வெள்ளி, 17 ஜூலை, 2020

தமிழி எழுத்துகள்



எழுத்துகளின் தோற்றம் எவ்வாறு இருந்திருக்கும்? ஏதோ ஒலி எழுப்பி சைகை பாசை பேசிட்டு இருந்த மனுஷன், Migration ஆகி போயிட்டே இருக்குறப்பயோ, அல்லது ஏதோ இறைதேடி வர தன்னோட குழுவுக்கு புரிறதுக்காகவோ, தன்னோட குழுவில் எல்லோருக்கும் புரியிற மாதிரி உட்கார்ந்து பேசி ஒரு Writing system உருவாக்கியிருக்கனும். 

இதோட வளர்ச்சிய மூனு வகையா அடையாளப்படுத்தியிருக்காங்க மானுடவியலார்கள். 

ஆரம்ப எழுத்து முறை:


நமது வாட்ஸ்அப் ஸ்மைலி போல உள்ள உள்ள எழுத்துகள் உருவஎழுத்து(Pictograph)  உதாரணமாய் இதில் விலங்குககள், பறவைகள், மனித உருவங்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் இயக்கங்கள் காட்டப்பட்டிருக்காது. அடுத்ததாய் கருத்தெழுத்து (Ideograph) இதில் உயர்தினை, அஃறிணையின் இயக்கங்கள் காட்டப்பட்டிருக்கும், பறவை பறப்பது போல், மனிதனின் இயக்கங்களை காட்டப்பட்டிருக்கும். அடுத்து ஒலியெழுத்துகள்(phonograph) ஒரு சொல்லுக்கு அடையாளமாய் ஒரு எழுத்தினை அடையாளமாய் எழுதுவது. இவை குறியீட்டுக்கு முந்தைய காலகட்டம். இதன் இறுதி நிலை குறியீடுகள் இவையே தமிழி எழுத்திற்கு முந்தைய நிலை என கருதுகோள் வைக்கப்பட்டு பிற்பாடு தமிழகத்தில் கிடைத்த வல்லம் அகழாய்வின் மூலம் அது நிருபிக்கப்பட்டது. 

இந்திய எழுத்துகள்:


கி.மு முதல் நூற்றாண்டு என பொதுவாய் கருதப்படும் சமவயங்க சுத்த எனும் சமணநூல் அக்காலத்தில் வழக்கிலிருந்த 18 எழுத்துமுறைகளை கூறுகிறது. அதில் 17 வதாய் தாமிழி என கூறுகிறது. அது நமது தமிழி எழுத்தே. இத்துனை எழுத்துகள் குறிப்பிடப்படினும் இந்திய அளவில் பழமையான எழுத்து மொழி தமிழே என்பதற்கு நம்மிடம் கி.மு 8 ம் நூற்றாண்டு சான்றே உள்ளது. நமது சங்க இலக்கியங்கள் யாவையும் இந்த எழுத்து வடிவிலே பனையோலைகளில் எழுதப்பட்டு, காலஇடைவெளிகளில் படியெடுக்கப்பட்டு இன்று நம் கைகளில் கிடைக்கிறது. பானையோடுகளில் கீறல்களில் (Graffiti)  நிறைய பெயர்கள் வருகிறது. இவ்வழக்கம் இன்றும் நமது வீடுகளில் காணலாம். இன்று கூட நமது பாத்திரங்களில் பெயர்களை Engraved செய்யும் வழக்கம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நம் ஊரில் பாறை. கீறல் தவிர்த்து இதுவரை 5 தமிழி கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக எளியோரும் எழுத்தறிவு பெற்றிருப்பது அறியலாம். குகைத்தளங்களில் கிடைத்த தமிழி கல்வெட்டினை காண்போம்.

குடுமியான்மலை தமிழி:

 புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இது.  சங்காலத்தில் வழங்கப்பட்ட ஒல்லையூர் என்ற ஊரின் பெயரிலேயே பிந்தைய கல்வெட்டுகளிலும் ஒல்லையூர் கூற்றத்து குன்றியூர் நாட்டு திருநலக்குன்றம்  என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கே புகழ்பெற்ற இசைக்கல்வெட்டும் பிரசித்தி பெற்ற குடைவரைக்கோவிலும் பாண்டியர் கால கோயில் கட்டுமானமும் நாயக்கர் கால சிற்பங்களும் நிறைந்துள்ளன. மேலதிக தகவல்களை பின்னொரு பகுதியில் விரிவாக காண்போம். இக்குடுமியான்மலையின் கீழ்பகுதியில் குடபோக கோவிலின் வரலாறு சற்றொப்ப 1400 ஆண்டுகள் பழமையெனில் அம்மலையின் பின்பகுதியில் சுமார் 2300 ஆண்டு பழமையான (பொயுமு 3ம் நூற்றாண்டு) தமிழி எழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. அதன் சிறப்பினை காண்போம்.

மலையின் பின்புறம்  கடந்து சற்று மேலேறினால் வலப்புறத்தில் சில கற்படுக்கைகளும் சற்று மங்கிய நிலையில் ஒரு தமிழி கல்வெட்டும் காணப்படுகிறது. அக்கல்வெட்டின் விளக்கத்தை காண்போம்.

'நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்' என்பதே அதன் பாடமாக வரலாற்று அறிஞர்கள் கணித்துள்ளனர்.  நாழள் என்பது சங்ககாலத்தில் குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர் வகைகளில் ஒன்று, இம்மலர் இன்று புலிநகக்கொன்றை, மயிற்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இம்மலரின் பெயரில் அமைக்கப்பட்ட ஊரே இங்கு குறிக்கப்படுகிறது,  அந்தை என்பது மரியாதைக்குரிய சொல், கொற்றந்தை என்பவர் இங்கு மரியாதைக்குரியவராக காட்டப்படுகிறார். 'நாழள் ஊரினை சார்ந்த கொற்றந்தை என்பவர் செய்த பள்ளி' என்பதே இவ்வாசகத்தின் விளக்கம். இன்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையான எழுத்துருவினில், எனில் இதன் முக்கியத்துவத்தை சொல்லி உணரத்தேவையில்லை, இம்மாதிரி கல்வெட்டுகளால் தானே நம்மொழி செம்மொழியாயிருக்கும்.  இன்று இதன் நிலையாதெனில் இக்கல்வெட்டை அடையாளம் காண்பதற்கே சிரமப்பட வேண்டியுள்ளது, இதுவே  யதார்த்த நிலை . 1991ம் வருடம் இக்கல்வெட்டை கண்டறிந்தனர்.

குடுமியான்மலை தமிழி
கருத்தோவியம்(Ideograph)

 சிந்து சமவெளி குறியீடுகள்

 ஞாழல் மலர்

Pictograph



மாங்குளம் தமிழி:

மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ள பழம்பெரும் ஊர் மாங்குடி. இன்று அவ்வூர் மீனாட்சிபுரம், கழுகுமலை, ஒவாமலை என அழைக்கப்படுகிறது. மாங்குடி மருதனார், மாங்குடி கிழார் போன்ற சங்க காலப் புலவர்கள் வாழ்ந்த ஊர் இவ்வூரே. சேர நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் பயணப்படும் வழியில் இம்மலை அமைந்துள்ளது. 1882ல் ராபர்ட் சீவல் என்பவரால் பார்வையிடப்பட்டது இம்மலை, எனினும் முதலில் இதனை முயற்சித்துப் படித்தவர் வெங்கோபராவ் ஆவார்.1906ல் மாங்குளம் கல்வெட்டு படிக்கப்பட்டது. இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் இவ்வூர்பற்றி தரவுகள் கிடைத்ததால் 2002 ம் ஆண்டு தமிழக தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டது.நாயக்கர்புஞ்சை மற்றும் லிங்கத்திடல் என்ற இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று மாதிரி அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டன. அதைத் தொடர்ந்து, நாயக்கர்புஞ்சையில் 10 அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய கற்கால கருவிகள், 200 ற்கு மேற்பட்ட குறியீடுகள், தமிழி எழுத்துள்ள பானையும் கிடைத்தது இதில், "குறுமான்கலம் அதன் யியானை பொ” எனும் நீண்ட வாசகம் உள்ள எழுத்து கிடைத்தது. இங்கு கிடைத்த செங்கற்கட்டுமானம், தமிழி எழுத்துகள் அடிப்படையில் நோக்குங்கால் இவ்வூர் 2300 வருடமாகவே சிறப்புற்றிருந்தது தெரிய் வந்தது. மக்கள் எழுத்தறிவுடன் குழுவாக வாழ்ந்ததையும் அறியலாம். குகைத்தளத்தில் கிடைத்த கல்வெட்டுகளை இனி காண்போம். முதல் கல்வெட்டு: கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன் கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய் விளக்கம்: நந்த ஸிரிகுவன் என்பவருக்கு சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (இருக்கை)அமைத்துக் கொடுத்துள்ளார். இதில் பாண்டியருக்கே உரித்தான கடலன், வழுதி, எனும் பெயர்கள் பயின்று வருகிறது! இரண்டாம் கல்வெட்டு: கணிய் நந்த ஸிரிய்குவன் தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் செஈய பாளிய் விளக்கம்: நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார். மூன்றாம் கல்வெட்டு: கணிய நந்தஸிரிகுவன் வெள் அறைய் நிகமது காவிதி கழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுப்பிதோ விளக்கம்: செய்தி வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, (திருச்சியில் திருவெள்ளரை எனும் ஊர் உண்டு. அதேபோல் மாங்குளம் அருகே வெள்ளரிப்பட்டி எனும் ஊர் உண்டு. இருஊரில் ஏதேனும் ஒரு ஊராய் இருக்க வாய்ப்புள்ளது) வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்பவன் கணிய நந்தாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது. வாணிகத்தில் சிறந்து விளங்குபவருக்குக் "காவிதி"என்று பட்டப்பெயர் வழங்குவர். காழிதிகம் என்பது முத்தைக் குறிக்கும். எனவே அந்தை அஸிதன் ஒரு முத்து வணிகன் என்பதை அறியலாம். நான்காம் கல்வெட்டு: கணிய் நத்திய் கொடிய்அவன் விளக்கம்: கொடிய்அவன் என்பதனை கொட்டியவன், அதாவது இக்கல்வெட்டை வெட்டியவன் கனிநந்தி என்பது பொருள் ஐந்தாம் கல்வெட்டு: சந்தரிதன் கொடுபிதோன் விளக்கம்: இவ்விருக்கையை கொடுப்பித்தவன் சந்தரிதன் என பொருள் ஆறாம் கல்வெட்டு: வெள்அறை நிகமதொர் கொடிஓர் விளக்கம்: நிகமம் என்ற பிராகிருதச் சொல் வணிகக்குழுவினைக் குறிக்கும். இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர். புலிமான்கோம்பை கல்வெட்டுகள் கண்டறியும்முன் தமிழின் தொன்மையான கல்வெட்டு இதுவேயாகும். இதன் காலம் கி.மு.3 நூற்றாண்டு என கணித்துள்ளனர். வருங்காலங்களில் மீளாய்வு செய்து அதற்கு முன்னர் கூட செல்லும்.











மேட்டுப்பட்டி தமிழி: மதுரையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உசிலம்பட்டி அருகே உள்ளது மேட்டுப்பட்டி, இவ்வூர் சித்தர்மலை எனவும் அழைக்கப்படுகிறது! 1908 ல் இக்கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. இங்கு மொத்தம் 10 கல்வெட்டுகள் காணப்படுகிறது! 1.அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ (இக்கல்வெட்டு குகைத்தளத்தின் முகப்பில் உள்ளது) விளக்கம்: கல்வெட்டில் முதன்முதலாய் மதுரையைப் பற்றி வரும் கல்வெட்டு இது. இதே காலகட்டத்தை சேர்ந்த அழகர்மலையிலும் மதுரையை குறித்து வரும். மதுரையைச்சேர்ந்த அத்திரன் எனும் அமணரின்(முற்றும் துறந்தவர்?)உறைவிடம் இது. அவருக்காய் இவ்விடத்தினை ஏற்படுத்தியவர் உதயணன். 2.அந்தை அரிய்தி விளக்கம்: இப்படுக்கை தானமளித்தவர் அந்தை அரிய்தி என கொள்ளலாம். 3.அந்தை இராவதன் விளக்கம்: அந்தை இரவாதன் என்பவரின் தானமாய் இப்படுக்கையை அளித்துள்ளார். 4.(ம)திர அந்தை (வி)ஸீவன் விளக்கம்: மதுரையை சேர்ந்த அந்தை விஸீவன் இப்படுக்கையை அமைத்து கொடுக்கிறார். 5.அந்தை சேந்தன் அதன் விளக்கம்: அந்தை சேந்தன் அதன் என்பவர் படுக்கையை அமைத்தார் எனவும், அந்தை சேந்தஅ எபிரித்து தன் என்பதை தானம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. 6.சந்தந்தை சந்தன் விளக்கம்: சந்தன் எனும் இருவர் இப்படுக்கையை தானமளித்துள்ளனர். அந்தை எனும் சொல் இருவரையும் பிரித்துக் காட்டுகிறது! 7.பதின் ஊர் அதை விளக்கம்: பதினூரைச்சேர்ந்த அதை இதனை அந்தை என படித்துள்ளனர். அந்தை எனும் சொல் இவ்வூர் கல்வெட்டுகளில் நிறைய இடங்களில் வருகிறது! அந்தை என்பதனை மரியாதைக்குரிய சொல்லாய் பார்க்கப்படுகிறது. 8.குவிர அந்தை சேய் அதன் விளக்கம்: குவிரந்தை சேய் ஆதன் என்பவர் செய்து கொடுத்த இருக்கை இது. இதில் வரும் ஆதன் ஊனும் பெயர், தமிழின் தொன்மையான பெய்ர்களுள் ஒன்று. கீழடியில், இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. 9.குவிரந்தை வேள் அதன் விளக்கம்: குவிரந்தை வேளாதன் என்பவர் செய்த இருக்கை 10.திடி இல் அதன் விளக்கம்: திடிஇல் என்ற ஊரைச்சார்ந்த ஆதன் என்பவர் செய்து கொடுத்த இருக்கை என பொருள்.இன்றும் மேட்டுப்பட்டிக்கு தென்கிழக்கே திடியன் என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது. திடியன் கூட்டம் என்று அங்கு ஒரு இனக்குழு இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகள் கி.மு. 2 ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது! இம்மேலையின் பின்புறம் மிகப்பெரிய பாறைக்கீறலான நந்திஉருவம் Gandhi Rajan sir ஆல் கண்டறியப்பட்டது. இந்த Petroglyphs தென்னிந்திய அளவில் மிகப்பெரியது. மிகவும் உயரமான இம்மலையில் உச்சியிலிருந்து பார்த்தால் வைகையாறு பயணிக்கும்பாதை அழகாய் தெரியும். இம்மலைக்கு அருகேயுள்ள சித்தர்நத்தம் பகுதியில் பாறை ஓவியங்கள் காணப்படுகிறது! இம்மலைப்பகுதி கணவாய் பகுதியே அமைந்துள்ளது. எனவே இவ்வழியே பயணிக்கும் வணிகர்களின் ஆதரவாலே இப்படுக்கைககள் தானமளிக்கப்பட்டதை அறியலாம்.
அந்தை சேந்தன் அதன் 
 குவிர அ(ந்தை) சேய் அதன்
அந்தை இரவாதன்
சந்தந்தை சந்தன்

 சித்தர்நத்தம் பாறை ஓவியம்
 திடி இல் அதன்
 வைகை ஆற்றுப்பாதை
 அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ

 பதின் ஊர் அதை
 (ம)திரை அந்தை (வி)ஸீவன்
 குவிரந்தை வேள் அதன்
 அந்தை சேந்தன் அதன்
அந்தை அரிய்தி


ஆனைமலை தமிழி:

மதுரை-மேலூர் சாலையில் ஒத்தக்கடை அருகேயுள்ள ஊர் நரசிங்கம் அவ்வூரில் உள்ள மலையே ஆனைமலை. பெரியமலைக்குன்றாய் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. மதுரை-திருச்சி புறவழிச்சாலையில் பயணிப்போர் இம்மலையை கண்டிருப்பர். பார்ப்பதற்கு துதிக்கையை முன்னே நீட்டி,ஒரு யானை படுத்துள்ளது போலவே காட்சியளிக்கும். அதனாலேயே இம்மலைக்கு இக்காரணப்பெயர் வந்நது. 2000 வருடமாய் இம்மலை இதேபேரில் அழைக்கப்பட்டதற்கு இம்மலையில் உள்ள தமிழி கல்வேட்டே சான்று. 1906 ல் சுப்ரமணிய ஐயரால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்குன்றின் உச்சிப்பகுதி குகைத்தளத்தில் படுக்கைகளும், குகையின் மேற்புற முகப்பில் நீர் உள்ளேபுகாவண்ணம் ஒரு நீர்வடி வெட்டப்பட்டுள்ளது. இதிலேதான் தமிழி கல்வெட்டு காணப்படுகிறது.
கல்வெட்டு: இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்ட காயிபன்
விளக்கம்:
சமஸ்கிருதத்தில் யானைக்கு "இவம்" என ஒரு பொருள் உண்டு. இவகுன்றம் எனில் யானைக்குன்றம் அல்லது மலை எனக்கொள்ளலாம்.உறையுள் என்பதனை உறைவிடம் எனக்கொள்ளலாம். பாதந்தான் என்பதற்கு படுக்கை செய்தான் என பொருள். ஏரி என்னும் ஊரைச்சேர்ந்த ஆரிதன், அரட்டகாயிபன் எனும் இரு துறவியருக்காக ஏற்படுத்தப்பட்ட இருக்கை என்பது இதன் பொருள். காயிபன் என்பது அவரது கோத்திர பெயராய் இருக்கலாம். இக்கல்வெட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.




ஐயர்மலை:

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திலுள்ளது ஐயர்மலை. இம்மலையின் உச்சியில் உள்ள குகைத்தளத்தில் உள்ள படுக்கையில் தமிழி கல்வெட்டு ஒன்றுள்ளது. பொதுவாக இம்மாதிரி படுக்கைகள் உள்ள இடங்களை "பஞ்சபாண்டவர்"படுக்ககைள், அல்லது "பஞ்சபாண்டவர் மலை" "ஐவர்மலை" என தமிழகம் முழுவதும்  அழைக்கின்றனர். மகாபாரதத்தின் தாக்கம் காரணமாக,  இவ்வாறு மக்கள் அழைக்கின்றனர். இன்றும் இவ்வாறான படுக்கைகள் உள்ள இடங்களில் பாண்டவர்கள் வனவாசத்தின்போது தங்கியதாய் கருதுகின்றனர். எனவே இதேபோன்ற மலைகள், படுக்கைகள் உள்ள இடங்களை இவ்வாறு அழைக்கின்றனர்.இதே போன்ற நம்பிக்கையும் தான் ஆஞ்சிநேயரின் சிரஞ்சீவிமலையும்! மூலிகை மலையை பெயர்த்து எடுத்து ஆஞ்சிநேயர் கொண்டுவரும்போது சிதறிய மலைதான் தங்கள் ஊர்மலை என தமிழகத்தில் பல மலைகளை நம் மக்கள் நம்பிக்கையுடன் கூறுவர், அதற்கு காரணம் அம்மலையின் மூலிகைவளம் மற்றும் அதனோடு தொடர்புடைய இராமாயண Mythology!


இதேகதைதான் இந்த ஐயர்மலைக்கும், ஐவர்மலை என்பது மருவி ஐயர்மலை ஆனது. தமிழி கல்வெட்டு அமைந்துள்ள இடங்களில் மிகவும் ஆபத்தான இடம் இம்மலையே. சென்று பார்ப்பதற்கு சரியான பாதை கிடையாது. வழுக்குப்பாறை மற்றும் செங்குத்தான இடத்தில் இக்குகைத்தளம் அமைந்துள்ளது.


கல்வெட்டு:

பனைதுறை வெஸன் அதட்அனம்

விளக்கம்:

பனைத்துறை எனும் இடத்தைச்சேர்ந்த வெஸன் என்பவர் அமைத்துக்குடுத்த இருக்கை என்பது இதன் பொருள்.


முதல்சொல் மட்டுமே இங்கு தமிழ் மற்ற இரண்டு சொல்லும் பிராகிருதம் ஆகும்.  துறை என்பது நீர்நிலைச்சார்ந்த பகுதியினை குறிக்கும். இம்மலைக்கு அருகே காவிரியாற்று நீர்த்துறை உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பனைதுறை என்பது காவிரிக்கு அருகேயுள்ள ஊராய் இருக்கும். வெஸ்ஸ எனும் சொல்லினை வைஸ்ய எனும் சொல்லாய் கருதி வணிகன் என்று கருதுகின்றனர். பனைதுறையின் பிரபலமான வணிகனாய் இவர் இருக்கக்கூடும். அதட்அனம் என்பதை அதிட்டானம் என சேர்த்து பொருள் கொள்ளலாம். கி.மு முதல் நூற்றாண்டு என இக்கல்வெட்டு கருதப்படுகிறது






கீழவளவு தமிழி:


மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கீழவளவு கிராமம். அங்குள்ள "பஞ்சபாண்டவர் மலை" எனப்படும் மலைக்குன்றில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது. அந்த குகைத்தளத்தின் கீழே வழவழப்பாக இழைக்கப்பட்ட பல கற்படுக்கைகள் உள்ளன. இக்குகைத்தளத்தின் மேற்பகுதியில் நீர்உட்புகா வண்ணம் ஓர் நீர்வடி வெட்டப்பட்டுள்ளது. அதன்மேலே ஓர் தமிழி கல்வெட்டு காணப்படுகிறது 1906 ம் ஆண்டு வெண்கோபராவால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்குகைத்தளத்திற்கு பின்புறம் சமணதீர்த்தங்கரர் உருவங்கள் உள்ளது.


இக்கல்வெட்டின் சில எழுத்துகள் நேராகவும், சில தலைகீழாகவும் சில எழுத்துகள் இடம் வலமாகவும் மாறி வெட்டியுள்ளனர். (கல்வெட்டு தகவலை எழுதிகொடுத்த ஓலையை, கல்லில் வெட்டுவோர், தலைகீழாக ஓலையைபிடித்து மாற்றி ஏதும் வெட்டிவிட்டாரோ என தெரியவில்லை)


கல்வெட்டு செய்தி:

உப(ச)அன் தொண்டி (ல) வோன்கொடு பளிஇ

விளக்கம்:


உபசன் எனும் சொல்லை சமயம்சார்ந்த ஆசிரியர் என பொருள் கொள்ளலாம்.இதே உபசன் எனும் சொல் கொங்கர்புளியங்குளம், திருவாதவூர் கல்வெட்டிலும் வருகிறது. பாண்டியநாட்டின் கடற்கரை நகரமாய் விளங்கிய 'தொண்டி' நகரம் 2200 ஆண்டுகள் முன்பே அதே பெயரில் இக்கல்வெட்டிலும் வருவது சிறப்பான ஒன்று. சங்கஇலக்கியமான குறுந்தொகையிலும் தொண்டி நகர் குறித்த குறிப்புகள் உண்டு. பளிஇ என்பதனை பள்ளி என கூறலாம். தொண்டியைச் சேர்ந்த உபசன் என்பவர் கொடுத்த தானம் இப்பள்ளி என்பது இதன் பொருள். தொண்டியிலிருந்து வந்து ஒரு சமயஆசிரியர் இத்தானம் அளித்துள்ளார், செல்வாக்கான மனிதராய் அவர் இருந்திருப்பார் போலும். இக்கல்வெட்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.






கருங்காலக்குடி தமிழி:


மதுரை-திருச்சி புறவழிச்சாலையில் இங்குள்ள ஊரகப்பகுதியில் "பஞ்சபாண்டவர் குட்டு" எனும் குன்றில் ஓர்குகைத்தளம் அமைந்துள்ளது, அதன் முகப்பில் தமிழிகல்வெட்டு ஒன்றுள்ளது. குகைத்தளத்தின் பக்கவாட்டில் ஓர் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. அதன் கீழே வட்டெழுத்து கல்வெட்டுள்ளது. அச்சணந்தி என்பவர் இச்சிற்பத்தை செய்தவர் என அக்கல்வெட்டு கூறுகிறது!  அச்சணந்தியும், அவரது தாயார் குணமதியும் தமிழகம் முழுக்க நிறைய தீர்த்தங்கரர் உருவங்களை செய்வித்துள்ளனர். மேலும் இக்குகைத்தளத்தின் மேலே சில கற்படுக்கைகள் காணப்படுகின்றன. அவற்றிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இங்கு பாடல் வடிவில் ஓர் கல்வெட்டுள்ளது. பாண்டியனிடம் அமைச்சராய் இருந்த பள்ளத்தரையன் என்பவர் ஓர் கண்ணடை(நீர்நிலை) அமைத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.


தமிழி கல்வெட்டு:

"ஏழைய் ஊர் அரிதின் பளிய்"

விளக்கம்:


இக்கல்வெட்டில் பயின்று வரும் நெடில் சொற்களை குறிலாக படித்து பொருள் கொள்ளப்படுகிறது. இதே போன்ற முறை ஆந்திர மாநிலம் பட்டிப்புரோலுவில் கிடைத்த ஈமப்பேழையில் உள்ள பிராமி கல்வெட்டிலும் படிக்கப்பட்டது. ஏழையூர் எனும் ஊரைச்சேர்ந்த அரிதி என்பவர் இப்பள்ளியை அமைத்துக் கொடுத்தவர் என்பது இதன் பொருளாகும். இக்கல்வெட்டு கி.மு.2 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.










கொங்கர் புளியங்குளம்:


மதுரை-தேனி சாலையில் செக்கானூரணிக்கு அருகேயுள்ளது கொங்கர்புளியங்குளம். தமிழி Siteகளில் அதிகம் கற்படுக்கைகள் அமைந்தது இங்கேதான். அனைத்து படுக்கைககளும்  நன்றாய் வழவழப்பாய் இழைத்து செதுக்கப்பட்டுள்ளது. 1910 ம் ஆண்டு இங்கு கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இங்கு மொத்தம் மூன்று தமிழி கல்வெட்டு உள்ளது. தமிழிகல்வெட்டுக்கு பக்கவாட்டில் கொஞ்சம் தொலைவில் ஒரு சமண தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. குகைத்தளத்தில் குறுகலான இடத்தில் சில பாறைஓவியங்களும் காணப்படுகிறது.

கல்வெட்டுகள்:

முதலாம் கல்வெட்டு:

குற கொடுபிதவன் உபசஅன் உபறுவஅ(ன்)

விளக்கம்:

குற என்பதனை "கூரை", "கூறு(பகுதி)" எனபொருள் கொள்ளப்படுகிறது. கொடுபித என்பதனை கொட்டுபித்தவன், இந்த படுக்கைகளை கொடுத்தவன் எனவும், உபசஅன் என்பதனை உபாசன் என்ற ஆசிரியராகவும் பொருள் காணப்படுகிறது! உபறுவன் என்பதற்கு கிணறு, குளம் தோண்டும் பணியாளரை குறிக்கும் சொல் எனவே,  உபாசனாகிய உபறுவன் கொடுத்த தானமாய் அளித்தது இக்கூரை என பொருள் கொள்ளலாம். இன்று அக்கூரை இல்லை.

இரண்டாம் கல்வெட்டு:

குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன்(ஒ)ன்

விளக்கம்:

செற்அதன் Or செராதன் இப்பகுதியை குடைவிப்பதற்கு தானமளித்ததை கல்வெட்டு கூறுகிறது. இறுதியில் ஓர் குறியீடு உள்ளது. இதனை பொன்னின் எடையை அல்லது எண்ணைக்குறிப்பதாய் கருதப்படுகிறது!

மூன்றாம் கல்வெட்டு:

பாகன் ஊர் பே(ர)தன்பிடன் இத்த வெபொன்

விளக்கம்:

பாகனூரைச் சேர்ந்த பிட்டன் என்பவர் அளித்த வெண்பொன் என்பது இதன் பொருள், இதில் இறுதியில் பொன்னின் நிறையை குறிக்கும் குறியீடும் உள்ளது. இதில் வரும் பாகனூர் முற்கால பாண்டியரின் வேள்விக்குடி செப்பேட்டில் வளம்பொருந்திய ஊராய் கூறப்பட்டுள்ளது. சோழவந்தான் அருகே உள்ளது இவ்வூர். வைகையாற்றின் வளம் பொருந்திய ஊர் இந்த பாகனூர் கூற்றமாகும்.


இதன்காலம் கி.மு.2ம் நூற்றாண்டாகும்.








திருப்பரங்குன்றம் தமிழி:


மதுரைநகரிலிருந்து தென்பகுதியில் 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை. இம்மலையின் உயரமான பகுதியில் ஓர் குகைத்தளம் உள்ளது. 1908 ம் ஆண்டு ஒரு கல்வெட்டும், 1950-51ல் இரண்டு கல்வெட்டும் கண்டறியப்பட்டன. 


முதல் கல்வெட்டு:


அந்துவன் கொடுபிதவன்


விளக்கம்:

அந்துவன் என்பவர் இக்கற்படுக்கையை கொடுத்தவர் என்பது பொருள். அந்துவன் என்ற பெயரில் சங்ககால புலவர்கள் இருந்துள்ளனர். சில பானைஓடுகளிலும் இப்பெயர் கிடைக்கிறது. இக்கல்வெட்டு கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் அமைந்துள்ளது! 

இரண்டாம் கல்வெட்டு:

மாராயது கய(ம்)

விளக்கம்:


மாராயம் என்பது மன்னரால் வழங்கப்பட்ட ஓர் உயரிய பதவியாகும். ராஜேந்திரசோழனுக்கு கூட "பஞ்சவன் மாராயன்" எனும் பெயர் ராஜராஜனால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கயம் என்பதற்கு குளம் என்பது பொருள். மாராயன் ஒருவரால் வழங்கப்படௌட குளம் போன்ற நீர்நிலையை குறிக்கும். இத்தமிழி கல்வெட்டு இருக்கும் இடத்தில் ஓர் சுனை ஒன்று காணப்படுகிறது, அதில் நடந்து உள்ளே செல்ல படிக்கட்டும் உள்ளது. இது அவரின் கொடையாய் இருக்கலாம்.


மூன்றாம் கல்வெட்டு:


எரு காடுர் இழ குடும்பிகன் போலாலயன்  செய்தா ஆய்சயன் நெடுசாதன்


விளக்கம்:


சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரையில் 4-5 ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது, அதில் "எக்காடூர்" எனும் பெயர் வருகிறது! மேலும் சங்க இலக்கியமான புறநானூரில் எருகாடூர் தாயங்கணார் எனும் புலவர் பெயர் வருகிறது! எக்காடூரும், எருகாடுரும் ஒன்றாய் இருக்க வாய்ப்புள்ளது. இக்கல்வெட்டில் வரும் எருகாடூரும் அதுவே. இழ என்பதனை ஈழ(கள் இறக்கும் குடியினர்) என்றும் குடும்பிகன் என்பதற்கு குடும்பத்தலைவன் எனவும் பொருள் காணப்பட்டு, கள்இறக்கும் குடும்பத்தின் தலைவன் என ஐராவதம் மகாதேவன் முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர். போலாலயன் என்பது கொடையாளியின் பெயர் ஆய்சயன நெடுசாதன் என்பது அவரது இயற்பெயராய் கூறப்படுகிறது.



இக்கல்வெட்டின் காலம் கி.மு.2ம் நூற்றாண்டாகும்.








மாமண்டூர் தமிழி:

திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சி-வந்தவாசி சாலையிலுள்ள ஊர் மாமண்டூர். 1939 ல் இங்கு தமிழி எழுத்து இருப்பதை கண்டறிந்தனர். இங்குள்ள சிறிய குன்றின் குகைத்தளத்தின் முகப்பில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது.  


கல்வெட்டு:

கணிமான்
தேனூர் தந்த கோன்குன்று ஆசி
செயிதான் தசன்  சிறு
...........வன்

விளக்கம்:

சிற்றரசர்களை குறிக்கும் தமிழி எழுத்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதன்முதலாய் கல்வெட்டை வெட்டிய தச்சனின் பெயரும் வருகிறது! 
தேனூரை கைப்பற்றிய தலைவனான(கோன்) கனிமான் என்பவனுடைய குன்று இது. இதில் பந்தல் அமைத்து தங்கும் வசதி(ஆசி) செய்த தச்சன்(தசன்) சிறு...வன் என்பவர் ஆவர். இன்றும் பந்தல் அமைக்க அன்று ஏற்படுத்திய துளைகளுக்கு கீழேதான் கல்வெட்டு உள்ளது. சிறு எனும் வார்த்தைக்கு இடையேயுள்ள கல்வெட்டு தேய்ந்ததால் இச்சிற்பியின் பெயரை அறியமுடியவில்லை.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், கானப்பேர் தந்த உக்கிரபெருவழுதி என்ற பாண்டிய மன்னர்கள் குறித்து சங்கஇலக்கியம் பாடுகிறது. இதில்வரும் "தந்த"  எனும் சொல் வெற்றிபெற்ற எனும் பொருளில் வருகிறது. அதேபோல் இக்கல்வெட்டிலும் "தேனூர் தந்த கோன்" குறித்து குறிப்புவருவதை அறியலாம். இக்கல்வெட்டின் காலம் கி.பி 3ம் நூற்றாண்டாகும்.







பெருமாள்மலை தமிழி:


மதுரை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது முத்துப்பட்டி இங்குள்ள மலை பெருமாள்மலை, கரடிப்ட்டிமலை என அழைக்கப்படுகிறது!  1910 ம் ஆண்டு இங்கு மூன்று கல்வெட்டுகள் அறியப்பட்டன,எனினும் இரண்டே படிக்கும் நிலையில் உள்ளது. குகையின் முகப்பில் இரு தீர்த்தங்கரர் சிலை புடைப்புச்சிற்பமாய் உள்ளது. படுக்கையில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது.


முதல் கல்வெட்டு:

நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்

விளக்கம்:

சேரநாட்டு கடற்கரை பட்டினமான முசிறியிலிருந்து இளமகனான கோடன் என்பவரின் கொடை என பொருள்கொள்ளலாம். கேரளத்தின் பட்டணம் எனும் ஊரில் நடந்த அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானைகள் கிடைத்தது. அவ்விடமே முசிறியாய் கருதப்படுகிறது! இதில் வரும் எளமகன் எனும் சொல் இளமகன் அல்லது இளையர் என பொருள் கொள்ளலாம். இளையர் என்பதற்கு போர்வீரன், எனப்பொருள் இச்சொல் பல்லவர் நடுகற்களில் பயின்று வருகிறது. நாகபேரூர் அருகேயுள்ள நாகமலைபுதுக்கோட்டையை குறிப்பதாய் இருக்கலாம். இப்பெயர் வேள்விக்குடி செப்பேடிலும் வருகிறது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கல்வெட்டு:

சைய்அளன் விந்தைஊர் கவிய்

விளக்கம்:

விந்தையூரை சேர்ந்த சைய்அளன்(அலாகாபாத் தூண் கல்வெட்டில் இப்பெயர் வருகிறது) என்பவர் அமைத்துக்கொடுத்த குகை என்பது இதன் பொருள்,இயற்கையாய் அமைந்த குகையை இவர் பதனிட்டு கொடுத்தாருக்கலாம்.கெவி என்பதற்கு குகை என ஒருபொருளும் உண்டு! இன்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் குகையை மக்கள் இவ்வாறு அழைப்பதுண்டு!

மூன்றாம் கல்வெட்டு:

திடிக் காத்தான்.... மன...(எ)ய்

விளக்கம்:


திடியன் என்ற குன்றுள்ள ஊரைச்சார்ந்த காத்தான் என்பவனின் கொடையே இந்த கற்படுக்கை என கூறலாம்.







.

இலங்கையில் உள்ள பழங்கால தமிழி கல்வெட்டு


பருமக நதகஸ மதய லேனே


"பெருமகன் நதகஸவின் தாயின் குகை"




“பருமக ராவண ஜிதி ஷோகிலி லேன சகஸ” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது பெருமகன் இராவணனின் மகள் ஷோகிலியின் குகை எனப்பொருள் படுகிறது.





திருவாதவூர் தமிழி:

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ளது திருவாதவூர். சைவசமய குரவரான மாணிக்கவாசகர் அவதரித்த ஊர் இது. இவ்வூர் பெயராலேயே அவர் "திருவாதவூரார்" என அழைக்கப்படுகிறார்.
இந்திய கல்வெட்டு அறிக்கை 1965-1966 ல் வெளிவந்துள்ளது இக்கல்வெட்டின் அறிக்கை, அதன்பின் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் 1996 ல் மீண்டும் மறுஆய்வு செய்தார்.
இரு கல்வெட்டுகள் இங்கு வெட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கே பாறை ஓவியமும் உள்ளது. செஞ்சாந்து நிறத்தில் வட்டவட்டமாய் சுருள் வடிவில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவ்வகை ஓவியம் உகாண்டா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுவது சிறப்பான ஒன்று.

கல்வெட்டு 1:


"பாங்காட அர்இதன் கொட்டுப்பிதோன்"

பாங்காடு என்ற ஊரை சார்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். திருவாதவூருக்கு அருகே 'பனங்காடி' எனும் ஊர் உள்ளது! இவ்வுரே பாங்காடு எனும் ஊராய் இருந்திருக்கலாம்.

கல்வெட்டு 2:


"உபசன் பர்அசு உறை கொட்டுப்பிதோன்"

பரசு என்ற உபசரால் இந்த குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். உபசன் என்றால் உபாத்யாசான், சமயஆசிரியர் என பொருள்படும். பல்லவ, சோழ காலத்தில் வாத்தியம் வாசிப்பவராய் இருந்துள்ளனர். திருவாய்மொழியில் 'பரசுதல்'எனும் சொல் பாடுதல் எனும் பொருளில் வருகிறது.

இவ்விரு கல்வெட்டுகளின் காலம் கி.மு இரண்டு என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: வட்டம் வானியல் தொடர்பானது என்று ஒரு கருதுகோள் உள்ளது








குன்னக்குடி தமிழி:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் அமைந்துள்ளது ஊர் குன்னக்குடி, இங்குள்ள குகைத்தளத்தில் 'ஞானியர்மடம்' என்ற சிறுமண்டபமும் பிற்காலத்திய முனிவர் சிலையும் உள்ளது. இதில் வெட்டப்பட்ட நீர்வடி முகப்பில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளது. 1909 ம் ஆண்டு இக்கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டது.

முதல் கல்வெட்டு:

காபிஊர் ஆதன்சாத்தன்

விளக்கம்:

காபிஊர்=காப்பியம்+ஊர் இன்றும் கூட சீர்காழியருகே காப்பியங்குடி எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது! காப்பியம் என்பது குடிப்பெயர் ஒன்றாய் கருத இடமுள்ளது. காப்பியாற்று காப்பியனார். காப்பியன் சேந்தனார்.போன்ற புலவர்களின் பெயர்களை இதற்கு உதாரணமாய் கொள்ளலாம். காப்பியங்குடி என்பதே காப்பிஊர் என மாறியிருக்கக்கூடும். காப்பிஊரை சேர்ந்த ஆதன் சாத்தன் எனும் பெயர் மட்டும் உள்ளது. அவர் இந்த குகைத்தத்தின் நீர்வடியை ஏற்ப்படுத்தியவராய் இருக்கலாம். ஆதன் எனும் பெயர் அன்று பரவலாய் தமிழகமெங்கும் பயின்று வந்துள்ளது! இக்கல்வெட்டு தலைகீழாய் வெட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் கல்வெட்டு:

ஊறு து..

விளக்கம்:

ஊற்று ஒன்றினை ஏற்ப்படுத்தாயவர் பெயர் வந்துள்ளதை யூகிக்கலாம். ஆனால் அதற்கடுத்த எழுத்துகள்
சிதைந்துள்ளதால் முழுமையாக கூறமுடியவில்லை. இவ்விரு கல்வெட்டும் கி.பி 3 ம் நூற்றாண்டாகும்.









நன்றி : திரு. பார்த்தி கத்திக்காரர் பதிவில் இருந்து 


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்