செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

கள்வர் பெருமகன் தென்னன் (பாண்டியன்) / பாண்டியர் வரலாறு



கள்ளர் முக்குலத்தின் முத்தவனாக குறிப்பிடப்படுகிறான். “கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்ற செவி வழிபாடல் கூறப்படுகிறது. பாண்டியர் என்பதற்கு பண்டையர் என்பது பொருள். (பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர்), கள்ளர் என்பதற்கு பண்டையர் என்றே பொருள்.




மதுரைக் கணக்காயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடலில் (அகநானூறு 27 – பாலை)  பாண்டியர் வேங்கடமலை கள்வர் தலைவன் புல்லியிடம் இருந்த யானைகளைப் போருக்குப் பயன்படுத்தினர் என்றும், பசும்பூட் பாண்டியனின் மலை பொதியமலை என்றும் குறிப்பிடுகிறார்.


கள்ளர்களின் பட்டங்களான பொதியர், அகத்தியர் என்பது அகத்தியரின் பொதியமலையின்,  பழைய எச்சங்களின் மிச்சமாக இருக்கலாம். பொதியர், அகத்தியர் பட்டமுடைய கள்ளர்கள் சோழமண்டலத்தில் என்றும் வாழ்ந்துவருகின்றனர்.

கள்ளர் மரபினரின் பாண்டியர் வழி வந்த பாண்டியர் என்ற பட்டமுடையவர்கள் தஞ்சாவூர் புத்தூர் பகுதியில் வாழ்கின்றனர்.








கள்ளர் தலைவர் பாண்டியர்







மதுரைக் கணக்காயனார்  அகநானூறு 342. குறிஞ்சி பாடலில்

1) ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைபுணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியான்கிளைஞன் அல்லனோ நெஞ்சே தெனாஅதுவெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை

2)மண்கொள் புற்றத் தருப்புழை திறப்பின்ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்ஏவல் இளையர் தலைவன் மேவார்அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப்

3)பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைகெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅநீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ்வரையர மகளிரின் அரியள்அவ்வரி அல்குல் அணையாக் காலே.

உன்னை வன்சொற் கூறி ஒறுக்கவும் ஒழிவாய் அல்லை, இன்சொற் கூறி நிறுத்தவும் நிற்பாய் அல்லை, உனக்கு யான் உறவினன் அல்லனோ, உள்ளம் ஒன்றிய நண்பரைப்போல யான் கூறுவதனைப் போற்றுவாயாக. (தெனாஅது) தெற்கின் கண்ணே யுள்ளதாகிய, போர் வெல்லும் பாண்டியரது நல்ல நாட்டிலுள்ளதாய்.


மண்ணாலாய புற்றினையுடைய, காட்டரணின் இடத்தைத் திறத்தலோடு, பகைவர் ஆக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரினராய கள்வர்கட்கு முதல்வனும், ஏவுதலைச் செய்யும் வீரர்கட்குத் தலைவனும், பகைவரது அரிய அரண்களை அழித்த வலிமையுடன், பருந்துகள் வந்துகூடப் பகைவரது பலபோரையும் வென்ற, இடியுடன் மாறுபடும் பெரிய கையினையும்,என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையுமுடையானும் ஆகிய, பாண்டியனது, 
தோண்டப்படாத அருவி வீழும் பொய்கையினையுடைய, மலையின் குகையில், மறைந்த, வரையர மகளிர்போல, அரியளாய, அழகிய வரிகளையுடைய அல்குலையுடையவளாய தலைவி, நம்மை அணையப் பெறாத விடத்து, கள்வர் பெருமகனும் இளைஞர் தலைவனும் தடக்கையும் நல்லிசையும் உடையோனுமாகிய பாண்டியன் என்க.

அருப்பம் - அருப்பு என்றாயது. அருப்பம் - காட்டரண்.மேவார் - வேளிரும் வேந்தருமாகிய பகைவர்: வேளிரது குறும்பு எறிந்த என்றும், வேந்தரது பல் செருக்கடந்த என்றும் கொள்க.வேளிர் - குறுநில மன்னர்.தொடா மருங்கு - தோண்டப்படாத இடம்; இயற்கையாய நீர்நிலை; இது பொய்கை எனப்படும்.
 
பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர் - மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 என்ற நூலில் பாண்டிய மன்னர்களின் குலம் பற்றிய தனது ஆய்வில்



பாண்டிய மன்னர்களின் குலத்தைச் சார்ந்தவர்கள் தற்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளனரா? என உறுதியாகக் கூறுவதற்கில்லை. சில வரலாற்றாசிரியர்கள் தென் தமிழ்நாட்டு மறவர் குலத்தைப் பாண்டிய மன்னர்களுடைய சந்ததியார் என்று கூறுவர். மற்றும் சிலர் கள்ளர்கள் இனத்தைச் சார்ந்தவர்களே பாண்டியர்களுடைய சந்ததியார் ஆவர் என உரைப்பர் என்று குறிப்பிடுகிறார்.


சுமேரியன் மொழி ஆய்வு என்ற நூலில் முனைவர் கி. லோகநாதன் பாண்டியர் என்பவர்கள் கள்ளர் என்று குறிப்பிட்டு, சுமேரிய மொழியில் உள்ள me-gal-gal-la: மெய் கள்கள்ள என்பதில் வரும் அடை "பெருமை மிக்க" "கணம் பொருந்திய" " மிக மிகச் சிறந்த" என்ற கருத்துடையது. பாண்டியர்கள் 'கள்ளர்" எனப்படுவதோடு ஒப்பிடத் தக்கது என்று குறிப்பிடுகிறார்.






பாண்டிய மன்னர்களின் வணிகத்தைப் பற்றி பண்டைய யாழ்பாண புத்தகத்தில் கிபி 1   ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 2000  ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கும், கிரேக்கர்கள், சீனர்களுக்கும் இடையேயான வணிகம் குறித்து தாலமி அவர்கள் சற்று விரிவாக குறிப்புகள் கொடுத்துள்ளார்.

அதில் பாண்டிய மன்னன் கள்ளர் பெருக்குடி மக்களுடன் முத்து எடுத்தல், மீன் பிடி தொழில் செய்ததாக நேரில் பார்த்த periplus புத்தகத்தின் ஆசிரியரும், கிரேக்க தாலமியும் குறித்துள்ளார்கள். இந்த கருத்துக்கு வழுசேர்க்கும் விதமாக ஏழுகோட்டை நாட்டில் உள்ள அனுமந்தகுடியில் முத்து வணிகம் நடைபெற்றதற்கன ஆதாரம் கிடைத்ததாக மானுட மற்றும் வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணசாமி ஐய்யங்கார் தனது நூலில் விளக்கியுள்ளார்.

மேலும் முத்தூற்றுகூற்றம் தான் பாண்டியர்களின் முத்து தொழில் மற்றும் வாணிகத்திற்குகான நகராக இருந்துள்ளது. இந்த முத்தூற்கூற்றம் என்பது இன்று முத்து நாடு, கப்பலூர் நாடு என்ற கள்ளர் நாடுகளாக உள்ளது, மேலும் இந்த கள்ளர் நாடுகள் கடற்கரை வரை பரவியுள்ளது. இந்த முத்தூற்றுகூற்றத்தின் கடல் பகுதிகள் முழுவதும் பாண்டிய மன்னர்கள் அழியும் வரை, பாண்டிய தளபதி கப்பலூர் அம்பலம் கருமாணிக்க தொண்டைமானிடம் தான் இருந்தது. பிற்காலத்தில் அன்னிய படையெடுப்பில் பாண்டியர் அழிவிற்கு பின்பு கை நழுவிபோனது. மேலும் இன்றும் இராமேஸ்வரம், இராமநாதபுரம் உள்ள மீனவர்கள் தங்களது மீனவ தலைவர்களை பட்டங்கட்டியார் என்று அழைக்கின்றனர்.

இங்கு பாண்டியர் கள்ளர் தலைவன் என்றும், பாண்டிய நாட்டில் இன்றும் கள்ளர் மற்றும் மறவர் மக்கள் அதிகாரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  ஆநிரை கவர்தலின் தலைவர்கள் ஸ்ரீகள்ளசோழனும்,! தென்னவன் மறவனும்!!

பாண்டியர்களும் கள்ளர் சமூகமும் 
:- திரு. மாயக்கருப்பன்


தமிழ் சமூகத்தின் வரலாறு குமரிக்கண்டம் என்ற ஒரு பழம்பெரும் நிலப்பரப்பில் தொடங்கி அது ஆளி பேரலையில் அழிந்து போய் , அங்கு இருந்த பாண்டியர் வம்சத்தினர் பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்து இறுதியில் மதுரைக்கு வந்து தங்கள் தலைநகரத்தை உருவாக்கினார்கள். பாண்டியர்களின் ஆட்சி சங்க காலம் முதல் கிபி 1311 வரைக்கும் மதுரையில் இருந்தது.

சங்க காலத்தில் வாழ்ந்த பாண்டியர்களின் ஒருவர் தான் "கள்வர்_பெருமகன்_தென்னவன்" என்ற மன்னர். இந்த பாண்டிய மன்னன் தன்னுடைய குலமாக கள்வர் என்று குறித்துள்ளார். கள்வர் என்ற பெயர் தான் இன்று கள்ளர் என்று மாறியுள்ளது. இதனை வேங்கடசாமி நாட்டார் தன்னுடைய கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். பாண்டியர்கள் சங்க காலத்தில் தங்களை கள்ளராக குறித்துள்ள முதல் தரவு இது தான்.

கள்ளர் சமூகம் முதலில் திருவேங்கடம் பகுதியில் இருந்து தஞ்சைக்கு வந்து அங்கு இருந்த கள்ளர்களின் ஒரு பிரிவினர் தான் மதுரைக்கு இடம்பெயர்ந்தார்கள் என்ற ஆதாரமற்ற ஒரு தியரி பல ஆய்வாளர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் M130y மரபணு அறிக்கை அதனை சுக்குநூறாக உடைத்துவிட்டது. மதுரையில் இருந்த கள்ளர்களின் மரபணு 60000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இவர்களிடம் இருந்து தான் மற்ற கள்ளர்கள் பிரிந்தார்கள் என்பதே உண்மை.

சங்க இலக்கியத்தின் படி பாண்டியர்களிடம் இருந்து பிரிந்து சென்ற வம்சம் தான் சோழர்கள் என்று தமிழ் ஆய்வாளர்கள் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.


பாண்டியர்கள் மதுரையில் இருக்கும் போது, அவர்களின் படைவீரர்களாக கள்ளர்கள் தான் இருந்துள்ளனர். மதுரையை சுற்றி கள்ளர்களை ஒரு பாதுகாப்பு அரண்களாக பாண்டிய மன்னர்கள் வைத்திருந்தனர். இதனை பிற்கால பாண்டியர்களின் கல்வெட்டு தெளிவாக உரைத்துள்ளது.

ஆனையூரில் கிடைக்கப்பட்ட பாண்டியர் கல்வெட்டுகள், இன்று பிரமலைக்கள்ளர்கள் வாழும் நிலப்பரப்பில் ஒரு மிகப்பெரிய நிலைப்படை இருந்துள்ளதை தெரிவிக்கிறது. நிலைப்படை என்பது எப்போதும் தயார் நிலையில் இருக்கும் படை அந்த கள்ளர் படைகளுக்கு பல்லவராயர்கள் படை தலைவர்களாக இருந்துள்ளனர்.

"சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்" என்ற சிறப்பு பெயருடன் பாண்டியர்களின் கல்வெட்டு தென் கல்லக நாடு (கள்ளர் நாடு) ஆனையூரில் கிடைக்கிறது. இந்த பாண்டியனுக்கு தான் பல்லவராயர் படைதலைவராக இருந்துள்ளார்.

பல்லவராயர்கள் சோழ நாட்டை சேர்ந்த கள்ளர் மரபினர். சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு பாண்டியர்களின் படை அதிகாரிகளாக பல்லவராயர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.

பாண்டிய நாட்டு கள்ளர் படைகளுக்கு சோழ நாட்டை சேர்ந்த ஒரு கள்ளர் தலைவன் படைத் தலைவனாக இருந்துள்ளான் என்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.

கள்ளர் சமூகத்திற்குள் இருக்கும் வீரியமிக்க பல குழுக்களில் பிரமலைக்கள்ளர்கள் முதன்மையானவர்கள். இவர்களை பாண்டியர்கள் முதன்மை படைகளாக வைத்திருந்தனர். அந்த படையில் எரியப் படை , நாசகன் படை என்ற பிரிவுகள் உள்ளது. இவை மிகவும் கொடூரமான படை. கொடுரமாக தாக்குவது, எதிரி நாட்டை சூறையாடுவது, ஈவு இரக்கமின்றி வெட்டி கொல்லுவது, ஊரை தீக்கரையாக்குவது போன்ற பல செயல்களை செய்து எதிரிநாட்டு படைகளை நடுங்க வைக்கும் அளவிற்கு எரிய_படை , நாசகன்_படை பிரிவை பாண்டியர்கள் வைத்திருந்தனர். சோழர்கள் பாண்டிய நாட்டை கைப்பற்றிய பிறகு இந்த படை பிரிவுகள் பற்றிய குறிப்புகள் சோழர் கல்வெட்டுகளில் இடம்பெருகிறது.


இன்று மதுரையில் பெரும்பான்மையாக வாழும் பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு என்று பாண்டியர்கள் ஒரு தனி நாட்டமைப்பை அன்று உருவாக்கினார்கள். அதனை புறமலை தென்கல்லக நாடு என்று பாண்டியர் கல்வெட்டுகள் தெறிவிக்கிறது. அன்றைய தென்கல்லக நாடு தான் பிற்காலத்தில் கள்ளர் நாடு என்று வழங்கப்பட்டு வந்துள்ளது.


இன்றைய கள்ளர் சமூகத்தில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். அதில் சோழர்களிடம் தொடர்புள்ள கள்ளர்களும் , பாண்டியர்களிடம் தொடர்புடைய கள்ளர்களும் உள்ளனர்.

கள்ளர் சமூகத்திற்கு 2000 பட்டங்கள் மேல் உள்ளது. அதில் சில பிரிவு கள்ளர்களுக்கு தேவர் என்கிற ஒரே ஒரு பட்டம் மட்டுமே இருக்கும். மற்ற கள்ளர்கள் பல்வேறு பட்டங்களை குடும்ப வழியாக பயன்படுத்துகிறார்கள்.

அதற்கு காரணம் என்னவென்றால்??

சோழர்களின் படையில் இருந்த கள்ளர்களுக்கு சோழர்களை போலவே பல பட்டங்கள் இருக்கும். அரசவையில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு சோழர்களால் பட்டங்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். (முனையதரையர், மழவராயர், காலிங்கராயர், தென்கொண்டர், சோழ நாட்டார், சோழத்தரையர், பல்லவராயர்,... Etc)

பாண்டியர் படையில் இருந்த கள்ளர்களுக்கு பாண்டியர்களை போலவே தேவர் பட்டம் மட்டுமே இருக்கும். பிரமலைக்கள்ளர்கள் தேவர் பட்டத்தை மட்டுமே பெற்றுள்ளனர்.

சோழர் பாண்டியர் சண்டை என்பது ஒரு பங்காளி சண்டை தான். அவர்களின் படையில் முதன்மையாக இருந்த இரு நாட்டு கள்ளர்கள் தான் போர்க்களத்தில் மோதிக்கொண்டனர்.

இதனை நிறுபிக்கும் வகையில் சோழ பாண்டியர் எல்லை பகுதியில் தான் கள்ளர்களின் குடியிருப்பு இருக்கும். ஏனென்றால் பல நூறு ஆண்டு நடக்கும் சோழர் பாண்டியர் சண்டைக்காக இவர்களின் எல்லை பகுதியிலேயே கள்ளர்கள் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டனர்.

சோழர்களின் தலைநகரமான தஞ்சையில் இன்று கள்ளர்கள் தான் பெரும்பான்மை. கள்ளர்களுக்கு பிறகு டெல்டா பகுதியில் அகமுடையார் சமூகம் அதிகமுள்ளனர்.

பாண்டியர்களின் தலைநகரமான மதுரையிலும் கள்ளர்கள் தான் பெரும்பான்மை. இங்கும் கள்ளர்களுக்கு பிறகு அகமுடையார்கள் தான் ஒரளவு அதிகமாக இருக்கின்றனர்.

பாண்டியர்கள் மதுரையில் இருந்த வரை அவர்களுக்கு கள்ளர்கள் தான் படை வீரர், படை தலைவனாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் மதுரையே இழந்த போதும் கூட அவர்கள் தங்களை காத்து கொள்ள முதலில் கள்ளர் பகுதிகளுக்கு தான் வருகிறார்கள். பாண்டியர்கள் கள்ளர் தலைவர்களுடன் திருமண உறவு செய்துள்ளனர்.

பாண்டியர்கள் மதுரையில் இருந்த வரை அவர்களுக்கு மதுரை கள்ளர்கள் தான் படை வீரர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்களின் முக்கிய கோட்டையாக அழகர் மலையில் உள்ள கோட்டை இருந்து வந்துள்ளது.


முஸ்லிம் படையெடுப்பால் பாண்டியர்கள் மதுரையை இழந்த பிறகு, பாண்டிய மரபினர்கள் தங்களை காத்துக்கொள்ள முதலில் கள்ளர் நாட்டு பகுதிக்கு தான் வருகிறார்கள். அதன் பிறகு தான் தென்காசிக்கு செல்கிறார்கள். திருவாடனை , புதுக்கோட்டை இவை அன்று கள்ளர்கள் வாழும் பகுதிகள். இவை பாண்டியர்களின் நிர்வாக பகுதிகளான மிழலை கூற்றம், ஒல்லையூர் கூற்றம், துகவூர் கூற்றம், முத்தூர் கூற்றத்தின் கீழ் வருகிறது.

மிழலைக் கூற்றம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துஞ்சலூரை மையமாக கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த மிழலைக் கூற்றத்தை பல்லவராயர் என்ற கள்ளர் மரபினர் ஆட்சி செய்து வந்தனர்.


கிபி 9ம் நூற்றாண்டுகளில் மதுரை ஆட்சி செய்த சோழன் தலைகொண்ட வீரபாண்டியனுக்கு அதிகாரிகளாக பல்லவராயர் இருந்துள்ளார். இதை ஆணையூர் கல்வெட்டு உறுதி செய்கிறது. அதன் பிறகு பாண்டியர் வம்சத்தினர் புதுக்கோட்டையில் இருந்த போது அவர்களின் படை தளபதிகளாக இந்த பல்லவராயர்கள் தான் இருந்துள்ளனர். பாண்டிய மன்னன் உக்கிர வீரபாண்டியன் என்பவர் தொண்டை மண்டலத்திற்கு சென்று 7 வருடங்கள் காத்திருந்து, வெங்கடாசல பல்லவராயர் என்பவரை தெற்கு நோக்கி அழைத்து வந்ததாகவும், பல்லவராயர் உதவியை பெற்று பாண்டியர்கள் சேதுபதியை வீழ்த்தியதாகவும் , தனக்கு உதவியதற்காக பாண்டியர்கள் பல்லவராயர்களுக்கு பொன்னமராவதிப் பக்கத்தில் நிலங்கள் கொடுத்து, அரசனின் மருமகன் என்ற பட்டமும், ஓர் அரண்மனையும் தந்ததாக ஒரு செப்பு பட்டயத்தில் செய்தி உள்ளது. இதனை வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம் தெளிவாக கூறுகிறது.




இதனை நிறுபிக்கும் விதமாக கிபி 1529 ஆம் ஆண்டை சேர்ந்த திருமலைராய சிவந்தெழுந்த பல்லவராயர் கல்வெட்டில், தங்களை "பாண்டியர் முடிகாத்தார்" என குறிக்கப்பட்டுள்ளது. சேதுபதியை வீழ்த்துவதற்கு பல்லவராயர் செய்த படை உதவிக்காக கேரளசிங்க வளநாடு பாண்டியர்களால் பரிசாக கொடுக்கப்படுகிறது. மேலும் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா என்னும் இலக்கியத்தில் பாண்டியர் குலத்தை காத்ததாக பல்லவராயர் மரபினர் சிறப்பிக்க படுகிறார்கள்.

இப்படி பாண்டியர்கள் புதுக்கோட்டையில் இருந்த போது, கள்ளர் தலைவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். பாண்டியர்களுடன் பல்லவராயர் செய்த திருமண உறவின் விளைவாக தான் அரசனின் மருமகன் என்ற பட்டம் பாண்டியர்களால் கொடுக்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி , பாண்டியர்கள் திருநெல்வேலிக்கு சென்ற போதும் கூட, அவர்களுக்கு பல்லவராயர் மரபினர் தான் உடன் இருந்துள்ளனர்.


திருநெல்வேலியில் உள்ள ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பாண்டியர்கள் நிலதானம் செய்துள்ளதை அங்குள்ள கல்வெட்டுகள் விளக்குகிறது. திரிபுவன சக்கரவர்த்தி கோநெறி மேல் கொண்டான் என்ற பாண்டிய மன்னன் கள்ள பிரான் கோவிலுக்கு நீர் பாசனமிக்க நிலங்களை மிழலைக் கூற்றத்து தலைவன் காங்கையனான பல்லவராயர் முன்னிலையில் தானமாக வணங்குகிறார்.

இந்த கல்வெட்டு படி, புதுக்கோட்டையில் இருந்து பல்லவராயர் என்ற கள்ளர் தலைவர்கள் திருநெல்வேலி பாண்டியர்களுக்கு அரசியல் அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்ற செய்தியை ஶ்ரீவைகுண்டம் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய புதுக்கோட்டை கள்ளர்கள் அன்று பாண்டிய மன்னர்களுக்கு பெரும் துணையாக இருந்துள்ளனர் என்பதை கல்வெட்டு, இலக்கியம், செப்பேடு பேன்ற தொல்லியல் தரவுகள் நமக்கு எடுத்துரைக்கிறது.

பாண்டியர்களுக்கு படைதலைவர்களாக செயல்பட்ட கள்ளர் தலைவர்களின் முக்கியமானவர் தான் கருமாணிக்க தொண்டைமான்.



கல்வெட்டுகளும் இலக்கியமும் இவரை முத்தூர்கூற்றத்து கப்பலூர் உடையான் கருமாணிக்கன் என்கிற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. முத்தூர் கூற்றம் என்பது இன்றைய சிவகங்கை பகுதியே உள்ளடக்கிய பாண்டியர்களின் ஆட்சிற்குட்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பு. அந்த நிலப்பரப்பில் கப்பலூரை மையமாக கொண்டு கருமாணிக்க தொண்டைமான் ஆட்சி செய்கிறார். இவரின் ஆட்சி பரப்பை உலகளந்த சோழ நல்லூர் என்ற சிறப்பு பெயரில் கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டுள்ளது.


கருமாணிக்க தொண்டைமானை பாட்டுடை தலைவனாக கொண்டு எழுதப்பட்ட கப்பற்கோவை என்கிற இலக்கியம் தான் இவரை பற்றிய பல்வேறு தரவுகளை உலகிற்கு பறைசாற்றியது.

இவரது வம்சாவளிகள் தற்போது முத்தூர் கூற்றத்து (சிவகங்கை) கப்பலூரில் கள்ளர் சமூகமாக அதே பாரம்பரியத்துடன் இன்றும் வாழ்கிறார்கள். இவர்களிடம் பெறப்பட்ட ஒலைச்சுவடிகள் மூலமாக தான் கப்பற்கோவை என்ற இலக்கியத்தை இராகவ ஐயங்கார் வெளிகொண்டு வந்தார்.

கருமாணிக்க தெண்டைமான் கிபி 13ம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களுக்கு படைத்தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

சோழருக்கும் பாண்டியர்களுக்கும் நடைப்பெற்ற கடைசிகால கடுமையான போரில் பாண்டியர்களுக்கு ஆதரவாக கருமாணிக்க தொண்டைமான் செயல்பட்டார். சோழர்களின் ஆட்சி பரப்பை பாண்டியர்கள் வெற்றி கொண்ட பிறகு வடக்கே நெல்லூர் வரை பாண்டியர் படைகளை கருமாணிக்க தொண்டைமான் வழிநடத்தி சென்றார். பாண்டியர்களின் இறுதிகாலம் அதாவது கிபி 16ம் நூற்றாண்டு வரை அவர்களுக்கு ஆதரவாக கருமாணிக்க தொண்டைமான் இருந்துள்ளார்.


முஸ்லிம் படையெடுப்பால் பாண்டியர்கள் மதுரையே இழந்தனர். அதன் பிறகு விஜயநகர பேரரசும் , பின்பு வந்த நாயக்கர் ஆட்சி முறையாலும் பாண்டியர்களால் மதுரைக்குள் வர முடியவில்லை.

மதுரையே இழந்த பாண்டிய மரபினர்கள் திருவாடனை பகுதிக்கு தான் முதலில் வருகிறார்கள். அதன் காரணம் கப்பலூர் என்ற ஒரு மாபெரும் கள்ளர் தலைவர்களின் இருப்பிடத்தின் அருகில் தங்களின் அடுத்தக்கட்ட போர் நடவடிக்கை மேற்கொள்ள பாண்டியர்கள் முடிவு செய்கிறார்கள்.

திருவாடனை பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் முத்தூர் கூற்றம், துகவூர் கூற்றம் (சிவகங்கை இராமநாதபுரம் திருநெல்வேலி) உட்பட ஒட்டுமொத்த சேது நாடுமே பாண்டியர் கைவசம் இருந்தது.

கிபி 1547ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாண்டியர் கல்வெட்டில் கரியமாணிக்க ஆழ்வாரின் மகனான வீரபாண்டிய காலிங்கராயன் குறிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் விஸ்வநாத நாயக்கனுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த இறுதிகட்ட போரினால் பாண்டியர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தோற்கடிக்கப்பட்டனர். வாணாதிராயர் மரபினரின் அரசியல் குழப்பத்தாலும் பாண்டியர்கள் தங்கள் வலிமையே இழந்தனர்.







போரில் தோற்கடிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கள்ளர்கள் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். இராமேஸ்வரம் செல்லும் பகுதியில் கள்ளர்கள் தொந்தரவும் வழிப்பறியும் அதிகமாக இருந்தது. கள்ளர்களை சமாளிக்க முடியாத மதுரை நாயக்கர்கள் தங்களின் படை தலைவர்களான மறவர் சமூகத்து சேதுபதியை கிபி 1601ல் சேதுநாட்டின் பாளையக்காரராக முடிசூட்டுகின்றனர்.

அன்றிலிருந்து சேதுபதி மரபு தொடங்குகிறது.

கிபி 1632ல் தளவாய் சேதுபதி என்கிற கூத்தன் சேதுபதி வெளியிட்ட செப்பு பட்டயத்தில் கள்ளர்கள் இராமேஸ்வரம் செல்லும் வழிகளில் வழிப்பறியில் ஈடுபட்டது பற்றியும் கள்ளர்களை தண்டிக்க கோவில் பண்டாரத்திற்கு அதிகாரம் சேதுபதி வழங்குவது பற்றியும் குறிப்பு உள்ளது.

1547ம் நூற்றாண்டு வரை சிவகங்கையில் பாண்டியர்களின் ஆதரவுடன் கள்ளர்கள் தான் அதிகாரத்துடன் ஆட்சியாளராக இருந்துள்ளனர். ஆனால் 1601ல் சேதுபதியும் உருவாக்கம் சிவகங்கை கள்ளர்களை வீழ்ச்சியடைய செய்தது. 17ம் நூற்றாண்டிற்கு பிறகு சிவகங்கை மறவர் சீமையாக மாற்றப்பட்டது.

சிவகங்கை கப்பலூர் என்பது மிகவும் பழமையான ஊர். அது கிளைவழி கள்ளர்களின் பூர்வீக நிலப்பரப்பு.

பாண்டியர்களின் அதிகாரிகளாக செயல்பட்ட கள்ளர் தலைவர்களின் பட்டப்பெயர்கள் பாண்டியர் கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றனர்.


கிபி 1259ல் பாண்டியர் ஆட்சி காலத்தில் வங்க காலிங்கராயன் என்பவர் அதிகாரிகளாக செயல்பட்டுள்ளனர். இவர் தனது பெயரில் ஒரு மண்டபத்தை கப்பலூரில் கட்டியுள்ளார். இவரை பாண்டியர் கல்வெட்டு முத்தூர் கூற்றத்து கப்பலூர் உடையான் கலிங்கராயன் என்று குறித்துள்ளது.




கிபி 1251-64 களில் ஆட்சியில் இருந்த சடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் காடுவெட்டி பட்டம் கொண்ட ஆதித்தன் கணபதி ஆழ்வான் என்பவர் கப்பலூரில் ஒரு முக்கிய அதிகாரியாக பாண்டியர்களின் மேலாண்மையின் கீழ் இருந்துள்ளார்.

கிபி 13ம் நூற்றாண்டு வரை வெளியிட பட்ட பாண்டியர் கல்வெட்டுகளில் பல்லவராயர், காலிங்கராயர், மழவராயர், விழுப்பரையர், சேதிராயர், போன்ற பட்டங்கள் கொண்ட அதிகாரிகள் அதிகளவு குறிக்கப்பட்டுள்ளனர். இவைகள் கள்ளர் சமூகத்துக்கு உரிய பட்டப்பெயர்கள்.

கிபி 1547ல் வெளியிடப்பட்ட பாண்டியர் கல்வெட்டில் "முத்தூர் கூற்றத்து கப்பலூரான உலகளந்த சோழநல்லூர் கரியமாணிக்க ஆழ்வார் திருவுடைய நாயகரான வீரபாண்டிய காலிங்கராயர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சேதுபதி உருவாக்கத்திற்கு முன்பே கருமாணிக்க வம்சத்தினர் சிவகங்கை கப்பலூரில் பாண்டிய மன்னர்களின் வலுவான தலைவர்களாக இருந்துள்ளதை இக்கல்வெட்டு நிறுபிக்கிறது.

கல்வெட்டு

திருமடம்:

சத்தியஞான தரிசனிகளாகிய ஞானக்கூத்தருடைய திருமடம் ஒன்று சகம் 1469ல் அதாவது கி.பி 1547ல் இருந்ததை முதற்கோபுரத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டு அறிவிக்கின்றது.

அளிக்கப்பெற்ற ...................
திரிபுவனச் சக்கரவர்த்தியின் கோனேரிம்மை கொண்டார். திருவாலவாயுடைய நாயனர்க்கு திருமஞ்சனத்திற்கு கற்பூரம், கஸ்தூரி, குங்குமம், சந்தனம், பன்னீர் உட்பட வேண்டும்படி விஞ்சனத்திற்கு வேண்டும் முதலுக்கு முத்தூர் கூற்றத்து கப்பலூரான உலகளந்த சோழநல்லூர் கரியமாணிக்க ஆழ்வான் திருவுடைய நாயகரான வீரபாண்டிய காலிங்க ராயர் காணியான அண்ட நாட்டு புரவரி நல்லூரன சேத்து வாய்த்த நல்லூர் நான்குகெல்லைக்குட்பட்ட நன்செய், புன்செய், வாழைக்கொழுந்துள்ளிட்ட வான்.......... மாவடை, குளவடை, தறியிறை, செக்கிரை, தட்டொலி, தட்டிறை, தட்டாரப்பாட்டம் உட்பட அனைத்து ஆயங்களும், கடமையும், கொற்றிலக்கை, கடைக்கூட்டிடக்கை, பஞ்சுபீலி, சந்தி விக்ரப்பேறு, வாசல் வினியோகம் உட்பட அனைத்து உபாதிகளும், வரியிலும் கழித்து, ஆண்டொன்றுக்கு வாடாக்கடமையாக நாற்பது பொன் இருக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். கோசடையபன்மரான திரிபுவனச்சக்ரவர்த்தி வீரபாண்டிய தேவரின் 21ம் இராச்சிய ஆண்டில் திருவாலவாய உடைய நாயனார் கோயில் பங்காளர், தேவகன்மி ஸ்ரீ மாகேஸ்வரக் கண் காணி செய்வார்கள் ஆகிய அவர்கள், திருவாலவாலவாய் உடையாரின் தேவதானம் திருநாமத்துக் காணி மாடக்குளக் கீழ் முடித்தலை கொண்டிய பாண்டியச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ்ப்பிடாகைமாத்து, நெடுங்காலம் வரம் பிழந்து பருமாக்காடாய் கிடந்தமையான, அதை வாது செய்த வாரணமுடைய நாயனார் கோயிலை கைச் கோளரின் மாதேவர் அழகிய சொக்கரான சுந்தரபாண்டிய சோழ கோனார்க்கு காராண்மை காணியாக அனுபவித்துக் கொள்வராக கற்பூர விலைக்கு நிச்சயித்து புதுக்குளிகை பொன் 250 பெற்று அதைக் கோயில் கருவூலத்தில் ஒடுக்கிக் கொண்டனர், மேலும் இவ்வூர்க்கு வரும் கடமை அந்த ராயம், பொன் வரி வினியோகம் வெட்டிப்பாட்டம், பஞ்சு, பீலி, சந்தி விக்ரகப் பேறு, ஓலையெழுத்து, விநியோகம் தறியிறை, செக்கிறை, தட்டொலி, தட்டாரப்பாட்டம், இடைவரி ஏரி மீன் பாட்டம், இலாஞ்சினைப் பேறுகாணிக்கை, கார்த்திகைப் பச்சை ஆனைச்சாலை பந்தி, குதிரைப்பந்தி உள்ளிட்ட எப்பேர்பட்ட இறைகளையும் கொண்டு, காட்டை வெட்டி, நிலமாக்கி, ஒரு மாவுக்கு நெல் நாற்கலமும் இதன் எதிராம் ஆண்டு மாவுக்கு நெல் ஆறுகலமும், இதன் எதிராம் ஆண்டு மாவுக்கு நெல் எண்கலமும் இதன் எதிராம் ஆண்டு மாவுக்கு, பன்னிரண்டு கலமும், இதன் எதிராமாண்டு முதல் நிலவரிசையால் மாவுக்கு நெல் பதினைந்து கலமும் ஆண்டு தோறும் பயிர் பார்த்து பயிர் நின்ற நிலத்திற்கு வரிசைப்படி, இறுக்கவும் ஏற்பாடு செய்திருந்தநர். இங்ஙன் விதிப்பிராமணம் பண்ணிக்கொடுத்த மாத்தூர்க்கு எல்லை:&

கீழெல்லை துவரமான் குளத்து நீர் நக்கலுக்கு மேற்கும், தென்னெல்லை நாகமலைக்கு வடக்கும், மேலெல்லை முடித்தலை கொண்ட பாண்டிய சதுர்வேதி மங்கலத்து தென் வடலான கீழைகண்ணாறு, சீவல்லப்பிலாற்றுக்குக் கிழக்கும், வடஎல்லை, வைகையாற்றுக்குத் தெற்கும் ஆக இப்பெரு நான்கு எல்லைக்குட்பட்டதாகும். இவைகளற்றி திருவிளக்குப்புறமாகவும் நிலங்கள் விடப்பட்டிருந்தன.

தற்போது உள்ள கருமாணிக்க வம்சத்தினர் கப்பலூரில் அதே பாரம்பரிய அரசியல் குடும்பமாக திகழ்ந்து வருகின்றனர். அந்த குடும்பத்தில் கரியமாணிக்க அம்பலம் என்பவர் மிகச்சிறந்த அரசியல் தலைவர். 4 முறை திருவாடனை MLA வாகவும், காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மிகச்சிறந்த தலைவராக மக்களால் போற்றப்பட்ட இவரின் நினைவு தினத்தை கப்பலூர் மக்களால் வருடம் வருடம் கடைப்பிடிக்கபட்டு வருகிறது.

கப்பலூர் தலைவரின் நினைவு நாள்

தினமணி செய்தி : http://bit.ly/2JpSyML

சிவகங்கை என்ற பூமியில் கள்ளர் சமூகம் தான் அதிகம். ஆனால் அவர்களின் வரலாறு எவ்விடத்திலும் முறையாக குறிக்கப்படவில்லை. நாட்டரசன்கோட்டை ஊர்த் திருவிழாக்களில் கள்ளர் வகுப்பினருக்கு 'நாட்டரசன்' என்ற பட்டம் கூறி திருநீறு வழங்கப்படுகிறது. மேலும் கி.பி-11 ஆம் நூற்றண்டில், சிவகங்கையில், களவழி நாடாள்வான் என்ற சூரன் ஜெயங்கொண்ட சோழன் மடை அமைத்தது என்ற கல்வெட்டும் உள்ளது.

கிளைவழி கள்ளர்களின் வரலாற்றை ஆய்வு செய்ய அனைத்து ஆய்வாளர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.    

நன்றி: 
திரு. மாயகருப்பன்
திரு. சோழ பாண்டியர்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்