செவ்வாய், 22 அக்டோபர், 2019

அரசங்குடி




அந்த கோடைகால காலை வேளையில் மொத்த அரசங்குடி கிராமமும் சீயான் சாவடியில் கூடியிருந்தது.

அரசங்குடியில் இதுவரை இரண்டே முறை தான் இதுபோன்ற கூட்டம் சீயான் சாவடியில் கூடியிருக்கிறது.முதலாவது கிராம பஞ்சாயத்தாரால் வைக்கப்பட்ட ஊரின் முதல் டிவியை பார்க்க,இரண்டாவதாக நடிகர் ராமராஜன் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது.கடந்த இருபது ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சீயான் சாவடி நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.

அரசங்குடியின் ஆணிவேர் இந்த சாவடி.பஞ்சாயத்தில் தொடங்கி,ஜல்லிக்கட்டு,சேவச்சண்டை,ரேக்ளாரேஸ்,கருப்புசாமி கோயில் கிடாவெட்டு,கோடைகால மதியநேர கிடை,அரசாயி கோயில் குள மீன்பிடி ஏலம் என சகலத்திற்கும் சகல விதங்களில் பயன்பட்டது பெயர்காரணம் இதுவரை தெரியாத இந்த சீயான்சாவடி.

மொத்த ஊரும் பஞ்சாயத்து தலைவர் கருப்பட்டி ஏத்தாண்டாரின் வருகைக்காக காத்துகொண்டிருந்தது.தேர்தல் இல்லாமல் இருநூற்றைம்பது குடும்பங்கள் இருக்கும் அரசங்குடியில் ஒவ்வொருமுறையும்  ஏத்தாண்டார் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தார். 

ஏத்தாண்டார்,காடுரார்,பாண்டுரார்,அயிரப்பிரியர்,சோமநாயக்கர்,முனையதிரியர் என சோழர்கால சமூகப்பிரிவுகளின் கடைசிப்பிரதியாக இருந்த அரசங்குடியில் அன்றைய பஞ்சாயத்தில் விவாதிக்க மிகமுக்கியமான விசயம் ஒன்றும் கருப்பட்டியாரின் வரவுக்காக காத்துகொண்டிருந்தது.






கருப்பட்டியார் வருவதற்கும்,தெற்கே தோகூர் கதிரேசன் ரைஸ்மில்லில் முதல் சங்கு ஊதுவதற்கும் நேரம் சரியாக இருந்தது.அவர் தனக்கான இடத்தில் அமர்ந்ததும் ஆரம்பமானது பஞ்சாயத்து.

பஞ்சாயத்து வழிமுறைகளின்படி தலயாரி செல்லமுத்து சேர்வை ப்ராதை ஆரம்பித்துவைத்தார்.

“ஐய்யா,நேத்து நம்ம சப்பாணிகருப்பு கோயில்ல இருந்த போலீஸ் சாமிய யவனோ களவாண்ட்டு போனதபத்தி மேற்கொண்டு என்னபண்ணலாம்னு முடிவுபண்ரதுக்குதான் பஞ்சாயத்த கூட்டிற்கம்ங்க”

கருப்பட்டி ஏத்தாண்டாரின் கொல்லுப்பாட்டனார் சுந்தரபாண்டி ஏத்தாண்டார் தான் அரசங்குடி மக்கள் கண்ணால் பார்த்து,பழகிய சப்பாணிகருப்பு இந்த போலீஸ் சாமி.வெள்ளைக்காரர்களால் அறிமுகபடுத்தப்பட்ட போலீஸ் முறையில் உருவான தோகூர் காவல் நிலையத்தின் முதல் கண்காணிப்பாளர் இந்த போலீஸ்சாமி.திருடுவதையே தொழிலாக கொண்ட ஒரு வர்க்கத்தை விவசாயம் செய்யும் சம்சாரிகளாக மாற்றியது இவர் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை.பதிலுக்கு சம்சாரிகள் நாத்திகராய் வாழ்ந்த சுந்தரபாண்டியாரை போலீஸ்சாமியாக்கி சப்பாணிக்கருப்பு கோவிலில் சாமிசிலையாக நிற்கவைத்தார்கள்.தலைமுறை தலைமுறைகளாக ஒவ்வொர்முறை ஊர்த்திருவிழாவின் போதும் கடைசிநாள் சப்பாணிகருப்பிற்கும்,போலீஸ் சாமிக்கும் ஒதுக்கப்பட்டு கிடாவெட்டு,சாராயம்,ரெக்கார்ட் டான்ஸ் என திருவிழா கலைகட்டும்.

இந்த வருட திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் ஆட நத்தம் சுந்தரி பார்டிக்கு கொடுத்த அட்வான்ஸ் வீணாகிபோய்விடுமோ என்று கூட்டத்தில் சிலர் ஆழ்ந்த கவலையில் இருந்தனர்.

“பேசாம தோகூர் போலீஸ் ஸ்டேசன்லயே புகார் கொடுத்தாயென்ன?” கேள்வியோடு பேசஆரம்பித்தார் சுப்பையா வாத்தியார்.

“போலீஸ்சாமிய திருடன் கொண்டுபோய்ட்டான்னு போலீஸ்ல புகார் கொடுத்த நம்மூர் மானம் போகாது வாத்தியாரே?” என்று எதிர் கேள்விகேட்டார் கருப்பட்டி.

“வேறென்னதான் பண்றது,அடுத்த பொளர்ணமிக்கு திருவிழாவ வச்சிகிட்டு இப்படி சாமிய திருடு குடுத்திட்டு ஒக்கார்ந்திருக்கோமே” என்றார் வாத்தியார்.

“அதுக்கில்ல வாத்தியாரே, இது வெறும் திருட்டு மட்டும் இல்லீங்களே இதில நம்மூரோட மான,மரியாதையும் சம்பந்த பட்டிருக்கில்ல,கொஞ்சம் யோசிச்சிதாங்க செய்யணும்”..என்று விவாதத்தில் கலந்துகொண்டார் வெளக்கெண்ண செட்டியார்.பரம்பரை பரம்பரையாக எண்ணெய் வியாபாரம் செய்ததால் தொழிலோடு ,பேரும் செட்டியாரோடு ஒட்டிக்கொண்டது.

“சரியாசொன்னீங்க செட்டியாரே” என்று வழிமொழிந்தார் சப்பாணிகோயில் பூசாரி புலியேறுபடியான்.

“ஒனக்கு யாருபேர்லயாவது சந்தேகமாயிருக்கா?புலியேறு” என்று வினவினார் கருப்பட்டி.

“வெறும் எறநூத்தம்பது குடும்பதான் இருக்குது,இதில எப்டி பார்த்தாலும் எல்லா பயலும் ஒருவகயில சொந்தகாரணுங்கதான்,நான் யாரெண்ணு சந்தேகப்படுரதுங்க்கைய்யா”..என்று ஏகவசனத்தில் பேசிமுடித்தார் பூசாரி.

“நீங்களாப்பார்த்து ஒரு நல்ல முடிவா சொல்லுங்க ஏத்தாண்டாரே” என்று அவசரப்படுத்தினார் சுடுதண்ணி நல்லமுத்து காடுரார்.கேள்வியிலேயே பெயர்க்காரணம் தெரியும்படி.

“பேசாம கருப்பு கோயில்லயே முட்டய மந்திரிச்சி,கோழிய அறுத்து போட்டோம்னா,திருடுனவன் ரத்தவாந்தி எடுத்து செத்துபோய்டுவான்ல,அதவச்சி போலீஸ்சாமிய கண்டுபுடிச்சிடலாம்ல?”என்று இரண்டாவது  யோசனையை கொடுத்தார் தங்கையா ஆசாரி.

வெத்தலைல மை வைச்சி பார்க்கிறது,வெட்டுடையா காளிகோயில்ல வரமொளகாய எரிக்கிறது,அய்யனாருக்கு மாட்டுக்கறி படையல் போடுறது,செம்மறி ஆட்டு ரத்தத்த ஊர சுத்திதெளிக்கிறது என அவரவர்களின் கற்பனா சக்திக்கு ஏற்ப யோசணைகள் வந்ததே ஒழிய முடிவுமட்டும் எட்டபடாமல் இருந்தது.

முடிவாக கருப்பட்டி ஏத்தாண்டார் பேச ஆரம்பித்த போது தோகூர் கதிரேசன் ரைஸ்மில்லில் இரண்டாவது சங்கு ஊதியது.

“வெளக்கெண்ண செட்டியார் சொன்னமாரி இதில நம்மூர் மான,மரியாத கலந்திருக்கதால போலீஸ்ட்ட,போலீஸ்சாமிய காணும்னு புகார்கொடுத்து நாமலே நம்ம பேரகெடுத்துக்க வேணாம்னு நெனக்கிறேன்,அதனால நாமளே நமக்குள்ள ஒரு குழுவ அமச்சு போலீஸ் செய்யவேண்டிய வேலய நாமளே செஞ்சு,திருவிழாக்குள்ள சாமிய கண்டுபுடிச்சிடுவோம்”

கருப்பட்டியார் கொஞ்சம் நாத்திகராயிருந்த காரணத்தால் அவர் முடிவு பலருக்கு அப்படியே பட்டது.

“போலீஸ்சாமிய கண்டுபுடிக்க போற போலீஸ் வேல பாக்கப்போற குழுல யார்யார போடணும்ன பொறுப்ப தலயாரி செல்லமுத்து கிட்டயும்,பூசாரி புலியேறுட்டயும் ஒப்படைக்கிறேன்”

கல்லடிபட்ட மரத்திலிருந்து பறக்கும் வெளவால்கள் போல கூட்டம் கலைந்து சென்றது.

மறுநாள் காலை கருப்பட்டியாரின் வீட்டின்முன்பு தலயாரியும்,பூசாரியும் இருகுழுக்களாக வந்திருந்தனர்.

தலயாரி செல்லமுத்து சேர்வை தலமையில் மிலிட்டெரிக்கார ஆறுமுகம்,கப்பக்காரர் பேரன் பூதலிங்கம்,சிலம்ப வாத்தியார் ராசாங்கம்,தலயாட்டி செல்வராசு என புஜபலபராக்கிரம படையும்,பூசாரி புலியேறுபடியான் தலமையில் சுப்பையா வாத்தியார்,கறிக்கட பீரான் ராவுத்தர்,கொல்லன் ஆரோக்கியம்,கருப்பட்டியாரின் கடைசி மகன் போஸ் என ஒரு மதநல்லிணக்க படையும் தயாரானது.

சக்கிலியன் சின்னக்கண்ணு முன்கதை மொத்தத்தையும் தண்டோரா போட்டு ஊருக்கே சொல்லிமுடித்தான்.

அரசங்குடி போலீஸ்படை போலீஸ்சாமி திருடனை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.ஊருக்கு புதிதாக வந்துபோனவர்கள்,சாமியே இல்லை என சொல்லித்திரியும் பெரியார் கட்சி காரர்கள்,பக்கத்து ஊரிலுள்ள பெட்டிகேசில் மாட்டிக்கொள்ளும் முன்னால் களவாணிகள் என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.திருவிழா வேறு நெருங்கிகொண்டிருக்க போலீஸ்சாமி போன திசையே தெரியவில்லை.

“தங்கத்துல செஞ்ச செலன்னலும் பரவால்ல,கல்லுல செஞ்சதுதான அதுக்குபோய் ஏன் இவ்ளோ கஷ்ட படணும்?பேசாம புதுசா ஒன்னு செஞ்சுக்களாமே தலயாரி” என்று கப்பக்காரர் பேரன் பூதலிங்கம் நக்கலாக கேட்டான்.

“எலேய்,ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி மண்ணுக்குள்ள போன கல்லத்தாண்டா இன்னைக்கு பொன்னுங்கராங்க..போலீஸ்சாமி செலயும் அந்தமாதிரி தாண்டா” என்று சூடானார் சேர்வையார்.

மொத்த ஊரும் செய்வதறியாது தவித்துகொண்டிருந்தது.போலீஸ்படையால் போலீஸ்சாமி போனதிசையை கூட கண்டுபிடிக்கமுடியவில்லை.

சப்பாணி கருப்பிடம் பூக்கட்டி போட்டு போலீஸ்சாமி கிடைக்குமா என்று பார்த்த பூசாரி புலியேறுபடியானுக்கு சாமி கிடைத்துவிடும் என்று சப்பாணி சாமி சொன்னது மிகுந்த சந்தோசத்தை அளித்தது.ஆனால் சாமிதான் கிடைத்தபாடில்லை.

ஒருநாள் மதிய பூசை முடிந்தவுடன் கோயிலை பூட்டிவிட்டு வெளியேவந்த பூசாரியின் காலில் ஏதோ குத்தியது.வலி பொறுக்க முடியாமல் போலீஸ்சாமி இருந்த மதிலருக போய் அமர்ந்த அவர் பார்வையில் பட்ட அந்த பொருள் போலீஸ்சாமி போன வழியைகாட்ட போகும் ராஜாபாட்டையாக அமைந்தது.அதை எடுத்துகொண்டு கருப்பட்டியாரின் வீட்டிற்கு அவர் மொத்த அரசங்குடி போலீஸ்படையையும் கூட்டிக்கொண்டவிரைந்தார்.

“என்ன புலியேறு இது?”

நடந்ததை சென்னார் புலியேறுபடியான்.

“அப்ப போலீஸ்சாமி கிடைச்சமாரிதான்னு சொல்லு”என்றார் வெளக்கெண்ண செட்டியார்.

“கருப்பணே சொல்லிட்டான்,கெடைக்காமலா போயிடும்” என்றார் பூசாரி.

“ஆனா இதவச்சிக்கிட்டு எப்டி கண்டுபுடிக்க” என சிலம்பவாத்தியார் கேட்க

“ஐய்யா சிலய ஒடச்சி எடுத்த சேதமாயிடும்னு,அறுத்து எடுத்திருக்காங்க,அப்ப திருடுனவன் கண்டிப்பா செலயோட மகத்துவம் தெரிஞ்சவனாதானிருக்கும்” என்று ஆரம்பித்த தலயாரியை பார்த்து அசந்துபோனார் கருப்பட்டியார்.

“அதுமட்டு இல்ல,அறுக்குறதுக்கு மரமறுக்குர திருக்க ரம்பத்தவச்சி அறுத்திருக்காங்க,அப்டி அறுக்கிறப்ப ரம்பம் ஒடயாம இருக்குரதுக்காக வண்டிமைய அப்பி அறுத்திருக்காங்க,அப்டியும் ஒடஞ்சுபோன ஒரு துண்டுரம்பம் தான் இது”என்று விவரித்தார் கறிக்கட பீரான் ராவுத்தர்.

இதைகேட்ட கொல்லன் ஆரோக்கியத்திற்கு ஒரு பொறி தட்டியது.

“ஐயா,ரண்டு வாரத்திற்கு முன்னாடி கோயிலடிலேர்ந்து ஒரு நாலுபேர் வந்து திருக்க ரம்பம் ஒன்னு செஞ்சிட்டிபோனாங்க,அவிங்க வந்துட்டு போன மூணானாளுதான் போலீஸ்சாமியும் காணபோச்சு”

பதினோறுபேர் நின்ற அந்த கூடத்தில் மிலிடெரிகார ஆறுமுகத்தின் காதருகே சென்ற கொசுவின் குரலே கேட்டது.

“நாங்கூட ஏம்பா எந்த ஊர்ல ஆலமரம் அறுக்க போறீங்க் திருக்க ரம்பம் கேட்கிறீங்கன்னதுக்கு,சரியாவே பதில்வரல,எனக்கென்னமோ அவிங்க மேலதான் சந்தேகமாயிருக்குங்க” என்ற ஆரோக்கியத்தின் துப்பில் போலீஸ்சாமி கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஒரு ஏக்கரில் எழுபத்தைந்து குடும்பங்களை கொண்ட சிற்ற்ற்ற்ற்ற்றூர்தான் கோவிலடி என்பதால் உடனே விரைந்த கொல்லனுடன் சென்ற புஜபலபராக்கிரம படை அந்த நான்கு பேருடன் அரசங்குடி திரும்ப அரைநாள்தான் பிடித்தது.

திருக்க ரம்பத்தை வாங்கிய நால்வருக்கும் தலயாரி செல்லமுத்து சேர்வை திருக்க மீன் வாலில் செய்த சவுக்கால் செய்த பூசை பலனளிக்க மீதி அரைநாள் ஆனது.வலி தாங்காமல் அவர்கள் தங்களுக்கு முருக்கூரில் சாராய வியாபாரம் செய்யும் நீலமேகம்தான் ஐயாயிரம் பணமும்,பத்து பாட்டில் சாராயமும் தந்து செலய திருடி தர சொன்னதாக உண்மையை கக்கினார்கள்.

“ஏன்டா வெறும் ஐயாயிரம் பணமும்,பத்து பாட்டில் சாராயமும் தந்தா என்னாவென்னாலும் பண்ணுவீங்களான்னு” கத்திகொண்டே ஓங்கி உதைத்த போஸ்சை சமாதானபடுத்தினார் கருப்பட்டியார்.

“இவங்கள உதச்சி என்ன ப்ரோஜனம்,மொதல்ல அந்த பயல புடிங்கடா”என்றார் கருப்பட்டி.

நீலமேகமும், தலயாட்டி செல்வராசும் ஒரு காலத்தில் ஒன்றாய் சாராய வியாபாரம் செய்தார்கள்.ஒருமுறை தோகூர் போலீஸிடம் மாட்டி வாங்கிய அடியில் கழுத்து நரம்பு ஒன்று அறுந்துபோனதில் தலை தானாக ஆடதொடங்கியது தொடர்ந்து செய்த வைத்தியத்தினால் தலை ஆடுவதிலிருந்து நடுங்க தொடங்கியது பிறகு சாராயம் விற்பதயே நிறுத்திவிட்டான் செல்வராசு.

தலையாட்டி செல்வராசு ஆள்காட்டி பறவையாகி நீலமேகத்தை பிடிக்க உதவினான்.எப்படியோ கோவிலடி ஆட்கள் பிடிபட்டதை தெரிந்துகொண்டு மெட்ராசுக்கு தப்பி ஓட இருந்தவனை பூதலூர் ரயில்வே ஸ்டேசனில் வைத்து பிடித்தது அரசங்குடி போலீஸ்படை.

பூதலூரிலிருந்து அரசங்குடி வரும்வரை நீலமேகத்திற்கு உடம்பில் அடி விழாத இடமே இல்லை எனலாம்.பசங்க என்ன தப்பு செய்தாலும் அடிக்காத சுப்பையா வாத்தியாரே,பத்தடிக்குமேல் அடித்திருப்பார்.மிலிடெரிக்கார ஆறுமுகத்தின் நான்காவது ஊமைகுத்திற்கு பலனாக நீலமேகம் சொன்ன பெயர் அந்த வண்டியிலிருந்தவர்கள் அனைவரையுமே உறையவைத்தது.

கருப்பட்டி ஏத்தாண்டாரின் மாட்டுதொழுவத்திலிருந்த மூன்றாவது தூணில் ஐந்தாவது ஆளாக கட்டப்பட்டான் நீலமேகம்.

அடிதாங்காத நீலமேகம்,அரசங்குடியின் சாமக்கோடங்கி மந்தையா தேவரின் பேரைச்சொன்னான்.எதற்கும் கலங்காத கருப்பட்டியார் செய்வதிறியாது ஊமையாய் சுவரில் சாய்ந்தார்.

மந்தையா தேவர்,கருப்பட்டி ஏத்தாண்டாரின் தகப்பனார் ஐய்யாவு ஏத்தாண்டாரின் இரண்டாவது மனைவி அங்கமுத்துவின் அண்ணன்,ஒருவகையில் கருப்பட்டியாரின் மாமா. கருப்பட்டி ஏத்தாண்டாரின் அம்மா  அவர் பிறந்தவுடனே இறந்துபோக பெரிய ஏத்தாண்டார் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள,அங்கமுத்துவுடன் இவ்வூருக்கு வந்தார் மந்தையா தேவர்.

ஐய்யாவு ஏத்தாண்டார் இறந்தவுடன் அங்கமுத்துவும் அவரும் தனியே சென்றுவிட்டார்கள்.அங்கமுத்துவும் கொஞ்சநாட்களிலேயே இறந்துபோக அவளின் ஒரே மகன் செந்திவேலுவுடனே இருந்துவிட்டார் மந்தையன்.ஏனோ தெரியவில்லை அவர்கள் கருப்பட்டியாரின் குடும்பத்தினருடன் சரியாக பழகவேயில்லை.

பஞ்சாயத்து தலைவர் பதவி,கோவில் குள மீன்பிடி ஏலம்,ஜல்லிக்கட்டு காளை,சண்டசேவல்,சண்டக்கிடா என செந்திவேலு கருப்பட்டியாருடன் போட்டி போட்டு தோர்க்காத விசயமே இல்லை எனலாம்.அத்தனைக்கும் பின்புலமாக மந்தையன் இருப்பார்.

இப்பொழுது மொத்த விசயமும் தெளிவாக புரிந்தது ஏத்தாண்டாருக்கு.

நான்காவது முறையாக சீயான் சாவாடியில் கூட்டம் கூடியது.இந்தமுறை பக்கத்து ஊரிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர்.

விசயம் தெரிந்த அன்றே செந்திவேலு குடும்பத்தினர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர்.அதற்கு அடுத்த நாள் மந்தையா தேவர் அவர்கள் வீட்டு ஜல்லிக்கட்டு காளையின் கொம்பின் மீது பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கருப்பட்டி ஏத்தாண்டாரை பழிவாங்கவே போலீஸ்சாமியின் சிலையை திருடியதாகவும் அதனால் திருவிழா நடக்காமல் போனால் அது கருப்பட்டியாருக்கு பெருத்த அவமானத்தை தரும் என்று மந்தையா மாமா சொன்னதால்தான் செய்ததாகவும் செந்திவேலு பஞ்சாயத்தில் ஒப்புக்கொண்டார்.

அவரையும் அவர் குடும்பத்தினரையும் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்து தீர்ப்பு கூறினார் ஏத்தாண்டார்.

போலீஸ்சாமியை திருடியவர்கள் ஊர்த்திருவிழா முடியும்வரை கோவில்வேலை அனைத்தையும் செய்யவேண்டும் என்று தீர்ப்பானது.

சாராயம் விற்ற குற்றத்திற்காக நீலமேகம் தோகூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

போலீஸ்சாமி செந்திவேலு கரும்புதோட்ட கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு,புது வர்ணம் பூசி சப்பாணிகருப்பின் காலடியில் நிறுத்திவைக்கப்பட்ட நான்காம் நாள் திருவிழா தொடங்கியது.

போலீஸ்சாமியை திறம்பட துப்பறிந்து கண்டுபிடித்த புஜபலபராக்கிரம படைக்கும், மதநல்லிணக்க படைக்கும் மொத்த ஊரும் மெத்த பாராட்டு தெரிவித்தது.

போலீஸ்சாமி கிடைத்துவிட்டதால் இந்த வருடம் கடைசிநாள் திருவிழாவில் நத்தம் சுந்தரி பார்டியாரின் ரெக்கார்ட் டான்சை பார்த்துவிடலாம் என்ற சந்தோசத்தில் ஒரு கூட்டம் சீயான்சாவடியிலிருந்து கிளம்பிசென்றது.




 தகவல் : குவியம்  https://kuviam.wordpress.com/

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்