திங்கள், 21 அக்டோபர், 2019

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் விஜயதேவர்



தமிழ், மலையாளம், இந்தி என்று கலக்கிக்கொண்டு இருக்கும், 'ஃபைவ் ஸ்டார்’, 'ஆட்டோகிராஃப்’, 'அந்நியன்’, 'வேட்டையாடு விளையாடு’, 'தசாவதாரம்’, 'வில்லு’, பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட 'பர்ஃபீ’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தான் பிறந்து வளர்ந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் குடிகாடு பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார். 

(பொய்யுண்டார் குடிக்காடு, பொய்யுண்டார் கோட்டை என்ற ஊர்களிலும் , பொய்யுண்டார் தெருவிலும் கள்ளர் குடியினரின் பொய்யுண்டார் பட்டம் உடையவர்கள் வாழ்கின்றனர்.)

 ''பத்து தலைமுறைகளுக்கு முன்னாடி எங்க மூதாதையர்கள் பொய்யுண்டார்கோட்டை என்ற ஊரில் இருந்து புலம்பெயர்ந்து வந்தாங்களாம். அதனாலதான் எங்க ஊருக்கு பொய்யுண்டார் குடிகாடுனு பெயர்வந்து இருக்கு. எங்க ஊர்ல விவசாயிகள் அதிகம். அப்போ எல்லாம் நல்ல மழை பேஞ்சு நல்ல மகசூல் கிடைக்கும். எங்க ஊரைப் பார்க்கவே அவ்வளவு அழகா, பசுமையா இருக்கும். எங்க ஊர் மத்தியில் ஒரு காடு இருக்கும். அந்தக் காடுதான் எங்க ஊரை வடக்குத் தெரு, தெற்குத் தெருனு ரெண்டாப் பிரிக்கும். இப்போ அந்தக் காடு அழிஞ்சுடுச்சு. அதேமாதிரி எங்க ஊரைச் சுத்தியும் நாலு குளம், ஒரு ஏரி இருந்துச்சு.இப்போ அந்தச் சுவட்டையே காணோம்.


வருஷா வருஷம் 'காமன் தகனம்’ நிகழ்ச்சி வெகு விமர்சையா நடக்கும். இந்தத் திருவிழாதான் ஊர்மக்கள் எல்லாருக்குமே பொதுவான திருவிழா. 13 நாள் மண்டகப்படியா நடக்கிற திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பாட்டும் கச்சேரியுமா ஊரே அமர்க்களப்படும். திருவிழாவோட ஒரு பகுதியா மன்மதன் ரதி உருவங்களை வெச்சு நடத்துற காமன் தகனம் நிகழ்ச்சியும் கிடா வெட்டும் ரொம்ப பிரமாண்டமா நடக்கும். ஒவ்வொரு திருவிழாவின்போதும் யாராவது ஒருத்தர் ஓலைச்சுவடிகள்ல இருக்கிற காமன் கதைகளைப் படிப்பாங்க. நானும் சில திருவிழாக்கள்ல படிச்சு இருக்கேன். என்னோட படைப்பாற்றலுக்கு அந்த நிகழ்வுதான் ஆரம்பப் புள்ளி.

ஊர்ல இருந்த மூணு பிரிவினரும் மூணு வெவ்வேறு கோயில்கள்ல திருவிழா கொண்டாடுவாங்க ( விஜயதேவர், பொய்யுண்டார்)   . நாங்க பட்டவன் கோயில் திருவிழா நடத்துவோம். ஒரே ஒரு நாள் நடக்கிற திருவிழாவா இருந்தாலும், ரொம்ப விசேஷமா நடக்கும். இதுமாதிரி மத்த ரெண்டு கோயில்களான வீரணார் கோயில் திருவிழாவும் காளியம்மன் கோயில் திருவிழாவும் களைகட்டும். காளியம்மன் கோயில் திருவிழாவின் கடைசி நிகழ்வாக கரகம், கொப்பரை நிகழ்ச்சி நடக்கும். ஊர் மக்கள் தீப்பந்தம் ஏந்திக்கிட்டு வர, அவங்களுக்கு முன்னாடி எங்க ஊர் வீரய்யன் ஒரு பெரிய அரிவாளையும் சந்திரலிங்கம் தாத்தா பூக்கரகத்தையும் சின்னு பொய்யுண்டார் கொப்பரையையும் ஏந்திக்கிட்டு விடிய விடிய ஊரைச்சுத்தி வலம்வருவாங்க. இதை எல்லாம் நான் பக்தியா பார்த்ததைவிட அழகான கலையாகப் பார்த்து ரசிச்சு இருக்கேன். இதே மாதிரி ஆடி மாசத்தில ஊர்ல நடக்கிற திருமேனியம்மன் கோயில் திருவிழாவில ஊர்ப்பெண்கள் எல்லோரும் ஒன்றுகூடி முளைப்பாரி எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்போ ஒவ்வொருத்தங்க வீட்டுல இருந்தும் தவறாமல் அம்மனுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு, கீரை போன்ற உணவுகளைத் தயார்செஞ்சு எடுத்துக்கிட்டுவந்து படையல் போடுவாங்க.

ஊர்ல எப்போதும் நெல், கடலை, எள், சோளம், கேழ்வரகு போன்ற பயிர்கள் அதிகமா விளையும். அதுக்கு, அப்போ இருந்த இறவை பாசனத் திட்டம் ஒரு முக்கியக் காரணம். அப்போ முப்பது அடி ஆழத்துலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும். தண்ணியை இறைக்கிற ஆளுங்களுக்கு இயற்கையாகவே சிக்ஸ் பேக் இருந்துச்சு.

எங்களுக்கும் விவசாயம்தான் தொழில். எங்க அப்பா சாமு விஜயதேவர், சொசைட்டித் தலைவரா இருந்தவரு. ஊர்ல எடுக்கவேண்டிய முக்கிய முடிவுகளை எங்க அப்பாவைக் கேக்காமல் எடுக்கமாட்டாங்க. எங்க ஊர்ல வெள்ளாடுகளை யாரும் வளர்க்கிறதில்லை. பக்கத்து வீடுகள்ல இருக்கிற செடிகளை மேய்ஞ்சு அடிக்கடி ஊருக்குள்ள சண்டை வந்துட்டு இருந்ததால ஊர்க்காரங்கள்லாம் ஒண்ணுகூடிப் பேசி இப்படி முடிவு எடுத்தோம். அதேமாதிரி ஊருக்குள்ளே யாரும் எரிசாராயம் காய்ச்சக் கூடாது. மீறிக் காய்ச்சுறவங்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.

எங்களுக்குப் பக்கத்துலேயே இருக்கிற பெரிய ஊர்னா, அது பாப்பாநாடுதான். அவசியமான பொருட்களை எல்லாம் அங்கேதான் வாங்குவோம். சின்ன வயசுல பாப்பாநாடு சாமி தியேட்டர்தான் எனக்கு எல்லாமே. பல நாள் ராத்திரி, பசங்களோட சேர்ந்து போய் படம் பார்ப்போம். அப்போ எங்க ஊர் டீக்கடை குவளைகள்ல சாதி வேறுபாடு இருந்தது. ஆனா, அந்த தியேட்டர்ல அப்படி ஒரு வேறுபாடு கிடையாது. எல்லா பிரிவினரும் ஒரே இடத்துல ஒரே மாதிரியான கிளாஸ்ல டீ குடிப்போம்.

ஒரு கார்த்திகை மாசம் ராத்திரியில நல்ல மழை. அப்போ நானும் எங்கம்மாவும் மொச்சு ஓடை பக்கத்துல இருந்த எங்க வயல்ல வேலை பார்த்துட்டு நனைஞ்சுட்டே வீட்டுக்கு வந்தோம். வீட்டுக்கு வந்ததும்தான் அம்மா கம்மலைக் காணோம்னு சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் கம்மலைத் தேட வயலுக்குப் போனோம். அங்கே போனா வயல் முழுக்க வெள்ளம். என்னைக் கரையில உட்காரவெச்சுட்டு இடுப்பு வரைக்கும் ஆழம் இருக்குற அந்த இடத்துல கொட்டுற மழையில் ஒத்தைக் கம்மலை ரொம்ப நேரம் தேடினாங்க. அந்தக் கம்மல் அவங்களுக்குக் கிடைக்கலை. அந்தச் சம்பவத்தை என்னால மறக்க முடியாது.

ஒருநாள் ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருக்கும்போது, எங்க அம்மா என் போர்வையை உருவிப் போத்திக்கிட்டாங்க. கண்முழிச்சுப் பார்த்த நான், அம்மாகிட்ட சண்டை போட்டு போர்வையைப் புடுங்கிப் போத்திக்கிட்டுத் தூங்கிட்டேன். விடிஞ்ச பிறகுதான் ராத்திரி எங்க அம்மா உடம்புக்கு முடியாம இருந்தது தெரிய வந்துச்சு. அவங்களை எங்க அண்ணன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனார். ஆனா, எங்க அம்மா ஆஸ்பத்திரி போற வழியிலேயே இறந்துட்டாங்க. ஏற்கெனவே அப்பாவை இழந்திருந்த எனக்கு, அம்மாவோட இழப்பு ரொம்ப பாதிச்சது. இன்னைக்கும் நான் ராத்திரி தூங்கப் போகும்போது போர்வையை எடுத்தா அம்மா ஞாபகம் வந்துடும். ஒருவேளை அன்னைக்கு நான் போர்வையைக் கொடுத்து இருந்தேன்னா, அவங்க பிழைச்சிருப்பாங்களோ என்னவோ? அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனசுல இருக்கு.

அப்புறம் அம்மாவோட போட்டோவை என்லார்ஜ் பண்றதுக்காகப் போனப்பதான் எனக்கு போட்டோகிராஃபி அறிமுகமாச்சு. அதன் பிறகு சினிமா ஆர்வத்தால சென்னை வந்த நான் இங்கேயே தங்கிட்டாலும் இன்னும் என் ஊரை மறக்கலை.


'மருதநாயகம்' பட டிரைலர்ல கமல் சொல்வாரே... 'மருதநாயகம் என் பெயர்... என் பெயர்களில் ஒன்று!'ன்னு. அப்படித்தான் காதல் அதன் பெயர்களில் ஒன்று. அன்பு, காமம், நேசம், பாசம்னு எத்தனையோ பெயர்களைச் சூடி அலையுற ஃபீல் அது. என்னைக் கேட்டா அது பெயரிட முடியாத உணர்ச்சி. 'கடல் பார்த்தியே... எப்பிடி இருந்துச்சு?'னு குழந்தையிடம் கேட்டா, அப்படி இப்படி குதிச்சு, பெருசா முழிச்சு, கையை விரிச்சு, 'அது... அது... இப்பிடி இர்ந்துச்சு'ன்னு அந்தக் குழந்தை என்னவோ சொல்ல ட்ரை பண்ணுமே... கடலைவிட அது அழகா இருக்கும். காதல் என்கிற உணர்ச்சியும் அப்படித்தான்... சொல்ல முடியாது. சொல்லியும் தீராது. காதலிச்சா... அழகு. ஃபீல் பண்ணா... பேரழகு!

எனக்கு முதல் காதல் வந்தது எங்க டிராயிங் டீச்சர் மேல. ப்ளாக் போர்டுல வாத்தியார் எழுதிட்டுப் போன பின்னாடி, கீழே சாக்பீஸ் தூளா கொட்டிக் கிடக்குமே... அப்படி என் ஞாபகத்துல அந்தப் பிரியம் கொட்டிக்கிடக்கு. தஞ்சாவூர் பக்கத்துல உரந்தராயன்குடிக்காடுங்கிற ஊர்ல ஆறாவது படிச்சப்போ ஸ்கூலுக்கு புதுசா ஒரு டீச்சர் வந்தாங்க. அவங்களே ஒரு ஓவியம் மாதிரி வந்தாங்க. நிறைய பேருக்கு முதல் காதல் டீச்சர் மேல வருதே... அது ஏன்னு இப்போ யோசிக்கிறேன். அம்மா, அக்கா, தங்கச்சி, தோழிங்கன்னு பெண்கள் புழங்குற குட்டிப் பையனோட உலகத்துல அதிசயம் மாதிரி வர்றது ஒரு டீச்சர்தான். அவங்க கொண்டுவர்ற குடை, ஹேண்ட் பேக், பூ போட்ட கர்ச்சீப், அந்த குட்மார்னிங், ஆதுரம், கம்பீரம்... இதெல்லாம் அவங்களைத் தேவதை மாதிரி காட்டுது. அந்தக் காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை... கை, கால், காது, மூக்கு எதுவும் இல்லை. காத்து மாதிரி இருக்கும். ஒருநாள் அந்த டீச்சர் வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிட்டாங்க. இப்பவும் என்னிக்காவது, எங்கேயாவது டீச்சரைப் பார்த்து தப்பா குட்மார்னிங் சொல்லி, தலையில குட்டு வாங்கணும்னு ஆசையா இருக்கு!

ஸ்கூலுக்குப் போய் வரும்போதெல்லாம் கூடவே வந்த குட்டிப் பொண்ணோடதான் என் ரெண்டாவது காதல். எலந்தப்பழம் பொறுக்கி மடியில கட்டிட்டு வர்ற புள்ள என்னை மட்டும் தனியாக் கூப்பிட்டு, 'எவனுக்கும் குடுக்கக் கூடாது பார்த்தியா... நீ தின்னு!'ன்னு குடுத்தப்பதான் காதல் வந்திருக்கணும். சேமியா ஐஸ், நவ்வாப்பழம், ஜவ்வு மிட்டாய்னு பரிமாறிக்கிறதே பாதிக் காதல். பொசுக்குனு ஒரு முத்தம் குடுத்துட்டு ஓடிரணும்னு 'பருத்திவீரன்' ஸீன் தோணினதெல்லாம் அந்த வயசுலதான். அந்தப் புள்ள இப்போ எங்கே இருக்கும்னு தெரியாது. அங்கேயே அக்கம்பக்கத்தில் இருந்தா, இப்போ அதோட பிள்ளைங்க தஞ்சாவூர் செயின்ட் ஆன்டனிஸ்லயோ, ப்ளாக் மேக்ஸ் ஸ்கூல்லயோ படிப்பாங்க. ஐஸ்க்ரீம், சாக்லெட்னு வாழ்ற அதோட பிள்ளையைப் பார்த்தா, கை நிறைய எலந்தப்பழம் வாங்கித் தரணும்.

எட்டாவது படிக்கும்போதே, அம்மா, அப்பாவை இழந்தவன் நான். ஒரு நாள் நைட் சென்னைக்கு ஓடிவந்துட்டேன். கஷ்டப்பட்டேன்னு கதை சொல்லலை. கஷ்டப்படாம வர்றதுக்கு நாம என்ன அம்பானி குடும்பமா... எல்லாத்தையும் தாண்டி சினிமா கனவு. முட்டி மோதி மூச்சு திணறிட்டு இருந்தப்ப ஆக்ஸிஜன் மாதிரி அடுத்த காதல்.


கே.கே.நகர்ல பேச்சுலரா தங்கியிருந்தப்ப, எதிர் வீட்டில் இருந்துச்சு அந்தப் பொண்ணு. 'மரோசரித்ரா' மாதிரி ஜன்னலைத் திறந்தா, பல்பெரிய நிக்கும். நான் டீ குடிக்க இறங்கினா, அது குப்பை கொட்ட இறங்கும், நான் படிக் கட்டில் உட்கார்ந்திருந்தா, வேகமா சைக்கிள் பெல்லை அடிக்கும். நான் அசிஸ்டென்ட் கேமராமேனா அலைஞ்சுட்டிருந்த நேரம். லென்ஸ் மாத்தி, ஃபில்டர் போட்டு, ரிஃப்ளெக்டர் வெச்சுனு எப்படி லைட் பண்ணியும் நம்ம வாழ்க்கை ஹாஃப் லைட்ல இருந்த நேரம். ஒரு நாள் திடுதிப்னு வந்து, 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'ன்னு கேட்டா. என்ன சொல்றது... மொத்தக் கஷ்டத்தையும் சொல்லி வேணாம்னு அனுப்பிவெச்சேன். சிக்னல்ல, ஓட்டல்ல, தியேட்டர்ல அந்தப் பொண்ணை அம்சமா ஒரு கணவன், கொழுகொழுன்னு ஒரு குழந்தையோட பார்க்கணும். 

அடிச்சுப் பிடிச்சு ஒரு பிழைப்பைப் பிடிச்சுட்டேன். அசோஸியேட் கேமராமேனாகி கொஞ்சம் காசும் கௌரவமும் வந்த பிறகுதான் சொந்த ஊருக்குப் போனேன். பத்து வருஷம் கழிச்சுப் போய் நின்னா, பாதிப் பேர் நம்பலை, பாதிப் பேர் பேசலை. 'என்னடா இது?'ன்னு மனசு கனத்து நின்னப்ப, 'சௌக்கியமா?'ன்னு கேட்டது ஒரே ஒரு குரல்தான். அது ஷர்மிளாவோடது.



அடுத்த ஊர்ப் பொண்ணு. பக்கத்துல இருந்த வல்லம் காலேஜ்ல இன்ஜினீயரிங் பண்ணிட்டிருந்துச்சு. அப்போ அந்த ஊர்ல ஒரு பொண்ணு இவ்வளவு பெரிய படிப்பு படிக்கிறதே ஆச்சர்யம். என்னை ரொம்ப மெச்சூர்டா, ஆறுதலா விசாரிச்சு பேசுனது ஷர்மிதான். பழகப் பழக, நான் தேடின மொத்தக் காதலையும் ஷர்மிதான் இந்த பூமிக்கு எடுத்துட்டு வந்திருக்குன்னு தோணுச்சு. நான்தான் காதலைச் சொன்னேன். 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேட்டேன். ஒரு நிமிஷம் பார்த்தது... ரெண்டு நிமிஷம் யோசிச்சது, நாலாவது நிமிஷம் நல்ல சிரிப்போட சம்மதிச்சது.

விஷயம் தெரிஞ்சு அவங்க வீட்ல பெரிய பிரச்னை. என்ன பண்றதுன்னு தெரியாம, ஒரு நாள் யாருக்கும் தெரியாம நாங்க ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு 'அலைபாயுதே' மாதிரி ஷர்மி அவங்க வீட்லேயும் நான் சென்னையிலேயும்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம். ரொம்ப கனமான காதல் போராட்டம் எங்களோடது. நான் தொழிலைத் துரத்திட்டு ஓடினேன். ஓயாம நின்னு ஒரு இடத்தைப் பிடிச்சேன். அவங்க வீட்ல சமாதானம் பண்ணி, அவங்க குடும்பத்தோட ஒரு நாள் சந்தோஷமா என் வீட்டுக்கு வந்துச்சு ஷர்மி. அந்த நாள்தான் எங்களுக்கு காதலர் தினம். இப்போ எங்க காதலுக்கு ஆசீர்வாதம் மாதிரி தர்ஷனா வர்மன், அர்ஜித் வர்மன்னு ரெண்டு பிள்ளைங்க.

இப்போ யோசிக்கும்போது நாங்க கொஞ்சம் அவசரப்பட்டோமோனு தோணுது. ரகசியமாப் பண்ணிக்காம, பொறுத்திருந்து பெத்தவங்க சம்மதத்தோட ஊர் பார்க்க, உறவு வாழ்த்த, கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு தோணுது. ஏன்னா, காதலோட பெரிய சந்தோஷம்... நம்மளைப் பெத்தவங்களோட சம்மதம்தான்.

நாளைக்கு என் பிள்ளைங்க லவ் பண்ணிட்டு வந்து நின்னா, அவங்க தலை வருடிச் சொல்வேன்... 'நல்லாயிருங்க..!'

எங்க ஊர்ல இருக்கிற எல்லாருக்குமே என்னைத் தெரியும். ஆனா, எங்க ஊர்க்காரங்கள்ல எத்தனைப் பேரை எனக்குத் தெரிஞ்சிருக்குஙம்கிற வருத்தம் இருக்கு. ஒரு அழகான ஊரையும் அங்கே இருக்கிற ரம்மியமான வாழ்க்கையையும் மிஸ் பண்ணிட்டு நாம வாழ்ந்துட்டு இருக்கோம் என்ற வருத்தமும் மனசுல இருக்கு. அதனாலேயே இப்பவும் நான் கடைப்பிடித்துவரும் கிராமத்து பழக்க வழக்கங்களும் குணங்களும் என்னோடு நின்றுவிடாமல் இருக்க, என் குழந்தைகளுக்கும் தவறாமல் கற்றுக்கொடுத்து வர்றேன்!''



இயக்குநர்கள், ரசிகர்கள் உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் போது, தமிழில் பணியாற்றுவதை குறைத்துக் கொண்டது ஏன்...?

பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான். என் உலகமே அதுதான். எனக்கு நதி மாதிரி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அது என் இயல்பு. உங்களைப் போலவே இப்படிக் கேள்விகள் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு. அவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது. அதற்குக் காரணம், என் பயணம் பெரிதாகி கொண்டே இருக்கிறது. நான் ஓர் இடத்தில் இல்லை. எனக்கு உலகத்தைச் சுற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. மொழிகள் கடந்து சுற்றி வரும் பாக்கியம் ஒரு கொடுப்பினை. அது எனக்குள் உருவாக்கும் தொடுவானங்கள் அதிகம். என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருகிறது. சில நேரங்களில் இங்கே என்ன மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் கூட வரும். அதனால்தான் அதிகமாக இங்கே பார்க்க முடியவில்லை. நிறைய இயக்குநர்கள் பேசுகிறார்கள். பார்க்கலாம்! 

இயக்குநராகவும் வெளிப்பட்டு இருந்தீங்க.. அது குறித்த திட்டம் அடுத்து என்ன இருக்கிறது...? 

அது பெரும் அனுபவம். ஜென்மத்துக்கும் அந்த அனுபவத்தை மறக்க மாட்டேன். உள்ளுக்குள் ஒரு ஈகோ, கழுமரத்தில் ஏற்றின மாதிரி என் திமிரு... இதுவெல்லாமும்தான் அந்த தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன். வெற்றி கிடைத்திருந்தால் இன்னும் ஈகோ, திமிரு வந்து சேர்ந்திருக்கும். வெற்றி கிடைக்காதது ஒரு வகையில் நல்லதுதான். ஒரு தோல்விதான் பெரும் அனுபவங்களை அள்ளித் தந்திருக்கிறது. "மாஸ்கோவின் காவேரி' இன்னும் அழகான, தரமான படைப்பாக வந்து சேர்ந்திருக்க வேண்டிய படம்தான். அதற்காக இப்போது வருத்தப்பட்டு பயன் இல்லை. இனி வருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு இன்னும் பத்து ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனாலும் பரவாயில்லை. தோல்விதான் தத்துவத்தை உருவாக்குகிறது.



தமிழ் சினிமாவை கவனிக்கிறீங்களா...?

ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றிப்போய்ப் படம் செய்வது மட்டும்தான். அதைப் புரிந்து கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். "பருத்தி வீரன்', "பிதாமகன்', "ஆடுகளம்', "விண்ணைத் தாண்டி வருவாயா', "ராஜா ராணி' இந்தப் படங்கள் எல்லாம் ஒளிப்பதிவில் கவர்ந்திருந்தது. இதில் பணியாற்றிய கலைஞர்களின் பொறுப்பு பிடித்திருந்தது. கலைஞனுடைய கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். அந்த வகையில் "ஜிகர்தண்டா', "காக்கா முட்டை', "துருவங்கள் பதினாறு' என நல்ல விஷயங்களும் நடந்து வருகின்றன. ரசிகனுடைய ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவேறும். வியாபாரம் தாண்டி சினிமாவின் உன்னதத்தை ரசிகர்கள் புரிந்து கொள்வதும் மிக முக்கியம். ரசிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நாம்தான் தயாராக வேண்டும். ஏனென்றால், சுனாமி வந்து லட்சக்கணக்கான உயிர்களைக் குடித்த பொழுதிலும், இங்கே அரங்கு நிறைந்த ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். அதுதான் தமிழ் சினிமாவின் பலம். 

தஞ்சாவூரில் இருந்து கிளம்பி வந்து ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட வாழ்க்கை உங்களுடையது.... இந்த சினிமா அனுபவம் எப்படி இருக்கிறது....?
ரொம்ப அற்புதமாக இருக்கிறது. யாருக்கும் கிடைக்காத ஒரு பயணம். அதில் வறுமை,  வலி, சந்தோஷம் என்று அனுபவங்கள் நிறைய உண்டு. என் சிந்தனையை மாற்றிய பல விஷயங்கள் இருக்கின்றன. நம்மை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளின விஷயங்களும் உண்டு. இதில் என் தனித்துவத்தை உணர வைத்த, உணர்ந்த நிமிஷங்களும் உண்டு. 87-களில் சென்னைக்கு வந்து, மும்பை வரைக்கும் போவதற்கும், மும்பையிலிருந்து ஹாலிவுட் வரைக்கும் போவதற்கும் 30 வருஷங்கள் ஆகி விட்டது. இதை நினைத்துப் பார்க்கும் போது இன்னும் 30 வருடங்களுக்கு முன்பே பிறந்திருக்க வேண்டும் என்று 
தோன்றும். சில நேரங்களில் சோம்பேறித்தனம் கூட வரும். இப்போதும் பாதி தூக்கம்தான். சில நேரங்களில் அது கூட கை கூடி வராது. இன்னும் நேரம் இருக்கிறது.



இதுவரை தன்னுடைய வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் அனுபவங்களையும்கொண்டு 'யாவரும் கேளிர்’ எனும் புத்தகத்தை எழுதி முடித்து இருக்கும் ரவிவர்மன், விரைவில் அதை வெளியிட இருக்கிறார்.

Awards and Honours

• 23rd EME France Film Festival Best Cinematographer Award for Santham Malayalam (2000)
• Filmfare Best Cinematographer Award for Anniyan (2006)
• Tamil Nadu State Film Award for Best Cinematographer for Vettaiyaadu Vilaiyaadu (2007)
• Vikitan Best Cinematography Award (south) for Vettaiyaadu Vilaiyaadu (2007)
• ITFA Best Cinematographer Award for Dasavathaaram (2009)
• Star Guild Awards for best cinematography for Barfi! (2012)
• Screen Awards for best cinematography for Barfi! (2012)
• TOIFA Awards for best cinematography for Barfi! (2012)
• IIFA Awards for best cinematography for Barfi! (2012)
• Zee Cine Awards for best cinematographer award for Goliyon Ki Raasleela Ram-Leela (2014)
Best Cinematography : Ravi Verman for Kaatru Veliyidai(2018)
• Vijay Award for Best Cinematographer- Kaatru Veliyidai
• Siima Award for Best Cinematographer- Kaatru Veliyidai
As director

• Moscowin Kavery (2010)
• Treasure Music Video (2011) Also as Cinematographer and Lyricist
As producer

• Azhagu (2010)
• Vellaiya Irukiravan Poi Solla Maatan (2015)
Films
Year Film

1999 Jalamarmaram
2000 Sathyam Sivam Sundaram
2000 Santham
2001 Valliettan
2001 Vakkalathu Narayanankutty
2002 Five Star
2003 Yeh Dil
2003 Jai
2003 Armaan
2003 Kilichundan Mampazham
2003 Bee Busthar
2004 Five by Four
2004 Phir Milenge
2004 Autograph
2005 Anniyan
2005 Ramji Londonwale
2006 Vettaiyaadu Vilaiyaadu
2008 Dasavathaaram
2009 Villu
2010 Kandahar
2011 Badrinath
2012 Barfi!
2013 Goliyon Ki Raasleela Ram-Leela
2015 Tamasha
2017 Kaatru Veliyidai
2017 Jagga Jasoos
2017 Heartbeats
2018 Sanju
2019 Indian 2
2019 Kolaambi
As Guest Cinimatographer 

1997 Vaali
2001 Minnale
2011 7aum Arivu


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்