் எழுதிய கடிதத்தில்,
காவிரி நீர் வேண்டும், மீத்தேன் எரிவாயு குழாய் அமைப்பதை தடுக்கவேண்டும், சாராய ஆலை மூடப்பட வேண்டும், தமிழ் மொழியை காக்க வேண்டும், தமிழர்களே முதலாளிகளாக வேண்டும் என சொல்லி,
இதற்காக என் உயிரே கடைசியாக போன உயிராக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த தமிழன் விக்னேஷ்,
தான் நாம் தமிழர் இயக்க மாணவர் பாசறையில் இருந்தாலும், எங்காவது ஒரு இடத்திலாவது நாம் தமிழரை ஆதரிக்க வேண்டும் என எழுதி செல்லாமல், தன் கோரிக்கைகளுக்கு பாடுபடும் தமிழர்களை ஆதரிக்க வேண்டும் என பொதுவாய் எழுதிய தமிழ்த்தேசியன்.
காவிரி விவகாரத்துக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் இறுதி ஊர்வலம் 17 செப் 2016 மாலை மன்னார்குடியில் நடந்தது.
இதையடுத்து விக்னேஷின் உடலுக்கு சீமான், வெள்ளையன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விக்னேஷின் உடல், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான வளசரவாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு விக்னேஷின் உடலுக்கு, இயக்குநர்கள் விக்ரமன், வி. சேகர், களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுதது அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மன்னார்குடியில் சொந்த வீட்டில் வைக்கப்பட்ட விக்னேஷின் உடலுக்கு நாம் கட்சியின் கொடி போர்த்த நாம் தமிழர் கட்சியினர் முற்பட்டனர். அதற்கு உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்னேஷின் தாயாரும் கொடியை போர்த்த மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மன்னார்குடியில் காலை 10 மணி வரை விக்னேஷின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மன்னார்குடியில் அஞ்சலி செலுத்தினார். மேலும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிபிஐ மகேந்திரன், பாஜக கருப்பு முருகானந்தம் ஆகியோரும் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதிக அளவிலான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.
விக்னேஷின் அம்மா செண்பகவல்லி அவர்கள், தன் மகனுடைய நினைவு நாளை தமிழக அரசு காவிரி எழுச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தை தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அழைத்து சென்று கோரிக்கையாக வைத்தார்.